Saturday, November 25, 2006

குடியரசு தலைவர் கலாம் பேருரை

புதுடெல்லியில் நிகழ்ந்த 'Summit of the Powerless' மாநாட்டில் 20-11-2006 அன்று 'National Ambience : A scene of sweat' எனும் தலைப்பில் மேன்மைதங்கிய குடியரசு தலைவர் நிகழ்த்திய உரையிலிருந்து சில பகுதிகள்:

சித்திரகூட புரா (PURA) - மத்திய பிரதேசம்


தீனதயாள் ஆராய்ச்சி மையத்தை (Deendayal Research Institute) ஸ்ரீ நானா தேஷ்முக்கும் (வயது 90) அவரது இயக்கத் தோழர்களும் மத்திய பிரதேசத்தில் சித்திரகூட புராவினை உருவாக்கியுள்ளார்கள்.


தீனதயாள் ஆராய்ச்சி மைய சித்திரகூட புராவில் குடியரசுதலைவர்


பாரதத்தின் கிராம மேம்பாட்டுக்கான ஆகச்சிறந்த முன்னுதாரண மாதிரியை உருவாக்கியுள்ள தனித்தன்மை வாய்ந்த அமைப்பு தீனதயாள் ஆராய்ச்சி மையம் ஆகும். சித்திரகூடத்தினை சுற்றியுள்ள கிராமங்களில் தீனதயாள் ஆராய்ச்சி மையம், ஐந்து கிராமங்கள் கொண்ட ஒவ்வொரு தொகுப்பாக, 100 கிராமத் தொகுப்புகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அவர்கள் 50000 மக்கள் வசிக்கும் 80 கிராமங்களில் (16 கிராமத் தொகுப்புகளில்) மேம்பாட்டினி உருவாக்கியுள்ளார்கள்.பாத்னி எனும் கிராமத்தில் தீனதயாள் ஆராய்ச்சி மையம் வளங்குன்றா வளமை கொண்ட மேம்பாட்டினை பாரத மண் சார்ந்த, ,மரபார்ந்த தொழில்நுட்பம் மூலமும், அறிவு அமைவுகள் மூலமும், அந்த உள்-பிராந்திய த்திலேயே கிடைக்கும் திறமையைச் சார்ந்தும் ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு கிராமமும் ஆராய்ச்சியின் மூலம் சுயசார்புத்தன்மையை அடையும் வழிமுறைகள் இந்த மையத்தின் களப்பணிகள் மற்றும் களம் சார்ந்த ஆராய்ச்சிகள் மூலமாக உருவாக்கப்பட்டு வருகின்றன.



ஸ்ரீ நானாஜி தேஷ்முக்

  • கிராமங்களில் தனித்தன்மை வாய்ந்த பொருள் உற்பத்தி மூலம் வருமானத்தை அதிகரித்தல்
  • புதிதாக கண்டறியப்படும் விவசாய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல்
  • கிராம மக்களிடையே அறிவியல்தன்மை கொண்ட நோக்கினை உருவாக்குதல்
  • சுகாதாரத்தினை மேம்படுத்துதல்
  • 100 சதவிகித படிப்பறிவினை மக்களிடையே உருவாக்குதல்

ஆகியவற்றினை குறிக்கோளாக கொண்டு இந்த மையத்தின் திட்டம் இயங்குகிறது.


ஒருங்கிணைந்த கிராம முன்னேற்றத்தின் ஒருபகுதியாக கிராம மக்கள் மழைநீர் சேகரிப்பிலும், அந்நீர் மூலம் உணவுதானிய உற்பத்தி, காய்கறி மற்றும் வாசனைச் செடிகளை வளர்த்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர். இவை போக இந்த மையம் இந்த 80 கிராமங்களை முழுக்க முழுக்க வழக்கு வம்புகள் அற்ற கிராமங்களாக மாற்றியுள்ளது.


இந்த சாதனைகள் அனைத்தும் தீனதயாள் ஆராய்ச்சி மையத்தின் 'சமாஜ சில்பி தம்பதிகள்' (சமுதாய சிற்பி தம்பதிகள்) எனும் கோட்பாட்டின் செயலாக்கத்தின் மூலம்
உருவாக்கப்பட்டுள்ளது. சமுதாய சிற்பி தம்பதிகளின் ஆற்றுப்படுத்துதல் (counselling) மற்றும் தலையீட்டினால் இந்த சாதனைகள் நிகழ்ந்துள்ளன.


சித்திரகூட புராவிலிருந்து நாம் பெறும் செய்தி என்ன?
சீரிய சீலம் கொண்ட தலைமையும், அந்த தலைமை கொண்ட இயக்கமும் மக்கள் வாழ்வில் ஒரு நல்ல மாற்றத்தினை ஏற்படுத்த முடியும். சமுதாய அர்ப்பணிப்பு கொண்ட 'சமுதாய
சிற்பி தம்பதிகள்' மூலம் மக்களினை வெற்றி அடைய செய்யமுடியும். இந்த வெற்றியினை உங்களைப் போன்ற ஊடகங்கள் கொண்டாடிட வேண்டும். அந்த வெற்றியின் செய்தியை
நாடெங்கும் கொண்டு செல்வது உங்களைப் போன்ற ஊடகங்களின் கடமை ஆகும்.


பெரியார் புரா


பெரியார் புரா நிர்வாகிகளுடன் குடியரசு தலைவர்

நான் பெரியார் மணியம்மை பெண்கள் பொறியியல் கல்லூரியில் சென்றிருந்தேன். அங்கேயுள்ள பெரியார் புரா செயல்திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் வல்லத்தில் ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கும் மேலாக் கொண்ட 65 கிராமங்கள் கொண்ட தொகுப்பினை புரா அமைப்பின் மூலம் மேம்படுத்தியுள்ளனர். இங்கு மூன்று முக்கிய இணைப்புத்தன்மைகளான
(connectivity) புறக்கட்டமைப்பு இணைப்புத்தன்மை (physical connectivity), மின்னணு இணைப்புத்தன்மை (electronic connectivity) மற்றும் அறிவு இணைப்புத்தன்மை (knowledge connectivity) ஆகியவை உள்ளன. இதன் மூலம் பொருளாதார இணைப்புத்தன்மை உருவாகியுள்ளது. இப்பொழுது பெரியார் புராவின் கீழ் உள்ள ஐந்து கிராமங்களுக்கு Wi-MAX connectivity கிடைத்துள்ளதாக அறிகிறேன். பெரியார் புராவில் சுகாதார நல அமைப்புகள், தொடக்க நிலை முதல் மேல்பட்டப்படிப்பு வரைக்குமான கல்வி மற்றும் தொழில்கல்வி பயிற்சி கூடங்கள், ஆகியவை உள்ளன. இதனால் பெருமளவு வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளன.பல தொழில்முனைவோர் உருவாகியுள்ளனர். அவர்களுக்கு 1500 சுய உதவிக்குழுக்களின் உதவியும் உள்ளது. 200 ஏக்கர் தரிசு நிலங்கள் மேம்படுத்தப்பட்டு அவை விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. அவற்றில் நீர் சேகரிப்பு மற்றும் பயன்பாட்டிற்காக நிலப்பரப்பு சார்ந்த நீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கிராம மக்கள் காட்டாமணக்கு மற்றும் மருந்து செடிகள் ஆகியவற்றினை பயிரிடுகிறார்கள். உயிரி மூலப்பொருட்களிலிருந்து ஆற்றல் உருவாக்குதல், உணவு உற்பத்தி மற்றும் உணவுப்பொருட்களை பதப்படுத்துதல், அனைத்திற்கும் மேலாக விற்பனை மையங்கள் ஆகியவை இயங்குகின்றன. இந்த புரா மாடல் அரசு உதவியற்று இயங்குகிறது.
(பெரியார் புரா இணையதளம்: இங்கே)


அண்மையில் சட்டீஸ்கர் ரய்ப்பூர் மாவட்ட பக்த்தாரா கிராமத்தில் உள்ள புராவிற்கு சென்றிருந்தேன். இந்த புரா அமைப்பு 36000 மக்கள் கொண்ட 22 கிராமங்களை கொண்டது.
விரைவில் இது மிகவும் மேம்பாடுடைய புராவாக மாறிவிடும். நல்ல சாலைகளும், பயோ-டீசல் மற்றும் பேட்றியால் இயங்கும் பேருந்துகளும் 1000 நல்ல தரமான உறைவிடங்களும் 250 படுக்கை வசதிகள் கொண்ட தரமான சுகாதார நலம் அளிக்கும் மருத்துவமனையும், இன்றைய தேதிக்கு சிறந்த கல்வியை அளித்திடும் தயானந்த் ஆங்கிலோ வைதிக் இயக்க
பள்ளிக்கூடமும் மருத்துவ சேவைக்கான பயிற்சி பள்ளியும் உள்ளன. பெரும் தொழிற் குழுமங்கள் இந்த புராவிற்கு அடுத்த ஐந்து வருடங்களுக்குள் கட்டமைப்புகள் அளிப்பதாக
கூறியுள்ளன. ...


இதுவரை புரா (PURA - Providing Urban amenities in Rural Areas) ஒரு நடைமுறை சாத்தியமாக மாறி வருவதை கண்டோ ம். வெவ்வேறு மாநிலங்களில், சீலமான தலைமை
மூலமும், ஒரு பொறியியல் கல்விசாலையில் உத்வேகத்தின் மூலமும், ஒரு மாநில அரசின் முனைப்பினாலும் புரா சாத்தியப்படுவதைக் கண்டோ ம். அடுத்ததாக தரமான மின்சார ஆற்றல் 18000 கிராமங்களை சென்றடையும் போது அது மக்களுக்கு (முன்னேறுவதில்) உற்சாகத்தையும் செயலூக்கத்தையும் எவ்வாறு அளிக்கிறது என்பதனை குஜராத்தில் காண்போம்.


குஜராத்




11 நவம்பர் 2006 இல் நான் குஜராத்தின் சாம்பனேர் கிராமத்தில் ஜோதி கிராம யோஜனா எனும் திட்டத்தினை தேசத்திற்கு அர்ப்பணம் செய்தேன். இந்த அர்ப்பணிப்பு விழாவில்
ஏறத்தாழ ஒரு இலட்சம் கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஜோதி கிராம திட்டம் மூலம் குஜராத்தில் 18000 கிராமங்களில் வாழும் 3 கோடி கிராம மக்களுக்கு 24 மணி நேரமும்
மூன்று பேஸ் மின்சாரம் கிடைக்கும். காலத்துடன் இந்த திட்டம் நடைமுறையாக்கப்படும் போது உள்ளூர் வேலைவாய்ப்புகள் பெருகும். சுகாதார சேவைகள் மற்றும் உள்கட்டமைப்புகள் ஆகியவை மேன்மை அடையும். கிராம குழந்தைகளுக்கு கணினி கல்வி வசதி கிட்டும்.உள்ளூர் பால் உற்பத்தி பெருகும். மக்களின் வாழ்க்கை தரம் நன்றாவதுடன், கிராமத்திலிருந்து நகரம் செல்லும் போக்கு குறையும். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. குஜராத் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம் நிச்சயமாக குஜராத்தின் 3 கோடி கிராம மக்களுக்கு வலிமை அளிக்கும் திட்டமே ஆகும்....


முழுப்பேச்சையும் காண்கஇங்கே

4 comments:

  1. நன்றி நீலகண்டன். இந்த மாதிரி பதிவுகள் ரொம்ப தேவை.

    ReplyDelete
  2. மோடியை பிரசிடெண்டு பாராட்டியதால்தான் இந்த பதிவையே போட்டார் நீலகுண்டன்

    ReplyDelete
  3. //
    மோடியை பிரசிடெண்டு பாராட்டியதால்தான் இந்த பதிவையே போட்டார் நீலகுண்டன்
    //

    மோடியை கண்ட ஒழுக்கங்கெட்ட களவாணி திட்டுரதை வச்சிகிட்டு பக்கம் பக்கமா பதிவு போட்டவங்கள்ளாம் இங்க வந்து அனாமத்து ஆட்டம் ஆடக்கூடாது...

    ReplyDelete
  4. நீலகண்டன் அவர்களுக்கு
    நம்பிக்கையும் உத்வேகமும் தரும் நிறைவானதொரு பதிவு.
    பாரததேசம் முழுமைக்கும் இதுமாதிரியான மையங்கள் பரவிடவேணும். மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி எற்படுத்திட இம்மாதிரியான பதிவுகள் காலத்தாற் செய்த உதவி. தொடர்ந்து எழுதிட
    ஆதரவுகளுடன்,
    இரா.பாலா

    ReplyDelete