Wednesday, August 17, 2005

வணக்கம். நான் அரவிந்தன் நீலகண்டன். எனது ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில். இவ்வலைப்பதிவினைத் தொடங்கியதன் நோக்கம் எண்ணங்களையும் உணர்வுகளையும் உலகெங்குமுள்ள தமிழ் சகோதரருடன் பகிர்ந்து கொள்ளவும், உரையாடவும். உங்கள் எதிர்வினைகள் மூலம் நாம் இணைந்து வளரலாம்.
சொற்பதம் கடந்த துரிய மெய்ஞானம்
பிள்ளையார் சுழி என்றவுடன் கடந்த ஆங்கில மாதம் (ஜூலை, 2005) டல்ஸா (Tulsa) எனும் அமெரிக்க இயற்கை காட்சியகத்தில் நடந்ததோர் விஷயம் ஒன்றை இணையத்தில் படித்தது ஞாபகம் வருகிறது. அமெரிக்காவின் ஒன்பது தேசிய இயற்கை காட்சியகங்களில் இதுவும் ஒன்று. இங்கு யானைகளுக்கான காட்சியிடத்தில் விநாயகர் சிலை ஒன்று உள்ளது. இக்காட்சியகத்தின் நுழைவுவாசலில் 'பூமி நம் அன்னை விண் நம் தந்தை' எனும் பூர்விகக் குடியினரின் ஆன்மிக வாசகமும் இடம் பெற்றுள்ளது. (நமது பூமி சூக்த வாசகங்களில் வருவது போலில்லை?) உயிரின் தோற்றமும் வளர்ச்சியும் பரிணாம அறிவியல் அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளன. இத்தனையும் போதாதா உள்ளூர் அடிப்படைவாதிகளுக்கு ஆராசனை வர. வந்தேவிட்டது. டான் ஹிக்ஸ் என்கிற அடிப்படைவாத மதமாற்றி (evangelical) கிறிஸ்தவர் இவற்றினை கடுமையாக எதிர்த்தார். இயற்கை காட்சியக இயக்குநர்களில் கணிசமானவர்களை தனது நிலைபாட்டிற்கு மாற்றினார். டல்ஸா இயற்கை காட்சியக இலச்சினைஉள்ளூர் மேயர் வரைக்குமாக விவகாரம் சென்றது. விநாயகர் சிலை வைக்கப்பட்டிருப்பது கிறிஸ்தவ எதிர்ப்பு மனநிலையை காட்டுவதாகவும் கூறினார். விவிலியத்தின் படைப்பு-கற்பனை வசனங்களை படங்களுடன் காட்சியகத்தில் வைக்க 3000 டாலர்களையும் தருவதாகக் கூறினார். இப்போது மற்றொரு பிரச்சனை ஆரம்பித்தது. அறிவியல் அறிவுடையவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். விவிலிய படைப்புவாத கற்பனையின் வசனங்களை வைத்தால் டல்ஸா தேசிய இயற்கை காட்சியகமாக விளங்குவதிலிருந்து பிற்போக்குத்தன்மையை அடைந்துவிடும் எனக் கூறி எச்சரித்தனர். உடனே ஹிக்ஸுக்கு சம்மதித்தவர்கள் உடனே 'விவிலிய படைப்புவாதக் கற்பனை' மட்டுமின்றி ஆறேழு வெவ்வேறு கலாச்சாரங்களிலிருந்து வரும் கற்பனைகளையும் வைக்காலாமெனக் கூறினர். படைப்பு வாத அடிப்படைவாதிகளுக்கு இப்போது அச்சம் கொடுக்க ஆரம்பித்தது. ஏனெனில் அவ்வாறு செய்யப்பட்டால் விவிலியத்தின் படைப்புவாதம் எவ்வாறு மற்றொரு கற்பனை மட்டுமே என்பது தெளிவாக தெரியும் என்பதும் மாறாக பரிணாம அறிவியலின் பார்வை எவ்வளவு சிறந்தது என்பதும் தெரிந்துவிடுமென அஞ்சினர். மேலும் எந்த கலாச்சாரத்தின் படைப்பு குறித்த தரிசனத்தை வைப்பது? எவ்வாறு தேர்ந்தெடுப்பது? விளைவு- படைப்புவாத விவிலிய வசனங்களை வைக்கும் முயற்சியே கைவிடப்பட்டது. இது குறித்த நியூயார்க் டைம்ஸின் வார்த்தைகளுடனேயே நிறைவு செய்கிறேன், 'Second thoughts are a creative characteristic of Homo sapiens, and the Tulsa Zoo directors did well by theirs. They were fortunate to have G anesh, known to true believers as the remover of obstacles and the god of harmony, on the grounds.' (நியூயார்க் டைம்ஸ் ஜூலை 10, 2005).
'கற்பகமென வினை கடிதேகும்.'

3 Comments:

Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

வலைப்பதிவு தொடங்கியமைக்கு வாழ்த்துகள் அரவிந்தன்.

தமிழ்மணத்தில் ஒரு வலைப்பதிவைச் சேர்ப்பதற்கு முன் குறைந்தது மூன்று பதிவுகளாவது எழுதப்பட்டிருக்க வேண்டும். தாங்கள் இன்னும் சில பதிவுகளை எழுதியபிறகு, தமிழ்மணத்தில் சேர்த்துவிடுங்கள்.

-மதி
(தமிழ்மணம் சார்பாக)

8:47 PM, August 17, 2005  
Blogger Sri Rangan said...

வாங்க அரவிந்தன்,வணக்கம்! தங்களின் அற்புதமான விவாதங்களை நான் படித்திருக்கிறேன்.தாங்கள் மார்க்சிடம் அபரிதமான வெறுப்புடையவர்தாம்.எனினும் உங்கள் ஆழ்ந்த வாசிப்பனுபவம் என்னை ஆச்சரியத்திலாழ்த்துவது உண்மை.நமக்கு நல்லதையே செய்ய வாருங்கள்.இந்தி-இந்து-இந்தியா வெனும் கருத்தோடு தயவுசெய்து வராதீர்கள்.மாறாக மனிதர்கள்-பல்மொழி-பல்கலாச்சாரம்-இந்தியா என்று கூறுங்கள்.அதுவே நமது வரலாற்றுத் தாயகத்துக்கு நன்மையானது.
அன்புடன்
ஸ்ரீரங்கன

3:04 PM, August 18, 2005  
Blogger ROSAVASANTH said...

அடடே, ரொம்ப நாளா எதிர்பார்த்தேன். வாங்க!

10:38 PM, August 18, 2005  

Post a Comment

<< Home