Sunday, February 11, 2007

அய்யன் காளி :இந்து சமுதாய சிற்பி

1863 ஆகஸ்ட் 23 அன்று பிறந்த அய்யன் காளி சிறுவயது முதலே இந்து தருமத்தின் கோட்பாடுகளில் தோய்ந்தவர் ஆவார். அவரது நாயர் முதலாளி கோவிந்தபிள்ளை நிலங்களை சீர் படுத்தியதற்காக அய்யன் காளிக்கு ஒரு சிறிய நிலம் வழங்கினார். இது அன்றைய நாயர் சமுதாயத்தில் சலசலப்பான எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஒருநாள் அய்யன் காளி விளையாடிக் கொண்டிருந்த பந்து நாயர் வீட்டில் விழுந்த போது அந்த நாயர் வந்து அய்யன் காளியை எச்சரித்தான். அன்று முதல் விளையாடுவதை விட்டுவிட்ட அய்யன் காளி ஆழமான மௌன சிந்தனையில் மூழ்கினார். தாழ்த்தப்பட்டு சுரண்டப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து சமுதாய விடுதலை பெறும் போராளியாக உருவெடுத்தார் அய்யன் காளி. இதற்காகவே அவர் பல நாடகங்களை எழுதி அரங்கேற்றினார். இவை இந்து புராணங்களிலை ஆய்ந்து அதில் சமுதாய விடுதலைக்கான தரவுகளை வடித்தெடுத்து உருவாக்கப்பட்டதாகும். உதாரணமாக கக்கல ரிஷி நாடகம், அரிசந்திர நாடகம், வள்ளி-சுப்பிரமணியர் திருமணம் ஆகிய நாடகங்கள் இவற்றில் அடங்கும். இவற்றினை நாடெங்கும் தாழ்த்தப்பட்ட மக்களிடையே நடத்தி கட்டுக்கடங்காத விழிப்புணர்வை ஏற்படுத்தினார் அய்யன் காளி.




அப்போது சதானந்த சுவாமிகள் சாதீயக்கொடுமைகளுக்கு எதிராக போராடி வந்த துறவி ஆவார். பூர்வாசிரமத்தில் நாயர் குடும்பத்தைச் சார்ந்தவர் அவர். சதானந்த சுவாமியின் உரையினை அய்யன்காளியின் தாய்வழி உறவினரான தாமஸ் வாத்தியார் கிழக்கே கோட்டையில் கேட்டார் (திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் முன்னால் இருக்கும் கோட்டைக்கு கிழக்கே கோட்டை என பெயர்) இந்த உரையினை அவர் அய்யன் காளியிடம் கூறினார். 1904 இல் சதானந்த சுவாமிகள் இந்து எழுச்சி மாநாடு ஒன்றை நடத்தினார். தாமஸ் வாத்தியார் தான் யார் என வெளிப்படுத்தாமலே இந்த மாநாட்டில் முழுமையாக இருந்தார். ஒருவேளை சுவாமிகள் உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்கள் மேல் அக்கறை கொண்டவரா என பார்க்கக்கூட அவர் எண்ணியிருக்கலாம். அவர் சதானந்த சுவாமிகளால் கவரப்பட்டார். பின்னர் அவர் அய்யன் காளியிடம் துறவியை அறிமுகப்படுத்தினார். ஏற்கனவே தாமஸ் வாத்தியார், நாடாங்கோடு ஹென்றி, மூலக்கோணம் ஹாரிஸ் மற்றும் கறுப்பு தாமஸ் வாத்தியார் (அய்யன் காளியின் உறவினர் வெளுப்பு தாமஸ் வாத்தியார்) ஆகியோர் இணைந்து ஏற்கனவே சாதீயத்திற்கு எதிராக இயக்கம் நடத்தி வந்தனர். இவர்கள் வெங்ஙனூருக்கு சுவாமிகளை அழைத்தனர். சுவாமியும் வெங்ஙனூர் சென்றார். சுவாமிகள் தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து அவர்களின் தலைவர் உருவாக வேண்டும் என அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் எழுத்தறிவு பெற்றவராக இருக்கவேணும் என்றும் சுவாமிகள் அபிப்பிராயப்பட்டார். இதனால் தைவிளாகத்து காளி என்பவர் தலைவரானார். ஆனால் விரைவில் அந்த கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் தைவிளாகத்து காளியால் இயலவில்லை. படிப்பறிவற்றவரெனினும் முழு ஆளுமையுடன் தம் ஒரு சொல்லில் கூட்டத்தை ஒழுங்கடைய செய்த அய்யன் காளியை சுவாமிகள் சின்ன காளி என்றும் தைவிளாகத்து காளியை பெரிய காளி என்றும் தலைமைப்பொறுப்புகளில் நியமித்தார். விரைவில் இந்து எழுச்சி மாநாடு அங்கு நடைபெற்ற அதே இடத்தில் சால்வேசன் ஆர்மி காரர்கள் கன்வென்ஷனை நிகழ்த்தினார்கள். அங்கு வந்த கர்னல் கிளாரா கேஸ் என்கிற ஆங்கிலேய பெண்மணி அய்யன்காளியை மதம் மாற்ற தீவிரமாக முயன்றார். அம்மையாரின் அனைத்து வாதங்களையும் ஆசையூட்டும் பேச்சுக்களையும் அமைதியாக செவி மடுத்த அய்யன் காளி இந்து த்ருமத்திலிருந்து விலக முடியாது என தெரிவித்துவிட்டார். இந்துவாக நிலைத்து நின்று இந்து அற உணர்வினை சமுதாயத்தில் தட்டி எழுப்பி தமது சமுதாயத்தினருக்கு உரிமைகளை வாங்கிதருவதாக முடிவெடுத்தார் மாவீரன் அய்யன் காளி. அம்மையாரின் நிர்பந்தங்கள் ஆசையூட்டும் பேச்சுக்கள் அனைத்தும் அய்யன் காளியின் அற சங்கல்பத்தின் முன் தோற்று மண்ணைக் கவ்வின. வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் சாதீயம் பேசும் இந்துக்களே சிறிது செவிமடுங்கள். காலங்களுக்கு அப்பால் அமரனாக நின்று நமக்கு அறத்தினை போதிக்கும் இம்மாவீர காவியத்தின் அற உரையை உணருங்கள். இந்து தருமம் எனும் சுவர்க்கமதில் உறைந்திருந்த சமூக நீதி எனும் கங்கையை சாம்பலினும் கீழாகி சாதியத்தில் சிக்குண்டிருந்த இந்து சமுதாயத்தில் ஓட வைத்த இந்த பகீரதனின் கால் தூசிகளை திருமண்ணாக திருநீறாக நம் நெற்றியில் இட்டுக்கொள்வோம் வாருங்கள். சாதீயத்தால் கொடுமைப்பட்டு அதனை வேரறுக்க களமிறங்கிய அய்யன் காளி அதே சாதீயத்தால் அன்னிய மதமாற்றிகள் தம் சமுதாயத்தினருக்கு செய்யும் கொடுமைகளை கண்டு கொதித்தெழுந்தார். இந்நிகழ்ச்சி நடந்த மறுநாளே அவர் ஸ்ரீ மூலம் திருநாளுக்கு மனு ஒன்றை சமர்ப்பித்தார். தம்மை கிறிஸ்தவ மதத்தில் சேர்க்க நடத்தப்பட்ட தீவிர முயற்சிகளை அதில் விவரித்த அய்யன் காளி மதமாற்றத்தால் தமது சமுதாயம் அருகி வருகின்றதென்றும் எனவே கட்டாய மதமாற்றம் நடந்திடக்கூடாதென்றும் கோரினார். இதனை தொடர்ந்து மகராஜா கட்டாய மதமாற்றம் கூடாது என்று அறிக்கை வெளியிட்டார். பிரம்மானுஷ்ட மடம் எனும் அமைப்பு அய்யன் காளியாலும் சதானந்த சுவாமிகளாலும் தொடங்கப்பட்டது. கருப்பு நிற தாழ்த்தப்பட்ட மக்களை மகாராஜா பார்க்கக்கூட கூடாது எனும் கீழ்த்தர தடையை விஜயதசமி நாளன்று அய்யன் காளி மீறினார். மேல்சாதி என தம்மை அழைத்துக் கொண்ட வெறியர்களின் தாக்குதல்களுக்கு அய்யன் காளியும் அவரது படையினரும் அசைந்து கொடுக்கவில்லை. இந்நிலையில் சிலர் சதானந்த சுவாமிகளின் பூர்வாசிரம சாதியை எப்படியோ தெரிந்து கொண்டனர். அதன் அடிப்படையில் அவரிடம் அவரது சாதீய எதிர்ப்பு இயக்கத்திற்கு எதிராக நூறு கேள்விக் கணைகளை தயார் செய்து மிகவும் சாதுரியமாக கேள்வி கேட்கும் ஒரு தூதனிடம் கொடுத்து அவரை பதிலளிக்க அனுப்பினர். சதானந்த சுவாமிகள் செயல் வீரரே அன்றி வக்கணையாக பேசுவதிலும் அடுக்கு மொழிகளை உதிர்ப்பதிலும் வல்லவர் அல்லர். அவர் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக, 'தீய நோக்கத்துடன் ஒரு பத்திரிகையாளன் சாதுரியமாக கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் ஒரு துறவி பதில் கூற வேண்டிய அவசியமில்லை' என கூறி அனுப்பிவிட்டார்.

பிரம்மானுஷ்ட மடத்தினால் அய்யன் காளிக்கும் அவரது தோழர்களுக்கும் சுவாமிகளின் ஊக்கம் கிடைத்தது. அதே நேரத்தில் கிறிஸ்தவர்களின் தொல்லை வளர்ந்தது. குறிப்பாக மதம்மாறிய கிறிஸ்தவர்கள் கையில் விவிலியத்தை ஏந்தியவாறு இவர்களை பார்த்து 'மடப் புலையா' 'மடப் புலைச்சி' என கேலி செய்து வந்தனர். பார்த்தார் அய்யன் காளி. மதம் மாறிய கிறிஸ்தவர்களையும் மீள்-அணைத்து ஏற்றெடுக்கும் ஒரு அமைப்பினை உருவாக்க வேண்டும் என அவர்கள் சுவாமி சதானந்தரிடம் வேண்டினர். அவருடன் ஆலோசித்தனர். அவரது ஆசியுடன் மடத்திலிருந்து வெளியேறி ஸ்ரீ நாராயண குரு, டாக்டர்.பல்பு, மகாகவி குமாரன் ஆசான், நீதிபதி கோவிந்த்ன் ஆகியோரை அணுகினார். ஸ்ரீ நாரயணகுருதேவர் ஸ்ரீ நாராயண தர்மபரிபாலன யோகம் தொடங்கிய நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 'சாது ஜன பரிபாலன சங்கம்' தொடங்கப்பட்டது. விவசாயத் தொழிலாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வேண்டும் என்றும் அந்த விடுமுறை நாளில் சங்க சேவையில் மக்கள் ஈடுபட வேண்டுமென்றும் கூறினார் அய்யன் காளி. இதற்கிடையில் 1896 தொடங்கி நடைபெற்ற ஈழவரின் கல்வி கோரிக்கை 1905 இ வி.பி.மாதவ நாயர் மூலம் மெய்ப்பட்டது. சாதி வெறியர்கள் ஈழவர் பள்ளிகளை சூறையாடிய போதிலும் பலர் இப்போராட்டத்தில் சாதி வரம்புகளை மீறி தம் சக-இந்து சகோதரர்களுக்கு மறுக்கப்பட்ட அடிப்படை மானுட உரிமைகளுக்காக ஒருங்கிணைந்தனர். திருவிதாங்கூர் முழுவதும் பரவிய நாயர்-ஈழவர் கலவர காலகட்டத்தில் தான் சிவிராமன் பிள்ளை - காவாலம் நீலகண்ட பிள்ளை போன்றவர்கள் தலைமையில் ஈழவ-நாயர் நல்லிணக்க முயற்சிகளும் தீவிரமடைந்தன. இத்தருணத்தில் கல்வி அதிகாரி டாக்டர் மிச்சேலின் தீரமான செய்கைகளை குறிப்பிட்டே ஆக வேண்டும். அவரது வாகனமே தீயிட்டு கொளுத்தப்பட்டும் கூட, சாதியின் அடிப்படையில் பள்ளிகளில் எவருக்கும் இடங்கள் மறுக்கப்படக் கூடாது என்பதனை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டவர் அவரே ஆவார். இந்நிலையில் திருவிதாங்கூர் திவானாக பி.ராஜ கோபாலாச்சாரி எனும் அந்தணர் பதவியேற்றார். இந்த காலகட்டத்தில்தான் சாது ஜனபரிபாலன சங்கம் புலையர் மற்றும் இதர தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி வேண்டுமென்று அவரிடம் கோரிக்கை வைத்தது. அய்யன் காளி மகள் வழி பேரன் அபிமன்யு பி.ராஜ கோபாலாச்சாரியாரை 'தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளை மதித்த அரிய மனிதர்களுள் ஒருவர்' என்கிறார். அவர் அய்யன் காளியிடம் இரண்டு வருடங்களூக்கு முன்னரே 1907 இலேயே அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சாதகமாக இந்த விசயத்தில் தீர்ப்பு அளித்திருப்பதைக் கூறினார். ஆனால் நடைமுறையில் பள்ளிகளை அணுகிய போது நிலையோ வேறாக இருந்தது. 'புலையர் குழந்தைகள் படித்தால் எங்கள் வயல்களில் யார் வேலை செய்வார்கள்?' என இறுமாப்புடன் பதிலளித்தன தங்களை மேல்சாதி எனக் கருதிக்கொண்ட அந்த மிருகங்கள். 'எங்கள் குழந்தைகள் கல்வி கற்க முடியாதென்றால் உங்கள் வயல்களில் நாங்கள் வேலை பார்க்க முடியாது' என்றார் அய்யன் காளி. ஜமீன்தார்கள் வேலை செய்ய மறுத்து அறப்போராட்டம் நடத்திய விவசாய தொழிலாளர்களை தண்டித்தனர். கொடூரமாக தண்டித்தனர். பற்களை உடைப்பது முதல் சாட்டையடிகள் என்ன சூடு போடுவதென்ன என கொடுமைகள் அரங்கேறின. அதிகார வர்க்கம் வேலை நிறுத்தம் செய்யும் விவசாய தொழிலாளர் மீது நடவடிக்கை எடுக்க திவானை அணுகியது, ஆனால் திவான் பி.ராஜ கோபாலாச்சாரியார் மறுத்துவிட்டார். அன்னை காளியும் நம் சோதரர் மேல் கடைக்கண் வைத்தாள். அய்யன்காளி படை களமிறங்கியது. தொழிலாளர் மீதான வன்முறை நின்றது. ஆனால் எத்தனை நாள் ஏழைத் தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டம் செய்வர்? அதிர்ஷ்டவசமாக கடலோர மீனவர் கை கொடுத்தனர். ஆனால் அதே நேரத்தில் மேல்சாதி காரர்களுக்கும் வலி புரிய ஆரம்பித்தது. 1916 இல் இது குறித்து அய்யன் காளி நினைவு ஓர்கையில் சொல்லுவார், 'ஒரு புலையர் பெண் செய்த வேலையை அட 6 நாயர் ஆண்கள் சேர்ந்து செய்யமுடியவில்லையே!' இந்நிலையில் புலையருக்கு சாதகமாக ஒரு கல்வி அறிக்கையை மார்ச் 1 1910 இல் டாக்டர் மிச்சேலும் ராஜ கோபாலாச்சாரியாரும் இணைந்து வெளியிட்டனர்.உடனடியாக தாக்குதல் வெளியாயிற்று, இம்முறை தாக்குதலில் ஈடுபட்டவர் முன்பு சுவாமி சதானந்தருக்கு எதிராக கேள்விக்கணைகளை வித்தாரமாக உருவாக்கிய அதே ஆசாமிதான். அவர் யார் தெரியுமா? கேரளாவின் முதல் மார்க்சியவாதியும் காரல் மார்க்ஸ்ஸின் சரிதத்தை மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டவருமான சுதேசாபிமானி ஆசிரியர் கெ.ராமகிருஷ்ணபிள்ளைதான். இந்த முற்போக்கு புண்ணியவான் எழுதினார்: "இது குதிரையையும் எருமையையும் ஒரே நுகத்தில் பூட்டுவதைப் போன்றதாகும்."

புலையர் சமுதாய அக்கறையில் ஈடுபாடு கொண்ட மற்றொருவர் பி.கெ.கோவிந்தன் பிள்ளை. இவரும் பி.ராஜகோபாலாச்சாரியாருமாக இணைந்து புலையர்களுக்கு பட்டா செய்து தர வேண்டிய நிலத்தை குறித்து ஆலோசனை செய்தனர். கோவிந்தன் பிள்ளையே அந்த பட்டா நிலத்தை தயாரிக்க ஏற்பாடாயிற்று. புலையர்களுக்கு இன்னமும் கல்வி பள்ளிகளில் மறுக்கப்படுவது, புலையர்கள் வாழும் இடங்களிலேயே இரவு கல்விக்கூடங்களை ஏற்படுத்துவது. மருத்துவமனைகளில் புலையர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது, அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்கள் பெயரளவிலேயே இருப்பது என புலையர் சமுதாய பிரச்சனைகளை உணர்ச்சி ததும்ப ஆதார பூர்வமாக பேசினார் கோவிந்தன் பிள்ளை. பிப்ரவரி 13 1911 இல் கோவிந்தபிள்ளை எனும் அந்த 'மேல்-சாதி' மனிதர் புலையர்களின் ஊனோடு கலந்து உணர்ச்சிகளில் உருகி பேசியது இன்றைக்கும் புலையர்களால் மட்டுமல்ல அவர்களைப் போன்றே சாதீய விலங்குகளால் விலங்கு பிணிக்கப்பட்ட அனைத்து சமுதாயத்தினரின் முன்னேற்றத்துக்கு முக்கிய குரலாகக் கருதப்படுகிறது. இறுதியாக தமது பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தினார் கோவிந்தன் பிள்ளை. இச்சபையில் தாம் பேசுவதைக் காட்டிலும் புலையர் சமுதயத்தை சார்ந்த ஒருவரே தம் நிலைகளை விளக்குவதே தகுந்தது எனவும் எனவே அதற்கு ஆவன செய்யவேண்டும் என்றும் கூறினார். கனத்த மௌனம் நிலவியது அங்கே. திவான் ராஜகோபாலாச்சாரியார் இது குறித்து சபையினை கேட்டார். ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திவானை காண அய்யன் காளி சென்றார். ஆனால் திவானின் காவலாளிகள் அவரை உள்ளே விட மறுத்தனர். திவானுக்கு ஒரு தந்தி அனுப்பினார் அய்யன் காளி. அய்யன் காளியை கூப்பிடனுப்பிய திவான் அவர் வந்ததும் முதலில் காவலாளிகளை மன்னிப்பு கேட்க செய்தார். ஸ்ரீ மூலம் மக்கள் சபைக்கு புலையர் பிரதிநிதியாக அய்யன் காளி நியமிக்கப்படுவது குறித்து பேச்சு நடந்தது. அய்யன்காளி மன நிறைவுடன் திரும்பினார்.

1911 டிசம்பர் 5: "சாது ஜனபரிபாலன சங்கத்தைச் சேர்ந்த மதிப்பிற்குரிய அய்யன்காளி திருவிதாங்கூர் ஸ்ரீமூலம் மக்கள் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்" என அரசாங்க கெசட்டில் அறிக்கை வெளியானது. அய்யன் காளி தம் சமுதாய மக்களின் பல நலன்களுக்காக குரல் கொடுத்தார். அய்யன் காளி ஆற்றிய உரைகளை அடுத்த பதிவில் கூறிடுவேன். படிப்பறிவற்றவராக அய்யன்காளி இருக்கலாம் ஆனால் சமுதாய துன்பத்தை தானேற்றவர் இதயத்தில் வேத தருமத்தின் வாக் தேவதையே ஆட்சி செய்கிறாள். கிரௌஞ்ச பட்சிகளுக்காக இளகிய மனவேதனை வேடனை ஆதிகவியாக்கியது. அய்யன் காளியோ பட்சிகளுக்காக அல்ல ஆறறிவு படைத்தும் சக-மனிதரை மாக்களாக நடத்துகிற ஒரு சமுதாய அமைப்பையே அல்லவா கண்டு வேதனித்தார். எனவே கல்வியறிவுகளுக்கு அப்பாலானதோர் இதயத்தின் நல்லறிவு அவரது வார்த்தைகளுக்கு ஆற்றல் அளித்தது. 1913, 1914 ஆம் ஆண்டுகளில் அய்யன் காளியை தவிர சரதன் சாலமன், வெள்ளிக்கர சோதி ஆகியோரும் அய்யன்காளியின் முயற்சியால் நியமிக்கப்பட்டனர். சரதன் சாலமன் புலைய கிறிஸ்தவர்களுக்காக மட்டுமே பிரதிநிதி என்பது போல நடந்துகொண்டார். அபிமன்யுவின் வார்த்தைகளில், '1913 இல் அய்யன்காளியின் பரிந்துரையின் பேரில் சரதன் சாலமன் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரது பிந்தைய நடவடிக்கைகள் புலையக்கிறிஸ்தவர்களுக்கு சாதகமாக அமைந்தன. அச்செயல் அய்யன் காளிக்குச் சற்றும் பிடிக்கவில்லை.' சபையிலேயே அவரது கருத்து சாது ஜனபரிபாலன சங்கத்துக்கு எதிரானது என அய்யன் காளி தெரிவித்தார்.

1912 இல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நெடுமங்காடு சந்தையில் அய்யன்காளி நுழைந்தார். மேல்சாதி மிருகங்களுடன் இம்முறை இஸ்லாமிய வெறியர்களும் சேர்ந்து கொண்டனர். ஆனால் ஆதி சக்தி அருளுடன் அணிதிரண்ட அய்யன் காளி சேனை இந்த சாதி மத வெறி பிடித்த கும்பலை ஓட ஓட விரட்டியது. அதன் பின்னர் அனைவரும் சந்தையில் அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் மீண்டும் பள்ளி உரிமைகள் கிடைக்காமல் போயின. அய்யன் காளி மனம் சோர்ந்த நிலை அடைந்த போது அவரது அகக்கண்ணில் அவரது குரு சுவாமி சதானந்தர் தோன்றினார். "உரிமைகளை யாரும் கூப்பிட்டு கொடுக்க மாட்டார்கள் நாம் அவற்றை தேடி சென்றடைய வேணும்" எனும் அவரது அமுத மொழி அய்யன்காளிக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்தது. அர்ஜுனன் காண்டீபத்தை மீண்டும் உறுதியாக பிடித்தான். புலைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு பள்ளிகளுக்குள் ஏறினார் அய்யன் காளி. சாதீய மிருகங்கள் தாக்கின. பதிலடி அளித்தார் காளி. கலவரங்கள் வெடித்தன. 1914 இல் கல்வித்துறை தம்முடைய தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உத்தரவு செயல்படுத்தப்படுகிறதா என பார்க்கலாயிற்று. புலையக்குழந்தைகள் நுழையும் பள்ளிகளில் மேல்சாதிகுழந்தைகள் கூட்டமாக வெளிநடப்பு செய்தன. இதனையடுத்து மிச்சல் வெளியேறும் குழந்தைகளின் தக்க காரணங்கள் இருந்தால் ஆவணப்படுத்துமாறு தலைமையாசிரியர்களைப் பணித்தார். இந்நிலையில் சோதனையை சாதனையாக்கிட முடிவெடுத்தார் அய்யன் காளி. 1905 இல் அவர் ஏற்கனவே நிறுவிய பள்ளிக்கு இப்போது அரசு அங்கீகாரம் பெறப்பட்டது. அடுத்து தகுந்த ஆசிரியரை தேடி அலைந்தனர்.பரமேஸ்வரன் பிள்ளை என்பவர் முன்வந்தார். 'ஹரி ஸ்ரீ ஓம்' என தொடங்கியதுதான் தாமதம் வெறி பிடித்த ஈன ஜன்மங்கள் பள்ளியை தாக்கின. அன்று இரவு பள்ளி தீக்கிரையானது. ஆனால் அய்யன்காளி ஓய்ந்துவிடவில்லை. விளைவாக பள்ளிகள் பல இடங்களில் எழுந்தன.

அடுத்ததாக முக்கியமானது கல் நகை அணியும் வழக்கத்தினை கைவிட்டு நல்நகைகள் அணிய வைத்ததே ஆகும். இதுகுறித்து அய்யன் காளி நடத்திய பிரச்சார கூட்டங்களில் மேல்சாதி ஈனர் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்தனர் அய்யன் காளி படையினர். பெரும் கலவரங்கள் எங்கும் பெருகின. இந்நிலையில் நாயர் சர்வீஸ் சொசைட்டி முற்போக்கு எண்ணம் கொண்ட அமைப்பாகும். அது அய்யன் காளியுடன் இணங்கி வந்தது. இதன் மூலம் சமுதாய நல்லிணக்கத்தை உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் ஏற்படுத்தினார் அய்யன்காளி.நாயர் சர்வீன் ஸொசைட்டி தலைவர்களில் ஒருவரான சங்ஙனாச்சேரி பரமேஸ்வரன் பிள்ளை தலைமையியேற்க நடத்தப்பட்ட சமுதாய நல்லிணக்க மாநாட்டில் பரமேஸ்வரன் பிள்ளை அறிவித்தார், "திரு,.அய்யன் காளியின் ஆக்ஞைக்கு இணங்க நமது சகோதரிகளின் கல்மாலைகளை அறுத்தெறியவே நாம் முழு சம்மதத்துடன் இங்கு கூடியிருக்கிறோம்." அம்மேடையிலேயே அருவாள் கொண்டு கல்மாலைகள் அறுத்தெறியப்பட்டன. பெரிநாடு கலவரத்தால் ஏற்பட்ட வழக்குகளை அய்யன் காளி பொருளாதார நெருக்கடிக்களுக்கிடையே நடத்தி நல்லபடியாக முடித்தார்.

ஆனால் போக வேண்டிய தூரமோ ரொம்ப இருந்தது. தீண்டாமையையும் வறுமையையும் பயன்படுத்தி மதமாற்றங்கள் தொடர்ந்தன. மீண்டும் இப்பிரச்சனையை எழுப்பினார் அய்யன் காளி.

இதோ ஸ்ரீ மூலம் மக்கள் சபையில் அய்யன்காளியின் குரலைக் கேளுங்கள்: "மிருகங்களை விட கேவலமான விதத்தில் நடத்தப்படும் புலையர் மக்கள் கிறிஸ்தவத்திற்கோ இஸ்லாமிற்கோ மாறினால் இக்கொடுமைகள் சட்டென்று அகன்று விடுகின்றன. தற்போது நிலவி வரும் தீண்டாமைக்கு எந்த தெய்வ நம்பிக்கையையும் ஆதாரமாகக் கொண்டதல்ல. எனது இனத்தவர்களுக்கு வீடோ பூஜை நடத்த கோவிலோ கிடையாது. எனவே இவ்விஷயத்தில் வேறு சமுதாயத்தினருக்கு செய்வதை விட கூடுதலாக எங்களுக்கு அரசாங்கம் செய்து தரவேணுமென்று வேண்டுகிறேன். எங்கள் தேவைகளுக்காக கிணறுகளும் கோயில்களும் நிர்மாணித்து தரவேண்டும். நீதி மன்றம் போன்ற அரசாங்க அலுவலகங்களில் சில புலையர்களையேனும் பணியாளர்களாக நியமிக்க வேண்டும். புலையக்குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி சொல்லிதரும் ஆசிரியர்களுக்கு ஊக்க தொகை வழங்கவேண்டும்.

திவான்: பொது வழிபாட்டு கூடங்கள் நிர்மாணிப்பது அரசாங்க திட்ட வரம்புக்குள் இல்லை. மதமாற்றம் சம்பந்தமாக அரசாங்கம் எதுவும் செய்ய முடியாது. (1923 மார்ச் 21)

எத்தகைய தற்கொலை போக்கு இந்து சமுதாயத்திற்கு பாருங்கள்.

சாதுஜனபரிபாலன சங்கம் நன்றாகவே வளர்ந்து வந்தது. 1930 ஆண்டுவிழாவில் வி.எஸ்.சுப்பிரமணிய அய்யர் அக்கூட்டத்தில் தலைமை தாங்கினார். அய்யன் காளியின் வரவேற்புரை எந்த உண்மையான இந்துவுக்கும் கண்ணில் நீரை வரவழைக்கும். அதனையும் பின்னர் எழுதுகிறேன். அய்யன் காளிக்கு மிகவும் பிடித்த சங்க பிரார்த்தனை பாடல்களில் ஒன்றினை கீழே தருகிறேன். இன்றும் முதிய சகாக்கள் இதனை பாடுவதுண்டு

ஆனந்த சின்மயா ஜோதி ரூப மூர்த்தியே ஆனந்த சின்மயா
அழகிய பாத மலர்களை வணங்குகிறோம் ஸ்ரீ ராம கிருஷ்ணா
ஆனந்த சின்மய தேவா
மாதாவும் நீயே பிதாவும் நீயே சுற்றமும் நட்பும் நீயே தேவா
...
இனி அய்யன் காளி வாழ்க்கை நிகழ்ச்சிகளை சுருக்கமாக கூறிவிடுகிறேன். பேருந்துக்கு நேரமாகிறது என்பதால். ஊர்போய் வந்து விரிவாக எழுதுகிறேன் இந்துமகாசபையின் சாதீய எதிர்ப்பை ஆதரித்தார் அய்யன் காளி.
1933 : கோவில் நுழைவு பிரகடனம்.
1937 ஜனவரி 14 வெங்ஙானூர் வந்து மகாத்மா காந்தி அய்யன் காளியை சந்தித்தார்.
1939 இல் அய்யன் காளிக்கு கொடுப்புனா மக்கள் வரவேற்பு
அய்யன் காளியின்மகளின் கணவர் டி.டி.கேசவன் சாஸ்திரி ஆவார். இவர் பெரும் சமஸ்கிருத பண்டிதரும் ஆவர்.
இக்காலகட்டத்தில் அய்யன் காளி ஆஸ்துமாவால் நோயுற்று தளர்ந்தார். இப்போது கிறிஸ்தவ மிசிநரிகள் தம் கைவரிசையை காட்டினர். ஜான் ஜோசப் என்கிறவரையும் ஜானஜோஷ்வா என்பவரையும் வைத்து அய்யன் காளிக்கு போட்டியாக கிறிஸ்தவ புலையர்களை அதிகாரிகளாக கொண்டு செறுமன் சபை ஒன்றை கூட்டினார்கள். இந்து புலையர்களை சாது ஜனபரிபாலன சங்கத்திலிருந்து விலகி இதில் வந்து சேர ஆசை காட்டினர். ஜான் ஜோசப் இதன் செயலாளர். ஆபிரகாம் ஐசக் என்பவர் தலைவர். உடல் தளர்ந்து சோர்ந்த நிலையில் அய்யன் காளி மௌனமாக இருந்தார். இதனை எதிர்த்து கேசவன் சாஸ்திரி, டிவி தேவன், ஆரன்முள பிகெதாஸ் ஆகியோர் இந்த நயவஞ்சகத்தனத்தை எதிர்த்தனர், இதன் விளைவாக கிறிஸ்தவ சதியை முறியடிக்க தனது இயக்கவாரிசாக அய்யன்காளி தேர்ந்தெடுத்த கேசவன் சாஸ்திரியால் உருவானதுதான் சமஸ்த கேரள புலையர் மகாசபை.

1941 ஜுன் 18 இவ்வுலக வாழ்க்கையை நீத்தார் தலித் போராளியும் இந்து சமுதாய சிற்பியுமான அய்யன் காளி.

9 comments:

  1. அரவிந்தன்,

    மிக நல்ல கட்டுரை. ஐயன் காளி இந்துதருமத்தில் இருந்தபடியே இந்துமதத்தில் இருக்கும் குறைபாடுகளை எதிர்த்துப் போராடிய விதம் மிகச் சிறப்பானது.

    இந்துமதத்தில் ஐயன் காளி காலகட்டத்தில் இருந்த்த, தற்போதும் சில இடங்களில் இருக்கும் சாதியை முன்வைத்து நடக்கும் கொடுமைகள், பிறப்பின் அடிப்ப்டையிலான சாதியால் உயர்வு, தாழ்வு எனும் சிந்தை நிலை இந்து தருமத்தினைப் பின் பற்றுபவர்களுக்கு எப்படி ஏற்பட்டது என்று தங்களின் பார்வையை அறிய விரும்புகிறேன்.

    நானறிந்த வரையில் பகுத்தறிவுக் கூமுட்டைகள் கூப்பாடு போடுவதுமாதிரி வேதமோ, கீதையோ பிறப்படிப்படையில் வர்ணப் பகுப்பைச் சொல்லவில்லை.

    இசுலாமியர்கள், ஆங்கிலேயர்கள் அவர்களது பாலைவன, கடுங்குளிர் பிரதேச நாகரீக வாழ்வியல் அடிப்படைகளாக அமைந்த "Might is Right" எனும் கோட்பாட்டை அவர்கள் படையெடுப்பின், ஆக்கிரமிப்பின் போது இந்திய மண்ணிலும் வாழ்வியல் கருத்தாக ஆக்கினார்கள் என்பது எனது கருத்து (வரலாற்று உண்மையும்)

    கூடுதலாக வியாபாரிகளாக வந்த ஆங்கிலேயர்கள் இந்திய மண்ணின் மைந்தர்களான இந்து மன்னர்கள் தங்களிடையே ஒற்றுமையின்மையால் ஒருவர்மீது ஒருவர் போரிட்டுக் கொண்டிருந்த சூழலில் அவர்களது ஆட்சிக்கு பாதுகாப்பு தருவதான வகையில் போர் எப்போதும் தொடர்வதே ஆங்கிலேயர்களின் நலனுக்கு உகந்தது என்பதால் ஏற்படுத்திய "Divide and Rule" எனும் தத்துவரீதியிலான இந்தியர்களை குழுவாக்கி அடக்கி ஆளும் உத்தியும் என்கிற இந்திய வரலாற்றின் உடனடியான 250 ஆண்டுகளில் இந்தியரல்லாத, இந்துதருமத்தைப் பின்பற்றாத அரசாண்ட அன்னியரால் பிரதானப்படுத்தப்பட்ட
    "Might is Right"
    "Divide and Rule"
    இந்த இரு கொள்கைகளே ஐயன் காளி அவர்கள் காலத்திலும் / இன்றும் இந்து மதத்தில் சாதீய விகாரங்களுக்குக் காரணமாகிறது என்பது எனது கருத்து.

    தங்கள் பார்வையை சாதீய விகாரங்களின் ஆணிவேராக எதைக் கருதுகின்றீர்கள் என அறிய ஆவலாய் இருக்கிறேன்.

    ReplyDelete
  2. சிறந்த பதிவு.
    நன்றி

    ReplyDelete
  3. //இந்து சமுதாய சிற்பியுமான அய்யன் காளி//
    இந்து சமுதாய சிற்பியா? புத்தரையும் வள்ளலாரையும் உள்ளிழுத்தது போல அய்யன்காளியையும் உள்ளிழுக்கும் வேலையா?

    ReplyDelete
  4. அய்யன் காளி அவர்களை பற்றிய பதிவிற்க்கு நன்றி.

    முழுசா இன்னும் படிக்கலை. படிச்சுட்டு மீண்டும் பின்னூட்டமிடுகீறேன்.

    ReplyDelete
  5. அரவிந்தன் அவர்களே,

    நீங்கள் மட்டும் உண்மையை வெளிப்படுத்தாவிட்டால் ஐயன் காளி அவர்களை வேறு ஒருவர் தனது ப்ளாக்கில் வர்ணித்திருந்தபடி ஏதோ ஒண்ணரையனா அரசியல்வாதி என்பதாகவே நினைத்துக்கொண்டிருந்திருப்போம். உண்மையை வெளிப்படுத்தியதால் ஐயன் காளி எங்கள் மனங்களில் உயர்ந்து நிற்கிறார்.

    இந்து மதத்தின் பெரியோரைப் பற்றிய உண்மைக் கதைகளை அவர்களின் பெருமை வெளிப்படுமாறு எழுதும் தங்களின் பாதங்களை எங்கள் வீட்டுக் குழந்தைகள் பணிகின்றன. பெரியோர்கள் தங்களை ஆசிர்வதிக்கிறார்கள். எங்களின் அன்பிற்கும் மரியாதைக்குரியவராகிறீர்.

    ReplyDelete
  6. நன்றிகள் அரவிந்தன் சார்.

    எனது கண்களுக்குத் தெரிவதெல்லாம் ஐயன் காளி எனும் மாபெரும் தவப் புதல்வனின் பெருமைகள்தான்.

    அதற்குப் பிறகு தெரிவது திரு திரு திரு என ஆலமரத்தின் கீழே அமர்ந்து விழிக்கும் கருத்துத் திருடர் ஒருவரும்.

    ReplyDelete
  7. அரவிந்தன், உணர்ச்சிகரமான பதிவு. மாவீரர் அய்யன் காளி வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தையும் எழுதி விட்டீர்கள். அவசரத்தில் எழுதினேன் என்றும் நீங்கள் சொல்லித் தான் தெரிகிறது!

    காந்திஜி அய்யன்காளி சந்திப்பு பற்றி ஜெயமோகனின் "பின் தொடரும் நிழலின் குரல்" நாவலில் வரும். வீரபத்ரப் பிள்ளை எழுதி வைத்துப் போன ஒரு கதையாக என்று ஞாபகம்.

    இதில் அய்யன்காளி மற்றும் அவரது சங்கத்தினருக்கு காந்திஜி வன்முறையை விடுமாறு உபதேசம் செய்வார். அய்யன்காளியின் துணைவர் ஒருவர் (பெயர் சிண்டன்??) இதைக் கேட்டு கொதிப்படைந்து காந்திஜியுடன் தர்க்கம் செய்வார். உயர்சாதியினர் அவர்கள் உடலில் ஏற்படுத்திய காயங்களைக் காண்பிப்பார். காளி ஒன்றும் பேசாமல் அமர்ந்திருப்பார். கடைசியில் போகும்போது அவர் கையில் இருக்கும் கம்பை எறிந்துவிட்டு "என் சக்தி இதனால் இல்லை என்று புரிந்து கொண்டேன்" என்று சொல்லி காந்தியிடம் இதே போன்று கடைசி வரை அகிம்சையில் இருப்பீர்களா என்பது போன்று (சரியாக நினைவில் இல்லை) ஏதோ கேட்டுவிட்டுப் போய் விடுவார். அவரது கேள்வி காந்திஜியை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கும்.. தாறுமாறாக ராட்டையில் நூல் நூற்பார் என்பதாகக் கதை முடியும்.

    அந்தக் கதையில் வரும் உரையாடல்கள் மிகவும் உணர்ச்சிகரமாகவும், சாட்டையடியாகவும் இருக்கும்.

    ReplyDelete
  8. http://ambedkar.org/books/AYYAN-KALI.htm

    ReplyDelete
  9. http://www.dinamani.com/Cinema/CineItems.asp?ID=DNC20070215125153&Title=Cinema+%2D+News&lTitle=%F9Nn%A7Ls

    ReplyDelete