விவேகானந்தபுரத்தில் உள்ள கிராமோதய பூங்கா -ஏக்நாத் அரங்கில் ஆகஸ்ட் 12 மற்றும் 13 தேதிகளில் நடத்தப்பட்ட தேசிய வர்ம கருத்தரங்கு விவேகானந்த கேந்திரத்தின் இயற்கைவள அபிவிருத்தி திட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. CCRAS அமைப்பினைச் சார்ந்த டாக்டர்.லவேக்கர் மற்றும் டாக்டர் தெய்வநாயகம் ஆகியோர் தொடக்கவிழாவில் பங்கேற்றினர். பல இருப்புகளில் வர்ம மருத்துவத்தின் பல பரிமாணங்கள் ஆராயப்பட்டன. குமரி மாவட்டம் மற்றும் தென் தமிழகத்தின் மாவட்டங்களிலிருந்து (குறிப்பாக திருநெல்வேலி, தூத்துகுடி) வந்திருந்த ஆசான்கள், ஆயுர்வேத மற்றும் சித்தமருத்துவ வைத்தியர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் இரண்டு நாட்கள் நடந்த நிகழ்வுகளிலும் கேள்விபதில் பகுதிகளிலும் கலந்து கொண்டனர். 12 ஆம் தேதி மாலை ஆசான் முருகன் அவர்களும் அவரிடம் பயிலும் மாணவர்களும் குமரி மாவட்ட வீர விளையாட்டுக்களை செய்து காட்டினர். வர்ம அடங்கல்கள், இளக்கு முறைகள் ஆகியவை குறித்து சில செய்முறை விளக்கங்களும் அளிக்கப்பட்டன. பாரம்பரியமான ஆசான் பரம்பரைகளை சார்ந்த மூத்த ஆசான்கள் முதன்முறையாக வர்மம் குறித்த தேசிய கருத்தரங்கில் கலந்து கொள்வது இதுவே முதல் தடவையாகும். அக்குபஞ்சர் புள்ளிகளுக்கும் வர்ம புள்ளிகளுக்குமான இணைத்தன்மைகள், வர்மபுள்ளிகளுக்கு இணையாக விளங்கும் உள்ளுறுப்புகள் (anatomical correlates of Varma points in the face and neck region) என்பன போன்ற தொடர்புல ஆய்வுத்தாள்களும் வாசிக்கப்பட்டன. பாரம்பரிய ஆசான்களிடம் வந்து கற்பதில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து விளக்கினார் குமரி மாவட்டத்தின் முதிர்ந்த ஆசான் பாஸ்கரன் அவர்கள். வைத்தியர்.ஆசான்.இராஜ்குமார் வர்மத்தினை ஒரு மேடை நிகழ்ச்சியாக விளக்கிக்காட்டுவதில் உள்ள கடினங்களை விளக்கினார். மூலச்சல் வர்ம பள்ளி நடத்தும் இராஜேந்திரன் வர்மப்புள்ளிகள் மூலம் குறிப்பிட்ட சில நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தும் ஜன்னியை கட்டுப்படுத்துவது குறித்தும் கூறினார். வைத்தியர் திருப்பதி ஆசான் வர்ம சிகிச்சையில் மருந்து தயாரிப்பது குறித்து பேசினார். வர்ம சிகிச்சை முறைக்காக ஆசான்களையும் வைத்தியர்களையும் கூட்டுவித்து தேசிய அளவிலான ஒரு கருத்தரங்கு நடந்தது இதுவே முதல் முறையாகும். ஆனால் இது ஒரு தொடக்கமே இனி முன்னோக்கி நகர்ந்து வர்மவியலை ஒரு சீரிய சிகிச்சை முறையாக மாற்றுவதில் பல்துறையாளர்களும் முன்னின்று உதவ வேண்டும். இக்கருத்தரங்கின் வெற்றிக்கு பின்னால் நின்ற பேருள்ளங்கள்: வைத்தியர் திருப்பதி ஆசான், சித்தா டாக்டர். கணபதி , டாக்டர் லவேக்கர், மற்றும் விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தி திட்டத்தின் செயலர் வாசுதேவ்ஜி அவர்கள். இக்கருத்தரங்கின் இலச்சினை வாசகமான 'காயத்தில் நின்ற கருத்தறிவோம்' திருமூலர் திருமந்திர வாசகத்தினை தழுவியது.
0 Comments:
Post a Comment
<< Home