பேய் பயம் : திரை விமர்சனம்
இருபக்கமும் சாராமல் இருபக்க நியாயங்களையும் வாதங்களையும் கூறி எடுக்கப்பட்டதாக கூறினாலும் கூட இத்திரைப்படம் எந்த பக்கம் சார்ந்திருக்கிறது என்பது தெளிவாக வெளிப்படுகிறது. இத்திரைகதைக்கு பின்னாலிருக்கும் உண்மையான எமிலி ரோஸ் யார்?
ஜுலை 1 1976 இல் ஒரு ஜெர்மானிய கிராமத்தில் இறந்த அனலீஸ் மிக்கேல்தான் திரையின் எமிலி ரோஸ். மிகுந்த கட்டுப்பாடும் தீவிர மத வைராக்கியமும் கொண்ட கத்தோலிக்க குடும்பத்தில் வளர்ந்த இப்பெண் தனது 16 ஆவது வயது முதல் மனநிலை சமமின்மையால் மீண்டும் மீண்டும் அவதிப்பட்டு வந்தாள். 1973 இல் எர்ன்ஸ்ட் அல்ட் என்கிற பாதிரியார் இப்பெண்ணுக்கு பேய் பிடித்திருக்கலாம் என தெரிவித்தார். தொடர்ந்து பேயோட்டும் சடங்கு நடத்தப்பட்டது. கிபி 1614 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சடங்கு விதிமுறைகளின் (Rituale Romanum) அடிப்படையில் நடத்தப்பட்ட பேயோட்டல்கள் 1975 இலிருந்து ஆறு மாதத்தில் 67 முறை இந்த பெண்ணுக்கு நடத்தப்பட்டன. (படத்தில் ஒரேமுறைதான் பேயோட்டும் சடங்கு நடத்தப்பட்டதாகக் காட்டப்படுகிறது.) முக்கியமாக முட்டுக்கள் தரையில் மோத மண்டியிட்டு விழுந்து பாவங்களுக்கு பிராயசித்தம் செய்யும் சடங்குகளை அவள் மீண்டும் மீண்டும் செய்திருந்தாள். அவள் இறந்த பிறகு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவள் முட்டெலும்புகளின் இணைப்புகள் சிதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவள் இறுதிக்கால கட்டத்தில் இந்த சடங்கினை செய்ய அவள் பெற்றோர்கள் உதவினார்கள். இந்த 67 முறை செய்யப்பட்ட சடங்குகளில் 42 பேயோட்டல்கள் டேப் ரெக்கார்டர்களில் பதிவு செய்யப்பட்டன. இந்த சடங்குகளில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் "ஏசுவின்/கடவுளின் பெயரால் கட்டளையிடுகிறேன். அசுத்த ஆவியே இந்த உடலை விட்டு விலகு" என்பது போன்ற வசனங்கள் பாதிக்கப்பட்ட நபருக்கு தான் உண்மையிலேயே அசுத்த ஆவிகளால் ஆட்கொள்ளப்பட்டிருப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது எனவும் அது நிலைமையை இன்னமும் மோசமடைய செய்கிறது.
1971 இல் வெளியிடப்பட்டு மிகவும் பிரபலமடைந்திருந்த வில்லியம் பிளேட்டியின் நாவல் 'எக்ஸார்ஸிஸ்ட்'. (பின்னர் தமிழில் பேய்-பெண்-பாதிரி என குமுதம் இதழில் தொடராக வெளிவந்தது.) 1973 இல் இந்த நாவல் திரைப்படமாக்கப்பட்டது. இந்நாவலும் திரைப்படமும் மேற்கத்திய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் இனமறியாத அச்சங்கள் ஏற்பட்டதாக உணர்ந்தனர். மனநல சிகிச்சை பெற்றனர். இத்திரைப்படத்தில் அசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட பெண் குழந்தையின் மாறிய குரல் பேச்சினை போலவே அனலீஸின் 'அசுத்த ஆவி' குரல் பேயோட்டும் சடங்கில் அமைந்துள்ளது தெரிந்தோ தெரியாமலோ அனலீஸ் இத்திரைப்படத்தினால் ஆழ்-மன தாக்கம் அடைந்திருக்கலாம் எனும் சாத்தியத்தையும் எழுப்பாமல் இல்லை. இங்கேகிடைக்கும் பேயோட்டும் சடங்கின் ஒலிப்பதிவு குறிப்பிடத்தக்க விதத்தில் எக்ஸார்ஸிஸ்ட் பட ஒலியுடன் ஒத்து போவதை காணலாம். தன்னுடலில் புகுந்திருக்கும் ஆவிகளில் ஒன்றாக அனலீஸ் அடால்ப் ஹிட்லரை கூறினாள். அதிசயிக்கத்தக்க விதமாக வில்லியம் பிளேட்டியின் நாவலின் தொடக்கத்தில் ஹிட்லர் படுகொலைகள் நடத்திய அட்ச்விச்சையும் தீய ஆவிகளையும் முடிச்சு போட்டு - அதாவது மதச்சார்பற்ற சமூக வரலாற்று நிகழ்வுகளில் நாம் தீமை என காண்பவற்றையும் மதரீதியில் அமானுட தீய ஆவி என அறிந்ததையும் முடிச்சு போடும் விதமாக-காட்டப்பட்டுள்ளது.
அனலீஸை பொறுத்தவரை அவளது குழந்தை பருவம் முதலே பாவம் குறித்த பலத்த போதனைகளுடன் வளர்க்கப்பட்டாள். அவளது அன்னை திருமணத்தின் முன்னர் குழந்தை பெற்றுக்கொண்டதற்காக சர்ச்சால் அவரது திருமண நாளன்று கறுப்பு கவுன் அணியுமாறு வற்புறுத்தப்பட்டவர். அந்த பாவத்தின் பரிகாரமாக கடுமையான மதச்சூழலில் தன் மகள்களை அவர் வளர்த்தார். இவ்வாறு திருமண பந்தத்துக்கு அப்பால் பிறந்த பெண் -அனலீஸின் சகோதரி- சிறிய வயதில் இறந்தது தனது பாவத்துக்கான இறைத்தண்டனை என அவர் நம்பினார். இதெல்லாம் அனலீஸின் மனதில் பதிந்தது. அப்போது நடந்த வத்திகான்-II பாரம்பரிய கத்தோலிக்க நிலைபாடுகளிலிருந்து விலகி புரட்சிகரமான சில நிலைபாடுகளை எடுத்தது. இது பாரம்பரிய கத்தோலிக்க குடும்பங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அனலீஸ் பாதை மாறிச்சென்ற கத்தோலிக்க பாதிரிகளுக்காக தான் பிரார்தித்து அவர்களுக்காக துன்பங்களை அனுபவிப்பதாக தரையில் உறங்க ஆரம்பித்தாள். அவ்வாறே பாதை மாறிச்செல்லும் இளைஞர்களுக்காக (அது ஹிப்பி இயக்கங்கள் இளைஞர்களை கவர்ந்திழுத்த காலகட்டமும் கூட) தாம் அவர்களின் பாவச்சுமையை தாம் தாங்குவதாகவும் கூறிவந்தாள். அனலீஸின் சிந்தனை மெதுவாக ஆனால் உறுதியாக பாவிகளுக்காக உயிர்தியாகம் செய்ய தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கருத ஆரம்பித்தது. உணவினை மறுக்கலானாள். உலகின் பாவங்களை தாம் சுமக்கவே தீய ஆவிகள் தம் உடலில் புகுந்து தன்னை சித்திரவதை செய்வதாக அவள் நம்ப ஆரம்பித்தாள். பாதிரியார்கள் மட்டுமே அவளுக்கான ஒரே சிகிச்சையாளர்களாக இக்காலகட்டத்தில் அமைந்தது அவளது இந்த நம்பிக்கையை மேலும் உறுதிபட வைத்தது. அவளது செய்கைகளுக்கு அவளது அன்னையும் பாதிரியார்களூம் அமானுட விளக்கங்கள் அளிக்க ஆரம்பித்தனர். அனாலிஸ் இறந்த பிறகு அவளது சவபரிசோதனையின் அடிப்படையில் அலட்சியத்தாலும் மதபிடிப்பாலும் அவளது மரணத்துக்கு காரணமென நான்கு நபர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. அவளது அன்னை, தந்தை மற்றும் 'பேயோட்டிய' இருபாதிரிகள். 'அலட்சியத்தால் மரணம் சம்பவிக்க காரணமானவர்கள்' என தீர்ப்பு வழங்கப்பட்டது. கத்தோலிக்க சபை தனது பாதிரிகளுக்காக நியமித்த வக்கீல் நாஸி போர்குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய எரிக் சிம்க்ட் லெயிச்னர் என்பவர். ஜெர்மானிய சட்டப்படி ரோமானிய பேயோட்டும் சடங்கு செல்லும் என அவர் வாதாடினார். ஆறுமாத கடுங்காவல் தண்டனையும் மூன்று வருட நன்னடத்தை கண்காணிப்பும் பெற்றார்கள். இன்று அனலீஸின் கல்லறை தீவிர கத்தோலிக்க மதப்பற்றாளர்களுக்கு ஒரு புனித தலமாக விளங்குகிறது. 2005 இல் இந்த வரலாறு 'எமிலி ரோஸின் பேயோட்டச் சடங்கு' என திரைப்படமாக வெளிவந்தது. அனலீஸின் சாவுக்கு அமானுட காரணங்களை கற்பிக்கும் கத்தோலிக்க நிலைப்பாட்டுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வெளிவந்த அதே சமயம் மற்றொரு ரோமானிய நகர் ஒன்றில் ஒரு மடாலய கன்னியாஸ்திரி ஒருவர் அசுத்த ஆவிகளால் பீடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு பேயோட்டும் சடங்கு முயற்சியில் மூன்று நாட்கள் உணவும் நீரும் கொடுக்கப்படாமல் கட்டிவைக்கப்பட்டு கொல்லப்பட்டார். தொடர்கதையாகும் அனலீஸ் என்கிற எமிலி ரோஸ்?
இயக்கம்: ஸ்காட் டெரிக்ஸன்
திரைக்கதை: ஸ்காட் டெரிக்ஸ, பால் ஹாரிஸ் ப்ராட்மேன்
இசை: க்ரிஸ்டோபர் யங்
எமிலி ரோஸாக: ஜெனீஃபர் கார்பெண்டர்
- http://www.sonypictures.com/homevideo/theexorcismofemilyrose/index.html
- http://en.wikipedia.org/wiki/The_Exorcism_of_Emily_Rose
- http://en.wikipedia.org/wiki/Anneliese_Michel
- http://www.chasingthefrog.com/reelfaces/emilyrose.php
மேலதிக விவரங்களுக்கு:
Labels: Catholic Church, Emily Rose, Exorcism, Film Review
3 Comments:
Appo English chadramuki than ithu...
பதிவோடு சம்பந்தப்பட்டது போன்று தோன்றினாலும், சம்பந்தப்படாத கேள்வி இது.
பேய்கள் உண்டா இல்லையா?
பேய்கள் உண்டு என்றால் அவை மனிதர்களை பிடிக்கும் வாய்ப்பு இருக்கிறதா?
nice post Mr.Aravindan,
I never seen such a detailed analysis. plz keep posting such things
Post a Comment
<< Home