Thursday, June 14, 2007

சைத்தானின் தொன்ம மாற்றம்-1: ஏசு வரலாற்றடிப்படையும் அப்பாலும்:

யோபு: அதிகாரம்:1
7.ஆண்டவர் சாத்தானிடம், எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டார். சாத்தான் ஆண்டவரிடம் உலகைச் சுற்றி உலவி வருகிறேன் என்றான்.
8. ஆண்டவர் சாத்தானிடம், என் உழியன் யோபைப் பார்த்தாயா? அவனைப் போல் மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சி தீமையானதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனும் இல்லை என்றார்.
9. மறுமொழியாக, சாத்தான் ஆண்டவரிடம் ஒன்றுமில்லாமலா யோபு கடவுளுக்கு அஞ்சி நடக்கிறான்?
10. அவனையும் அவன் வீட்டாரையும், அவனுக்குரிய அனைத்தையும் நீர் சூழ்ந்து நின்று காக்கவில்லையா? அவன் கைவேலைகளுக்கு ஆசி வழங்கவில்லையா? அவன் மந்தைகளை நாட்டில் பெருகச் செய்யவில்லையா?
11.ஆனால், உமது கையை நீட்டும்: அவனுக்குரியவற்றின்மீது கை வையும். அப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மைப் பழிப்பான் என்றான்.
12. ஆண்டவர் சாத்தானிடம், இதோ! அவனுக்குரியவையெல்லாம் உன் கையிலே: அவன்மீது மட்டும் கை வைக்காதே என்றார். சாத்தானும் ஆண்டவர் முன்னிலையினின்று புறப்பட்டான்.
...
16. இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, கடவுளின் நெருப்பு விண்ணிலிருந்து விழுந்து, ஆடுகளையும், வேலையாள்களையும் சுட்டெரித்துவிட்டது. நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன் என்றான்.


யூத விவிலியத்தில் நாம் பார்ப்பது சைத்தான் யஹீவா தேவனின் ஊழியனாக இருக்கிறான். இன்னும் கூறினால் யஹீவா தேவனின் நெருப்பு சைத்தானின் வழியாகவே செயல்படுகிறது. உலக நடப்பை யஹீவா தேவனுக்கு சொல்பவனாகவும் இருக்கிறான். இருவரிடத்திலும் எதிரி மனோபாவம் இல்லை. அவன் மானுடரைக் குற்றம் சாட்டுகிறான். ஆனால் கிறிஸ்தவ விவிலியத்தில் இது மாறுகிறது. இந்த தொன்ம மாற்றத்தின் பலகாரணிகளும் இதன் வரலாற்று விளைவுகளும் கிறிஸ்தவத்திற்கு உரியவை - கிறிஸ்தவத்திற்கு மட்டுமே உரியவை.
கிறிஸ்தவத்தில் சைத்தான் ஒரு விசித்திரமான கருத்தாக்கம் ஆகும். அக்கருத்தாக்கத்தை பிற்கால யூதத்தில் காணமுடியும் என்றாலும் அதன் வேர்களை யூத பண்பாட்டின் மீதான பாரசீக ஜராதுஷ்டிர மதத்தின் தாக்கத்திலிருந்தே அடையாளப்படுத்துகின்றனர் அறிஞர்கள். மானுடத்தை யஹீவா தேவன் முன்னால் குற்றம்சாட்டுபவனாக சைத்தான் யூத தொன்மத்தில் அறியப்படுகிறான். ஆனால் முழுமையான சாத்தானிய விவரணங்கள் கிறிஸ்தவ விவிலிய கதைகளிலேயே காணப்படுகின்றன. இதற்கான காரணிகள் பல. கொம்ரான் சுருளோலைகளில் காணப்படும் மத கருத்தாக்கங்களில் ஜராதுஷ்டிர இரு-தன்மை (dualist) சமயக்கண்ணோட்டம் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை காணலாம். ஜராதுஷ்டிர சமயத்தில் அக்ரிமான் எனப்படும் இருட்சக்தி தலைவனின் தன்மைகள் மெதுவாக சாத்தானின் மீது படர்வதை காணமுடிகிறது. ஏசுவின் காலம் என கருதப்படுவதில் யூத பிரதேசத்தில் பல மறைஞான குழுக்கள் (mystic cults) இயங்கிவந்தன. இவை பெரும்பாலும் யூத மதத்துடன் பாரசீக ஜராதுஷ்டிர மதத்தின் சில கவர்ச்சிகரமான கோட்பாடுகளை உள்ளடக்கியவையாக இருந்தன. இறுதிநாட்கள் உலக அழிவு குறித்த விவரணங்கள், சுவர்க்கம்-நரகம் குறித்த அதீதமான விவரணங்கள், ஒளிக்கடவுளுக்கு இருட்கண தலைவனுக்குமான போராட்டமாக தனி வாழ்க்கையையும் வரலாற்றையும் நோக்குதல் ஆகியவை யஹீவா வழிபாட்டுக்குழுவுடன் இணைக்கப்பட்டு இவற்றை மையம் கொண்ட இந்த குழுக்கள் ரோம சாம்ராஜ்ஜியத்தின் வலிமைக்கு அடிபணிந்ததாக இவர்கள் கருதிய யூத ஆச்சாரியர்களை கடுமையாக விமர்சித்தனர். தூய யூதத்தை ரோம வழிபாட்டு முறைகளால் களங்கப்படுத்தியதாகவும் இவர்கள் கருதினர். (ஆனால் இவர்களது 'தூய யூதமே' பாரசீகக் கலப்புடையது என்பது வேறு விசயம்) ஈஸீன்கள் எனப்படும் ஒரு குழுவினைக் குறித்து இதில் நமக்கு அதிகமான தரவுகள் கிடைத்துள்ளன. பலர் ஏசு இந்த மறைஞானக் குழுவினைச் சேர்ந்தவர் எனக் கூறுவதைக் கேள்விப்பட்டிருக்கலாம். இந்த குழு வேதாந்த தன்மைகொண்டதாக படித்த விவரம் தெரிந்த இந்துக்கள் கூட கருதுகின்றனர். ஆனால் வேதாந்தத்திற்கும் இந்த ஈஸீன் குழு கொண்டிருந்த கோட்பாட்டிற்கும் எட்டாம் பொருத்தம் என்பது பொதுவாக வெளியே தெரியாத விஷயம். ஆனால் கிறிஸ்தவத்தில் மிக அழுத்தமாக உருவாக்கப்பட்டு பின்னர் குரானிலும் உருவாகியிருக்கும் கருத்தாக்கமான சாத்தான் (ஷையித்தான்) அதன் பாரசீக -ஜராதுஷ்டிர தன்மை மாறாமல் ஈஸீன் கோட்பாடுகளில் 'சாவுக்கடல் சுருளேடுகள்' (Dead sea scrolls) - அதாவது அவை தெரிவிப்பது ஈஸீன்களின் கோட்பாடு என்பது உண்மையானால்- மூலம் தெரியவருகிறது. இடியாப்பக் குழப்பமாக சாத்தியகூறுகளாகவே இந்த விஷயங்களை கூறுவதற்கு மன்னிக்கவேண்டும். ஏனெனில் இவை அனைத்துமே இன்னமும் முழுமையடையாதவை. ஆனால் எதுவாயினும் சில விஷயங்களை நிச்சயமாக கூறமுடியும். ஈஸீன்களோ வேறெவரோ யூத மறை ஞானக்குழுக்கள் பொதுவான யூதசமுதாயத்திலிருந்து விலகி வாழ்ந்தன. அந்த குழுக்கள் பாரசீக-ஜராதுஷ்டிர சமயத்தின் கோட்பாடுகளை தன்னுள் வாங்கி அவற்றினை யூத இறையியலுடன் இணைத்து சில கற்பிதங்களை உருவாக்கியிருந்தன. அதில் சைத்தான் எனும் கருத்தாக்கத்தினை நாம் காணமுடிகிறது. யூத விவிலியத்தில் முழுமையான இறை-எதிரியாக முக்கிய பங்கு வகிக்காத சைத்தான் கிறிஸ்தவ விவிலியத்தில் முழுமையாக உருவாக்கி வருவதிலான இடைநிலை கண்ணியாக இதனை நாம் காணமுடியும். யூத விவிலியத்தில் கடவுளின் கட்டளைக்கு கீழ்படிந்து யோபுவினை சோதனை செய்பவனாக சைத்தான் வருகிறான்.

3 Comments:

Blogger R. பெஞ்சமின் பொன்னையா said...

Dear Mr.Aravindan,

Thanks for the information.I am a regular reader of your blog and enjoy all your postings.

Before I ask you something, a brief introduction about me: I am a christian and much interested on this historical facts of Bible. I enjoy reading bible more as a history book than a divine guide.

Here you have said about another Persion religion in whch Satan was refered.

Could you please tell me more abou this religion?

I do not know how to write on blogs, this is the first time I am writing in a blog. Please do not disappoint me. I do not know how to type in Tamil. So please tell me more abou this in Tamil. To be honest, I enjoy your Tamil too. My mail ID is rb.ponnaih@yahoo.com.

Thanks.

R.Benjamin Ponnaih

7:07 AM, June 14, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அன்புள்ள பெஞ்சமின்,

முரசுஅஞ்சல் அல்லது இ-கலப்பை மூலம் நீங்கள் தமிழில் எழுதலாம். murasu.com சென்று முரசஞ்சலை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். சைத்தான் குறித்த உருவாக்கத்தில் பாரசிக தாக்கத்தை பொறுத்தவரையில் யூத கலைக்களஞ்சியம் இணையத்தில் கிடைக்கிறது. அதில் சைத்தான் குறித்த கட்டுரையை காணவும். ஜான் அலெர்கோவின் 'டெட் ஸீ ஸ்க்ரால்ஸ்' எனும் நூலும் கிறிஸ்தவத்தின் தொடக்கத்திற்கு காரணமாக அமைந்த யூத மறைஞான குழுக்களில் பாரசீக தாக்கத்தைக் குறித்து பேசுகிறது. Zorastrianism, Ahirman Ahur Mazda ஆகிய பதங்களுக்கு கூகிள் செய்தால் நிறைய விஷயங்கள் கிடைக்கும். தங்கள் வார்த்தைகளுக்கு நன்றி.

8:07 AM, June 14, 2007  
Anonymous Anonymous said...

தொடருங்கள்.
ஆனால் உங்கள் எழுத்து நடை இன்னும் எளிமையாக ஆக்கலாம் என்று தோன்றுகிறது.

8:53 AM, June 14, 2007  

Post a Comment

<< Home