தமிழ் காமிக்ஸ் இலக்கியத்தில் திருப்புமுனை
சிறுவர் இலக்கியங்களில் சித்திர கதைகளுக்கு -காமிக்ஸுகளுக்கு- ஒரு முக்கிய இடம் உண்டு. தமிழ்நாட்டில் சர்வதேச காமிஸ்களை பிரபலப்படுத்தியது முத்து காமிக்ஸ்தான். மாலைமதி காமிக்ஸ் என்கிற காமிக்ஸும் சிலகாலம் செயல்பட்டு வந்தது (சிஸ்கோ கிட், ரிப் கெர்பி, பிலிப்
காரிகன் ஆகியவர்களை இது அறிமுகப்படுத்தியது. பின்னர் இந்திரஜால் காமிக்ஸின் தமிழ் பதிப்புகள் சிறந்த வரவேற்பினை பெற்றன. ராணி காமிக்ஸ், மேகலா காமிக்ஸ், கண்மணி காமிக்ஸ் என்றெல்லாம் பல இறங்கினாலும் கூட முத்து காமிக்ஸின் தொடர்ச்சியான முத்திரை பதித்த வளர்ச்சியுடன் அவற்றால் போட்டியிட முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். தமிழில் வெளியாகும் இந்த காமிக்ஸ் கதைகள் வெளிநாட்டு உற்பத்திதான். ஆனால் அவற்றினை எடிட் செய்வதற்கும் திறம்பட மொழி பெயர்ப்பு செய்யவும் ஒரு திறமை வேண்டும். இந்திரஜால் காமிக்ஸின் கடைசி காலகட்டத்தில் வெளியான தமிழ் இதழ்களில் வந்த சகிக்கமுடியாத மொழிபெயர்ப்புகளை பார்த்தால் இது புரியும். ஆனால் தொடர்ந்து தமிழுலகில் தரம் இழக்காமல் இயங்கிவரும் காமிக்ஸ் என்றால் அது முத்து காமிக்ஸ்தான். முத்து காமிக்ஸின் சகோதர வெளியீடான லயன் காமிக்ஸும் முத்து காமிக்ஸ் குழுமத்துக்கான தரத்தினை காப்பாற்றி வருகிறது. ஆசிரியர் விஜயனை இந்த விசயத்தில் பாராட்ட வேண்டும். இந்நிலையில் தமிழ் கூறும் நல்லுலக காமிக்ஸினை முன்னகர்த்த ஒரு முயற்சியினை முன் வைத்திருக்கிறார் விஜயன். அந்த முயற்சியின் பெயர் 'மர்ம மனிதன் மார்ட்டின்'. தமிழ் காமிக்ஸ்களின் தீவிர ரசிகர்கள் உலகம் என்பது முத்து காமிக்ஸ் வட்டமாக மாறிவிட்டது என்று கூட கூறிவிடலாம். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக XIII என்ற ஆண்டுக்கொரு முறை வரும் அட்டகாசமான ஓவியங்களில் விரியும் சோக காவியத்தையும், அவ்வப்போது வரும் சி.ஐ.டி ராபின் என்னும் அலட்டல் இல்லாத யதார்த்த போலிஸ் துப்பறிவாளரையும் நீக்கிவிட்டால் முத்துக்காமிக்ஸ் முழுக்க முழுக்க கௌபாய் ஹீரோக்களால்தான் கொண்டு செல்லப்படுகிறது. ஒரு ஆறுதல் என்னவென்றால் நம் ஆஸ்தான கௌபாய் ஹீரோ பூர்விகக் குடிகளின் சார்பாக போராடும் இனவெறியற்ற மனிதர். ஆனால் சர்வதேச காமிக்ஸ்களில் பிரதானமாக விளங்கும் அறிவியல் புனைவுகள் (science fiction) தமிழ் காமிக்ஸ் உலகில் அத்தனை வெற்றிகரமாகிடவில்லை. மேகலா காமிக்ஸின் கடைசி இதழாக அமைந்தது கூட ஒரு அருமையான உணர்ச்சிகரமான sci-fi தான். இந்நிலையில் முத்துகாமிக்ஸ் ஆசிரியர் விஜயன் தைரியமாக ஒரு அறிவியல் புதின ஹீரோவை களமிறக்கி உள்ளார் என்றால் அது பாராட்டப்பட வேண்டிய விசயம்தான். அந்த ஹீரோதான் மர்ம மனிதன் மார்ட்டின். ஒரிஜினல் இத்தாலிய காமிக்ஸான 'மார்ட்டின் மர்மம்' (Martin Mystery) அல்ப்ரெடோ காஸ்டெலி என்பவரால் எழுதப்பட்டு ஜியான்கார்லோ அலெக்ஸாண்டரினி என்பாரால் ஓவியம் வரையப்பட்டு உருவாக்கப்படுகிறது. 1982 இல் உருவாக்கப்பட்ட இந்த காமிக்ஸ், சிறுவர் சித்திர இலக்கிய உலகில் ஒரு புரட்சியாகவே கருதப்படுகிறது. மர்மமனிதன் மார்ட்டின் ஒரு அகழ்வாராய்ச்சியாளர், பத்திரிகையாளர் கூடவே துப்பறியும் நிபுணர், அவரது உதவியாளராக இருப்பது ஜாவா எனப்படும் நியாண்டர்தல் கால பேச இயலாத மனிதர். ஜாவாவால் பேச இயலாதே தவிர அவரது புலனறிவும் உள்ளுணர்ச்சியும் அதீதமானது. இவர்கள் இணைந்து மர்மங்களை ஆராய்கின்றனர் -குறிப்பாக அமானுஷ்ய மர்மங்கள் -அட்லாண்டிஸ், ம்யூ, பிரமிட்கள் இத்யாதி. இதில் குறுக்கே நிற்கின்றன சில தீய சக்திகள். இவர்களுக்கிடையேயான போராட்டங்களை முத்துகாமிக்ஸில் ரூ 10க்கு படிக்கலாம். மார்ட்டினுக்காக உருவாக்கப்பட்ட கற்பனை உலகம் உண்மையானதல்ல. ஆனால் அது நம் சிறுவர்களுக்கு (நமக்கும் தான்) பல்வேறு புலங்களில் ஆர்வத்தை தூண்டக்கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. எரிக் வான் டானிக்கன் தனமான கற்பனைகளுக்கு மார்ட்டின் காமிக்ஸில் பஞ்சமில்லை என்றாலும் அது கற்பனை என்ற அளவில் சுவாரசியமானது. உதாரணமாக பிரமிடுகள் வேற்றுகிரக ஆசாமிகளால் கட்டப்பட்டது என்கிற கற்பனை படு சுவாரசியமானது. பிரமிடுகள் குறித்த உண்மையான தகவல்கள் சிலதுடன் இணைத்து இந்த கற்பனையும் ஒரு கற்பனை கதையாக வழங்கப்பட்டால் அது அகழ்வாராய்ச்சியில் ஒரு அற்புதமான ஆர்வத்தை மாணவனுக்கு உருவாக்கிவிடும். இதில் உள்ள ஒரே ஒரு பிரச்சனை தொடர்ந்து மாணவன் வளர வேண்டும். அதாவது மார்ட்டின் காமிக்ஸ் ஒரு உந்து பலகை மட்டுமே அதில் இருந்து மேலே குதித்து அடுத்த தளத்துக்கு செல்ல வேண்டும். வரலாற்றின் உண்மையான மர்மங்களில் வரலாற்றின் அறிவியல்தன்மையான ஆராய்ச்சியில் ஒரு ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இல்லாமல் எரிக் வான் டானிக்கன் சொல்வது உண்மை என நம்பிக்கொண்டிருந்தால் அது வளர்ச்சி ஆகாது. எனவேதான் மார்ட்டின் காமிக்ஸ் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. கடந்த ஆண்டு வெளியான மார்ட்டின் தமிழ் காமிக்ஸுகளிலிருந்து என்னென்ன விசயங்களுக்கு நாம் தாவ முடியும் என்பதனை காணலாம். 1. அமானுஷ்ய அலைவரிசை: 'போதுமான அளவு முன்னேற்றமடைந்த நல்ல தொழில்நுட்பத்தை மாயாஜாலத்திலிருந்து வேறுபடுத்தி பார்க்கமுடியாது' என்பார் புகழ்பெற்ற அறிவியல் புதின எழுத்தாளர் ஆர்தர்.சி.க்ளார்க். இந்த காமிக்ஸ் அதனை தலைகீழாக்குகிறது. நமது பழைய மாயாஜாலங்கள் அதி நவீன தொழில்நுட்பமாக ஏன் இருக்கக்கூடாது? அதன் பின்னாலிருக்கும் தொழில்நுட்பம் அத்துடன் இன்றைய மின்னணு தொழில்நுட்பம் இரண்டையும் இணைத்து எலெக்ட்ரோ-மாஜிக் என்கிற தொழில்நுட்பத்தை உருவாக்க முயற்சித்து வேறு பரிமாணங்களுடன் தொடர்பு கொண்டு பயணிக்க முடிந்த தொலைக்காட்சியை உருவாக்கிவிடும் ஒரு மேதையினால் ஏற்படும் பிரச்சனைகள். அதனை மார்ட்டின் எப்படி தீர்த்து வைக்கிறார்? இதுதான் கதை. இக்கதையில் சொல்லப்படும் விஷயங்களில் சில சுவாரசியமான வரலாற்று பின்புலமுடையவை. உதாரணமாக கீழ்வரும் பேனல்களை பாருங்கள். இதில் ஒரு மதகுரு ஒரு பொம்மையை உருவாக்குவதை குறித்த உரையாடல் வருகிறதல்லவா? அதன் பின்னணியில் உள்ள கதை சுவாரசியமானது. 16 ஆம் நூற்றாண்டு பிரேக் (Prague) நகரில் யூதர்கள் ஒதுக்கப்பட்ட கெட்டோ வில் வசித்துவந்தனர். அப்போது பேரரசர் யூதர்களை அழித்திட ஆணையிட்ட போது தாவீதிய வம்சாவளி யூதமதகுரு (ரபாய்) யூதா லோயெவ் களிமண்ணால் ஒரு உருவத்தை செய்து அதற்கு ஹீப்ரு மந்திர உச்சாடனத்தை செய்து இறை அம்சம் வாய்ந்த 'எம்ரித்' (சத்தியம்) என எழுதிட அது உயிர் பெற்றெழுந்து யூதர்களை தாக்க வந்தவரை துவம்ஸம் செய்ய ஆரம்பித்தது. இந்த உருவத்தின் பெயர் கோலெம் (Golem) என்பதாகும். அரசன் இதைக் கண்டு அச்சமடைந்து யூதர்களை அழிக்கும் உத்தரவை திரும்ப பெற்றுக்கொண்டான். அதன் பின்னர் ரபாய் அந்த பேருருவத்தின் நெற்றியில் எழுதப்பட்ட இறையம்ச நாமத்தின் ஒரு எழுத்தினை அழித்திட அது ம்ரித் என ஆயிற்று. மரணம் என்பது அதன் பொருள். கோலெம் மரணித்தது. இந்த வழக்காற்று கதை பின்னர் நாடகங்களாகவும் நடிக்கப்பட்டது. சில கதைகளில் இந்த எழுத்தினை ரபாயால் அழிக்க முடியவில்லை என்றும் அதனை ஒரு பெண் செய்ததாகவும், முழு அறிவற்ற படைப்பான கோலெம் அப்பெண்ணிடம் மனதினை பறிகொடுத்தமையால் அவளை தன்னை அழித்திட கோலெம் அனுமதித்ததென்றும் அவலச்சுவையுடன் கூறிடுவார்கள். ஒரு சவப்பெட்டியில் வைத்து கோலெம் புதைக்கப்பட்டதாகவும் அந்த புதைப்பெட்டியில் இன்றும் அந்த களிமண் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கோலெம் யூத ஆதரவு தொன்மம் மட்டுமல்ல அது யூத எதிர்ப்பு தொன்மமாகவும் உரு பெற்றது. நிலவுடமை சமுதாயத்திலிருந்து தொழிற்புரட்சி ஏற்பட்ட காலகட்டத்தில் யூதர்களுக்கு சமுதாயத்தில் மேல் நிலையில் வந்திட முடிந்தது. அதுவரை அவர்களை அடக்கி வைத்த சமுதாயத்தினால், அச்சமுதாயம் பெற்ற ஜனநாயகத்தன்மையினாலேயே அவர்களை அடக்கி வைக்க இயலாமல் போயிற்று. இந்நிலையில் இயந்திர வெறுப்பு ஒரு புறம் வெடித்தது. இயந்திரத்தின் மேலெழும்பிய யூதர்களே மனிதத்தன்மையற்ற இயந்திரத்தின் இரகசியகர்த்தாக்கள் என்பதாக கோலெம் தொன்மத்தின் மற்றொரு கதையாடல் எழுந்தது. எதுவாயினும் பல நவீன (பின்-நவீனத்துவ) காமிக்ஸ்களில் இந்த கோலெம் மீண்டும் மீண்டும் உயிர் பெற்றெழுவதை காணலாம். அண்மையில் டிசி(DC) காமிக்ஸ் இந்திய பதிப்பாக வெளியிட்ட கோத்தம் காமிக்ஸின் பாட்மேன் (Batman) கதை ஒன்றிலும் மந்திரத்தன்மை கொண்ட களிமண் ஒரு தப்பியோடும் குற்றவாளியை களிமண் மனிதன் ஆக்குவது குறித்தது ஆகும். மனிதனை தெய்வங்கள் களிமண்ணிலிருந்து ஆக்கின என்பது பழமையான சுமேரிய தொன்மம். ஆபிரகாமிய மதங்கள் அனைத்திலும் (கொரான் உட்பட) இத்த்தொன்மம் எதிரொலிக்கும். மனிதன் அதே களிமண்ணைக் கொண்டு மந்திர சக்தியுடன் உருவாக்கும் உயிரே கோலெம். எனவே அது குறைபாடுடையது. குறிப்பாக ஆன்மா நுண்ணறிவு ஆகியவை அற்றது என்பது இம்மரபின் பார்வை. ஏனெனில் ஜீவனின் அதி ரகசியம் தேவர்களுக்கே (அல்லது ஆபிரகாமிய தேவனுக்கே உரியது.) எனினும் மானுடம் யூத வெறுப்பியலுக்கு அப்பால் சென்றுவிட்டது. மதத்தளைகள் நீங்கி ஜீவரகசியங்கள் கைவர ஆரம்பிக்கும் நிலையில் அல்லது மதங்களின் அரிச்சுவடிகளின் கற்பனைக்கும் எட்டாத அளவு ஆழமடையும் நிலையில் கோலெம் எதைக் குறிக்கிறது? மார்ட்டின் கதையில் மாந்திரீகம் அல்லது மாயாஜாலம் அதி-உயர் தொழில்நுட்பம் என வருகிறது. மானுடம் இன்னமும் ஏற்றிட தயராகிடாத தொழில்நுட்பம்.... அடுத்த மார்ட்டீன் கதை [தொடரும்]
காரிகன் ஆகியவர்களை இது அறிமுகப்படுத்தியது.
Labels: Child lierature, Comics, Martin Mystery, Muthu Comics, Tamil Nadu
10 Comments:
ஆகா, என்ன ஒரு பொறுத்தமான தருணம்.
சமீபத்தில் நான் சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பும்போது சில காமிக்ஸ்களை வாங்கினேன்.
அவற்றைப்பற்றி யோசித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் சரியாக உங்களது இந்த கட்டுரை வந்துள்ளது.
(திபெத்திய லாமாக்களோடு தியானம் செய்த அனுபவம் எப்படி இருந்தது என்பதை எனக்கு தெரிவிப்பீர்களா?
அவர்களால் மற்றவர்கள் எண்ணங்களைப் புரிந்துகொள்ள முடியும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.)
நான் வாங்கிய காமிக்ஸ்களை படித்தபின் எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. ஏன் மேலை நாட்டு காமிக்ஸ்கள் வன்முறையை மிகப்பெரிய பலம் என்று கொண்டாடுகின்றன?
கதை நாயகர்கள் எப்போதும் வன்முறையை அதைவிட மிகப்பெரிய வன்முறையால் அழித்து காமிக்ஸை முடித்து வைக்கிறார்கள்.
இதைப் படிக்கும் குழந்தைகளுக்கு தோன்றுவதெல்லாம் வன்முறைதான் பலம் என்பது.
ஆனால் பாகனீய ஞான மரபுகள் இந்த வட்டங்களிலிருந்து எப்போதும் ஊடுறுவியும், வெளியேறியும் காணப்படுகின்றன.
உதாரணமாக, சுவாமி விவேகானந்தர் மேலை நாட்டில் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது அங்கிருந்த ஆங்கிலேயர் ஒருவர் அவரை பேசவிடாமல் சத்தமாக அவரையும், இந்தியாவையும், ஹிந்துக்களையும் திட்டியும் இகழ்ந்தும் சத்தமிட்டுக்கொண்டிருந்தார். விவேகானந்தர் லயன் காமிக்ஸ் ஹீரோ இல்லை என்பதாலும், வேதாந்த லயன் என்பதாலும் அவரைவிட அதிகமாய் ஆபாசமாய் கத்தும் போட்டியில் ஈடுபடாமல், ஆங்கிலேயர்களால் ஹிந்துக்கள் படும் அவமானங்களையும், துயரங்களையும் பேச ஆரம்பித்தார். அமைதியான ஆனால் காம்பீர்யம் நிறைந்த அந்த குரலின் லயத்தில், அவர் சொல்லிய விஷயங்களின் உண்மையில் அந்த சபையே அமிழ்ந்தது. அந்த ஆங்கிலேயர் ஹிந்துக்கள் படும் வேதனையை கேட்டு அழ ஆரம்பித்துவிட்டார்.
அவர் அழ ஆரம்பித்ததும், விவேகானந்த ஞான ஜோதி தான் எந்த இடத்தில் பேச்சை நிறுத்தினாரோ, சரியாக அதே இடத்திலிருந்து பேச்சைத் தொடர ஆரம்பித்தார்.
அதே போல, முத்து காமிக்ஸ்கள் பேசும் கௌபாய்களின் காலத்தில்தான் விவேகானந்த தீபத்தின் ஒளி பரவியது என்பதால், கௌபாய்கள் விவேகானந்தரை தங்கள் முறைப்படியே சோதித்தார்கள்.
கௌபாய்களால் எழுத்துக்கூட்டி படிப்பதுதான் முடியாதே தவிர, மிக மிக மிக துல்லியமாக துப்பாக்கியால் சுடமுடியும்.
விவேகானந்தர் பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென்று துப்பாக்கி சத்தங்கள். விவேகானந்தரின் தலை, தோள், இடுப்பிற்கு மிக அருகாமையில் தோட்டாக்கள் பறந்தன. தீவிரமாக பேசிக்கொண்டிருந்த விவேகானந்தர் இவற்றை கவனித்தவாறே புன்னகைபூத்த வதனத்தோடு தன்னுடைய பேச்சில் இடைவெளியோ, குரலில் எந்த மாற்றத்தையோ கொள்ளாமல் பேச்சு எப்படி ஆரம்பித்ததோ அப்படியே தொடர்ந்தார்.
ஜப்பானிய ஸென் ஞான மரபில் மட்டுமே இத்தகைய அமைதியின் தீரத்தை காண முடியும். வீட்டிற்கு விருந்தாளியாய் அழைக்கப்படும் துறவியரின் மேல் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடக்கும் - தூக்கத்தின்போது கூட. ஆனால், மிக எளிதாக அந்த தாக்குதலை தோற்கடித்துவிட்டு தன்னுடைய தூக்கத்தை தொடர்வார்கள் அந்த துறவிகள்.
கீழை வாழ்வியலுக்கும், ஆபிரகாமிய வாழ்வியலுக்கும் உள்ள வேறுபாடு - ஆழமான பரந்த நன்னீர் ஏரிக்கும், கௌபாய்களின் குதிரைகுளம்பில் தேங்கி இருக்கும் ஆபிரகாமிய கொசு உறுபத்தி சாக்கடைக்கும் உள்ள வேறுபாடு.
அ.நீ,
இளவயது நினைவுகளை மீட்டுக் கொண்டுவந்து விட்டது உங்களுடைய இந்தப் பதிவு. சிறுவயதில் முத்து காமிக்ஸ் பித்துப் பிடித்து அலைந்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது. இருள் படிந்த ஐரோப்பிய அரண்மனைகள், அங்கே புதைந்து கிடக்கும் மர்மங்கள், வீரதீர சாகசங்கள் என கறுப்பு வெள்ளைப் படங்களைக் கண்டு கனவுகளுக்குள் சென்றதுண்டு சிறுவயதில்.
அப்போதெல்லாம் இப்போதிருப்பது போன்று விஷூவல் மீடியாக்கள் இல்லை என்பதால் இந்த காமிக்ஸ்கள் எமது மனக்கண்ணில் ஒரு மாய உலகத்தை சிருஷ்டித்தன. அதிலேயே ஆழ்ந்து போயிருந்தோம்.
அப்போது வடபழனியில் கோவிலுக்கருகே(கோவிலுக்கு எதிரில் உள்ள தெருவில் கோவிலுக்கு இடப்பக்கமாக) ஒரு பழைய பேப்பர் கடை இருக்கும். அங்கே போனால், பழைய புத்தகங்களை நிறுத்துத் தருவார் எனது சித்தப்பாவுக்கு தெரிந்த அந்த கடைக்காரர். வாங்கிவந்து வீட்டில் போட்டி போட்டுக் கொண்டு படித்து, வீட்டில் உள்ளவர்களிடம் திட்டுவாங்கி... ஹ்ம்ம்...
காமிக்ஸ் கடன் வாங்கி படிப்பது, கடன் அன்பை முறிக்கிறதோ இல்லையோ இந்த காமிக்ஸ்கள் பல அன்புகளை முறித்திருக்கின்றன.. அதெல்லாமும் நினைவுக்கு வருகிறது..
லெண்டிங் லைப்ரரிகளில் பழியாய்க் கிடந்தது, பெரியவனானதும் கன்னிமராவில் பழியாய்க் கிடந்தது, சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் பழியாய்க்கிடந்தது என்று என்னை படிப்பாளியாக்கியதே இந்த காமிக்ஸ்கள் தான் என்றால் அது மிகையாகாது.
நேசக்குமார் சார்,
@@@@@@என்னை படிப்பாளியாக்கியதே இந்த காமிக்ஸ்கள் தான் என்றால் அது மிகையாகாது@@@@@
இப்போதும் உங்களுக்கு அரேபியா நாட்டு காமிக்ஸ்கள்தான் பிடிக்கும் என்று கேள்விப்படுகிறேன் ;-) !!
ஆகா, நேசகுமார், பனித்துளி,
காமிக்ஸ்களுக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பது தெரியாமல் போச்சே. நேசகுமார் நீங்கள் காமிக்ஸ் படிப்பதை நிறுத்தியிருந்தால் உடனடியாக திரும்ப தொடங்குங்கள். (அரேபியன் காமிக்ஸ் இருக்கட்டும் அது எக்ஸ்-ரேட்டட் காமிக்ஸ்) நான் சொல்வது இதுதான் உண்மை என்கிற உட்டாலக்கடி இல்லாத ஜாலி குட் சாதாரண காமிக்ஸ். அப்படியே உதர்ஸோ கோஸினி யின் அஸ்டெரிக்ஸ் ஒபிலிக்ஸ் காமிக்ஸையும் பாருங்க. By Belenos அது சரியான பாகன் காமிக்ஸ்.
//நான் வாங்கிய காமிக்ஸ்களை படித்தபின் எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. ஏன் மேலை நாட்டு காமிக்ஸ்கள் வன்முறையை மிகப்பெரிய பலம் என்று கொண்டாடுகின்றன?//
பனித்துளி காமிக்ஸ்கள் படு வேகமாக முன்னகர்ந்து விட்டன. பின் நவீனத்துவ காமிக்ஸ்கள் கூட வந்துவிட்டன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஸென், ப்ராயிட், உங் என அசத்துகின்றன காமிக்ஸ்கள். Superman Batman எல்லாம் அண்டர்வேரை வெளியே போடும் பாய் ஸ்கவுட்ஸாக இருந்த காலம் போய் இப்போது தீவிரமாக தத்துவ சர்ச்சைகளை நடத்துகின்றனர்.
//அப்போதெல்லாம் இப்போதிருப்பது போன்று விஷூவல் மீடியாக்கள் இல்லை என்பதால் இந்த காமிக்ஸ்கள் எமது மனக்கண்ணில் ஒரு மாய உலகத்தை சிருஷ்டித்தன. அதிலேயே ஆழ்ந்து போயிருந்தோம்.//
இரும்புக்கை மாயாவி படித்துவிட்டு ப்ளக் பாயிண்டுக்குள் கைவிரலை விட்டு தோள் வரை ஷாக்கடித்த நினைவுகள் உண்டா? அல்லது பக்கத்து வீட்டு பெண்ணை டயானா பால்மராகவும் வீட்டுத்தோட்டத்தை ஆழநடுக்காட்டு கபாலகுகையாகவும் கற்பனை செய்துகொண்ட அனுபவங்கள்...?:))))
அரவிந்தன்,
நல்ல பதிவு. காமிக்ஸ்களின் உலகங்கள் அற்புதமானவை. குழந்தைகளானாலும் பெரியவர்களானாலும் ஒரு சிலிர்ப்பான வாசக அனுபவத்தை அவை தருகின்றன.
The Dilbert, Calvin and Hobbes இவை தான் என் இப்போதைய பேவரைட்டுகள். ஆஸ்டிரிக்சின் நீண்டகால ரசிகன் நான்.
// தாவீதிய வம்சாவளி யூதமதகுரு (ரபாய்) யூதா லோயெவ் களிமண்ணால் ஒரு உருவத்தை செய்து அதற்கு ஹீப்ரு மந்திர உச்சாடனத்தை செய்து இறை அம்சம் வாய்ந்த 'எம்ரித்' (சத்தியம்) என எழுதிட அது உயிர் பெற்றெழுந்து யூதர்களை தாக்க வந்தவரை துவம்ஸம் செய்ய ஆரம்பித்தது.//
இதே போல ஒரு கதை இந்திய வரலாற்றிலும் உள்ளது. சாலிவாஹனன் என்ற பிராமணன் களிமண்ணால் பொம்மை வீரர்கள் செய்து வைத்து அவைகளுக்கு உயிர் தந்து விக்கிரமாதித்தனை எதிர்த்துப் போரிட்டு அவனை வென்றான் என்பதாக. இந்த சாலிவாகனன் தான் ஆந்திர மன்னன் கௌதமிபுத்ர சதகர்ணி என்று சொல்லப் படுகிறது.
ஆபிஸ் பாலிட்டிக்ஸ் பேசும் டில்பெர்ட் காமிக்குகள், சிறிது செக்ஸ் ஜோக்குகளுடம் வரும் ஃபாமிலி கை கார்ட்டூன்கள் இன்னும் புகழுடன் உலா வருகின்றன.
இந்த காமிக்களுக்கு ஈடாக வீடியோ கேம்கள் புகழ் பெற்றுவருகின்றன. சில வீடியோ கேம்கள் விளையாட ராஜதந்திர திட்டங்கள் தீட்ட வேண்டியிருக்கிறது. மேலும் சில வீடியோ கேம்கள் பெண்களை கவரும் திறமையுடன் செயல் பட்டு அவர்களை கவரும் திறமையை மேம்படுத்துகின்றன. :). இந்த காமிக்களுக்காகவும் வீடியோ கேம்களுக்காகவும் என் வருமானத்தில் கணிசமான சதவீதம் கரைகிறது.
இப்போது மேற்கு நாடுகளில் நாவல்கள்கூட காமிக்ஸ் வடிவில் கிடைக்கின்றன.
Hi Aravindan,
Nice post. Comics has moved on to serious topics.Check out "Persepolis" and "Embroideries" by Marjane Satrapi both deal with being a woman in Iran and Art Spiegelman's Maus ,on Ethnic cleansing of jews.
krish
காமிக்ஸ் பற்றிய எனது பழைய பதிவொன்று இங்கே!
Post a Comment
<< Home