Wednesday, May 09, 2007

சமஸ்கிருதமும் அம்பேத்கரும்: முதுபெரும் எழுத்தாளர் மலர்மன்னன்

சமஸ்க்ருதமும் டாக்டர் அம்பேத்கரும்


ஹிந்துஸ்தானத்தின் ஆட்சி மொழியாக சமஸ்க்ருதம் ஏற்கப்பட வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் விழைந்த உண்மைத் தகவலை அரவிந்தன் நீலகண்டன் எழுதப் போக, சிலர் வெறும் பொய், பார்ப்பனர்களின் வழக்கமான புரட்டு என்றெல்லாம் அதனை வர்ணித்துள்ளனர். சமஸ்க்ருதத்திற்கு சாதிச் சாயம் எதுவும் இல்லை. அது சர்வ தேச மக்கள் மொழியாகப் பல்வேறு ரூபங்களில் வழக்கத்தில் இருந்து வருவதை மொழியியலாளர் அறிவார்கள். நம் நாட்டிலுங்கூடப் பல்வேறு மொழி பேசும் சாதாரண மக்களிடையே ஏராளமான சமஸ்க்ருதச் சொற்கள் வெகு இயல்பாக நடமாடி வருகின்றன. இதனால்தான் ஹிந்துஸ்தானத்து மக்கள் அனைவரும் எளிதில் பயன்படுத்தக்கூடும் என்பதால் சமஸ்க்ருதத்தை தேசத்தின் ஆட்சி மொழியாகச் செய்ய வேண்டும் என்று திருத்தம் ஒன்றை டாக்டர் அம்பேத்கர் அரசியல் நிர்ணய அவையில் ஆட்சிமொழிக்கான மசோதா விவாதத்திற்கு வந்தபோது முன்மொழிந்தார். இதில் அவருக்கு ஆதரவாக வழிமொழிந்தவர்கள் பேராசிரியர் நிஸிருத்தீன் அஹ்மது, டாக்டர் கேஸ்கர் ஆகியோராவார்கள். ஆம், வழிமொழிந்தவர்களில் ஒருவர் முகமதிய அறிஞர், கல்வியாளர்! கடந்த காலங்களில் வங்காளத்திலும் குஜராத்திலும் முகமதிய மன்னர் சமஸ்தானங்களில் கூட சமஸ்க்ருதம் ஆட்சி மொழியாக இருந்து வந்துள்ளது. இச் சமஸ்தானங்களில் ஆவணங்கள் சம்ஸ்க்ருதத்தில் இருப்பதை இன்றும் காண முடியும்.


அவையில் சமஸ்க்ருதத்தின் அருமை அறியாதவர்கள் அதிகம் இருந்ததால் அம்மொழியின் சாத்தியக்கூறுகள் பற்றி ஏதும் உணராமல் அம்பேத்கர் கொண்டு வந்த திருத்தத் தீர்மானத்தை ஆதரிக்கத் தவறிவிட்டார்கள். இச்சம்பவம் நடந்தது 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி. அன்றைய தினமே பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா என்ற பிரபல செய்தி நிறுவனம் இச்செய்தியை நாளிதழ்களுக்கு அனுப்பியது. பி டி ஐ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இச் செய்தி நிறுவனத்திற்கு சங் பரிவார் தொடர்பு ஏதும் இல்லை.
இந்தச் செய்தி பிரபலமான செய்திதாள்கள் எல்லாவற்றிலும் வெளியாயிற்று. எவருக்கேனும் இது பற்றிச் சந்தேகம் இருக்குமானால் தி ஹிந்து நாளிதழ் அலுவலகம் சென்று ஆவணமாக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட தேதியில் வெளிவந்த இதழைப் படித்துப் பார்த்து உண்மையைத் தெரிந்துகொள்ளலாம். ஹிந்து நாளிதழ் ஹிந்து சமூக நலனுக்கு விரோதமான பத்திரிகையாக மாற்றப்பட்டுள்ள போதிலும், அது தன் கடந்த கால இதழ்களை முறையாகப் பாதுகாத்து வருவதால்தான் அதன் பெயரைக் குறிப்பிட்டேன்.


சமஸ்க்ருதச் சொற்கள் பலவும் பல்வேறு தேசங்களிலும் கல்வியறிவில்லாத மக்களிடையே கூட, அவர்களை அறியாமலேயே பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஹிந்துஸ்தான மொழிகளில் அதன் தாக்கம் மிக அதிகம். எனவே வேறெந்த மொழியைக்காட்டிலும் சமஸ்க்ருதத்தை தேசத்தின் பொதுமொழியாகவும் ஆட்சி மொழியாகவும் ஏற்றால் மக்கள் எளிதாகவும் விரைவாகவும் அதனை அங்கீகரித்துப் புரிந்துகொள்வார்கள் என்று அம்பேத்கர் வாதித்தார்.


சமஸ்க்ருதம் என்ற சொல்லுக்குத் தூய்மை என்ற பொருள்தான் அடிப்படை. புனிதம் அல்ல. அது பார்ப்பனர்களுக்கே உரித்தானதும் அல்ல. உதாரணமாக இந்தோனேசியா போன்ற கீழ்த் திசை நாடுகளில் பார்ப்பனர் இல்லை என்பதோடு மக்களும் அநேகமாக முகமதியராகிவிட்டனர். இந்நாட்டின் மொழிக்கு சமஸ்க்ருதமே அடிப்படை. பெயர்களும் சமஸ்க்ருதத்தில்தான். சுகர்ணோ, சுகர்ணோ புத்ரி என்றெல்லாம் பெயர்கள். சுகர்ணோ என்றசொல்லுக்கு இனியனவற்றுக்குத் தன் செவிப்புலனைப் பயன்படுத்துபவன் எனப் பொருள் கொள்ளலாம். வெறும் சொற்கள் மட்டுமின்றி வாக்கியமே முழு சமஸ்க்ருதமாக இருப்பதைக் கூர்ந்து கவனித்தால் கண்டு கொள்ளலாம்.


சமஸ்க்ருதம் சிலர் நனைப்பதுபோல் செத்த மொழி அல்ல. உலக மக்களின் அன்றாடச் சொல்லாடல்களில் உயிர்த் துடிப்புடன் சதா சர்வ காலமும் வாழ்ந்துவரும் மரணத்தை வென்ற மொழிதான் அது. சமஸ்க்ருதத்திற்கு ஒரு குறிப்பிட சாதியின் சாயத்தைப் பூசுவதும், ஹிந்துத்துவ இயக்கங்கள் மட்டும்தான் அதனைத் தூக்கிப் பிடிப்பதாக நினைத்துக்கொண்டிருப்பதும் அறியாமையைத்தான் வெளிச்சம் போட்டுக்காட்டும். சமஸ்க்ருதத்தைப் பார்ப்பனர்களின் மொழி என அவர்களுக்குச் சொந்தமாக்குவது அனைவருக்கும் சொந்தமான ஓர் அருங் கருவூலத்தை ஒரு குறிப்பிட்ட சாதியாருக்கு தத்தம் செய்துகொடுப்பது போலாகும்.
மலர்மன்னன்

7 Comments:

Anonymous Anonymous said...

சில நாட்கள் முன்பு ஜடாயு தனது பதிவில், நமது ஜனாதிபதி அப்துல் கலாம் ஒரு சம்ஸ்கிருத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பேச்சின் தமிழாக்கத்தை வெளியிட்டார். தமக்குத் தெரிந்தது மொழியும் கலையும் அல்ல, கொலை வெறி மட்டுமே என்று திராவிடக்கூட்டங்கள் அப்போது மீண்டும் நிரூபித்தன.

கலாம் அவர்கள் சென்ற மாதம் கிரேக்க நாடு சென்ற போது, கிரேக்க ஜனாதிபதி, நமது ஜனாதிபதியை சம்ஸ்கிருதத்திலேயே வரவேற்றார்!

கிரேக்க ஜனாதிபதியும் பார்ப்பானோ என்னமோ?

7:24 AM, May 10, 2007  
Anonymous Anonymous said...

Last year, Writer Jayakandan was branded as triator of Tmails by Dravidian groups and attacked for praising Sanskrit. Now Writer Malar Mannan will also receive the same kind of treatment. A self styled "Tamil Patukappuk Kuzu" will attend his meetings to shout slogans when he rises to speak as experienced by Jayakandan! Who knows, Malar Mannan may even be attacked for having a chaste Tamil name but writing in favour of Sanskrit!

S. Senthil, M.Phil

11:02 PM, May 10, 2007  
Anonymous Anonymous said...

அறிவிலிகளுக்கு என்ன சொன்னாலும் புரியாது....ஏதோ ஒன்றை எதிர்க்க வேண்டும். ஹிந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, கன்னட எதிர்ப்பு, மராட்டி எதிர்ப்பு, எல்லாம் செய்வார்கள் ஏனெனில் கற்கும் ஆசை இல்லை.....மேலே சொன்ன எல்லாவற்றையும் எதிர்த்துக்கொண்டு திராவிடமும் (இவர்களைப் பொருத்தவரை திராவிடம் என்பது, பெரியார், அண்ணா, கொலஞர் மட்டுமே) பேசித்திரிவார்கள்....

11:44 PM, May 10, 2007  
Blogger ஜடாயு said...

// சமஸ்க்ருதத்தைப் பார்ப்பனர்களின் மொழி என அவர்களுக்குச் சொந்தமாக்குவது அனைவருக்கும் சொந்தமான ஓர் அருங் கருவூலத்தை ஒரு குறிப்பிட்ட சாதியாருக்கு தத்தம் செய்துகொடுப்பது போலாகும். //

மிகச் சரியாகக் கூறியுள்ளார் திரு. மலர்மன்னன்.

அண்ணல் அம்பேத்கர் சம்ஸ்கிருதத்தை தேசிய ஆட்சி மொழியாக்க முன்மொழிந்தார் என்ற இந்தத் தகவல் கூட வழக்கமான அம்பேத்கர் வட்டங்களில் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப் படுகிறது. இதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததற்கு நன்றி.

4:36 AM, May 12, 2007  
Anonymous Anonymous said...

ஸம்ஸ்க்ருதம் என்பது பார்ப்பனர்களின் மொழி என்று எவாஞ்சலிக்கல், கம்யூனிஸ, மற்றும் ஜிகாதி போதனைகள் பரப்பிவருகின்றன. ஆனால், ஸம்ஸ்க்ருதம் என்பது கல்வி பெற்றவர்களின் மொழியாகவே பரத கண்டத்தில் கருதப்பெற்றது.

பௌத்தர்களும், ஜைனர்களும் ஸம்ஸ்க்ருத மொழியிலேயே தங்களுடைய பல நூல்களை வெளியிட்டார்கள். இன்றும் ஸம்ஸ்க்ருத மொழி புத்த துறவிகள் கற்கவேண்டிய மொழிகளில் ஒன்று. மற்றொன்று புனித மொழியாக பௌத்தர்கள் கருதும் பாலி. பாலி என்பது ஸம்ஸ்க்ருதத்தின் பேச்சுவடிவம்.

ஸம்ஸ்க்ருதம் நாட்டுமக்களின் தேச மொழியாக வேண்டும் என்று கூறியவர்களில் ஒருவர் பலமொழிகளில் புலமை பெற்ற, தமிழையும், தமிழரையும், தமிழ்மரபையும் தன் உயிராகக் கருதிய சுப்பிரமணிய பாரதியாரும் ஒருவர்.

தமிழர்கள் பலமொழிகளையும் கற்க சம அளவு வாய்ப்பு கொடுக்கப்படவேண்டும்.

ஆனால் பார்ப்பனர்கள் தமிழை நீச பாஷையாகக் கருதுவதாக ஆபிரகாமியத்தின் அடியாட்களான திராவிடத்தின் போதனைகளை நம்புபவர்கள் நம்புகிறார்கள்.

இல்லை என்று நிறுவ நீங்கள் உவேசா முதலானோர்களைப்பற்றி சொல்லுவதோடு, தமிழ் நீசமொழி என்று ஹிந்து சமய இலக்கியங்கள் (புராணங்கள் உட்பட) ஏதேனும் சொல்லுகின்றதா என்று ஆராய்ந்து கூற இயலுமா? இதிலேயே பின்னூட்டமாக கூறினாலும் சரி.

உங்களது ப்ளாக்கைப் படிக்கும் ஆயிரக்கணக்கானவர்களின் சார்பாக என் கோரிக்கை இது.

7:00 AM, May 12, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//ஆனால் பார்ப்பனர்கள் தமிழை நீச பாஷையாகக் கருதுவதாக ஆபிரகாமியத்தின் அடியாட்களான திராவிடத்தின் போதனைகளை நம்புபவர்கள் நம்புகிறார்கள்.

இல்லை என்று நிறுவ நீங்கள் உவேசா முதலானோர்களைப்பற்றி சொல்லுவதோடு, தமிழ் நீசமொழி என்று ஹிந்து சமய இலக்கியங்கள் (புராணங்கள் உட்பட) ஏதேனும் சொல்லுகின்றதா என்று ஆராய்ந்து கூற இயலுமா?//
இதனை தனிபதிவாகவே எழுதுகிறேன்.நன்றி.

12:08 AM, May 13, 2007  
Anonymous Anonymous said...

இறந்த மொழிக்கு ஒப்பாறியா ? அழ இன்னும் யார் யாரெல்லாம் வருவாங்க ?

6:03 AM, May 16, 2007  

Post a Comment

<< Home