Tuesday, May 08, 2007

சூப்பர் நோவா யாருன்னு கேட்டா...


சந்திரா எக்ஸ்-ரே விண்வெளி விண்மீன் கண்காணிப்பு மையம்

சூப்பர் நோவா என்பது விண்மீன் வெடித்து சிதறும் நிகழ்வு. மிகவும் ஒளியுள்ள ப்ளாஸ்மா எனும் அயனிய பொருண்மை நிலைக்கு (ionized state of matter) விண்மீன் வெடித்து
செல்லும் நிகழ்வையே சூப்பர் நோவாவாக வெடித்தல் என நாம் கூறுகிறோம். இவ்வெடிப்பு நிகழ்ந்திடும் இச்சிறிய தருணத்தில் வெளிப்படும் ஆற்றலானது நம் சூரியன் 10 பில்லியன்
ஆண்டுகள் வெளியிடும் ஆற்றலுக்கு சமம் ஆகும். எல்லா விண்மீன்களும் சூப்பர் நோவாவாகிடும் என கூறமுடியாது. சூரியனின் நிறைக்கு 8 மடங்கும் அதிகமாகவும் இருக்கும்
விண்மீன்களே சூப்பர்நோவா ஆகின்றன. நமது சூரியன் சூப்பர் நோவா ஆகாது.

250 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள விண்மீன் மண்டலம் NGC1260

தற்போது சந்திரா-எக்ஸ்-ரே விண்மீன் கண்காணிப்பு நிலையம் (விண்ணில் அமைந்துள்ளது இது) SN2006gy என்கிற சூப்பர்நோவாவைக் கண்டுபிடித்துள்ளது. இதுவரை அறியப்பட்ட
சூப்பர் நோவாக்களிலேயே இந்த சூப்பர்நோவா வெடிப்பின் பிரகாசமும் அது நிகழ எடுத்துக்கொண்ட காலமும் அபரிமிதமாக இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
SN2006gy எங்கே உள்ளது? அது NGC1260 எனும் விண்மீன்கள் மண்டலத்தில் (galaxy) உள்ளது. இது பூமியிலிருந்து 240மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. (ஒரு
ஒளிவருடம் என்பது ஒரு ஆண்டில் ஒளி கடக்கும் தூரம்.) 250 மில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமியில் மனிதன் உருவாகவே இல்லை. 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த உயிரினங்களில் 90 விழுக்காடு அழிந்துவிட்டன. அந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வினை நாம் இப்போது காண்கிறோம். பூமியில் உள்ள கண்காணிப்பு நிலையமும் இந்த சூப்பர் நோவாவை கண்டுபிடித்துள்ளது. அகச்சிவப்பு புகைப்படமாக எடுத்துள்ளது.

இதில் மேலே இருக்கும் பிரகாசமையமே சூப்பர்நோவா வெடிப்பு மங்கலான ஒளி மையம் விண்மீன் மண்டலத்தின் மையம்.

சூப்பர் நோவா SN2006gy எப்படி நடந்திருக்கும் : கருதுகோள்

மேலே உள்ள படம் சூப்பர்நோவா எவ்வாறு வெடித்தது என்பதனை குறித்து அறிவியலாளர்கள் முன்வைக்கும் கருதுகோள் ஆகும். மிக அதிக பொருண்மை நிறை கொண்ட ஒரு விண்மீனின் மையம் அதீதமாக காமா கதிர்களை உருவாக்குகிறது. இக்கதிரின் ஆற்றலில் துகள்-எதிர்துகள் (particle anti-particle) ஜோடிகள் உருவாகின்றன. இந்த ஆற்றல் இழப்புடன் அதிகமான நிறை-ஈர்ப்பும் இணைய விண்மீனை வெடிக்க வைக்கிறது.

சந்திரா எக்ஸ்-ரே விண்வெளி விண்மீன் கண்காணிப்பு மையம் எடுத்த படம்

Labels:

1 Comments:

Blogger ஜடாயு said...

அரவிந்தன், தமிழில் இது பற்றி இவ்வளவு அழகாக எழுத முடியுமா?

டைம்ஸ் ஆப் இந்தியா இந்த சூப்பர் நோவா பற்றிய பல தகவல்களை விரிவாகத் தந்தது. படித்தேன், பிரமித்தேன்.

இப்போ ஒரு க்விஸ் கேள்வி - சூப்பர்நோவாவுக்கும், நெபுலாவுக்கும் என்ன வித்தியாசம்?

6:29 AM, May 18, 2007  

Post a Comment

<< Home