ஏசுவின் வரலாற்று அடிப்படையும் அப்பாலும் : 4
மத்தேயு 3 ஆம் அதிகாரம் முழுக்க (17 வசனங்கள்) யோவான் ஸ்நானன் குறித்ததே ஆகும். மார்க்கு எழுதிய ஏசுகதையில் ஒன்றாம் அத்தியாயத்தில் இரண்டாம் வசனம் தொடங்கி
பன்னிரெண்டாம் வசனம் வரை யோவான் அளிக்கும் ஞான ஸ்நானம் குறித்ததாகும். லூக்கா ஒன்றாம் அதிகாரத்தில் யோவானின் பிறப்பு குறித்து பேசப்படுகிறது. பின்னர் மூன்றாம்
அத்தியாயத்தில் 2 இலிருந்து 22 ஆம் வசனம் வரைக்குமாக யோவான் ஏசுவுக்கு ஞான ஸ்நானம் அளித்தது குறித்து கூறுகிறது. பின்னர் யோவான் எழுதிய ஏசு கதையில் ஒன்றாம்
அத்தியாயத்தின் பல வசனங்களில் நாம் யோவான் ஏசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த நிகழ்ச்சி கூறப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இதில் நாம் மத்தேயு மற்றும் லூக்கா எழுதிய
விவரணங்களில் காண்பது என்னவென்றால் யோவான் தன்னிடம் ஞானஸ்நானம் பெற வரும் யூதர்களை வசையாடுகிறான். ஆனால் மார்க்கில் இது இல்லை. யோவானிலோ ஏசுவை
தேவ ஆட்டுக்குட்டி என யோவான் கூறுகிறான் இது மற்ற ஏசு கதைகளில் இல்லை. ஆனால் இந்த நான்கு கதைகளுக்கும் பொதுவானது என்னவென்றால் யோவான் நதியில்
ஞானஸ்நானம் அளிக்கிறான். அதை ஏசு வாங்கும் போது பரிசுத்த ஆவி புறா/பறவை வடிவில் இறங்கிட வானிலிருந்து நீர் என்னுடைய தேவகுமாரன் என ஒரு பிரகடனம்
உண்டாகிறது.
இயேசு ஞானஸ்நானம் பெற்று ஜலத்திலிருந்து கரையேறினவுடனே இதோ வானம் அவருக்கு என்று திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல் இறங்கி தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன் இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது. (மத்தேயு 3:16-17)
அவர் ஜலத்திலிருந்து கரையேறின உடனே வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார். அன்றியும் நீர் என்னுடைய நேச குமாரன் உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. (மாற்கு 1:10-11)
ஜனங்களெல்லோரும் ஞானஸ்நானம் பெற்ற போது இயேசுவும் ஞான ஸ்நானம் பெற்று ஜெபம் பண்ணுகையில் வானம் திறக்கப்பட்டது. பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப் போல் அவர் மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி நீர் என்னுடைய நேசகுமாரன் உம்மில் பிரியமாயிருக்கிறேன் என உரைத்தது. (லூக்கா 3:21-22)
நானும் இவரை அறியாதிருந்தேன். இவர் இஸ்ரவேலருக்கு வெளிப்படும் பொருட்டாக நான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்கவந்தேன் என்றான். பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப் போல வானத்திலிருந்து இறங்கி இவர் மேல் தங்கினதைக் கண்டேன். (யோவான் 1:31-32)
இந்த தரவுகள் அனைத்திலும் நாம் காணும் விசயம் முன்பு ஏசுவின் பிறப்பு கதையில் கண்டது போன்றதொரு ஒழுங்கினை நமக்கு தருகிறது. அதாவது மத்தேயுவிலும் லூக்காவிலும் யோவான் யூதர்களை காரணமின்றி அவர்களின் கெட்டத்தன்மைக்காக திட்டுகிறான். இந்த இரண்டு ஏசுகதைகளுமே ஏசுவினை யூதத்தின் வாக்களிக்கப்பட்ட மெசையாவாக்கிட விரும்பி புனைவு வம்சாவளிகளை முன்வைத்தவை. எனவே இந்த யூத எதிர்ப்பு வசவு என்பது ஏசுவை மறுதலிக்கும் யூதர்களுக்கு மேலாக ஒரு வெறுப்பினை கக்கும் முயற்சிகளாகவே காணப்பட வேண்டும். ஆனால் யோவான் என்று ஒரு யூத மெய்ஞானி இருந்தது உண்மை என்பது தெளிவு. அத்துடன் அவனுக்கு யூத சமுதாயத்தில் ஒரு முக்கிய இடமும் இருந்தது. அவன் நீர் சடங்குகளை செய்பவனாக இருந்திருக்கிறான் என்பதால் இந்த யோவான் எனும் பெயர் அவனது இயற்பெயராக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏன்?
என்கி (Enki) என்பது சுமேரிய நீர் கடவுள். இக்கடவுளின் இரு சின்னங்கள் மீனும் ஆடும் ஆகும். ( இந்த இரண்டு சின்னங்களும் பின்னர் கிறிஸ்தவ குறியீட்டிலும் முக்கிய இடத்தை
வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.) பிற்கால பாபிலோனிய எழுத்துக்களில் இந்த நீர் தெய்வம் இயா (Ea) எனக்குறிப்பிடப்படும். இந்த இயா தெய்வம் தன் தூதுவர்களை உலகெங்கும் அனுப்புகிறது. இந்த தூதர்களில் முதன்மையானவன் ஓயன்னஸ் (Oannes) என்பவர் ஆவார். இவர் சுமேரிய சப்தரிஷிகளுள்* முதன்மையானவர் ஆவார். இந்த ஓயன்னஸ் நீர் சடங்குகளுடன் தொடர்புடையவர்.மீன் தோலை அணிந்து எந்த உணவும் அருந்தாமல் மக்களுக்கு நற்போதனைகள் செய்த இந்த இறைதூதரை குறித்து கிமு மூன்றாம் நூற்றாண்டு ஹெலனிய பாபிலோனிய இலக்கியம் பேசுகிறது. இதுவே ஹீப்ருவில் ஜோகன்னன் ஆகி பின்னர் இயோன்னஸ் ஆகி ஆங்கிலத்தில் ஜான் ஆகிற்று. ஈஸின்ஸ் போன்ற அதீத மறைஞான துறவொழுக்க இயக்கங்கள் யூத சமுதாயத்தில் சமுதாயத்திலிருந்து ஒதுங்கி வாழ்ந்தவை ஆகும். இவற்றின் சடங்குகள் பெரும்பாலும் பண்டைக்கால சுமேரிய மற்றும் பெர்சிய தொன்மங்களால் தாக்கம் கொண்டிருந்தன. மேலும் என்கி எனும் நீர் தெய்வ வழிபாட்டினைக் காட்டிலும் பிரதானம் அடைந்தது சூரியதெய்வ வழிபாடாகும். ஏசு தொன்மம் சூரிய கடவுளுடன் இணைக்கப்பட்ட போது யோவான் எனும் நீர் சடங்குகள் கொண்ட யூத துறவியின் பெயர் நிச்சயமாக ஏசுவினைக் காட்டிலும் யூதர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. இதனையே மிகச்சிறந்த முறையில் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதுதான் 'நீர் கடவுளின்' தூதன் ஏசு எனும் சூரியக்கடவுளின் மேன்மையை முன்னறிவிக்கும் கதை. சூரியன் நீரிலிருந்து எழும் மிகப்பழமையான பிம்பத்தின் அக்காலத்திய நெகிழ்ச்சியான தொன்மங்கள் உறைய வைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதே ஏசுவின் நீர்முழுக்கு சடங்கு குறித்த கதையாடல் எனவும் அறிஞர்கள் கூறுவர்.
எனில் பறவை வடிவ பரிசுத்த ஆவி? அதன் தொன்ம வேர்களையும் காணலாம். (தொடரும்)
குறிப்பு
*
(ஆம்...உலக தொன்மங்கள் ஒன்றொக்கொன்று மிகவும் தொடர்புகளுடையவையே ஆகும். இந்திய சப்தரிஷிகள் தொன்மமும் சரி சுமேரிய சப்தரிஷி தொன்மமும் சரி எதிலிருந்து எது வந்திருக்கலாம் என தெரியாத அளவு பழமையானவை. அப்பு என்பது நீரினை குறிக்கும் பாரத பதம் சுமேரியத்திலும் அபு என்பது நீர் என்பதனைக் குறிக்கும். மேலும் ஓயன்னஸுக்கும் விஷ்ணுவின் முதல் அவதாரமான மச்சாவதாரத்துக்கும் கூட இணைகளை காண முடியும். நிற்க. பாரத மரபில் புராணங்களின் வரலாற்றுத்தன்மைக்கு பொதுவாக வெகுசிலரைத்தவிர யாரும் முக்கியத்துவம் தருவதில்லை, ஏசுவின் புராணத்தன்மைக்கு வெகுசிலரைத்தவிர பெரும்பாலான கிறிஸ்தவர்கள் முக்கியத்துவம் தராமல் வரலாற்றுத்தன்மையை நம்புவது போல. மாறாக விவிலியம் முழுவதும் வியாபித்திருக்கும் தவிர்க்கமுடியாத புராணத்தன்மை ஏசுவின் உண்மை இயற்கையை காட்டுகிறது. விவிலியம் சித்திரிக்கும் ஏசு வரலாற்றில் வாழ்ந்திடவில்லை என்பதே அது.) கட்டுரைக்கு மீள் செல்க
இக்கட்டுரையின் முந்தைய பகுதிகளை இங்கே காண்க:
1 Comments:
அரவிந்தன்,
தெரியாத, அறியாத பல தகவல்களை உங்களின் இந்த தொடர் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக, சப்தரிஷிகள் பற்றிய கருத்து சுமேரியாவிலும் இருந்தது என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றது.
லோகநாதன் என்பவர் முன்பு இணையத்தில் சுமேரியா பற்றி நிறைய எழுதிவந்தார்(அவரது கருத்துக்கள் ரொம்பவுமே weird ஆக இருக்கும் என்றாலும்). ஆபிரகாமிய மதங்களால் அழிக்கப்பட்ட தொன்மைக் கலாச்சாரங்கள் குறித்த ஒரு முழுமையான compilation எங்காவது கிட்டுமா? இருப்பின் தெரிவியுங்கள். நன்றி.
Post a Comment
<< Home