பாசிசம், நாசியிசம், சோசலிசம், இந்துத்வம்
ஸ்ரீ மாதவ சாதாசிவ கோல்வால்கர் எனும் ப.பூ.குருஜி கோல்வால்கர் நாசி ஆதரவாளரா பாசிஸ்டா இந்துத்வம் என்பது பாசிச நாசி தன்மை கொண்டதா என ஒரு தீவிரமாக வலைப்பதிவர் ஜடாயு அலசியுள்ளார். 'ஆம்' என தெள்ளத்தெளிவாக இடதுசாரிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 'இல்லை' என தமது நூலில் முனைவர் கொயன்ராட் எல்ஸ்ட் நிறுவுகிறார். இந்த விவாதத்தின் மையத்தில் இருப்பது குருஜி கோல்வல்கர் எழுதிய 'நாம் நம் தேசத்தின் வரையறை' ஆகும். இந்நூலில் இருந்து கையாளப்படும் பகுதிகளையும் நாம் காணலாம்.
"இனத்தின் தூய்மையையும் அதன் கலாச்சாரத்தையும் தக்க வைத்துக் கொள்ள ஜெர்மனி அத்தேச செமிடிக் இனத்தை தேசத்திலிருந்து நீக்கி (purges) உலகை திடுக்குற செய்தது. இனகர்வம் அதன் மிக அதீத அளவில் இங்கு வெளிப்பட்டுள்ளது. ஜெர்மனி காட்டியுள்ளது என்னவென்றால் எப்படி தம் அடிப்படையில் மாறுபடும் இனங்கள் கலாச்சாரங்கள் ஒன்றாக ஒருங்கிணையமுடியாது என்பதே. இது இந்துஸ்தானத்தில் உள்ள நம் அனைவருக்கும் லாபம் தரும் நல்ல படிப்பினையாகும்."மற்றொரு மேற்கோள் பினவருமாறு ஆகும்:
"புத்திசாலித்தனமான பழமையான நாடுகளின் இந்த நிலைப்பாட்டின் படி இந்துஸ்தானத்தில் உள்ள அன்னிய இனங்கள் இந்து கலாச்சாரத்தையும் மொழியையும் மரியாதையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்து தருமத்தை மரியாதை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். தங்கள் தனித்தன்மையை விட்டு இந்து இனத்துடன் கலந்திட வேண்டும். இல்லையென்றால் அவர்கள் இந்து தேசத்திற்கு கீழ்படிந்து எவ்வித சலுகைகளையும் எதிர்பார்க்காமல் -எத்தகைய தனிவிதமாக நடத்தப்படுவதை
எண்ணிக்கூட பார்க்காமல் குடிமக்களுக்கான உரிமைகளைக் கூட கோராமல்- இருந்திட வேண்டும்."
இந்த இரண்டு பாராக்களும்தான் குருஜியை நாசி ஆதரவாளர்
என்பதாகவும், குருஜி ஏதோ பாசிஸ்ட் என்பதாகவும் -நீட்சியாக ஏதோ ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்வமே நாசி-பாசிச தன்மை கொண்டதாகவும் -காட்ட பயன்படும் பாராக்கள் ஆகும்.
ஆனால் இதன் முழுமையான உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு முன்னால் பாசிசம் என்றால் என்ன நாசியிசம் என்றால் என்ன என்பதையும் அதற்கும் இடதுசாரி சோசலிசத்துக்கும் உள்ள தொப்பிள்கொடி உறவையும் சிறிதே காணலாம்.
"லெனின், ட்ராஸ்கி, ஸ்டாலின் ஆகியோருக்கு மிகச்சிறந்த சீடர்களாக நாசிகளைத் தவிர வேறு யாரும் இருந்திருக்க முடியாது....பின்வரும் விசயங்களை அவர்கள் சோவியத் ரசியாவிலிருந்து இறக்குமதி செய்தனர்:ஒரு கட்சி ஆட்சி முறையும் அரசியலில் அக்கட்சிக்கே இடமும்; இரகசிய காவல்துறைக்கான அதீத இடமும்; வதை முகாம்கள்; அரசு நிர்வாகம் மூலம் அரசியல் எதிரிகளை சிறைப்படுத்துதல் மற்றும் நிர்மூலமாக்குதல்; அரசியல் எதிரிகளின் குடும்பங்களை வதைத்தல் நாடுகடத்தல்; பிரச்சார முறை"
எனவே மார்க்சியவாதிகள் நாசி மற்றும் பாசிச அமைப்புகளுக்கு பிதாமகர்கள் என்கிற உண்மையை நினைவில் கொள்வோம். மார்க்சிசம், பாசிசம், நாசியிசம் ஆகிய மூன்று கருத்துருக்களின் செயல்பாட்டிலும் பிரதானமானது தமக்கு எதிரான கருத்துகளுக்கு முத்திரை குத்தி அழிப்பது முக்கியமானதாகும்.('யூத மேலாதிக்க சதி' என நாசி சொன்னால் அதற்கு இணையான சொல்லாடலாக பூர்ஷ்வா பிற்போக்குத்தனம் அல்லது ஏகாதிபத்திய சதி என மார்க்சியவாதி கூறுவான் நாசி இனவாத கோட்பாடும் மார்க்சிய வெறுப்பியலும் கலந்த விசித்திர பிறவியான மகஇக கும்பல் 'பார்ப்பனீய நவகாலனீய சதி' என முழங்கும்.)
ஆனால் குருஜி கோல்வல்கரின் தன்மை எத்தகையது என்பதனை காணலாம். இந்நூலின் வெளியீட்டு வரலாற்றை மிக தெளிவாக நமக்கு தருகிறார் கொயன்ராட் எல்ஸ்ட். 'நாம் நம் தேசத்தின் வரையறை' குருஜியால் 1938 இல் நவம்பர் முதல் வாரத்தில் எழுதி முடிக்கப்பட்டது என அவர் கூறுகிறார். இந்நூலின் முன்னுரையில் இவர் தம்மை செழுமைப்படுத்திய ஐரோப்பிய எண்ணங்களின் தாக்கங்களை குறிப்பிடுமிடத்து நாசிகளையோ ஹிட்லரையோ குறிப்பிடவில்லை மாறாக இத்தாலிய தேசியவாதியான மாசினி மற்றும் ஸுரிச்சை சார்ந்த சட்ட வல்லுநர் மற்றும் முற்போக்கான எண்ணம் கொண்ட ஜோகனன் காஸ்பர் ப்ளண்ட்ஸ்ச்லி (Johann Kaspar Bluntschli) ஆகியோரைக் குறிப்பிடுகிறார். பின்னவர் இன்றைக்கும் மதிக்கப்படும் சட்டவியலாளர் என்பதுடன் மத அடிப்படைவாதத்தை எதிர்த்து முற்போக்கான கிறிஸ்தவ இறையியல் கொண்டவர் என்பது முக்கியமான விசயமாகும். நாசி பாசிச எண்ணவோட்டங்கள் குருஜியை கவர்ந்திருக்கும் பட்சத்தில் 1939 இல் எழுதிய முன்னுரையில் கூறியிருக்கலாம். கூறவில்லை. பிற கருத்துகளுக்கு சற்றும் இடமளிக்காது அழிக்கும் தன்மை நாசி, பாசிச, ஸ்டாலினிய அமைப்புகளுக்கு உண்டு என முன்னர் கண்டோ ம். ஆனால் குருஜியின் தன்மைக்கு அதற்கு நேர் மாறாக இருந்தது என்பதனை நாம் அறியலாம். குருஜியின் முதல் நூலான இதற்கு எழுதப்பட்ட முன்னுரையிலேயே குருஜியின் சில கருத்துகளை கண்டித்து அந்த முகவுரையை எழுதியவர் எழுதியிருந்தார். அவர் மாதவ் ஸ்ரீஹரி அனே என்பவர். அந்த கண்டித்த முகவுரையுடனேயே இந்த நூல் வெளிவந்தது. அதில் அவர் கூறியிருந்தார்:
" மேலும் தேசியம் குறித்து தமது கோட்பாட்டுடன் ஒத்து போகாதவர்களைக் குறித்து இந்நூல் ஆசிரியர் பயன்படுத்தியிருக்கும் பொறுமையற்ற கடுமையான மொழி, தேசியம் போன்றதோர் சிக்கலான விசயத்தை அறிவியல்பூர்வமாக அணுக உதவி செய்வதாக இல்லை." ('நாம்' 1939, பக்.xviii)பாசிசம், மார்க்சியம் ஆகியவற்றின் நடைமுறைக்கும் குருஜியின் நடைமுறைக்குமாக ஏற்பட்ட பெரிய வேறுபாட்டினை இங்கே காணலாம். தம்மை விமர்சிப்பவரின் முகவுரையை தமது நூலில் வெளியிடும் ஜனநாயக மனோபாவமே குருஜியுடையது.
இனி ஹிட்லரிய யூத இன அழிப்பை குருஜி ஆதரிக்கிறாரா என காணலாம். 1938 களில் இந்தியாவில் இருக்கும் ஒருவருக்கு (அதுவும் நேரு போல சர்வதேச பிரயாணங்கள் செய்திராத ஒருவருக்கு) ஹிட்லரின் யூத வெறுப்பின் உண்மைத்தன்மை குறித்து தெரிய வாய்ப்பில்லை. ஹிட்லரின் யூத தீர்வு என்பது என்ன என்பதனை பட்டவர்த்தனமாக வகைமுகாம்களில் செய்யப்பட்ட படுகொலைகள் மூலமாக உலகம் உணர்ந்தது 1940களில்தான். 1938களில் ஜெர்மனியில் யூதர்கள் தங்கள் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்படுவதும் வேறு தேசங்களுக்கு அவர்கள் செல்வதும் மட்டுமே அரசல் புரசலாக இந்தியாவில் தெரிந்திருந்தது. ஹிட்லரின் வதைமுகாம்களில் ஒன்றே ஒன்று மட்டுமே 1938க்கு முன்னர் உருவாக்கப்பட்டது. ஆனால் அது குறித்தும் உலகு அறிந்தது 1940களில் தான். ஹிட்லரின் யூத ஒழிப்பை குறித்து தெளிவாக தெரிந்திருந்திருக்ககூடிய வாய்ப்பு ஒரே ஒரு மையத்துக்கு மட்டுமே இருந்தது. ஹிட்லருக்கு தேவைப்பட்ட சர்வதேச அங்கீகாரத்தை ஹிட்லருக்கு வழங்கிய அந்த மையத்தின் பெயர் வத்திகான். மேலும் ஹிட்லரின் 'பொருளாதார சாதனை' பிரச்சாரங்களும் மக்களை கவர்ந்திருந்தது. இந்நிலையில் ஜெர்மனியில் நடந்த நிகழ்ச்சியினை போகிற போக்கில் ஒரு உதாரணமாக குருஜி காட்டுவதை வைத்து அவர் நாசி கோட்பாட்டினை ஆதரித்தார் என்பது மேம்போக்கானது. எனவே purges எனக் கூறுவது இன அழிப்பு என சொல்வது அல்லது இன்று நாசிகளின் purges என நாம் அறிந்துகொண்டிருக்கும் பார்வையுடன் ஓப்பிடுவது முழுக்க முழுக்க தவறானது ஆகும்.
உதாரணமாக இடதுசாரிகளின் அபிமான நாயகனான காஸ்ட்ரோ தன் கல்லூரி நாட்களில் ஹிட்லரின் அபிமானியாக இருந்தார் என்பதுடன் 1953 இல் அவர் ஆற்றிய உரை கூட அப்பட்டமாக ஹிட்லரின் ரத்தாஸ் புஷ்க் உரையை தழுவி ஆற்றப்பட்டதாகும். ஏனெனில் ஹிட்லரின் கொடுங்கோன்மை அவன் இழைத்த மானுடப்பேரழிவு ஆகியவை குறித்து க்யூபாவிலோ இந்தியாவிலோ பிரிட்டிஷ் அல்லது பிற காலனிய அடக்குமுறைக்கு ஆளாக்கிக் கொண்டிருந்தவர்களுக்கு எவ்வித பெரிய அறிவும் இருந்திருக்கவில்லை. ஆனால் நாம் காணவேண்டியது 1940களில் ஹிட்லர் ஆற்றிய பேரழிவுச் செயல்களின் விபரீதம் வெளிவந்த பிறகு ஹிட்லரின் பேரழிவுச்செயல்களை ஆதரிக்கவோ அல்லது அது நடக்கவேயில்லையென்றோ அல்லது ஹிட்லரின் பிரச்சார வெளியீடுகளை வெட்கமின்றி மீள்-பிரசுரம் செய்யவோ (நாசி பிரச்சார நூல்களை எப்போதுமே சங்கம் பிரசுரித்ததில்லை) குருஜியோ அவர் சார்ந்த இயக்கமோ முயன்றிடவில்லை. ஆனால் மேல் கூறிய அனைத்துமே செய்தவர்கள் அல்லது செய்தவர்களை ஆதரிப்பவர்கள் குருஜியையும் சங்கத்தையும் இந்துத்தவத்தையும் நாசியிஸ்ட்கள் பாசிஸ்ட்கள் என்பது பெரிய முரண்நகை.
அடுத்ததாக அன்று நிலவிய சூழ்நிலையை புரிந்து கொண்டால் குருஜியின் வாசகங்கள் எத்தகைய சூழ்நிலைக்கான எதிர்வினையாக வெளிப்பட்டது என்பதையும் புரிந்துகொள்ளலாம். பிரிட்டிஷ் அரசாங்கம் 1934 இல் உருவாக்கிய வகுப்புவாரி அமைப்பு அன்றைய சூழலில் இந்துக்களுக்கு பெரும் துரோகத்தை செய்வதாகவும் ஜனநாயகத்தின் அடிப்படையையே கேலிக்கூத்தாகுவதாகவும் அமைந்தது. இது குறித்து அண்ணல் அம்பேத்கர் பின்வருமாறு விவரிக்கிறார்:
"வகுப்புவாரி அமைப்பு மோசடித்தனமானது. ஏனென்றால் அது தேர்தல் பிரதிநித்த்துவத்தில் இந்து சிறுபான்மையினரையும் இஸ்லாமிய சிறுபான்மையினரையும் வெவ்வேறாக நடத்துகிறது. இந்து பெரும்பான்மை பிரதேசங்களில் வாழும் இஸ்லாமியர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களை தேர்ந்தெடுக்க உரிமை வழங்கிகிறது. ஆனால் முஸ்லீம் பெரும்பான்மை பிரதேசங்களில் வாழும் இந்து சிறுபான்மையினர் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் தேர்தல் இடங்களை அவர்கள் தேர்வு செய்யமுடியாது. அதனை முஸ்லீம்கள் தீர்மானிப்பார்கள். ஆக முஸ்லீம் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் முஸ்லீம்களுக்கு சட்டபூர்வ பெரும்பான்மை அதிகாரம் வழங்கப்பட்டு தனி ஒதுக்கீட்டு தேர்தல் சீட்டுகளும் கொடுக்கப்படுகின்றன. அதே நேரத்தில் இந்து சிறுபான்மையினராகிவிட்ட இடங்களில் இந்து சிறுபான்மையினர் மீது முஸ்லீம் ஆட்சி திணிக்கப்படுகிறது - அதில் இந்துக்களுக்கு எவ்வித மாற்றமும் செய்ய முடியாதபடி. இதுதான் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் அடிப்படை முறைகேடு."ஆக, 1938 இல் குருஜி எழுதும் போது அவர் இத்தகைய போக்குக்கான நேர் எதிர்வினையை எழுப்புகிறார். அதுதான் 'சலுகைகளையும் எதிர்பார்க்காமல் -எத்தகைய தனிவிதமாக நடத்தப்படுவதை எண்ணிக்கூட பார்க்காமல் குடிமக்களுக்கான உரிமைகளைக் கூட- இருந்திட வேண்டும்' என்கிற குரல். அதில் கூட அவர் கூறுவது என்னவென்றால் அவர்கள் இந்து தேசியத்தன்மையுடன் இணைந்து முஸ்லீமாக வாழ்கிற பட்சத்தில் அவர்கள் இத்தேசத்தின் முழுகுடிமகன்களாக நடத்தப்பட வேணும் என்பதில் குருஜிக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது. அவர் தெளிவாகவே கூறுகிறார்:
"இந்துஸ்தானத்தில் உள்ள அன்னிய இனங்கள் இந்து கலாச்சாரத்தையும் மொழியையும் மரியாதையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்து தருமத்தை மரியாதை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். தங்கள் தனித்தன்மையை விட்டு இந்து இனத்துடன் கலந்திட வேண்டும். இல்லையென்றால் அவர்கள் இந்து தேசத்திற்கு கீழ்படிந்து எவ்வித சலுகைகளையும் எதிர்பார்க்காமல் -எத்தகைய தனிவிதமாக நடத்தப்படுவதை எண்ணிக்கூட பார்க்காமல் குடிமக்களுக்கான உரிமைகளைக் கூட- இருந்திட வேண்டும்."இந்து கலாச்சாரத்தையும் மொழியையும் மரியாதையுடன் ஏற்று அதே நேரத்தில் நல்ல முஸ்லீம்களாக மட்டுமின்றி நாட்டுக்கே நல்ல உதாரணமாக, மிகச்சிறந்த குடிமக்களாக, வாழும், வாழ்ந்த முஸ்லீம்கள் எத்தனையோ பேரைக் காட்டமுடியும். அத்தகைய இரு முஸ்லீம் மகான்களான கபீர் மற்றும் இப்ராகீம் ரஸ்கான் ஆகியவரை ஆர்.எஸ்.எஸ்ஸின் தினசரி துதி மூலம் கோடிக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் காரர்கள் வாழ்த்தி வணங்கி வருகின்றனர். ஆக எந்த மக்களாக இருப்பினும் பிரிவினை வாத மற்றும் ஆக்கிரமிப்புவாத தனித்தன்மையை விட்டு அவர்கள் இந்த தேசத்தின் இயல்புடன் கலந்திட வேண்டுமென்றுதான் குருஜி விரும்புகிறார். 'என்னதான் பகுத்தறிவு பேசினாலும் பார்ப்பானை சேர்த்துக்கொள்ளாதே' என்கிற ஈவெராத்தனமோ அல்லது 'என்னதான் ஜெர்மனியுடன் ஒருங்கிணைந்தாலும் யூதர்களை இனம் கண்டு விலக்கு' என்கிற ஈவெராத்தனத்துக்கு இணையான ஹிட்லரியத்தனமோ குருஜியிடம் இல்லை. அதற்கு நேர்மாறாக முஸ்லீம்களை இந்துக்களுடன் ஒருங்கிணைய கூறும் ஒற்றுமை குரலே இருக்கிறது. ஆனால் அதையும் மீறி சமூக சமரசத்தைக் காட்டிலும், தேசநலனைக் காட்டிலும் எங்கள் தனித்தன்மையே முக்கியம் என அம்பேத்கர் சுட்டிக்காட்டியுள்ளபடி தனியாக அரசியல் சலுகைளை பெற்று மேலாதிக்கம் செய்ய விழையும் இஸ்லாமிய பாசிஸ்ட்களையே குருஜி கடுமையாக கண்டிக்கிறார். அவர்களையே ''சலுகைகளையும் எதிர்பார்க்காமல் -எத்தகைய தனிவிதமாக நடத்தப்படுவதை எண்ணிக்கூட பார்க்காமல் குடிமக்களுக்கான உரிமைகளைக் கூட கோராமல்- இருந்திட வேண்டும்" எனக்கூறுகிறார்.
சரி... குருஜி கூறுகிற இந்து தேசியம் அல்லது தேசிய வாழ்க்கை என்பது என்ன? பசு மாமிசம் உண்பவனைக் கொல்வதா? சாதியத்தையும் பிறப்படிப்படையிலான வர்ணத்தையும் தூக்கிப்பிடிப்பதா? வர்ணம் குறித்து குருஜி மற்றும் இந்துத்வவாதிகளின் பார்வை என்ன என்பதையும் விளக்கமாக காணலாம்.
குறிப்புகள் மற்றும் ஆதாரங்கள்
குருஜி கோல்வால்கர் நாசியா? பெல்ஜிய இந்தியவியலாளர் டாக்டர்.கொயன்ராட் எல்ஸ்டின் விளக்கமான கட்டுரை இங்கே: http://koenraadelst.voiceofdharma.com/articles/fascism/golwalkar.html - லுட்விக் வான் மைஸஸ் (1881-1973) - யூதர், பொருளாதார மேதை. நாசிகளால் ஆஸ்திரியாவிலிருந்து சுவிட்சர்லாந்திற்கும் பின்னர் நியூயார்க்கிற்கும் குடி பெயர்ந்தவர். ஆஸ்திரிய பொருளாதார கோட்பாட்டின் முக்கிய பிதாமகர்களுள் ஒருவராக கருதப்படுபவர். காண்க:http://en.wikipedia.org/wiki/Ludwig_von_Mises
- குருஜியை கவர்ந்த Johann Kaspar Bluntschli என்கிற சட்டவியலாளர் குறித்து காண்க: http://en.wikipedia.org/wiki/Bluntschli
- பாபா சாகேப் அம்பேத்கர், Thoughts on Pakistan, அத்தியாயம் 6, பக்கம். 50
- காஸ்ட்ரோவின் ஹிட்லர் ஆதரவு நிலைபாடுகள்:
"In his youth, Castro admired Hitler. At the University he carried with him a copy of Mein Kampf. His statement at the trial in 1953, "History will Absolve Me," was lifted from Hitler's speech at the Rathaus Putsch trial."
பார்க்க: http://www.cubanet.org/opi/11099902.htm
மேலும் Georgie Anne Geyer எழுதிய 'GUERRILLA PRINCE' The Untold Story of Fidel Castro எனும் நூலில் இது குறிப்பிடப்படுவதை அதே நூலுக்கான நியூயார்க் டைம்ஸ் மதிப்புரையில் காணலாம்: (http://query.nytimes.com/gst/fullpage.html?res=9D0CE5D71330F933A25751C0A967958260) "...as a youthful rebel, Mr. Castro reportedly admired Hitler's tactics and faked at least one police beating to get attention." - "எவ்வளவு பகுத்தறிவுவாதிகளாய் நாத்திகர்களாய் இருந்தாலும் பார்ப்பானை உள்ளேவிடக்கூடாது; சேர்க்கக் கூடாது."-ஈவெரா (விடுதலை 20-10-1967)
Labels: Ambedkar, Dr.Elst, Fascism, Guruji Golwalkar, Hindu Nationalism, Hinduthva, Muslims, Nazism
14 Comments:
பிறப்பால் பார்ப்பனர்களானவர்களை இயக்கத்தில் சேர்க்கக்கூடாது என்று ஈவேரா உத்தரவிட்டிருப்பதாகவும், அதனால் திகவில் பார்ப்பனர்களை சேர்ப்பதில்லை என்றும் திகவினர் கூறுகின்றனர்.
பிறப்பினடிப்படையில் ஒருவரை ஒதுக்குவது இனவெறியின் கீழ் வருமா இல்லை பாசிசத்தின் கீழ் வருமா?
ஆதாரங்களோடு எழுதும் உங்கள் தீவிரம் என்னை எப்போதும் வியக்க வைக்கிறது.
1938ல் ஹிட்லரின் கொள்கைகளைப் பற்றி தெரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் தன் கொள்கைகளை வரையறுக்கத் துணிந்த ஒருவருக்கு, ஹிட்லர் தன் கொள்கையை எப்படிச் நிறைவேற்றப்போகிறான் என்பது தெரியாது என்பது சரியான வாதமாகத் தெரியவில்லை.
ஒரு இனத்தை Purge செய்ய வேண்டுகோளா வைக்க இயலும்? வெட்டித்தான் போட இயலும். மேலும் ஹிட்லரின் கொள்கைகளை எங்கிருந்து எடுத்தாட்கொண்டாரோ (பத்திரிகைகள், தினசரி) அங்கிருந்தே அவரால் ஹிட்லரின் நடவடிக்கை பற்றிய தகவல்களையும் பெற்றிருக்க இயலும்.
இல்லை எனினும் ஒரு இனத்தின் பெயரில் தேசியத்தை கட்டமைப்பது அடிப்படையில் ஜனநாயகத்துக்கு எதிரானது. இருக்கையில் சிறுபான்மையினருக்கு முதன்மை அளிப்பது எப்படி சரியானதாகும்? இன்றைக்கு மக்கள் பிரதிநிதிகள் மன்றத்தில் மொத்தத்தில் விகிதங்களை எடுத்துப் பார்ப்போமேயானால் இதைப் புரிந்துகொள்ள இயலும் என நினைக்கிறேன்.
சிறுபான்மையினர் பிரதிநித்துவமின்றிப் போய்விடாமல் தடுக்கவே இந்தச் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன என நினைக்கிறேன். இதில் ஓட்டைகள் நிச்சயம் இருக்கலாம்.
இந்து தேசியவாதத்தில் பிறர் கலப்பது என்பது அதுவும் தன் தனித்தன்மையை இழந்து கலப்பது என்பது ஒரு நாசி சிந்தனை இல்லையா?
ஆக ஹிட்லர் purge செய்ததால் அவர் நாசி என்கிறோம் ஆனா குருஜி 'கலப்போம்' என்பதால் அவரை நாசி என இயலாதா?
இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அல்லது இரண்டுக்குமான பெரிய வித்தியாசம் பார்ப்பவர் மனதிலேயே இருக்கிறது.
//1938ல் ஹிட்லரின் கொள்கைகளைப் பற்றி தெரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் தன் கொள்கைகளை வரையறுக்கத் துணிந்த ஒருவருக்கு, ஹிட்லர் தன் கொள்கையை எப்படிச் நிறைவேற்றப்போகிறான் என்பது தெரியாது என்பது சரியான வாதமாகத் தெரியவில்லை//
ஹிட்லரிய கொள்கைகளை குருஜி முழுமையாக தெரிந்து கொள்ளவும் இல்லை. அதில் அவருக்கு ஈடுபாடும் இருக்கவில்லை. முழு நூலிலும் இரண்டு இடங்களில் தான் ஜெர்மனி குறித்த குறிப்பு வருகிறது அதுவும் ஹிட்லரைக் குறித்த எவ்வித வார்த்தையும் புகழுரையும் இன்றி. எனவே ஹிட்லரின் கொள்கைகளின் அடிப்படையில் தன் கொள்கைகளை வகுத்தார் என்பது சிறிதும் சரியல்ல. ஹிட்லரின் இனவாத கோட்பாட்டுக்கு ஆதாரமாக அமைந்த ஆரிய இனவாத கோட்பாடே குருஜியால் தீவிரமாக மறுக்கப்பட்டதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஹிட்லர் தன் கொள்கைகளை எப்படி நிறைவேற்றப்போகிறான் என்பது ஹிட்லருக்கு அருகாமையில் இருந்த நேசநாடுகளுக்கே தெரியவில்லை என்பதுதான் உண்மை. மீண்டும் நான் ஏற்கனவே கூறியது போல ஆவண ஆதாரங்களுடன் நாசி செயல்பாட்டினை முதன்முதலில் அறிந்து கொள்ளும் நிலையில் இருந்த, அறிந்திருந்த ஒரே சர்வதேச கேந்திரம் கத்தோலிக்க கிறிஸ்தவ சபைதான். ஸில்கோன்-பி எனும் இரசாயனம் யூத இன அழிப்பில் பயன்படுத்தப்பட்டதை ஒரு சில ஜெர்மானிய பிஷப்புகள் வத்திகானுக்கு தெரிவித்தும் போப் மௌனவிரதம் மேற்கொண்டார். இத்தனைக்கும் இந்த இரசாயனம் குடும்பக்கட்டுப்பாட்டு கருத்தடை மருந்தாக நாசி ஜெர்மனி அறிவித்த போது அதை எதிர்த்து ஹிட்லரை பணிய வைத்த கத்தோலிக்க சபை அதே இரசாயனம் யூத அழிப்புக்கு பயன்படுகிறது என சொந்த சபையின் ஆயர்களே அறிக்கை அனுப்பிய போது மௌனம் சாதித்தது. எனவே ஹிட்லரின் கொள்கைகளைக் கூட சரியாக அறிந்திராத குருஜி ஹிட்லர் தனது கோட்பாடுகளை எப்படி நிறைவேற்றிக் கொள்ள போகிறான் என்பதை மகாராஷ்டிரத்தில் பயணம் செய்தவாறு எப்படி அறிந்து கொள்ள முடியும்?
//ஒரு இனத்தை Purge செய்ய வேண்டுகோளா வைக்க இயலும்? வெட்டித்தான் போட இயலும். மேலும் ஹிட்லரின் கொள்கைகளை எங்கிருந்து எடுத்தாட்கொண்டாரோ (பத்திரிகைகள், தினசரி) அங்கிருந்தே அவரால் ஹிட்லரின் நடவடிக்கை பற்றிய தகவல்களையும் பெற்றிருக்க இயலும்.//
மீண்டும் சொல்கிறேன் வதைமுகாம்களை குறித்து அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் கூட அரசல் புரசலாக செய்திகள் கசிந்தன. இதனையும் வதந்திகள் என்ற அளவிலேயே அந்த தேசத்து அறிவுஜீவிகள் கருதினர். பொதுமக்களோ கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் இந்தியாவிலோ அதே காலகட்டத்தில் ஜெர்மனி ஸ்வஸ்திகாவை தனது சின்னமாக ஏற்றிருக்கிறது என்பது மட்டுமே தெரிந்திருந்ததே தவிர அங்கு நடந்த இன ஒழிப்புகள் 1940களுக்கு முன்னால் பத்திரிகை செய்திகளில் கிடைக்க வாய்ப்பே இல்லை.
//ஆக ஹிட்லர் purge செய்ததால் அவர் நாசி என்கிறோம் ஆனா குருஜி 'கலப்போம்' என்பதால் அவரை நாசி என இயலாதா?//
ஹிட்லர் ஜெர்மானிய தேசத்துடன் இணைந்திருந்தாலும் யூதர்கள் அன்னியர்கள் என்றான். குருஜியோ பத்தானாக இருந்தாலும் பார்சியாக இருந்தாலும் பாரத தேசிய நீரோட்டத்துடன் கலந்தால் அவர் வணங்கத்தக்கவர் என்றார். ஹிட்லர் அன்றைய ஏசுசபை இனவாத நியதிகளை தளர்த்தி ஒரு இனவாத அரசினை அமைத்தான். குருஜியோ இனவாதத்தையே நிராகரித்தார். கலாச்சாரத்தையே முன்வைத்தார்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிறில்
//பிறப்பினடிப்படையில் ஒருவரை ஒதுக்குவது இனவெறியின் கீழ் வருமா இல்லை பாசிசத்தின் கீழ் வருமா?//
நிச்சயமாக.
திக வில் இருக்கும் சின்னகுத்தூசி பிறப்பால் பிராமணர் தான், அவர் இயற் பெயர் தியாகராஜன்.
நான் திக இல்லை.
just for information..
சின்னக்குத்தூசி திகவில் உறுப்பினர் இல்லை. திகவின் ஆதரவாளர்களில் ஒருவர் - கமலஹாசனைப் போல.
செய்திக்கு நன்றி பனித்துளி.
நிஜமாகவே திகவில் பிராமணர்கள்
கிடையாதா???
//கலாச்சாரத்தையே//
எல்லோருக்கும் ஒரே கலாச்சாரம் சாத்தியமா?
சாதீயம் என்பதும் கலாச்சாரக் கூறுதானே.?
சிறில்,
அடிப்படையான கலாச்சார விழுமியங்கள் பாரதத்தை ஒருமைப்படுத்துகின்றன. 'வேற்றுமையில் ஒற்றுமை', 'சர்வ தர்ம சமபாவனை' 'இறையியல் வேற்றுமையை மதித்தல்' ஆகியவை. இதுதான் குரு தேஜ்பகதூரை காஷ்மீரி மக்களின் மத சுதந்திரத்துக்காக தன் உயிரை பலிதானம் அளிக்கவைத்தது. இதுதான் ஐயா வைகுண்டரை அன்னிய மதமாற்ற முயற்சிகளுக்கும் சாதீய வெறிக்கும் எதிராக எழ வைத்தது. பாரதம் முழுமையுமான சாதீயமற்ற தரும சமுதாயத்தை மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னரே முன்வைக்க வைத்தது. கலாச்சார ஒருமைப்பாடு என்பது குருஜி கோல்வல்கர் மட்டுமல்ல மகாத்மா காந்தியும் பாபாசாகேப் அம்பேத்கரும் முன்வைத்த கருத்துதான். குருஜியும் அம்பேத்கரும் எங்கே மகாத்மாவிடமிருந்து வேறுபடுகின்றனர் என்றால் அந்த பொது கலாச்சார விழுமியங்களுக்கு எதிரான கருத்தியலைக் கொண்டவர்களுக்கு இந்த தேசத்தில் இடமில்லை என்பதில்தான். 1940களில் கூட ஒரே கலாச்சாரத்தையும் ஒரே தெய்வத்தையும் வணங்குபவர்களாக இருந்தும் கத்தோலிக்க சபையை சாராதவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக புரோட்டஸ்டண்ட்களும் ஆர்த்தாடாக்ஸ் சபையை சேர்ந்தவர்களும் கத்தோலிக்க க்ரோவேஷியாவின் உத்தாஸியால் படுகொலை செய்யப்பட்டதையும் அதை கத்தோலிக்க சபை ஆதரித்ததையும் 1930களின் குருஜியின் நிலைப்பாட்டுடன் ஒப்பிட்டால் கூட குருஜியின் நிலைப்பாட்டின் மானுடத்துவம் சிறந்ததாக இருப்பதை அறியமுடியும்சாதியம் எல்லா சமுதாயங்களிலும் இருப்பது. சாதீயத்துக்கு எதிராக எவ்வித மூலதன இலாபமும் இல்லாமல் ஆன்மநேயம் ஒன்றின் அடிப்படையிலேயே குரல் எழுப்பியது பாரத கலாச்சாரத்தின் தனித்தன்மை.
@@@@@@@@ செய்திக்கு நன்றி பனித்துளி.
நிஜமாகவே திகவில் பிராமணர்கள்
கிடையாதா??? @@@@@@@@
திகவின் அமைப்பு சட்டங்களில் ஒன்று பார்ப்பனர்களை உறுப்பினராக சேர்த்துக்கொள்ளக்கூடாது என்பது.
பார்ப்பன சாதியில் பிறந்து வேறு சாதி-மத பெண்களை திருமணம் செய்துகொண்டு அதனால் எழும் சொந்த பிரச்சினைகளின் காரணமாய் பார்ப்பனர்களை திட்டுபவர்களாய் இருந்தாலும், பிழைப்பு நடக்க வேண்டும் என்பதற்காகவும் பெயர் கிடைக்கவேண்டும் என்பதற்காகவும் பார்ப்பனர்களை திட்டும் ஞானியாக இருந்தாலும், அவர் பிறப்பால் பார்ப்பன சாதியைச் சேர்ந்தவராய் இருந்தால் திகவில் உறுப்பினராக முடியாது.
ஒரு வழி இருக்கிறது. அந்த பார்ப்பனர் பௌத்த மதத்திற்கு மாறிவிட்டால் சேர்த்துக்கொள்வார்கள்.
இதுவரை இப்படித்தான் நடந்திருக்கிறது.
என்னோட சாதி நல்லாருக்கணும். அதுக்காகவேண்டி இந்த ஒட்டு மொத்த சமுதாயத்தையே அழிப்பேன். முக்கியமா பாப்பானை அழிப்பேன். ஏன்னா அவன் இருக்கிற வரைக்கும் எல்லா சாதியும் ஒண்ணுதான்னு சொல்லுவான்.
பல புதிய விஷயங்களை தெரிந்து கொண்டேன். நன்றி அரவிந்தன் நீலகண்டன்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.
நான் கோல்வால்கர் பற்றி அதிகம் தெரியாதவன். ஆனால் இங்கே இருக்கும் இரண்டு கருத்துகளும் ஏற்கக் கூடியவை இல்லை. இந்த கருத்துகள் கோல்வால்கர் நாஜியா இல்லையா என்பதை நிறுவவில்லை என்பது இரண்டாம் பட்சம். இதைப் பற்றிய என் பதிவு இங்கே - http://koottanchoru.wordpress.com/2009/09/28/கோல்வால்கர்/
குறிப்பிட்ட ஒரு கலாச்சாரத்தை மட்டுமே பின்பற்றவேண்டும். மாற்று கொள்கைகளுக்கு இடமில்லை என்பது பாசிசம் இல்லாமல் வேறென்ன?
Post a Comment
<< Home