அகப்பயணம்

Thursday, July 12, 2007

ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்க...

"கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே" சொல்ல நன்றாகத்தான் இருக்கிறது. நல்ல அறிவுரைதான். ஆனால் அந்த நிலைமை நம் குழந்தைக்கு ஏற்பட்டால்? பிச்சை புக்கு கற்கை எனும் நிலையில் உங்கள் குழந்தையின் முகத்தை ஒருநிமிடம் மனக்கண் முன் நிறுத்திக்கொண்டு மேலே படியுங்கள்....

ராசாத்தியையும் ரதிஷாவையும் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பத்மநாபபுரம் அரசு தொடக்க பள்ளி மாணவிகள்தான் இவர்கள் இருவரும். ராசாத்தியின் வயது 10. ரதிஷாவின் வயது 9. தெரிந்திருக்க வேண்டிய அளவு அவர்கள் என்ன சாதனை செய்கிறார்கள் என்கிறீர்களா? அவர்கள் பள்ளி மாணவிகள். அதுதான் அவர்களின் சாதனை. இதென்ன சாதனை என்று கேட்கிறீர்களா? கடந்த வாரங்களில் பள்ளி விடுமுறை நாட்களில் பத்மநாபபுரம் அரண்மனை பக்கமாக நீங்கள் வந்திருந்தால் இரண்டு பெண் குழந்தைகள் உங்களிடம் பிச்சை கேட்டிருப்பார்கள். திங்கள் கிழமை பள்ளி சீருடையில் அவர்களை நீங்கள் அடையாளம் கண்டிருக்க முடியாது.

ஆம்...குறவர் இனத்தில் பிறந்து குடை சரி செய்தும் குளத்தில் மீன் பிடித்தும் தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்ற முயலும் தந்தைக்கு பிறந்த ஆறு மகள்களில் இருவர்தாம் ராணியும் ரதியும். கஷ்டப்பட்டு உழைத்தும் குடும்பத்தின் வயிற்றை நிரப்ப இயலாத தந்தையின் கண் முன்னரே தெருக்களில் கையேந்தி பிழைக்கும் கடுமையான நிலைக்கு குழந்தைகள் தள்ளப்பட்டன. என்றாலும் எப்படியாவது தனது குழந்தையை படிக்க வைத்திட வேண்டும் என துடித்தார் தந்தை. எனவேதான் இரு பெண் குழந்தைகளையாவது பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என வைராக்கியத்துடன் அனுப்பிவிட்டார். ஆனால் அனைத்து குழந்தைகளையும் அனுப்பிட இடம் தரவில்லை வறுமை. அந்த குழந்தைகளும் தாம் படிக்கும் பள்ளிக்கு அருகிலேயே விடுமுறை நாட்களில் கையேந்த வேண்டிய கொடுமை. இதனை செய்தியாக வெளியிட்டது தினமலர் நாளேடு 4.7.2007 அன்று. அதில் அந்த குழந்தைகளின் தந்தையார் பேட்டியளித்திருந்தார் இவ்வாறு:
"எங்கள் சமுதாயம் ஆதிபழங்குடி குறவர் இனம். இதில் படித்தவர்கள் இல்லை. எனக்கு சின்னவயதில் ஒருவர் சொல்லிக்கொடுத்ததை வைத்து ஓரளவு படிக்கத் தெரியும். அதனால்தான் நமது குழந்தைகளாவது படித்து வேறு தொழில் செய்யட்டும் என்று இரண்டு பிள்ளைகளை பத்மனாபபுரத்திலுள்ள அரசு பள்ளிக்கூடத்தில் படிக்கவைத்தேன். ஒரு குழந்தை சகாயமாதா கோவிலில் வேலைக்கு சேர்த்திருக்கிறேன். மற்ற குழந்தைகளையும் படிக்க வைக்க ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் வருமானம் இல்லாமல் எப்படி படிக்க வைப்பது என்றுதான் மற்ற பிள்ளைகள் பிச்சை எடுத்து இரண்டு பிள்ளைகளை படிக்க வைக்கிறேன். குடிசையில் இருப்பதால் வீட்டுக்கு நம்பர் தரவில்லை. இதனால் ரேஷன் கார்டு எடுக்க முடியவில்லை. பலமுறை எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகளைப் பார்த்தும் யாரும் உதவிக்கு வரவில்லை. வீட்டில் மண்ணெண்ணை விளக்கு வைத்துதான் பிள்ளைகள் படிக்கின்றனர். ரேஷன் கார்டு இருந்தால் ரேஷன் கடையில் மண்ணெண்ணை வாங்கலாம். இப்போது அதிக விலை கொடுத்து கடையில் இருந்துதான் வாங்க முடிகிறது."
அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை இது குறித்து கூறும் போது இரண்டு குழந்தைகளும் நன்றாக படிப்பதாகவும் தொண்டு நிறுவனங்கள் மனது வைத்தால் இந்த குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் ஒளி விளக்கு ஏற்றிவைக்க முடியும் எனவும் கூறினார்.

இந்த செய்தி வெளியானதை அடுத்து பல தொண்டு நிறுவனங்கள் இக்குழந்தைகளின் பெற்றோரை அணுகின. ஆனால் பெற்றோருக்கு தொண்டு நிறுவனங்களின் 'ஹோம்'களில் குழந்தைகளை விட மனதில்லை. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட சேவாபாரதி மாவட்ட தலைவர் அசோக்குமார் மாவட்ட அமைப்பாளர் முருகேசனுடன் இணைந்து பெற்றோரிடம் பேசி பெற்றோர்களின் பார்வையில் இப்பிரச்சனையை அணுகினர். பெற்றோரைப் பொறுத்தவரையில் அப்பள்ளியிலேயே பிள்ளைகள் படிப்பை தொடர உதவிசெய்வதுடன், பிள்ளைகளுக்கு தேவையான அனைத்து படிப்பு உதவிகளும் அவர்களுக்குரிய உணவு உடை உட்பட அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்வதே சரியான தீர்வாக அமைந்தது. இதனையடுத்து பெற்றோர்களும் குழந்தைகளை சேவாபாரதி தத்தெடுக்க சம்மதித்தனர். இதனையடுத்து சேவாபாரதி சுய உதவிக்குழுக்களின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர். தெய்வபிரகாஷ், மாநில பொது செயலாளர் மணியன் ஆர்.எஸ்.எஸ் மாவட்ட பொறுப்பாளர் ஜோதீந்திரன் குழந்தைகளின் தந்தை ராஜமணி ஆகியோர் கல்குளம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு சென்று குழந்தைகள் தத்தெடுக்கப்பட்ட விவரத்தைக் கூறினர்.

மற்றொரு குழந்தை யாக்கியையும் தத்தெடுத்து அப்பள்ளியிலேயே ஒன்றாம் வகுப்பில் சேர்த்தனர். அது போல நோயுற்றிருக்கும் மற்றொரு குழந்தையான கனிக்கான மருத்துவ உதவிகளையும் சேவாபாரதி ஏற்றெடுத்துள்ளது.

நம் குழந்தைகள் ஒவ்வொன்றையும் கல்வி கற்க வைப்பது நம் ஒவ்வொருவரின் சமுதாய கடமை. அதனை நிறைவேற்ற முன்வந்த சேவாபாரதி போன்ற வெளிநாட்டு பணம் இல்லாமல் சுய சமுதாயம் மட்டுமே சார்ந்த சேவை அமைப்புகளின் மானுட சேவைக்கும் தலை வணங்குவோம்.

Labels: , , , ,

Sunday, July 01, 2007

இந்துத்தவத்தின் சாதிய எதிர்ப்பு பாரம்பரியம்

அண்மையில் தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸில் வெளியான ஒரு செய்தி மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. ஜூலை 18 அன்று கன்னியாகுமரியிலிருந்து கிளம்பும் இரத யாத்திரை ஒன்றை காஞ்சி முனிவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் தொடங்கி வைக்கப்போகிறார். இந்திய அரசியலில் ரதயாத்திரைகள் மிகவும் பழக்கமானவைதாம் என்றாலும் இந்த இரத யாத்திரை ஒட்டுமொத்த இந்து சமுதாயத்திற்கும் முக்கியமானது. ஆரோக்கியமானது. ஏனெனில் இது விளிம்புநிலையில் வாழும் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கான இரதயாத்திரை. தலித் சமுதாய மக்களின் வழிபாட்டுரிமை, சாதி அடிப்படையிலான மயானங்களை மாற்றி அனைத்து சமுதாயத்தினருக்கும் பொதுவான மயானம் அமைப்பது, தலித்துகளின் நில உரிமை ஆகிய பன்னோக்கு அம்சங்களை கொண்ட இந்த இரதயாத்திரை அம்பேத்கர் மக்கள் கட்சியால் நடத்தப்படுகிறது. இந்த தகவலை அம்பேத்கர் மக்கள் கட்சி தலைவரும் முன்னாள் சென்னை மேயருமான டாக்டர் பாலசுந்தரம் தெரிவித்துள்ளார்.1
காஞ்சி முனிவர் இதனை தொடக்கி வைப்பதென்பது மிகவும் சிறப்பானதாகும். அது மட்டுமல்ல பாரத தர்ம மரபின் ஒரு தொடர்ச்சியான நீட்சியே ஆகும். பாரத ஆன்மிக பாரம்பரியத்தில் பிறப்படிப்படையில் மக்களை ஒதுக்கும் பொதுவான சமுதாய போக்குக்கு கடுமையான எதிர்ப்பு ஆன்மிக அருளாளர்களால் காலம் காலமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சத்தியகாம ஜபாலா எனும் முனிவர் தமது தந்தையை அறியமாட்டார் தாயை மட்டுமே அறிவார் என்ற போதிலும் அவர் ஆன்மஞானம் அருளப்பட்டு ஆன்மஞானியாக மிகப்பெரிய வேத முனிவராகத் திகழ்ந்தார்.
அரசனுக்கு வண்டி இழுப்பவரான ரைவகர் ஆன்ம ஞானம் அருளிய வரலாற்றினை சந்தோக்கிய உபநிடதம் ஆவணப்படுத்துகிறது. மகாபாரத உபகதை ஒன்று அந்தணன் ஒருவன் இறைச்சி கடைக்காரரான தர்மவியாதரிடம் ஆன்ம ஞானம் பெற்றதைக் கூறுகிறது. காசியில் கங்கை நதிக்கரையில் அருள் வாய்க்கப்பெற்றார் ஆதி சங்கர பகவத்பாதர். அந்த அத்வைத துறவிக்கு ஞான அருள் பாலித்த குரு சமுதாயம் ஒதுக்கி வைத்த சண்டாள ரூபம் தாங்கியவர். இராமனுஜர் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு ஞானத்தைக் கொண்டு சென்றதுடன் அவர்களை திருக்குலத்தார் என்றார். திருஞான சம்பந்தர் நீலகண்ட யாழ்ப்பாணரை வேள்வி நடக்கும் இடத்தில் படுக்க வைத்தார். இதே காலகட்டத்தில் உலகின் மற்ற பகுதிகளில் சாதியம் எவ்வாறு இருந்தது என்பதனை ஒப்பிட்டு நோக்கினால் நம் தேச மகான்களின் மாண்பு தெளிவாக புலப்படும்.உதாரணமாக கிறிஸ்தவ உலகின் சங்கரர் என தவறாக கருதப்படும் செயிண்ட் அகஸ்டைன் என்பவர் இன்றளவும் கிறிஸ்தவ இறையியல் மாணவர்களுக்கு உலகெங்கும் முக்கிய இறையியல் குரு ஆவார்.
இன்றைய கிறிஸ்தவ இறையியல் கோட்பாடுகள் இவரது கருத்தாக்கத்தின் அடிப்படையில் உருவானவையே ஆகும். ஆனால் இவர் பாணர்களை மனிதர்களாகவே கருதவில்லை. பாவ பிறவிகளாகக் கருதினார். இவர்கள் கிறிஸ்தவ உலகில் தீண்டத்தகாதவர்களாகவும், கிறிஸ்தவ கம்யூனியன் வாங்க தகுதியற்றவர்களாகவும் இருந்ததோடு மட்டுமல்ல குடிமக்களாகவே கூட சேர்க்கப்படவில்லை.
16 ஆம் நூற்றாண்டு வரை நெசவாளர்கள், நாவிதர்கள், துப்பரவு தொழிலாளர்கள், பாணர்கள் போன்ற தொழிலாளர் குலங்களுக்கு எதிராக அவர்களது உடைகள் வரை கட்டுப்படுத்தப்பட்டன. அவர்கள் விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் அணிவது தடை விதிக்கப்பட்டிருந்தது. தலையாரி சமுதாயத்தினருக்கு எதிரான இழிவுபடுத்தும் நடைமுறைகள் 16 ஆம் நூற்றாண்டுக்கு பின்னரும் நடைமுறையில் இருந்தது.2 ஆனால் 17 ஆம் நூற்றாண்டு காலனிய விரிவாதிக்கத்துக்கு பின்னர் அபரிமிதமான முதல் காலனி ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்பட்ட நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்குள் பாய்ந்தது.

மேலும் ஐரோப்பிய இனம் அமெரிக்க ஆஸ்திரேலிய கண்டங்களில் வியாதியென பரவியது. அடிமை வியாபாரமும் கண்டங்களின் நிலப்பரப்பு ஐரோப்பிய இனங்களுக்கு கிடைத்ததும் அவற்றின் சாதிய முறைகளை தேவையற்றதாக்கின. அல்லது ஐரோப்பிய தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்கு விலையாக ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க அமெரிக்க பூர்விக மக்கள் இனங்கள் அடியோடு அழிக்கப்பட்டன அல்லது மிகக்கொடுமையான சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டன. ஆனால் பாரத சமுதாயத்தில் மட்டுமே பொருளாதார இயக்கமாக அல்லாமல் ஆன்மநேய ஒருமைப்பாட்டு அடிப்படையில் மானுட சமத்துவத்துக்கான குரல்கள் எழுந்தவண்ணமே உள்ளன. இன்றைய தீண்டாமை மற்றும் சாதியக்கொடுமைகளினை ஆதாயமாக்கிக் கொண்டு இந்து தருமத்துக்கு எதிராகவும் இந்து சமுதாயத்துக்கு எதிராகவும் இயங்கும் போலி-தலித் அமைப்புகள் இந்த வரலாற்றினைத்தான் மறைத்து விடுகின்றன. சாதிக்கொடுமை ஏதோ இந்து தருமத்தினால் மட்டுமே ஏற்பட்டது என்று பொய் கூறி வெறுப்பியல் பிரச்சாரம் செய்து பகைமை வளர்க்கின்றனர். பாணர்களையும் மேலும் சில மக்கள் சமுதாயங்களையும் இவ்விதம் ஒதுக்கும் போக்கு ஏறக்குறைய எல்லா மானுட சமுதாயங்களிலும் இருந்திருக்கின்றன. ஆனால் இந்த மக்களின் ஆன்ம எழுச்சியையும் விடுதலைவேட்கையையும் குறித்த பதிவுகளின் சுவடுகள் கூட பாரத சமுதாயமன்றி பிற சமுதாயங்களில் காணமுடிவதில்லை.உதாரணமாக எந்த சமய இலக்கியத்திலும் சரி அல்லது நாடக இலக்கியங்களிலும் சரி இந்த தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் குரல் முழுக்க முழுக்க ஐரோப்பிய இலக்கியங்களில் அழித்தொழிக்கப்பட்டது. இருட்டடிப்பு செய்யப்பட்டது. ஆனால் பாரத சமுதாயத்தில் இறைவனே இந்த தாழ்த்தப்பட்ட மக்களின் குரலாக பக்தி இலக்கியங்களில் வெளிப்பட்டது பாரதத்தின் சிறப்பாகும். தொண்டரடிபொடியாழ்வார் திருமாலின் குரலாகவே மேல்சாதியினரைக் குறிப்பிட்டு கூறுகிறார்:

பழுதிலா ஒழுக்கலாற்றுப்
பல சதுப்பேதிமார்கள்!
இழிகுலத்தவர்களேலும்
எம் அடியார்களாகில்
தொழுமின் நீர்: கொடுமின்:கொள்மின்:3
மேலும் ஆண்டவன் அடியவர்களில் சாதி குறித்து பேசினால் பேசிய மறுகணமே அவர்களுக்கு தண்டனை கிடைக்கும். சாதியம் எனும் பாவத்தை பொறுத்தவரையில் அடுத்த ஜென்மம் வரை இந்துக்களின் இறைவன் பொறுக்க மாட்டான். வைணவப்பெரியார் ஸ்ரீ மத் பி.ஸ்ரீ ஆச்சாரியர் அவர்கள் விளக்குகிறார்கள்:
"வேத வேதாந்தங்களை எல்லாம் தெரிந்து பரம பக்தனாயிருப்பவனுக்கும் அடியார்களைப் பழிப்பது அபாயத்தையே விளைக்கும் என்கிறார் (தொண்டரடிபொடியாழ்வார்.) பழிப்பு என்றால் தூஷிப்பது கூட அல்ல; சாதியைக் குறிப்பிடுவதே பழிப்பதாகும் என்பர். இதற்கு தண்டனை மறுமையில் எமலோகத்திலோ வேறு எங்கேயோ என்பதில்லையாம். தூஷித்த அந்தக் கணத்திலேயே அந்த இடத்திலேயே கிடைத்துவிடுகிறதாம்."4

மேலும் பாணர்கள் மேற்கத்திய நாடுகளில் கொடுமைப்படுத்தப்பட்ட போது, பெரிய பெரிய கிறிஸ்தவ இறையியலாளர்கள் அத்தகைய கொடுமைகள் எல்லாம் நடக்கவே இல்லை - பாணர்கள் மனிதர்களே அல்ல என்கிற மாதிரி அவர்களைக் குறித்து அவர்களை அடக்கியதல்லாது வேறேது குரலும் கிறிஸ்தவத்தின் 1700 ஆண்டுகள் வரலாற்றில் பதியக்கூட இல்லாத மானுட சமத்துவமின்மை தாண்டவமாடிய உலகில் இந்து அருளாளர்கள் சமுதாயப் போக்கில் தாழ்த்தப்பட்ட பாணர்குல பெருமையை பதிந்துள்ளனர் என்பது நம் அனைவருக்கும் நாம் இன்றைய விளிம்பு நிலை சமுதாயத்திடம் எவ்வாறு ஒரு இந்து என்கிற முறையில் சேவை செய்திட வேண்டும் என்பதனை விளக்குகிறது. அந்தணரான சுந்தரமூர்த்தி நாயனார் "திரு நீலகண்டத்துப் பாணர்க்கு அடியேன்" எனக்கூறினால் திருமலை நம்பிகள் கூறுகிறார்:"பாட்டினால் கண்டு வாழும் பாணர்தாள் பரவினோமே"

அய்யா வைகுண்டர் எனும் அவதார புருஷரின் உதாரணம் மற்றொரு நல்ல எடுத்துக்காட்டாகும். கிறிஸ்தவ மிசிநரிகளாலும் வெள்ளையர் கைப்பாவையான திருவிதாங்கூர் மேல்சாதி வர்க்கத்தாலும் அடக்குமுறைக்கு ஆளான சான்றோர் சமுதாயத்தை சுரண்டல், அடக்குமுறை, மதமாற்றம் ஆகியவற்றிலிருந்து காப்பாற்றி உரிமைகளை வென்று மானுடத்தின் வெற்றிக்கு காரணமான தெய்வீக புருஷர் அய்யா வைகுண்டர். அவரது அகிலத்திரட்டு எனும் அருள் நூலை நோக்கினால் சனாதனமாக பாரதம் முழுமைக்கு அருள் வழங்கும் சத்தியம் அய்யா வைகுண்டரின் சமுதாய எழுச்சிக்கு உள்ளொளியாக வெளிப்பட்டதை அறியலாம். கிறிஸ்தவம் போன்ற மதங்களில் இறைதூதன் அல்லது மீட்பர் எனக்கருதப்படுபவரின் பிறப்பு ஒரு குறிப்பிட்ட மேல்சாதியிலேயே நிகழும். உதாரணமாக டேவிட் என்கிற அரசனின் குலத்தில்தான் ஏசு பிறப்பார் என முன்னறிவிக்கப்பட்டு அந்த குலத்தில்தான் ஏசு பிறந்ததாக கிறிஸ்தவர் கூறுகின்றனர். மோசடியான வம்சாவளி பட்டியலைக் கூட இதற்காக உருவாக்கி உரிமை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இறைவன் அவதரிக்க சாதி குலம் எதுவும் தடை இல்லை என்பது இந்து தத்துவம். இறைவன் ஆயனாகவும் அவதரிப்பார். சமுதாயத்தால் இகழப்பட்டு புறக்கணிக்கப்பட்ட விளிம்பு நிலை மனிதராகவும் வருவார். இது இந்து புராணங்களும் இதிகாசங்களும் கூறும் உண்மை ஆகும். எனவே அய்யா வைகுண்டர் அவதார புருஷர் என கேள்விபட்டவுடன், கிறிஸ்தவ ஆதிக்க கைப்பாவையாக இருந்த திருவிதாங்கூர் மன்னன் (கிறிஸ்தவ தாக்கத்தினால் இருக்கலாம்) அரச பரம்பரையை விட்டு கடவுள் என்ன தீண்டத்தகாத குலத்தில் பிறப்பாரா என கேட்க அதற்கு சாஸ்திரி ஒருவர் "எளிமையாம் குலங்கள் என்று எண்ணுற மனுவே அல்ல பளிரென ஆதிநாதன் பார்க்கவே மாட்டார் அய்யா"5 என்றார். மேலும் பூவண்டன் எனும் அமைச்சர் அரசனுக்கு இந்து ஞான மரபில் எந்த குலத்திலும் இறைவன் அவதரிப்பார் எனக் கூறும் போது அனைத்து விளிம்பு நிலை குலங்களையும் குறிப்பிட்டு அவை அனைத்திலும் இறைவன் பிறந்திருக்கிறார் எனக் கூறுகிறார்.

"பாணனாய் தோன்றி நிற்பார்; பறையனாய் தோன்றி நிற்பார்...குசவனின் குலத்தில் வந்தார் குறவனின் குலத்தில் வந்தார் மசவெனக்குலத்தில் வந்தார் மாடெனக் குலத்தில் வந்தார் விசுவெனக் குலத்தில் வந்தார் வேடனின் குலத்தில் வந்தார்"6
இவ்வாறு இந்து தத்துவம் வெறும் தத்துவமாக மட்டுமல்லாது நடைமுறை இயக்கமாகவும் பொருளாதார-அரசியல்-வரலாற்று சூழல்களால் தாழ்த்தப்பட்டு சுரண்டலுக்கு உள்ளான பலவீனமான மக்களை காப்பாற்றும் விடுதலை இயக்கமாகவும் செயல்பட்டு வந்துள்ளது.

இந்த பாரம்பரிய ஆன்மநேய கருத்தியலின் நீட்சியாகவே இந்துத்துவ அமைப்புகள் சாதிய எதிர்ப்பிலும் விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்திலும் பெரும் பங்காற்றி வருகின்றன. உதாரணமாக வீர சாவர்க்கர் சாதியத்தை எதிர்த்து கடுமையாக குரல் கொடுத்தவர் ஆவார். அண்ணல் அம்பேத்கரால் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உண்மையாகவே மனம் வருந்தி உழைத்த பெருந்தகை என புகழ்ப்பட்ட பலிதானி சுவாமி சிரத்தானந்தர் இந்துமகாசபையின் முக்கிய தலைவர் ஆவார். இந்து சமுதாய ஒற்றுமையை மிகவும் வலியுறுத்தி உழைத்த இந்த பெரும் தியாகி காங்கிரஸ் தலைமைப் பீடத்தால் உதாசீனப்படுத்தப் பட்டு பின்னர் இஸ்லாமியமதவெறியனால் சுடப்பட்டு மாண்டவர் ஆவார்.

வீர சாவர்க்கர் பல கட்டுரைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் குட்டகுட்ட குனியக் கூடாது என்றும் எதிர்த்து போராட வேண்டும் என்றும் எழுதினார். தாழ்த்தப்பட்டவர் ஆசிரியராக ஆவதற்கு மேல்சாதியினர் ரத்னாகிரியில் எதிர்ப்பு தெரிவித்த போது, வீர சாவர்க்கர் அரசுக்கு எழுதினார், "தாழ்த்தப்பட்டவரை ஆசிரியராக ஏற்க இயலாத அளவு மனிதத்தன்மை அற்றவர்களுக்கு கல்வி சாலையே தேவை இல்லை. தாழ்த்தப்பட்டவரை ஆசிரியராக நியமிக்க முடியாது என்றால் பள்ளியையே இழுத்து மூடிவிடுவதுதான் உசிதம்." வீர சாவர்க்கரின் ஆதரவின் விளைவாக தாழ்த்தப்பட்டவர் ஆசிரியராக தொடர்ந்து அந்த பள்ளியில் பணியாற்றுவது தடுக்கப்பட முடியாததாயிற்று. அண்ணல் அம்பேத்கரின் காலாராம் சத்தியாகிரகத்துக்கு ரத்னகிரிக்கு வெளியே செல்ல தடைசெய்யப்பட்ட இந்து மகாசபை தலைவர் வீர சாவர்க்கர் ஆதரவு தெரிவித்தார். தனக்கு ரத்னகிரியை விட்டு வெளியே செல்ல தடை இல்லாத பட்சத்தில் தானே அம்பேத்கரின் இந்த சத்தியாகிரகத்தில் முதல் ஆளாக கைது ஆகியிருப்பேன் என அவர் எழுதிய கடிதமும் கோவில் தலித்துகளுக்கு திறந்துவிடப்படவேண்டும் என அவர் எழுப்பிய கோரிக்கையும் அண்ணல் அம்பேத்கர் தன் 'ஜனதா' பத்திரிகையில் வெளியிட்டார்.7 என்ற போதிலும் மேல்சாதி மக்களின் சாதிய வெறி விட்டுக்கொடுக்கவில்லை. மாறாக வீர சாவர்க்கருக்கு எதிராக பிரிட்டிஷாருக்கு மேல்சாதியினரிடமிருந்து புகார்கள் போயின. அண்ணல் அம்பேத்கர் வீர சாவர்க்கருக்கு எழுதுகிற கடிதத்தில் பினவருமாறு குறிப்பிடுகிறார்:

"இந்து சமுதாயத்தை சீர்ப்படுத்த தீண்டாமை அழிந்தால் மட்டும் போதாது இன்றைய சாதிமுறையே முழுமையாக அழிய வேண்டும். இதனை உணர்ந்த வெகு சிலருள் நீங்களும் ஒருவர் என்பதனை அறிய எனக்கு ஆனந்தமாக இருக்கிறது."
அண்ணல் அம்பேத்கரின் 'ஜனதா' சிறப்பு பதிப்பில் தலித்துகளுக்காக சாவர்க்கர் செய்யும் சேவைகளை குறிப்பிட்டு அவரை 'புத்தருக்கு ஒப்பான பெரியவர்' என கட்டுரை வெளியிடப்பட்டது8.

ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது தலைவரான பரம பூஜனீய குருஜி சாதீயத்தை அழித்திட எடுத்துக்கொண்ட முயற்ச்சிகளை புராண-இதிகாசங்களில் கூறப்படும் பகீரதனின் பிரயத்தனத்துடனேதான் ஒப்பிட முடியும். மானுட மூடத்தனமாகிய உயர் சாதி வெறியால் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்டு சாதிய அரண்களால் அடைக்கப்பட்ட ஞான கங்கையை தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளூக்கு கொண்டு செல்ல களமிறங்கிய நவீன பகீரதன் பரம் பூஜனீய குருஜி. சாதிதான் அனைத்து கேடுகளுக்கு காரணம் என்று ஒரு புறம் பேசிக்கொண்டு மறுபுறம் சாதிய ஓட்டுவங்கிகளை உருவாக்கும் முற்போக்குகள் வாழும் இந்த போலிகளின் உலகில் ஸ்ரீ குருஜி சமுதாய நல்லிணக்கம் குறித்து உண்மையான அக்கறையும் தெளிவான பார்வையும் கொண்டிருந்தார்:

"ஒரு மரம் தனது காய்ந்து போன இலைகளையும் பட்டுப்போன கிளைகளையும் உதிர்த்து புதிய இலைகளையும் கிளைகளையும் வெளிக்கொணர்வதைப் போல சமுதாயம் இன்றிருக்கும் வர்ண வியவஸ்தாவை உதிர்த்துவிட்டு அதன் இடத்தில் சமுதாய நலனுக்கு உகந்த புதிய சமுதாய அமைப்பினை ஏற்படுத்திக் கொள்ளட்டும். இது சமுதாயத்தின் இயற்கையான வளர்ச்சி முறையேயாகும்....பழைய வீட்டினை இடித்து தள்ளிவிட்டு புதிய வீட்டினை அமைப்பது போல தேவையற்ற சமுதாய அமைப்பினை இப்போதே இத்தருணமே முடிவடைய செய்ய வேண்டும்." 9
வரலாற்று புகழ் மிக்க உடுப்பு விஸ்வ இந்து பரிஷத் மாநாட்டில் இந்து சமுதாயத்தின் அனைத்து பிரிவு துறவிகளையும் ஒரு மேடையில் ஒருங்கிணைத்து (இதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் பட்ட வேதனைகளும் அவமானங்களும் கொஞ்ச நஞ்சமல்ல.)
வரலாற்று சிறப்பு மிக்க விஸ்வ இந்து பரிஷத்தின் இக்கூட்டம் தீண்டாமையும் சாதியமும் இந்து சாஸ்திரங்களுக்கு விரோதமானவை என அறிவித்தது
தீண்டாமை சாஸ்திர அடிப்படை அற்றது. எந்த இந்துவும் எந்த விதத்திலும் தாழ்த்தப்படலாகாது எனும் தீர்மானத்தை அவர் கொணர்ந்தார். இன்றைக்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிகவும் அதிகமான பரவலில் கல்வி சேவையையும் மருத்துவ சேவையையும் கொண்டு செல்லும் பாரத அமைப்புகள் குருஜியின் தொலைநோக்கு பார்வையால் உதித்தவை என்றால் அது மிகையல்ல.
ஒரு எடுத்துக்காட்டாக ஓராசிரியர் பள்ளி இயக்கத்தினை எடுத்துக்கொள்வோம். 20,142 ஆசிரியர்கள், 5,000 சுயவிருப்ப பணியாளர்கள், 20 களப்பணி நிறுவனங்கள்,8 ஆதரவு இயக்கங்கள் என 604260 நலிவுற்ற சமுதாயக் குழந்தைகளை சென்றடையும் இந்த இயக்கம் ISO 9001-2000 சர்வதேச தரச்சான்று பெற்ற நிறுவனமாக விளங்குகிறது.10 சமுதாய நல்லிணக்கம் என்பது பேச்சோடு நின்றுவிடாமல் செயலிலும் மிளிர்வதைக் காட்டும் பல எடுத்துக்காட்டுகளில் இதுவும் ஒன்று.

இப்பாரம்பரியத்தை சங்கம் வளர்க்கும் சான்றோர் முன்னெடுத்து செல்கின்றனர். குருஜிக்கு பின்னர் தலைமையேற்ற பரமபூஜனீய தேவரஸ்ஜி 1974 மே 7 இல் புனேயில் ஆற்றிய சொற்பொழிவு தெள்ளத்தெளிவாக சங்கம் எப்படிசமுதாய சமத்துவ நலம் காணப்போராடிய இந்து மரபின் தொடர்ச்சி என்பதனைக் காட்டியது. இந்த மகத்தான உரையில் அவர் குறிப்பிட்டார்:
"பழமையானது என்பதால் மட்டுமே நன்மை பயக்கக்கூடியது என்றோ நிரந்தரமானது என்றோ நாம் எதையுமே கருதமுடியாது. கடந்த காலங்களில் இந்த பழமையான நெறிகளுக்கு ஏற்ப வாழ்ந்ததால் புதிய சிந்தனைகளுக்கு வழிவகுக்கக் கூடாது என்று நாம் எண்ணக்கூடாது. எனது தகப்பனாரும் பாட்டனாரும் வெட்டிய கிணறு உப்புகரிக்கிறது என்றாலும் அவர்கள் இதையே குடித்து வாழ்ந்தார்கள் எனவே நாமும் அதையே குடிப்போம் என்கிற குருட்டுத்தனம் யாருக்கும் எந்த நன்மையும் செய்யாது. இத்தகைய சிந்தனை தவறானது. ...களைய வேண்டியவற்றை களைந்து மேன்மையானவற்றை பகுத்தறிந்து காக்க வேண்டும்....தீண்டாமை பாவம் இல்லை என்றால் உலகில் எதுவுமே பாவம் இல்லை. சமுதாய சமத்துவத்தைக் கொண்டு வர நாம் முயற்சிக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் எவ்விதத்திலாவது சமுதாய ஏற்றத்தாழ்வுகளைக் களைந்திட முயற்சிக்க வேண்டும்."
11

அண்மையில் எந்த அர்ச்சகர் அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான ஆலயப்பிரவேசத்தை மறுத்தாரோ அதே அர்ச்சகரின் பேரன் ஒட்டுமொத்த இந்து சமுதாயத்திடம் தம் முன்னோர் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார்.அவர் அப்படி மன்னிப்பு கேட்ட மேடை ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி மேடை ஆகும்.12

தலித் எழுத்தாளர் ஸ்ரீ நாம்தேவதாசல் ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் சுதர்சன்ஜியுடன்
அது போல அண்மையில் தலித் பாந்தர் அமைப்பு தலைவரும் பிரசித்தி பெற்ற தலித் எழுத்தாளருமான நாம் தேவ தாசல் சமுதாய நல்லிணக்கம் என்பது ஆர்.எஸ்.எஸ்ஸால் முழுமனதுடன் சாத்தியம் என்பதனை உணர்ந்து சங்க மேடையில் பேசினார். தமது பேச்சில் அவர் குறிப்பிட்டார்:
"இடதுசாரி நண்பர்கள் என்னை வசை பாடலாம். நான் அதற்காக வருந்தவில்லை. ஏனெனில் எனக்கு ஒரே குறிக்கோள்தான். அது தேசிய ஒருமைப்பாடும் சமுதாய நல்லிணக்கமும்....வெறும் பேச்சுக்களும் புத்தகங்களும் சமுதாய நல்லிணக்கத்தையும் சமூக நீதியையும் கொண்டுவந்திட முடியாது. அதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பான சமரஸா மஞ்ச் போன்றவற்றின் செயல்பாடுகள் மேலும் மேலும் விரிவடைவதன் மூலமே அது நடந்திடும்."13

அது போலவே நம் பொதுவான நினைப்புக்கு அப்பால் இன்றைய சமுதாய விளிம்பு நிலை மக்களில் பலரை இந்த விளிம்பு நிலைக்கு கொண்டு சென்றதில் காலனிய ஆதிக்க சக்திகளுக்கு ஒரு பெரிய பங்கு உள்ளது. இதுவும் இந்து விரோத கருத்தியல் கொண்டோ ரால் பெரிய அளவில் மறைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக குற்றப்பரம்பரை என முத்திரைக் குத்தப்பட்டு இன்றளவும் காவல்துறையினரால் கொடுமைப் படுத்தப்பட்டு சமுதாயத்தின் மேல்தட்டில் இருப்போரால் சுரண்டப்பட்டும், அவமானப்படுத்தப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் வரும் சமுதாயத்தினர் ஆவர். இவர்களில் பல வனவாசி மற்றும் தாழ்த்தப்பட்ட தலித் சமுதாய மக்கள் அடங்குவர். உதாரணமாக சிங்கப்பூர் பல்கலைக்கழக சமூகவியலாளர் ஆண்ட்ரூ மேஜர் என்பவர் பிரிட்டிஷ் ஆட்சியில் பஞ்சாபியர் மட்டும் 1,50,000 பேர் குற்றப்பரம்பரையினராக அறிவிக்கப்பட்டதையும் இத்தகைய தரவுகள் வெளியே அறியப்படாமல் இருந்ததையும் குறிப்பிடுகிறார்.14

1871 இல் பிரிட்டிஷ் அரசால் அமுலாக்கப்பட்ட இந்த கொடுமையான இனவாத சட்டம் முழுக்க முழுக்க கிறிஸ்தவ இறையியல் மற்றும் யூஜெனிக்ஸ் எனும் போலி-அறிவியல் ஆகியவற்றின் தாக்கம் கொண்டது. தாய் தந்தையர் செய்த பாவம் குழந்தைகளுக்கு வரும் எனும் நம்பிக்கை உலகம் முழுததும் பொதுவாக இருந்தாலும் இந்திய மரபில் அது மையமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதில்லை. எனவேதான் இரணியனுக்கு பிரகலாதன் பிறக்க முடியும் எனும் கருத்தாக்கம் இங்கு வேரூன்றியது. யாராவது ஒருவர் செய்த தவறுக்கு அவரது பரம்பரை பரம்பரையாக அது பாவசுமையாக வரும் எனும் நம்பிக்கை பாரதத்தில் வேரூன்றிடவில்லை. மாறாக, ஆதாம் செய்த பாவம் ஆதி பாவமாக மனிதகுலம் சுமக்கும் எனவும், கிறிஸ்துவினை கொன்ற இரத்தப்பழியை யூதர்கள் இன்னும் சுமப்பதாகவும் கொண்ட நம்பிக்கைகள் கிறிஸ்தவ மேற்கின் முக்கிய ஆதார நம்பிக்கைகளாக திகழ்ந்தன. இதன் விளைவாகவே இந்தியாவிலும் குற்ற பரம்பரையினர் என வனவாசி சமுதாயம் மற்றும் நாடோடி சமுதாயங்களை சார்ந்தவர்களை முத்திரை குத்தினர். பாரதம் முழுவதும் 160க்கும் அதிகமான சமூகத்தினர் குற்றப்பரம்பரையினர் ஆக்கப்பட்டனர். அவர்கள் காலனிய அரசின் காவல்துறையாலும் காலனிய அரசுக்குட்பட்ட சமுதாயத்தினாலும் கீழாகப் பார்க்கப்பட்டனர். பலவித சுரண்டலுக்கும் ஆளாயினர்.

அத்தகைய ஒரு சமுதாயமே பர்த்திகள். ரமேஷ் சதுபலே எனும் சங்க ஸ்வயம் சேவகர் தமது நிலத்தில் 18 ஏக்கர்களை இந்த சமுதாயத்தினருக்கான தங்கும் விடுதி கட்ட அளித்தார். பர்த்தி குழந்தைகளுக்கான தங்கும் கல்வி விடுதி அமைந்திட நாடெங்கும் உள்ள ஸ்வயம் சேவகர்கள் நிதி உதவி அளித்தனர். சமுதாய சமரஸா மஞ்ச் தலைவர் திரு.ரமேஷ் பதங்கே எப்படி ஒரு 82 வயது ஸ்வயம் சேவக்கான திரு. தத்தோபந்த் பெத்தே என்பவர் 10,000 ரூபாய் சேகரித்துக் கொடுத்ததை நினைவு கூர்ந்தார். நாடெங்கும் உள்ள ஸ்வயம் சேவகர்கள் பர்த்தி குழந்தைகளின் கல்விக்காக வீடு வீடாக அலைந்து பணம் சேகரித்து கொடுத்தனர்.15

இதுதான் இந்து சமுதாய சிந்தனை மற்றும் செயல்பாடு எனும் பிரவாகம். தமிழகத்தில் இப்பிரவாகத்தின் மைல்கல்லாகவே தலித் சமுதாய கோரிக்கைகளுக்கான ரதயாத்திரையை ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி தொடங்கி வைப்பதையும் காண வேண்டும். ரைவகர் முதல் ரவிதாஸர் வரை ஆதி சங்கரர் முதல் அண்ணல் அம்பேத்கர் வரை வாழையடி வாழையென வந்த ஆன்மீக சக்தியுடன் சமுக நீதி காத்த புரவலர்களில் காஞ்சி முனிவரின் பெயரும் நிச்சயம் இடம் பெறும். காஞ்சி முனிவர் தொடங்கி வைக்கும் இந்த ரதயாத்திரையை ஒட்டு மொத்த இந்து சமுதாயமும் ஒவ்வொரு ஊரிலும் மேள தாளத்துடன் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்க வேண்டும். இந்த சமூக நீதிக்கான ரதயாத்திரையின் கோரிக்கைகள் நிறைவேற ஒட்டுமொத்த இந்து சமுதாயமும் முயற்சி செய்யவேண்டும்.



  • 1. தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் ஜூன் 19 2007, 'Kanchi Seer to flag off Rath Yatra'
  • 2. Kathy Stuart, Defiled Trades and outcastes - honour and ritual pollution in early modern Germany pp.24-25 (Cambridge University Press, 1999)
  • 3.ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை -42 ஆம் பாடல்
  • 4.பி.ஸ்ரீ.ஆச்சாரியர், 'துயில் எழுப்பிய தொண்டர்' பக்.103-104 கலைமகள் காரியாலயம். 1957
  • 5.அகிலத்திரட்டு அம்மானை: 2831-32
  • 6.அகிலத்திரட்டு அம்மானை: 2852-53, 2855-57
  • 7.ஜனதா, 9 மார்ச் 1931
  • 8.ஜனதா, ஏப்ரல் 1933 சிறப்பு பதிப்பு பக்.2
  • 9.http://www.organiser.org/dynamic/modules.php?name=Content&pa=showpage&pid=159&page=17
  • 10.http://ekalindia.org/ekal_new/index.php
  • 11. 'சமுதாய சமத்துவம் இந்து ஒருங்கிணைப்பு' -ப.பூ.தேவரஸ் 1974 மே 7 ஆற்றிய உரை
  • 12.http://www.hindu.com/2005/08/15/stories/2005081501430900.htm
  • 13.http://timesofindia.indiatimes.com/articleshow/1945000.cms
  • 14.ஆண்ட்ரு மேஜர், "State and Criminal Tribes in Colonial Punjab: Surveillance, Control and Reclamation of the 'Dangerous Classes'"(Modern Asian Studies (1999), 33: 657-688 Cambridge University Press) http://journals.cambridge.org/action/displayAbstract?fromPage=online&aid=21611
  • 15. ரமேஷ் பதங்கே, 'ஆர்.எஸ்.எஸ்ஸும் மனுவாதமும்', 1998

Labels: , , , , , , , , ,

Wednesday, May 30, 2007

இந்துத்துவமும் கலை சுதந்திரமும்

ஏசு கைகளையும் கால்களையும் விரித்தபடி சிலுவையில். சிலுவையிலிருந்து அவரது ஆண்குறி பெரிதாக தெரிய அதிலிருந்து ஏதோ கீழே கொட்டுகிறது. பொதுவாக கிறிஸ்தவ சடங்குக்கோப்பை இருக்கவேண்டிய இடத்தில் ஒரு சிறுநீர் கழிப்பிடம் இருக்கிறது. ஒரு ஆடையற்ற பெண்ணின் பிறப்புறுப்பிலிருந்து ஒரு குழந்தை வெளிவருகிறது அதனை அந்த பெண் திரிசூலத்தால் கொல்ல முயல்கிறாள்.கீழே துர்கா மாதா என எழுதப்பட்டுள்ளது. அடுத்ததாக ஆண்குறிகள் சூழ விஷ்ணு நிற்கிறார் தனது கைகளால் தனது ஆண்குறியை சுமந்தபடியே. மீண்டும் வரை சீலை முழுக்க ஆண்குறிகள். கீழே சிவலிங்கம். அதில் ஆண்குறிகளை உடைத்தபடி ஒரு உருவம் எழுகிறது. அது ஒரு இளைஞன். அவன்தான் சந்திரமோகன். மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு நுண்கலை மாணவன். இந்த மூன்று ஓவியங்களும்தான் பிரச்சனையை உருவாக்கின. இந்த ஓவியங்களுக்கான எதிர்ப்பினை முதலில் தொடங்கி வைத்தவர் கிறிஸ்தவ பாதிரியாரான ரெவரண்ட் இம்மானுவேல் காண்ட். பின்னர் அவருடன் நீரஜ் ஜெயின் எனும் பாஜக தலைவர் கலந்து கொண்டார். மே -9 ஆம் தேதி ஊர்வலம் நடந்தது. ஜெயின் சென்று அங்கிருந்த ஆசிரியரும் டீனுமான விஷ்ணு பணிக்கரிடம் இந்த ஓவியங்களை எடுத்துவிடுமாறு கேட்டுக்கொண்டார். பணிக்கர் மறுத்தார். நுண்-கலை ஓவியத்துறை 'தனது தனிப்படுக்கை அறை போன்றது' என்று கூறினார். விவாதம் வலுத்தது. சந்திரமோகன் மீது ஒருவர் கையும் படவில்லை அல்லது அவருடைய மூன்று சர்ச்சைக்குள்ளான ஓவியங்களும் எவ்விதத்திலும் சிறிய அளவு கூட சேதப்படுத்தப்படவில்லை. டீன் மறுத்துவிட்ட இந்நிலையில் ஜெயின் காவல்துறையை அணுகினார்.எஃப்.ஐ.ஆர் போடப்பட்டு சந்திரமோகன் கைது செய்யப்பட்டார். ஒரு வாரம் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சிவாஜி பணிக்கர் மத்தியகால இந்தியாவினைச் சார்ந்த ஆடையற்ற ஓவியங்கள், தாந்திரீக மரபு சார்ந்த ஓவியங்கள் ஆகியவற்றைக் கொண்டு ஒரு ஓவியக் கண்காட்சியை நடத்தினார். இதனை நிறுத்தும்படி துணை வேந்தர் கேட்டுக்கொண்டதை அவர் புறக்கணித்தார். இதை தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 'கலைகள் மீதான பாசிச தாக்குதலாக' இது ஊடகங்களில் உரு பெற்றது. நிற்க...இந்து மரபில் கலைசுதந்திரம் என்பது நிச்சயமாக முக்கிய இடத்தை வகிக்கிறது. கடவுளரை கேலி செய்வதில் ஆரம்பித்து அவர்களை எவ்விதத்திலும் சித்தரிக்கலாம் என்பது பெரும் சுதந்திரமாக இந்து மரபில் இடம் பெறுகிறது. 'செந்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைக்கும்' கடவுளர் இந்து மரபின் பெரும் சிறப்பு. இம்மரபு சுதந்திர பெருவெளியின் எல்லைகள் வதோதராவில் சோதிக்கப்பட்டுள்ளன. இந்த சோதனையில் இந்து சமுதாயம் எவ்வளவு தேறியுள்ளது என்பதனை காண சிறிதே பின்னோக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மத்திய அரசு பெல்லோஷிப்புக்காக குமரிமாவட்ட கோவில்களின் தூண் சிற்பங்களை ஆவணப்படுத்திக் கொண்டிருந்தேன். திருவிதாங்கோடு விளக்கு பாவையர் எனும் தூண் சிற்பங்கள் இதில் பிரசித்தி பெற்றவை. (உள்ளூர் அளவில்தான் ஆனால் அவை பெற வேண்டிய முக்கியத்துவம் பெறவில்லை.)
விளக்கு பாவை சிற்பங்களில் ஒன்று : திருவிதாங்கோடு சிவன் கோவில்
அதில் சில சிற்பங்களில் ஒரு சன்னியாசி அல்லது மிகவும் பக்திமானாக காட்டப்படக்கூடிய ஒருவர் ஒரு பெண்ணின் அழகில் மயங்கி ஆடை அவிழ ஆண்குறி விரைப்பேற அப்பெண்ணின் முன் மானம் மரியாதை அனைத்தும் இழந்த நிலையில் நிற்பதையும் ஆனால் அந்த பெண் அவரை அசட்டை செய்த படி விளக்கினை ஏந்தியபடி நிற்பதையும் காணலாம். அந்த ஒரு சிற்பத்தை மட்டும் பார்த்தால் அல்லது காட்டியிருந்தால் தோன்றும் உணர்ச்சி அந்த பிரகாரத்தில் உள்ள அனைத்து விளக்கு பாவைகளையும் ஒரு சேர காணும் போது மாறுவதை உணரலாம்.
முழுமைப் பார்வையில் விளக்குப் பாவைகள் : அனைவரும் காட்டப்படவில்லை.
பெண்மையின் அனைத்து நிலைகளிலும் கன்னியும் கர்ப்பிணியும் குழந்தைக்கு பாலூட்டுபவளும் முலை தளர்ந்த நிலை பெண்ணும் என பெண்மையின் அனைத்து தன்மையையும் அவை வெளிப்படுத்துவதை உணரும் போது இந்த சிலைகள் செதுக்கப்பட்டதன் நோக்கத்தை, அந்த சிற்பியின் சஹிருதயனாக உணரலாம். திருவட்டாரில் வெளிப்பிரகார தூண்களில் தன் குறியை தன் வாயில் வைத்திருக்கும் ஒரு பேதையன் சிற்பத்தை காணலாம். இவை தனியாக இருந்தால் நம் ஒழுக்க உணர்ச்சிகளுக்கு கூட அருவெறுப்பாக இருக்கக் கூடும். நிச்சயமாக இந்த சிற்பங்கள் உருவான காலகட்டத்திலிருந்து இன்று வரை ஒழுக்கவிதிகள் மாறியுள்ளன. ஆனாலும் கூட கோவில் சிற்பங்களின் முழுமையான ஒட்டுமொத்த உருவாக்கத்தில் இந்த சிற்பங்கள் ஒருவித வழுவமைதி பெற்று அமைகின்றன. காமம், ஏன் பிறழ்நிலை காமமாக நாம் இன்றைய ஒழுக்க விதிகளால் கருதும் காமமும் கூட சிற்பங்களில் தங்கு தடையின்றி காட்டப்படுகின்றன. அத்துடன் யோகியரும், உழவர்களும், குறவர்களும் அவதாரங்களும், கர்ப்பிணி பெண்டிரும், நாக தேவதைகளும், யட்சணிகளும், காந்தர்வர்களும், அரசரும், வீரகாதைகளும் என. ஒரு கலங்கிய மனதிலிருந்து எழும் விகாரமாக தூண் சிற்பங்களில் காணப்படும் காமத்தைக் காட்டும் சிலைகள் அமைந்திடவில்லை. மாறாக காமத்தை முழுதாக அறிந்து அதனை அச்சமின்றி வாழ்வின் ஒரு பாகமாக எதிர்நோக்கும் வாழ்வியல் பார்வை அங்கு தெரிகிறது. தந்திராவும் தன் ஒவ்வொரு குறியீட்டையும் தன் ஒவ்வொரு தேவ தேவதை வடிவத்தையும் பல கடுமையான வடித்தெடுத்தல்களுக்கு அப்புறமே தேர்ந்தெடுக்கப்பட்ட சாதகர்களின் பொது அரங்கில் வைத்தது. இத்தகைய குறியீட்டு வடிவங்களுடன் சந்திரமோகனின் படைப்புகளை ஒப்பிடுவது, கால்குலஸ் சமன்பாடுகளும் பொது கழிப்பறை கிறுக்கல்களும் ஒன்று என்பது போன்ற அபத்தம்தான்.
காங்க்ரா மரபு ஓவியத்தில் காளிகா மகாதேவி: 18 ஆம் நூற்றாண்டுஅவள் நீல நிறம் பிரபஞ்சமளாவிய முடிவிலித்தன்மையையும் அவள் ஆடையற்ற நிலை சிருஷ்டிநிலையையும் காட்டுகிறது-ஓஷோ
அறிவுசீவிகள் சந்திரமோகனை ஆதரிக்க வைக்கும் வாதங்களான தந்திர மார்க்க தேவியர் பிரதிமைகளில் சின்னமஸ்த காளி உட்பட பாலியல் வக்கிரமோ அல்லது obsessionஓ இல்லை என்பதும் அங்கு பாலியல் ஒரு உந்து பலகை என்பதாக ஒரு அடிப்படை ஆதாரம் என்பதாக அன்றி அதில் சிக்கித்தவிக்கும் பரிதாபமோ இல்லை. அதற்கு நேர் மாறானதாக அமைவது சந்திரமோகனின் ஓவியங்கள்.இந்து கோவில்களின் இந்த தன்மையை காஜுரேகாவை முன்வைத்து ஓஷோ கூறுகிறார்:
"இக்கோவிலை உருவாக்கியவர்கள் மிகவும் நுண்ணுணர்வு கொண்ட மக்களாவர். அதன் பிரகாரத்தினை சுற்றி பாலியல் இருக்கிறது. அதன் மையத்திலோ அமைதி இருக்கிறது. சாதகர்கள் பாலியல் உணர்வுகளின் மீது, வெளிப்பிரகாரத்தில் காட்டப்பட்ட புணர்ச்சி நிலைகளை தியானிக்க வைக்கப்பட்டனர். ஒருவர் அதனை முழுமையாக அறிந்து கொண்ட பின்னர் மனம் பாலியலில் (மூழ்கி எழுந்து) வெளிவந்த பின்னர் அவர்கள் கோவிலுக்குள் நுழைந்தனர்."

அறவாழி அந்தணன் தாள் சேர்ந்து பிற ஆழி நீந்தும் யோகி: திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் கோவில் தூண் சிற்பம்
அடுத்ததாக இச்சிலைகளில் நான் கண்டது ஒருவித தன்னம்பிக்கை. தன் பாரம்பரிய விழுமியங்களையே எவ்வித கூச்சமும் தயக்கமும் இன்றி கேள்விக்குள்ளாக்கும் கேலிக்குள்ளாக்கும் தன்னம்பிக்கை. ஒவ்வொரு கோவில் தூண் சிற்பங்களிலும் வணக்கத்துக்குரிய துறவிகளை காட்டியிருக்கும் அதே நேரத்தில் பெண்கள் முன் மண்டியிடும் துறவிகளையும் காட்டியுள்ளார்கள். எத்தகைய கலாச்சாரம் தன் வணக்கத்துக்குரிய ஒருவரது பலவீனங்களையும் தான் வணங்கும் கோவில் சிற்பங்கலிலேயே வடித்திருக்கும்?
பெண்ணின் முன் மண்டியிடும் துறவி
அதே கோவில் தூண் சிற்பங்களில் துறவி/சாதகர்/யோகியின் பல நிலைகளும் காட்டப்படுகின்றன.
அத்தகைய கலாச்சாரத்தின் உள்ளார்ந்த தன்னம்பிக்கை எத்தகையதாக இருந்திருக்கும்?

பெண்ணின் முன் மண்டியிடும் துறவியை கோவில் சுவர்களில் கன்னியாகுமரி மாவட்ட சிற்பி வடித்த ஏறத்தாழ இதே காலகட்டத்தில்தான் வத்திகானில் போப் பயஸ் IX தனது உத்தரவின் அடிப்படையில் மைக்கலேஞ்சலோ வடிவமைத்த ஆண் சிலைகள் ஒவ்வொன்றிலும் குறிகளை உடைத்து அங்கு ப்ளாஸ்டர் இலைகளால் மறைத்திட - வத்திகானின் ஒழுக்கத்தை காப்பாற்றவும் தகாத பாலியல் விழைவுகளை தடுத்திடவும்- உத்தரவிட்டார் என்பதனை நினைவில் கொள்ளுங்கள். கன்னியாகுமரி மாவட்ட சிற்பிகளின், அந்த ஆக்கங்களை தம் கோவில்களில் ஏற்ற மக்களின் தன்னம்பிக்கையும் புரியும். ஆனால் இந்த தன்னம்பிக்கையின், வாழ்வியல் புரிதலின், வெளிப்பாடுகளே இக்கலாச்சாரத்தை தாக்கும் ஆயுதங்களாயின என்பதிலிருந்து ஆரம்பிக்கிறது வதோதராவில் நடந்த சகிப்புத்தன்மை சோதனையில் இந்து சமுதாயம் தேர்ச்சி பெற்றதா என்பதற்கான பதில்.

கோவில் சிலைகளை கொச்சைப்படுத்தும் திராவிடர் கழக பிரச்சாரம்
திராவிடர் கழக ஊர்வலங்களில் 'கோவில் ஆபாசசிலைகள் இருக்கலாம் ஆபாச பட போஸ்டர்களுக்கு தடையா' எனும் கோஷம் எழுப்பப்பட்டது நினைவிருக்கலாம். பெரியார் திராவிட கழக குண்டர்களால் திகம்பர ஜைன துறவிகள் தாக்கப்பட துணிந்த போது அவர்களது நிர்வாணம் ஒரு வக்கிரம் என ஊடகங்களில் பெரியார் திராவிட கழக ஆதரவு அறிவுசீவிகள் பேசியதும் எழுதியதும் நினைவுக்கு வரலாம்.
இவ்வித தாக்குதல்கள் ஒரு புறமிருக்க மறுபுறம் தடைகள் ஒரு அதிகார பலத்தின் வெளிப்பாடாக அமைந்ததையும் இங்கு பார்க்க வேண்டும். 2001 இல் அலெக்சாண்டர் சுகொரோவின் 'தாரஸ்' (Taurus) எனும் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்படவிருந்த போது அந்த திரைப்படத்துக்கு எதிராக இடதுசாரி கலாச்சார அமைப்புகள் கொடிபிடித்தன. காரணம் - அரசியல் சந்தையில் கம்யூனிஸ்ட் கட்சிகளால் விற்கப்படும் லெனினின் பிம்பத்தினை உடைப்பதாக அந்த படம் அமைந்ததுதான் (பிபிஸி. 16-நவம்பர் 2001). மேற்குவங்காள மக்கள் (சர்வதேச படங்களை காண்பது எல்லாதரப்பு பொதுமக்களும் அல்ல என்பதும் பெரும்பாலும் ஆட்டுத்தாடியும் ஜோல்னாபையும் தொங்க ஸ்காட்ச் அருந்தும் பாட்டாளி வர்க்கத்தினை நடாத்தி செல்லும் அறிவுசீவி கும்பல் என்பதையும் நினைவில் கொள்க. இந்த மேல் மட்ட கும்பல் காண வேண்டியதையே பீமான்போஸும் ஜோதிபாஸுவும் கம்யூனிஸ்ட் கட்சியின் 'இளைஞர்'படையும் தீர்மானிப்பார்கள் என்பதையும் அதனை அடிபணிந்து நம் அறிவுசீவிக்கும்பலும் ஊடகங்களும் ஏற்பதையும் காண்க. இங்கு வெளிப்படுவது 'என் பலம் நீ காண்பதை தீர்மானிக்கும்' எனும் அதிகார வெளிப்பாடு. டாவின்ஸி கோட் திரைப்படம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தடைசெய்யப்பட்டது மட்டுமல்ல அந்த நாவலும் தடைசெய்யப்பட்டது.
இத்தனைக்கும் அந்த நாவலில் ஏசுவினையும் மகதலேனையும் இணைத்து 'explicit' ஆகவோ அல்லது 'கிளுகிளுப்பாகவோ' எவ்வித சித்தரிப்பும் கிடையாது என்பதுடன் ஏசுவினை வெகுவாக புகழும் வாசகங்களும் அதில் இருந்தன.ஆனாலும் இத்திரைப்படம் மாநிலம் மாநிலமாக அரசுகளால் தடை செய்யப்பட்டது. அப்படி தடை செய்வதில் அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு செயல்பட்டன. மீண்டும் பலத்தின் வெளிப்பாடு. ஏசுவின் புதையறை கண்டுபிடிக்கப்பட்டதாக டிஸ்கவரி சானல் ஆவணப்படம் இந்தியாவில் மட்டும் காட்டுவதை கத்தோலிக்க சபை தடுத்து நிறுத்திக்காட்டியது-சுண்டு விரலை அசைக்காமல். டிஸ்கவரி சானல் கத்தோலிக்க சபைக்கு அடிபணிந்தது. முகமது நபி கேலி சித்திர விசயத்தில் நமது இடதுசாரிகள் எத்தகைய நிலைபாடு மேற்கொண்டார்கள் என்பதும் அரசாங்கம் டானிஷ் பிரதமரின் வருகையையே ரத்து செய்தது என்பதையும், உத்திரபிரதேச அரசின் அமைச்சர் டேனிஷ் ஓவியரின் தலைக்கு பல இலட்சம் ரூபாய்களை வெளிப்படையாக அறிவித்ததும் அதற்கு இடதுசாரிகளும் மௌனம் சாதித்ததையும் நாடு பார்த்தது. தேசிய நாளேடு எனும் தகுதியிலிருந்து என்.ராமின் குடும்ப பத்திரிகை எனும் தரத்திற்கு உயர்ந்திருக்கும் 'தி ஹிண்டு' ஏப்ரல் 9 2006 அன்று சிபிஐ(எம்) பத்திரிகையான "People's Democracy" வெளியிட்ட கட்டுரையை மீள்-பிரசுரம் செய்தது: "ஈரான் விவகாரத்துக்கு பின்னர் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பெரும் எதிர்ப்பாக"வும் "நியாயமான ஆத்திரத்தின் வெளிப்பாடாகவும்" (genuine anger) டானிஷ் கேலிசித்திர வெளியீட்டை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) கூறியதை 'தி ஹிண்டு' செய்தியாக மீள் பிரசுரம் செய்தது. சரி சர்வதேச அளவில் சகிப்புத்தன்மையின் எல்லைக்கோடுகள் 'பண்பாடு நிறைந்த' மேற்குலகில் எவ்வாறு உள்ளது என்பதனை காணலாம்: போப் ஜான்பால்-II சிலுவையில் ஏசு அறையப்பட்ட உருவத்தை பிடித்தபடி சரிந்து கிடக்கிறார். அவர் மீது ஒரு விண்கல் அழுத்தியபடி உள்ளது.
அவர் முகத்தில் ஒரு வேதனையும் கம்பீரமும் கலந்த ஜெபம் செய்யும் உணர்ச்சி. இந்த சிலையினை போப்பின் 'விண்ணக சுமை' எனும் தலைப்பில் ஒரு கண்காட்சியில் வைக்கப்பட்டது. போப் தாங்கும் சுமைகளை -அந்த சுமையினை தனிமையில் சகிக்கும் வேதனையை கடமையை காட்டுவதாக அமைக்கப்பட்ட இந்த சிலைக்கு போலந்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. வார்ஸாவின் பாராளுமன்ற உறுப்பினர் இருவர் உள்ளே நுழைந்தனர். கண்ணாடி தடுப்புகளை அடித்து நொறுக்கினர். சிலை மீது இருந்த விண்கல்லை மாற்றினர். சிலையினை நிமிர்ந்து நிறுத்த முற்பட்டனர். இறுதியாக இந்த கண்காட்சி மூடப்பட்டது. இந்த பாராளுமன்ற உறுப்பினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. ('In the name of Father', The Week 7-1-2001) இத்தகைய எதிர்வினைகளுடனும் இந்த எதிர்வினைகளுக்கு காரணமான தூண்டுதல்களின் தரத்துடனும் ஒப்பிடும் போது இந்துக்கள் எதிர்நோக்கும் தூண்டுதல்கள் அதீதமானவை என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்துக்களின் பாதுகாப்பு உணர்ச்சி உரம் பெறவும் எவ்வித காரணமும் இல்லை. மாறாக இந்து சமுதாயம் கடந்த ஆண்டுகளில் மேலும் மேலும் அனைத்துவிதமான தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப்பட்ட சமுதாயமாகவே இருந்து வந்துள்ளது. விரோதிகளால் பீடிக்கப்பட்ட இத்தகைய சமுதாயங்கள் பொதுவாக (இந்து சமுதாயத்தின் மீது வைக்கப்படும் எதிர்மறை தூண்டுதல்களுடன் ஒப்பிடுகையில் படு சாதாரணமான) தமக்கு எதிரானதாக கருதப்படும் தூண்டுதல்களை எதிர்கொள்ளும் வன்முறை விதத்தினை ஒப்புநோக்கினால், வதோதரா இந்துக்கள் அளவுகடந்த பொறுமையுடன் செயல்பட்டுள்ளனர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
[கோவில் தூண் சிற்ப புகைப்படங்கள்: அரவிந்தன் நீலகண்டன்]

Labels: , , , ,

Sunday, May 13, 2007

பாசிசம், நாசியிசம், சோசலிசம், இந்துத்வம்


ஸ்ரீ மாதவ சாதாசிவ கோல்வால்கர் எனும் ப.பூ.குருஜி கோல்வால்கர் நாசி ஆதரவாளரா பாசிஸ்டா இந்துத்வம் என்பது பாசிச நாசி தன்மை கொண்டதா என ஒரு தீவிரமாக வலைப்பதிவர் ஜடாயு அலசியுள்ளார். 'ஆம்' என தெள்ளத்தெளிவாக இடதுசாரிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 'இல்லை' என தமது நூலில் முனைவர் கொயன்ராட் எல்ஸ்ட் நிறுவுகிறார். இந்த விவாதத்தின் மையத்தில் இருப்பது குருஜி கோல்வல்கர் எழுதிய 'நாம் நம் தேசத்தின் வரையறை' ஆகும். இந்நூலில் இருந்து கையாளப்படும் பகுதிகளையும் நாம் காணலாம்.
"இனத்தின் தூய்மையையும் அதன் கலாச்சாரத்தையும் தக்க வைத்துக் கொள்ள ஜெர்மனி அத்தேச செமிடிக் இனத்தை தேசத்திலிருந்து நீக்கி (purges) உலகை திடுக்குற செய்தது. இனகர்வம் அதன் மிக அதீத அளவில் இங்கு வெளிப்பட்டுள்ளது. ஜெர்மனி காட்டியுள்ளது என்னவென்றால் எப்படி தம் அடிப்படையில் மாறுபடும் இனங்கள் கலாச்சாரங்கள் ஒன்றாக ஒருங்கிணையமுடியாது என்பதே. இது இந்துஸ்தானத்தில் உள்ள நம் அனைவருக்கும் லாபம் தரும் நல்ல படிப்பினையாகும்."
மற்றொரு மேற்கோள் பினவருமாறு ஆகும்:
"புத்திசாலித்தனமான பழமையான நாடுகளின் இந்த நிலைப்பாட்டின் படி இந்துஸ்தானத்தில் உள்ள அன்னிய இனங்கள் இந்து கலாச்சாரத்தையும் மொழியையும் மரியாதையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்து தருமத்தை மரியாதை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். தங்கள் தனித்தன்மையை விட்டு இந்து இனத்துடன் கலந்திட வேண்டும். இல்லையென்றால் அவர்கள் இந்து தேசத்திற்கு கீழ்படிந்து எவ்வித சலுகைகளையும் எதிர்பார்க்காமல் -எத்தகைய தனிவிதமாக நடத்தப்படுவதை
எண்ணிக்கூட பார்க்காமல் குடிமக்களுக்கான உரிமைகளைக் கூட கோராமல்- இருந்திட வேண்டும்."

இந்த இரண்டு பாராக்களும்தான் குருஜியை நாசி ஆதரவாளர்
என்பதாகவும், குருஜி ஏதோ பாசிஸ்ட் என்பதாகவும் -நீட்சியாக ஏதோ ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்வமே நாசி-பாசிச தன்மை கொண்டதாகவும் -காட்ட பயன்படும் பாராக்கள் ஆகும்.
ஆனால் இதன் முழுமையான உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு முன்னால் பாசிசம் என்றால் என்ன நாசியிசம் என்றால் என்ன என்பதையும் அதற்கும் இடதுசாரி சோசலிசத்துக்கும் உள்ள தொப்பிள்கொடி உறவையும் சிறிதே காணலாம்.

வாஸ்தவத்தில் பாசிசமும் நாசியிசமும் தம்மளவி சில முக்கிய விசயங்களில் மாறுபடுகின்றன. பல முக்கிய விசயங்களில் உடன்படுகின்றன. பாசிசத்தின் முக்கிய அம்சம் மாற்றுக்கருத்துகளை அழித்தொழிப்பது ஆகும். அதற்கு சிறிதும் இடம் கொடாமல் இருப்பது ஆகும். நாசிசத்தின் முக்கிய அம்சம் (defining character) அதன் இனவாதம் ஆகும். நாசி இனவாதம் உயிரியல் உண்மையாக தன்னைக் காட்டிக் கொள்கிறது. மாறாக பாசிசம் ஒரு சமூக அரசியல் கோட்பாடாகும். அதன் வேர்கள் மார்க்சியத்தில் தொடங்கி பின் பிரிந்தவை ஆகும். மார்க்சியத்தில் தொடங்கிய அதன் வரலாறு பின்னர் மார்க்சியமற்ற ஜெர்மானிய சோசலிச இயக்கத்திலிருந்து தன்னை கட்டமைத்துக்கொண்டது. அதன் இயக்க முறை முழுக்க முழுக்க மார்க்சிய அரசான சோவியத்தை அடியொற்றி அமைக்கப்பட்டதாகும். இதில் சோவியத் மார்க்சியம், இத்தாலிய பாசிசம், ஜெர்மானிய நாசியிசம் - இவை மூன்றுக்கும் இருக்கும் அடிப்படை ஒற்றுமைகள் அமைப்பு ரீதியாகவும் அரசு செயல்பாட்டு ரீதியாகவும் தெளிவானவை. பாசிசமும் நாசியிசமும் முதலாளித்துவ சீர்கேட்டின் வெளிப்பாடுகள் என்பதை விட சோசலிச திரிபுகள் என்பதே சரியானதாக இருக்கும். உதாரணமாக, பிரச்சார அமைப்பு, ஒரு கட்சி முறை, தனிமனித சுதந்திரத்தை அழித்தல், மாற்றுக்கருத்துக்களை அழித்தல் ஆகியவற்றில் இவை மூன்றும் ஓரிடத்தில் சந்திப்பவையாகும். தனிமனித சொத்துரிமை சோவியத்தில் அழிக்கப்பட்டது என்றால் பாசிச மற்றும் நாசி அரசுகளில் தனிமனித சொத்துரிமை அரசு இயந்திரத்தின் பெரும் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.
பொருளாதார நிபுணர் லுட்விக் வான் மைஸஸ் நாசி அரசுக்கும் சோவியத்துக்கும் இருந்த ஓற்றுமைகளை சுட்டிக்காட்டுகிறார்:
"லெனின், ட்ராஸ்கி, ஸ்டாலின் ஆகியோருக்கு மிகச்சிறந்த சீடர்களாக நாசிகளைத் தவிர வேறு யாரும் இருந்திருக்க முடியாது....பின்வரும் விசயங்களை அவர்கள் சோவியத் ரசியாவிலிருந்து இறக்குமதி செய்தனர்:ஒரு கட்சி ஆட்சி முறையும் அரசியலில் அக்கட்சிக்கே இடமும்; இரகசிய காவல்துறைக்கான அதீத இடமும்; வதை முகாம்கள்; அரசு நிர்வாகம் மூலம் அரசியல் எதிரிகளை சிறைப்படுத்துதல் மற்றும் நிர்மூலமாக்குதல்; அரசியல் எதிரிகளின் குடும்பங்களை வதைத்தல் நாடுகடத்தல்; பிரச்சார முறை"

எனவே மார்க்சியவாதிகள் நாசி மற்றும் பாசிச அமைப்புகளுக்கு பிதாமகர்கள் என்கிற உண்மையை நினைவில் கொள்வோம். மார்க்சிசம், பாசிசம், நாசியிசம் ஆகிய மூன்று கருத்துருக்களின் செயல்பாட்டிலும் பிரதானமானது தமக்கு எதிரான கருத்துகளுக்கு முத்திரை குத்தி அழிப்பது முக்கியமானதாகும்.('யூத மேலாதிக்க சதி' என நாசி சொன்னால் அதற்கு இணையான சொல்லாடலாக பூர்ஷ்வா பிற்போக்குத்தனம் அல்லது ஏகாதிபத்திய சதி என மார்க்சியவாதி கூறுவான் நாசி இனவாத கோட்பாடும் மார்க்சிய வெறுப்பியலும் கலந்த விசித்திர பிறவியான மகஇக கும்பல் 'பார்ப்பனீய நவகாலனீய சதி' என முழங்கும்.)

ஆனால் குருஜி கோல்வல்கரின் தன்மை எத்தகையது என்பதனை காணலாம். இந்நூலின் வெளியீட்டு வரலாற்றை மிக தெளிவாக நமக்கு தருகிறார் கொயன்ராட் எல்ஸ்ட். 'நாம் நம் தேசத்தின் வரையறை' குருஜியால் 1938 இல் நவம்பர் முதல் வாரத்தில் எழுதி முடிக்கப்பட்டது என அவர் கூறுகிறார். இந்நூலின் முன்னுரையில் இவர் தம்மை செழுமைப்படுத்திய ஐரோப்பிய எண்ணங்களின் தாக்கங்களை குறிப்பிடுமிடத்து நாசிகளையோ ஹிட்லரையோ குறிப்பிடவில்லை மாறாக இத்தாலிய தேசியவாதியான மாசினி மற்றும் ஸுரிச்சை சார்ந்த சட்ட வல்லுநர் மற்றும் முற்போக்கான எண்ணம் கொண்ட ஜோகனன் காஸ்பர் ப்ளண்ட்ஸ்ச்லி (Johann Kaspar Bluntschli) ஆகியோரைக் குறிப்பிடுகிறார். பின்னவர் இன்றைக்கும் மதிக்கப்படும் சட்டவியலாளர் என்பதுடன் மத அடிப்படைவாதத்தை எதிர்த்து முற்போக்கான கிறிஸ்தவ இறையியல் கொண்டவர் என்பது முக்கியமான விசயமாகும். நாசி பாசிச எண்ணவோட்டங்கள் குருஜியை கவர்ந்திருக்கும் பட்சத்தில் 1939 இல் எழுதிய முன்னுரையில் கூறியிருக்கலாம். கூறவில்லை. பிற கருத்துகளுக்கு சற்றும் இடமளிக்காது அழிக்கும் தன்மை நாசி, பாசிச, ஸ்டாலினிய அமைப்புகளுக்கு உண்டு என முன்னர் கண்டோ ம். ஆனால் குருஜியின் தன்மைக்கு அதற்கு நேர் மாறாக இருந்தது என்பதனை நாம் அறியலாம். குருஜியின் முதல் நூலான இதற்கு எழுதப்பட்ட முன்னுரையிலேயே குருஜியின் சில கருத்துகளை கண்டித்து அந்த முகவுரையை எழுதியவர் எழுதியிருந்தார். அவர் மாதவ் ஸ்ரீஹரி அனே என்பவர். அந்த கண்டித்த முகவுரையுடனேயே இந்த நூல் வெளிவந்தது. அதில் அவர் கூறியிருந்தார்:

" மேலும் தேசியம் குறித்து தமது கோட்பாட்டுடன் ஒத்து போகாதவர்களைக் குறித்து இந்நூல் ஆசிரியர் பயன்படுத்தியிருக்கும் பொறுமையற்ற கடுமையான மொழி, தேசியம் போன்றதோர் சிக்கலான விசயத்தை அறிவியல்பூர்வமாக அணுக உதவி செய்வதாக இல்லை." ('நாம்' 1939, பக்.xviii)
பாசிசம், மார்க்சியம் ஆகியவற்றின் நடைமுறைக்கும் குருஜியின் நடைமுறைக்குமாக ஏற்பட்ட பெரிய வேறுபாட்டினை இங்கே காணலாம். தம்மை விமர்சிப்பவரின் முகவுரையை தமது நூலில் வெளியிடும் ஜனநாயக மனோபாவமே குருஜியுடையது.

இனி ஹிட்லரிய யூத இன அழிப்பை குருஜி ஆதரிக்கிறாரா என காணலாம். 1938 களில் இந்தியாவில் இருக்கும் ஒருவருக்கு (அதுவும் நேரு போல சர்வதேச பிரயாணங்கள் செய்திராத ஒருவருக்கு) ஹிட்லரின் யூத வெறுப்பின் உண்மைத்தன்மை குறித்து தெரிய வாய்ப்பில்லை. ஹிட்லரின் யூத தீர்வு என்பது என்ன என்பதனை பட்டவர்த்தனமாக வகைமுகாம்களில் செய்யப்பட்ட படுகொலைகள் மூலமாக உலகம் உணர்ந்தது 1940களில்தான். 1938களில் ஜெர்மனியில் யூதர்கள் தங்கள் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்படுவதும் வேறு தேசங்களுக்கு அவர்கள் செல்வதும் மட்டுமே அரசல் புரசலாக இந்தியாவில் தெரிந்திருந்தது. ஹிட்லரின் வதைமுகாம்களில் ஒன்றே ஒன்று மட்டுமே 1938க்கு முன்னர் உருவாக்கப்பட்டது. ஆனால் அது குறித்தும் உலகு அறிந்தது 1940களில் தான். ஹிட்லரின் யூத ஒழிப்பை குறித்து தெளிவாக தெரிந்திருந்திருக்ககூடிய வாய்ப்பு ஒரே ஒரு மையத்துக்கு மட்டுமே இருந்தது. ஹிட்லருக்கு தேவைப்பட்ட சர்வதேச அங்கீகாரத்தை ஹிட்லருக்கு வழங்கிய அந்த மையத்தின் பெயர் வத்திகான். மேலும் ஹிட்லரின் 'பொருளாதார சாதனை' பிரச்சாரங்களும் மக்களை கவர்ந்திருந்தது. இந்நிலையில் ஜெர்மனியில் நடந்த நிகழ்ச்சியினை போகிற போக்கில் ஒரு உதாரணமாக குருஜி காட்டுவதை வைத்து அவர் நாசி கோட்பாட்டினை ஆதரித்தார் என்பது மேம்போக்கானது. எனவே purges எனக் கூறுவது இன அழிப்பு என சொல்வது அல்லது இன்று நாசிகளின் purges என நாம் அறிந்துகொண்டிருக்கும் பார்வையுடன் ஓப்பிடுவது முழுக்க முழுக்க தவறானது ஆகும்.

உதாரணமாக இடதுசாரிகளின் அபிமான நாயகனான காஸ்ட்ரோ தன் கல்லூரி நாட்களில் ஹிட்லரின் அபிமானியாக இருந்தார் என்பதுடன் 1953 இல் அவர் ஆற்றிய உரை கூட அப்பட்டமாக ஹிட்லரின் ரத்தாஸ் புஷ்க் உரையை தழுவி ஆற்றப்பட்டதாகும். ஏனெனில் ஹிட்லரின் கொடுங்கோன்மை அவன் இழைத்த மானுடப்பேரழிவு ஆகியவை குறித்து க்யூபாவிலோ இந்தியாவிலோ பிரிட்டிஷ் அல்லது பிற காலனிய அடக்குமுறைக்கு ஆளாக்கிக் கொண்டிருந்தவர்களுக்கு எவ்வித பெரிய அறிவும் இருந்திருக்கவில்லை. ஆனால் நாம் காணவேண்டியது 1940களில் ஹிட்லர் ஆற்றிய பேரழிவுச் செயல்களின் விபரீதம் வெளிவந்த பிறகு ஹிட்லரின் பேரழிவுச்செயல்களை ஆதரிக்கவோ அல்லது அது நடக்கவேயில்லையென்றோ அல்லது ஹிட்லரின் பிரச்சார வெளியீடுகளை வெட்கமின்றி மீள்-பிரசுரம் செய்யவோ (நாசி பிரச்சார நூல்களை எப்போதுமே சங்கம் பிரசுரித்ததில்லை) குருஜியோ அவர் சார்ந்த இயக்கமோ முயன்றிடவில்லை. ஆனால் மேல் கூறிய அனைத்துமே செய்தவர்கள் அல்லது செய்தவர்களை ஆதரிப்பவர்கள் குருஜியையும் சங்கத்தையும் இந்துத்தவத்தையும் நாசியிஸ்ட்கள் பாசிஸ்ட்கள் என்பது பெரிய முரண்நகை.

அடுத்ததாக அன்று நிலவிய சூழ்நிலையை புரிந்து கொண்டால் குருஜியின் வாசகங்கள் எத்தகைய சூழ்நிலைக்கான எதிர்வினையாக வெளிப்பட்டது என்பதையும் புரிந்துகொள்ளலாம். பிரிட்டிஷ் அரசாங்கம் 1934 இல் உருவாக்கிய வகுப்புவாரி அமைப்பு அன்றைய சூழலில் இந்துக்களுக்கு பெரும் துரோகத்தை செய்வதாகவும் ஜனநாயகத்தின் அடிப்படையையே கேலிக்கூத்தாகுவதாகவும் அமைந்தது. இது குறித்து அண்ணல் அம்பேத்கர் பின்வருமாறு விவரிக்கிறார்:

"வகுப்புவாரி அமைப்பு மோசடித்தனமானது. ஏனென்றால் அது தேர்தல் பிரதிநித்த்துவத்தில் இந்து சிறுபான்மையினரையும் இஸ்லாமிய சிறுபான்மையினரையும் வெவ்வேறாக நடத்துகிறது. இந்து பெரும்பான்மை பிரதேசங்களில் வாழும் இஸ்லாமியர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களை தேர்ந்தெடுக்க உரிமை வழங்கிகிறது. ஆனால் முஸ்லீம் பெரும்பான்மை பிரதேசங்களில் வாழும் இந்து சிறுபான்மையினர் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் தேர்தல் இடங்களை அவர்கள் தேர்வு செய்யமுடியாது. அதனை முஸ்லீம்கள் தீர்மானிப்பார்கள். ஆக முஸ்லீம் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் முஸ்லீம்களுக்கு சட்டபூர்வ பெரும்பான்மை அதிகாரம் வழங்கப்பட்டு தனி ஒதுக்கீட்டு தேர்தல் சீட்டுகளும் கொடுக்கப்படுகின்றன. அதே நேரத்தில் இந்து சிறுபான்மையினராகிவிட்ட இடங்களில் இந்து சிறுபான்மையினர் மீது முஸ்லீம் ஆட்சி திணிக்கப்படுகிறது - அதில் இந்துக்களுக்கு எவ்வித மாற்றமும் செய்ய முடியாதபடி. இதுதான் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் அடிப்படை முறைகேடு."
ஆக, 1938 இல் குருஜி எழுதும் போது அவர் இத்தகைய போக்குக்கான நேர் எதிர்வினையை எழுப்புகிறார். அதுதான் 'சலுகைகளையும் எதிர்பார்க்காமல் -எத்தகைய தனிவிதமாக நடத்தப்படுவதை எண்ணிக்கூட பார்க்காமல் குடிமக்களுக்கான உரிமைகளைக் கூட- இருந்திட வேண்டும்' என்கிற குரல். அதில் கூட அவர் கூறுவது என்னவென்றால் அவர்கள் இந்து தேசியத்தன்மையுடன் இணைந்து முஸ்லீமாக வாழ்கிற பட்சத்தில் அவர்கள் இத்தேசத்தின் முழுகுடிமகன்களாக நடத்தப்பட வேணும் என்பதில் குருஜிக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது. அவர் தெளிவாகவே கூறுகிறார்:
"இந்துஸ்தானத்தில் உள்ள அன்னிய இனங்கள் இந்து கலாச்சாரத்தையும் மொழியையும் மரியாதையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்து தருமத்தை மரியாதை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். தங்கள் தனித்தன்மையை விட்டு இந்து இனத்துடன் கலந்திட வேண்டும். இல்லையென்றால் அவர்கள் இந்து தேசத்திற்கு கீழ்படிந்து எவ்வித சலுகைகளையும் எதிர்பார்க்காமல் -எத்தகைய தனிவிதமாக நடத்தப்படுவதை எண்ணிக்கூட பார்க்காமல் குடிமக்களுக்கான உரிமைகளைக் கூட- இருந்திட வேண்டும்."
இந்து கலாச்சாரத்தையும் மொழியையும் மரியாதையுடன் ஏற்று அதே நேரத்தில் நல்ல முஸ்லீம்களாக மட்டுமின்றி நாட்டுக்கே நல்ல உதாரணமாக, மிகச்சிறந்த குடிமக்களாக, வாழும், வாழ்ந்த முஸ்லீம்கள் எத்தனையோ பேரைக் காட்டமுடியும். அத்தகைய இரு முஸ்லீம் மகான்களான கபீர் மற்றும் இப்ராகீம் ரஸ்கான் ஆகியவரை ஆர்.எஸ்.எஸ்ஸின் தினசரி துதி மூலம் கோடிக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் காரர்கள் வாழ்த்தி வணங்கி வருகின்றனர். ஆக எந்த மக்களாக இருப்பினும் பிரிவினை வாத மற்றும் ஆக்கிரமிப்புவாத தனித்தன்மையை விட்டு அவர்கள் இந்த தேசத்தின் இயல்புடன் கலந்திட வேண்டுமென்றுதான் குருஜி விரும்புகிறார். 'என்னதான் பகுத்தறிவு பேசினாலும் பார்ப்பானை சேர்த்துக்கொள்ளாதே' என்கிற ஈவெராத்தனமோ அல்லது 'என்னதான் ஜெர்மனியுடன் ஒருங்கிணைந்தாலும் யூதர்களை இனம் கண்டு விலக்கு' என்கிற ஈவெராத்தனத்துக்கு இணையான ஹிட்லரியத்தனமோ குருஜியிடம் இல்லை. அதற்கு நேர்மாறாக முஸ்லீம்களை இந்துக்களுடன் ஒருங்கிணைய கூறும் ஒற்றுமை குரலே இருக்கிறது. ஆனால் அதையும் மீறி சமூக சமரசத்தைக் காட்டிலும், தேசநலனைக் காட்டிலும் எங்கள் தனித்தன்மையே முக்கியம் என அம்பேத்கர் சுட்டிக்காட்டியுள்ளபடி தனியாக அரசியல் சலுகைளை பெற்று மேலாதிக்கம் செய்ய விழையும் இஸ்லாமிய பாசிஸ்ட்களையே குருஜி கடுமையாக கண்டிக்கிறார். அவர்களையே ''சலுகைகளையும் எதிர்பார்க்காமல் -எத்தகைய தனிவிதமாக நடத்தப்படுவதை எண்ணிக்கூட பார்க்காமல் குடிமக்களுக்கான உரிமைகளைக் கூட கோராமல்- இருந்திட வேண்டும்" எனக்கூறுகிறார்.


சரி... குருஜி கூறுகிற இந்து தேசியம் அல்லது தேசிய வாழ்க்கை என்பது என்ன? பசு மாமிசம் உண்பவனைக் கொல்வதா? சாதியத்தையும் பிறப்படிப்படையிலான வர்ணத்தையும் தூக்கிப்பிடிப்பதா? வர்ணம் குறித்து குருஜி மற்றும் இந்துத்வவாதிகளின் பார்வை என்ன என்பதையும் விளக்கமாக காணலாம்.
குறிப்புகள் மற்றும் ஆதாரங்கள்


  • குருஜி கோல்வால்கர் நாசியா? பெல்ஜிய இந்தியவியலாளர் டாக்டர்.கொயன்ராட் எல்ஸ்டின் விளக்கமான கட்டுரை இங்கே: http://koenraadelst.voiceofdharma.com/articles/fascism/golwalkar.html
  • லுட்விக் வான் மைஸஸ் (1881-1973) - யூதர், பொருளாதார மேதை. நாசிகளால் ஆஸ்திரியாவிலிருந்து சுவிட்சர்லாந்திற்கும் பின்னர் நியூயார்க்கிற்கும் குடி பெயர்ந்தவர். ஆஸ்திரிய பொருளாதார கோட்பாட்டின் முக்கிய பிதாமகர்களுள் ஒருவராக கருதப்படுபவர். காண்க:http://en.wikipedia.org/wiki/Ludwig_von_Mises
  • குருஜியை கவர்ந்த Johann Kaspar Bluntschli என்கிற சட்டவியலாளர் குறித்து காண்க: http://en.wikipedia.org/wiki/Bluntschli
  • பாபா சாகேப் அம்பேத்கர், Thoughts on Pakistan, அத்தியாயம் 6, பக்கம். 50
  • காஸ்ட்ரோவின் ஹிட்லர் ஆதரவு நிலைபாடுகள்:
    "In his youth, Castro admired Hitler. At the University he carried with him a copy of Mein Kampf. His statement at the trial in 1953, "History will Absolve Me," was lifted from Hitler's speech at the Rathaus Putsch trial."
    பார்க்க: http://www.cubanet.org/opi/11099902.htm
    மேலும் Georgie Anne Geyer எழுதிய 'GUERRILLA PRINCE' The Untold Story of Fidel Castro எனும் நூலில் இது குறிப்பிடப்படுவதை அதே நூலுக்கான நியூயார்க் டைம்ஸ் மதிப்புரையில் காணலாம்: (http://query.nytimes.com/gst/fullpage.html?res=9D0CE5D71330F933A25751C0A967958260) "...as a youthful rebel, Mr. Castro reportedly admired Hitler's tactics and faked at least one police beating to get attention."
  • "எவ்வளவு பகுத்தறிவுவாதிகளாய் நாத்திகர்களாய் இருந்தாலும் பார்ப்பானை உள்ளேவிடக்கூடாது; சேர்க்கக் கூடாது."-ஈவெரா (விடுதலை 20-10-1967)

Labels: , , , , , , ,