ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்க...
ராசாத்தியையும் ரதிஷாவையும் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பத்மநாபபுரம் அரசு தொடக்க பள்ளி மாணவிகள்தான் இவர்கள் இருவரும். ராசாத்தியின் வயது 10. ரதிஷாவின் வயது 9. தெரிந்திருக்க வேண்டிய அளவு அவர்கள் என்ன சாதனை செய்கிறார்கள் என்கிறீர்களா? அவர்கள் பள்ளி மாணவிகள். அதுதான் அவர்களின் சாதனை. இதென்ன சாதனை என்று கேட்கிறீர்களா? கடந்த வாரங்களில் பள்ளி விடுமுறை நாட்களில் பத்மநாபபுரம் அரண்மனை பக்கமாக நீங்கள் வந்திருந்தால் இரண்டு பெண் குழந்தைகள் உங்களிடம் பிச்சை கேட்டிருப்பார்கள். திங்கள் கிழமை பள்ளி சீருடையில் அவர்களை நீங்கள் அடையாளம் கண்டிருக்க முடியாது.

"எங்கள் சமுதாயம் ஆதிபழங்குடி குறவர் இனம். இதில் படித்தவர்கள் இல்லை. எனக்கு சின்னவயதில் ஒருவர் சொல்லிக்கொடுத்ததை வைத்து ஓரளவு படிக்கத் தெரியும். அதனால்தான் நமது குழந்தைகளாவது படித்து வேறு தொழில் செய்யட்டும் என்று இரண்டு பிள்ளைகளை பத்மனாபபுரத்திலுள்ள அரசு பள்ளிக்கூடத்தில் படிக்கவைத்தேன். ஒரு குழந்தை சகாயமாதா கோவிலில் வேலைக்கு சேர்த்திருக்கிறேன். மற்ற குழந்தைகளையும் படிக்க வைக்க ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் வருமானம் இல்லாமல் எப்படி படிக்க வைப்பது என்றுதான் மற்ற பிள்ளைகள் பிச்சை எடுத்து இரண்டு பிள்ளைகளை படிக்க வைக்கிறேன். குடிசையில் இருப்பதால் வீட்டுக்கு நம்பர் தரவில்லை. இதனால் ரேஷன் கார்டு எடுக்க முடியவில்லை. பலமுறை எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகளைப் பார்த்தும் யாரும் உதவிக்கு வரவில்லை. வீட்டில் மண்ணெண்ணை விளக்கு வைத்துதான் பிள்ளைகள் படிக்கின்றனர். ரேஷன் கார்டு இருந்தால் ரேஷன் கடையில் மண்ணெண்ணை வாங்கலாம். இப்போது அதிக விலை கொடுத்து கடையில் இருந்துதான் வாங்க முடிகிறது."அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை இது குறித்து கூறும் போது இரண்டு குழந்தைகளும் நன்றாக படிப்பதாகவும் தொண்டு நிறுவனங்கள் மனது வைத்தால் இந்த குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் ஒளி விளக்கு ஏற்றிவைக்க முடியும் எனவும் கூறினார்.
இந்த செய்தி வெளியானதை அடுத்து பல தொண்டு நிறுவனங்கள் இக்குழந்தைகளின் பெற்றோரை அணுகின. ஆனால் பெற்றோருக்கு தொண்டு நிறுவனங்களின் 'ஹோம்'களில் குழந்தைகளை விட மனதில்லை. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட சேவாபாரதி மாவட்ட தலைவர் அசோக்குமார் மாவட்ட அமைப்பாளர் முருகேசனுடன் இணைந்து பெற்றோரிடம் பேசி பெற்றோர்களின் பார்வையில் இப்பிரச்சனையை அணுகினர். பெற்றோரைப் பொறுத்தவரையில் அப்பள்ளியிலேயே பிள்ளைகள் படிப்பை தொடர உதவிசெய்வதுடன், பிள்ளைகளுக்கு தேவையான அனைத்து படிப்பு உதவிகளும் அவர்களுக்குரிய உணவு உடை உட்பட அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்வதே சரியான தீர்வாக அமைந்தது. இதனையடுத்து பெற்றோர்களும் குழந்தைகளை சேவாபாரதி தத்தெடுக்க சம்மதித்தனர். இதனையடுத்து சேவாபாரதி சுய உதவிக்குழுக்களின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர். தெய்வபிரகாஷ், மாநில பொது செயலாளர் மணியன் ஆர்.எஸ்.எஸ் மாவட்ட பொறுப்பாளர் ஜோதீந்திரன் குழந்தைகளின் தந்தை ராஜமணி ஆகியோர் கல்குளம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு சென்று குழந்தைகள் தத்தெடுக்கப்பட்ட விவரத்தைக் கூறினர்.

நம் குழந்தைகள் ஒவ்வொன்றையும் கல்வி கற்க வைப்பது நம் ஒவ்வொருவரின் சமுதாய கடமை. அதனை நிறைவேற்ற முன்வந்த சேவாபாரதி போன்ற வெளிநாட்டு பணம் இல்லாமல் சுய சமுதாயம் மட்டுமே சார்ந்த சேவை அமைப்புகளின் மானுட சேவைக்கும் தலை வணங்குவோம்.
Labels: Children, Hinduthva, RSS, Seva Bharathi, Study

