அகப்பயணம்

Tuesday, August 30, 2005

வேதாளம் சொல்லும் கதை : ஜைனூல் ஆப்தீன் கூட்டத்தில் ஈவெரா



தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அதனைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து, மரத்திலிருந்த வேதாளத்தை மீண்டும் தூக்கி தன் தோளில் போட்டபடி செல்கையில் வேதாளம் சற்றே நகைத்து "மன்னனே நீ ஏன் இந்த பலனில்லாத முயற்சியில் ஈடுபடுகிறாய்? ஒருவேளை இந்த முயற்சியைக்காட்டிலும் இந்த முயற்சியில் உன்னைத் தூண்டியவனிடத்தில் உனக்கு விசுவாசம் இருப்பதால் இது பகுத்தறிவற்றதென தெரிந்தும் நீ அமைதிகாக்கிறாயா ஆனால் அப்போதும் கூட சில சமயங்களில் அமைதியை மீற வேண்டிய நிலை ஏற்படலாம். இதற்கு உதாரணமாக வருங்காலத்தில் நாகர்கோவில் எனும் நகரில் சில கருஞ்சட்டை தோழர்கள் நடந்துகொண்ட விதத்தின் கதையை உனக்கு நான் கூறுகிறேன். கவனமாகக் கேள்." எனக்கூறி கதையை சொல்லலாயிற்று.


சுனாமியடித்த கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நாகர்கோவில் என்று ஒரு நகரமுண்டு. அந்நகரில் அரவிந்தன் நீலகண்டன் என்று ஒரு காஃபீர் வாழ்ந்து வந்தான். பொது சகாப்தம் 2005 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி நாகர்கோவிலில் நடந்த 'இஸ்லாம் ஓர் இனியமார்க்கம்' நிகழ்ச்சியில் பார்வையாளனாகக் கலந்து கொள்ள இந்த கடைந்தெடுத்த காஃபீரான அரவிந்தன் நீலகண்டனுக்கு வாய்ப்பு கிடைத்தது. கேள்விகளுக்கு பதிலளித்தவர் ஜைனுல் ஆப்தீன் எனும் மார்க்க பெரியவர். 'மற்ற மார்க்கத்தவர்களுக்காக' நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஏறத்தாழ ஐந்து மணிநேரம் நின்றபடியே ஓய்வின்றி முகத்தில் எவ்வித மாறுதலுமின்றி ஓர் நகைச்சுவைத்தன்மையுடன் பதிலளித்தபடியே இருந்தார் ஆப்தீன். ஜிகாத், ராமஜென்மபூமி, மகர், குரானில் நவீன அறிவியல் கூறப்பட்டிருக்கும் அதிசயம் என வெளுத்து வாங்கினார். அப்படியும் காலப்பளுவின் காரணமாக ஐந்து மணிநேரத்தில் பதினைந்தோ பதினெட்டோ பேருக்குத்தான் அவரால் பதிலளிக்க முடிந்தது. சாலமன் பாப்பையாவும் ஈமானும் கலந்த அந்த விசித்திர மனிதரின் பதில்கள் வழக்கமான இஸ்லாமிய சால்ஜாப்புகள்தான் என எண்ணியபடி அந்நிகழ்ச்சியை தொடர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான் காஃபீர் நீலகண்டன். தொடர்ந்து விவாதிக்கும்படியாக இல்லாமல் அடுத்தடுத்தாக கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்கும்படியாக அமைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி. தௌதவாகவே மேடைமேல் இருப்பவருக்கு சாதகமான சூழ்நிலை என்றே இஸ்லாமின் ஔதபடாத அவனது இருளடைந்த மனதிற்கு தோன்றியது. அவர் எழுப்பிய அடிப்படை தகவல் பிழைகளைக் கூட தட்டிக்கேட்க முடியாத நிகழ்ச்சி அமைப்பு என அவனுக்கு பட்டது. உதாரணமாக பாபர் காலத்தில் ஒருத்தனுக்கு ஒருத்தன் என்று சண்டை போடற நிலைங்க. பீரங்கி துப்பாக்கியா இருந்துச்சு. அப்படியிருக்கும் போது எப்படிங்க பாபர் பெரும்பான்மை மக்களுக்கான கோவில இடிச்சுருப்பாரு..." "...பாபர் ஒரு உயில் எழுதி அது டெல்லியில தொல்லியல் துறை அருங்காட்சியகத்தில் இருக்குது. அதுக்கு பேரு பாபர் நாமா" "...1949க்கு முன்னால ராமஜென்மபூமி பத்தி எந்த வழக்கும் கிடையாது" "துளசிதாஸக் காப்பியடிச்சு கம்பன் தமிழ்ல ராமாயணம் எழுதினான்" என்கிற ரீதியில் (வேதாளத்திற்கு வயதாகிவிட்டதால் சரியாக அதே வார்த்தைகளில் கூறியுள்ளதா தெரியவில்லை ஆனால் சாராம்சம் இதுதான்- மண்ணாந்தை) இதெல்லாம் 'கேட்பவன் கிறுக்கன் என்றால் ஒசாமா கூட மகாத்மாதான்' என்ற பாணியிலான உளறல்கள் என்றும் குறைந்தபட்சம் பத்தாவது வகுப்பு மாணவனின் வரலாற்று அறிவோடு இருப்பவர்கள் கூட அவரது வாதங்களை முறியடித்துவிடலாம் என்பது அரவிந்தன் நீலகண்டனின் காஃபீர்தனமான நம்பிக்கைகள். ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எடிட் செய்து அளிக்கப்படுகையில் சாதாரண இஸ்லாமியரின் நம்பிக்கையையும் இஸ்லாமிய ஈகோவையும் நிமிர்ந்து நிற்கவைக்கும் என்பது அந்த வக்கிரம் பிடித்த காஃபீருக்கு எப்படி தெரியும்?


அப்போதுதான் அது நிகழ்ந்தது. ஈவெராவினை சிலாகிப்பதாகக் கூறிக்கொண்ட ஒருமனிதர் 'கடவுள் உண்டா? அதற்கு சான்று என்ன?' எனக் கேட்டார். ஜைனூல் ஆப்தீன் "சிலர் கடவுளின்பெயரால் பிழைப்பு நடத்தினால் ஈவெரா கடவுள் இல்லை என்று சொல்லி பிழைப்பு நடத்தியவர். அவர் என்ன உழைத்தா பிழைத்தார்? கடவுள் இல்லை என்று சொல்லி பிழைப்பு நடத்தினார். வீட்டுக்கு வர இவ்வளவு ரூபாய். வீட்டில் சாப்பிட இவ்வளவு ரூபாய். வீட்டில் தண்ணீர் குடிக்க இவ்வளவு ரூபாய். குழந்தைக்கு பெயர் வைக்க இவ்வளவு ரூபாய். கல்யாணத்திற்கு வர இவ்வளவு ரூபாய். கருமாதிக்கு வர இவ்வளவு ரூபாய். என்று வசூலித்து பிழைப்பு நடத்தினார். ஏன் வீரமணி வழக்கறிஞருக்கு படித்தவர்தான். அவர் வேலை செய்கிறாரா அல்லது கடவுள் இல்லை என்று சொல்லி பிழைப்பு நடத்துகிறாரா? கடவுள் என்று கல்சிலையை வணங்குகிறீர்களே என்று கேட்ட ஈவெராவுக்கு சிலை அவரது சிலைக்கு பூமாலை. கடவுள் இல்லை என்று சொல்லுகிறவர்களுக்குள்ளேயே அடிதடி...வீரமணிக்கும் கொளத்தூர் மணிக்கும் சண்டை" என்றெல்லாம் ஆக்ரோஷித்தார். இந்நிலையில் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த கருஞ்சட்டை வீரர்களில் ஒருவர் கையைத்தூக்கி உரத்த குரலில் ஆட்சேபம் எழுப்பினார். ஆனால் அதை அலட்சியம் செய்த ஆப்தீன் பின்னால் உங்களுக்கு வாய்ப்பளிக்கிறேன் என்று தொடர்ந்தார். தொடர்ந்து குரானில் 1400 வருடங்களுக்கு முன்னரே பூமி உருண்டை, பூமி சுழல்கிறது, சூரியனை சுற்றுகிறது என்பது முதல் மருத்துவம் வரை பல இன்றைய கண்டுபிடிப்புகள் கூட உள்ளன எனக் கூறினார். அந்த கருஞ்சட்டை வீரரின் வீரத்தை கண்டு வியந்து போன காஃபீர் நீலகண்டன் "இவரன்றோ தைரியசாலி" என எண்ணி அந்தகருஞ்சட்டை வீரரை அணுகி "ஐயா எனக்கு எண் 314. எனவே என் முறை வர வாய்ப்பில்லை. உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கையில் அவர் கூறியுள்ள அபத்தங்களையும் சேர்த்து விளாசுங்கள். டார்வீனிய பரிணாம அறிவியல்..." என்று தொடங்க அந்த கருஞ்சட்டை வீரர் அப்படியே கையை உயர்த்தி " நமக்கு அவர் சொல்ற மத்த விசயங்களப் பத்தி கவலையில்லீங்க...ஆனா தந்தை பெரியார் பத்தி அவரு ஒண்ணும் மோசமா சொல்லப்படாது அவ்வளவுதான்...அறிவியலெல்லாம் நமக்கு தெரியாதுங்க." என்று கூறினார். அரவிந்தன் நீலகண்டன் முகத்தை தொங்கப்போட்டபடி உடைந்த மூக்கை துடைத்துக் கொண்டு அவனது இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டான்.


இக்கதையை கூறிய வேதாளம், " மன்னனே முதலில் கருஞ்சட்டை வீரரிடம் சென்று எதற்கு அரவிந்தன் நீலகண்டன் உளறினான் பிறகு ஏன் மௌனமாக வந்து அமர்ந்தான்? இதற்கான பதிலை நீ தெரிந்திருந்தும் கூறாவிட்டால் உனது தலையை சுக்கு நூறாக சிதறவைப்பேன்" என்று கூறியது. விக்கிரமாதித்தனும், "காஃபீரும் ஏக இறைவன் மீது நம்பிக்கையும், அவரது ஒரே தீர்க்கதரிசியின் மீது எள்ளளவும் மரியாதையற்றவனுமான அரவிந்தன் நீலகண்டன், கருஞ்சட்டை வீரர் கையை உயர்த்தியதும் அவர் பகுத்தறிவுக்காக குரல் கொடுப்பவர் என கருதினான். எனவே ஜைனூல் ஆப்தீன் குரானில் இருக்கும் அறிவியல் குறித்து அபத்தமாக உளறியதாக அவனுக்கு பட்டதும், அவன் அந்த கருஞ்சட்டை வீரர் இன்னமும் ஆத்திரம் அடைவார் எனவே அவருக்கு துணையாக தானும் குரல் கொடுக்கலாம் எனக் கருதி அவரிடம் சென்று பேசினான். பகுத்தறிவின் சின்னமாக தான் நினைக்கும் ஈவெராவை விமர்சித்ததற்கே இத்தனை ஆத்திரம் வருபவருக்கு, பகுத்தறிவின் சர்வதேச சின்னமாக திகழும் பரிணாம அறிவியலுக்கு எதிராக பேசினால் எத்தனை ஆத்திரம் வரும் அத்தகைய மனிதருடன் தானும் இணைவது இச்சூழலில் சரி என அவன் கருதினான். எனவேதான் ராமஜென்மபூமி குறித்து அவர் கூறியபோது கூட இருக்கையில் இருந்து அசையாத அவன், அந்த கருஞ்சட்டை வீரரிடம் இது குறித்து சென்றான். ஆனால் கருஞ்சட்டை வீரர் அப்படி ஒன்றும் பகுத்தறிவு பைத்தியமல்ல. அவர் ஈவெரா மீது ஈமான் கொண்டவர். எனவே பகுத்தறிவு, அறிவியல் பார்வை போன்றவை எக்கேடு கெட்டாலும் ஈவெரா சிலை ஒழுங்காக பராமரிக்கப்பட்டால் போதும் எனும் எண்ணம் கொண்டவர். ஈவெராவின் திராவிட இயக்கத்துக்கும் பகுத்தறிவுக்கும் இருக்கும் தொடர்பைக்காட்டிலும் ஈவெரா மார்க்கத்தினருக்கும் ரசிகர் மன்ற மனப்பான்மைக்குமே ஒற்றுமை அதிகம் என்பதை அறியாத முட்டாள் காஃபீரான அரவிந்தன் நீலகண்டன் அத்தருணத்தில் அதை உணர்ந்ததால் அவனது இருக்கையில் மரியாதையாக மௌனமாக வந்து அமர்ந்து கொண்டான்." என்று கூறினான். விக்கிரமாதித்தனின் சரியான இந்த பதிலால் அவனது மௌனம் கலையவே வேதாளம் அவன் சுமந்து வந்த உடலோடு உயரக் கிளம்பி மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.


-மண்ணாந்தை
[கதையமைப்புக்கு நன்றி: அம்புலிமாமா]
நன்றி: திண்ணை.காம் ஆகஸ்ட் 11 2005

Wednesday, August 24, 2005

வெளிவராத/எடுக்கப்படாத ஆவணப்படம்; மறைக்கப்படும் இறுதித்தீர்வுகள்



குஜராத் கலவரம் குறித்த என் பதிவிற்கு ஒருவர் ஒரு குறிப்பிட்ட பிரச்சாரப்படத்தை வைத்து எதிர்வினையாற்றியிருந்தார். அது குறித்து ஏற்கனவே நான் எதிர்வினையாற்றியுள்ளேன். போனபதிவின் பின்னோட்டத்தில் அதனை காண்க. இங்கு எவ்வாறு 'ஆவணப்படம்' என்கிற பெயரில் பிரச்சாரப்படங்கள் எடுப்பவர்கள் புறக்கணிக்கும் உண்மையாக நடத்தப்படும் இறுதித்தீர்வுகளில் ஒன்றை அடிக்கோடிட்டு காட்ட முயற்சித்துள்ளேன். கவனியுங்கள்...இன்றைய தினத்தில் எத்தனை குஜராத் முஸ்லீம்கள் அகதி முகாம்களில் வசிக்கிறார்கள்? ஆனால் ஆண்டுக்கணக்கில் இலட்சக்கணக்கான வனவாசிகளும், காஷ்மீர் பண்டிட்களும் அகதி முகாம்களில் விலங்குகளை விடக் கேவலமாக வாழ்கின்றனர். மிக மெதுவான ஆனால் உறுதியான சமுதாய அழிவினை எதிர்-நோக்குகின்றனர். அவர்கள் தம் வீடு-திரும்பல் இன்று ஏறத்தாழ நடவாத காரியமாகிவிட்டது. ஆனால் இவர்கள் குறித்து எவ்வித ஆவணங்களும் இல்லையே ஏன்? உங்கள் மனச்சாட்சிக்கு இப்பதிவை நான் சமர்ப்பிக்கிறேன்.

நல்ல காங்கிரீட் கட்டிடங்கள். பல குடும்பத்தினர் இருக்கின்றனர். சமையல் நடந்து கொண்டிருக்கிறது. பலர் உறவினர்களை இழந்த சோகங்களில் இருக்கிறார்கள். காயம் பட்ட கட்டுப்போட்ட கை, கால், முகங்களுடன் குழந்தைகள். இந்தியாவின் முதன்மை தேர்தல் அதிகாரி அவர்களை நலம் விசாரிக்கிறார். அருகிலுள்ள ஐஏஎஸ் அதிகாரியை அவர்களுக்கு போதுமான ஏற்பாடுகளை செய்யாமைக்காக திட்டுகிறார். [தொலைக்காட்சி செய்தியிலிருந்து] அடுத்ததாக அதே முகாம்...பாரத குடியரசு தலைவர் பார்வையிடுகிறார்...அதே முகாம் ...வேறுபல முக்கிய அதிகாரிகள் ஊடகத்தினர் அரசு-சாரா அமைப்பினை சாராதவர்கள் என பலர் அதனை பார்வையிடுதல். ...இனி மற்றொரு அகதி முகாம். மண் பூச்சு தரை...சில கிழிந்த சில்பாலின் ஷீட் கூரைகள். ஒரு வேன் வந்து நிற்கிறது. இரு காவலர்களுடன் சிலர் சாக்கு மூட்டைகளை வெளியேற்றுகிறார்கள். சற்று தூரத்தில் ஒரு அவலக்குரல் எழுகிறது. வயிற்றுப்போக்கினால் ஒரு குழந்தை இறந்துவிட்டது. ஓசை கேட்டு திரும்பிய ஒருகாவலர் விஷயம் தெரிந்தவுடன் இதெல்லாம் இங்கு சகஜம் என்கிற ரீதியில் திரும்பிக்கொள்கிறார். டாக்டர் பி.சி.தாஸ், மாநில அரசின் சிறப்பு மருத்துவ குழு உறுப்பினர், கூறுகிறார், " கஷ்டம்தாங்க, இதுவரை 700 பேர் பார்த்துட்டேன். மோசமான தண்ணீருங்க, நல்ல சத்தான ஆகாரம் கிடையாது. சிறப்பு மருத்துவ குழுன்னாலும் வேண்டிய அளவு மருந்தும் கிடையாது." அப்படியே காமிரா ஒரு பத்து வயது சிறுவனை நோக்கி செல்கிறது. அந்தச் சிறுவனைப் பார்க்கையில் உங்களுக்கு ஒருவேளை கட்டியணைத்து ஆறுதல் சொல்லவேண்டும் என்றெல்லாம் தோன்றாது. ஏனெனில் அவன் மேலெல்லாம் சிரங்குகள். அவன் கூறுகிறான், "எங்க அப்பா வயத்துபோக்குல ஒரு வாரத்துக்கு முன்னாடி செத்தாச்சுங்க. எங்க அம்மாவுக்கும் நல்லா உடம்பு முடியல்லீங்க அவங்களும் செத்தாச்சுன்னா நான் அனாதையாடுவேங்க." பத்துவயது பிண்டு ரியாங்கின் முகத்திலிருந்து காமிரா நகர்ந்து அந்த முகாமின் பல பகுதிகளை காட்டுகிறது. லால் தங்க்வாலாவினை அடுத்ததாக காமிரா காட்டுகிறது . மிஸோரம் முதலமைச்சர். அவர் தீவிர கிறிஸ்தவரும் கூட என்பதை அவரது மேசை மீதிலேயே இருக்கும் சிலுவை காட்டுகிறது. "அவர்களெல்லாம் அயலாட்கள். அவர்களுக்கு திரிபுராதான் சொந்த ஊர். அங்கேயேயிருக்க வேண்டியதுதானே. அங்கிருந்து இங்கு வந்த வந்தேறிகள், இங்கு தனி மாவட்டம் கேட்டால் எப்படி?" கேள்வியாளர் கேட்கிறார், " ஆனா அவுங்க இங்கயே வாழ்ந்ததாவும், கொலை பாலியியல் பலாத்காரம் கலவரம் இதுக்கு பயந்து அங்கே அகதியா போயிட்டதாவும் சொல்றாங்களே!" முதலமைச்சரின் முகம் மாறித்தெளிகிறது."இது ஆர்,எஸ்.எஸ் பிரச்சாரங்க. ரியாங்குகள் ஹிந்துக்கள் கிடையாது. அப்ப அவுங்களுக்காக ஆர்.எஸ்.எஸ் எப்படி குரல் கொடுக்கலாம்?" அடுத்ததாக காமிரா நகர்கிறது மிஸோரமெங்கும் நிமிர்ந்து நிற்கும் சர்ச்கள். என்டிடிவியின் செய்திதொகுப்பிலிருந்து ஒரு பகுதி காட்டப்படுகிறது, "இங்கு தேர்தல்களில் சர்ச்சின் கட்டுப்பாடு உள்ளது. சர்ச்சின் ஆதரவு பெற்ற வாக்காளர்களே இங்கு வெல்ல முடியும். நிற்கமுடியும்." ரியாங்களுக்கு எதிரான கலவரங்களில் ஈடுபட்ட மிசோ இளைஞர் அமைப்பின் தொடக்கம் மிஷினரிகளால் என்பதையும் எவ்வாறு மிஸோக்கள் எவ்வாறு மிஷினரிகளால் 'தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாக' கூறி மேன்மைப்படுத்தப்பட்டனர் என்பதையும் அந்த விவரணப்படம் விளக்கலாம், உலகளாவிய மிசோ கிறிஸ்தவ இணைப்பமைப்பின் பிரகடனம் கூறும் வாசகத்தை இந்நேரம் காட்டலாம்: "We believe that the Bible is the complete and revealed Word of God, fully inspired and without error in the original writings; and that it has supreme authority in all matters of faith and conduct....We believe that all men are sinners by nature and by choice and are, therefore, under condemnation; and that salvation is by grace alone solely through faith in Jesus Christ: "...for there is none other name under heaven given among men whereby we must be saved."
அத்துடனே கூட ப்ரு தேசிய சம்மேளனத்தலைவர் (BNU) சய்பங்கா "நாங்கள் மதம் மாற மறுத்தமையால், மத மாற்ற முயற்சிகளை எதிர்த்தமையால் விரட்டப்பட்டோ ம்" எனக்கூறுவதை காட்டலாம். மேலும் ரியாங்குகளுக்காக தேசிய அளவில் குரல் எழுப்பிய வனவாசி கல்யாண ஆசிரமக்காரர்கள் அன்று கே.ஆர்.நாரயணனை சந்தித்து ரியாங்குகளின் நிலையை கூறியதையும் அதற்கு மதிப்பிற்குரிய அன்றைய குடியரசுத்தலைவரின் எதிர்வினை மௌனத்தின் காதைப்பிளக்கும் ஒலியை இன்று அவர் குஜராத் குறித்து எழுப்பும் ஒலியோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். அகதி முகாம்களிலேயே 500 பேர் இறந்திருக்கிறார்கள் -நல்ல குடித்தண்ணீர் கிடைக்காத காரணத்தால் என்பது இந்த விவரணப்படத்தில் குறிப்பிடப்படலாம். இன்றைக்கு இந்த ரியாங்க் குழந்தைகளுக்கான கல்விக்கு உதவும் வகையில் வன்வாசி கல்யாண் அமைப்பினர் மாதச்சம்பளம் நானூறு ரூபாய்க்கு நிஅயமித்த ஆசிரியர்களால் இலவச வகுப்புக்கள் எடுப்பதைக் காட்டலாம். அத்துடன் கூடவே இம்மக்களுடன் இருந்து அவர்களின் சுகாதாரத் தேவைகளுக்காக தம்மையே அர்ப்பணித்திருக்கும் ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனின் ஷயதானந்த மகராஜ் அவர்களுடன் இருந்து அவர்களுக்கு உதவுவதை காட்டலாம். களத்தில் எந்த உதவியும் செய்யாமல், ரியாங்குகளை ஹிந்துக்களா அல்லவா என பட்டிமன்றம் நடத்தும் சில இடதுசாரி அறிவுஜீவிகளையும், 'காஷ்மீர் பண்டிட்களுக்கு அகதி முகாம்களில் கிடைக்கும் வசதிகள் ரியாங்களுக்கு கிடைக்கவில்லை' எனப் பொய் பிரச்சாரம் செய்யும் அரசுசாரா அமைப்புகளின் குரலையும் இந்த ஆவணப்படத்தில் சொல்லி கீழ் காணும் படங்களில் பார்வையாளரிடம் ஆறுவித்தியாசம் கேட்கலாம்.




ஆனால் இத்தகையதோர் விவரணப்படம் வரப்போவதில்லை. ஏனெனில் அவ்வாறு வந்தால் அப்படம், சேவை, காருண்யம் ஒரு கன்னத்தை அறைந்தால் மறுகன்னத்தை காட்டும் அன்பு போன்ற வெளித்தோல்களுக்கு அப்பால் உள்ளிருக்கும் இராட்சத விலங்கு எப்படி அம்மணமாக ஆட்டம் போடுகிறது என்பதை காட்டக்கூடும் அத்துடனே கூட எப்படி இன்றும் நிகழும் மத்தியகால புனித விசாரணைகளை மிஞ்சும் கொடுமைகளுக்கு, ஹிட்லர் ஆறு மில்லியன் யூதர்களை கொன்ற போது மவுனித்த 'நாகரிக மேற்குக்கொப்ப' இங்கிருக்கும் மதச்சார்பற்ற ஊடகங்கள் அமைதி காத்து துணை போகின்றன் என்பதையும் இந்த விவரணப்படம் காட்டக்கூடும். எனவே இந்த விவரணப்படம் வருவது நடவாத ஒன்று.

இங்கிருக்கும் ரியாங்க் குழந்தைகளின் முகத்தை ஒருமுறை பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஆபிரகாமிய மார்க்கத்தை சாராதவராக இருப்பின் நாளை உங்கள் குழந்தைக்கும் இக்கதி வரலாம் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

Tuesday, August 23, 2005

குஜராத் கலவரங்களைக் குறித்த இக்கட்டுரையின் நோக்கம் நிச்சயமாக வன்முறையை நியாயப்படுத்துவதன்று. குஜராத்தில் கொல்லப்பட்ட அனைத்து மக்களுக்கும் இவ்வலைப்பதிவாளனின் அஞ்சலி. ஆனால் சில சக்திகள் இக்கலவரத்தை ஒரு குறிப்பிட்ட அமைப்பினர் திட்டமிட்டு முஸ்லீம்களுக்கு எதிராக செய்த படுகொலை-போக்ரோம் என்றெல்லாம் கூறுவது வக்கிரமான திரிபு வேலியேயாகும். பிணக்குவியலின் மீது நடத்தப்படும் ஓட்டுவங்கி அரசியலின் இருட்சித்து விளையாட்டுக்களேயாகும். இன்றைக்கு இவ்வாறு கூறும் கே.ஆர்.நாராயணன் ஏன் இக்கலவரத்திற்கு பின்னர் பாஜகவிடம் தமக்கு மீண்டும் குடியரசுத்தலைவராக வேண்டும் என ஆதரவ்வு கேட்டார். தேஜகூ அரசின் ஆதரவில் குடியரசுத்தலைவரான அப்துல் கலாம் அவர்கள் குஜராத் சென்று கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை காணமுடிந்தது ஆனால் ஏன் கே.ஆர்.நாராயணனால் சென்று காணமுடியவில்லை? அவரை தடுத்த சக்திகள் கலாமினை மட்டும் தடுக்கவில்லையா? இக்கேள்விகள் ஒருபுறமிருக்க குஜராத் கலவரங்களின் சில அதிகம் பேசப்படாத கூறுகளை ஆராயலாமா? முதலில் தெள்ளத்தெளிவாக ஒரு கூட்டத்தால் தீவைக்கப்பட்டதாக கருத இடமளிக்கும் பல தரவுகள் வெளிவந்தன. அச்சமயத்தில் எத்தகைய வாதங்கள் முதலில் 'மதச்சார்பற்ற' பத்திரிகைகளில் வெளிவந்தன? ஒரு இஸ்லாமிய தேநீர் கடைக்காரரின் 16 வயது மகள் கடத்தப்பட்டதாகவும் எஸ்-6 கோச்சில் அவளை கரசேவகர்கள் கொண்டு சென்றதாகவும் எனவே கோபமடைந்த இஸ்லாமிய மக்கள் (பெண்கள் உட்பட) எஸ்-6 கோச்சினை தாக்கியதாகவும் செய்திகள் வெளியாயின. இது மின்னஞ்சல் மூலம் பரப்பப்பட்டது. வி.ஆர்.கிருஷ்ண அய்யர் முதல் சையது நக்வி வரை பெரும் அறிவுஜீவிகளும் பத்திரிகையாளர்களும் இச்சம்பவத்தினை சுட்டிக்காட்டி எழுதினர். தேசிய அளவில் விற்பனையாகும் தி ஹிண்டு தி இண்டிய எக்ஸ்பிரஸ் தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆகியவை இச்சம்பவத்தினை இணைத்து கோத்ரா சம்பவம் குறித்து கட்டுரைகளை வெளியிட்டன. இந்நிலையில் இம்மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்த சம்பவத்தினை கண்டவராகக் கூறப்பட்டிருந்த ஒரு பத்திரிகையாளரை சந்தித்து இது குறித்து மேலும் தெரிந்துகொள்ள முயன்றார் அவுட்லுக் பத்திரிகையில் எழுதிவரும் பிரேம் சங்கர் ஜா (விபிசிங்கிற்கு நெருக்கமானவர், பாஜகவினை தாக்கி எழுதுபவர்.) அவரது வார்த்தைகளிலேயே இனி இது குறித்து தெரிந்துகொள்ளலாம். "...That was when I got my first surprise. Soni not only categorically denied having ever filed such a story, but also claimed that the contents of the mail were the exact opposite of what had happened. We were interrupted by another phone call (his life was being made miserable by inquiries). The next day when I called him again, he was out but I got his young son Vimal on the line. Vimal told me in great detail what his father had actually found out at the site of the tragedy. He said it was pre-planned and went on to add chilling details that his father had not included in his stories."(அவுட்லுக், 25.03.2002)ஜா மேலும் இக்கதையிலுள்ள பல தடுமாற்றங்களைச் சுட்டிக்காட்டுகிறார்.
ஆனால் இவையெல்லாம் நமது இடதுசாரிகளையோ அல்லது மதச்சார்பின்மைவாதிகளையோ நிறுத்தவில்லை. எல்லை தாண்டிய தொடர்புகள் கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாத-பயங்கரவாத அமைப்புகளுக்கு இது நாடெங்கும் பரவ நல்லதோர் வாய்ப்பாக பயன்பட்டது. ஜூலை 2002 சமரஸம் பத்திரிகையும் இதே செய்தியை வெளியிட்டதாக நினைவு. மற்றொரு மிகவும் பிரச்சாரப்படுத்தப்பட்டதோர் கதை மோடி நீயூட்டனின் விதியை மேற்கோள் காட்டியதாக. சைபர்னூன் பத்திரிகை (19 மார்ச் 2002) இம்மேற்கோள் தவறெனக்கூறியது. மோடி இவ்வாறு கூறியதாக கூறிய நிருபர், பின்னர் தாம் நேரடியாக மோடி கூறியதைக் கேட்கவில்லையென்றும் மோடி அவ்வாறு கூறியதாக மற்றொருவர் கூறியதை தாம் சிறிதே சுவாரசியம் சேர்த்து ரிப்போர்ட் செய்ததாக சொன்னார். பினாமி பெயரில் மத்தியபிரதேச வனப்பகுதியில் வருடத்தில் சிலநாட்கள் தங்க பல்லாயிரம் சதுரமீட்டர்கள் பரப்பளவில் பங்களா கட்டியமை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இடதுசாரி குட்டித்தேவதையின் கற்பனை வளமிக்க பொய்யையும் நாம் மறந்துவிட இயலாது. எம்பி ஜாஃப்ரீயின் இல்லாத மகள் ஹிந்து வெறியர்களின் கூட்டத்தால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது குறித்து அவர் எழுதிய உணர்ச்சி பூர்வக் கட்டுரை 11 இந்தியமொழிகளில் முற்போக்கு கூட்டங்களால் மொழிபெயர்க்கப்பட்டு ஏறத்தாழ எழுதப்படிக்கத் தெரிந்த அனைத்து இஸ்லாமிய இளைஞர்களாலும் வாசிக்கப்பட்டது. பின்னர் பல்பிர் புஞ்ச் இக்கதையின் பொய்யை தெளிவுப்படுத்தினார். ஜாஃப்ரியின் ஒரே மகள் அமெரிக்காவில் (அட...முஸ்லீம் லீக் எம்பியின் மகள் அந்த மாபெரும் சைத்தானிய தேசத்திலா ...) இவ்வாறு முதலில் தவறாக கூறிய டைம் பத்திரிகை மன்னிப்பு தெரிவித்திருப்பதையும் சுட்டிக்காட்டினார். பெரும் பொய்களின் சிறு தேவதை வேறு வழியில்லாமல் அவரது கட்டுரை பிரசுரமான பத்திரிகை பத்திரிகையாக மன்னிப்பு கேட்கவேண்டி வந்தது. அவரது மன்னிப்பினை தருகிறேன் பாருங்கள்:"My information (mis-information, as it turned out) was cross-checked from two sources. Time magazine (March 11) in an article by Meenakshi Ganguly and Anthony Spaeth; and "Gujarat Carnage 2002: A Report to the Nation" by an independent fact-finding mission which included K.S. Subrahmanyam, former IGP Tripura, and S.P. Shukla, former finance secretary. I spoke to Mr Subrahmanyam about the error. He said his information at that time came from a senior police official."
குஜராத் அரசினை தாக்க பலரும் பயன்படுத்தியது இந்த அறிக்கையைதான். 'Fact finding mission' இன் இலட்சணத்தை பார்த்துக்கொள்ளுங்கள். ஜாஃப்ரி தாக்கப்பட்ட இடத்துக்கே அவர்கள் சென்று பார்வையிட்டிருக்கலாம். அவர்களுக்கு மிகவும் வேண்டிய தொலைக்காட்சி நிருபர்கள் அங்குதான் இருந்தார்கள் அவர்களிடம் கேட்டு சரிபார்த்திருக்கலாம். ஆனால் ...அதையெல்லாம் விட அவர்களுக்கு முக்கியமாக தோன்றியது "மிகவும் கொடூரமாக மோடி அரசை காட்ட கிடைத்துவிட்டது ஒரு வழி அதைப்போய் யாராவது சரி பார்த்திட்டு இருப்பாங்களா" என்கிற நினைப்புதான் போல. ஆசியன் ஏஜ் பத்திரிகையில் ஜாஃப்ரியின் மகன் கொடுத்த பேட்டியை அகஸ்மாத்தமாக படிக்க நேர்ந்ததால் இந்த பொய் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் கண்டுபிடிக்கப்படாமல் பரப்பப்பட்டுக்கொண்டிருக்கும் பொய்கள் எத்தனை என யாருக்குத் தெரியும்?
குஜராத் கலவரங்கள் 'genocidal', 'pogroms against Muslims', 'holocaust' எனும் பதங்களால் அழைக்கப்படுகின்றன. அரசு-சாரா-அமைப்புகள், இடதுசாரிகள் ஆகியோரின் 'fact-finding' missions பொதுவாக குஜராத் அரசும் மத்திய பாஜக அரசும் இஸ்லாமியர்களை பாதுகாக்கவில்லை 'எங்களுக்கு உங்களை காப்பாற்ற உத்தரவு இல்லை' எனக்கூறினார்கள், என்றெல்லாம் கூறுகின்றன. ஹிந்துக்கள் மட்டுமே இஸ்லாமியர்களைத் தாக்கினார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இவையெல்லாம் எந்த அளவு உண்மை? இதோ நானாவதி கமிஷன் முன்னால் பாதிக்கப்பட்ட ஹிந்து மக்கள் அளித்த வாக்குமூலங்களிலிருந்து ஒரு சாம்பிள்: [PTI செய்தி: வெள்ளி, செப்டம்பர் 19 2003 18:03 (IST)]இன்று ஒரு பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் தமது மகனை ஆயுதங்கள் தாங்கிய இஸ்லாமியர்கள் இழுத்துச்சென்றதாகவும் அவன் கொல்லப்பட்டிருக்கக் கூடும் என தாம் நம்புவதாகவும் கூறினார். அந்தப்பகுதியில் இஸ்லாமிய கும்பலின் தாக்குதலில் 26 குடும்பங்கள் வீடிழந்தன. கிஷன் தாக்கர் எனும் மற்றொரு பாதிக்கப்பட்டவர் கூறினார் துப்பாக்கிகள் இன்ன பிற ஆயுதங்களுடன் இஸ்லாமியர்கள் தாக்கியதாகவும் கடும் வன்முறையில் ஈடுபட்டதாகவும் "காஃபீரோங்கோ காத் டாலோ" எனும் கோஷம் மசூதியிலிருந்து கேட்டதாகவும் கூறினார்.
இது இஸ்லாமிய மக்கள் களத்தில் குஜராத் காவல்துறையினரின் நடவடிக்கை குறித்து அளித்த வாக்குமூலங்களிலிருந்து ஒரு சாம்பிள்:[PTI செய்தி செவ்வாய், செப்டம்பர் 23 2003 17:09(IST)பல சிறுபான்மையின சாட்சிகள் செப்டம்பர் 23 அன்று விசாரணை கமிஷனிடம் சரியான நேரத்தில் காவல்துறையினர் புறநகரில் உள்ள ராமோல் பகுதிக்கு வந்தது ஆயுதங்கள் தாங்கிய ஹிந்து கும்பலிடமிருந்து தம்மை காப்பாற்றியதாக தெரிவித்தனர். ... 'இஸ்லாமாபாத் அமைப்பு' (பாகிஸ்தானிய நகரின் பெயரில் இந்தியாவில் குடியிருப்பு ...இதுவும் நல்லெண்ண வளர்ச்சி மனப்பாங்காக இருக்கும் என நினைக்கிறேன் - அரவிந்தன் நீலகண்டன்) சார்ந்த டாக்டர் இஸ்மாயில் மன்சூரி , 15000 பேர் வாழும் தம் குடியிருப்பை ஹிந்துக்கள் தாக்க வருகையில் போலிசாரின் தக்க செயல்பாடே படுகொலையைத் தவிர்த்ததாக தெரிவித்தார். ஆனால் அதற்கு முன்னர் ஒரு அதிரடி போலிஸ் படையினர் தம் வேண்டுகோளை உதாசீனப்படுத்தி சென்றுவிட்டனர் எனக்கூறினார். மற்றொரு சாட்சியான அப்த்துல்லா சையது கமிஷனிடம் பிப்-28 2002 அன்று பஜ்ரங்தள் ஆட்களையும் காவி தலையணி அணிந்தவர்களையும் கொண்ட கும்பலிலிருந்து தம்மை காவல்துறையினர் காப்பாற்றியதாகக் கூறினார்.
ஆகக்கூடி 2002 இல் குஜராத்தில் நடந்தது ஒருபக்க படுகொலை அல்ல. மாறாக ஒரு கை ஓங்கியிருந்த கலவரம். இருதரப்பினரும் ஈடுபட்ட கலவரமே அன்று நிச்சயமாக 1984 இல் மதச்சார்பின்மை கட்சியாளர்கள் நடத்தியது போன்ற படுகொலை அல்ல. இன்றைய ஆளும் கட்சியினரின் அமைச்சர் ஸ்ரீப்ரகாஷ் ஜைஸ்வால் பாராளுமன்றத்தில் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் இதற்லி மேலும் சான்று பகர்கின்றன. இதன்படி 790 முஸ்லீம்களும் 254 ஹிந்துக்களும் கொல்லப்பட்டனர். பிப்ரவரி 27 இல் கோத்ரா சம்பவம் நிகழ்ந்தது. பிப்ரவரி 28இல் விஸ்வஹிந்துபரிஷத் பந்த் நடத்தியது. அன்றே கலவரங்கள் ஆரம்பித்தன. அது கூட ஹிந்துக்கள் மட்டுமே தாக்கியதாக இல்லை. ஆனால் இஸ்லாமியர்கள் கலவரங்களில் ஈடுபட்ட காட்சிகள் கூட காட்டப்படாமல் தவிர்க்கப்பட்டன. உதாரணமாக பிப்ரவரி 28 அன்று பிரகாம்புரா பகுதிகளில் கலவரங்களில் ஈடுபட்ட முஸ்லீம்கள் ஏஎன்ஐ எனும் தொலைக்காட்சியினரது காமிராவை எரித்து அவர்களை குஜராத் மாநில பேருந்துக்குள் நான்கு மணிநேரம் சிறைபிடித்து வெறியாட்டங்கள் முடிந்தபின்னரே அனுப்பினர். குஜராத் கலவரங்களின் முகமாக காட்டப்பட்ட புகைப்படத்தில் கூட ஒரு நுட்பமான உளவியல் மோசடி உள்ளது. அப்படத்தை யாரிடமாவது காட்டுங்கள். இந்த ஆள் என்ன செய்கிறார் என கேளுங்கள். பொதுவாக அவர்கள் தம்மை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறார் அல்லது உயிர்பிச்சை வழங்க மன்றாடுகிறார் என்பார்கள். இப்புகைப்படம் உலகெங்கும் பரப்பப்பட்டது. அண்மையில் சென்னையில் ஒரு முக்கிய நாளேடு தன் விளம்பர பலகையிலேயே இப்புகைப்படத்தை பெரிதாக வைத்திருந்தது. லஸ்கர் இ தொய்பாவின் இணையதளத்தில் இப்புகைப்படம் "இந்த முஸ்லீமுக்கு ஒரு AK-47 தேவையல்லவா?" எனக்கேட்டிருந்தது. ஆனால் சொல்லப்படாத விஷயம் என்னவென்றால் அவர் உயிர்பிச்சைக் கேட்கவில்லை மாறாக தம்மைக் காப்பாற்றிய பாதுகாப்புபடைகளுக்கு நன்றி சொல்கிறார் என்பதுதான். இவ்வாறாக பலதளங்களில் ஒருங்கிணைந்த வெவ்வேறு சக்திகளின் செயல்பாட்டின் மூலம் ஒரு மிகவும் பலம் வாய்ந்த உணர்ச்சிபூர்வமானதோர் பிம்பம் உருவாக்கப்பட்டது. அம்மாய பிம்பமே குஜராத் படுகொலைகள். இம்மாய பிம்பத்திற்கு அப்பாலான உண்மை அது குஜராத் கலவரங்கள் என்பதே. பஞ்சாபில் பயங்கரவாதத்தை ஒடுக்கிய KPS கில் இன்று Institute for Conflict எனும் அமைப்பின் தலைவராக உள்ளார். "New Theatre Of Islamist Terror " எனும் கட்டுரையில் அவர் கூறியுள்ளது: ...there has been continuous evidence of recurrent efforts by Pakistan backed Islamist extremist groupings to engineer terrorist incidents in Gujarat in the months since the riots in this State. These are only a handful of the recent intelligence breakthroughs that prevented acts of terrorism from taking place in Gujarat,...and are part of a much larger plan that extends well beyond this State, and that predates the Gujarat riots by many years. Since 1998, for instance, Central intelligence and State police units charged with countering Pakistan-backed terrorism in India outside the State of Jammu & Kashmir, have identified and dismantled at least 162 terrorist and support modules [1998: 29; 1999: 30; 2000: 25; 2001: 59; 2002 (till September 25): 19] located virtually across the country. These figures relate only to terrorist and terrorist support activities, and do not include arrests relating to subversion and espionage charges. (அவுட்லுக் செப்.30.2002)ஆக, குஜராத்தில் கலவரம் உருவாக்கவும் அதன் மூலம் பயங்கரவாதத்தை உருவாக்கவும் ஐஎஸ்ஐ அமைப்பு பலகாலமாக சதி செய்துவந்துள்ளது. அதனுடைய விளைவே கோத்ராவும், அதற்கு அப்பாலும், அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பிரச்சார பிம்பங்களும். இதில் இடதுசாரிகள் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் நெடுநோக்குத்திட்டத்தில் தங்களையே மனமுவந்தோ அறியாமலோ சதுரங்க காயாக்கிக் கொண்டனர். இடதுசாரி ஊடக பெருமுதலாளிகள் (Leftist media barons) எனும் புதுவர்க்க கும்பல் ஒன்று இதில் பெருத்த லாபமும் சம்பாதித்துள்ளது - வெறும் பணமாக மட்டுமல்ல என்பதும் மற்றொரு உண்மை. எனில் பானர்ஜி கமிஷன் அறிக்கை? அது குறித்தும் மேலும் சில தகவல்கள் குறித்தும் அடுத்த பதிவில்.

Monday, August 22, 2005

1.ஏன் பாரதத்தில் மட்டும் சாதிக்கொடுமைகள் உள்ளன? சாதிய அமைப்புகள் உள்ளன? இந்த சமுதாய ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தும் கருத்தியல் அமைப்புதான் ஹிந்து தத்துவ தரிசனமா?
2.இச்சமுதாய தீமையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட உள்-வன்முறை நிரம்பித் தளும்பும் அமைப்புதான் பாரதத்தின் பாரம்பரிய சமுதாயமா? இவற்றினை பாதுகாப்பதும் மேலும் இறுக்கமடைய செய்வதும் தான் ஹிந்துத்வ அமைப்புகளின் நோக்கமா?
3.இந்த சமுதாய அமைப்பிற்கு எதிரான ஜனநாயக கலகக் குரல்களாகவே இஸ்லாமிய, கிறிஸ்தவ மதமாற்றங்களையும், மதமாற்ற சக்திகளையும் காணவேண்டுமா?
4.ஹிந்துத்வ அமைப்புகளின் சித்தாந்தமான ஹிந்துத்வம் ஒரு வெறுப்பியல் சித்தாந்தமா?

பொதுவாக 'அறிவுஜீவிகள்' முன்வைக்கும் மேற்கண்ட பார்வைக்கு எனது ஹிந்துத்வ இயக்க அனுபவத்திலும், சிற்றறிவுலும் எட்டிய பதில்களை இனிவரும் பதிவுகளில் அளிக்க இருக்கிறேன்.அத்துடன் இணைய தமிழ் சகோதரர்களும், மாற்றுமத/இடதுசாரி சகோதர-சகோதரிகளும் தம் கேள்விகளை கேட்பின் அவை பதிலளிக்கப்படும். தயை செய்து வெறுப்பியல் பதங்களையும் வெறுமையான மேடைப்பேச்சுத்தனமான கேள்விகளையும் தவிர்க்கவும். ஆனால் எந்த கருத்தியல் சார்ந்த பின்னோட்டமும் அழிக்கப்படாது. (விளம்பர பின்னோட்டங்கள் அழிக்கப்படும்.)

Sunday, August 21, 2005

சிலமாதங்களுக்கு முன்னால் சென்னையில் நான் காண நேரிட்ட ஒரு நிகழ்ச்சி 'அமைதி' கண்காட்சி (Peace). அழைத்து சென்ற இஸ்லாமிய சகோதரர் ஒரு காட்சி அமைப்பினை வைத்திருந்தார். அவரது அழைப்பின் பேரில் சென்றேன். வாயிலில் நுழைவுக்கட்டணப் பகுதிக்கு செல்கையில் காவலாளர் அழைத்து சென்ற நண்பரிடம், "காஃபீருங்களுக்கு கட்டணம் கிடையாது" என்பதை கேட்க நேர்ந்தது என் துர்பாக்கியம். நண்பர் அன்புடன் "மாற்று மத சகோதரர்களுக்கு நுழைவுக்கட்டணம் ஏதும் கிடையாது" என்றார். இலவசமாக எடுத்துக்கொள்ள வைக்கப்பட்டிருந்த தமுமுகவின் அதிகாரபூர்வ ஏடுகள் பழைய கூட்டாளியின் வன்முறை வரலாற்றை கூறிக்கொண்டிருந்தன. (வன்முறையை நியாயப்படுத்துறதெல்லாம் அவுரங்கசீப்புக்கு மட்டுந்தானுங்களா ஆப்தீனுக்கு கிடையாதுங்களா என கொட்டாவி மூலம் உள்நுழைந்து சைத்தான் கேட்ட கேள்வியை மறந்துவிடலாம்.) அங்கிருந்த ஸ்டால்களில்லொரு சூப்பர் ஸ்டாராக ஹரூன் யாஹியாவின் படைப்புகள் விளங்குவதை காண முடிந்தது. அவரது படைப்புவாத நூல் 'Tell me about the Creation' (Goodword publishers, New Delhi) இந்தியாவில்தான் முதலில் வெளியிடப்பட்டுள்ளது. பரிணாம அறிவியலை 'பொய்யென நிரூபிக்கும்' பல குறுந்தகடுகளும் அங்கு இறைந்து கிடந்தன. திண்ணையில் சில இஸ்லாமிய நண்பர்களும் காஃபீரான அரவிந்தன் நீலகண்டன் உய்யுமாறு அவரது இணையதளத்தினை சுட்டிக்காட்டவே அவரது நூலை வஹி வராமலே 'இறக்கி' படித்தால்...ஒரு விஷயம் புரிந்தது...இந்நூலைப் பயன்படுத்தி பரிணாம அறிவியலை விளக்கி எழுதலாம் அத்துடன் படைப்பு வாதிகள் செய்யும் திரிப்பு வேலைகளையும் வெளிப்படுத்தலாம் என்று. எனவே இங்கு எழுதப்பட்டுள்ள கட்டுரையை படித்து விட்டு இந்த வகுப்புவாத காஃபீரை நீங்கள் அர்ச்சிக்கலாம்.

Saturday, August 20, 2005

பரிணாம அறிவியல், மானுட அறிவுப்பயணத்தில் அதன் தாக்கம் ஆகியவற்றை குறித்ததோர் வலைப்பதிவை தொடங்கியுள்ளேன். காண்க:

பரிணாம அறிவியல்

Friday, August 19, 2005

நாடுகின்ற ஞானமன்றில் ஆடுகின்ற அழகன்

நடராஜரின் மிஞ்ச இயலாத ரிதம், அழகு ஆற்றல், நளினம் ஆகியவற்றிற்கு அப்பால் நோக்கிய அனந்த குமாரசுவாமி "எச்சமயத்தாலும் எக்கலையாலும் வெளிப்படுத்தப்பட முடிந்த இறை செயல்பாட்டின் ஆகச்சிறந்த பிம்பம்" என எழுதினார். அண்மையில் ப்ரிட்ஜாஃப் கேப்ரா "படைப்பு அழிப்பு எனும் இசைவியக்கம் பருவகாலங்களிலும் உயிர்களின் பிறப்பிறப்பிலும் மட்டும் வெளிப்படுவதில்லை. ஆயின் அது
ஜடப்பொருளின் அடிப்படைத்தன்மையிலேயே விளங்குவதாக நவீன இயற்பியல் காட்டுகிறது" என்றும் " நவீன இயற்பியலாளருக்கு சிவதாண்டவம் பருப்பொருளில் அணுவினும் சிறிய துகள்களில் காணப்படும் தாண்டவம்" என்றும் கூறுகிறார். அது ப்ரிட்ஜாஃப் கேப்ரா முடிவு செய்ததது போலவே: "நூற்றாண்டுகளுக்கு முன்னர் பாரத கலைஞர்கள் நடனமாடும் சிவனின் அழகிய சிலைவரிசைகளை உருவாக்கினார்கள். நம் காலத்தில் இயற்பியலாளர்கள் மிகவும் நுண்ணிய தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்தி பிரபஞ்ச தாண்டவத்தின் கோலங்களைக் காட்டுகின்றனர். பிரபஞ்ச தாண்டவம் எனும் உருவகம் பழம் புராணத்தையும், சமயக்கலையையும், நவீன இயற்பியலையும் இணைக்கிறது."


ஜூன் 18, 2004, அன்று ஜெனீவாவின் CERN, எனப்படும் ஐரோப்பிய துகள்-இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் இரண்டு மீட்டர் உயரமுடைய நடராஜ சிலை நிறுவப்பட்டது. பாரத அரசால் இந்த ஆராய்ச்சி மையத்துடன் பாரதத்திற்கு உள்ள உறவினைக் காட்டும் விதத்தில் இது நிறுவப்பட்டது. அச்சிலை பீடத்தில் செதுக்கப்பட்ட வாசகங்களே நீங்கள் வாசித்தவை.

நவீன இயற்பியலின் பிரபஞ்ச தாண்டவ தரிசனத்திற்கும் நடராஜ தத்துவத்திற்குமான இணைத்தன்மைகள் ப்ரிட்ஜாஃப் கேப்ராவால் 1972 இல் அவர் எழுதிய "The Dance of Shiva: The Hindu View of Matter in the Light of Modern Physics," எனும் கட்டுரையில் வெளியிடப்பட்டது. (Main Currents in Modern Thought,1972). பின்னர் 1975 இல் அது 'இயற்பியலின் தாவோ' என நூலாக வந்தது. தமிழில் இந்நூல் பொன்.சின்னத்தம்பி முருகேசன் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு சந்தியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

நன்றி: http://www.fritjofcapra.net/shiva.html
புகைப்படம்: Giovanni Chierico (www.fritjofcapra.net)

நல்வரவு கூறிய மதி கந்தசாமி, ஈஸ்வர், ஸ்ரீ ரங்கன், நேசகுமார், மற்றும் ரோசா வசந்த் ஆகியோருக்கு நன்றி.

Thursday, August 18, 2005

இங்கு நீங்கள் காண்பது விவேகானந்த கேந்திரத்தில் வர்ம கருத்தரங்கின் சில காட்சிகள்
1. வைத்தியர் இராஜ்குமார் ஆசான் உரையாற்றுகிறார்

"கத்திரிக்கோல் இயக்கம் எனக் கூறப்பட்டுள்ளது. வலப்பக்க கட்டுப்பாடு இடப்பக்கத்திற்கு. இடப்பக்க கட்டுப்பாடு வலப்பக்கத்திற்கு. அச்சாக விளங்குவது மூலாதாரம். ஒரு தேங்காய் மீது உட்கார்ந்து பார்க்க மூலாதாரம் அழுத்தப்படுகையில் ஏற்படும் விளைவுகள் தெரியும். வர்மம் எப்படி செயல்படுகிறது என்பதை அறிவியல் கண்டுபிடிக்க வேண்டும். நாங்கள் வர்மத்தை பயன்படுத்துகிறோம் அவ்வளவுதான். செய்கிறோம் அது செயல்படுகிறது அவ்வளவுதான். எப்படி? தெரியாது."


2. வீர விளையாட்டுக்கள் ஆரம்பிக்கும் முன் ஆசான்களிடம் ஆசிகள் வணங்கும் காட்சி


3. வர்ம சிகிச்சை செய்முறை விளக்கம்: டாக்டர்.இராஜேந்திரனின் கல்லூரி ஆசிரியரும் மாணவரும்


4. வர்மம் ஒன்றின் உள்ளுறுப்பு இணைகள் - வாசித்துக் காட்டப்பட்ட ஆய்வுத்தாள் காட்சி

Wednesday, August 17, 2005

விவேகானந்தபுரத்தில் உள்ள கிராமோதய பூங்கா -ஏக்நாத் அரங்கில் ஆகஸ்ட் 12 மற்றும் 13 தேதிகளில் நடத்தப்பட்ட தேசிய வர்ம கருத்தரங்கு விவேகானந்த கேந்திரத்தின் இயற்கைவள அபிவிருத்தி திட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. CCRAS அமைப்பினைச் சார்ந்த டாக்டர்.லவேக்கர் மற்றும் டாக்டர் தெய்வநாயகம் ஆகியோர் தொடக்கவிழாவில் பங்கேற்றினர். பல இருப்புகளில் வர்ம மருத்துவத்தின் பல பரிமாணங்கள் ஆராயப்பட்டன. குமரி மாவட்டம் மற்றும் தென் தமிழகத்தின் மாவட்டங்களிலிருந்து (குறிப்பாக திருநெல்வேலி, தூத்துகுடி) வந்திருந்த ஆசான்கள், ஆயுர்வேத மற்றும் சித்தமருத்துவ வைத்தியர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் இரண்டு நாட்கள் நடந்த நிகழ்வுகளிலும் கேள்விபதில் பகுதிகளிலும் கலந்து கொண்டனர். 12 ஆம் தேதி மாலை ஆசான் முருகன் அவர்களும் அவரிடம் பயிலும் மாணவர்களும் குமரி மாவட்ட வீர விளையாட்டுக்களை செய்து காட்டினர். வர்ம அடங்கல்கள், இளக்கு முறைகள் ஆகியவை குறித்து சில செய்முறை விளக்கங்களும் அளிக்கப்பட்டன. பாரம்பரியமான ஆசான் பரம்பரைகளை சார்ந்த மூத்த ஆசான்கள் முதன்முறையாக வர்மம் குறித்த தேசிய கருத்தரங்கில் கலந்து கொள்வது இதுவே முதல் தடவையாகும். அக்குபஞ்சர் புள்ளிகளுக்கும் வர்ம புள்ளிகளுக்குமான இணைத்தன்மைகள், வர்மபுள்ளிகளுக்கு இணையாக விளங்கும் உள்ளுறுப்புகள் (anatomical correlates of Varma points in the face and neck region) என்பன போன்ற தொடர்புல ஆய்வுத்தாள்களும் வாசிக்கப்பட்டன. பாரம்பரிய ஆசான்களிடம் வந்து கற்பதில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து விளக்கினார் குமரி மாவட்டத்தின் முதிர்ந்த ஆசான் பாஸ்கரன் அவர்கள். வைத்தியர்.ஆசான்.இராஜ்குமார் வர்மத்தினை ஒரு மேடை நிகழ்ச்சியாக விளக்கிக்காட்டுவதில் உள்ள கடினங்களை விளக்கினார். மூலச்சல் வர்ம பள்ளி நடத்தும் இராஜேந்திரன் வர்மப்புள்ளிகள் மூலம் குறிப்பிட்ட சில நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தும் ஜன்னியை கட்டுப்படுத்துவது குறித்தும் கூறினார். வைத்தியர் திருப்பதி ஆசான் வர்ம சிகிச்சையில் மருந்து தயாரிப்பது குறித்து பேசினார். வர்ம சிகிச்சை முறைக்காக ஆசான்களையும் வைத்தியர்களையும் கூட்டுவித்து தேசிய அளவிலான ஒரு கருத்தரங்கு நடந்தது இதுவே முதல் முறையாகும். ஆனால் இது ஒரு தொடக்கமே இனி முன்னோக்கி நகர்ந்து வர்மவியலை ஒரு சீரிய சிகிச்சை முறையாக மாற்றுவதில் பல்துறையாளர்களும் முன்னின்று உதவ வேண்டும். இக்கருத்தரங்கின் வெற்றிக்கு பின்னால் நின்ற பேருள்ளங்கள்: வைத்தியர் திருப்பதி ஆசான், சித்தா டாக்டர். கணபதி , டாக்டர் லவேக்கர், மற்றும் விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தி திட்டத்தின் செயலர் வாசுதேவ்ஜி அவர்கள். இக்கருத்தரங்கின் இலச்சினை வாசகமான 'காயத்தில் நின்ற கருத்தறிவோம்' திருமூலர் திருமந்திர வாசகத்தினை தழுவியது.

வணக்கம். நான் அரவிந்தன் நீலகண்டன். எனது ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில். இவ்வலைப்பதிவினைத் தொடங்கியதன் நோக்கம் எண்ணங்களையும் உணர்வுகளையும் உலகெங்குமுள்ள தமிழ் சகோதரருடன் பகிர்ந்து கொள்ளவும், உரையாடவும். உங்கள் எதிர்வினைகள் மூலம் நாம் இணைந்து வளரலாம்.
சொற்பதம் கடந்த துரிய மெய்ஞானம்
பிள்ளையார் சுழி என்றவுடன் கடந்த ஆங்கில மாதம் (ஜூலை, 2005) டல்ஸா (Tulsa) எனும் அமெரிக்க இயற்கை காட்சியகத்தில் நடந்ததோர் விஷயம் ஒன்றை இணையத்தில் படித்தது ஞாபகம் வருகிறது. அமெரிக்காவின் ஒன்பது தேசிய இயற்கை காட்சியகங்களில் இதுவும் ஒன்று. இங்கு யானைகளுக்கான காட்சியிடத்தில் விநாயகர் சிலை ஒன்று உள்ளது. இக்காட்சியகத்தின் நுழைவுவாசலில் 'பூமி நம் அன்னை விண் நம் தந்தை' எனும் பூர்விகக் குடியினரின் ஆன்மிக வாசகமும் இடம் பெற்றுள்ளது. (நமது பூமி சூக்த வாசகங்களில் வருவது போலில்லை?) உயிரின் தோற்றமும் வளர்ச்சியும் பரிணாம அறிவியல் அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளன. இத்தனையும் போதாதா உள்ளூர் அடிப்படைவாதிகளுக்கு ஆராசனை வர. வந்தேவிட்டது. டான் ஹிக்ஸ் என்கிற அடிப்படைவாத மதமாற்றி (evangelical) கிறிஸ்தவர் இவற்றினை கடுமையாக எதிர்த்தார். இயற்கை காட்சியக இயக்குநர்களில் கணிசமானவர்களை தனது நிலைபாட்டிற்கு மாற்றினார். டல்ஸா இயற்கை காட்சியக இலச்சினைஉள்ளூர் மேயர் வரைக்குமாக விவகாரம் சென்றது. விநாயகர் சிலை வைக்கப்பட்டிருப்பது கிறிஸ்தவ எதிர்ப்பு மனநிலையை காட்டுவதாகவும் கூறினார். விவிலியத்தின் படைப்பு-கற்பனை வசனங்களை படங்களுடன் காட்சியகத்தில் வைக்க 3000 டாலர்களையும் தருவதாகக் கூறினார். இப்போது மற்றொரு பிரச்சனை ஆரம்பித்தது. அறிவியல் அறிவுடையவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். விவிலிய படைப்புவாத கற்பனையின் வசனங்களை வைத்தால் டல்ஸா தேசிய இயற்கை காட்சியகமாக விளங்குவதிலிருந்து பிற்போக்குத்தன்மையை அடைந்துவிடும் எனக் கூறி எச்சரித்தனர். உடனே ஹிக்ஸுக்கு சம்மதித்தவர்கள் உடனே 'விவிலிய படைப்புவாதக் கற்பனை' மட்டுமின்றி ஆறேழு வெவ்வேறு கலாச்சாரங்களிலிருந்து வரும் கற்பனைகளையும் வைக்காலாமெனக் கூறினர். படைப்பு வாத அடிப்படைவாதிகளுக்கு இப்போது அச்சம் கொடுக்க ஆரம்பித்தது. ஏனெனில் அவ்வாறு செய்யப்பட்டால் விவிலியத்தின் படைப்புவாதம் எவ்வாறு மற்றொரு கற்பனை மட்டுமே என்பது தெளிவாக தெரியும் என்பதும் மாறாக பரிணாம அறிவியலின் பார்வை எவ்வளவு சிறந்தது என்பதும் தெரிந்துவிடுமென அஞ்சினர். மேலும் எந்த கலாச்சாரத்தின் படைப்பு குறித்த தரிசனத்தை வைப்பது? எவ்வாறு தேர்ந்தெடுப்பது? விளைவு- படைப்புவாத விவிலிய வசனங்களை வைக்கும் முயற்சியே கைவிடப்பட்டது. இது குறித்த நியூயார்க் டைம்ஸின் வார்த்தைகளுடனேயே நிறைவு செய்கிறேன், 'Second thoughts are a creative characteristic of Homo sapiens, and the Tulsa Zoo directors did well by theirs. They were fortunate to have G anesh, known to true believers as the remover of obstacles and the god of harmony, on the grounds.' (நியூயார்க் டைம்ஸ் ஜூலை 10, 2005).
'கற்பகமென வினை கடிதேகும்.'