அகப்பயணம்

Monday, July 23, 2007

ஒரு கூடை முடைபவரும் சாதியமும்

காலம் ஏறத்தாழ கிபி 8-ஆம் நூற்றாண்டு:
பெரும் புலியூரில் புலியூர் அடிகள் எனும் தீட்சிதர் வேள்வி ஒன்றினை செய்து கொண்டிருந்தார். அவர் திருமழிசையாழ்வாரின் பொன்னடிகள் பணிந்து தாம் செய்து வரும் வேள்விக்கு வரவேண்டும் என விண்ணப்பம் செய்து கொண்டார். திருமழிசையாழ்வாரின் திருமுகப்பொலிவே தீட்சிதரைப் பிரமிக்க வைத்தது; "இவரே மெய்யடியார்; இப்படி ஒரு பரம பாகவதரைக் காணக்கூடுமானால் இதுவே கண் படைத்த பயன்; இந்த வேள்வியின் பயனும் இதுதான்!" என்று அவரை எண்ணமிடச் செய்தது. ஆழ்வாரை அழைத்துக்கொண்டு யாகசாலைக்குள்ளே போய் ஆழ்வாருக்கு அக்ரபூஜை (தலைமை வழிபாடு) செய்தார். அது கண்டு அங்குள்ள அத்வர்யு (வேள்விக்குத் தலைமை தாங்குபவர்) முதலான சடங்கிகள் கோபம் கொண்டார்கள். தீட்சிதரை நோக்கி
"பிரப்பங்கூடை முடைந்து விற்றுப்பிழைக்கும் இத்தாழ்குலத்தவனை இப்படி இங்கே பூஜித்து யாகத்தை கெடுத்து விட்டீரே!"
என்றெல்லாம் பொறுக்க முடியாத வார்த்தைகளை சொல்லிப் பழித்தார்கள். ஆழ்வார் நீறு பூத்த நெருப்பு போல இருந்தார். தீட்சிதரோ நெஞ்சம் கொதித்து
"அந்த நாளில் தரும புத்திரனின் ராஜசூய யாகத்தில் கண்ணனுக்கு அக்கிர பூஜை நடந்ததை அக்கிரம பூஜை என அதை சிசுபாலன் பழித்ததை நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?"
என்று அவர்களை நோக்கி எச்சரிக்கை செய்தும் அந்த எச்சரிக்கையும் பயனளிக்கவில்லை.

தீட்சிதர் ஆழ்வாரை நோக்கி "சுவாமி இவர்களும் உய்ந்துபோகும் படி உண்மையை வெளியிடலாகாதா?" என்று கதறினார். உடனே நீறு விலகி நெருப்பு ஜொலிப்பது போல் ஆழ்வாரின் மேனி அற்புதமாக ஜொலிக்கத் தொடங்கியது.

ஆழ்வார் தமது இதய கமலத்தில் அந்தர்யாமியாக திகழும் அற்புதனை நோக்கி,
அக்கரங்கள் அக்கரங்கள்
என்றுமாவதென்கொலோ?
இக்குறும்பை நீக்கி என்னை
ஈசனாக்க வல்லையேல்
சக்கரங் கொள் கையனே
சடங்கர்வாய் அடங்கிட
உட்கிடந்த வண்ணமே
புறம்பொசிந்து காட்டிடே
என பிரார்த்தித்தார்.

ஆழ்வாருடைய தோற்றத்தில் திடீரென்று ஏற்பட்ட மாறுதல் அந்த வேள்விச்சாலையில் இருந்த வைதிகர்களையெல்லாம் பிரமிக்கச்செய்கிறது. அவரது திருமார்பிலே அனற்பிழம்பு வீசி சக்கரம் சுழன்றது. பகவானுடைய சுதர்சனம் என்கிற சக்கரதாயுதத்தின் அம்சமாகத் திருமழிசைப்பிரான் அவதரித்திருக்கிறார் என்கிற உண்மையை அந்த காட்சி உறுதிப்படுத்தியதாம். விரைவில் கடல் முழங்குவது போல ஒரு முழக்கம் கேட்கிறது. "அந்த மகா சர்ப்பத்துக்குத்தான் எத்தனை தலைகள்!" என பார்த்தவர்கள் பயப்படுகிறார்கள். இந்திர நீல வர்ணமுள்ள மேகம் ஒன்று மலை உச்சியில் சாய்ந்து கிடப்பது போலக் காண்கிறது. அது வர வரப் பெரியதாகி பெரு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுமாறு மழை பெய்யப்போவது போல காட்சி அளிக்கிறது. அந்த மின் வெட்டின் அழகைத்தான் என்னவென்பது.

பகவான் பாற்கடலோடும் அனந்த சயனத்தோடும் சங்கு சக்கரங்களோடும் திருமகளும் தானுமாக காட்சி அளிக்கிறானாம் ஆழ்வார் திருமேனியிலே.

ஆழ்வார் திருவடிகளே சரணம் என அந்த சடங்கர்கள் செருக்கடங்கி தாழ்ந்து வணங்கினார்கள். இவரைப் பரிவுடனும் பக்தியுடனும் பிரம ரதத்தில் ஏற்றி "திருமழிசைப் பிரான் வந்தார். திருமாலின் மெய்யடியார் வந்தார்." என்று போற்றி அந்த ஊரை முமுமுறை வலஞ் செய்வித்தார்கள். தீட்சிதரின் உள்ளம் குளிர்ந்தது.
(பி.ஸ்ரீ அவர்கள் எழுதிய தொண்டக்குலமே தொழுக்குலம்: பக். 62-63)

Labels: , , ,

Saturday, July 21, 2007

ஓமலூர் விவகாரம்: சுகன்யா மரணம்

தினகரன்: (21-நவம்பர் 2006)



கடந்த 3-9-2006 அன்று அகில இந்திய செட்யூல்ட் இன இளைஞர் பேரவை மாநில செயலாளர் சங்கரன் தமிழக டி.ஜி.பி, சேலம் மாவட்ட எஸ்.பி., ஓமலூர் டி.எஸ்.பி இன்ஸ்பெக்டரிடம் ஒரு புகார் அளித்திருந்தார். அதில் ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தாய், தந்தை இலாத மாணவிகள் தங்கிப்படித்து வருகின்றனர். அவர்கள் திடீரென காணாமல் போவது மட்டுமின்றி மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் அல்லது கொலை செய்யப்பட்டு யாருக்கும் தெரியாமல் பள்ளித் தோட்டத்தில் புதைந்துவிடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபத்தில் இதே போல ஒரு மாணவியின் உடல் புதைக்கப்பட்டுள்ளது. இதற்கு தலைமை ஆசிரியர் வார்டன் இரவு காவலாளி உடந்தையாக இருக்கின்றனர். இறந்து போன மாணவியின் உடலைத் தோண்டி பிரேத பரிசோதனை நடத்த வேணும் என மனுவில் சங்கரன் குறிப்பிட்டிருந்ததாக தங்கம் (ஓமலூர் ஒன்றிய குழு உறுப்பினர்) கூறினார்.
ஓமலூர் பள்ளி தலைமை ஆசிரியை உட்பட 86 பேரை இடமாற்றம் செய்த பின்னர் பள்ளி திறக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வகுப்புக்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினா.


தினமலர் நவம்பர்-22-2006: திமுக அமைச்சருக்கு சேலம் பிஷப் பதிலடி

சேலம் நவ. 22: அமைச்சர் கூறியிருப்பது போல ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருக்கும் 86 பேரையும் இடமாற்றம் செய்யமுடியாது. இது அரசு பள்ளியல்ல. தனியார் கிறிஸ்தவ அமைப்பு நடத்தும் பள்ளி. இருவரை மட்டுமே இடமாற்றம் செய்யமுடியும் என்று சேலம் மறைமாவட்ட பிஷப் சிங்கராயன் தெரிவித்தார்



இது பிஷப் பேட்டியில் இருந்து
...

  • கேள்வி: வகுப்பறையில் இரத்தம், உடைந்த வளையல், பூ இருந்ததாக பள்ளி மாணவி ஒருவர் பேட்டி அளித்துள்ளாரே?
    பூனை பெருச்சாளியை கடித்ததால் ஏற்பட்ட ரத்தம் அது. உடைந்த வளையல் இருக்க வாய்ப்பு இல்லை. இருந்தாலும் பெண்கள் பள்ளி என்றால் பூ வளையல் எல்லாம் இருக்கத்தான் செய்யும்.

  • உங்கள் பள்ளியில்தான் பெண்கள் பூ வைக்கக் கூடாது என்று விதிமுறை உள்ளதே. எப்படி பூ வந்தது?

    ...பதில் இல்லை
  • பள்ளிக்குள் மதுபான பாட்டில்க கைப்பற்றப்பட்டுள்ளது எப்படி?
    இது குறித்து எனக்கு தகவல் வரவில்லை. இது தொடர்பாக கருத்து சொல்ல விரும்பவில்லை.

.... (தினமலர், 22-நவம்பர்-2006)
இன்றைய நிலை:

மாணவி சுகன்யா பாலியல் பலாத்காரத்துக்கு ஆட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டாரா? இது குறித்து பரிசோதனைக்கு சென்னை பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள குற்றவியல் பரிசோதனை சாலைகளுக்கு விவகாரம் சென்றது. சுகன்யா மர்மமான முறையில் இறந்து ஆறு மாதங்களுக்கு பிறகு வந்த பரிசோதனை அறிக்கைகள் அவர் மரணத்துக்கு முன் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார் என்பதை ஊர்ஜிதப்படுத்தியுள்ளன. இனியாவது அங்கிகளுக்குள் தங்கியிருக்கும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

Thursday, July 19, 2007

குமரி: இந்து கோவில் சிலைகள் உடைப்பு


செய்தி: மாலைமுரசு : நெல்லை பதிப்பு 19-7-2007>

குமரி மாவட்டத்தில் இந்து கோவில் சிலைகள் உடைப்பது தொடர்கதையாக தொடர்கிறது. நேற்று விஷமிகள் கருங்கல் சுணங்கல் பாறை தர்ம சாஸ்தா கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டு வந்த 12 நாகர் சிலைகளில் 4 சிலைகளை உடைத்து நொறுக்கி விட்டு தப்பி சென்றுவிட்டது. கோவில் கமிட்டி தலைவர் கொடுத்த புகாரின் பெயரில் கருங்கல் போலிஸார் சிலை உடைப்பு கும்பலை தேடி வருகின்றனர். கோவில் சிலைகள் உடைக்கப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கிறிஸ்தவர்களால் திருவட்டார் காவு சாஸ்தா கோவில் சிலைகள் உடைக்கப்பட்டு குளத்தில் எறியப்பட்டதும் இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி அறிவிக்கப்பட்டதும் கன்னியாகுமரியிலும் நாகர் சிலைகள் உடைக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்க சம்பவ ஒற்றுமைகள் ஆகும்.

Sunday, July 15, 2007

பேய் பயம் : திரை விமர்சனம்

எமிலி ரோஸின் எக்ஸார்ஸிஸம் (பேயோட்டல்) என்கிற பெயரில் 2005 இல் வெளியான ஆங்கிலப்படத்தின் தமிழாக்கம் 'பேய் பயம்'. உண்மையான கதையை தழுவி எடுக்கப்பட்டதாக இது கூறப்படுகிறது எமிலி ரோஸ் என்கிற கிராமப்புற கத்தோலிக்க பெண் நகரத்தில் பல்கலைக்கழகத்துக்கு சென்று படிக்க போகிறாள். ஒரு நாள் அதிகாலையில் விடுதியில் அவள் தனியாக இருக்கும் போது அமானுஷ்ய சக்திகளால் தான் தாக்கப்பட்டதாக உணர்கிறாள். தொடர்ந்து அவளுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவளுக்கு வலிப்புக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. நிலைமை மோசமாகவே அவள் கிராமவீட்டில் அவளுக்கு பேய் ஓட்ட ஏற்பாடு செய்கிறார்கள். கத்தோலிக்க பாதிரியார் ரிச்சர்ட் மூர் என்பவர் ரோம கத்தோலிக்க பேயோட்டும் சடங்குகளை செய்கிறார். ஆனால் எமிலி ரோஸ் இறந்துவிடுகிறாள். இந்நிலையில் பாதிரியார் மீது அவரது அலட்சியத்தால் எமிலியின் மரணத்துக்கு காரணமானதாக அரசு குற்றம் சாட்டுகிறது. பாதிரியாருக்காக இறைநம்பிக்கை இல்லாத எரின் ப்ரூனர் என்கிற பெண் வக்கீலும் பாதிரியாருக்கு எதிராக அரசு தரப்பில் கத்தோலிக்கரான ஈதன் தாமஸும் வாதாடுகிறார்கள். திகிலூட்டும் காட்சிகள் சாட்சிகளின் நினைவுகளூடே விரிகின்றன. எமிலிக்கு கிடைத்த அமானுஷ்ய அனுபவம், அவள் பட்ட வேதனைகள், அவள் பார்த்த அனைவரும் சாத்தானின் வடிவங்களாக அவள் கண்ட காட்சி என அவை காட்டப்படுகின்றன. இறுதியாக அவளுக்கு அன்னை மேரியின் தரிசனம் கிடைக்கிறது. அவள் உடல் துயரத்திலிருந்து தான் விடுவிக்க தயாராக இருப்பதாகவும் ஆனால் அவள் துன்பப்படுவதன் மூலம் இறைவனின் புகழ் பரவும் எனவும் மேரி அவளிடம் சொல்வதாக எமிலி காண்கிறாள். எமிலி துன்பத்தை தேர்ந்தெடுக்கிறாள். அவள் உள்ளங்கைகளில் காயம் ஏற்படுகிறது. அது ஸ்டிக்மாட்டா எனும் ஏசுவின் புனித காயத்தின் அமானுட வெளிப்பாடு என அவளும் பாதிரியாரும் கருதுகின்றனர். வழக்கு விசாரணையில் ஈதன் தாமஸ் அது அமானுஷ்யமாக ஏற்பட்டதல்ல, மனநிலை பாதிக்கப்பட்ட எமிலி இரும்பு வேலியை கையால் இறுக்கி ஏற்படுத்திக்கொண்டது என கூறுகிறார். இறுதியில் எமிலி ஒரு புண்ணிய ஆத்மாவாக கடவுளுக்காக கஷ்டங்களை ஏற்றுக்கொண்டு மரித்ததாக பாதிரியார் கூறுகிறார். பாதிரியார் அலட்சியம் காட்டவில்லை மாறாக அவள் மீது அன்பே காட்டினார் என்பது ப்ரூனரின் வாதம். ப்ரூனருக்கும் சில விபரீத அனுபவங்கள் ஏற்படுகின்றன. பாதிரியாருக்கு ஆதரவான ஒரு முக்கிய சாட்சி விபத்தில் இறந்துவிடுகிறார். இறுதியில் பாதிரியாருக்கு தண்டனை வழங்கப்பட்டு அது அவர் காவலில் வைக்கப்பட்ட காலத்தை கணக்கில் கொண்டு வெகுவாக குறைக்கப்படுகிறது. ப்ரூனருக்கு அவள் பலகாலம் எதிர்பார்த்தபடி அவள் வேலை செய்யும் சட்ட மையத்தில் பங்குதாரராக ஏற்கப்படுகிறார். ஆனால் அவள் அதனை மறுத்துவிடுகிறாள். பாதிரியாரும் அவருக்காக வாதாடிய வக்கீலும் எமிலியின் கல்லறையில் சந்திக்கிறார்கள். இவை அனைத்தும் உண்மை எனவும் இன்று எமிலியின் கல்லறை ஒரு புனிதத்தலமாக கத்தோலிக்கர்களால் கருதப்படுகிறது எனக் கூறும் வார்த்தைகளுடன் படம் முடிவடைகிறது.

இருபக்கமும் சாராமல் இருபக்க நியாயங்களையும் வாதங்களையும் கூறி எடுக்கப்பட்டதாக கூறினாலும் கூட இத்திரைப்படம் எந்த பக்கம் சார்ந்திருக்கிறது என்பது தெளிவாக வெளிப்படுகிறது. இத்திரைகதைக்கு பின்னாலிருக்கும் உண்மையான எமிலி ரோஸ் யார்?

ஜுலை 1 1976 இல் ஒரு ஜெர்மானிய கிராமத்தில் இறந்த அனலீஸ் மிக்கேல்தான் திரையின் எமிலி ரோஸ். மிகுந்த கட்டுப்பாடும் தீவிர மத வைராக்கியமும் கொண்ட கத்தோலிக்க குடும்பத்தில் வளர்ந்த இப்பெண் தனது 16 ஆவது வயது முதல் மனநிலை சமமின்மையால் மீண்டும் மீண்டும் அவதிப்பட்டு வந்தாள். 1973 இல் எர்ன்ஸ்ட் அல்ட் என்கிற பாதிரியார் இப்பெண்ணுக்கு பேய் பிடித்திருக்கலாம் என தெரிவித்தார். தொடர்ந்து பேயோட்டும் சடங்கு நடத்தப்பட்டது. கிபி 1614 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சடங்கு விதிமுறைகளின் (Rituale Romanum) அடிப்படையில் நடத்தப்பட்ட பேயோட்டல்கள் 1975 இலிருந்து ஆறு மாதத்தில் 67 முறை இந்த பெண்ணுக்கு நடத்தப்பட்டன. (படத்தில் ஒரேமுறைதான் பேயோட்டும் சடங்கு நடத்தப்பட்டதாகக் காட்டப்படுகிறது.) முக்கியமாக முட்டுக்கள் தரையில் மோத மண்டியிட்டு விழுந்து பாவங்களுக்கு பிராயசித்தம் செய்யும் சடங்குகளை அவள் மீண்டும் மீண்டும் செய்திருந்தாள். அவள் இறந்த பிறகு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவள் முட்டெலும்புகளின் இணைப்புகள் சிதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவள் இறுதிக்கால கட்டத்தில் இந்த சடங்கினை செய்ய அவள் பெற்றோர்கள் உதவினார்கள். இந்த 67 முறை செய்யப்பட்ட சடங்குகளில் 42 பேயோட்டல்கள் டேப் ரெக்கார்டர்களில் பதிவு செய்யப்பட்டன. இந்த சடங்குகளில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் "ஏசுவின்/கடவுளின் பெயரால் கட்டளையிடுகிறேன். அசுத்த ஆவியே இந்த உடலை விட்டு விலகு" என்பது போன்ற வசனங்கள் பாதிக்கப்பட்ட நபருக்கு தான் உண்மையிலேயே அசுத்த ஆவிகளால் ஆட்கொள்ளப்பட்டிருப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது எனவும் அது நிலைமையை இன்னமும் மோசமடைய செய்கிறது.

1971 இல் வெளியிடப்பட்டு மிகவும் பிரபலமடைந்திருந்த வில்லியம் பிளேட்டியின் நாவல் 'எக்ஸார்ஸிஸ்ட்'. (பின்னர் தமிழில் பேய்-பெண்-பாதிரி என குமுதம் இதழில் தொடராக வெளிவந்தது.) 1973 இல் இந்த நாவல் திரைப்படமாக்கப்பட்டது. இந்நாவலும் திரைப்படமும் மேற்கத்திய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் இனமறியாத அச்சங்கள் ஏற்பட்டதாக உணர்ந்தனர். மனநல சிகிச்சை பெற்றனர். இத்திரைப்படத்தில் அசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட பெண் குழந்தையின் மாறிய குரல் பேச்சினை போலவே அனலீஸின் 'அசுத்த ஆவி' குரல் பேயோட்டும் சடங்கில் அமைந்துள்ளது தெரிந்தோ தெரியாமலோ அனலீஸ் இத்திரைப்படத்தினால் ஆழ்-மன தாக்கம் அடைந்திருக்கலாம் எனும் சாத்தியத்தையும் எழுப்பாமல் இல்லை. இங்கேகிடைக்கும் பேயோட்டும் சடங்கின் ஒலிப்பதிவு குறிப்பிடத்தக்க விதத்தில் எக்ஸார்ஸிஸ்ட் பட ஒலியுடன் ஒத்து போவதை காணலாம். தன்னுடலில் புகுந்திருக்கும் ஆவிகளில் ஒன்றாக அனலீஸ் அடால்ப் ஹிட்லரை கூறினாள். அதிசயிக்கத்தக்க விதமாக வில்லியம் பிளேட்டியின் நாவலின் தொடக்கத்தில் ஹிட்லர் படுகொலைகள் நடத்திய அட்ச்விச்சையும் தீய ஆவிகளையும் முடிச்சு போட்டு - அதாவது மதச்சார்பற்ற சமூக வரலாற்று நிகழ்வுகளில் நாம் தீமை என காண்பவற்றையும் மதரீதியில் அமானுட தீய ஆவி என அறிந்ததையும் முடிச்சு போடும் விதமாக-காட்டப்பட்டுள்ளது.

அனலீஸை பொறுத்தவரை அவளது குழந்தை பருவம் முதலே பாவம் குறித்த பலத்த போதனைகளுடன் வளர்க்கப்பட்டாள். அவளது அன்னை திருமணத்தின் முன்னர் குழந்தை பெற்றுக்கொண்டதற்காக சர்ச்சால் அவரது திருமண நாளன்று கறுப்பு கவுன் அணியுமாறு வற்புறுத்தப்பட்டவர். அந்த பாவத்தின் பரிகாரமாக கடுமையான மதச்சூழலில் தன் மகள்களை அவர் வளர்த்தார். இவ்வாறு திருமண பந்தத்துக்கு அப்பால் பிறந்த பெண் -அனலீஸின் சகோதரி- சிறிய வயதில் இறந்தது தனது பாவத்துக்கான இறைத்தண்டனை என அவர் நம்பினார். இதெல்லாம் அனலீஸின் மனதில் பதிந்தது. அப்போது நடந்த வத்திகான்-II பாரம்பரிய கத்தோலிக்க நிலைபாடுகளிலிருந்து விலகி புரட்சிகரமான சில நிலைபாடுகளை எடுத்தது. இது பாரம்பரிய கத்தோலிக்க குடும்பங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அனலீஸ் பாதை மாறிச்சென்ற கத்தோலிக்க பாதிரிகளுக்காக தான் பிரார்தித்து அவர்களுக்காக துன்பங்களை அனுபவிப்பதாக தரையில் உறங்க ஆரம்பித்தாள். அவ்வாறே பாதை மாறிச்செல்லும் இளைஞர்களுக்காக (அது ஹிப்பி இயக்கங்கள் இளைஞர்களை கவர்ந்திழுத்த காலகட்டமும் கூட) தாம் அவர்களின் பாவச்சுமையை தாம் தாங்குவதாகவும் கூறிவந்தாள். அனலீஸின் சிந்தனை மெதுவாக ஆனால் உறுதியாக பாவிகளுக்காக உயிர்தியாகம் செய்ய தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கருத ஆரம்பித்தது. உணவினை மறுக்கலானாள். உலகின் பாவங்களை தாம் சுமக்கவே தீய ஆவிகள் தம் உடலில் புகுந்து தன்னை சித்திரவதை செய்வதாக அவள் நம்ப ஆரம்பித்தாள். பாதிரியார்கள் மட்டுமே அவளுக்கான ஒரே சிகிச்சையாளர்களாக இக்காலகட்டத்தில் அமைந்தது அவளது இந்த நம்பிக்கையை மேலும் உறுதிபட வைத்தது. அவளது செய்கைகளுக்கு அவளது அன்னையும் பாதிரியார்களூம் அமானுட விளக்கங்கள் அளிக்க ஆரம்பித்தனர். அனாலிஸ் இறந்த பிறகு அவளது சவபரிசோதனையின் அடிப்படையில் அலட்சியத்தாலும் மதபிடிப்பாலும் அவளது மரணத்துக்கு காரணமென நான்கு நபர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. அவளது அன்னை, தந்தை மற்றும் 'பேயோட்டிய' இருபாதிரிகள். 'அலட்சியத்தால் மரணம் சம்பவிக்க காரணமானவர்கள்' என தீர்ப்பு வழங்கப்பட்டது. கத்தோலிக்க சபை தனது பாதிரிகளுக்காக நியமித்த வக்கீல் நாஸி போர்குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய எரிக் சிம்க்ட் லெயிச்னர் என்பவர். ஜெர்மானிய சட்டப்படி ரோமானிய பேயோட்டும் சடங்கு செல்லும் என அவர் வாதாடினார். ஆறுமாத கடுங்காவல் தண்டனையும் மூன்று வருட நன்னடத்தை கண்காணிப்பும் பெற்றார்கள். இன்று அனலீஸின் கல்லறை தீவிர கத்தோலிக்க மதப்பற்றாளர்களுக்கு ஒரு புனித தலமாக விளங்குகிறது. 2005 இல் இந்த வரலாறு 'எமிலி ரோஸின் பேயோட்டச் சடங்கு' என திரைப்படமாக வெளிவந்தது. அனலீஸின் சாவுக்கு அமானுட காரணங்களை கற்பிக்கும் கத்தோலிக்க நிலைப்பாட்டுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வெளிவந்த அதே சமயம் மற்றொரு ரோமானிய நகர் ஒன்றில் ஒரு மடாலய கன்னியாஸ்திரி ஒருவர் அசுத்த ஆவிகளால் பீடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு பேயோட்டும் சடங்கு முயற்சியில் மூன்று நாட்கள் உணவும் நீரும் கொடுக்கப்படாமல் கட்டிவைக்கப்பட்டு கொல்லப்பட்டார். தொடர்கதையாகும் அனலீஸ் என்கிற எமிலி ரோஸ்?
இயக்கம்: ஸ்காட் டெரிக்ஸன்
திரைக்கதை: ஸ்காட் டெரிக்ஸ, பால் ஹாரிஸ் ப்ராட்மேன்
இசை: க்ரிஸ்டோபர் யங்
எமிலி ரோஸாக: ஜெனீஃபர் கார்பெண்டர்


    மேலதிக விவரங்களுக்கு:
  • http://www.sonypictures.com/homevideo/theexorcismofemilyrose/index.html
  • http://en.wikipedia.org/wiki/The_Exorcism_of_Emily_Rose
  • http://en.wikipedia.org/wiki/Anneliese_Michel
  • http://www.chasingthefrog.com/reelfaces/emilyrose.php

Labels: , , ,

Thursday, July 12, 2007

ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்க...

"கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே" சொல்ல நன்றாகத்தான் இருக்கிறது. நல்ல அறிவுரைதான். ஆனால் அந்த நிலைமை நம் குழந்தைக்கு ஏற்பட்டால்? பிச்சை புக்கு கற்கை எனும் நிலையில் உங்கள் குழந்தையின் முகத்தை ஒருநிமிடம் மனக்கண் முன் நிறுத்திக்கொண்டு மேலே படியுங்கள்....

ராசாத்தியையும் ரதிஷாவையும் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பத்மநாபபுரம் அரசு தொடக்க பள்ளி மாணவிகள்தான் இவர்கள் இருவரும். ராசாத்தியின் வயது 10. ரதிஷாவின் வயது 9. தெரிந்திருக்க வேண்டிய அளவு அவர்கள் என்ன சாதனை செய்கிறார்கள் என்கிறீர்களா? அவர்கள் பள்ளி மாணவிகள். அதுதான் அவர்களின் சாதனை. இதென்ன சாதனை என்று கேட்கிறீர்களா? கடந்த வாரங்களில் பள்ளி விடுமுறை நாட்களில் பத்மநாபபுரம் அரண்மனை பக்கமாக நீங்கள் வந்திருந்தால் இரண்டு பெண் குழந்தைகள் உங்களிடம் பிச்சை கேட்டிருப்பார்கள். திங்கள் கிழமை பள்ளி சீருடையில் அவர்களை நீங்கள் அடையாளம் கண்டிருக்க முடியாது.

ஆம்...குறவர் இனத்தில் பிறந்து குடை சரி செய்தும் குளத்தில் மீன் பிடித்தும் தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்ற முயலும் தந்தைக்கு பிறந்த ஆறு மகள்களில் இருவர்தாம் ராணியும் ரதியும். கஷ்டப்பட்டு உழைத்தும் குடும்பத்தின் வயிற்றை நிரப்ப இயலாத தந்தையின் கண் முன்னரே தெருக்களில் கையேந்தி பிழைக்கும் கடுமையான நிலைக்கு குழந்தைகள் தள்ளப்பட்டன. என்றாலும் எப்படியாவது தனது குழந்தையை படிக்க வைத்திட வேண்டும் என துடித்தார் தந்தை. எனவேதான் இரு பெண் குழந்தைகளையாவது பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என வைராக்கியத்துடன் அனுப்பிவிட்டார். ஆனால் அனைத்து குழந்தைகளையும் அனுப்பிட இடம் தரவில்லை வறுமை. அந்த குழந்தைகளும் தாம் படிக்கும் பள்ளிக்கு அருகிலேயே விடுமுறை நாட்களில் கையேந்த வேண்டிய கொடுமை. இதனை செய்தியாக வெளியிட்டது தினமலர் நாளேடு 4.7.2007 அன்று. அதில் அந்த குழந்தைகளின் தந்தையார் பேட்டியளித்திருந்தார் இவ்வாறு:
"எங்கள் சமுதாயம் ஆதிபழங்குடி குறவர் இனம். இதில் படித்தவர்கள் இல்லை. எனக்கு சின்னவயதில் ஒருவர் சொல்லிக்கொடுத்ததை வைத்து ஓரளவு படிக்கத் தெரியும். அதனால்தான் நமது குழந்தைகளாவது படித்து வேறு தொழில் செய்யட்டும் என்று இரண்டு பிள்ளைகளை பத்மனாபபுரத்திலுள்ள அரசு பள்ளிக்கூடத்தில் படிக்கவைத்தேன். ஒரு குழந்தை சகாயமாதா கோவிலில் வேலைக்கு சேர்த்திருக்கிறேன். மற்ற குழந்தைகளையும் படிக்க வைக்க ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் வருமானம் இல்லாமல் எப்படி படிக்க வைப்பது என்றுதான் மற்ற பிள்ளைகள் பிச்சை எடுத்து இரண்டு பிள்ளைகளை படிக்க வைக்கிறேன். குடிசையில் இருப்பதால் வீட்டுக்கு நம்பர் தரவில்லை. இதனால் ரேஷன் கார்டு எடுக்க முடியவில்லை. பலமுறை எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகளைப் பார்த்தும் யாரும் உதவிக்கு வரவில்லை. வீட்டில் மண்ணெண்ணை விளக்கு வைத்துதான் பிள்ளைகள் படிக்கின்றனர். ரேஷன் கார்டு இருந்தால் ரேஷன் கடையில் மண்ணெண்ணை வாங்கலாம். இப்போது அதிக விலை கொடுத்து கடையில் இருந்துதான் வாங்க முடிகிறது."
அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை இது குறித்து கூறும் போது இரண்டு குழந்தைகளும் நன்றாக படிப்பதாகவும் தொண்டு நிறுவனங்கள் மனது வைத்தால் இந்த குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் ஒளி விளக்கு ஏற்றிவைக்க முடியும் எனவும் கூறினார்.

இந்த செய்தி வெளியானதை அடுத்து பல தொண்டு நிறுவனங்கள் இக்குழந்தைகளின் பெற்றோரை அணுகின. ஆனால் பெற்றோருக்கு தொண்டு நிறுவனங்களின் 'ஹோம்'களில் குழந்தைகளை விட மனதில்லை. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட சேவாபாரதி மாவட்ட தலைவர் அசோக்குமார் மாவட்ட அமைப்பாளர் முருகேசனுடன் இணைந்து பெற்றோரிடம் பேசி பெற்றோர்களின் பார்வையில் இப்பிரச்சனையை அணுகினர். பெற்றோரைப் பொறுத்தவரையில் அப்பள்ளியிலேயே பிள்ளைகள் படிப்பை தொடர உதவிசெய்வதுடன், பிள்ளைகளுக்கு தேவையான அனைத்து படிப்பு உதவிகளும் அவர்களுக்குரிய உணவு உடை உட்பட அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்வதே சரியான தீர்வாக அமைந்தது. இதனையடுத்து பெற்றோர்களும் குழந்தைகளை சேவாபாரதி தத்தெடுக்க சம்மதித்தனர். இதனையடுத்து சேவாபாரதி சுய உதவிக்குழுக்களின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர். தெய்வபிரகாஷ், மாநில பொது செயலாளர் மணியன் ஆர்.எஸ்.எஸ் மாவட்ட பொறுப்பாளர் ஜோதீந்திரன் குழந்தைகளின் தந்தை ராஜமணி ஆகியோர் கல்குளம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு சென்று குழந்தைகள் தத்தெடுக்கப்பட்ட விவரத்தைக் கூறினர்.

மற்றொரு குழந்தை யாக்கியையும் தத்தெடுத்து அப்பள்ளியிலேயே ஒன்றாம் வகுப்பில் சேர்த்தனர். அது போல நோயுற்றிருக்கும் மற்றொரு குழந்தையான கனிக்கான மருத்துவ உதவிகளையும் சேவாபாரதி ஏற்றெடுத்துள்ளது.

நம் குழந்தைகள் ஒவ்வொன்றையும் கல்வி கற்க வைப்பது நம் ஒவ்வொருவரின் சமுதாய கடமை. அதனை நிறைவேற்ற முன்வந்த சேவாபாரதி போன்ற வெளிநாட்டு பணம் இல்லாமல் சுய சமுதாயம் மட்டுமே சார்ந்த சேவை அமைப்புகளின் மானுட சேவைக்கும் தலை வணங்குவோம்.

Labels: , , , ,

Tuesday, July 10, 2007

ரேவதிக்கு உதவுங்கள்

தமிழ்நாடு ஆவலுடன் ஒவ்வொரு நாளும் நாளேடுகளில் வாசித்து கிளுகிளுப்படையும் நடிகர்களின் விவாக விஷயம் குறித்ததல்ல இந்த கதை. இது ஒரு தனி பெண் ஒரு அரசுக்கு எதிராக நின்று போராடும் கதை. தனது உரிமைக்காக தருமத்துக்காக தன் குடும்பத்திலிருந்து வலுகட்டாயமாக பிரிக்கப்பட்டு போராடும் பெண்ணின் கதை. இரண்டு வயது கூட நிரம்பாத கைக்குழந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு போராடும் தாயின் கதை. காதல் கணவனை காணக்கூட முடியாமல் சிறைக்கம்பிகளின் அப்பால் நிற்க வைக்கப்பட்ட ஒரு தமிழ் பெண் தமிழ் பண்பாட்டினை விட்டுக்கொடுக்காமல் போராடிவரும் கதை.

ரேவதி தமது 26 வயதில் காதலித்து கரம் பற்றிய கணவர் சுரேஷ். கரம் பற்றி வேள்வித்தீ சுற்றி திருமணம் செய்த கணவருடன் சகதர்மிணியாக நடத்திய இல்லற அன்பின் விளைவு திவ்வியதர்ஷனி. தமிழ் பண்பாட்டில் பொங்கலும் கார்த்திகையும் கொண்டாடி வளர்ந்த ரேவதியின் பெயர் அதிகார ஆவணங்களில் தொடர்பேயில்லாமல் என இருந்தது. ஏனெனில் ரேவதியின் பெற்றோர் ஒரு கட்டத்தில் இஸ்லாமியராக மாறினராம். ஆனால் ரேவதி வளர்ந்ததோ தன் பாட்டியிடம். அவரோ தமிழர் பண்பாட்டில் தோய்ந்தவர். நக்கீரரும் கணியன் பூங்குன்றனாரும் திருவள்ளுவரும் மாணிக்கவாசகரும் என தொடங்கி தாயுமானவ சுவாமிகளும் வள்ளலாருமென வாழையடி வாழையாக வந்த தமிழ் பண்பில் வாழ்ந்தவர். நெறி தப்பி செல்லாமல் நல்தமிழர் வாழ்நெறியை தன் சந்ததிக்குப் புகட்டினார் அவர். அவ்வையாரும் புனிதவதியாரும் திலகவதியும் வளர்த்தெடுத்த நல்நெறியில் ரேவதி வளர்ந்தார். பின்னர்தான் அவர் தனது கணவனைக் கண்டு காதலித்து கரம் பிடித்தார். இந்நிலையில் ஆவணங்களில் தம் பெயர் சிதிபாத்திமா என தமிழர் பண்பாட்டிற்கு தொடர்பற்றதோர் பெயராக இருப்பதை வெறுத்தார். அதனை மாற்றிட விழைந்தார்.

முதலில் அவர் அணுகிய அரசு அலுவலகம் அவரை இஸ்லாமிய சட்ட மையத்தினை அணுகிட சொல்லியது. அவரும் அணுகினார். பெயர் மாற்றம் தானே இதிலென்ன இருக்கிறதென்று. பிறகுதான் தொடங்கியது ஒரு முடிவில்லா தீக்கனவாக கொடுஞ் சம்பவத்தொடர். ரேவதி ஒரு இஸ்லாமியர் என அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் தன்னை இந்துவாக கருதுவது செல்லாது என அறிவிக்கப்பட்டது. அவர் 'இஸ்லாமிய நெறி தவறியவர்களை நல்வழிப்படுத்தும் இல்லம்' ஒன்றில் அடைக்கப்பட்டார். இங்கு அடைக்கப்பட்டவர்கள் இஸ்லாமிலிருந்து விலகிட நினைப்பவர்கள். இஸ்லாமியரல்லாதவரை மணந்திட்ட இஸ்லாமிய பெண்கள் - குறிப்பாக கருவுற்ற நிலையில் இருப்பவர்கள். ரேவதி தன் கணவனையோ அல்லது குழந்தையையோ பார்ப்பது தடைசெய்யப்பட்டது. கணவன் சுரேஷின் நிலையும் இன்னமும் பரிதாபகரமாக மாறியது. அவரது குழந்தையும் அவரிடமிருந்து பிரிக்கப்பட்டது. குழந்தை திவ்விய தர்ஷனி சுரேஷிடமிருந்து எடுத்து செல்லப்பட்டு ரேவதியின் முஸ்லீமான பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாள். அவளை காண முதலில் சுரேஷ் அனுமதிக்கப்பட்டாலும் பின்னர் அதற்கும் தடைவிதிக்கப்பட்டது.

என்ற போதிலும் சில மணிநேரங்கள் தனது காரில் சென்று அந்த இஸ்லாமிய இல்லத்தின் முன்னர் நிற்பார் சுரேஷ். அங்கு கம்பிகளுக்கு நடுவில் பிரிந்தவர் காண்பர் ஒரு சில நிமிடத்துளிகள். இந்த உணர்ச்சிபூர்வமான கண்ணீர் வரவழைக்கும் காட்சியை அல்ஜஸீரா தொலைக்காட்சி காட்டியது. இதனைத் தொடர்ந்து அங்குள்ள கம்பிக்கதவுகளில் அடைப்புகள் வைக்கப்பட்டு வெளியில் இருப்பவர்கள் உள்ளே இருப்பவர்களை காணமுடியாமல் ஆக்கப்பட்டது. சுரேஷ் மனம் தளர்ந்துவிடவில்லை. இந்த இஸ்லாமிய அதிகாரிகளின் மீது வழக்கு தொடர்ந்தார். 'மனிதரை கொண்டு வந்து நிறுத்தும்' அந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு சரியாக ஒரு நாள் முன்னதாக இஸ்லாமிய அதிகாரிகள் தந்திரமாக ரேவதியை விடுதலை செய்து அவர் தனது இஸ்லாமிய பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என விதித்தனர்.

29 வயதான ஒரு பெண்மணி தனது பெற்றோரின் கட்டுப்பாட்டில் தனது கணவரிலிருந்து பிரிந்திருக்க வேண்டும் எனக் கூறும் மடத்தனமான மானுடத்தன்மையற்ற மதவெறியை என்னவென்று சொல்வது? இந்நிலையில் ஆறுமாதங்கள் 180 நாட்கள் தாம் சிறை போன்ற அந்த 'இஸ்லாமிய நெறி தவறியவர்களை நல்வழிப்படுத்தும் இல்லத்தில்' நடந்த சித்திரவதைகளை மனரீதியிலான கொடுமைகளை விவரித்துள்ளார் ரேவதி. தலையில் முக்காடு அணிந்திட வற்புறுத்தப்பட்ட ரேவதி பசுமாமிசம் உண்ணும்படி வற்புறுத்தப்பட்டுள்ளார். அதைவிடக் கொடுமை "நீ முஸ்லீமாக மாறாவிட்டால் உன் குழந்தையை பராமரிப்பு இல்லத்தில் சேர்த்துவிடுவோம். உன்னால் பார்க்கவே முடியாது." என மனரீதியில் கடுமையாக சித்திரவதை செய்துள்ளனர் மானுடத்தன்மை இழந்த மதவெறி மிருகங்கள். ஆனால் ரேவதி கூறுகிறார்:

"என் கணவர் எனக்காக வெளியே காத்திருப்பதை நான் காண்பேன், அவர் நிற்கும் இடத்துக்கு ஓடுவேன் ஆனால் அவர்கள் என்னை பிடித்து இழுத்து சென்றுவிடுவார்கள். அந்த இல்லத்திலிருந்து பலரும் தாங்கமுடியாமல் ஓடிவிடுகிறார்கள். ஆனால் நான் ஓடவில்லை. நான் இந்து தருமத்தின் நற்பெயரை காட்டிட ஓடாமல் அங்கு (கொடுமைகளை) பொறுத்திருந்தேன்....என் பெயர் ரேவதியாகவே இருக்கும் இறுதிவரை...."
தமிழ்பண்பாட்டுக்காக தான் அணியும் திலகத்துக்காக தன் கணவருடன் இணைவதற்காக போராடும் ஒரு தமிழ் பெண்மணியின் கதை இது. கதை அல்ல இனி வரும் காலங்களில் இது மதவெறி பிடித்த அரசொன்றின் இராட்சத அதிகார பலத்தை எதிர்த்து நின்று போராடிய ஒரு ஒற்றைக் குடும்பத்தின் வீர காவியம். எமனிடமிருந்து கணவன் உயிரை மீட்ட சாவித்திரி, எமனிடம் தன் ஆயுளைக் கொடுத்து காதலியை மீட்ட ருரு, கணவனுக்காக நீதி கேட்டு அரசனையே எதிர்த்த கண்ணகி என காவிய மாந்தர்களில் வைத்து எண்ணப்பட வேண்டிய வீரப்பெண்மணியாக ஜொலிக்கிறார் ரேவதி. அவருக்காகவும் தன் குழந்தை திவ்விய தர்சனிக்காகவும் பகீரத முயற்சிகளுடன் தவமிருக்கிறார் சுரேஷ்.

இதில் ஆனந்தமான விஷயம் என்னவென்றால் குறைவாக என்றாலும் அதிசயிக்கத்தக்க அளவில் கணிசமான எண்ணிக்கையில் மலேசிய இஸ்லாமியர் (பெண்கள் உட்பட) ரேவதிக்காகவும் சுரேஷுக்காகவும் குரல் கொடுத்திருக்கின்றனர்.'இஸ்லாமிய சகோதரிகள்' எனும் பெண்கள் அமைப்பு ரேவதியின் விடுதலைக்காக அமைதி ஊர்வலம் நடத்தியிருக்கிறார்கள். ஹரீஸிப்ராஹிம் எழுதுகிறார்:

"ஆக 29 வயதுடைய ஒரு பெண்மணியை ஒரு குழந்தையின் தாயை அவரது பெற்றோரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உத்தரவிட்டுவிட்டீர்கள்? எந்த நீதியின் அடிப்படையில் அப்பெண்மணியின் சுதந்திரத்தை அவருக்கு மறுக்கிறீர்கள்? அது போக அவர் இஸ்லாமிய வகுப்புகளுக்கு வேறு செல்லவேண்டுமாம்.ஏன்? அவருக்கு மாட்டிறைச்சி பிடித்துப் போகவா? அடுத்து அவர் தன் கணவருடன் வாழ்வதையும் அவர் கோவிலுக்கு போவதையும் மலேசிய இஸ்லாமிய அதிகாரிகள் பின்னாலேயே சென்று தடுக்கப்போகிறார்களா? அப்படி அவர் தன் கணவருடன் கோவிலுக்கு போனால் என்ன செய்வீர்கள்? அடுத்தும் ஒரு 180 நாட்கள்? மேலும் அவருக்கு மாட்டிறைச்சி? ... சுரேஷ் ரேவதி நீங்கள் உங்கள் இருவரின் அன்பில் ஒருவருக்கொருவர் மனமொத்து வாழ நான் பிரார்த்திக்கிறேன். அநீதிக்கு எதிராக எழுந்து போராடும் உங்கள் மனவலிமைக்காக நான் பிரார்த்திக்கிறேன். நீதிக்காகவும் சாந்தியுடன் வாழவும் நீங்கள் இருவரும் போராடும் இப்பாதையில் உங்களுக்கு வலிமை கிடைக்க நான் இறைவனை வேண்டுகிறேன்."
தமிழர் தமிழர் என்று பேசித்திரியும் நாம் என்ன செய்யப் போகிறோம்? நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை தலைப்புச் செய்திகளாக்கி விற்பனை செய்து பிழைக்கும் நாளேடுகளுக்கு தர்மம் காக்க நடத்தப்படும் இந்த போராட்டம் கண்ணில் படாததன் காரணம்தான் என்ன? காதல், குடும்பம் என தனிமனித உரிமைகளை நசுக்கி மதம் வளர்க்கும் மதமும் ஒரு மதமா? என கேள்வி நம் அறிவிசீவிகளிடம் ஒரு முணுமுணுப்பாக கூட எழும்பாத அளவு மரத்துவிட்டதா அவர்கள் அற உணர்வு? ரேவதியும் சுரேஷும் திவ்வியதர்ஷனியும் இணைந்து வாழ காதலொருமித்து ஒரு குடும்பமாக மீண்டும் வாழ நாம் நம்மால் ஆனதை செய்வோம். அல்ஜஸீரா தொலைக்காட்சியில் ரேவதி - சுரேஷ் சந்திப்பு:



  • 1. இதிலிருக்கும் ஆன்லைன் பெட்டிஷனின் ஒரு கையெழுத்திடுங்கள்
    பெட்டிஷன்
  • 2. உங்கள் செனேட்டர், ஜனநாயக பிரதிநிதி மூலம் உங்கள் மலேசிய தூதரகத்துக்கு இக்குடும்பத்துக்கு இழைக்கப்பட்ட மானுட உரிமை மீறலை கண்டித்து கடிதம் எழுத சொல்லுங்கள். கையெழுத்து இயக்கம் நடத்துங்கள். அந்த கையெழுத்து கோரிக்கையின் ஒரு பிரதியை மலேசிய தூதரகத்துக்கு அனுப்புங்கள். இணையத்தில் வெளியிடுங்கள்.
  • 3. இதற்கும் மசியாது எனில் மலேசிய சுற்றுலா துறையை புறக்கணிக்க விளம்பரங்கள் கொடுங்கள்.


மேலதிக விவரங்களுக்கு காண்க:
http://thieneleventhhour.blogspot.com/2007/07/revathi-thats-my-name-forever.html
http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/6278568.stm
http://www.othermalaysia.org/content/view/93/

Labels: , , ,

Sunday, July 01, 2007

இந்துத்தவத்தின் சாதிய எதிர்ப்பு பாரம்பரியம்

அண்மையில் தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸில் வெளியான ஒரு செய்தி மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. ஜூலை 18 அன்று கன்னியாகுமரியிலிருந்து கிளம்பும் இரத யாத்திரை ஒன்றை காஞ்சி முனிவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் தொடங்கி வைக்கப்போகிறார். இந்திய அரசியலில் ரதயாத்திரைகள் மிகவும் பழக்கமானவைதாம் என்றாலும் இந்த இரத யாத்திரை ஒட்டுமொத்த இந்து சமுதாயத்திற்கும் முக்கியமானது. ஆரோக்கியமானது. ஏனெனில் இது விளிம்புநிலையில் வாழும் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கான இரதயாத்திரை. தலித் சமுதாய மக்களின் வழிபாட்டுரிமை, சாதி அடிப்படையிலான மயானங்களை மாற்றி அனைத்து சமுதாயத்தினருக்கும் பொதுவான மயானம் அமைப்பது, தலித்துகளின் நில உரிமை ஆகிய பன்னோக்கு அம்சங்களை கொண்ட இந்த இரதயாத்திரை அம்பேத்கர் மக்கள் கட்சியால் நடத்தப்படுகிறது. இந்த தகவலை அம்பேத்கர் மக்கள் கட்சி தலைவரும் முன்னாள் சென்னை மேயருமான டாக்டர் பாலசுந்தரம் தெரிவித்துள்ளார்.1
காஞ்சி முனிவர் இதனை தொடக்கி வைப்பதென்பது மிகவும் சிறப்பானதாகும். அது மட்டுமல்ல பாரத தர்ம மரபின் ஒரு தொடர்ச்சியான நீட்சியே ஆகும். பாரத ஆன்மிக பாரம்பரியத்தில் பிறப்படிப்படையில் மக்களை ஒதுக்கும் பொதுவான சமுதாய போக்குக்கு கடுமையான எதிர்ப்பு ஆன்மிக அருளாளர்களால் காலம் காலமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சத்தியகாம ஜபாலா எனும் முனிவர் தமது தந்தையை அறியமாட்டார் தாயை மட்டுமே அறிவார் என்ற போதிலும் அவர் ஆன்மஞானம் அருளப்பட்டு ஆன்மஞானியாக மிகப்பெரிய வேத முனிவராகத் திகழ்ந்தார்.
அரசனுக்கு வண்டி இழுப்பவரான ரைவகர் ஆன்ம ஞானம் அருளிய வரலாற்றினை சந்தோக்கிய உபநிடதம் ஆவணப்படுத்துகிறது. மகாபாரத உபகதை ஒன்று அந்தணன் ஒருவன் இறைச்சி கடைக்காரரான தர்மவியாதரிடம் ஆன்ம ஞானம் பெற்றதைக் கூறுகிறது. காசியில் கங்கை நதிக்கரையில் அருள் வாய்க்கப்பெற்றார் ஆதி சங்கர பகவத்பாதர். அந்த அத்வைத துறவிக்கு ஞான அருள் பாலித்த குரு சமுதாயம் ஒதுக்கி வைத்த சண்டாள ரூபம் தாங்கியவர். இராமனுஜர் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு ஞானத்தைக் கொண்டு சென்றதுடன் அவர்களை திருக்குலத்தார் என்றார். திருஞான சம்பந்தர் நீலகண்ட யாழ்ப்பாணரை வேள்வி நடக்கும் இடத்தில் படுக்க வைத்தார். இதே காலகட்டத்தில் உலகின் மற்ற பகுதிகளில் சாதியம் எவ்வாறு இருந்தது என்பதனை ஒப்பிட்டு நோக்கினால் நம் தேச மகான்களின் மாண்பு தெளிவாக புலப்படும்.உதாரணமாக கிறிஸ்தவ உலகின் சங்கரர் என தவறாக கருதப்படும் செயிண்ட் அகஸ்டைன் என்பவர் இன்றளவும் கிறிஸ்தவ இறையியல் மாணவர்களுக்கு உலகெங்கும் முக்கிய இறையியல் குரு ஆவார்.
இன்றைய கிறிஸ்தவ இறையியல் கோட்பாடுகள் இவரது கருத்தாக்கத்தின் அடிப்படையில் உருவானவையே ஆகும். ஆனால் இவர் பாணர்களை மனிதர்களாகவே கருதவில்லை. பாவ பிறவிகளாகக் கருதினார். இவர்கள் கிறிஸ்தவ உலகில் தீண்டத்தகாதவர்களாகவும், கிறிஸ்தவ கம்யூனியன் வாங்க தகுதியற்றவர்களாகவும் இருந்ததோடு மட்டுமல்ல குடிமக்களாகவே கூட சேர்க்கப்படவில்லை.
16 ஆம் நூற்றாண்டு வரை நெசவாளர்கள், நாவிதர்கள், துப்பரவு தொழிலாளர்கள், பாணர்கள் போன்ற தொழிலாளர் குலங்களுக்கு எதிராக அவர்களது உடைகள் வரை கட்டுப்படுத்தப்பட்டன. அவர்கள் விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் அணிவது தடை விதிக்கப்பட்டிருந்தது. தலையாரி சமுதாயத்தினருக்கு எதிரான இழிவுபடுத்தும் நடைமுறைகள் 16 ஆம் நூற்றாண்டுக்கு பின்னரும் நடைமுறையில் இருந்தது.2 ஆனால் 17 ஆம் நூற்றாண்டு காலனிய விரிவாதிக்கத்துக்கு பின்னர் அபரிமிதமான முதல் காலனி ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்பட்ட நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்குள் பாய்ந்தது.

மேலும் ஐரோப்பிய இனம் அமெரிக்க ஆஸ்திரேலிய கண்டங்களில் வியாதியென பரவியது. அடிமை வியாபாரமும் கண்டங்களின் நிலப்பரப்பு ஐரோப்பிய இனங்களுக்கு கிடைத்ததும் அவற்றின் சாதிய முறைகளை தேவையற்றதாக்கின. அல்லது ஐரோப்பிய தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்கு விலையாக ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க அமெரிக்க பூர்விக மக்கள் இனங்கள் அடியோடு அழிக்கப்பட்டன அல்லது மிகக்கொடுமையான சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டன. ஆனால் பாரத சமுதாயத்தில் மட்டுமே பொருளாதார இயக்கமாக அல்லாமல் ஆன்மநேய ஒருமைப்பாட்டு அடிப்படையில் மானுட சமத்துவத்துக்கான குரல்கள் எழுந்தவண்ணமே உள்ளன. இன்றைய தீண்டாமை மற்றும் சாதியக்கொடுமைகளினை ஆதாயமாக்கிக் கொண்டு இந்து தருமத்துக்கு எதிராகவும் இந்து சமுதாயத்துக்கு எதிராகவும் இயங்கும் போலி-தலித் அமைப்புகள் இந்த வரலாற்றினைத்தான் மறைத்து விடுகின்றன. சாதிக்கொடுமை ஏதோ இந்து தருமத்தினால் மட்டுமே ஏற்பட்டது என்று பொய் கூறி வெறுப்பியல் பிரச்சாரம் செய்து பகைமை வளர்க்கின்றனர். பாணர்களையும் மேலும் சில மக்கள் சமுதாயங்களையும் இவ்விதம் ஒதுக்கும் போக்கு ஏறக்குறைய எல்லா மானுட சமுதாயங்களிலும் இருந்திருக்கின்றன. ஆனால் இந்த மக்களின் ஆன்ம எழுச்சியையும் விடுதலைவேட்கையையும் குறித்த பதிவுகளின் சுவடுகள் கூட பாரத சமுதாயமன்றி பிற சமுதாயங்களில் காணமுடிவதில்லை.உதாரணமாக எந்த சமய இலக்கியத்திலும் சரி அல்லது நாடக இலக்கியங்களிலும் சரி இந்த தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் குரல் முழுக்க முழுக்க ஐரோப்பிய இலக்கியங்களில் அழித்தொழிக்கப்பட்டது. இருட்டடிப்பு செய்யப்பட்டது. ஆனால் பாரத சமுதாயத்தில் இறைவனே இந்த தாழ்த்தப்பட்ட மக்களின் குரலாக பக்தி இலக்கியங்களில் வெளிப்பட்டது பாரதத்தின் சிறப்பாகும். தொண்டரடிபொடியாழ்வார் திருமாலின் குரலாகவே மேல்சாதியினரைக் குறிப்பிட்டு கூறுகிறார்:

பழுதிலா ஒழுக்கலாற்றுப்
பல சதுப்பேதிமார்கள்!
இழிகுலத்தவர்களேலும்
எம் அடியார்களாகில்
தொழுமின் நீர்: கொடுமின்:கொள்மின்:3
மேலும் ஆண்டவன் அடியவர்களில் சாதி குறித்து பேசினால் பேசிய மறுகணமே அவர்களுக்கு தண்டனை கிடைக்கும். சாதியம் எனும் பாவத்தை பொறுத்தவரையில் அடுத்த ஜென்மம் வரை இந்துக்களின் இறைவன் பொறுக்க மாட்டான். வைணவப்பெரியார் ஸ்ரீ மத் பி.ஸ்ரீ ஆச்சாரியர் அவர்கள் விளக்குகிறார்கள்:
"வேத வேதாந்தங்களை எல்லாம் தெரிந்து பரம பக்தனாயிருப்பவனுக்கும் அடியார்களைப் பழிப்பது அபாயத்தையே விளைக்கும் என்கிறார் (தொண்டரடிபொடியாழ்வார்.) பழிப்பு என்றால் தூஷிப்பது கூட அல்ல; சாதியைக் குறிப்பிடுவதே பழிப்பதாகும் என்பர். இதற்கு தண்டனை மறுமையில் எமலோகத்திலோ வேறு எங்கேயோ என்பதில்லையாம். தூஷித்த அந்தக் கணத்திலேயே அந்த இடத்திலேயே கிடைத்துவிடுகிறதாம்."4

மேலும் பாணர்கள் மேற்கத்திய நாடுகளில் கொடுமைப்படுத்தப்பட்ட போது, பெரிய பெரிய கிறிஸ்தவ இறையியலாளர்கள் அத்தகைய கொடுமைகள் எல்லாம் நடக்கவே இல்லை - பாணர்கள் மனிதர்களே அல்ல என்கிற மாதிரி அவர்களைக் குறித்து அவர்களை அடக்கியதல்லாது வேறேது குரலும் கிறிஸ்தவத்தின் 1700 ஆண்டுகள் வரலாற்றில் பதியக்கூட இல்லாத மானுட சமத்துவமின்மை தாண்டவமாடிய உலகில் இந்து அருளாளர்கள் சமுதாயப் போக்கில் தாழ்த்தப்பட்ட பாணர்குல பெருமையை பதிந்துள்ளனர் என்பது நம் அனைவருக்கும் நாம் இன்றைய விளிம்பு நிலை சமுதாயத்திடம் எவ்வாறு ஒரு இந்து என்கிற முறையில் சேவை செய்திட வேண்டும் என்பதனை விளக்குகிறது. அந்தணரான சுந்தரமூர்த்தி நாயனார் "திரு நீலகண்டத்துப் பாணர்க்கு அடியேன்" எனக்கூறினால் திருமலை நம்பிகள் கூறுகிறார்:"பாட்டினால் கண்டு வாழும் பாணர்தாள் பரவினோமே"

அய்யா வைகுண்டர் எனும் அவதார புருஷரின் உதாரணம் மற்றொரு நல்ல எடுத்துக்காட்டாகும். கிறிஸ்தவ மிசிநரிகளாலும் வெள்ளையர் கைப்பாவையான திருவிதாங்கூர் மேல்சாதி வர்க்கத்தாலும் அடக்குமுறைக்கு ஆளான சான்றோர் சமுதாயத்தை சுரண்டல், அடக்குமுறை, மதமாற்றம் ஆகியவற்றிலிருந்து காப்பாற்றி உரிமைகளை வென்று மானுடத்தின் வெற்றிக்கு காரணமான தெய்வீக புருஷர் அய்யா வைகுண்டர். அவரது அகிலத்திரட்டு எனும் அருள் நூலை நோக்கினால் சனாதனமாக பாரதம் முழுமைக்கு அருள் வழங்கும் சத்தியம் அய்யா வைகுண்டரின் சமுதாய எழுச்சிக்கு உள்ளொளியாக வெளிப்பட்டதை அறியலாம். கிறிஸ்தவம் போன்ற மதங்களில் இறைதூதன் அல்லது மீட்பர் எனக்கருதப்படுபவரின் பிறப்பு ஒரு குறிப்பிட்ட மேல்சாதியிலேயே நிகழும். உதாரணமாக டேவிட் என்கிற அரசனின் குலத்தில்தான் ஏசு பிறப்பார் என முன்னறிவிக்கப்பட்டு அந்த குலத்தில்தான் ஏசு பிறந்ததாக கிறிஸ்தவர் கூறுகின்றனர். மோசடியான வம்சாவளி பட்டியலைக் கூட இதற்காக உருவாக்கி உரிமை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இறைவன் அவதரிக்க சாதி குலம் எதுவும் தடை இல்லை என்பது இந்து தத்துவம். இறைவன் ஆயனாகவும் அவதரிப்பார். சமுதாயத்தால் இகழப்பட்டு புறக்கணிக்கப்பட்ட விளிம்பு நிலை மனிதராகவும் வருவார். இது இந்து புராணங்களும் இதிகாசங்களும் கூறும் உண்மை ஆகும். எனவே அய்யா வைகுண்டர் அவதார புருஷர் என கேள்விபட்டவுடன், கிறிஸ்தவ ஆதிக்க கைப்பாவையாக இருந்த திருவிதாங்கூர் மன்னன் (கிறிஸ்தவ தாக்கத்தினால் இருக்கலாம்) அரச பரம்பரையை விட்டு கடவுள் என்ன தீண்டத்தகாத குலத்தில் பிறப்பாரா என கேட்க அதற்கு சாஸ்திரி ஒருவர் "எளிமையாம் குலங்கள் என்று எண்ணுற மனுவே அல்ல பளிரென ஆதிநாதன் பார்க்கவே மாட்டார் அய்யா"5 என்றார். மேலும் பூவண்டன் எனும் அமைச்சர் அரசனுக்கு இந்து ஞான மரபில் எந்த குலத்திலும் இறைவன் அவதரிப்பார் எனக் கூறும் போது அனைத்து விளிம்பு நிலை குலங்களையும் குறிப்பிட்டு அவை அனைத்திலும் இறைவன் பிறந்திருக்கிறார் எனக் கூறுகிறார்.

"பாணனாய் தோன்றி நிற்பார்; பறையனாய் தோன்றி நிற்பார்...குசவனின் குலத்தில் வந்தார் குறவனின் குலத்தில் வந்தார் மசவெனக்குலத்தில் வந்தார் மாடெனக் குலத்தில் வந்தார் விசுவெனக் குலத்தில் வந்தார் வேடனின் குலத்தில் வந்தார்"6
இவ்வாறு இந்து தத்துவம் வெறும் தத்துவமாக மட்டுமல்லாது நடைமுறை இயக்கமாகவும் பொருளாதார-அரசியல்-வரலாற்று சூழல்களால் தாழ்த்தப்பட்டு சுரண்டலுக்கு உள்ளான பலவீனமான மக்களை காப்பாற்றும் விடுதலை இயக்கமாகவும் செயல்பட்டு வந்துள்ளது.

இந்த பாரம்பரிய ஆன்மநேய கருத்தியலின் நீட்சியாகவே இந்துத்துவ அமைப்புகள் சாதிய எதிர்ப்பிலும் விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்திலும் பெரும் பங்காற்றி வருகின்றன. உதாரணமாக வீர சாவர்க்கர் சாதியத்தை எதிர்த்து கடுமையாக குரல் கொடுத்தவர் ஆவார். அண்ணல் அம்பேத்கரால் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உண்மையாகவே மனம் வருந்தி உழைத்த பெருந்தகை என புகழ்ப்பட்ட பலிதானி சுவாமி சிரத்தானந்தர் இந்துமகாசபையின் முக்கிய தலைவர் ஆவார். இந்து சமுதாய ஒற்றுமையை மிகவும் வலியுறுத்தி உழைத்த இந்த பெரும் தியாகி காங்கிரஸ் தலைமைப் பீடத்தால் உதாசீனப்படுத்தப் பட்டு பின்னர் இஸ்லாமியமதவெறியனால் சுடப்பட்டு மாண்டவர் ஆவார்.

வீர சாவர்க்கர் பல கட்டுரைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் குட்டகுட்ட குனியக் கூடாது என்றும் எதிர்த்து போராட வேண்டும் என்றும் எழுதினார். தாழ்த்தப்பட்டவர் ஆசிரியராக ஆவதற்கு மேல்சாதியினர் ரத்னாகிரியில் எதிர்ப்பு தெரிவித்த போது, வீர சாவர்க்கர் அரசுக்கு எழுதினார், "தாழ்த்தப்பட்டவரை ஆசிரியராக ஏற்க இயலாத அளவு மனிதத்தன்மை அற்றவர்களுக்கு கல்வி சாலையே தேவை இல்லை. தாழ்த்தப்பட்டவரை ஆசிரியராக நியமிக்க முடியாது என்றால் பள்ளியையே இழுத்து மூடிவிடுவதுதான் உசிதம்." வீர சாவர்க்கரின் ஆதரவின் விளைவாக தாழ்த்தப்பட்டவர் ஆசிரியராக தொடர்ந்து அந்த பள்ளியில் பணியாற்றுவது தடுக்கப்பட முடியாததாயிற்று. அண்ணல் அம்பேத்கரின் காலாராம் சத்தியாகிரகத்துக்கு ரத்னகிரிக்கு வெளியே செல்ல தடைசெய்யப்பட்ட இந்து மகாசபை தலைவர் வீர சாவர்க்கர் ஆதரவு தெரிவித்தார். தனக்கு ரத்னகிரியை விட்டு வெளியே செல்ல தடை இல்லாத பட்சத்தில் தானே அம்பேத்கரின் இந்த சத்தியாகிரகத்தில் முதல் ஆளாக கைது ஆகியிருப்பேன் என அவர் எழுதிய கடிதமும் கோவில் தலித்துகளுக்கு திறந்துவிடப்படவேண்டும் என அவர் எழுப்பிய கோரிக்கையும் அண்ணல் அம்பேத்கர் தன் 'ஜனதா' பத்திரிகையில் வெளியிட்டார்.7 என்ற போதிலும் மேல்சாதி மக்களின் சாதிய வெறி விட்டுக்கொடுக்கவில்லை. மாறாக வீர சாவர்க்கருக்கு எதிராக பிரிட்டிஷாருக்கு மேல்சாதியினரிடமிருந்து புகார்கள் போயின. அண்ணல் அம்பேத்கர் வீர சாவர்க்கருக்கு எழுதுகிற கடிதத்தில் பினவருமாறு குறிப்பிடுகிறார்:

"இந்து சமுதாயத்தை சீர்ப்படுத்த தீண்டாமை அழிந்தால் மட்டும் போதாது இன்றைய சாதிமுறையே முழுமையாக அழிய வேண்டும். இதனை உணர்ந்த வெகு சிலருள் நீங்களும் ஒருவர் என்பதனை அறிய எனக்கு ஆனந்தமாக இருக்கிறது."
அண்ணல் அம்பேத்கரின் 'ஜனதா' சிறப்பு பதிப்பில் தலித்துகளுக்காக சாவர்க்கர் செய்யும் சேவைகளை குறிப்பிட்டு அவரை 'புத்தருக்கு ஒப்பான பெரியவர்' என கட்டுரை வெளியிடப்பட்டது8.

ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது தலைவரான பரம பூஜனீய குருஜி சாதீயத்தை அழித்திட எடுத்துக்கொண்ட முயற்ச்சிகளை புராண-இதிகாசங்களில் கூறப்படும் பகீரதனின் பிரயத்தனத்துடனேதான் ஒப்பிட முடியும். மானுட மூடத்தனமாகிய உயர் சாதி வெறியால் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்டு சாதிய அரண்களால் அடைக்கப்பட்ட ஞான கங்கையை தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளூக்கு கொண்டு செல்ல களமிறங்கிய நவீன பகீரதன் பரம் பூஜனீய குருஜி. சாதிதான் அனைத்து கேடுகளுக்கு காரணம் என்று ஒரு புறம் பேசிக்கொண்டு மறுபுறம் சாதிய ஓட்டுவங்கிகளை உருவாக்கும் முற்போக்குகள் வாழும் இந்த போலிகளின் உலகில் ஸ்ரீ குருஜி சமுதாய நல்லிணக்கம் குறித்து உண்மையான அக்கறையும் தெளிவான பார்வையும் கொண்டிருந்தார்:

"ஒரு மரம் தனது காய்ந்து போன இலைகளையும் பட்டுப்போன கிளைகளையும் உதிர்த்து புதிய இலைகளையும் கிளைகளையும் வெளிக்கொணர்வதைப் போல சமுதாயம் இன்றிருக்கும் வர்ண வியவஸ்தாவை உதிர்த்துவிட்டு அதன் இடத்தில் சமுதாய நலனுக்கு உகந்த புதிய சமுதாய அமைப்பினை ஏற்படுத்திக் கொள்ளட்டும். இது சமுதாயத்தின் இயற்கையான வளர்ச்சி முறையேயாகும்....பழைய வீட்டினை இடித்து தள்ளிவிட்டு புதிய வீட்டினை அமைப்பது போல தேவையற்ற சமுதாய அமைப்பினை இப்போதே இத்தருணமே முடிவடைய செய்ய வேண்டும்." 9
வரலாற்று புகழ் மிக்க உடுப்பு விஸ்வ இந்து பரிஷத் மாநாட்டில் இந்து சமுதாயத்தின் அனைத்து பிரிவு துறவிகளையும் ஒரு மேடையில் ஒருங்கிணைத்து (இதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் பட்ட வேதனைகளும் அவமானங்களும் கொஞ்ச நஞ்சமல்ல.)
வரலாற்று சிறப்பு மிக்க விஸ்வ இந்து பரிஷத்தின் இக்கூட்டம் தீண்டாமையும் சாதியமும் இந்து சாஸ்திரங்களுக்கு விரோதமானவை என அறிவித்தது
தீண்டாமை சாஸ்திர அடிப்படை அற்றது. எந்த இந்துவும் எந்த விதத்திலும் தாழ்த்தப்படலாகாது எனும் தீர்மானத்தை அவர் கொணர்ந்தார். இன்றைக்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிகவும் அதிகமான பரவலில் கல்வி சேவையையும் மருத்துவ சேவையையும் கொண்டு செல்லும் பாரத அமைப்புகள் குருஜியின் தொலைநோக்கு பார்வையால் உதித்தவை என்றால் அது மிகையல்ல.
ஒரு எடுத்துக்காட்டாக ஓராசிரியர் பள்ளி இயக்கத்தினை எடுத்துக்கொள்வோம். 20,142 ஆசிரியர்கள், 5,000 சுயவிருப்ப பணியாளர்கள், 20 களப்பணி நிறுவனங்கள்,8 ஆதரவு இயக்கங்கள் என 604260 நலிவுற்ற சமுதாயக் குழந்தைகளை சென்றடையும் இந்த இயக்கம் ISO 9001-2000 சர்வதேச தரச்சான்று பெற்ற நிறுவனமாக விளங்குகிறது.10 சமுதாய நல்லிணக்கம் என்பது பேச்சோடு நின்றுவிடாமல் செயலிலும் மிளிர்வதைக் காட்டும் பல எடுத்துக்காட்டுகளில் இதுவும் ஒன்று.

இப்பாரம்பரியத்தை சங்கம் வளர்க்கும் சான்றோர் முன்னெடுத்து செல்கின்றனர். குருஜிக்கு பின்னர் தலைமையேற்ற பரமபூஜனீய தேவரஸ்ஜி 1974 மே 7 இல் புனேயில் ஆற்றிய சொற்பொழிவு தெள்ளத்தெளிவாக சங்கம் எப்படிசமுதாய சமத்துவ நலம் காணப்போராடிய இந்து மரபின் தொடர்ச்சி என்பதனைக் காட்டியது. இந்த மகத்தான உரையில் அவர் குறிப்பிட்டார்:
"பழமையானது என்பதால் மட்டுமே நன்மை பயக்கக்கூடியது என்றோ நிரந்தரமானது என்றோ நாம் எதையுமே கருதமுடியாது. கடந்த காலங்களில் இந்த பழமையான நெறிகளுக்கு ஏற்ப வாழ்ந்ததால் புதிய சிந்தனைகளுக்கு வழிவகுக்கக் கூடாது என்று நாம் எண்ணக்கூடாது. எனது தகப்பனாரும் பாட்டனாரும் வெட்டிய கிணறு உப்புகரிக்கிறது என்றாலும் அவர்கள் இதையே குடித்து வாழ்ந்தார்கள் எனவே நாமும் அதையே குடிப்போம் என்கிற குருட்டுத்தனம் யாருக்கும் எந்த நன்மையும் செய்யாது. இத்தகைய சிந்தனை தவறானது. ...களைய வேண்டியவற்றை களைந்து மேன்மையானவற்றை பகுத்தறிந்து காக்க வேண்டும்....தீண்டாமை பாவம் இல்லை என்றால் உலகில் எதுவுமே பாவம் இல்லை. சமுதாய சமத்துவத்தைக் கொண்டு வர நாம் முயற்சிக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் எவ்விதத்திலாவது சமுதாய ஏற்றத்தாழ்வுகளைக் களைந்திட முயற்சிக்க வேண்டும்."
11

அண்மையில் எந்த அர்ச்சகர் அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான ஆலயப்பிரவேசத்தை மறுத்தாரோ அதே அர்ச்சகரின் பேரன் ஒட்டுமொத்த இந்து சமுதாயத்திடம் தம் முன்னோர் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார்.அவர் அப்படி மன்னிப்பு கேட்ட மேடை ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி மேடை ஆகும்.12

தலித் எழுத்தாளர் ஸ்ரீ நாம்தேவதாசல் ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் சுதர்சன்ஜியுடன்
அது போல அண்மையில் தலித் பாந்தர் அமைப்பு தலைவரும் பிரசித்தி பெற்ற தலித் எழுத்தாளருமான நாம் தேவ தாசல் சமுதாய நல்லிணக்கம் என்பது ஆர்.எஸ்.எஸ்ஸால் முழுமனதுடன் சாத்தியம் என்பதனை உணர்ந்து சங்க மேடையில் பேசினார். தமது பேச்சில் அவர் குறிப்பிட்டார்:
"இடதுசாரி நண்பர்கள் என்னை வசை பாடலாம். நான் அதற்காக வருந்தவில்லை. ஏனெனில் எனக்கு ஒரே குறிக்கோள்தான். அது தேசிய ஒருமைப்பாடும் சமுதாய நல்லிணக்கமும்....வெறும் பேச்சுக்களும் புத்தகங்களும் சமுதாய நல்லிணக்கத்தையும் சமூக நீதியையும் கொண்டுவந்திட முடியாது. அதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பான சமரஸா மஞ்ச் போன்றவற்றின் செயல்பாடுகள் மேலும் மேலும் விரிவடைவதன் மூலமே அது நடந்திடும்."13

அது போலவே நம் பொதுவான நினைப்புக்கு அப்பால் இன்றைய சமுதாய விளிம்பு நிலை மக்களில் பலரை இந்த விளிம்பு நிலைக்கு கொண்டு சென்றதில் காலனிய ஆதிக்க சக்திகளுக்கு ஒரு பெரிய பங்கு உள்ளது. இதுவும் இந்து விரோத கருத்தியல் கொண்டோ ரால் பெரிய அளவில் மறைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக குற்றப்பரம்பரை என முத்திரைக் குத்தப்பட்டு இன்றளவும் காவல்துறையினரால் கொடுமைப் படுத்தப்பட்டு சமுதாயத்தின் மேல்தட்டில் இருப்போரால் சுரண்டப்பட்டும், அவமானப்படுத்தப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் வரும் சமுதாயத்தினர் ஆவர். இவர்களில் பல வனவாசி மற்றும் தாழ்த்தப்பட்ட தலித் சமுதாய மக்கள் அடங்குவர். உதாரணமாக சிங்கப்பூர் பல்கலைக்கழக சமூகவியலாளர் ஆண்ட்ரூ மேஜர் என்பவர் பிரிட்டிஷ் ஆட்சியில் பஞ்சாபியர் மட்டும் 1,50,000 பேர் குற்றப்பரம்பரையினராக அறிவிக்கப்பட்டதையும் இத்தகைய தரவுகள் வெளியே அறியப்படாமல் இருந்ததையும் குறிப்பிடுகிறார்.14

1871 இல் பிரிட்டிஷ் அரசால் அமுலாக்கப்பட்ட இந்த கொடுமையான இனவாத சட்டம் முழுக்க முழுக்க கிறிஸ்தவ இறையியல் மற்றும் யூஜெனிக்ஸ் எனும் போலி-அறிவியல் ஆகியவற்றின் தாக்கம் கொண்டது. தாய் தந்தையர் செய்த பாவம் குழந்தைகளுக்கு வரும் எனும் நம்பிக்கை உலகம் முழுததும் பொதுவாக இருந்தாலும் இந்திய மரபில் அது மையமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதில்லை. எனவேதான் இரணியனுக்கு பிரகலாதன் பிறக்க முடியும் எனும் கருத்தாக்கம் இங்கு வேரூன்றியது. யாராவது ஒருவர் செய்த தவறுக்கு அவரது பரம்பரை பரம்பரையாக அது பாவசுமையாக வரும் எனும் நம்பிக்கை பாரதத்தில் வேரூன்றிடவில்லை. மாறாக, ஆதாம் செய்த பாவம் ஆதி பாவமாக மனிதகுலம் சுமக்கும் எனவும், கிறிஸ்துவினை கொன்ற இரத்தப்பழியை யூதர்கள் இன்னும் சுமப்பதாகவும் கொண்ட நம்பிக்கைகள் கிறிஸ்தவ மேற்கின் முக்கிய ஆதார நம்பிக்கைகளாக திகழ்ந்தன. இதன் விளைவாகவே இந்தியாவிலும் குற்ற பரம்பரையினர் என வனவாசி சமுதாயம் மற்றும் நாடோடி சமுதாயங்களை சார்ந்தவர்களை முத்திரை குத்தினர். பாரதம் முழுவதும் 160க்கும் அதிகமான சமூகத்தினர் குற்றப்பரம்பரையினர் ஆக்கப்பட்டனர். அவர்கள் காலனிய அரசின் காவல்துறையாலும் காலனிய அரசுக்குட்பட்ட சமுதாயத்தினாலும் கீழாகப் பார்க்கப்பட்டனர். பலவித சுரண்டலுக்கும் ஆளாயினர்.

அத்தகைய ஒரு சமுதாயமே பர்த்திகள். ரமேஷ் சதுபலே எனும் சங்க ஸ்வயம் சேவகர் தமது நிலத்தில் 18 ஏக்கர்களை இந்த சமுதாயத்தினருக்கான தங்கும் விடுதி கட்ட அளித்தார். பர்த்தி குழந்தைகளுக்கான தங்கும் கல்வி விடுதி அமைந்திட நாடெங்கும் உள்ள ஸ்வயம் சேவகர்கள் நிதி உதவி அளித்தனர். சமுதாய சமரஸா மஞ்ச் தலைவர் திரு.ரமேஷ் பதங்கே எப்படி ஒரு 82 வயது ஸ்வயம் சேவக்கான திரு. தத்தோபந்த் பெத்தே என்பவர் 10,000 ரூபாய் சேகரித்துக் கொடுத்ததை நினைவு கூர்ந்தார். நாடெங்கும் உள்ள ஸ்வயம் சேவகர்கள் பர்த்தி குழந்தைகளின் கல்விக்காக வீடு வீடாக அலைந்து பணம் சேகரித்து கொடுத்தனர்.15

இதுதான் இந்து சமுதாய சிந்தனை மற்றும் செயல்பாடு எனும் பிரவாகம். தமிழகத்தில் இப்பிரவாகத்தின் மைல்கல்லாகவே தலித் சமுதாய கோரிக்கைகளுக்கான ரதயாத்திரையை ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி தொடங்கி வைப்பதையும் காண வேண்டும். ரைவகர் முதல் ரவிதாஸர் வரை ஆதி சங்கரர் முதல் அண்ணல் அம்பேத்கர் வரை வாழையடி வாழையென வந்த ஆன்மீக சக்தியுடன் சமுக நீதி காத்த புரவலர்களில் காஞ்சி முனிவரின் பெயரும் நிச்சயம் இடம் பெறும். காஞ்சி முனிவர் தொடங்கி வைக்கும் இந்த ரதயாத்திரையை ஒட்டு மொத்த இந்து சமுதாயமும் ஒவ்வொரு ஊரிலும் மேள தாளத்துடன் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்க வேண்டும். இந்த சமூக நீதிக்கான ரதயாத்திரையின் கோரிக்கைகள் நிறைவேற ஒட்டுமொத்த இந்து சமுதாயமும் முயற்சி செய்யவேண்டும்.



  • 1. தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் ஜூன் 19 2007, 'Kanchi Seer to flag off Rath Yatra'
  • 2. Kathy Stuart, Defiled Trades and outcastes - honour and ritual pollution in early modern Germany pp.24-25 (Cambridge University Press, 1999)
  • 3.ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை -42 ஆம் பாடல்
  • 4.பி.ஸ்ரீ.ஆச்சாரியர், 'துயில் எழுப்பிய தொண்டர்' பக்.103-104 கலைமகள் காரியாலயம். 1957
  • 5.அகிலத்திரட்டு அம்மானை: 2831-32
  • 6.அகிலத்திரட்டு அம்மானை: 2852-53, 2855-57
  • 7.ஜனதா, 9 மார்ச் 1931
  • 8.ஜனதா, ஏப்ரல் 1933 சிறப்பு பதிப்பு பக்.2
  • 9.http://www.organiser.org/dynamic/modules.php?name=Content&pa=showpage&pid=159&page=17
  • 10.http://ekalindia.org/ekal_new/index.php
  • 11. 'சமுதாய சமத்துவம் இந்து ஒருங்கிணைப்பு' -ப.பூ.தேவரஸ் 1974 மே 7 ஆற்றிய உரை
  • 12.http://www.hindu.com/2005/08/15/stories/2005081501430900.htm
  • 13.http://timesofindia.indiatimes.com/articleshow/1945000.cms
  • 14.ஆண்ட்ரு மேஜர், "State and Criminal Tribes in Colonial Punjab: Surveillance, Control and Reclamation of the 'Dangerous Classes'"(Modern Asian Studies (1999), 33: 657-688 Cambridge University Press) http://journals.cambridge.org/action/displayAbstract?fromPage=online&aid=21611
  • 15. ரமேஷ் பதங்கே, 'ஆர்.எஸ்.எஸ்ஸும் மனுவாதமும்', 1998

Labels: , , , , , , , , ,