ஒரு கூடை முடைபவரும் சாதியமும்
பெரும் புலியூரில் புலியூர் அடிகள் எனும் தீட்சிதர் வேள்வி ஒன்றினை செய்து கொண்டிருந்தார். அவர் திருமழிசையாழ்வாரின் பொன்னடிகள் பணிந்து தாம் செய்து வரும் வேள்விக்கு வரவேண்டும் என விண்ணப்பம் செய்து கொண்டார். திருமழிசையாழ்வாரின் திருமுகப்பொலிவே தீட்சிதரைப் பிரமிக்க வைத்தது; "இவரே மெய்யடியார்; இப்படி ஒரு பரம பாகவதரைக் காணக்கூடுமானால் இதுவே கண் படைத்த பயன்; இந்த வேள்வியின் பயனும் இதுதான்!" என்று அவரை எண்ணமிடச் செய்தது. ஆழ்வாரை அழைத்துக்கொண்டு யாகசாலைக்குள்ளே போய் ஆழ்வாருக்கு அக்ரபூஜை (தலைமை வழிபாடு) செய்தார். அது கண்டு அங்குள்ள அத்வர்யு (வேள்விக்குத் தலைமை தாங்குபவர்) முதலான சடங்கிகள் கோபம் கொண்டார்கள். தீட்சிதரை நோக்கி
"பிரப்பங்கூடை முடைந்து விற்றுப்பிழைக்கும் இத்தாழ்குலத்தவனை இப்படி இங்கே பூஜித்து யாகத்தை கெடுத்து விட்டீரே!"என்றெல்லாம் பொறுக்க முடியாத வார்த்தைகளை சொல்லிப் பழித்தார்கள். ஆழ்வார் நீறு பூத்த நெருப்பு போல இருந்தார். தீட்சிதரோ நெஞ்சம் கொதித்து
"அந்த நாளில் தரும புத்திரனின் ராஜசூய யாகத்தில் கண்ணனுக்கு அக்கிர பூஜை நடந்ததை அக்கிரம பூஜை என அதை சிசுபாலன் பழித்ததை நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?"என்று அவர்களை நோக்கி எச்சரிக்கை செய்தும் அந்த எச்சரிக்கையும் பயனளிக்கவில்லை.
தீட்சிதர் ஆழ்வாரை நோக்கி "சுவாமி இவர்களும் உய்ந்துபோகும் படி உண்மையை வெளியிடலாகாதா?" என்று கதறினார். உடனே நீறு விலகி நெருப்பு ஜொலிப்பது போல் ஆழ்வாரின் மேனி அற்புதமாக ஜொலிக்கத் தொடங்கியது.
அக்கரங்கள் அக்கரங்கள்என பிரார்த்தித்தார்.
என்றுமாவதென்கொலோ?
இக்குறும்பை நீக்கி என்னை
ஈசனாக்க வல்லையேல்
சக்கரங் கொள் கையனே
சடங்கர்வாய் அடங்கிட
உட்கிடந்த வண்ணமே
புறம்பொசிந்து காட்டிடே
ஆழ்வாருடைய தோற்றத்தில் திடீரென்று ஏற்பட்ட மாறுதல் அந்த வேள்விச்சாலையில் இருந்த வைதிகர்களையெல்லாம் பிரமிக்கச்செய்கிறது. அவரது திருமார்பிலே அனற்பிழம்பு வீசி சக்கரம் சுழன்றது. பகவானுடைய சுதர்சனம் என்கிற சக்கரதாயுதத்தின் அம்சமாகத் திருமழிசைப்பிரான் அவதரித்திருக்கிறார் என்கிற உண்மையை அந்த காட்சி உறுதிப்படுத்தியதாம். விரைவில் கடல் முழங்குவது போல ஒரு முழக்கம் கேட்கிறது. "அந்த மகா சர்ப்பத்துக்குத்தான் எத்தனை தலைகள்!" என பார்த்தவர்கள் பயப்படுகிறார்கள். இந்திர நீல வர்ணமுள்ள மேகம் ஒன்று மலை உச்சியில் சாய்ந்து கிடப்பது போலக் காண்கிறது. அது வர வரப் பெரியதாகி பெரு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுமாறு மழை பெய்யப்போவது போல காட்சி அளிக்கிறது. அந்த மின் வெட்டின் அழகைத்தான் என்னவென்பது.
பகவான் பாற்கடலோடும் அனந்த சயனத்தோடும் சங்கு சக்கரங்களோடும் திருமகளும் தானுமாக காட்சி அளிக்கிறானாம் ஆழ்வார் திருமேனியிலே.
ஆழ்வார் திருவடிகளே சரணம் என அந்த சடங்கர்கள் செருக்கடங்கி தாழ்ந்து வணங்கினார்கள். இவரைப் பரிவுடனும் பக்தியுடனும் பிரம ரதத்தில் ஏற்றி "திருமழிசைப் பிரான் வந்தார். திருமாலின் மெய்யடியார் வந்தார்." என்று போற்றி அந்த ஊரை முமுமுறை வலஞ் செய்வித்தார்கள். தீட்சிதரின் உள்ளம் குளிர்ந்தது.
(பி.ஸ்ரீ அவர்கள் எழுதிய தொண்டக்குலமே தொழுக்குலம்: பக். 62-63)
Labels: casteism, Hindu Dharma, Thirumazhisai Azhwar, untouchability
2 Comments:
சாதியத்திற்கும்,
சடங்கியத்திற்கும் எதிராய்
சங்கநாதம் செய்த
சக்கர ஆழ்வார் !
நல்ல பதிவு. நன்றி அரவிந்தன்.
நன்றி ஜடாயு. சக்கர ஆழ்வார் நம் சமுதாய தீமைகளை அழித்து நம் பாரத சமுதாயத்தை காக்கட்டும்.
Post a Comment
<< Home