Wednesday, May 12, 2010

நாகர்கோவில் புத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்-3

வாங்கிய நூல்கள்:

சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும் - ஓர் ஆய்வு
ஆசிரியர்: அ.சீனிவாசன்
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ், 2002
பக்கங்கள்: 283

திரு.அ.சீனிவாசன் விருதுநகர் மாவட்டத்திலும் சென்னை நகரத்திலும் மார்க்சிய தொழிற்சங்க இயக்கங்களில் தலைவராக திகழ்ந்தவர். ஜனசக்தி நாளிதழ் ஆசிரியராகவும், மார்க்சீய ஒளி ஆசிரியராகவும் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். தத்துவம் இலக்கியம் ஆகியவை குறித்து இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். சோவியத் நாடு நேருவிருது பெற்றவர். பழமையான தமிழ் இலக்கியங்களில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்.

நூலிலிருந்து:

திருமாலை பெரியவனை மாயவனை பேருலகம் எல்லாம் விரிகமல உந்தியிடை விண்ணவனை என்று இளங்கோவடிகள் குறிப்பிட்டிருப்பது ஆழ்வார்கள் திருமாலைப் பெருமையுடன் குறிப்பிடுவதற்கு ஒப்பாக விளங்குவதைக் காணலாம். திருமாலை இப்பேருலகின் வடிவமாகக் காணும் ஆழ்வார்களின் தத்துவநிலைக்கு ஒப்பாகவும் அடிகளாரின் காப்பிய அடிகள் அமைந்திருப்பதைக் காண்கிறோம்.
முற்ற உலகெலாம் நீயே யாகி
மூன்றெழுத் தாய முதல்வ னேயோ

என்றும்
உய்ய உலகு படைக்க வேண்டி
உந்தியில் தோற்றினாய் நான்முகனை

என்றும்
மண்ணொடு நீரும் எரியும் காலும்
மற்றும்ஆ காசமுமாகி நின்றாய்

என்றும் பெரியாழ்வார் பாடுகிறார்.
...
ஆயர் முதுமகளாகிய மாதரி கண்ணகி மீதும் கோவலன் மீதும் மிகுந்த அன்பு செலுத்தியதாலும் ஆய்ச்சியர் குரவை ஆடிய புண்ணியத்தாலும் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எழுப்பி விழாவெடுத்த போது அதைக் காணும் பாக்கியத்தைப் பெற மறுபிறவி எடுத்து அரவணையில் அறிதுயில் கொள்ளும் திருமாலுக்குத் தொண்டு செய்யும் சேடக்குடும்பியின் மகளாகத் திருவனந்தபுரத்தில் பிறந்தால் என்று சிலப்பதிகாரக்கதை குறிப்பிடுகின்றது.
ஆயர் முதுமகள் ஆயிழை தன்மேல்
போய பிறப்பில் பொருந்திய காதலின்
ஆடிய குரவையின் அரவணைக் கிடந்தோன்
சேடக் குடும்பியின் சிறுமக ளாயினள்.

ஏன்று காப்பிய அடிகள் குறிப்பிடுகின்றன.
சிலப்பதிகாரக் காப்பியத்தின் மூலம் திருமால் வழிபாடும் திருவிழாக்களும் அக்காலத் தமிழ் மக்களுடைய வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாக இருந்திருக்கிறது என்பதை அறிகிறோம். இன்னும் ஆழ்வார்கள் காலத்திற்கு முன்பே அதற்கு முன் வெகுகாலமாகவே தமிழ்நாட்டில் திருமால் வழிபாடுகளும் திருவிழாக்களும் திருமால் அவதாரச் சிறப்பு செய்திகளும் இராமயணம், மகாபாரதக் கதைகளும் பரவியிருந்தன.

(தொடரும்)

1 Comments:

Blogger snkm said...

மகாபாரதமும் இராமாயணமும் உலகுக்கே உரியது! இவர்கள் வேண்டாம் என்றோ, இல்லை என்றோ சொல்லி விட்டால் இல்லாமல் போய் விடுமா என்ன!

2:29 AM, May 13, 2010  

Post a Comment

<< Home