அகப்பயணம்

Thursday, November 08, 2007

முத்து காமிக்ஸும் காம்ரேட் காரத்தும்

முத்து காமிக்ஸுக்கும் காம்ரேட் காரத்துக்கும் என்ன தொடர்பு? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் ஏன் முடிச்சு என்கிறீர்களா? ஹி ஹி...தோழர்..சகாவு...காம்ரேட் காரத் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறாரே 'லெனினை ஹிட்லருடன் தொடர்பு படுத்துபவன் மூட்டாள்' என்று...ஆனால் முத்து காமிக்ஸ் சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட தீபாவளி மலரில் தென்னமரிக்காவில் நடக்கும் புரட்சிகளின் உண்மை உள்குத்துக்களை காமிக்ஸாக வெளியிட்டது. சரி. காமிக்ஸ் என்றால் சின்னபசங்க சமாச்சாரம் எங்களை மாதிரி அறிவு ஜீவிங்க அதை படிக்கிறது எல்லாம் Below our dignity அப்படீன்னு நினைக்கிற ஆத்மாக்கள் எல்லாம் ஒரு தடவை ஜோரா கைதட்டிட்டு விலகி போயிடலாம். சரியா மத்தவங்க தொடர்ந்து படிக்கலாம். நம்ம முத்து காமிக்ஸ் ஆசிரியர் விஜயன் இருக்கிறாரே காமிக்ஸ் உலகத்துல புரட்சி செய்யணும்னு ரொம்ப ஆசை படுறவருங்க. அதனால அவர் பல ஆண்டுகளா XIII அப்படீங்கிற நினைவாற்றலை இழந்த ஒரு ரகசிய உளவாளி (அல்லது பலிகிடாவோட) சோக கதையை முத்துக்காமிக்ஸ்ல சீரியலைஸ் பண்ணிட்டு வாரார். பல அரசியல் உள்ளாட்டங்களை வெளிப்படுத்துகிற அந்த கதையை படிக்கிறதுனால அமெரிக்க அரசியலில் ஓடுகிற பல உள்ளோட்டமான விசயங்களை புரிஞ்சுகிட முடியும். உதாரணமா மக்கார்த்தே காலத்தில் நிலவிய கண்மூடித்தனமான கம்யூனிச எதிர்ப்பு அதன் பெயரால் சாதாரண இடதுசாரி சிந்தனையாளர்களைக் கூட தூக்கில் போட்ட விதம், கறுப்பின மக்களுக்கு எதிராக தீயாக எரிஞ்ச கு க்ளக்ஸ் க்ளான் வெறிக்கும்பலின் இயக்க வரலாறு, அதில் பெரிய அரசியல் வாதிகள் சம்பந்தப்பட்டிருந்தது (உங்களுக்கு தெரியுமா கொஞ்ச வருசங்களுக்கு முன்னாடி ரிப்பப்ளிக்கன் ஜனாதிபதி வேட்பாளரா தேர்ந்தெடுக்கப்படவிருந்த டேவிட் ட்யூக் அப்படீங்கிற ஆசாமி கு க்ளக் க்ளான் உறுப்பினர் என தெரிஞ்சதுனால ஜனாதிபதி ஆக முடியலை. ஆனா அந்த ஆள் இப்பவும் தீவிர யூத வெறுப்போட இயங்கிட்டுத்தான் இருக்கிறார். நம்மூர் அருந்ததி ராய் செப்டம்பர் 11 குறித்து எழுதின கட்டுரையும் இந்த ஆசாமி எழுதின கட்டுரையையும் பக்கத்துல பக்கத்துல வச்சா ஆறு வித்தியாசம்தான் பார்க்கணும்.) அப்புறம் ஜனாதிபதி கொலை முயற்சியில் அமெரிக்க உளவுத்துறை இராணுவம் மாதிரிப்பட்ட அமைப்புகளில் மேல் மட்ட ஆசாமிகளே இடம் பெற்றிருந்தது என பல விசயங்களை இந்த காமிக்ஸ் தொடர் வெளிப்படுத்தியது. நம்ப முடியாத ஆனால் நம்பாமலும் இருக்க முடியாத பல விசயங்கள் இந்த தொடரில் வெளிப்பட்டன. பல புனித பிம்பங்களை உடைக்கிற காமிக்ஸ் இது. அமெரிக்க ஜனாதிபதி இதில் ஒரு அல்டிமேட் வில்லன் என நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இது நிச்சயமாக வலதுசாரி 'தசை வலு கொண்ட வெள்ளைக்கார ஹீரோ' கதை அல்ல. இதை வாசித்தால் அரசியல் நிகழ்வுகளில் இருக்கக் கூடிய பல உள்குத்துக்கள் உங்களுக்கு புலனாகும். (இந்திய இறையாண்மைக்காக அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதாக சொல்லி இறுதியில் சீனாவுக்கு உதவி செய்யத்தான் எதிர்த்தோம் என காம்ரேட்டு காரத் சொன்னது போல). சரி இந்த குறிப்பிட்ட கதை தென்னமெரிக்க புரட்சிகளின் உள்ளே ஓடும் பல உள்ளோட்டங்களை வெளிப்படுத்துகிறது. இதில் க்யூபாவுக்கு போய் பயிற்சி பெற்று புரட்சிகளை நடத்தும் ஒரு ஆசாமி வருகிறான். இந்த சோசலிச 'புரட்சிக்கு' பொருள் உதவி கொடுப்பது யாரென நினைக்கிறீர்கள்? கீழே உள்ள பானல்களைப் பாருங்கள். குடும்ப பொலிட் பீரோ நடத்தும் காம்ரேட் காரத் அண்ணாத்தை முத்து காமிக்ஸை தடை செய்ய சொல்லமாட்டார் என்றும் குடும்ப அரசியல் நடத்தும் மஞ்சள் துண்டு மைனர் அதை சிரமேற்கொண்டு தடை செய்ய மாட்டார் என்றும் நம்புகிறேன்.
இனி காமிக்ஸிலிருந்து சில காட்சிகள்: [நன்றி : முத்து காமிக்ஸ்]
கீழே காணும் பேனல்களில் ஒரு அறிவுஜீவி இடது சாரி 'வரலாற்றாசிரியர்' உண்மையில் எப்படி அமெரிக்க பெரு முதலாளிகளின் கைக்கூலியாக இருக்கிறார் என்பது வெளியாவதைப் பாருங்கள்:

இது வரை காமிக்ஸ். இனி காம்ரேட்டு காரத்தின் அமெரிக்க எதிர்ப்பு பின்னணி என்ன? குடும்ப பாலிட் பீரோ உறுப்பினர் அண்ணாத்தை காரத்து ஒப்புக்கொண்ட படி எல்லாம் சீனா தனிமைப் பட்டுவிடக்கூடாதே என்றுதான் அணு ஒப்பந்தத்தை எதிர்த்தாராம். ஆனால் இங்கே பாருங்கள் சீனா அமெரிக்காவுடன் வர்த்த ரீதியாக கட்டித்தழுவுவதை. அதாவது அமெரிக்காவுடன் இலாபகரமான ஒப்பந்தங்கள் செய்வதில் சீனாவுக்கு போட்டியாக இந்தியா வந்துவிட கூடாது என்பதற்காக நடத்தப்படும் நாடகங்கள்தான் இந்தியாவில் அம்மா காரட்டும் அய்யா காரட்டும் போடுகிற அமெரிக்க எதிர்ப்பு கூத்தடிப்புக்கள். சில நேரங்களில் காம்ரேடுகள் காமிக்ஸ் த்ரில்லர்களையும் மிஞ்சி விடுகிறார்கள்.
உதாரணமாக சீன-அமெரிக்க நட்புறவு இணையதளத்தில் எப்படி சீனாவும் அமெரிக்காவும் ஆசியாவை பங்குபோட்டுக்கொள்ள -அதில் ஜப்பான் இந்தியா போன்ற நாடுகளை 'அவற்றுக்கு உரிய' இடத்தில் வைக்க- சீன-அமெரிக்க ணு ஆயுதக் கூட்டுறவு தேவை என்பது வலியுறுத்தப்படுகிறது. ஆக, அந்நிய சித்தாந்தங்கள் அந்நிய இறையியல் ஆகியவற்றால் ஏமாளி ஆகி நிற்கிறது அப்பாவி இந்தியா. லால் சலாம் அமெரிக்கா! லால் சலாம் சீனா!

[Disclaimer: இந்த வலைப்பதிவினுடைய அரசியல் சமுதாய பார்வையையோ அல்லது இந்தகுறிப்பிட்ட இடுகையின் அரசியல் சமூக பார்வையையோ முத்து காமிக்ஸோ அல்லது அதன் ஆசிரியர் விஜயனோ அல்லது XIII காமிக்ஸ் கதை ஆசிரியர்களோ ஏற்கிறார்கள் என்று இந்த வலைப்பதிவு கருதவில்லை.]

[பின்குறிப்பு: இரத்தப்படலம் எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த அருமையான பொலிட்டிக்கல் மற்றும் சாகச த்ரில்லர் முழுமையாக ரூ 200 விலையில் 800 பக்கங்களுடன் 2008 இல் முத்துகாமிக்ஸின் சகோதர காமிக்ஸான (இதுவும் விஜயனின் brain child தான்) லயன் காமிக்ஸால் வெளியிடப்படுகிறது. தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக திகழும் என்பதில் ஐயமில்லை. ஆசிரியர் விஜயனின் காலதாமதங்கள் புகழ்பெற்றவை என்றாலும் இந்த காமிக்ஸ் பொக்கிஷத்தை முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் கூரியர் சர்வீஸ் மூலம் பெற்றிட ரூ 225 பதிவுத்தபால் மூலம் பெற்றிடரூ 230. தரமான மொழி பெயர்ப்பு மற்றும் அழகிய ஓவியங்கள். ஆர்டர் அனுப்ப வேண்டிய முகவரி: பிரகாஷ் பப்ளிஷர்ஸ், 8/D-5 சேர்மன் பி.கே.எஸ்.ஏ.ஏ ரோடு, அம்மன் கோவில்பட்டி, சிவகாசி-626189 மின்னஞ்சல்: lion@vsnl.com. தாமதங்களுக்கு இவ்வலைப்பதிவு பொறுப்பல்ல. இவ்வலைப்பதிவு எவ்விதத்திலும் முத்து காமிக்ஸுடனோ லயன் காமிக்ஸுடனோ அதிகாரபூர்வ தொடர்புடையதில்லை.]

Labels: , , , , , , , ,

Wednesday, May 16, 2007

தமிழ் காமிக்ஸ் இலக்கியத்தில் திருப்புமுனை

சிறுவர் இலக்கியங்களில் சித்திர கதைகளுக்கு -காமிக்ஸுகளுக்கு- ஒரு முக்கிய இடம் உண்டு. தமிழ்நாட்டில் சர்வதேச காமிஸ்களை பிரபலப்படுத்தியது முத்து காமிக்ஸ்தான். மாலைமதி காமிக்ஸ் என்கிற காமிக்ஸும் சிலகாலம் செயல்பட்டு வந்தது (சிஸ்கோ கிட், ரிப் கெர்பி, பிலிப்
காரிகன் ஆகியவர்களை இது அறிமுகப்படுத்தியது.
பின்னர் இந்திரஜால் காமிக்ஸின் தமிழ் பதிப்புகள் சிறந்த வரவேற்பினை பெற்றன. ராணி காமிக்ஸ், மேகலா காமிக்ஸ், கண்மணி காமிக்ஸ் என்றெல்லாம் பல இறங்கினாலும் கூட முத்து காமிக்ஸின் தொடர்ச்சியான முத்திரை பதித்த வளர்ச்சியுடன் அவற்றால் போட்டியிட முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். தமிழில் வெளியாகும் இந்த காமிக்ஸ் கதைகள் வெளிநாட்டு உற்பத்திதான். ஆனால் அவற்றினை எடிட் செய்வதற்கும் திறம்பட மொழி பெயர்ப்பு செய்யவும் ஒரு திறமை வேண்டும். இந்திரஜால் காமிக்ஸின் கடைசி காலகட்டத்தில் வெளியான தமிழ் இதழ்களில் வந்த சகிக்கமுடியாத மொழிபெயர்ப்புகளை பார்த்தால் இது புரியும். ஆனால் தொடர்ந்து தமிழுலகில் தரம் இழக்காமல் இயங்கிவரும் காமிக்ஸ் என்றால் அது முத்து காமிக்ஸ்தான். முத்து காமிக்ஸின் சகோதர வெளியீடான லயன் காமிக்ஸும் முத்து காமிக்ஸ் குழுமத்துக்கான தரத்தினை காப்பாற்றி வருகிறது. ஆசிரியர் விஜயனை இந்த விசயத்தில் பாராட்ட வேண்டும். இந்நிலையில் தமிழ் கூறும் நல்லுலக காமிக்ஸினை முன்னகர்த்த ஒரு முயற்சியினை முன் வைத்திருக்கிறார் விஜயன். அந்த முயற்சியின் பெயர் 'மர்ம மனிதன் மார்ட்டின்'. தமிழ் காமிக்ஸ்களின் தீவிர ரசிகர்கள் உலகம் என்பது முத்து காமிக்ஸ் வட்டமாக மாறிவிட்டது என்று கூட கூறிவிடலாம். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக XIII என்ற ஆண்டுக்கொரு முறை வரும் அட்டகாசமான ஓவியங்களில் விரியும் சோக காவியத்தையும், அவ்வப்போது வரும் சி.ஐ.டி ராபின் என்னும் அலட்டல் இல்லாத யதார்த்த போலிஸ் துப்பறிவாளரையும் நீக்கிவிட்டால் முத்துக்காமிக்ஸ் முழுக்க முழுக்க கௌபாய் ஹீரோக்களால்தான் கொண்டு செல்லப்படுகிறது. ஒரு ஆறுதல் என்னவென்றால் நம் ஆஸ்தான கௌபாய் ஹீரோ பூர்விகக் குடிகளின் சார்பாக போராடும் இனவெறியற்ற மனிதர். ஆனால் சர்வதேச காமிக்ஸ்களில் பிரதானமாக விளங்கும் அறிவியல் புனைவுகள் (science fiction) தமிழ் காமிக்ஸ் உலகில் அத்தனை வெற்றிகரமாகிடவில்லை. மேகலா காமிக்ஸின் கடைசி இதழாக அமைந்தது கூட ஒரு அருமையான உணர்ச்சிகரமான sci-fi தான்.
இந்நிலையில் முத்துகாமிக்ஸ் ஆசிரியர் விஜயன் தைரியமாக ஒரு அறிவியல் புதின ஹீரோவை களமிறக்கி உள்ளார் என்றால் அது பாராட்டப்பட வேண்டிய விசயம்தான். அந்த ஹீரோதான் மர்ம மனிதன் மார்ட்டின். ஒரிஜினல் இத்தாலிய காமிக்ஸான 'மார்ட்டின் மர்மம்' (Martin Mystery) அல்ப்ரெடோ காஸ்டெலி என்பவரால் எழுதப்பட்டு ஜியான்கார்லோ அலெக்ஸாண்டரினி என்பாரால் ஓவியம் வரையப்பட்டு உருவாக்கப்படுகிறது. 1982 இல் உருவாக்கப்பட்ட இந்த காமிக்ஸ், சிறுவர் சித்திர இலக்கிய உலகில் ஒரு புரட்சியாகவே கருதப்படுகிறது. மர்மமனிதன் மார்ட்டின் ஒரு அகழ்வாராய்ச்சியாளர், பத்திரிகையாளர் கூடவே துப்பறியும் நிபுணர், அவரது உதவியாளராக இருப்பது ஜாவா எனப்படும் நியாண்டர்தல் கால பேச இயலாத மனிதர். ஜாவாவால் பேச இயலாதே தவிர அவரது புலனறிவும் உள்ளுணர்ச்சியும் அதீதமானது. இவர்கள் இணைந்து மர்மங்களை ஆராய்கின்றனர் -குறிப்பாக அமானுஷ்ய மர்மங்கள் -அட்லாண்டிஸ், ம்யூ, பிரமிட்கள் இத்யாதி. இதில் குறுக்கே நிற்கின்றன சில தீய சக்திகள். இவர்களுக்கிடையேயான போராட்டங்களை முத்துகாமிக்ஸில் ரூ 10க்கு படிக்கலாம். மார்ட்டினுக்காக உருவாக்கப்பட்ட கற்பனை உலகம் உண்மையானதல்ல. ஆனால் அது நம் சிறுவர்களுக்கு (நமக்கும் தான்) பல்வேறு புலங்களில் ஆர்வத்தை தூண்டக்கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. எரிக் வான் டானிக்கன் தனமான கற்பனைகளுக்கு மார்ட்டின் காமிக்ஸில் பஞ்சமில்லை என்றாலும் அது கற்பனை என்ற அளவில் சுவாரசியமானது. உதாரணமாக பிரமிடுகள் வேற்றுகிரக ஆசாமிகளால் கட்டப்பட்டது என்கிற கற்பனை படு சுவாரசியமானது. பிரமிடுகள் குறித்த உண்மையான தகவல்கள் சிலதுடன் இணைத்து இந்த கற்பனையும் ஒரு கற்பனை கதையாக வழங்கப்பட்டால் அது அகழ்வாராய்ச்சியில் ஒரு அற்புதமான ஆர்வத்தை மாணவனுக்கு உருவாக்கிவிடும். இதில் உள்ள ஒரே ஒரு பிரச்சனை தொடர்ந்து மாணவன் வளர வேண்டும். அதாவது மார்ட்டின் காமிக்ஸ் ஒரு உந்து பலகை மட்டுமே அதில் இருந்து மேலே குதித்து அடுத்த தளத்துக்கு செல்ல வேண்டும். வரலாற்றின் உண்மையான மர்மங்களில் வரலாற்றின் அறிவியல்தன்மையான ஆராய்ச்சியில் ஒரு ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இல்லாமல் எரிக் வான் டானிக்கன் சொல்வது உண்மை என நம்பிக்கொண்டிருந்தால் அது வளர்ச்சி ஆகாது. எனவேதான் மார்ட்டின் காமிக்ஸ் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. கடந்த ஆண்டு வெளியான மார்ட்டின் தமிழ் காமிக்ஸுகளிலிருந்து என்னென்ன விசயங்களுக்கு நாம் தாவ முடியும் என்பதனை காணலாம்.

1. அமானுஷ்ய அலைவரிசை: 'போதுமான அளவு முன்னேற்றமடைந்த நல்ல தொழில்நுட்பத்தை மாயாஜாலத்திலிருந்து வேறுபடுத்தி பார்க்கமுடியாது' என்பார் புகழ்பெற்ற அறிவியல் புதின எழுத்தாளர் ஆர்தர்.சி.க்ளார்க். இந்த காமிக்ஸ் அதனை தலைகீழாக்குகிறது. நமது பழைய மாயாஜாலங்கள் அதி நவீன தொழில்நுட்பமாக ஏன் இருக்கக்கூடாது?
அதன் பின்னாலிருக்கும் தொழில்நுட்பம் அத்துடன் இன்றைய மின்னணு தொழில்நுட்பம் இரண்டையும் இணைத்து எலெக்ட்ரோ-மாஜிக் என்கிற தொழில்நுட்பத்தை உருவாக்க முயற்சித்து வேறு பரிமாணங்களுடன் தொடர்பு கொண்டு பயணிக்க முடிந்த தொலைக்காட்சியை உருவாக்கிவிடும் ஒரு மேதையினால் ஏற்படும் பிரச்சனைகள். அதனை மார்ட்டின் எப்படி தீர்த்து வைக்கிறார்? இதுதான் கதை. இக்கதையில் சொல்லப்படும் விஷயங்களில் சில சுவாரசியமான வரலாற்று பின்புலமுடையவை. உதாரணமாக கீழ்வரும் பேனல்களை பாருங்கள்.
இதில் ஒரு மதகுரு ஒரு பொம்மையை உருவாக்குவதை குறித்த உரையாடல் வருகிறதல்லவா? அதன் பின்னணியில் உள்ள கதை சுவாரசியமானது. 16 ஆம் நூற்றாண்டு பிரேக் (Prague) நகரில் யூதர்கள் ஒதுக்கப்பட்ட கெட்டோ வில் வசித்துவந்தனர். அப்போது பேரரசர் யூதர்களை அழித்திட ஆணையிட்ட போது தாவீதிய வம்சாவளி யூதமதகுரு (ரபாய்) யூதா லோயெவ் களிமண்ணால் ஒரு உருவத்தை செய்து அதற்கு ஹீப்ரு மந்திர உச்சாடனத்தை செய்து இறை அம்சம் வாய்ந்த 'எம்ரித்' (சத்தியம்) என எழுதிட அது உயிர் பெற்றெழுந்து யூதர்களை தாக்க வந்தவரை துவம்ஸம் செய்ய ஆரம்பித்தது. இந்த உருவத்தின் பெயர் கோலெம் (Golem) என்பதாகும். அரசன் இதைக் கண்டு அச்சமடைந்து யூதர்களை அழிக்கும் உத்தரவை திரும்ப பெற்றுக்கொண்டான். அதன் பின்னர் ரபாய் அந்த பேருருவத்தின் நெற்றியில் எழுதப்பட்ட இறையம்ச நாமத்தின் ஒரு எழுத்தினை அழித்திட அது ம்ரித் என ஆயிற்று. மரணம் என்பது அதன் பொருள். கோலெம் மரணித்தது. இந்த வழக்காற்று கதை பின்னர் நாடகங்களாகவும் நடிக்கப்பட்டது. சில கதைகளில் இந்த எழுத்தினை ரபாயால் அழிக்க முடியவில்லை என்றும் அதனை ஒரு பெண் செய்ததாகவும், முழு அறிவற்ற படைப்பான கோலெம் அப்பெண்ணிடம் மனதினை பறிகொடுத்தமையால் அவளை தன்னை அழித்திட கோலெம் அனுமதித்ததென்றும் அவலச்சுவையுடன் கூறிடுவார்கள்.
ஒரு சவப்பெட்டியில் வைத்து கோலெம் புதைக்கப்பட்டதாகவும் அந்த புதைப்பெட்டியில் இன்றும் அந்த களிமண் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கோலெம் யூத ஆதரவு தொன்மம் மட்டுமல்ல அது யூத எதிர்ப்பு தொன்மமாகவும் உரு பெற்றது. நிலவுடமை சமுதாயத்திலிருந்து தொழிற்புரட்சி ஏற்பட்ட காலகட்டத்தில் யூதர்களுக்கு சமுதாயத்தில் மேல் நிலையில் வந்திட முடிந்தது. அதுவரை அவர்களை அடக்கி வைத்த சமுதாயத்தினால், அச்சமுதாயம் பெற்ற ஜனநாயகத்தன்மையினாலேயே அவர்களை அடக்கி வைக்க இயலாமல் போயிற்று. இந்நிலையில் இயந்திர வெறுப்பு ஒரு புறம் வெடித்தது. இயந்திரத்தின் மேலெழும்பிய யூதர்களே மனிதத்தன்மையற்ற இயந்திரத்தின் இரகசியகர்த்தாக்கள் என்பதாக கோலெம் தொன்மத்தின் மற்றொரு கதையாடல் எழுந்தது. எதுவாயினும் பல நவீன (பின்-நவீனத்துவ) காமிக்ஸ்களில் இந்த கோலெம் மீண்டும் மீண்டும் உயிர் பெற்றெழுவதை காணலாம். அண்மையில் டிசி(DC) காமிக்ஸ் இந்திய பதிப்பாக வெளியிட்ட கோத்தம் காமிக்ஸின் பாட்மேன் (Batman) கதை ஒன்றிலும் மந்திரத்தன்மை கொண்ட களிமண் ஒரு தப்பியோடும் குற்றவாளியை களிமண் மனிதன் ஆக்குவது குறித்தது ஆகும். மனிதனை தெய்வங்கள் களிமண்ணிலிருந்து ஆக்கின என்பது பழமையான சுமேரிய தொன்மம். ஆபிரகாமிய மதங்கள் அனைத்திலும் (கொரான் உட்பட) இத்த்தொன்மம் எதிரொலிக்கும். மனிதன் அதே களிமண்ணைக் கொண்டு மந்திர சக்தியுடன் உருவாக்கும் உயிரே கோலெம். எனவே அது குறைபாடுடையது. குறிப்பாக ஆன்மா நுண்ணறிவு ஆகியவை அற்றது என்பது இம்மரபின் பார்வை. ஏனெனில் ஜீவனின் அதி ரகசியம் தேவர்களுக்கே (அல்லது ஆபிரகாமிய தேவனுக்கே உரியது.) எனினும் மானுடம் யூத வெறுப்பியலுக்கு அப்பால் சென்றுவிட்டது. மதத்தளைகள் நீங்கி ஜீவரகசியங்கள் கைவர ஆரம்பிக்கும் நிலையில் அல்லது மதங்களின் அரிச்சுவடிகளின் கற்பனைக்கும் எட்டாத அளவு ஆழமடையும் நிலையில் கோலெம் எதைக் குறிக்கிறது? மார்ட்டின் கதையில் மாந்திரீகம் அல்லது மாயாஜாலம் அதி-உயர் தொழில்நுட்பம் என வருகிறது. மானுடம் இன்னமும் ஏற்றிட தயராகிடாத தொழில்நுட்பம்.... அடுத்த மார்ட்டீன் கதை [தொடரும்]

Labels: , , , ,