அகப்பயணம்

Thursday, November 08, 2007

முத்து காமிக்ஸும் காம்ரேட் காரத்தும்

முத்து காமிக்ஸுக்கும் காம்ரேட் காரத்துக்கும் என்ன தொடர்பு? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் ஏன் முடிச்சு என்கிறீர்களா? ஹி ஹி...தோழர்..சகாவு...காம்ரேட் காரத் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறாரே 'லெனினை ஹிட்லருடன் தொடர்பு படுத்துபவன் மூட்டாள்' என்று...ஆனால் முத்து காமிக்ஸ் சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட தீபாவளி மலரில் தென்னமரிக்காவில் நடக்கும் புரட்சிகளின் உண்மை உள்குத்துக்களை காமிக்ஸாக வெளியிட்டது. சரி. காமிக்ஸ் என்றால் சின்னபசங்க சமாச்சாரம் எங்களை மாதிரி அறிவு ஜீவிங்க அதை படிக்கிறது எல்லாம் Below our dignity அப்படீன்னு நினைக்கிற ஆத்மாக்கள் எல்லாம் ஒரு தடவை ஜோரா கைதட்டிட்டு விலகி போயிடலாம். சரியா மத்தவங்க தொடர்ந்து படிக்கலாம். நம்ம முத்து காமிக்ஸ் ஆசிரியர் விஜயன் இருக்கிறாரே காமிக்ஸ் உலகத்துல புரட்சி செய்யணும்னு ரொம்ப ஆசை படுறவருங்க. அதனால அவர் பல ஆண்டுகளா XIII அப்படீங்கிற நினைவாற்றலை இழந்த ஒரு ரகசிய உளவாளி (அல்லது பலிகிடாவோட) சோக கதையை முத்துக்காமிக்ஸ்ல சீரியலைஸ் பண்ணிட்டு வாரார். பல அரசியல் உள்ளாட்டங்களை வெளிப்படுத்துகிற அந்த கதையை படிக்கிறதுனால அமெரிக்க அரசியலில் ஓடுகிற பல உள்ளோட்டமான விசயங்களை புரிஞ்சுகிட முடியும். உதாரணமா மக்கார்த்தே காலத்தில் நிலவிய கண்மூடித்தனமான கம்யூனிச எதிர்ப்பு அதன் பெயரால் சாதாரண இடதுசாரி சிந்தனையாளர்களைக் கூட தூக்கில் போட்ட விதம், கறுப்பின மக்களுக்கு எதிராக தீயாக எரிஞ்ச கு க்ளக்ஸ் க்ளான் வெறிக்கும்பலின் இயக்க வரலாறு, அதில் பெரிய அரசியல் வாதிகள் சம்பந்தப்பட்டிருந்தது (உங்களுக்கு தெரியுமா கொஞ்ச வருசங்களுக்கு முன்னாடி ரிப்பப்ளிக்கன் ஜனாதிபதி வேட்பாளரா தேர்ந்தெடுக்கப்படவிருந்த டேவிட் ட்யூக் அப்படீங்கிற ஆசாமி கு க்ளக் க்ளான் உறுப்பினர் என தெரிஞ்சதுனால ஜனாதிபதி ஆக முடியலை. ஆனா அந்த ஆள் இப்பவும் தீவிர யூத வெறுப்போட இயங்கிட்டுத்தான் இருக்கிறார். நம்மூர் அருந்ததி ராய் செப்டம்பர் 11 குறித்து எழுதின கட்டுரையும் இந்த ஆசாமி எழுதின கட்டுரையையும் பக்கத்துல பக்கத்துல வச்சா ஆறு வித்தியாசம்தான் பார்க்கணும்.) அப்புறம் ஜனாதிபதி கொலை முயற்சியில் அமெரிக்க உளவுத்துறை இராணுவம் மாதிரிப்பட்ட அமைப்புகளில் மேல் மட்ட ஆசாமிகளே இடம் பெற்றிருந்தது என பல விசயங்களை இந்த காமிக்ஸ் தொடர் வெளிப்படுத்தியது. நம்ப முடியாத ஆனால் நம்பாமலும் இருக்க முடியாத பல விசயங்கள் இந்த தொடரில் வெளிப்பட்டன. பல புனித பிம்பங்களை உடைக்கிற காமிக்ஸ் இது. அமெரிக்க ஜனாதிபதி இதில் ஒரு அல்டிமேட் வில்லன் என நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இது நிச்சயமாக வலதுசாரி 'தசை வலு கொண்ட வெள்ளைக்கார ஹீரோ' கதை அல்ல. இதை வாசித்தால் அரசியல் நிகழ்வுகளில் இருக்கக் கூடிய பல உள்குத்துக்கள் உங்களுக்கு புலனாகும். (இந்திய இறையாண்மைக்காக அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதாக சொல்லி இறுதியில் சீனாவுக்கு உதவி செய்யத்தான் எதிர்த்தோம் என காம்ரேட்டு காரத் சொன்னது போல). சரி இந்த குறிப்பிட்ட கதை தென்னமெரிக்க புரட்சிகளின் உள்ளே ஓடும் பல உள்ளோட்டங்களை வெளிப்படுத்துகிறது. இதில் க்யூபாவுக்கு போய் பயிற்சி பெற்று புரட்சிகளை நடத்தும் ஒரு ஆசாமி வருகிறான். இந்த சோசலிச 'புரட்சிக்கு' பொருள் உதவி கொடுப்பது யாரென நினைக்கிறீர்கள்? கீழே உள்ள பானல்களைப் பாருங்கள். குடும்ப பொலிட் பீரோ நடத்தும் காம்ரேட் காரத் அண்ணாத்தை முத்து காமிக்ஸை தடை செய்ய சொல்லமாட்டார் என்றும் குடும்ப அரசியல் நடத்தும் மஞ்சள் துண்டு மைனர் அதை சிரமேற்கொண்டு தடை செய்ய மாட்டார் என்றும் நம்புகிறேன்.
இனி காமிக்ஸிலிருந்து சில காட்சிகள்: [நன்றி : முத்து காமிக்ஸ்]
கீழே காணும் பேனல்களில் ஒரு அறிவுஜீவி இடது சாரி 'வரலாற்றாசிரியர்' உண்மையில் எப்படி அமெரிக்க பெரு முதலாளிகளின் கைக்கூலியாக இருக்கிறார் என்பது வெளியாவதைப் பாருங்கள்:

இது வரை காமிக்ஸ். இனி காம்ரேட்டு காரத்தின் அமெரிக்க எதிர்ப்பு பின்னணி என்ன? குடும்ப பாலிட் பீரோ உறுப்பினர் அண்ணாத்தை காரத்து ஒப்புக்கொண்ட படி எல்லாம் சீனா தனிமைப் பட்டுவிடக்கூடாதே என்றுதான் அணு ஒப்பந்தத்தை எதிர்த்தாராம். ஆனால் இங்கே பாருங்கள் சீனா அமெரிக்காவுடன் வர்த்த ரீதியாக கட்டித்தழுவுவதை. அதாவது அமெரிக்காவுடன் இலாபகரமான ஒப்பந்தங்கள் செய்வதில் சீனாவுக்கு போட்டியாக இந்தியா வந்துவிட கூடாது என்பதற்காக நடத்தப்படும் நாடகங்கள்தான் இந்தியாவில் அம்மா காரட்டும் அய்யா காரட்டும் போடுகிற அமெரிக்க எதிர்ப்பு கூத்தடிப்புக்கள். சில நேரங்களில் காம்ரேடுகள் காமிக்ஸ் த்ரில்லர்களையும் மிஞ்சி விடுகிறார்கள்.
உதாரணமாக சீன-அமெரிக்க நட்புறவு இணையதளத்தில் எப்படி சீனாவும் அமெரிக்காவும் ஆசியாவை பங்குபோட்டுக்கொள்ள -அதில் ஜப்பான் இந்தியா போன்ற நாடுகளை 'அவற்றுக்கு உரிய' இடத்தில் வைக்க- சீன-அமெரிக்க ணு ஆயுதக் கூட்டுறவு தேவை என்பது வலியுறுத்தப்படுகிறது. ஆக, அந்நிய சித்தாந்தங்கள் அந்நிய இறையியல் ஆகியவற்றால் ஏமாளி ஆகி நிற்கிறது அப்பாவி இந்தியா. லால் சலாம் அமெரிக்கா! லால் சலாம் சீனா!

[Disclaimer: இந்த வலைப்பதிவினுடைய அரசியல் சமுதாய பார்வையையோ அல்லது இந்தகுறிப்பிட்ட இடுகையின் அரசியல் சமூக பார்வையையோ முத்து காமிக்ஸோ அல்லது அதன் ஆசிரியர் விஜயனோ அல்லது XIII காமிக்ஸ் கதை ஆசிரியர்களோ ஏற்கிறார்கள் என்று இந்த வலைப்பதிவு கருதவில்லை.]

[பின்குறிப்பு: இரத்தப்படலம் எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த அருமையான பொலிட்டிக்கல் மற்றும் சாகச த்ரில்லர் முழுமையாக ரூ 200 விலையில் 800 பக்கங்களுடன் 2008 இல் முத்துகாமிக்ஸின் சகோதர காமிக்ஸான (இதுவும் விஜயனின் brain child தான்) லயன் காமிக்ஸால் வெளியிடப்படுகிறது. தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக திகழும் என்பதில் ஐயமில்லை. ஆசிரியர் விஜயனின் காலதாமதங்கள் புகழ்பெற்றவை என்றாலும் இந்த காமிக்ஸ் பொக்கிஷத்தை முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் கூரியர் சர்வீஸ் மூலம் பெற்றிட ரூ 225 பதிவுத்தபால் மூலம் பெற்றிடரூ 230. தரமான மொழி பெயர்ப்பு மற்றும் அழகிய ஓவியங்கள். ஆர்டர் அனுப்ப வேண்டிய முகவரி: பிரகாஷ் பப்ளிஷர்ஸ், 8/D-5 சேர்மன் பி.கே.எஸ்.ஏ.ஏ ரோடு, அம்மன் கோவில்பட்டி, சிவகாசி-626189 மின்னஞ்சல்: lion@vsnl.com. தாமதங்களுக்கு இவ்வலைப்பதிவு பொறுப்பல்ல. இவ்வலைப்பதிவு எவ்விதத்திலும் முத்து காமிக்ஸுடனோ லயன் காமிக்ஸுடனோ அதிகாரபூர்வ தொடர்புடையதில்லை.]

Labels: , , , , , , , ,