மர்மங்கள் ஊடாக ஒரு பயணம்:1
மர்மம் - தேடல் கொண்ட எவரையும் சுண்டியிழுக்கும் பதம் இது. அகவயத்தன்மை கொண்டது இப்பதம். ஒருவருக்கு மர்மமாக இருப்பது மற்றொருவருக்குப் படு சாதாரணமான
விஷயமாக இருக்கக்கூடும். ஒருவருக்கு விளக்க இயலாத மர்மமாக இருப்பது மற்றொருவருக்கு வெறும் கற்பனையாகத் தோன்றக்கூடும். என்றால், எவை மர்மங்கள்? நம் சாதாரண அறிவுக்கு அப்பால் பட்ட விஷயங்களை மர்மங்கள் எனலாமா? அறிவியலால் விளக்க இயலாதவற்றை மர்மங்கள் எனலாமா? அறிவியல் இன்னமும் தன் ஒளியை பாய்ச்சி வெளிச்சத்துக்கு கொண்டு வராதவற்றை மர்மங்கள் எனலாமா? ஆர்தர்.சி.க்ளார்க், கார்ல் சாகன், சூசன் பிளாக்மோர் போன்றவர்கள் கறாரான அறிவியலின் சட்டகத்திலிருந்து மர்மங்கள் என கருதப்பட்டவற்றை ஆராய்ந்துள்ளனர்.
பூமியின் மர்மங்கள்
உயிரின் தோற்றத்தில் வேற்றுக்கிரகப் பங்களிப்பு:
வேதியியலாளர் அர்கீனியஸ் பூமிக்கு வெளிக்கிரகங்களிலிருந்து உயிர் கோளங்கள் அண்டவெளியில் மிதந்தபடி வந்திருக்கலாம் என ஊகித்தார். ஆனால் அண்டவெளி கதிர்வீச்சில் அத்தகைய கோளங்கள் பிழைக்க முடியாதென்பதால் அக்கருதுகோள் நிராகரிக்கப்பட்டது. பின்னர் ஒபாரினின் ஆதி கடலில் கரிம மூலக்கூறு குழம்பிலிருந்து உயிர்
உருவாகியிருக்கலாம் என்பதே நிறுவப்பட்ட அறிவியல் உண்மையாகிவிட்டது. ஆனால் 1979-இல் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் தயால்
விக்கிரமசிங்கே, டேவிட் ஆலன் ஆகியோர் வால்-நட்சத்திரத்திலிருந்து பூமியின் வளிமண்டலத்தில் உதிரும் துகளின் நிறமாலையை ஆராய்ந்த போது அது காய்ந்த பாக்டீரிய
கோளங்களின் நிறமாலையை ஒத்திருப்பதைக் கண்டனர். இதனைத் தொடர்ந்து சந்திரா விக்கிரமசிங்கே சர்.பெரெட் ஹோயல் கியோர் பூமியில் உயிர்களின் தோற்றத்தில்
விண்வெளியிலிருந்து வரும் நுண்ணுயிரிகளின் பங்கும் இருக்கலாமெனும் கோட்பாட்டினை முன்வைத்தனர். செவ்வாய் கிரகத்தைச் சார்ந்த விண்கல் பூமியில் கண்டெடுக்கப்பட்ட போது
அதில் பாக்ட்டீரிய செயல்களால் ஏற்பட்டது போன்ற அமைப்புகள் காணப்பட்டன.
2001 இல் ஜெயந்த் நர்லிக்கரால் வடிவமைக்கப்பட்ட ஒரு பரிசோதனை இந்திய விண்வெளி அமைப்பால் நடத்தப்பட்டபோது வளிமண்டல உயர் தளங்களில் புவி சாராத நுண்ணுயிரிகள் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே பூமியின் உயிரினத் தோற்றத்திலும் பரிமாண வளர்ச்சியிலும் அண்டவெளியின் பங்களிப்பு சாத்தியமானது என்பது தெரிகிறது. ஆனால் எந்த அளவுக்கு? இப்போதும் அது தொடர்கிறதா என்பவை ஆராயப்பட வேண்டிய மர்மங்களே ஆகும்.
டைனோஸார்கள் எவ்வாறு அழிந்தன?:
1300 ஊர்வன வகை விலங்குகளான டைனோசார்கள் ஒருகாலத்தில் இப்புவியின் முக்கிய உயிரினங்களாகத் திகழ்ந்தன. அவை எவ்வாறு அழிந்தன என்பது இன்றைக்கும் மர்மமாகவே
உள்ளன. ஏறக்குறைய 650 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னதாக இவ்வுயிரினங்கள் அழிந்தன. எவ்வாறு? அதிகமான எடை அதிகமான உணவுத்தேவை மற்றும் மாறிய காலச்சூழல் ஆகியவற்றால் இவை அழிந்திருக்கக் கூடுமென நம்பப்பட்டு வந்தது. பின்னர் 1980இல் லூயிஸ் அல்வரேஸ் எனும் நிலவியலாளர் 650 இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் உருவான நில-அடுக்குகளில் இரிடியம் எனும் தனிமம் இருப்பதைக் கண்டுபிடித்தார்.
'இக்காலக்கட்டத்தில் பல மைல்கள் அகலம் கொண்ட ஒரு ராட்சத விண்கல் பூமியில் மோதியிருக்கலாம். பல்லாயிரம் அணுக்குண்டுகளின் ஆற்றலுடன் பெரும் அழிவினை உருவாக்கிய அம்மோதல் பெரும் வெப்பத்தையும் வெளியிட்டது. பெரும் புழுதி மண்டலம் கிளம்பியது. ஒளிச்சேர்க்கை தடைப்பட்டது. உலகின் பெரும் மிருகங்களான டைனோசர்கள் அழிந்தன. அப்போது சிறு விலங்குகளாக இருந்த பாலூட்டிகளின் பரிணாமத்திற்கு இது வழிவகுத்தது.' எனும் கோட்பாட்டினை அவர் முன்வைத்தார்.
இத்தகைய விண்கல் மோதல் ஒரு குறிப்பிட்ட காலச்சுழலில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியா? மெக்ஸிகோவில் 180 கிமீ அகலம் கொண்ட விண்கல் 650 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் மோதியதால் ஏற்பட்ட கிரேட்டர் இந்த அழிவு நிகழ்ச்சிக்கு சான்று பகர்கிறது.
பூமி ஒரு அதி-உயிரியா?:
பல பண்டைய ஐதீகங்களும் புராணங்களும் பூமியை ஒரு தாய்த்தெய்வமாகக் கூறுகின்றன. அண்மையில் ஒரு அறிவியல் கருதுகோள் பூமியை ஒரு உயிர் அமைவாக (system)
காணும் சாத்தியக்கூறினை முன்வைத்துள்ளது. உயிரி-இயற்பியலாளர் (bio-physicist) ஜேம்ஸ் லவ்லாக்கும் நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர் லின் மர்குலிஸும் இக்கருதுகோளை
வலியுறுத்துகின்றனர். பூமியும் அதன் உயிரினங்களுமாக இப்புவியின் வெப்பம், வளிமண்டல அமைப்பு மற்றும் இயக்கம், வளிமண்டலத்திலிருக்கும் வாயுக்களின் தன்மை ஆகியவற்றைப்
பெருமளவில் நிர்ணயிப்பதைச் சுட்டிக்காட்டும் இவர்கள் புவிசார்ந்த கார்பன் சுழற்சி, நீர் சுழற்சி போன்ற பல சுழற்சிகளில் உயிரினங்களின் ஒட்டுமொத்த இயக்கம் முக்கிய பங்கு
வகிப்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். முதலில் இக்கருதுகோளை இவர்கள் வெளியிட்டபோது அதனைப் பிரசுரிக்க பல முக்கிய அறிவியல் இதழ்கள் மறுத்துவிட்டன.
[அடுத்ததாக வரலாற்று மர்மங்கள்]
5 Comments:
Who is going to be the Sherlock Holmes ?
நீல்ஸ், நீங்கள் ஒரு புத்தக புழுவா இணைய பறவையா?
அதி அற்புத நடமாடும் நூல்நிலையமாக இருக்கிறீர்கள்.
என் போன்ற எளியவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளீர்கள்
தொடரட்டும் உங்கள் பணி
மிக நல்ல பதிவு
கால்கரி சிவா
நான் புழுங்க. பாராட்டுக்கு நன்றி. நெளியிறேன் :)
கோனன் டாயில்,
சத்தியமா நான் ஷெர்லக் இல்லீங்க. ஏன்னா வீடு இருக்கிறது பேக்கர் ஸ்ட்ரீட் கிடையாது, எனக்கு வயிலின் வாசிக்கிற பழக்க்கம் கிடையாது. ஆனா ஒவ்வொரு மர்மத்துலயும் ரொம்ப ஹோம்ஸ்களை சந்திக்க போறீங்க.
ஆள் விழுங்கி அரவிந்தன்,
ஆபிரகாம் கோவூர் போன்றவர்கள் மர்மங்கள் எனத் திகைக்க வைத்தவற்றைப் பித்தலாட்டங்கள் என நிறுவ முயன்று குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் அடைந்தவர்கள்.
எங்கள் திராவிட கழகத்தின் அரும்புதல்வரான "ஆபிரகாம் கோவுரை" இந்துத்துவ கருத்துக்களில் ஒன்றான "கடவுள் மறுக்கும் இறையியலோடு" ஒப்பிட்டு உள்வாங்கப் பார்க்கிறீர்களே. உங்களது உள்வாங்கும் சதி எங்களுக்கு புரியாது என்று நினைக்கிறீர்களா?
அளவற்ற அருளாளனான அல்லா கவனித்துக்கொண்டிருக்கின்றான் என்பதை மறவாதீர்.
அரவிந்தன்,
நல்ல பதிவு. நல்ல தொடக்கம்.
அறிவியல் மர்மங்கள் ஒன்றிரண்டை மற்றும் குறிப்பிட்டு விட்டு வரலாற்றுக்குத் தாவி விட்டீர்களே ! வரலாற்றை முடித்து விட்டு மறுபடியும் அறிவியல் பக்கம் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
Post a Comment
<< Home