மகா சிவராத்திரி

ஜூன் 18 2004 அன்று ஜெனீவாவில் உள்ள அணுத்துகள் ஆராய்சி மையத்தில் சிவதாண்டவ சிலை நிறுவப்பட்டது.
பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் இயக்கத்தின் அழகிய குறியீட்டு வெளிப்பாடாக இயற்பியலாளர் சிவதாண்டவத்தை கருதுகின்றனர்.
மீச்சிறிய அணுவினுள் இருக்கும் இயக்கங்களையும் மிகப் பிரம்மாண்டமான எண்ணிலடங்கா தாராமண்டலங்களின் இயக்கங்களையும் காண்கின்றனர் அறிவியலாளர்,
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இயக்கம். சுழல்கள். வீச்சுக்கள்.

குமிழிகளென எழுந்து கரையும் பொருண்மையும் ஆற்றலும் ஒன்றோடொன்று தந்நிலை மாறிடும்.
காலமும் வெளியும் கூட ஏதோ ஓர் பெரும் பிரக்ஞையில் ஏற்படும் ஸ்வரகதிகளென தோன்றும்.
இயற்பியலாளனின் அகம் விரிந்து அறிவியல் கவிதையாக இசைக்கப்படும் அந்த அபூர்வ தருணத்தில் பிரபஞ்ச இயக்கத்தின் அழகனைத்தும் சேர்ந்திலங்கும் குறியீடாக அவன் நடராஜ மூர்த்தியை காண்கிறான்.
ஆகா! உன்னதமான பிரபஞ்சம் முழுவதும் தழுவும் இயக்கத்தின் உணர்வு உள்ளெளும் பேறு பெற்ற ஒரு மாபெரும் மனிதர் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் சிவபெருமானின் நடனத்தின் ஒரு வீச்சாகவே அல்லவா உணர முடியும்! இதோ கேளூங்கள்:
"பூமியில் எங்கு சென்றாலும் ஓர் அசைவும் உயிர்ப்பும் உள்ளது. தோற்றத்தில் ஜடமாக இருக்கும் பாறைகள், உலோகம், மரம், களிமண்...எல்லாவற்றுக்குள்ளும் உள்ளார்ந்த இயக்கம் உண்டு. அணுக்கருவை எலக்ட்ரான்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ...திடப்பொருளாகக் காணப்படும் எல்லாவற்றுக்குள்ளும் அதிவேக இயக்கம் உள்ளது. நமது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும் சிவபெருமானின் அற்புத நடனத்தைப் போலவே அமைந்துள்ளது."
சொன்னவர் நமது மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய பாரத குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள்.


அனந்த குமாரசாமியின் சிவதாண்டவம் குறித்த வார்த்தைகள் அழியாப்புகழுடையவை:
சிவதாண்டவம் அறிவியல், சமயம் மற்றும் கலை ஆகியவற்றின் இணைப்பு ஆகும்.
சிருஷ்டியின் இரவில் இயற்கை அசைவற்று உள்ளது.
சிவ சங்கல்பம் இல்லாமல் அது நடனமிட முடியாது. சிவபெருமான் தனது ஆனந்தத்துவத்தில் எழுகிறார். அந்த நடனம் ஜட இயற்கையை விழித்தெழ வைக்கும் நாத அலைகளை உருவாக்குகிறது. ஆகா! இயற்கையும் சிவபெருமானைச் சுற்றிச் சுழன்று அவரது மகோன்னதத்தைக் காட்டும் விதமாக நடனமாடுகிறது.
இது கவிதை அத்துடன் இது அறிவியல்

அணு உட்துகள்கள் இயற்பியலாளர் ப்ரிட்ஜாப் காப்ரா 'தாவோ ஆஃப் பிஸிக்ஸி'ல் கூறுகிறார்:

"சிருஷ்டியும் அழிவும் லயத்துஅன் வெளிப்படுவது என்பது பருவக்காலங்களின் சுழற்சியிலும் உயிர்களின் ஜனன-மரணத்திலும் மட்டுமல்ல, ஜடப்பொருண்மையின் அடிப்படைத்தன்மையிலேயே அந்த லயம் உள்ளது என்பதனை நவீன இயற்பியல் நமக்கு காட்டியுள்ளது.
நவீன இயற்பியலாளருக்கு
சிவ தாண்டவம் என்பது
அணுவுக்கு உள்ளே இருக்கும்
துகள்களின் தாண்டவமே ஆகும்.

...பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பாரத கலைஞர்கள் சிவதாண்டவத்தினை செப்புத்திருமேனி விக்கிரங்களாக வடித்தனர்.
இன்று நவீன இயற்பியலாளர்கள் மிகவும் நவீன தொழில் நுட்பத்துடன் பிரபஞ்ச தாண்டவத்தின் இயக்கங்களை பதிவு செய்கின்றனர்.
(சிவ பெருமானின்) பிரபஞ்ச தாண்டவ உருவகம்
பழமையான தொன்மத்தையும்,
ஆன்மிக கலையையும்,
நவீன இயற்பியலையும்
ஒருங்கிணைக்கிறது."

அணுவுக்குள் இயக்கத்தைக் கண்ட இயற்பியலாளருக்கு சிவதாண்டவம் உள்மனதில் உதயமாயிற்று என்றால் பிரபஞ்சவியலாளருக்கு எவ்வித எண்ணம் ஏற்பட்டது?
கார்ல்சாகன் தனது 'காஸ்மாஸ்' எனும் நூலில் கூறுகிறார்:
"ஒவ்வொரு பிரபஞ்ச சுழலுக்கு முன்னருமாக அண்ட சராசரங்களும் உதயமாவதை மிக அழகிய உன்னதமான வடிவி காட்டுவது பிரபஞ்ச தாண்டவ வடிவமாகும். நடனங்களின் தலைவனான நடராஜராக சிவபெருமான் நான்கு கரங்களுடன் திகழ்கிறார். அவரது வலது மேல் கரத்தில் உள்ள டமரு சிருஷ்டியின் நாதத்தை காட்டுகிறது. இடது மேல்கரத்தில் சுழலும் நெருப்பு ஜுவாலைகள் உள்ளன. அது இப்போது முகிழ்த்தெழும் புதிய பிரபஞ்சமும் காலத்தில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர் அழிந்துவிடும் என்பதனைக் காட்டுகிறது. இந்த அழகிய விக்கிரகத்தை நவீன வானவியலின் தரிசனங்களின் ஒருவித முன்-அறிதலாக (premonition) நான் காண்கிறேன்."


இயற்பியலாளர்கள் மட்டுமல்ல மனவியலாளர்களும் கூட மனதின் அக பிரபஞ்சத்தில் சிவ தாண்டவத்தை உணர்கின்றனர். அறிவியல் சிறுபிள்ளைத்தனமான மத நம்பிக்கைகளை சிதறடிக்கிறது. அத்தருணம் சிவதாண்டவத்தின் ஒரு பகுதியாக வாழ்வு மாறுவது எத்தகையதோர் புத்துணர்ச்சியுடன் வாழ்வையும் பிரபஞ்சத்தையும் காணும் வலுவினை நமக்கு தருகிறது! விலையனூர் ராமசந்திரன் இன்றைய தேதியில் பிரக்ஞை குறித்த ஆராய்ச்சியாளர்களில் மிகச்சிறந்தவராக கருதப்படுபவர். அவர் கூறுகிறார்: "(ஆன்மிக உணர்வுக்கு அருகில் அறிவியலாளன் வரும் தருணங்களில்) பரிணாமமும் ஒன்றாகும். ஏனெனில் கால வெளி குறித்து ஒரு தெளிவினை உங்களுக்கு அளிக்கிறது. ஒரு பெரும் பயணத்தில் ஒரு பகுதியாக உங்களை உணர்ந்திட வழி வகுக்கிறது. இதையே மூளையினை ஆராயும் அறிவியல் புலங்களுக்கும் கூறலாம். இந்த புரட்சியில் மனதினும் உடலினும் வேறாக ஆவி ஒன்று இருப்பதாக கூறும் பார்வையினை விட வேண்டியதாயிற்று. உண்மையில் இக்கருத்து அச்சமூட்டுவதல்ல மாறாக விடுதலை உணர்வளிப்பதாகும். நீங்கள் இந்த உலகில் ஏதோ தனித்தன்மை படைத்த படைப்பு என்றும் இந்த பிரபஞ்சத்தை உங்களுக்கென ஏற்படுத்தப்பட்ட தனி இடத்தில் அமர்ந்துகொண்டு பார்க்கிறவர் என்றும் நினைத்துக்கொண்டு இருந்தால் உங்கள் அழிவு ஏற்க முடியாத துன்பமாகிறது. மாறாக நீங்கள் அத்தகைய தனித்தன்மை கொண்ட பார்வையாளராக இல்லாமல் சிவபெருமானின் பெரும் பிரபஞ்ச தாண்டவத்தில் நீங்கள் உண்மையிலேயே ஒரு பகுதியாக உணரும் அத்தருணம் தனில் உங்கள் மரணம் துக்ககரமான விடயமில்லை. மாறாக, இயற்கையுடன் மீண்டும் இணைந்திடும் ஒரு ஆனந்த தருணமாக உங்கள் நடனம் மாறுகிறது."
நமது முன்னோர்களும் இந்த பிரபஞ்சமளாவி ஊடுருவி நின்ற பிரம்மாண்ட இயக்கத்தினை சிவ தாண்டவமாக உணர்ந்தார்களா? அல்லது அறிவியலாளர்கள் சிலர்தான் இன்று அவ்வாறு உணர்கிறார்களா என தோன்றலாம். நிச்சயமாக மாணிக்கவாசக சுவாமிகளுக்கும் திருமூலருக்கும் க்வார்க்கும், க்வாசரும், சூப்பர் நோவாக்களும், பெரும் அதிர்வும், பிரபஞ்ச விரிவும், மேசானும், பாஸிட்ரானும் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஆனால் பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்திலும் அணுவின் நுண்மைக்குள்ளும் சிவ தாண்டவ் இயக்கத்தினை அவர்கள் தம் அகத்துணர்வில் உணர்ந்து அனுபவித்து அந்த சிவ இன்பத்தில் தோய்ந்தார்கள் என்பதில் ஐயமில்லை.

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக்(கு) ஒன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
என சொல்லும் எம்பிரான் மாணிக்கவாசக சுவாமிகளின் வார்த்தைகளில் விரிவது இன்று அறிவியல் காட்டும் பிரபஞ்சமே அல்லவா? கார்ல் சாகனும் காப்ராவும் பத்தி பத்தியாக சிவபெருமானின் தாண்டவத்தை விவரித்ததை மாணிக்கவாசக சுவாமிகள் இரண்டே வரிகளில் கூறிவிடுகிறார் தெய்வ தமிழில் திருவண்டப்பகுதியில்.

விரி பொருள் முழுதாய் விரிந்தோன் காண்க
அணுத்தருந் தன்மையில் ஐயோன் காண்க

திருமூலர் கூறுகிறார் பாருங்கள்:
எங்குந் திருமேனி எங்குந் சிவசக்தி
எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநட்டம்
எங்குஞ் சிவமாயிருத்தலால் எங்கெங்கும்
எங்குஞ் சிவனரு டன்விளை யாட்டே (திருமந்திரம் 2721)

சிவ உணர்வு உலகெங்கும் வியாபிக்கட்டும்.
சிவ உணர்வு ஒவ்வொருவர் உள்ளத்தும் சுடர்விடட்டும்.
சிவ உணர்வு அமைதியையும் நன்மையையும் அனைவருக்கும் அளிக்கட்டும்.
சிவமே அனைத்தும். சிவமன்றி வேறெதுவும் இப்பிரபஞ்சத்தில் இல்லை.
சிவ தாண்டவமே அனைத்தியக்கமும்.
வண்ணத்து பூச்சியின் அசைவிலும்
அண்ட வெளியின் கருந்துளை சுழற்சியிலும்
இருதயத்தின் இயக்கத்திலும்
பரிணாம மாற்றங்களிலும்
அழிவுகளிலும் ஆக்கங்களிலும்
எங்கும் சிவதாண்டவமே.
கலங்கும் சிறு நெஞ்சும் அமைதி பெற
அம்மையப்பனாய் அரவணைக்கும் தாயுமானவன் சிவன்.
சிவபெருமானின் இரவுக்கு காண ஒரு எளிய சமர்ப்பண இருநிமிட தொகுப்பு:
8 Comments:
அற்புதமான பதிவு
வணக்கம் அரவிந்தன்
நடராஜரின் சிவதாண்டவத்தில் பிரபந்த ரகசியம் அடங்கியிருப்பதை அற்புதமாக விளக்கியுள்ளீர்கள். தகுந்த மேற்கோள்களும், இறுதியில் வீடியோவும், பாடலும் வெகு நேர்த்தி. உங்கள் உழைப்புக்கும் அறிவுக்கும் என் சிரம் தாழ்த வணக்கங்கள். நம் பாரம்பரியத்துள் புதைந்துள்ள கோடானு கோடி செல்வங்களை எளிய தமிழில் எடுத்துச் சொல்லும் உங்கள் பணி தொடரட்டும். அந்த நீலகண்டன் உங்களுக்கு அதற்கான நீண்ட ஆயுளையும், தேக ஆரோக்கியத்தையும், மன நிம்மதியையும் அளிக்கக்கட்டும்.
அன்புடன்
ச.திருமலை
// நிச்சயமாக மாணிக்கவாசக சுவாமிகளுக்கும் திருமூலருக்கும் க்வார்க்கும், க்வாசரும், சூப்பர் நோவாக்களும், பெரும் அதிர்வும், பிரபஞ்ச விரிவும், மேசானும், பாஸிட்ரானும் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஆனால் பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்திலும் அணுவின் நுண்மைக்குள்ளும் சிவ தாண்டவ் இயக்கத்தினை அவர்கள் தம் அகத்துணர்வில் உணர்ந்து அனுபவித்து அந்த சிவ இன்பத்தில் தோய்ந்தார்கள் என்பதில் ஐயமில்லை. //
உண்மை உண்மை. இந்த பிரபஞ்ச தரிசனத்தை கண்டிப்பாக அவர்கள் அகக் கண் கொண்டு கண்டார்கள், உணர்ந்தார்கள். அந்த வரிகளைப் படிக்கும், பாடும், தியானிக்கும் நாமே ஒரு கணம் அந்த உணர்வுக்குள் மீண்டு திரும்புருகிறோமே!
// விரி பொருள் முழுதாய் விரிந்தோன் காண்க
அணுத்தருந் தன்மையில் ஐயோன் காண்க //
"அணோரணீயான், மஹதோ மஹீயான்" என்ற உபநிஷத் வரிகளின் எதிரொலி திருவாசகத்தில்!
// சிவ உணர்வு உலகெங்கும் வியாபிக்கட்டும்.
சிவ உணர்வு ஒவ்வொருவர் உள்ளத்தும் சுடர்விடட்டும்.
சிவ உணர்வு அமைதியையும் நன்மையையும் அனைவருக்கும் அளிக்கட்டும். //
இதே வரிகளை "சிவ தத்வ" என்ற சொல்லுடன், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அகமதாமாத்தில் நடைபெற்ற சிவராத்திரி தியான, யோக விழாவிலும் சொன்னார். ஆன்மிக அலைகளின் அற்புத ஒத்திசைவு !
நல்ல பதிவு. மிக அருமையான பிரப்ஞ்சப் பேருண்மை சிவதாண்டவத்தினால் வெளிப்படுத்தப்படுவதை இறையியல்துறை மட்டுமல்லாது பல்வேறு அறிவியல் துறையிலிருப்பவர்க்ளான விஞ்ஞானிகள் நம்நாட்டிற்கு வெளியே உணர்வதென்பது உயரிய அறிவியல் பாரம்பரியம் இந்தியப் பாரம்பரியம் என்பதை மீண்டும் தெளிவாக்குகிறது.
நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுரை.
வாழ்த்துக்கள் அரவிந்தன்.
ஆஹா அருமையான் பதிவுங்க இது.
வீடுகளில் நடராஜ தாண்டவ சிலையை வைக்ககூடாது என்று ஒரு மடத்தனம் நிலவுகிறது நம் நாட்டில்.
:(
அரவிந்தன்,
உலகம் உருவானதுபற்றி (creation) இந்து மதம் என்ன சொல்கிறது என ஒரு கட்டுரை வரையுங்களேன்.
நான் படித்திருக்கிறேன் கொஞ்சம் மறந்துவிட்டது.
அதுபோல Cosmic Dance பற்றி நடராஜரின் நாடியத்துக்கும் இதற்கும் தொடர்பான குறியீடுகளை அறிய ஆவலாயுள்ளேன்.
எல நீங்கல்லாம் இன்னும் திருந்தலையால
migavum arpudhamana padhippu
Post a Comment
<< Home