Thursday, July 12, 2007

ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்க...

"கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே" சொல்ல நன்றாகத்தான் இருக்கிறது. நல்ல அறிவுரைதான். ஆனால் அந்த நிலைமை நம் குழந்தைக்கு ஏற்பட்டால்? பிச்சை புக்கு கற்கை எனும் நிலையில் உங்கள் குழந்தையின் முகத்தை ஒருநிமிடம் மனக்கண் முன் நிறுத்திக்கொண்டு மேலே படியுங்கள்....

ராசாத்தியையும் ரதிஷாவையும் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பத்மநாபபுரம் அரசு தொடக்க பள்ளி மாணவிகள்தான் இவர்கள் இருவரும். ராசாத்தியின் வயது 10. ரதிஷாவின் வயது 9. தெரிந்திருக்க வேண்டிய அளவு அவர்கள் என்ன சாதனை செய்கிறார்கள் என்கிறீர்களா? அவர்கள் பள்ளி மாணவிகள். அதுதான் அவர்களின் சாதனை. இதென்ன சாதனை என்று கேட்கிறீர்களா? கடந்த வாரங்களில் பள்ளி விடுமுறை நாட்களில் பத்மநாபபுரம் அரண்மனை பக்கமாக நீங்கள் வந்திருந்தால் இரண்டு பெண் குழந்தைகள் உங்களிடம் பிச்சை கேட்டிருப்பார்கள். திங்கள் கிழமை பள்ளி சீருடையில் அவர்களை நீங்கள் அடையாளம் கண்டிருக்க முடியாது.

ஆம்...குறவர் இனத்தில் பிறந்து குடை சரி செய்தும் குளத்தில் மீன் பிடித்தும் தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்ற முயலும் தந்தைக்கு பிறந்த ஆறு மகள்களில் இருவர்தாம் ராணியும் ரதியும். கஷ்டப்பட்டு உழைத்தும் குடும்பத்தின் வயிற்றை நிரப்ப இயலாத தந்தையின் கண் முன்னரே தெருக்களில் கையேந்தி பிழைக்கும் கடுமையான நிலைக்கு குழந்தைகள் தள்ளப்பட்டன. என்றாலும் எப்படியாவது தனது குழந்தையை படிக்க வைத்திட வேண்டும் என துடித்தார் தந்தை. எனவேதான் இரு பெண் குழந்தைகளையாவது பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என வைராக்கியத்துடன் அனுப்பிவிட்டார். ஆனால் அனைத்து குழந்தைகளையும் அனுப்பிட இடம் தரவில்லை வறுமை. அந்த குழந்தைகளும் தாம் படிக்கும் பள்ளிக்கு அருகிலேயே விடுமுறை நாட்களில் கையேந்த வேண்டிய கொடுமை. இதனை செய்தியாக வெளியிட்டது தினமலர் நாளேடு 4.7.2007 அன்று. அதில் அந்த குழந்தைகளின் தந்தையார் பேட்டியளித்திருந்தார் இவ்வாறு:
"எங்கள் சமுதாயம் ஆதிபழங்குடி குறவர் இனம். இதில் படித்தவர்கள் இல்லை. எனக்கு சின்னவயதில் ஒருவர் சொல்லிக்கொடுத்ததை வைத்து ஓரளவு படிக்கத் தெரியும். அதனால்தான் நமது குழந்தைகளாவது படித்து வேறு தொழில் செய்யட்டும் என்று இரண்டு பிள்ளைகளை பத்மனாபபுரத்திலுள்ள அரசு பள்ளிக்கூடத்தில் படிக்கவைத்தேன். ஒரு குழந்தை சகாயமாதா கோவிலில் வேலைக்கு சேர்த்திருக்கிறேன். மற்ற குழந்தைகளையும் படிக்க வைக்க ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் வருமானம் இல்லாமல் எப்படி படிக்க வைப்பது என்றுதான் மற்ற பிள்ளைகள் பிச்சை எடுத்து இரண்டு பிள்ளைகளை படிக்க வைக்கிறேன். குடிசையில் இருப்பதால் வீட்டுக்கு நம்பர் தரவில்லை. இதனால் ரேஷன் கார்டு எடுக்க முடியவில்லை. பலமுறை எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகளைப் பார்த்தும் யாரும் உதவிக்கு வரவில்லை. வீட்டில் மண்ணெண்ணை விளக்கு வைத்துதான் பிள்ளைகள் படிக்கின்றனர். ரேஷன் கார்டு இருந்தால் ரேஷன் கடையில் மண்ணெண்ணை வாங்கலாம். இப்போது அதிக விலை கொடுத்து கடையில் இருந்துதான் வாங்க முடிகிறது."
அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை இது குறித்து கூறும் போது இரண்டு குழந்தைகளும் நன்றாக படிப்பதாகவும் தொண்டு நிறுவனங்கள் மனது வைத்தால் இந்த குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் ஒளி விளக்கு ஏற்றிவைக்க முடியும் எனவும் கூறினார்.

இந்த செய்தி வெளியானதை அடுத்து பல தொண்டு நிறுவனங்கள் இக்குழந்தைகளின் பெற்றோரை அணுகின. ஆனால் பெற்றோருக்கு தொண்டு நிறுவனங்களின் 'ஹோம்'களில் குழந்தைகளை விட மனதில்லை. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட சேவாபாரதி மாவட்ட தலைவர் அசோக்குமார் மாவட்ட அமைப்பாளர் முருகேசனுடன் இணைந்து பெற்றோரிடம் பேசி பெற்றோர்களின் பார்வையில் இப்பிரச்சனையை அணுகினர். பெற்றோரைப் பொறுத்தவரையில் அப்பள்ளியிலேயே பிள்ளைகள் படிப்பை தொடர உதவிசெய்வதுடன், பிள்ளைகளுக்கு தேவையான அனைத்து படிப்பு உதவிகளும் அவர்களுக்குரிய உணவு உடை உட்பட அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்வதே சரியான தீர்வாக அமைந்தது. இதனையடுத்து பெற்றோர்களும் குழந்தைகளை சேவாபாரதி தத்தெடுக்க சம்மதித்தனர். இதனையடுத்து சேவாபாரதி சுய உதவிக்குழுக்களின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர். தெய்வபிரகாஷ், மாநில பொது செயலாளர் மணியன் ஆர்.எஸ்.எஸ் மாவட்ட பொறுப்பாளர் ஜோதீந்திரன் குழந்தைகளின் தந்தை ராஜமணி ஆகியோர் கல்குளம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு சென்று குழந்தைகள் தத்தெடுக்கப்பட்ட விவரத்தைக் கூறினர்.

மற்றொரு குழந்தை யாக்கியையும் தத்தெடுத்து அப்பள்ளியிலேயே ஒன்றாம் வகுப்பில் சேர்த்தனர். அது போல நோயுற்றிருக்கும் மற்றொரு குழந்தையான கனிக்கான மருத்துவ உதவிகளையும் சேவாபாரதி ஏற்றெடுத்துள்ளது.

நம் குழந்தைகள் ஒவ்வொன்றையும் கல்வி கற்க வைப்பது நம் ஒவ்வொருவரின் சமுதாய கடமை. அதனை நிறைவேற்ற முன்வந்த சேவாபாரதி போன்ற வெளிநாட்டு பணம் இல்லாமல் சுய சமுதாயம் மட்டுமே சார்ந்த சேவை அமைப்புகளின் மானுட சேவைக்கும் தலை வணங்குவோம்.

Labels: , , , ,

3 Comments:

Anonymous Anonymous said...

நல்ல செய்தி. சேவாபாரதியின் இது போன்ற முயற்சிகள் மேன்மேலும் வளரட்டும்.

11:18 PM, July 12, 2007  
Blogger ஜடாயு said...

அரவிந்தன், சேவா பாரதி தொண்டர்களின் முனைப்பும், தொண்டுள்ளமும் பாராட்டுக்குரியவை.

இந்தக் குழந்தைகளின் படிப்புக்கு பண உதவி செய்ய விரும்புபவர்கள் எப்படித் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற விவரத்தையும் வெளியிடுங்கள்.

11:24 PM, July 12, 2007  
Blogger தகட்டூரான் said...

Aravindhan Ji,
I dont know what to say. Students are begging...
We will contact Vinayagam Ji, and do our duty in this issue.
Thanks for information.

for
Swayamsevaks,
Singapore.

12:37 AM, July 13, 2007  

Post a Comment

<< Home