Thursday, May 27, 2010

பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்கிறதா "மேதை"?

சில நாட்களாகவே எழுத வேண்டுமென்று நினைத்து நேரம் கிடைக்காமல் இப்போதுதான் எழுத முடிந்தது. கிழக்கு ஷோ ரூம் ஒன்றில் "மேதை" "Prodigy" என்கிற கிழக்கு நடத்துகிற இரண்டு குழந்தைகள் இதழ்களுக்கும் சந்தா சேர்ந்திருந்தேன். அங்கு வைத்து மேலோட்டமாக பார்த்த போது நன்றாகத்தான் இருந்தது. போன மாதம் (ஏப்ரல் 2010) அந்த இதழ் வந்த போது அதில் தமிழக வரலாறு குறித்த ஒரு தொடர் வருவதைக் கண்டேன்.


ச.ந.கண்ணன் என்கிறவர் எழுதுகிறார். அதில் பார்த்த சில முத்துக்கள்:


இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழகத்தில் ஆரியர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. தமிழ் மன்னர்கள் ஆரியக்குல நெறியில் ஆட்சி செய்து வந்தார்கள். இதனை எதிர்த்துத் தமிழ்ப் பண்பாட்டைப் பாதுக்காக்க வந்தவர்களாகக் களப்பிரர்கள் அறியப்படுகிறார்கள்...தமிழகத்துக்குள் நுழைந்த களப்பிரர்கள் ஆரியர்களின் செல்வாக்கைத் தகர்க்கும் விதத்தில் வேள்விக்குடியைக் கைப்பற்றி, தங்களுடைய ஆளுமையை இங்கு நிறுவ ஆரம்பித்தார்கள்.


அடக் கொடுமையே....

ஆரியர்கள் என்கிற காலனிய உருவாக்கமே அகழ்வாராய்ச்சி மூலமும் மானுடவியல் மூலமும் உடைந்து பட்டுவிட்டதே...தமிழகத்தின் ஆக பழமையான இலக்கியங்களிலேயே பாரதத்தின் பண்பாட்டொருமை தெளிவாகக் கூறப்பட்டுள்ளதே...சிலப்பதிகாரமும் கூட அத்தகைய சமுதாய சித்திரத்தை அல்லவா அளிக்கிறது. சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் நாட்டை புறநானூற்றுப் புலவர் இவ்விதமாக வர்ணிக்கிறார்:

அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த
தீயொடு விளங்கும் நாடன் (புறம்: 397:20-21)


புறநானூற்றை ஆரிய ஆதிக்கத்தை போற்றும் நூல் என தள்ளிவிடலாமா? அதிகமான் நெடுமானஞ்சி (புறம் 99:1, 350:1), பாரி வள்ளல் (புறம் 122), கரும்பனூர் கிழான் (புறம் 384) ஆகியோர் வேத வேள்விகள் செய்திருக்கிறார்கள். தென்னவன் மறவன் பண்ணி செய்த வேள்வியை அகநானூறு குறிக்கிறது (அகம் 13:11-12) அதிகமானையும் பாரியையும் ஆரிய சூழ்ச்சிக்கு அடிபணிந்த தமிழ் மன்னர் என சொல்லிவிடலாமா? அகநானூற்றையும் அவ்வாறே தள்ளிவிடலாமா? பார்ப்பனர்களைக் குறித்து சங்க இலக்கியம் விரிவானதொரு சித்திரத்தை அளிக்கிறது. எந்த இடத்திலும் தமிழின் இந்த தொன்மையான இலக்கிய நினைவானது அவர்களை அன்னியர்களாகவோ வந்தேறிகளாகவோ காட்டவில்லை. மாறாக தமிழகத்தின் பண்பாட்டுடனும் மக்கள் வாழ்க்கையுடனும் இயைந்தவர்களாகவே காட்டுகிறது.

சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொண்டால் தன் வெஞ்சினம் மிக்க சூளுரையிலும் கூட கண்ணகி

பார்ப்பார் அறவோர் பசு பத்தினிப் பெண்டிர்
மூத்தோர் குழவி எனும் இவரைக் கைவிட்டு
தீத்திறத்தார் பக்கமே சேர்க


என அக்கினி தேவனைப் பார்த்து சொல்கிறாள். கண்ணகியும் ஆரிய ஆதிக்கத்துக்கு உட்பட்டவள்தானா?

பிரச்சனை என்னவென்றால், காலனிய காலகட்டத்தில் இனவாத அடிப்படையில் எவ்வித பண்பாட்டு பார்வையும் இல்லாமல் ஒரு தமிழ் அடையாளம் உருவாக்கப்பட்டுள்ளது. சாதிகள் இல்லாத திராவிட பொற்காலமொன்று இருந்ததாகவும் அதனை ஆரிய பிராம்மணர் தந்திரமாக கெடுத்து சூழ்ச்சி செய்துவிட்டதாகவும் ஒரு வரலாற்று கட்டமைப்பு செய்யப்பட்டது. இந்த கட்டமைப்புக்கு காலனிய ஆட்சியினரின் ஆதரவும் அன்னிய மதமாற்றிகளின் ஆதரவும் இருந்தது. அன்று வேலைவாய்ப்பு இத்யாதிகளால் நகரிய அபிராம்மணர் மனதில் உருவாகியிருந்த/உருவாக்கப்பட்டிருந்த பிராம்மண வெறுப்பு இந்த பொய்யான வரலாற்றுக்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு ஒரு இனவாத வெறுப்பு அரசியல் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது. இந்த போலி வரலாற்று பொய்மையானது பகுத்தறிவு என்ற பெயரில் ஆபாச பிரச்சாரங்களுடன் பவனி வந்தது. ஆனால் தமிழ் இலக்கியத்தை படிக்கும் எந்த அறிஞருக்கும் உண்மையான வரலாறு இந்த போலி பம்மாத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாதது என எளிதில் தெரிய வரும். இந்த பிரச்சனையை எதிர்கொள்ள தமிழ் மன்னர்கள் ஆரிய ஆதிக்கத்துக்கு கட்டுப்பட்டு விட்டதாக பொய் பிரச்சாரம் ஒன்று கட்டவிழ்த்து விடப்பட்டது. வரலாற்று தெளிவுகள் அற்ற களப்பிரர் காலம் இவர்களுக்கு தோதாக வாய்த்தது. அக்கால கட்டத்தை எவ்விதமாகவும் கட்டமைத்து வித்தை காட்டமுடியும். எஎனவே இந்த காலகட்டம் தமிழர்களின் பொற்காலமாக இருந்ததாக அடுத்த பொய் பிரச்சாரம் பரப்பப்பட்டது. இதிலெல்லாம் பலியாவது உண்மையான தமிழக வரலாறுதான். காலனிய கருத்தாக்க சுமைகள் இல்லாமல் நம் பாரம்பரிய வரலாற்றை அணுகக் கூடிய திறனை நாம் இழந்துவிடுகிறோம். இதனால் நம்முடைய மரபு குறித்த ஒரு முழுமைப்பார்வை இல்லாமல் போகிறது. இன்றைக்கு ஆரிய திராவிட இனவாதமே பொய்த்துப் போயுள்ளது. இதற்கு நம்முடைய அகழ்வாராய்ச்சியாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.

இந்த ஆரியர்-ஆரியரல்லாதவர் என்கிற எளிய அரசியல் தன்மை கொண்ட இருமை-சட்டகம். இது பாமரத்தனமான வெறுப்பு அரசியல் நடத்தத்தான் உதவும். இந்த பார்வை சட்டகம் அகன்றால்தான் நம் வரலாறும் அதன் பண்பாட்டு இயக்கங்களும் பண்பாட்டு சமூக மாற்றங்களும் எத்தனை நுட்பமும் சிக்கலும் நிறைந்தவையாக இருக்கின்றன என்பதை நாம் உணரமுடியும். துரதிர்ஷ்டவசமாக வக்கிரமான அரசியல் காரணங்களுக்காக மட்டுமே இந்த ஆரிய இனவாதம் உயிருடன் வாழ வைக்கப்பட்டு வருகிறது. குறைந்த பட்சம் நம் குழந்தைகளாவது அவர்களது மனதில் இந்த இனவாதக் கோட்பாட்டின் இருள் விழாமல் வளர வேண்டும் என்று நினைத்தால் கிழக்கு போன்ற நிறுவனங்கள் கூட தங்கள் குழந்தைகள் இதழ்களில் இந்த வக்கிர வரலாற்றுப் பொய்யை விதைத்துக் கொண்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

படிக்க:
பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளை, சங்கத் தமிழரின் வழிபாடும் சடங்குகளும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

3 Comments:

Blogger snkm said...

இதனால் தான் பயமாக இருக்கிறது, குழந்தைகளுக்கு நம் எப்படி எதை சரியான முறையில் சொல்லித் தரப்போகிறோம் என்று! நன்றி! கிழக்கும் மாயையில் உள்ளதோ!

5:01 AM, May 30, 2010  
Blogger ippadikku murugan said...

கிழக்கு மட்டுமல்ல.பல பதிப்பகங்கள் இது போன்ற தவறான செய்திகளை
பரப்பி வருகின்றனர்.ஒரு பக்கம் பகுத்தறிவு ஒரு பக்கம் ஆன்மிகம் என வியாபார நோக்கமே
பிரதானம் என்பதால் உண்மையை பற்றி அவர்கள் கவலை கொள்வதில்லை.
நாம்தான் ஜாக்ரதையாக இருக்க வேண்டும்.

9:58 PM, July 20, 2010  
Blogger சரவணன் said...

ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து படையெடுத்து வந்தவர்கள் என்பதே உண்மை. இதை மறுக்க இந்துத்துவ வரலாற்றாசிரியர்கள் ஹரப்பாவின் யூனிகார்ன் சின்னத்தைக் குதிரை எனக் கதைகட்டி விடப்பார்க்க அது முடியாமல் அவர்களது முகத்திரை கிழிந்ததே! பார்க்க ்ப்ரண்ட்லைன் இதழில் அப்போது வெளியான அட்டைப்படக் கட்டுரை.

5:45 AM, October 06, 2010  

Post a Comment

<< Home