Wednesday, January 17, 2007

வரலாற்றின் மர்மங்கள்:1

பொதுவாக மர்மங்கள் என்றாலே வெளிநாட்டு விசயங்கள்தான் நம் நாட்டில் வெளியிடப்படும் நூல்களிலும் பக்கங்களை நிரப்புகின்றன. இவற்றில் சில படு-சில்லறைத்தனமானது
என்றாலும் கூட நம் 'ப்ரெஞ்சு பியர்ட்' கிறுக்கல் ஆசாமிகள் அதனை வைத்து ஜல்லியடிக்க தயங்குவதில்லை. ஆனால் நம் பழம் இலக்கியங்கள் கூறும் சில விசயங்களை நாம்
ஆராய்ந்து பார்த்தால் அவை தரும் தரவுகளின் அடிப்படையில் ஆராய்ச்சிகளையும் நடத்தினால் எத்தனையோ மர்மங்கள் நம் ஊர்ப்புறங்களில் நமக்காக காத்திருப்பது தெரியும். உலக அளவில் புகழ் பெற்ற மர்மங்களுடன் அவற்றைப்போல (ஒருவேளை அவற்றினை விட முக்கியத்துவம் வாய்ந்த) நம்மூர் மர்மங்களும் கீழே.

அட்லாண்டிஸ்:


கிரேக்க தத்துவ அறிஞரான பிளேட்டோ (கி.மு 428/427-348/347) தமது 'திமேயஸ்' மற்றும் 'கிரேட்டஸ்' எனும் உரையாடல்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த 'லிபியாவும் ஆசியா மைனரும் இணைந்த நிலப்பரப்பைக் காட்டிலும் அதிகமான நிலப்பரப்பினைக் கொண்ட தீவாக' அட்லாண்டிஸைக் குறிப்பிடுகிறார். அத்தீவில் நாகரிகத்தில் முதிர்ச்சியடைந்த ஒரு சமுதாயம் வாழ்ந்ததாகவும் அவர்கள் பல தேசங்களைத் தம் ஆளுகையில் வைத்திருந்ததாகவும், பின்னர் அதீத செல்வச்செழிப்பாலும் அதிகாரத்தாலும் அச்சமுதாயம் சீரழிந்ததாகவும், அதனைத்தொடர்ந்து பெரும் நிலநடுக்கங்களாலும் எரிமலைச் சீற்றத்தாலும் அத்தீவு அழிந்ததாகவும் பிளேட்டோ கூறுகிறார். அட்லாண்டிஸ் குறித்த இத்தகவல்களை கிரேக்கச் சட்டங்களை உருவாக்கிய ஸோலான் என்பவரிடம் எகிப்திய ஞானிகள் கூறுவதாக பிளேட்டோ கூறுகிறார். இக்குறிப்புகள் பிளேட்டோவின் காலத்தில் வாழ்ந்த அரிஸ்டாட்டிலால்
(கி.மு.384-322) கற்பனையானவை எனக்கூறப்பட்டாலும், பிளேட்டோவிற்கு பின்னர் இன்று வரையிலும் அட்லாண்டிஸைத் தேடுவோர் உள்ளனர்.


அட்லாண்டிஸ் தீவு : நம்பப்பட்ட ஒரு கற்பனை ஊகம்

பிளேட்டோ வின் 'திமேயஸ்' பல மறைஞானக் குழுக்களுக்கு முக்கிய நூல். எனவே அக்குழுக்கள் தம் கோட்பாடுகளை அட்லாண்டிஸில் உருவானவை எனக் கூறுவதுண்டு. எட்கார் கைஸி எனும் அமெரிக்க 'தீர்க்கதரிசி' தம் 'ஞானதிருஷ்டியில்' அட்லாண்டிஸ் அமெரிக்க கடற்கரைகளில் அமிழ்ந்துள்ளதாகக் கூறினார். ஜான்.எம்.ஆலன் எனும் ஆய்வாளர்
தென்-அமெரிக்க ஏரியில் மறைந்த ஒரு தீவும் நாகரிகமும் உள்ளதாகவும் அதுவே அட்லாண்டிஸ் எனவும் கூறுகிறார்.

அட்லாண்டிஸ் தென்னமெரிக்காவில்? : ஒரு நூல்

பொதுவாக வரலாற்று ஆய்வாளர்கள் அட்லாண்டிஸை பிளேட்டோ வின் கற்பனையில் உருவான உருவகக்கதை என்றே கருதுகின்றனர். ஏனெனில் பிளேட்டோ இத்தகைய உருவகக் கதைகள் மூலம் தத்துவக் கோட்பாடுகளை விளக்குவது வழக்கம். ஆனால் அட்லாண்டிஸுக்கு வரலாற்றடிப்படையில் வித்திட்ட நிகழ்ச்சியாக ஆய்வாளர்கள் கி.மு.1620களில் திரா எனும் சிறு தீவு -நிச்சயமாக கண்டம் கிடையாது- எரிமலைச் சீற்றத்தால் அழிந்ததைக் குறிப்பிடுகின்றனர்.

திரா தீவில் கிரேக்க நாகரிகம் செழித்திருந்தது. அங்குள்ள ஓர் வீட்டுச்சுவரில் தீட்டப்பட்ட
ஒவியம்
திரா தீவின் படம்: தீவுக்கூட்டத்திலேயே பெரியதீவுதான்
திரா

இந்த எரிமலைச்சீற்றத்தின் விளைவான சாம்பல் துகள்கள் எகிப்திலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விளக்கமும் கூட அனைத்து
ஆராய்ச்சியாளர்களாலும் ஏற்கப்படவில்லை. அட்லாண்டிஸ் உண்மையா? கற்பனையா? உண்மையெனில் அது எங்கு உள்ளது? என்பவை இன்னமும் மர்மமாகவே உள்ளன.


குமரிக்கண்டம்:


குமரி நிலநீட்சி குறித்த முதல் அறிவியல்பூர்வ விளக்க நூல்

பழந்தமிழ் காவியமான சிலப்பதிகாரம் 'குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள' எனக் கூறுகிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் குமரிமலை குறித்தும், அதிலிருந்து தோன்றிய பஃறுளியாறு குறித்தும், குமரி ஆறு குறித்தும் செய்திகள் உள்ளன. இச்செய்திகள் எத்தனை உண்மையானவை? பல தமிழ் அறிஞர்கள் 'குமரிக்கண்டம்' என்று ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்ததாகவும் அங்கு தமிழ் நாகரிகம் ஒரு உயர்ந்த நிலையை அடைந்திருந்ததாகவும் கூறுகின்றனர். பிரம்மஞான சபையினர் 'லெமூரியா' எனகடலில் ஆழ்ந்து போன ஒரு நிலப்பரப்பு குறித்த நம்பிக்கை கொண்டிருந்தனர். இவர்கள் மூலம், இந்தியாவில் பரவிய லெமூரியாக் கோட்பாடும் குமரிக்கண்டமும் இணைந்த ஒரு சித்தாந்தமாகிற்று. புலவர் குழந்தை, அப்பாதுரை, இரா.மதிவாணன் போன்றவர்கள் குமரிக்கண்ட வரைபடங்களை உருவாக்கினர். மார்க்சிசத்தையும் அதீத கற்பனைகளையும் போலி அறிவியல் தரவுகளையும் இணைத்து குமரிகண்டத்தை ஒரு அரசியல் சித்தாந்தத்தின் பகுதியாக மாற்றிக் கொண்டிருப்பவர் குமரிமைந்தன் என்கிற 'ஆராய்ச்சியாளர்'. ஜெயமோகனின் கற்பனை நாவலான 'கொற்றவை' இந்த குமரிகண்டத்தின் அடிப்படையில் அமைந்தது. குமரி கண்ட இயக்கத்தினர் இந்த கற்பனை புனைவை ஏறத்தாழ மதரீதியிலான இறுக்கத்துடனும் நம்பிக்கையுடனும் வரலாற்று ஆவணமாகவே எடுத்துக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. புகழ்பெற்ற நிலவியல் ஆய்வாளரான சு.கி.ஜெயகரன் அண்மையில் வெளியான தமது 'குமரி நிலநீட்சி' எனும் நூலில் இத்தகைய
கற்பனைகள் 'கவித்துவ சுதந்திரத்துடன்' அதீத தமிழ் பற்றினால் உருவாக்கப்பட்டவையென்பதுடன் இவற்றிற்கு அறிவியல் அடிப்படை எதுவும் இல்லையெனக் காட்டுகிறார். எனில் கடல் கொண்ட குமரிக் கோடு என்பது வெறும் கற்பனைதானா? நிலவியல், ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி, இலக்கிய ஆதாரங்கள் மற்றும் தொல்மானுடவியல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு யதார்த்த நிலைப்பாட்டினைத் தன் முடிவாக தருகிறார் ஜெயகரன். வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தில் தமிழகம்-இலங்கை கடற்கரைகளை ஒட்டியிருந்து பின்னர் கடலில் மூழ்கிய நிலப்பரப்புகளே குமரி எனும் நிலநீட்சி குறித்த மரபின் வித்தாகும் எனக்கருதும் ஜெயகரன் அவ்வாறு கடல் நீர்மட்ட உயர்வில் உயிர்தப்பியவர்களிடமிருந்து குமரி நிலநீட்சி குறித்த நினைவு இன்றும் நம்மிடம் நிலவுவதாகக் கூறுகிறார். குமரி மாவட்டத்தில் கடற்கரையோர கிராமங்களான முட்டம் போன்ற இடங்களில் அண்மைக்கால நினைவுகளில் கூட கடல் கொண்ட நிலப்பரப்பு குறித்த விவரணைகள் நிலவுகின்றன. நிச்சயமாக எனில் தொல்பழம் மானுடக்குடியேற்ற எச்சங்கள் இன்றும் தென்னக ஆழ்கடலில் - நாம் கண்டடையக் காத்தபடி - துயில் கொண்டிருக்கக் கூடுமா? இனிவரும் நாட்களில் தென்னகக் கடல்களில் ஆழ்கடல் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டால் அது இம்மர்மங்களுக்கு விடை பகரக் கூடும்.


துவாரகை:
அகழ்வாய்வின் வரலாற்றில் ஹோமரின் எலியட் காவியத்தில் கூறப்பட்ட டிராய் நகரினை ஜெர்மானிய அகழ்வாய்வாளர் ஹென்ரிச் ஷிலைமான் கண்டுபிடித்தது மிக முக்கிய
மைல்கல்லாகக் கூறப்படுகிறது.


துவாரகை இப்படி இருந்திருக்குமா? இதிகாச விவரணங்கள் அடிப்படையில் ஒரு கற்பனை
ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியாளர் எஸ்.ஆர்.ராவ்
ஆனால் அதனையொத்த மற்றொரு கண்டுபிடிப்பு டாக்டர்.எஸ்.ஆர் ராவ் எனும் இந்திய அகழ்வாராய்ச்சியாளர் ஆழ்கடலில் துயில் கொண்ட ஒரு நகரத்தைக் கண்டுபிடித்ததாகும். 3700 ஆண்டுகள் இன்றைக்கு முந்திய (இ.மு) காலத்தினைச் சார்ந்த இந்த ஆழ்கடல் நகரத்தை டாக்டர்.எஸ்.ஆர்.ராவ் கண்டுபிடித்தது பழம் காவியமான மகாபாரதத்தில் கூறப்பட்ட விவரணங்களின் அடிப்படையில் என்பதுதான் அதிசயமான விஷயம். இதனையொட்டி பல கேள்விகள் எழுந்துள்ளன.சில வரலாற்றறிஞர்கள் இதுதான் மகாபாரதம் கூறும் துவாரகை என்பதை மறுக்கின்றனர். ஆனால் ராவ் தாம் கண்டெடுத்த முத்திரைகள் மற்றும் சுவர்கள் ஆகியவை மகாபாரத விவரணத்தை பெருமளவு ஒத்திருப்பதைக் காட்டுகிறார்.
துவாரகையில் மூழ்கி நிற்கும் பழம் சுவர்
இந்திய வரலாற்றுப் பாடநூல்களில் இந்திய இதிகாசங்களுக்கு வரலாற்று அடிப்படையில்லையெனக் கற்றுத்தரப்படுகிறது. இந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றாசிரியர்களின் நிலைப்பாட்டினைத் 'துவாரகை' கண்டுபிடிப்பு சங்கடத்துக்குள்ளாக்கியுள்ளது. ராவ் தம் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் மகாபாரத நிகழ்ச்சிகளை இ.மு. 3500க்கு கொண்டு செல்கிறார்.
ஆழ்கடலில் அகழ்வாராய்ச்சி : துவாரகை

இது துவாபார யுகத்தில் மகாபாரதம் நடந்ததாகக் கூறும் மரபாளர்களைச் சங்கடப்படுத்துகிறது. இந்த ஆழ்கடலுக்குள் இருக்கும் பழமையான நகரம்தான் துவாரகையா?
இல்லையெனில் இந்த நகரம் எவ்வாறு மகாபாரத துவாரகை விவரணத்தை வெகுவாக ஒத்திருக்கிறது? ஆமெனில் துவாரகாதிபதி ஸ்ரீ கிருஷ்ணன் ஒரு வரலாற்று நாயகனா?
(அகழ்வாராய்ச்சி மூலம் பல்லாயிரமாண்டுகள் முன் வாழ்ந்ததாகக் கூறப்படும் தனிமனிதர்களுக்கானச் சான்றுகளை கண்டெடுப்பது இயலாத விஷயம்.) இம்மர்மங்களுக்கான விடைகளைத் தன்னுள் கொண்டு ஆர்ப்பரிக்கும் அலைகளுடன், ஆராய்ச்சியாளர்களை அழைக்கிறது இந்தியாவின் வடமேற்கு கடற்கரை.


பூம்புகார்/காவிரிப்பூம்பட்டினம்:

காவிரிப்பூம்பட்டினத்தில் அகழ்வாராய்ச்சியில் காணப்பட்ட அமைப்புகளை ஓவியர் கற்பனையில் முழுமையாக வரைந்துள்ளார்

தமிழ் காவியமான மணிமேகலை காவிரிபூம்பட்டினத்தின் அழிவினைக் குறித்து பேசுகிறது. மகனை இழந்த சோகத்தில் சோழமன்னன் இந்திர விழா நடத்த மறந்தமையால் ஏற்பட்ட கடல் சீற்ற அழிவாக அது கூறப்படுகிறது. பட்டினப்பாலை போன்ற பழந்தமிழ் இலக்கியங்களில் இந்நகரம் பெரும் துறைமுக நகரமாக பேசப்படுகிறது. சுங்க அலுவலகம், மரக்கலங்கள் கொணரும் கொண்டு செல்லும் பொருட்களில் புலி முத்திரை பதித்தல் ஆகிய செயல்கள் அந்நகரில் நடைபெற்றமையையும், பல்வேறு தேசத்திலிருந்தும் நல்ல பண்பாடு கொண்ட மக்கள் அங்கு ஒருவரோடொருவர் பழகியதையும், கள் சாலைகள் முதல் கருத்துகளை விவாதிக்கும் மண்டபங்கள் வரை மனிதரின் அத்தனை தேவைகளும் பூர்த்தி செய்யும் அமைப்புகளைக் கொண்ட பெரும்நகராக அது விளங்கியதையும் அறிகிறோம்.
பூம்புகார்: பழமையான செங்கல் அமைப்பு : நன்றி NIOT

1960களிலும் 1980களிலும் நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆய்வுகள் இந்த பெரும் துறைமுக நகரினைக் கடல் அழித்தது உண்மையாக இருக்கும் என்பதனைக் காட்டியுள்ளன. தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சி மையம் (NIOT) நடத்திய அகழ்வாய்வுகள் சங்க காலம் சார்ந்த பல அமைப்புகளை, (செங்கல் அமைப்புகள், சுற்றுசுவர் போன்றவற்றினை) வெளிக்கொணர்ந்துள்ளன. எஸ்.ஆர்.ராவ் போன்ற அகில இந்திய முன்னணி ஆராய்ச்சியாளர்கள் இங்கு அகழ்வாராய்ச்சியின் மூலம் இப்பழமையான நகரம் இருந்ததையும் அது அழிந்ததையும் கூறியுள்ளனர். 1960களிலும் 1980களிலும் நடத்தப்பட்ட முயற்சிகளுக்கு பிறகு 2006 இல் தேசிய பெருங்கடல் ஆராய்ச்சி மையம் (NIOT) ஸோனார் ஸ்கேனை நடத்தியுள்ளது. இந்த தொடக்க கட்ட ஆய்வு இன்றைய கரைக்கு இரண்டு கிமீ தூரத்தில் 14-20 மீட்டர் ஆழத்தில் சில அமைப்புகளை காட்டியுள்ளது. ஒரு இயற்கை பேரிடர் நிகழ்ச்சி மணிமேகலையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது திண்ணம். இன்று அதன் எச்சங்களை நாம் அகழ்வாராய்ச்சியின் மூலம் அறிகிறோம். இனிவரும் காலங்களில் மணிமேகலை, சிலப்பதிகார நிகழ்வுகளின் காலத்தையும் அது தொடர்பான இதர வரலாற்று உண்மைகளையும் பாரத அகழ்வாராய்ச்சி வல்லுனர்கள் நமக்கு மீட்டுத்தருவர் என நம்பலாம்.


ஆழ்கடல் அகழ்வாராய்ச்ச்஢யில் கண்ட வட்டவடிவ அமைப்புகள்: பூம்புகார் அகழ்வாராய்ச்சி நன்றி: NIOTசிந்து சமவெளி நாகரிகம்:


1920களில் இந்திய அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு சர் ஜான் மார்ஷலால் பிரபலப்படுத்தப்பட்ட இந்நாகரிகம் இன்றைக்கும் தன் மர்மங்களை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. ஒவ்வொரு அகழ்வாய்வுக் கண்டுபிடிப்பும் நம் அறிதலை ஆழமாக்கியுள்ளது என்ற போதிலும். இ.மு. 5000 வருடங்களையும் விடப் பழமையான இந்நாகரிகக்தை உருவாக்கியவர்கள் யார்? இந்நாகரிகத்தவர்கள் எங்கு சென்றார்கள்? இந்த நாகரிகம் எவ்வாறு அழிந்தது? உண்மையில் அழிந்ததா அல்லது இன்னமும் வாழ்கிறதா? எனும் கேள்விகள் இன்றைக்கும் உயிர் வாழ்கின்றன. இது ஆரியர் வருகைக்கு முந்தைய இப்பூர்விக நாகரிகம், ஆரியப் படையெடுப்பால் அழிந்ததாக, அகழ்வாய்வாளரான மார்ட்டிமோர் வீலர் கூறினார். பின்னாட்களில் டேல்ஸ், ஜிம் ஷாஃபர், ஜோனதன் கென்னோயர் போன்ற புகழ்பெற்ற அகழ்வாய்வாளர்கள் ஆரியப் படையெடுப்புச் சித்தாந்ததை மறுத்துவிட்டனர். மாறாக இயற்கை அழிவுகளை இந்த நாகரிகத்தின் நகரங்கள் அழிவதற்குக் காரணமாகக் கூறுகின்றனர்.

படையெடுப்பு படுகொலை பொய் என நிரூபித்த டேல்ஸ்

செயற்கைக்கோள்கள் பாலைவனத்தில் புதைந்த ஒரு பழம் நதியைக் காட்டியுள்ளன. அறிவியலாளர் யஷ்பால் இது இந்திய வேதங்களில் கூறப்படும் சரஸ்வதியாக இருக்கலாம் எனக்கருதுகிறார். பல சிந்து சமவெளி நாகரிக மையங்கள் இந்நதியருகே உருவாகியுள்ளன. எனவே இந்நதி வறண்டது காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இம்மக்களின் பண்பாடு வேதங்களில் கூறப்பட்ட பண்பாட்டினை ஒத்திருப்பதை அகழ்வாராய்ச்சியாளர் பிஷ்ட் சுட்டிக்காட்டுகிறார்.
தோலவிரா அகழ்வாராய்ச்சியை ஏற்று நடத்திய பிஷ்ட்
தோலவிரா எனும் ஹரப்பா பண்பாட்டு நகரினை அகழ்வாராய்ச்சி செய்த பிஷ்ட் நகர அமைப்புகள் 'ரிக்வேத பண்பாட்டின் virtual reality' ஆக அவை அமைந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார். இந்த மையத்தின் நீர் சேகரிப்பு அமைப்புகள் சிறப்பானவை என்பதுடன் இங்கே மிகப்பெரிய ஹரப்பா சின்னங்களுடனான 'பெயர் பலகை' ஒன்றும் கிடைத்துள்ளது. சரஸ்வதி நதி குறித்து வரலாற்றாசிரியர்கள் அனைவரும் இதை ஏற்பதில்லை. வானவியலாளர் ராஜேஷ் கோச்சர் வறண்ட நதியினை சரஸ்வதியுடன் ஒப்பிடுவதை மறுக்கிறார்.

இந்நாகரிகத்தின் சித்திர எழுத்துகள் இன்னமும் விடுவிக்கப்படாத புதிராகவே உள்ளன. இதில் இருபது வருடங்களுக்கும் மேலாக ஆழ்ந்து ஆராய்ந்துள்ள ஐராவதம் மகாதேவன் இவை தொல்-திராவிட பொதுமொழிக்கூறுகள் கொண்டவை என்கிறார். எஸ்.ர்.ராவோ இவை தொல்-இந்தோ-ஐரோப்பிய குடும்பத்தைச் சார்ந்தவையாக இருக்கலாம் என கருதுகிறார். சிந்து-சமவெளிச் சமுதாயம் வேத-நாகரிகமும் திராவிடத்தன்மை வாய்ந்த மொழியும் கொண்டதாக இருந்திருக்கலாம் எனக் கருதும் மகாதேவன் புகழ் பெற்ற ஒற்றைக்காளை முத்திரையை ரிக்வேதத்தில் கூறப்படும் சோம பானச் சடங்குடன் தொடர்புபடுத்துகிறார். எதுவானாலும் சிந்துசமவெளி நாகரிகத்தின் மர்மங்களை முடிச்சவிழ்க்க மிக அடிப்படையான தேவை இன்னமும் மர்மமாகவே இருக்கும் சிந்து சமவெளி முத்திரைகளில் காணப்படும் சித்திர எழுத்துக்களின் பொருளை அறிவதுதான். மைக்கேல் விட்ஸல் என்கிற இந்தியவியலாளரும், ஸ்டீவ் ஃபார்மர் என்கிற அமெச்சூர் மொழியியலாளரும் அண்மையில் இவை எழுத்துக்களே இல்லை என கூறினர். இதனை சிந்து சமவெளி நாகரிக ஆராய்ச்சியிலேயே தோய்ந்த அகழ்வாராய்ச்சி நிபுணர்களும் மொழியியலாளர்களும் கடுமையாக மறுக்கின்றனர். பேராசிரியர் சுபாஷ் காக் ஹரப்பா பண்பாட்டு சித்திர எழுத்துக்களின் சில முக்கியக் குறியீடுகளை அவற்றினை ஒத்த வடிவங்கள் கொண்ட பிராமி எழுத்துக்களுடன் அவற்றின் அடுக்கு-நிகழ்வினை (frequency) ஆராய்ந்து அவை ஒத்துப்போவதை சுட்டிக்காட்டியுள்ளார். ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட மர்மங்களை தன்னுள் அடக்கியபடி அகழ்வாராய்ச்சிகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறது சிந்து சமவெளி நாகரிகம்.

தோலவிரா: அகழ்வாராய்ச்சியாளர் பிஷ்ட் மேற்பார்வையில் செய்யப்பட்ட கணினி மீள் உருவாக்கம்


தோலவிரா 'பெயர் பலகை' இப்படித்தான் இருந்திருக்குமா சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்?


நாஸ்கா கோடுகள்:


நாஸ்கா கோடுகள் : நன்றி: நேசனல் ஜியாகிராபிக்

தென்-அமெரிக்காவின் பெரு நாட்டு பாலை பிரதேசங்களில் வரையப்பட்டிருக்கும் பெரும் வரி வடிவங்களே நாஸ்கா கோடுகள் என அழைக்கப்படுகின்றன. 2000 வருடங்களுக்கு நாஸ்கா கலாச்சாரத்தினரால் உருவாக்கப்பட்ட 70 வரிச்சித்திரங்கள் இவை. 360 அடி (110 மீட்டர்கள்) நீளமுடைய குரங்கு வடிவம், திமிங்கிலம் (65 மீட்டர்கள்), காண்டார் பறவை (135 மீட்டர்கள்), ஹம்மிங் பறவை (50 metres), பெலிக்கன் (285 மீட்டர்கள்), சிலந்தி (46 மீட்டர்கள்) ஆகியவை உலகப் பிரசித்தி பெற்றவை. 1920 களில் இவை கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இவை பாலைப்பகுதிகளில் இத்தனை சிரமமெடுத்து இவ்வடிவங்கள் வரையப்பட்டிருப்பதன் காரணங்கள் விவாதிக்கபடுகின்றன. எரிக் வான் டானிக்கன் போன்ற போலி-ஆராய்ச்சியாளர்கள் இவை வெளிக்கிரகவாசிகளின் விண்கலங்கள் இறங்க உருவாக்கப்பட்டவை என கருதுகின்றனர். பரபரப்பூட்டும் இத்தகைய விவரணங்கள் அளிக்கும் வர்த்தக வெற்றியால் இந்த அடிமுட்டாள்தனமான 'விளக்கங்கள்' புத்தகங்களாக வெளிவருகின்றன. இத்தகைய அதீத கற்பனைக் காரணங்களை பொதுவாக கறாரான அறிவியல் பார்வை கொண்ட ஆராய்ச்சியாளர்கள் மறுக்கின்றனர். விமானங்களிலிருந்தே முழு வடிவமும் புலப்படும் படியாக உருவாக்கப்பட்ட இந்த வடிவங்கள் ஏன் உருவாக்கப்பட்டன? மாரியா ரெய்ச்சே (Maria Reiche) பல்லாண்டுகள் இத்தரை வரைவுச் சித்திரங்களை ஆராய்ந்த ஜெர்மானிய ஆய்வாளர்.

நாஸ்கா நில வரைபடங்களை ஆராய வாழ்வினை செலவிட்டமாரியா ரெய்ச்சே

ஒருவேளை வானியல் நிகழ்வுகளான விண்மீன்கள் மற்றும் கிரகங்களின் இயக்கப்பாதைகளைப் பல்லாண்டுகளாக கண்காணித்து அதனடிப்படையில் ஒரு பெரும் வானியல் நாள்காட்டியாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என அவர் கருதுகிறார். 1967, இல் இவ்வடிப்படையில் ஆய்வினை மேற்கொண்ட ஜெரால்ட் ஹாவ்கின்ஸ் எனும் வானியல் ஆய்வாளர் இதற்கு எந்த சான்றுகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஜிம் வுட்மேன் எனும் அமெரிக்கர் இன்னமும் விசித்திரமான ஒரு கருத்தை தெரிவித்தார். ஒருவேளை நாஸ்கா புதிரை உருவாக்கிய பழம் அமெரிக்க நாகரிகம் பறப்பதைக் கண்டுபிடித்திருக்கலாம் எனக் கருதும் இவர் பூர்விக நாஸ்காவாசிகளுக்கு கிடைத்திருந்த பருத்தியால் உருவாக்கிய பலூனில் புகையை அடைத்து 300 அடிகளுக்கும் மேல் பறந்து தம் கருத்து சாத்தியமானது என்றும் காட்டினார். இவருடன் இணைந்து இதனை நிகழ்த்திக்காட்டியவர் பலூன்களில் பறப்பதில் பல சாதனைகளைப் படைத்த ஜூலியன் நாட் என்பவர். ஆனால் நடக்கமுடிந்தவை எல்லாம் நடந்திருக்க வேண்டியதில்லை. குறிப்பாக இத்தகைய பலூன்களைக் குறித்து வேறு புறச்சான்றுகள் ஏதுமில்லை. என்ற போதிலும் ஒரு கருதுகோளின் சாத்தியதையை ஆராய வெகு துணிச்சலான முயற்சிதான் இது.
இந்த ஓடம் மிதக்குறதே கஷ்டம் பறக்குமாக்கும்?

இது பறக்குமான்னா கேக்கிறே? பறந்துடுச்சே!

நன்றி: www.nott.com

மசசூட்ஸ் மனிதவியல் பேராசிரியர் டொனால்ட். ப்ரோலக்ஸ் (Donald Proulx) டேவிட் ஜான்ஸன் எனும் பள்ளி ஆசிரியருடன் இணைந்து இதற்கு வேறு ஒரு விளக்கம் கொடுக்கிறார். இத்தரைவரைப்படங்கள் நிலத்தடி நீருடன் தொடர்புடையதாக இருக்கலாம் என அவர் கருதுகிறார். நேஷனல் ஜியாக்ராபிக் உதவியுடன் ஜான்சனால் உருவாக்கப்பட்ட இந்த கருதுகோள் நிலவியலாளர்கள், அகழ்வாராய்ச்சியாளர்கள் என பல்துறை நிபுணர் குழுவால் 1998 இல் ஆராயப்பட்டது. சில நாஸ்கா வரைப்படங்களாவது நிலத்தடி நீரோட்டங்களின் பாதைகளை ஒட்டி அமைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. நாஸ்கா வரிகள் - வானில் மிதக்கும் ஆற்றலை அடைந்த ஒரு பூர்விக நாகரிகம் உருவாக்கியவையா? கற்பனையாற்றல் கொண்ட ஒரு தரைவாழ் சமுதாயத்தின் விசித்திரச் சடங்கின் விளைவா? நிலத்தடி நீரோட்ட பாதையை அறிந்து அதை திறம்பட பயன்படுத்த ஏற்படுத்தப்பட்ட கருவியா? இரவு வானை தரையில் பிரதிபலிக்கும் விசித்திர நாட்காட்டியா? நாஸ்கா கோடுகளின் மர்மங்கள் இன்னமும் தெளிவுபடாத வரலாற்றுப்புதிராகவே உள்ளது.

[வரலாற்று மர்மங்கள்: ஒரு வாரத்துக்கு பின்தொடரும்]
இத்தொடரினை எழுதிட பயன்படுத்தப்பட்ட நூல்களின் தொகுப்பினை இத்தொடர் முடிவில் வெளியிடுகிறேன். (அட்டைகளை ஸ்கேன் செய்வதே பெரும்பாடு) ஆனால் இப்போதைக்கு இந்த நல்ல நூலை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன். உபிந்தர் சிங் எழுதி கௌதம் திரிவேதி ஓவியங்கள் வரைந்த இந்த அழகான நூல் 'Mysteries of the past archeological sites of India' நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ள இந்த அருமையான புத்தகத்தின் விலை ரூ 30 மட்டுமே. காவிரிபூம்பட்டின அமைப்பின் ஓவியம் இந்நூலிலிருந்து எடுத்ததுதான். உங்கள் குழந்தைகளுக்கு கட்டாயமாக வாங்கிக்கொடுங்கள்.இணையத்தில் இந்த மர்மங்களை தேட கீழ்காணும் பட்டியல் உதவும் என நம்புகிறேன். ஏதாவது இணையபக்கம் காலமாயிருப்பின் நான் பொறுப்பல்ல.


 • விக்கிபீடியாவில் அட்லாண்டிஸ்
  http://skepdic.com/nazca.html
 • பிரேஸிலில் அட்லாண்டிஸ்?
  http://www.atlan.org/
 • ஏன் அட்லாண்டிஸ் கற்பனை? எனக்கூறும் சந்தேகவாதிகளின் பக்கம்
  http://skepdic.com/atlantis.html
 • குமரிக்கண்டம் குறித்து ஜெயகரன் எழுதியதற்கு மறுப்பு தெரிவித்து குமரி மைந்தன் எழுதிய கட்டுரை- எரிக் வான் டானிக்கன் போன்ற ஏமாற்று பேர்வழிகளை அறிவியலாளர்கள் ஆக்கி சிரிப்பு மூட்டும் கட்டுரை.
  http://kumarimainthan.blogspot.com/2005/11/blog-post_113188287842871425.html
 • திரு.சீ.ராமச்சந்திரனின் அருமையான கட்டுரை. இலக்கிய அகழ்வாய்வுச் சான்றுகளுடன் கொற்கை பகுதியின் நில-நீர் பரப்பின் அண்மைக்கால மாற்றங்களைக் காட்டும் இக்கட்டுரை பொதுவாக பல்துறை தரவுகளைக் கொண்டு பண்டைய வரலாற்றை துப்பறிய விரும்புவோருக்கு நல்ல ஒரு தொழில்முறை முன்மாதிரியை இக்கட்டுரை முன்வைக்கிறது:
  http://www.picatype.com/dig/dj0aa02.htm
 • பண்டைய தமிழர் நகர அமைப்பு குறித்த கட்டுரை தொடரில் காவிரிபூம்பட்டினம் குறித்து விவரணம்
  http://www.thinnai.com/?module=displaystory&story_id=20610068&format=html
 • பூம்புகார் குறித்த விக்கிபீடியா கட்டுரை
  http://en.wikipedia.org/wiki/Poompuhar
 • மறைந்த பூம்புகாரை கண்டுபிடிப்பது குறித்த NIOT முயற்சிகள் குறித்த செய்தி
  http://www.hindu.com/2006/06/28/stories/2006062819300700.htm
  <.li>பிடிஎஃப் கோப்புகள்
 • 1989-90 அகழ்வாராய்ச்சி ஆண்டறிக்கையில் பூம்புகார் குறித்த கண்டுபிடிப்புகள் உள்ளன.
  http://www.nio.org/annual_reports/1989-90_150.pdf
 • 1992-93 க்கான அகழ்வாராய்ச்சி குறித்த ஆண்டறிக்கை:
  http://www.nio.org/annual_reports/1992-93_150.pdf
 • தமிழகத்தில் மத்திய பெருங்கடல் ஆராய்ச்சி மையம் நிகழ்த்தி வரும் அகழ்வாராய்ச்சிகள் குறித்த இணைய பக்கம் இங்கே:
  http://www.nio.org/projects/vora/project_vora_5.jsp

 • துவாரகை குறித்த விக்கிபீடியா கட்டுரை
  http://en.wikipedia.org/wiki/Dwarka
 • துவாரகை குறித்து எஸ்.ஆர்.ராவ் அவர்களின் பேட்டி
  http://www.hinduonnet.com/thehindu/mp/2002/11/20/stories/2002112000450200.htm
 • துவாரகை குறித்து மிக விரிவான கட்டுரையை 'தி வீக்' (ஜூன் 2001 இல்) வெளியிட்டது. அது இங்கே.
  http://www.the-week.com/23june01/cover.htm

 • ஹரப்பா.காம் www.harappa,com
  http://www.mohenjodaro.net/
 • மேலிருக்கும் இரு இணையதளங்களும் கென்னோயரின் முயற்சிகளின் விளைவு
 • ஹரப்பா இணையதளத்தில் மகாதேவன் நேர்முகம்
  http://www.harappa.com/script/mahadevantext.html
 • சரஸ்வதி நதி குறித்து ஒரு அறிவியல் பார்வை:
  http://www.ias.ac.in/currsci/oct25/articles20.htm
 • 18-2-2002 இல் சரஸ்வதி நதி குறித்த பல்வேறு பார்வைகளை தி வீக் பத்திரிகை தொகுத்தளித்தது. அக்கட்டுரை இங்கே:
  http://www.hindunet.org/saraswati/sarasvatirebirth01.htm
 • சிந்து சமவெளி குறித்த இந்த இணையதளத்தில் அப்பண்பாட்டு நகர அமைப்புகள் கணினி வரைகலை மூலம் மீள் உருவாக்கப்பட்டுள்ளன.
  இந்த மீள்-உருவாக்கம் இந்திய தொல்லியலாளார் ஆர்.எஸ்.பிஷ்ட்டுவின் மேல்பார்வையில் செய்யப்பட்டதாகும்.
 • http://pubweb.cc.u-tokai.ac.jp/indus/english/
 • http://pubweb.cc.u-tokai.ac.jp/indus/english/2_4_03.html
 • தோலவீரா அகழ்வாராய்ச்சி குறித்த கட்டுரை
  http://www.hinduismtoday.com/archives/2001/1-2/2001-1-16.shtml

 • நாஸ்கா வரிகள் - நிலத்தடி நீரோட்டம் குறித்து:
  http://www-unix.oit.umass.edu/~proulx/Nasca_Lines_Project.html
 • நேஷனல் ஜ்யாகிராபிக் நாஸ்கா குறித்து:
  http://news.nationalgeographic.com/news/2002/10/1008_021008_wire_peruglyphs.html?fs=www3.nationalgeographic.com&fs=plasma.nationalgeographic.com
 • நாஸ்கா விக்கிபீடியாவில்
  http://en.wikipedia.org/wiki/Nazca_Lines
 • நாஸ்கா குறித்த அதீத கற்பனைகளின் பொய்யைக்காட்டும் பக்கம்
  http://skepdic.com/nazca.html
 • நாஸ்கா : பறக்கும் பலூன்
  http://www.nott.com/Pages/projects.php

14 Comments:

Blogger கால்கரி சிவா said...

நீல்ஸ், உங்கள் வரலாற்று மர்மங்கள் நிஜமாகவே நன்றாக உள்ளது. ஒரு நல்ல NGC நிகழ்சியை பார்த்த திருப்தி ஏற்பட்டது.

உங்களின் அடுதடுத்த பதிவுகளுக்காக ஏங்க வைத்துவிட்டீர்கள்.

தமிழ் நாட்டின் குமரிகண்டம், பூம்புகார் இவைகளைப் பற்றி இன்னும் ஆழமான ஆய்வுகளை உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறேன்

8:09 AM, January 17, 2007  
Anonymous Anonymous said...

ஒரு என்சைக்ளோபீடியா வேலை. அருமை அரவிந்தன். ஆனால் பூங்கா இதையெல்லாம் கண்டு கொள்ளாது. ஹிந்து மதத்தை திட்டி எழுதுகிற குப்பையையும் அது பிரசுரிக்கும்.

6:39 PM, January 17, 2007  
Anonymous Anonymous said...

குமரி கண்டம் உண்மை என்பதெல்லாம் அப்போது பொய்யா? குமரி கண்டம் வெறும் கற்பனையா? என்ன சொல்ல வருகிறீர்கள் புரியும்படி தெளிவாக சொல்லுங்கள். அங்கும் இங்கும் இல்லாமல் நீங்களும் ஜல்லி அடிப்பது போலத்தான் இருக்கிறது. உங்கள் ஊர் கதைகள் குறித்து சொல்லியிருக்கிறீர்களே அது குறித்து தெளிவாக சொல்லுங்கள். குமரி கண்டம் குறித்த உங்கள் இடுகை முழுமையாக இல்லை.

6:41 PM, January 17, 2007  
Anonymous Anonymous said...

பட்டினப்பாலையில் புலி இலச்சினை போட்ட பொருட்கள் குறித்து சொல்லியிருப்பதால் அத்தகைய இலச்சினை போட்ட பொருட்கள் கிடைத்திருக்கிறதா? அந்த இலச்சினைகளுக்கும் சிந்து சமவெளி இலச்சினைகளுக்கும் தொடர்பு இருக்கிறதா?

6:44 PM, January 17, 2007  
Anonymous Anonymous said...

சிந்து சமவெளி நாகரீகம் இன்னும் வாழுவதாக சொல்லியிருக்கிறீர். ஆனால் அது குறித்து எந்த விளக்கமும் கொடுக்காதது ஏன்? வெறும் ஜல்லிதானா?

6:45 PM, January 17, 2007  
Blogger Unknown said...

அரவிந்தன்,
நல்ல தொகுப்பு.
குமரியை இறக்கி சிந்துவை தூக்கிவிடுவதைப்போல் ஒரு தொனி எனக்கு இதில் தெரிகிறது.
மத சாதிச் சாயங்கள் இல்லாமல் மனிதனாக/வரலாற்று பார்வையில் நீங்கள் இன்னும் சிறப்பாக எழுதலாம்.

8:00 PM, January 17, 2007  
Blogger ஜடாயு said...

அரவிந்தன்,

உலகத் தரம் வாய்ந்த கட்டுரை இது. தகவல் களஞ்சியங்களில் இடம் பெற வேண்டியது. ஒவ்வொரு மர்மத்தையும் பற்றி குறைந்த வரிகளில் ஆழமாக எழுதியிருக்கிறீர்கள். ஒரே ஒரு பதிவு எழுத இத்தனை புத்தகங்களையும், மூலங்களையும் சுட்டியிருக்கும் உங்கள் rigour பிரமிக்க வைக்கிறது!

குமரி மற்றும் துவாரகை பற்றிய ஆச்சரியங்களை எந்த உள்நோக்கமும் இல்லாமல் அறிவுசார் நேர்மையுடன் எழுதியிருப்பதைக் கவனித்தேன்.

இத்தகைய தரம்வாய்ந்த கட்டுரைகள் அச்சில் ஏறி பெருவாரியான மக்களைச் சென்றடையாமல், மதன் போன்ற அரைவேக்காடு மற்றும் சுய பார்வையற்ற ஆட்களின் எழுத்துக்களை வாசிக்கும் துர்பாக்கியம் தமிழ் உலகுக்கு ஏற்பட்டிருக்கிறது. விதியை நொந்து கொள்கிறேன்.

10:26 AM, January 18, 2007  
Anonymous Anonymous said...

நீலகண்டன்,

சிந்துச் சமவெளி நாகரீகத்தின் கீழ் நீங்கள் வெளியிட்டிருக்கும் படத்தை நீங்களே இன்னொரு முறை பாருங்கள். அந்தப் படத்திலிருக்கும் பெருந்தகையார்:

1. குல்லா போட்டிருக்கிறார்

2. மீசை இல்லை. ஆனால் தாடி வைத்திருக்கிறார்

3. புனித ஹஜ் பயணத்திற்குச் செல்பவர்கள் அணிவது போன்ற மேலாடை அணிந்திருக்கிறார்

இதிலிருந்து தெரிவது என்ன?

இஸ்லாமிய பண்பாடு நெடுங்காலம் முன்பிருந்து வருவது என்பது. இத்தகைய புனிதமான பழமையான மதத்தை ஏதோ இந்தியாவிற்கு இப்போதுதான் வந்த மதம் போல நீங்கள் திரிக்கும் வாதம் சிரிப்பை வரவழைக்கிறது.

உங்களது ஜால்ராவான ராஜாராம் சிந்து சமவெளி குதிரை இப்படி இருந்திருக்கலாம் என்று படம் போட்டு அடிவாங்கியது மறந்து விட்டதா?

இப்போது இந்துத்துவ பாசிச கும்பலைச் சேர்ந்த நீங்களே ஒரு இஸ்லாமியப் பெரியவரின் சிலை ஹரப்பாவில் இருந்திருக்கிறது என்கின்ற உண்மையை வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றிகள்.

அல்லா எல்லாம் அறிந்தவன்.

10:28 PM, January 19, 2007  
Anonymous Anonymous said...

People like ' markathukku mariyavan ' trivialises the importance of the article. If the like, let him be hindu or muslim or christian, if they want to eulogise their religion, they should separately do it. and not interfere in such deeply thought provoking matter.

2:15 AM, January 22, 2007  
Blogger suvanappiriyan said...

வரலாற்று நிகழ்வுகளை மிகுந்த சிரமம் எடுத்து பதிவுகளாக்குகிறீர்கள். வாழ்த்துக்கள்.

7:14 AM, February 03, 2007  
Blogger வஜ்ரா said...

சிந்து சமவெளி நாகரீகத்தின் எழுத்துக்களும், ரொங்கோ ரொங்கோ என்ற Easter islands தீவு பழங்குடியினர் எழுத்துக்களும் 1:1 ஒத்துப் போகின்றன. அதைப்பற்றி ஏதேனும் தகவல் உள்ளதா ?

8:21 AM, February 04, 2007  
Blogger மரைக்காயர் said...

அரிய தகவல்களை மிக பிரயாசைப்பட்டு திரட்டியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்களும் நன்றிகளும். இன்னும் இந்த கட்டுரையை முழுதாக வாசிக்கவில்லை. வாசித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.

8:51 PM, February 04, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி மரைக்காயர், நன்றி சுவனப்பிரியன். வருகைக்கும் உங்கள் உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கும்.
வஜ்ரா. ஆம் இது குறித்து முன்னர் இணையத்தில் ஒரு கட்டுரை படித்தேன். நரம்பியலாளர் விலையனூர் ராமச்சந்திரன் இது குறித்து ஒரு அருமையான சுருக்கமான கட்டுரை இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதியிருந்ததை படித்தேன். ஈஸ்டர் தீவு சிலைகளை எழுப்பியவர்களுக்கு சிந்து சமவெளி பண்பாட்டு தாக்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது (பொனீஷியர்கள் மூலமாக?). ஹோது மதுவா எனும் இத்தீவின் முதல் புராண நாயகன் தமது தாயகத்திலிருந்து 67 சின்னங்களை கொணர்ந்ததாகக் கூறப்படுகிறது. பொதுவாக அகழ்வாராய்ச்சியாளர்கள் இந்த தீவில் மானுடக்குடியேற்றம் பாலினீசியர்களால் (பொனீஷியர்கள் அல்ல) கிபி 300-700 வரையாக உள்ள காலகட்டங்களில் ஏற்பட்டிருக்கலாம் என கருதுகின்றனர். கானானிலிருந்து மத்திய தரைக்கடல் வரையாக கடற்கரையோரமாக பரவி கடல் பயணங்களில் சிறந்து விளங்கியவர்கள் பொனீஷியர்கள். பழங்காலத்தில் பண்பாட்டு கூறுகள் பரந்து பட்டதில் இவர்கள் பங்களிப்பு முக்கியமானதாகும்.

9:20 PM, February 04, 2007  
Anonymous Anonymous said...

நீலகண்டன் ,
படிக்க நன்றாக, உபயோகமாக இருந்தது. நன்றி

2:57 PM, January 16, 2009  

Post a Comment

<< Home