Thursday, February 01, 2007

புஷ்யமித்திரரும் பௌத்தர்களும் : உண்மை என்ன?

'முற்போக்கு' 'பிராம்மணீய எதிர்ப்பு' வரலாற்றாடலின் ஒரு முக்கிய அம்சமாக திகழ்வது 'வைதீகம் எவ்வாறு பௌத்தத்தை வன்முறை மூலம் சொந்த நாட்டிலேயே அழித்தது' என்பதனை விஸ்தீரணப்படுத்தி கூறுவதாகும். பொதுவாக புஷ்யமித்திரர் என்கிற தளபதி மௌரிய ஆட்சியினை முடிவுக்கு கொண்டு வந்ததிலிருந்து இந்த 'கொடுமைகளின்' விவரணம் ஆரம்பிக்கும். புஷ்யமித்திரர் அந்தண குலத்தவர் என்பதால் பிராம்மண வெறிக்கான தகுந்த ஆதாரமாக இது முன்வைக்கப்படுகிறது. பௌத்தர் என்பதற்காக மௌரிய மன்னர் பிருகத்ரத மௌரியரை அவர் கொலை செய்தாரா? அல்லது வேறு காரணிகள் இருந்தனவா? சுங்கர்கள் ஆட்சியில் பௌத்தர்கள் துன்புறுத்தப்பட்டனரா? பௌத்ததின் வீழ்ச்சிக்கு வைதீக நெறியின் புத்தெழுச்சி காரணமா?படையெடுத்த செலியூகஸ் நிகேடரை விரட்டியடித்த மாமன்னர் சந்திரகுப்த மௌரியர், சூத்திரர் ஆட்சி புரியக்கூடாது எனும் சமுதாய மனநிலையை உடைத்தெறிந்து பரம்பரை ஆட்சிக்கு எதிராக பாடுபடும் மக்கள் தலைவன் ஆட்சி எழுந்தது உலகசரித்திரத்திலேயே முதல் முறையாக பாரதத்தில்தான்

அலெக்ஸாண்டரின் நேரடி நியமனமான செலுக்கஸ் நிகேட்டார் கிமு 315 ஆண்டளவில் பெரும் படையுடன் பாரதத்தின் மீது படையெடுத்த போது மௌரிய வம்சத்தை தோற்றுவித்தவ மாவீரர் சந்திரகுப்த மௌரியரால் அப்படை தோற்கடிக்கப் பட்டது. தோல்வியடைந்த செலியூகஸ் நிகேட்டார் சந்திர குப்தரிடம் ஒப்பந்தம் செய்துவிட்டு திரும்பினான். அதன் பின்னர் பாக்டிரியத்தை ஆண்ட கிரேக்க இராணுவ அதிகாரிகள் பாரதத்தை படையெடுப்பதைக் குறித்து கனவிலும் கருதவில்லை. ஆனால் கிமு 230களில் அசோகர் காலமான போது எந்த மௌரிய இராணுவத்தின் பெயரைக் கேட்ட அச்சத்தால் கிரேக்கர்கள் காந்தாரத்தின் மேற்கு மலைக்குன்றுகளுக்கு அப்பால் நடுங்கி நின்றுவிட்டிருந்தனரோ அதே கிரேக்கர்கள் பாரதத்தின் மீது மீண்டும் படையெடுக்க ஆயத்தமாயினர். ஏன்?

மௌரியரிடம் தோற்ற செலுயூகஸ் நிகேடார்

அசோகரது காலத்திலும் அசோகருக்கு பின்னர் வந்த மௌரியர்களாலும் இராணுவத்தைப் பலப்படுத்துதல் என்னும் போக்கே முழுமையாக நின்றுவிட்டிருந்தது. அகிம்சை அனைத்து மனிதர்களுக்குமான தர்மமாக கடுமையாக போதிக்கப்பட்டது. கிமு 250 களிலேயே தொடங்கிய இந்த சரிவின் விளைவாக மௌரிய இராணுவத்தின் முழு அமைப்பு ரீதியான ஒழுங்குமுறையும் எல்லைப்புறத்தில் குலைந்துவிட்டிருந்தது. இதன் விளைவாக எந்த மௌரிய இராணுவத்தால் பாரதத்தின் வெளி எல்லைக்கும் அப்பால் கிரேக்கர்கள் விரட்டி அடிக்கப்பட்டார்களோ அதே கிரேக்கர்கள் மௌரிய பேரரசின் உள்ளாகவே ஊடுருவி டெமிட்ரியஸ் தலைமையில் காந்தாரம், பஞ்சநத (பஞ்சாப்) பிரதேசங்களை ஆக்கிரமித்து அயோத்தி வரை விரிவடைந்தது. ஒரு வரலாற்று ஆசிரியர் சற்றே கேலியாக குறிப்பிடுகிறார், "முதல்தரம் வாய்ந்த படைகளைக் கொண்டிருந்த அலெக்ஸண்டரும் செலியூகஸும் தங்கள் போர்முகாம்களில் கூட நிம்மதியாக தூங்க முடியாத நிலை இருந்த பிரதேசங்களில் மூன்றாந்தர படைகளைக் கொண்டிருந்த பாக்டிரிய கிரேக்க அதிகாரிகள் அந்தப்புரங்களில் நிம்மதியாக உறங்குகின்றனர்." இந்நிலையில் டெமிட்ரியஸை எதிர்க்க மௌரிய பேரரசு திராணியற்றிருந்தது. ஏனெனில் இராணுவ உயர் தளபதிகளைக்காட்டிலும் அதிக அதிகாரமும் செல்வமும் கொண்ட பதவிகளாக மதத்தை பரப்பும் தர்மமகாமாத்திரர் பதவி விளங்கியது. பகுத்தறிவில்லாமல் உணர்ச்சி பூர்வமாக மாத்திரமே அகிம்சையை ஆட்சியாளர்கள் ஆலிங்கனம் செய்தால் தேசபாதுகாப்பு எந்த அளவு பங்கப்படும் என்பதற்கான நிதர்சன உதாரணமாக அசோக மனமாற்றத்தின் பின்னால் ஏற்பட்ட மௌரிய பேரரசின் நிலை நமக்கு தெரிவிக்கிறது. இந்நிலையில் கலிங்க தேச காரவேலர் கிரேக்கர்களை எதிர்த்தார். சிறிது சிந்தியுங்கள். மௌரிய பேரரசால் தோற்கடிக்கப்பட்ட அரசான கலிங்கம் கிரேக்க சாம்ராஜிய விஸ்தீகரிப்பை தடுத்த போது மௌரிய 'பேரரசால்' அது இயலவில்லை. டெமிட்ரியஸின் ஆதிக்க விஸ்தீகரிப்பை காரவேலர் நிறுத்தி அவனை தோற்கடித்தார். ஆனால் காந்தார பகுதியில் அவன் நிலைக்கொண்டது நிலைக்கொண்டதாகவே ஆயிற்று. கிரேக்கர்களின் இத்தோல்வி காரவேலரால் வேதவேள்வி மூலம் கொண்டாடப்பட்டது. மௌரிய 'பேரரசு' இதற்கெல்லாம் சாட்சிபூதம் போல மரமாக நின்றது.

அசோக தூண்

இந்நிலையில் மௌரிய அரசின் இந்த 'அகிம்சை நிலைப்பாட்டில்' மக்களுக்கும் இராணுவத்திற்கும் வெறுப்பு அதிகமாக ஆரம்பித்தது. அதே நேரத்தில் டெமிட்ரியஸுக்கு பின்னால் வந்த மெனாண்டர் என்கிற பாக்டிரிய கிரேக்கன் மீண்டும் படையெடுத்து வந்தான். காந்தாரத்திற்கு விரட்டப்பட்ட கிரேக்கர்கள் இப்போது பஞ்சநதப் பிரதேசத்தை மீண்டும் ஆக்கிரமித்தார்கள். சாகல், மதுரா தாண்டி அயோத்தியா வரை கிரேக்க ஆட்சி பரவியது. இந்த சூழலில்தான் இராணுவத்தின் முதன்மை தளபதியான புஷ்யமித்திர சுங்கர் பிருகத்ரத மௌரியரை கொலை செய்து ஆட்சியினை கைப்பற்றினார். கிமு 182 இல் மெனாண்டர் மீண்டும் படையெடுத்த போது புஷ்யமித்திரர் தலைமையிலான படைகள் அவனை சிந்து கரையில் சந்தித்தன. அவன்படுதோல்வி அடைந்தான். கிரேக்க விஸ்தீகரிப்பு தடுக்கப்பட்டு அவர்களது தலைமை கேந்திரமாக சயல்கோட் (அன்றைய சாகல்) மாறியது. மதுரா கிரேக்கர் வசம் இருந்தது. கிமு 100 இல் சுங்கர்கள் மதுராவிலிருந்தும் கிரேக்கர்களை விரட்டினர்.1

புஷ்யமித்திரருக்கு நிச்சயமாக பௌத்த தருமத்தின் மீது பரிவு இருந்திருக்க வழியில்லை. ஆனால் அது முழுமையான வெறி கொண்ட படுகொலைகளாக உருவெடுத்ததா என்பதுதான் கேள்வி. இது குறித்து வரலாற்றாசிரியர்கள் கூறும் விசயங்கள்தாம் என்ன? புஷ்யமித்திரர் காலத்திய கல்வெட்டுக்களிலோ அல்லது அவர் காலத்திய பௌத்த ஆவணங்களிலோ அவரது பௌத்த காழ்ப்புணர்வு குறித்து எதுவும் கூறப்படவில்லை. பாக்டிரிய கிரேக்க ஆவணங்களிலும் அவ்வாறு கூறப்படவில்லை. அவரது காலத்திற்கு 200 ஆண்டுகளுக்கு பின்னர் எழுதப்பட்ட நூல்களான 'அசோகவதனா' மற்றும் 'திவ்யவதனா' ஆகிய நூல்களே இவ்வாறு கூறுகின்றன. 'அசோகர் எவ்வாறு புகழடைந்தார்' என புஷ்யமித்திரர் கேட்டாராம். அதற்கு 84000 பௌத்த ஸ்தூபிகளை ஸ்தாபித்து அசோக சக்கரவர்த்தி புகழடைந்தார் என கூறப்பட்டதாம். உடனே புஷ்யமித்திரர் 'அப்படியானால் நான் அந்த 84000 பௌத்த ஸ்தூபிகளையும் அழித்து பெயர் வாங்குவேன்.' என கூறி அவற்றை அழித்தாராம். ஒவ்வொரு பௌத்த துறவியின் தலைக்கும் 100 பொற்காசுகள் என அறிவித்தாராம். ஆனால் இந்த அளவு வெறுப்பினைக் கொண்ட கல்வெட்டுக்களை புஷ்யமித்திரரின் பெயரில் உள்ள கல்வெட்டுக்களிலும் இல்லை. அவரது சமகாலத்திலும் இல்லை. உதாரணமாக, முகமது கஜினி விக்கிர ஆராதனை செய்யும் இந்துக்களைக் கொன்று அதன் மூலம் உண்மை மதமான இஸ்லாமின் பெருமையை நிலைநாட்டியதைக் குறித்து தாரிக்-இ-பதவ்னியில் மகிழ்ச்சியுடன் கஜினியின் உடனிருந்த உத்பி எழுதியிருப்பதைக் காணலாம். புஷ்யமித்திரர் கஜினி போலவே வெறிபிடித்த பிறமத காழ்ப்புணர்ச்சி கொண்டவராக இருப்பின் அத்தகைய பதிவுகளை நாம் கல்வெட்டுக்களிலோ அல்லது அன்று புனையப்பட்ட புகழ்ச்சிகவிதைகளிலோ காண வேண்டும். ஆனால் அப்படி எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை. சர் ஜான் மார்ஷல் புஷ்யமித்திரரால் அழிக்கப்பட்ட சாஞ்சி அவரது புதல்வர் அக்னிமித்திரரால் கட்டப்பட்டது என்கிறார்.


சுங்கர் காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட அசோகரின் சாஞ்சி ஸ்தூபி

1920களில் செய்யப்பட்ட எவ்வித அகழ்வாராய்ச்சி சான்றும் அற்ற இந்த ஊகம் இன்று வரலாற்றாசிரியர்களால் புறந்தள்ளப்பட்டுவிட்டது, ரொமிலா தப்பார் கூட இந்த பிற்கால பௌத்த புனைவுகளை ஆதாரமற்றவை என கூறுகிறார். சுங்கர் மௌரிய ஆட்சியை வீழ்த்தியதையும், புஷ்யமித்திரரின் ஆட்சியின் போது அதற்கு முந்தைய மௌரியர் ஆட்சியில் தாம் இருந்த மேல்நிலையை இழந்ததையும் புராணகதையாடல் மூலம் மிகைப்படுத்துவதே இந்த வழக்குகள் என ரொமிலா தப்பார் கருதுகிறார்.2 இதே அசோகவதனா கதையாடலில் அசோகரது ஆட்சியில் ஜைன துறவியர் தலையை கொண்ர்ந்தால் 100 தங்க காசுகள் கொடுப்பதாக அசோகர் அறிவித்ததாக வருவதையும் புஷ்யமித்திரர் பௌத்த துறவிகளை கொலை செய்ய ஆணை பிறப்பித்ததாக வருவது அதனை பிரதி எடுத்து அமைக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி இதன் நம்பகத்தன்மையை மேலும் கேள்விக்குள்ளாக்குகிறார் இந்தியவியலாளர் கொயன்ராட் எல்ஸ்ட்..3 பௌத்த கலைக்களஞ்சியம் சுங்கர் ஆட்சி குறித்து கூறுகிறது:" வரலாற்று தரவுகள் புஷ்யமித்திரர் அவரது காலத்திலேயே கூட பௌத்த மடாலயங்களைக் கட்ட சம்மதித்தது மட்டுமல்லாது பௌத்த கல்விச்சாலைகளையும் பராமரித்தார் எனக்காட்டுகின்றன. அதே நேரத்தில் முந்தைய காலகட்டத்தைக்காட்டிலும் அரச ஆதரவு பௌத்த நிறுவனங்களுக்கு குறைந்திருக்கலாம். ஆனால் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு எவ்வித ஆதாரமும் இல்லை."4

சுங்கர் கால கலையழகு மிளிரும் பர்குத் புத்த ஸ்தூபி

பௌத்த வரலாற்றாசிரியர் இடெயினி லமோட்டேயின் வார்த்தைகளில் " ஆவண அடிப்படையில் புஷ்யமித்திரர் பௌத்தர்களை கொடுமைக்குள்ளாக்கியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.".5 சாஞ்சி ஸ்தூபி மட்டுமல்ல. அசோகர் காலத்தில் தொடங்கப்பட்ட பர்குத் புத்த ஸ்தூபியும் சுங்கர் காலத்தில் விரிவாக்கப்பட்டதாகும். இன்னும் சொன்னால் புஷ்யமித்திரரின் வேத தரும சாய்வு பௌத்தத்தின் வளர்ச்சிக்கு எவ்விதத்திலும் தடையாகவில்லை. வரலாற்றாசிரியர் தர்மானந்த தாமோதர் கோசாம்பி "பௌத்த சங்கங்களுக்கு அசோகர் தொடங்கி வைத்த அரச மானியங்கள் அளிப்பது 12 ஆம் நூற்றாண்டில் முஸ்லீம் படையெடுப்பாளர்களால் பௌத்த மடாலயங்கள் கொள்ளையடிக்கப்பட்டு அழித்தொழிக்கப்படும் வரை தொடர்ந்தது." என விளக்குகிறார். அவர் மேலும் சொல்கிறார்: "மௌரியர்களை அடுத்து பேரரசர்களான சுங்கர்கள் அந்தணர்களுக்கு ஆதரவளித்தனர். முதல் சுங்க மன்னர் வேத வேள்வியை நடத்தினார். ஆனால் இதெல்லாம் பௌத்த தரும வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தவில்லை என்பது சுங்கர் காலத்திலேயே விரிவாக்கப்பட்ட சாஞ்சி ஸ்தூபியின் மூலம் தெரிகிறது. பின்னர் குப்தர் காலத்திலேயும் அந்தணர்களுக்கு தருமம் அளிப்பது மகாபாரத சான்று காட்டி செய்யப்பட்டது. அதே காலகட்டத்தில் பௌத்த மடலாயங்கல் புதுப்பிக்கப்பட்டதுடன் அவற்றிற்கான அரசு மானிய தொகையும் அதிகரிக்கப்பட்டது." 6


அலெக்ஸாண்டர் காலத்தில் பௌத்தம் ஒரு பெரிய தருமமாக இங்கு நிலவவில்லை. அதன் பின்னர் சந்திரகுப்த மௌரியர் கால மெகஸ்தனீஸ் காலத்திலும் பௌத்த இருப்பினை நாம் காண இயலவில்லை. அசோக ஆதரவுடன் பின்னால் எழுந்த பௌத்தம் சுங்கர் காலத்தில் அதே அளவுக்கு அரச ஆதரவு பெறவில்லை என கூறமுடியுமே தவிர அது கொடுமைப்படுத்தப் பட்டதாக கூறமுடியாது. பின்னர் குப்த அரசர்கள் காலத்தில்தான் பௌத்தத்தின் ஆகச் சிறந்த வெளிப்பாடுகள் பாரதத்தில் உன்னதமடைந்தன. அதற்கு இடையில் சொல்லத்தக்க முன்னேற்றமாக குஷாண அரசர் கனிஷ்கரது காலத்தில் பௌத்த சபை கூட்டப்பட்டது. கனிஷ்கர் சிவ பக்தராவார். கூடவே அவர் புத்தரையும் மிகவும் மதித்தார். மகாதேவ சிவபெருமான், புத்த பெருமான் இருவர் உருவையும் அவர் நாணயங்களில் பொறித்துள்ளார்.


சிவபக்தரான கனிஷ்கர் பௌத்த சபையை கூட்டினார். கனிஷ்கர் வெளியிட்ட நாணயத்தில் சிவபெருமான்


சிவபக்தரான கனிஷ்கர் பௌத்த சபையை கூட்டினார். கனிஷ்கர் வெளியிட்ட நாணயத்தில் பகவான் புத்தர்அஜந்தா குகை ஓவியங்கள் பௌத்த கலையின் ஆகச்சிறந்த வெளிப்பாடு. இதன் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றிய சாதவாகன வம்சமும் வகாதக வம்சமும் வேத நெறி அரச பரம்பரைகள்

அஜந்தா குகைகளை எடுத்துக்கொண்டால் அதில் காணப்படும் கல்வெட்டு அதனை உருவாக்கிய ஹரிசேனன் எனும் வகாதக வம்ச அரசரது அமைச்சர் வராகதேவரைக் குறிப்பிடுகிறது.7 இவர் வேத தருமத்தை பின்பற்றியவர் என்றபோதிலும் அஜந்தா குகை ஓவியங்களை நிர்மாணித்திட அரச உதவி அளித்தார். இது நடந்தேறியது குப்த பேரரசின் காலத்தில் என்பதுடன் வகாதகர்களே குப்தர்களுடன் மண உறவு கொண்டவர்கள்தாம். இக்குகைத் தொடர்களின் மிகப்பழமையான குகைகளாக கருதப்படும் குகை எண்கள் 9-10 (சைத்திய கிரகங்கள்) ஆகியவற்றில் சுங்கர் கால ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.8 அஜந்தா ஓவியக் குகைகளுக்கு முக்கிய ஆதரவு அளித்த இரு அரச வம்சத்தவரான சாதவாகனர் மற்றும் வகாதகர்கள் வைதிக நெறியாளரே ஆவர் என்ற போதிலும் அவர்களின் ஆட்சி ஆதரவிலேயே இந்த உலக அளவிலான மிகப்பெரிய பௌத்த கலை வெளிப்பாடு உருவானது.9

புகழ் பெற்ற சாதவாகன சாதவாகன நாணயம்


குப்தர் ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட வேத தரும இந்திரன் சிற்பம்

கிபி 427 இல் குமாரகுப்தரின் காலத்தில்தாம், அவரது அரச ஆதரவில் புகழ்பெற்ற பௌத்த பல்கலைக்கழகமான நாலந்தா உருவாக்கப்பட்டது. அவரே முனைந்து இதனை உருவாக்கியிருக்கலாம். இந்தியவியலாளர் ஹெராஸ் பாதிரி கூறுகிறார்: "சீன யாத்திரீகரான ஹுவான்ஸுவாங் அந்த அரசர் (பல்கலைக்கழகத்தை நிறுவிய அரசரான குமாரகுப்தர்) ஒரு பௌத்தர் என கூறவில்லை. மாறாக பௌத்த தருமத்தை மிகவும் மதித்தவர் என கூறியுள்ளார். உண்மையில் அந்த அரசர் வைணவர் ஆகும். ஆனால் இந்து அரசர்கள் பௌத்ததை மதிப்பது என்பது ஒன்றும் ஆச்சரியமானவோ அபூர்வமானவோ விசயம் கிடையாது." 10மிகிராகுலன் என்ற ஹூனன் நாலந்தாவை தாக்கினான். அவனை முறியடித்து மீண்டும் பல்கலைக்கழகத்தை சிறந்த முறையில் அமைத்துக்கொடுத்தவர் குப்த பேரரசர் பாலாதித்ய நரசிம்ம குப்தர் ஆகும். 300 அடி உயர பௌத்த விகாரம் இந்த நரசிம்ம குப்தர் கட்டியதாக குறிப்பிடுகிறார் ஹுவான்ஸுவாங். அடுத்தடுத்து வந்த குப்த பேரரசர்களால் 200 கிராமங்கள் மானியமாக அளிக்கப்பட்டிருந்தன.11

வேத தருமத்தை சார்ந்த பேரரசர்கள் ஆதரவில் ஆல் போல தழைத்த நாலந்தா பல்கலைக்கழகம்

ஆக கிமு.180களில் தொடங்கி கிபி 600களில் ஹுவான்ஸுவாங் பதிவு வரையில் பாரதத்தின் வைதீக நெறி நின்ற பேரரசர் எவருமே பௌத்தர்களை திட்டமிட்டு அழித்ததாகவோ அல்லது அவர்களை படுகொலை செய்ததாகவோ சொல்ல எந்த ஆதாரமும் இல்லை. எனவே அந்தணர்கள் திட்டமிட்டு பௌத்தத்தை ஒழித்தனர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. என்றாலும் அப்படி கூறும் பிரச்சார பொய்களுக்கு முற்றுப்புள்ளியும் இல்லை.

  1. காளிதாசரின் மாளவிகாக்னிமித்ரா மற்றும் யுகபுராணம் ஆகியவை பாக்டிரீய கிரேக்கர்களை புஷ்யமித்திர சுங்கர் வெற்றிகொண்டதை கூறுகின்றன. புஷ்யமித்திரரின் மைந்தர் அக்னிமித்திரர் மாளவிகா எனும் அரசகுமாரியிடம் மையல் கொண்டதை விவரிக்கும் சமஸ்கிருத நாடகமே மாளவிகாக்னிமித்ரா.
  2ரொமிலா தப்பார், "அசோகரும் மௌரியர் வீழ்ச்சியும்" ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பதிப்பு, 1960 பக். 200 ஆனால் 1994 இல் இதே புனைவுகளை புஷ்யமித்திரரின் பௌத்த வெறுப்புக்கான வரலாற்று ஆதாரமாக இடதுசாரி 'வரலாற்றாசிரியர்கள்' பிரச்சாரம் செய்து நூலாக (மார்க்சிய பீபிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ் வெளியிட்ட 'Selected Writings on Communalism' கட்டுரை தொகுப்பில் கார்கி சக்கரவர்த்தியின் கட்டுரை பக்.167) வெளியிட்ட போது தப்பார் அம்மையார் மௌனமாக அந்த பிரச்சாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த தவறினை ஏனோ அம்மையாரின் அகாடமிக் ஆண்டெனா காணத்தவறிவிட்டது! ஒருவேளை இதுதான் மதச்சார்பற்ற இடதுசாரி அறிவியல் பார்வை மற்றும் மார்க்சிய அறவுணர்வோ என்னமோ!
  3கொயன்ராட் எல்ஸ்ட், "அயோத்தி கோவிலுக்கு எதிரான வாதங்கள்" அத்தியாயம்-2 பக். 24-25, வாய்ஸ் ஆஃப் இந்தியா, 2002
  4 இணைய பௌத்தகலைக் களஞ்சிய உள்ளீடு: http://buddhism.2be.net/Sunga
  5 இ.லமோட்டே. 'இந்திய பௌத்தத்தின் வரலாறு' ஓரியண்டல் இன்ஸ்டிடியூட், 1988 பக் .109 (மேற்கோள் காட்டப்பட்ட நூல் எல்ஸ்ட்,2002 பக்.25)
  6 த.தா.கோசாம்பி, 'பழங்கால இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம்', விகாஸ் பதிப்பகம், 1988 (முதல் பதிப்பு: 1964) பக்.180
  7பெனாய் கே.பெகல் எழுதிய கட்டுரை : ப்ரண்ட்லைன் (2004 செப்: 25- அக் 08) சுட்டி: http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=20041008000106400.htm&date=fl2120/&prd=fline&
  8விக்கிபீடியா அஜந்தா சுட்டி: http://en.wikipedia.org/wiki/Ajanta_Caves
  9பெனாய் கே.பெகல் எழுதிய கட்டுரை : ப்ரண்ட்லைன் (2004 செப்: 25- அக் 08)
  10 & 11ஹராஸ் பாதிரி: 'நாலந்தா பல்கலைக்கழகத்தின் அரச வம்ச ஆதரவாளர்கள', பீகார்-ஒரிசா ஆராய்ச்சி கழக இதழ், பாகம்l. XIV 1928 பக். 1-23

குறிப்பு:
கனிஷ்கர் சீன பாரசீக கிரேக்க தெய்வங்களையும் வழிபட்டவர் என்ற போதிலும் அவரது நாணயங்களில் பிரதான இடம் வகிக்கும் இறைவர் சிவபிரானும் புத்தபகவானும் ஆவர். இந்து-பாகன் (pagan) மதங்களின் தன்மையே என் தெய்வம் உன் தெய்வம் என்றில்லாது அனைத்து தெய்வங்களையும் ஒரே இறை அருள் வெளிப்பாடாக காணும் பண்புதான். அப்பண்பினை சில ஆபிரகாமிய வந்தேறிக் கருத்துக்களால் ஏற்றுக்கொள்ளமுடியாமல் போனாலும்

ஒரு வேண்டுகோள்அன்னிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போரிட்ட பாலாதித்ய நரசிம்மர் மற்றும் யசோதர்மர் குறித்த அமர் சித்திர கதை

நாலந்தாவை அழித்த மிகிராகுலனால் நாடிழந்த நிலைக்கு தள்ளப்பட்ட நரசிம்ம குப்தர் பின்னர் அவனை வென்று தமது வாளின் முன்னர் அந்த ஹூண ஆக்கிரமிப்பாளனை மண்டியிடவைத்தார். அவனைக் கொல்வதை நரசிம்ம குப்தரின் தாயார் தடுத்துவிட்டார்கள். தோல்வியுற்று திரும்பிய மிகிராகுலன் இதனை அவமானமாக நினைத்து பழிவாங்க பெரும்படையுடன் திரும்பினான். ஆனால் அவனை மால்வாவில் சந்தித்த யசோதருமர் அவனது படையை நிர்மூலமாக்கி அவனை காந்தாரத்திற்கு ஓட வைத்தார். துரதிர்ஷ்டவசமாக நம் குழந்தைகளுக்கு நம் வீரப்பொன்னேடுகள் சொல்லி தரப்படுவதில்லை. இந்தியா புக் ஹவுஸ் மூலம் அமர் சித்திர கதைகளை வெளியிடும் அனந்த பாய் நம் தேசத்தின் வரலாற்றினை சுவைப்பட நம் குழந்தைகளுக்காக -பெரியவர்களுக்கும்தாந் சித்திர கதைகளாக முன்வைக்கிறார். இவற்றினை உங்கள் குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுங்கள்.

நாலந்தாவை அழிக்கும் ஹூண படைவீரர்கள்


நச்சரவத்தை மன்னிக்கும் சத்குண விகிருதி : இன்றைக்கு அப்ஸலையும் மன்னிக்கும் குணமாக மாறியுள்ளது

2 Comments:

Blogger ரவி said...

மதுரைக்கு பக்கத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கழுவில் ஏற்றப்பட்டார்களாமே ? அது பற்றிய விளக்கம் இருக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன்...

யார் அவர்களை கழுவில் ஏற்றியது ?

8:49 PM, February 01, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

Ravi,

i am out of station and hence this is in English. Check out the detailed explanation about the historicity of this alleged crime in one of previous posts

s.an

1:09 AM, February 03, 2007  

Post a Comment

<< Home