Thursday, January 18, 2007

செந்தழல் ரவிக்கு பதில்

திரு.செந்தழல் ரவி,
வணக்கம்.
'இந்துக்கள் என்று கேவலப்பட வேண்டாம் ஜடாயு' என தாங்கள் எழுதியிருக்கும் பதிவினைப் படித்தேன். எவ்வித பகுத்தறிவும் இன்றி எழுதப்பட்ட ஒரு பதிவாக அது அமைந்துள்ளது.
கீழே உள்ளது உங்கள் பதிவின் வார்த்தைகள்:"மதம் என்பது என்ன? இந்த(து) மதத்தை நீங்கள் எத்தனை ஆண்டுகளாக சார்ந்திருக்கிறீர்? ஆயிரம் ஆண்டுகள்? இரண்டாயிரம்
ஆண்டுகள் ? ஒரு மூன்றாயிரம் ஆண்டுகள் ? அதற்கு முன் யார் அய்யா நீர் ? சூரியனையும், பாம்பையும், கடலையும் வழிபட்ட காட்டுமிராண்டி கூட்டம் தானே? நபிகளை வணங்குபவர் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாக அதை சார்ந்திருக்கிறார், கிறிஸ்தவ மதத்தில் உள்ளவர் ( இந்தியாவில்) நானூறு ஆண்டுகளாக சார்ந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்...இந்த இரண்டு பிரிவினரும் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதே காட்டுமிராண்டி கூட்டம் தானே? பயந்து நடுங்கவைக்கும் அத்தனையும் அவனுக்கு தெய்வம். பாம்பு தெய்வம். அது முட்டையும் பாலும் சாப்பிட்டு புத்துக்குள்ள இருக்கு. அதை புத்து மாரியம்மன்னு சொல்லிட்டீங்க. ஏன்யா, ஐந்தறிவு கூட இல்லாத பாம்பு எப்படிய்யா உனக்கு தெய்வம்? மண்டையில கொஞ்சமாவது மசாலா இருந்தா யோசிக்க மாட்டாயா?"


உங்களுக்கு பகுத்தறிவின் அதே தரத்தில்தான் உங்கள் வரலாற்றறிவும் உள்ளது ரவி. இன்று வாழும் இந்து தருமத்தின் கூறுகள் சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து தொடர்பவைதாம். கூந்தல் வகிடுடெடுத்து திலகம் வைப்பதாகட்டும், வீட்டில் மாலையில் குத்து விளக்கேற்றுவதாகட்டும், சமயச்சடங்குகள் முன்னர் குளித்தெழும் திருக்குளங்கள் ஆகட்டும், சப்த கன்னியரை வணங்கும் மரபாகட்டும், சங்கினை சமயச் சடங்குகளில் பயன்படுத்துவதாகட்டும், யோகமாகட்டும், தாய் தெய்வ வழிபாடாகட்டும் இன்றைக்கும் இன்றைக்கு குறைந்தது ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய சிந்து சமவெளி பண்பாட்டிற்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. நீங்கள் சொன்னதை இப்போது திரும்ப பாருங்கள். "ஆயிரம் ஆண்டுகள்? இரண்டாயிரம் ஆண்டுகள் ? ஒரு மூன்றாயிரம் ஆண்டுகள் ? அதற்கு முன் யார் அய்யா நீர் ?" நீர் சொன்ன மூவாயிரம் ஆண்டுகளுக்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எம் தருமம் எழுந்துவிட்டது சீரும் சிறப்புமாக. அன்றைக்கும் இதே ஆன்மிக பண்பாட்டிற்கு நாங்கள் சொந்தக்காரர்கள்தான். அன்று முதல் இன்றுவரை எத்தனையோ வெளிப்படையெடுப்புகளையும் உள்ளுருவாகிய சில சமுதாய தேக்கங்களையும் தாங்கிக்கொண்டு முன்னதை எதிர்த்தும் பின்னதை எதிர்த்து அதனை மாற்றியமைத்தும் வாழ்கிறோம், இந்த பண்பாட்டு நீரொழுக்கு வற்றாத ஜீவநதி. ஐயா வைகுண்டர், ஸ்ரீ நாராயண குரு, சட்டம்பி சுவாமிகள், ஐயன் காளி, சுவாமி தயானந்தர், சுவாமி விவேகானந்தர், திருபராய்துறை மேவிய சுவாமி சித்பவானந்தர் என அன்னிய சுரண்டலுக்கு ஆளான போதிலும் தாழக்கிடப்பவரை தற்காப்பதே தருமம் என வீரமுடன் முழக்கமிட்ட தருமத்தின் வழி வந்தவர்கள் நாங்கள். எம் சமுதாயத்தில் சமுதாய அமைப்பில் குறைகள் இல்லை என இந்துக்களான நாங்கள் கருதவில்லை. குறைகளை ஏற்கிறோம். கண்ணுக்கு தெரியாத பார்ப்பனீயத்தின் மீது அதனை சுமத்தி திண்ணியத்தில் தலித்தை மலம் தின்ன வைத்தவன் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவன் என்பதனை மறைத்து பேசவேண்டிய நிலையில் நாங்கள் இல்லை. தீண்டாமையும் சாதீயக்கொடுமைகளுக்கும் எவரையும் நாங்கள் பொறுப்பாக்கவில்லை. நாங்களே பொறுப்பு என அக்குற்றங்களை எம் சொந்த சோதரரின் மீது இழைக்கப்பட்ட கொடுமைகள் என உணர்கிறோம். அவற்றினை களைந்திட முனைகிறோம். ஒரிசாவில் தலித்துகள் கோவில் நுழைய தடையாக கட்டப்பட்ட அவமான சுவரை அடித்து நொறுக்கிட முனைந்தவை அதற்காக காவல் துறையினரால் கைவிலங்கு சூட்டப்பட்டவை எம் இயக்கத்தவர் கரங்கள். தலித் சமுதாயத்தினருக்கும் அவரும் எம் சோதரரே என கழிவறைகள் கட்டிக்கொடுத்த கரங்கள் எம்முடையவை. கழிவறைகள் முதல் மீன் சந்தைகள் வரை எம் சோதரருக்கு எம் கரங்களால் நாங்கள் அமைத்துள்ள சேவைகள் உண்மையில் சேவைகள் அல்ல அவை எம் கடமைகள். ஆம் இந்த வற்றாத ஜீவநதியின் பாரம்பரிய உரிமையாளர் என்ற முறையில் அதில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் சாதீயமென்னும் தீய நீருக்கும் நாங்கள் பொறுப்பேற்கிறோம். அதனாலேயே அதனை சரி செய்வதென இந்த முள் நிறைந்த பாதையை சுயமாக ஏற்றெடுத்து தருமத்தின் பாதையில் பணியாற்ற கச்சை கட்டி இறங்கியுள்ளோம். நிற்க, நீர் சொன்ன வரலாற்று ஆண்டுக் கணக்குகளில் உள்ள அறியாமைக்கு அப்பால் அதனை நானே ஒரு நல்ல கேள்வியாக செப்பனிட்டு தருகிறேன்: 'நாகரிகமும் நிறுவன சமயமும் எழுவதற்கு முன்னால் அனைவருமே காட்டுமிராண்டிக் கூட்டம்தானே' என்பதே உமது கேள்வியாக கொள்வோமா? அப்படியாவது நீர் கேட்டிருக்கலாம். தேவையில்லாமல் காலக்கணக்கு அளித்து தங்கள் வரலாற்றறிவுக்கு இப்படி ஒரு விளம்பரம் அளித்திருக்கவேண்டாமாக இருந்தது!


சரி நிறுவன மதமாக எழுவதற்கு அடிப்படையாக அமையும் ஆன்மிக அனுபவங்கள் அச்ச உணர்விலிருந்து எழுபவை அல்ல. இன்றைய தருமத்துவ சமயங்களில் ஒன்றான இந்து தருமத்தின் அடிப்படையாக அதன் முந்தைய நிலையாக அமைந்தது கற்கால புதிய கற்கால சமுதாய ஆன்மிக கூத்தாடிகளின் அக-தரிசனங்கள்தாம். அவை அச்சத்தினால் மட்டுமே அல்லது அச்ச உணர்வின் ஆதிக்கமே அதிகமாக இருப்பதால் எழுந்தவை என்று கேட்டால் எந்த மனிதவியலாளனும் வாய்விட்டு சிரிப்பான். குகை ஓவியங்கள் குறித்த விக்கிபீடியா கட்டுரையை செந்தழல் ரவி முடிந்தால் பார்க்கட்டும். ஐரோப்பிய குகை ஓவியங்கள் குறித்தும் அவற்றின் தோற்றம் குறித்தும் கூறும் அந்த விக்கிபீடியா கட்டுரை எவ்வாறு வேட்டையாடும் இனக்குழுக்கூட்டங்களின் ஆன்மிகாவேசக் கூத்தாடிகள் (shamans) மாற்று பிரக்ஞை தளங்களில் உலாவிக் கண்டுணரும் ஆன்மிகக்குறியீடுகள் குகை ஓவியங்களில் இடம்பெற்றுள்ளன என்பதனைக் குறிப்பிடுகிறது. (http://en.wikipedia.org/wiki/Cave_painting) வேத மந்திரங்களும் இத்தகைய ஆன்மிகாவேச கவிகளின் வெளிப்பாடுகளே ஆகும். எனவேதான் வேதங்களை இயற்றிய முனிபெருமக்கள் மந்த்ர த்ருஷ்டா,கவி என அழைக்கப்பட்டனர். அவ்வாறு உணர்ந்த அக சத்தியங்களை குறியீடுகள் உருவகங்கள் மூலம் வெளிப்படுத்தினர். (வேத ரிஷிகளில் மிகப்பெரிய பெண்கள் வரிசையை நாம் காண்கிறோம்.) எனவே இங்கிருந்து உமது அடுத்தக் கேள்விக்கே செல்லலாம்.


பாரத-இந்து ஞான மரபில் பாம்பு வழிபாட்டின் தன்மையை கிஞ்சித்தாவது அறிந்திருப்பின் நீர் "பாம்பு தெய்வம். அது முட்டையும் பாலும் சாப்பிட்டு புத்துக்குள்ள இருக்கு. அதை புத்து மாரியம்மன்னு சொல்லிட்டீங்க. ஏன்யா, ஐந்தறிவு கூட இல்லாத பாம்பு எப்படிய்யா உனக்கு தெய்வம்? மண்டையில கொஞ்சமாவது மசாலா இருந்தா யோசிக்க மாட்டாயா?"இந்த கேள்வியை கேட்டிருக்க மாட்டீர். நமது சமயத்தின் அனைத்து தளங்களிலும் இந்த பாம்பு குறியீடு பலவிதங்களில் ஊடுருவி நிற்பதைக் காணமுடியும். குண்டலினி, நிலத்துடன் இணைந்த உயிர் சக்தி, - அடிப்படையில் இது பாலியல் சக்தியே என்பதனை இது காட்டுகிறது. ஆபிரகாமிய மதங்களிலிருந்து பாரத தரும மரபுகள் மாறுபடும் புள்ளியும் கூட இதுதான். விவிலியத்தில் படைப்பின் பின்னர் முதல் கேள்வியினை எழுப்பியது சர்ப்பமே என்பதனை கவனியுங்கள் (ஆதியாகமம் 3:1). முதல் கேள்வி சர்ப்பத்தால் பெண்ணிடம் கேட்கப்பட்டது என்பதனையும் கவனியுங்கள். (ஒரு வரலாற்று பேராசிரிய நண்பர் -கத்தோலிக்கர்- ஒருமுறை என்னிடம் முதல்கேள்வி சர்ப்பம் எழுப்பியது என்பதால்தான் ஒவ்வொரு கேள்வியும் -நம்பிக்கை கேள்விக்குள்ளாக்கப் படுவதும்- சர்ப்பத்தினால் மனித இனம் வஞ்சிக்கப்படும் வழிமுறைதான் எனக் காட்டத்தான் கேள்விக்குறி சர்ப்ப வடிவில் உள்ளதாக கூறினார். கேள்விக்குறியை பார்க்கும் போது சரிதான் எனத் தோன்றுகிறது.) ஆனால் நமது மரபில் கேள்விகள் மதிக்கப்படுகின்றன என்பதுடன் சர்ப்பத்தின் புனிதக்குறியீடுத்தன்மை அதன் தடைபடாத முழு வளர்ச்சியினை அடைந்துள்ளது. உலகெங்கும் ஒடுக்கப்பட்டு ஆதிக்க மதங்களால் அழிக்கப்பட்ட சர்ப்ப வழிபாடு புவியிணைந்த வழிபாடு நம் நாட்டில்தான் அதன் அனைத்து பரிமாணங்களும் தங்கு தடையின்றி வளர்ந்து ஆலாக செழித்து நிற்கிறது. செந்தழல் ரவி போன்ற அறிவாளிகளுக்கு இதனாலெல்லாம் என்ன இலாபம் என தோன்றலாம். அவர் புற்றுமாரியம்மனைக் குறித்து கேட்ட கேள்விக்கு எங்களூர் பாம்பு வழிபாட்டினைக் கொண்டே பதிலளிக்கிறேன். புற்று மாரியம்மன் போலவே எங்கள் ஊர் பக்கங்களில் நாக காவுகளும் உண்டு. நாகதேவதைகளும் சாஸ்தாவும் வணங்கப்படும் காவுகள். பெங்களூர் போன்ற இடங்களில் பகுத்தறிவுடன் பணி புரியும் செந்தழல் ரவி போன்ற பகுத்தறிவுவாசியாக அல்லாத என்னைப்போன்றவர்கள் திருவட்டார், தக்கலை, தேரூர் போன்ற கிராமப்புறங்களில் வளர்ந்த பாமரர்கள், "ஏன்யா, ஐந்தறிவு கூட இல்லாத பாம்பு எப்படிய்யா உனக்கு தெய்வம்? மண்டையில கொஞ்சமாவது மசாலா இருந்தா யோசிக்க மாட்டாயா?" என்கிற செந்தழல் ரவியின் கேள்வி கேட்கப்பட முழுமையாக பாத்யதை பெற்றவர்கள் நாகதேவதைகள் உறை காடாக இந்த காடுகளை வணங்கி வந்துள்ளோம். பாரம்பரிய மருத்துவர்கள் மட்டுமே நாகதேவதையை வணங்கி உள்ளே சென்று தேவையான போது தேவையான அளவுக்கு மட்டும் மருந்து மூலிகை செடிகளை பறித்து வருவார்கள். "ஏன்யா, ஐந்தறிவு கூட இல்லாத பாம்பு எப்படிய்யா உனக்கு தெய்வம்? மண்டையில கொஞ்சமாவது மசாலா இருந்தா யோசிக்க மாட்டாயா?" என்ற கேள்வி மட்டும் எழவே இல்லை. ஆனால் பாருங்கள் செந்தழல் ரவி இந்த மண்டையில் மசாலா கொஞ்சம் கூட இல்லாத எங்களைப்போன்ற மடையர்கள். எங்கள் தகப்பன்கள், எங்கள் பாட்டன்கள் பூட்டன்களால் இன்றைய தேதியில் கேரளாவிலும் 500ஹெக்டேருக்கு மேலாக 2000 நாக காவுகள் ' ஐந்தறிவு கூட இல்லாத பாம்பு' சாமிகளால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த 2000 காடுகளில் 761 காடுகளில் சுற்றுச்சூழல் தாவரவியலாளர்கள் 722 தனித்தனி பூ பூக்கும் தாவர இனங்களை கண்டறிந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் 'இந்த மண்டையில் மசாலா இல்லாத கூட்டத்தால்' 304 காவுகள் இன்று உள்ளன. ஆனால் ஐயா செந்தழல் ரவி உம்முடைய பகுத்தறிவு பார்வை கொண்ட நல்லவர்களால் இப்போது நிலமை மாறிவருகிறது. 173.7 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த நாக காவுகள் இன்று 30.73 ஹெக்டேராக குறைந்துள்ளன. ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் ரவி, ஊர்பக்கங்களில் நாககாவுகளின் நாக தேவதைகளை வழிபடுபவர்களில் பலருக்கு பாம்பின் உயிரிலக்கணங்கள் தெரியும். உங்களையும் என்னையும் விட நன்றாக தெரியும். நாக தேவதைகளின் குறியீட்டுத்தன்மையை ஆழ் ஆன்மீகத் தன்மையை அறிந்தவர்கள் அவர்கள். பாம்பு புற்றுக்கு (அது பாம்பு கட்டிய புற்றல்ல தெரியுமா என உயிரியல் அறிவை நாம் காட்டலாம்தான்) பால் ஊற்றும் 'பகுத்தறிவற்ற' இல்லத்தரசி முதல் பதஞ்சலி முனிவர் இந்த பாம்பு போற்றும் கலாச்சாரத்தினை கட்டிக்காத்து வருகின்றனர். சூழலியல் முதல் உளவியல் வரை வீச்சு கொண்ட ஒரு பாரம்பரியத்தை கிஞ்சித்தும் உணராது "பாம்பு தெய்வம். அது முட்டையும் பாலும் சாப்பிட்டு புத்துக்குள்ள இருக்கு. அதை புத்து மாரியம்மன்னு சொல்லிட்டீங்க. ஏன்யா, ஐந்தறிவு கூட இல்லாத பாம்பு எப்படிய்யா உனக்கு தெய்வம்? மண்டையில கொஞ்சமாவது மசாலா இருந்தா யோசிக்க மாட்டாயா?" என்று கேட்பதுதான் அறிவீனமானது. "ஏன்யா இந்த அளவுக்கு பரந்து விரிந்த ஒரு பாரம்பரியத்தை கொஞ்சம் கூட அறிவில்லாம கொச்சையா பேசுறியே மண்டையில கொஞ்சமாவது மசாலா இருந்தா யோசிக்க மாட்டாயா?" என்று மீள்-கேள்வி கேட்கலாம் தான் வேண்டாம்.


இப்போது திரு போன்றவர்கள் ஒரு ஜல்லி அடிப்பார்கள். (மாதவ காட்கில் தொடங்கி அடிக்கிற ஜல்லிதான் அது) இதெல்லாம் நாட்டார் வழிபாட்டு முறை. இதற்கும் இந்து தருமத்துக்கும் தொடர்பில்லை என்று. பக்கா Fraud தனமான ஜல்லி அது. பாருங்கள் செந்தழல் ரவி இந்து தருமத்தை தூற்றி எழுதுகையில் நாட்டார் வழிபாடு என இனிமேல் திரு போன்றவர்கள் ஜல்லியடிக்கப் போகும் வழிபாட்டு முறையை எடுத்துவைத்துதான் ஏளனமாக எழுதினார். இந்து என்று அவமானப்படாதே என்று தலைப்பிட்டு பாம்பை கும்பிடுகிறவனுக்கு மண்டையில் மசாலா இருக்கிறதா? என்று எழுதினார் செந்தழல் ரவி. இப்போது திரு என்ன செய்தார்? அவரது பதிவில் பின்னூட்டம் போட்டார். எப்படி? 'நாட்டார் வழிபாட்டு முறை அது ரவி. அதை குறித்து ஏளனமாக எழுதாதே. அது ஆழமான ஆன்மிகத்தன்மை உடையது' என்றா எழுதினார்? இல்லையே. மாறாக, 'நல்ல புரிதலான பதிவு' என பாராட்ட அல்லவா செய்கிறார். அதற்கு அடுத்தாற்போல எழுதுவதை பாருங்கள்: "பாகன் வழிபாட்டுமுறை என்பது எந்த மதத்திற்கும் உரியதல்ல. அவை நமது மூதாதையரின் ஆதிகால வழிபாட்டுமுறை. அவற்றின் தொடர்ச்சி இன்றும் பல மதங்களில் உள்வாங்கப்பட்டுள்ளன. இதை ஒரு மதத்தினருக்கு மட்டும் உரியதாக அடையாளப்படுத்துவது சுத்த மோசடி. இது ஒரு கலாச்சார தொடர்ச்சியே. இன்றும் பல நாடுகளில், பல விதமான நாட்களில், பல பெயர்களில் பொங்கலாகவோ, தாங்ஸ் கிவிங் ஆகவோ, ஹார்வஸ்ட் பெஸ்டிவெல் என்றோ இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் இந்து என்பது பண்பாட்டு திரித்தல்." பாகனியம் எனும் பூசணியை செக்யூலர் சோத்துக்குள் மறைக்கப்பார்க்கிறார் மனிதர். செந்தழல் ரவி பாகனியத்தின் ஒரு முக்கிய உலகளாவிய அளவில் ஒடுக்கப்பட்ட கூறினை -பாரதத்தில் மட்டுமே கற்பக விருட்சமென நிற்கும் கூறினை- கீழ்மைப்படுத்தி திட்டுகிறார். அதை நல்ல புரிதலான பதிவு என பாராட்ட வேண்டியது. ஆனால் அந்த கூறினை ஏற்றெடுத்து அதனை ஆதிக்க சக்திகளின் படையெடுப்புகளுக்கு அப்பால் வளர்த்தெடுத்து இன்றைக்கும் வாழவைக்கும் தருமசமுதாயமான இந்து சமுதாயம் அதனை சொந்தம் கொண்டாடக்கூடாது என அறிவுசீவித்தனமான நாட்டாமை தீர்ப்பு கொடுக்க வேண்டியது. இந்த இரட்டை நாக்குத்தன்மையை (இரட்டைநாக்கு காரர்களை அல்ல) எதனால் அடிக்கலாம் சொல்லுங்கள்! அண்மையில் கூட சாஸ்தாகாவு நாகர் சிலைகளும் சாஸ்தா சிலைகளும் அடித்து உடைக்கப்பட்டன கிறிஸ்தவ வெறியர்களால். எதிர்த்து குரல்கொடுத்தது இந்து முன்னணிதான். திரு போன்றவர்கள் லாஜிக் எப்படி போகுமென்றால் 'இந்து முன்னணி எப்படி குரல் கொடுக்கலாம்? காவு என்பது இந்து வழிபாடல்ல நாட்டார் வழிபாடு' என்றுதான் போகுமே ஒழிய 'ஏனையா காவு நாகரை உடைத்தீர்கள்?" என்று போகாது.


நன்றி: தமிழ்முரசு -நாகர்கோவில் பதிப்பு- 31-12-2006

எனவே திருவாளர். செந்தழல்ரவி அடுத்த முறையாவது திறந்த மனத்துடன் திருத்தமாக கேள்விகளைக் கேட்டபடி வாருங்கள். என்னுடைய வார்த்தைகள் ஏதாவது உணர்ச்சிவேகத்தில் தங்களை புண்படுத்தும் விதமாக விழுந்திருப்பின் மன்னித்துவிடுங்கள்.


அன்புடன் உங்கள் சகோதரன்
அரவிந்தன் நீலகண்டன்

20 Comments:

Anonymous Anonymous said...

அய்யா வழி மதமும், நாராயணகுருவின் மதமும் எப்போது இந்து மதமானது?

உயர் சாதி இந்துக்களின் கொடுமைகளுக்கு எதிராக தொடங்கப்பட்டவைதானே அவை!

ஏனிந்த திரிபுவாதம்?!

2:33 AM, January 18, 2007  
Blogger Muse (# 01429798200730556938) said...

செந்தழல் ரவி விஷயங்களை புரிந்துகொள்ளக்கூடியவர்.

தங்கள் விளக்கங்களை அவருடைய கேள்விகளுக்கு சரியான பதிலாக அவர் ஏற்றுக்கொள்வார் என்றே நான் கருதுகிறேன்.

அவருக்கு வேறு ஏதேனும் கேள்விகள் இருப்பினும் அதற்கு தாங்கள் பதிலளிப்பீர்கள் என்பதும் தெரியும்.

இருப்பினும், மூன்று கால் முயல் பிடிக்கும் மற்ற வலைப்பதிவர்களினூடே ஒரு நல்ல கருத்துப் பகிர்தல் ஏற்பட எந்த அளவு வாய்ப்பு உள்ளது என்கின்ற கேள்வியும் எழுகின்றது.

2:48 AM, January 18, 2007  
Anonymous Anonymous said...

சரியாக சொன்னீர்கள் ஐயா

//தீண்டாமையும் சாதீயக்கொடுமைகளுக்கும் எவரையும் நாங்கள் பொறுப்பாக்கவில்லை. நாங்களே பொறுப்பு என அக்குற்றங்களை எம் சொந்த சோதரரின் மீது இழைக்கப்பட்ட கொடுமைகள் என உணர்கிறோம். அவற்றினை களைந்திட முனைகிறோம்.//

இந்த ஜாதீயம்தான் இன்று இந்துமதத்தை பிறர் இழிவுபடுத்துவதற்கான காரணம் இது களையப்படவேண்டும் இனி வரும் இளைஞர் சமுதாயாமவது இந்த ஜாதிப் பிரிவினை இன்றி வாழ வழி சமைக்க வேண்டும். எம்முடைய மூதாதையருடன் வாழ்ந்த ஒரு சில கடும்போக்காண அதிகார வர்க்க எண்ணமுடையவர்களினால் ஏற்படுத்தப்பட்ட இந்த நிலைக்கு இன்றைய தலைமுறையினர் நாம் பொறுப்பாக முடியாது. இது கண்டிப்பாக களையப்படவேண்டும்.

3:04 AM, January 18, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நிச்சயமாக சாதீய கொடுமைகளை ஐயா வைகுண்டர் எதிர்த்தார். அவ்வாறே ஸ்ரீ நாராயணகுரு ஸ்வாமிகளும். ஆனால் இருவருமே இந்து தரும நெறிகளையே சமூக நீதிக்கான போராடும் ஆயுதமாக முன்வைத்தனர். நான்கு வேத நாயகனாகவே ஐயா வைகுண்டர் கூறுகிறார்.
"நாலுவேதமதிலும் நான் வருவேன் கண்டாயே
தூலவேசமிட்டு சுற்றுவேன் கேட்டிடு நீ " என்பது ஐயாவின் வாக்கு. மட்டுமல்ல ' என் கடவுள் மட்டுமே கடவுள்' என்கிற கிறிஸ்தவ இஸ்லாமிய பரவு மனப்பான்மையை மிகத்தெளிவாகவே ஐயா கடிகிறார்கள்:
"நீ பெரிது நன் பெரிது நிச்சயங்கள் பார்ப்போமென்று
வான் பெரிதறியாமல் மாள்வார் வீண் வேதமுள்ளோர்
ஒரு வேதந் தொப்பி உலகமெல்லாம் போடு என்பான்
மறுத்தொரு வேதம் சிலுவை வையமெல்லாம் போடு என்பான்
அத்தறுதி வேதம் அவன் சவுக்கம் போடு என்பான்
குற்றம் உரைப்பான் கொடுவேதக்காரன் அவன்
ஒருவருக்கொருவர் உனக்கெனக் கொன்றேதான்
உறுதியழிந்து ஒன்றிலுங் கை காணாமல்
குறுகி வழிமுட்டி குறைநோவு கொண்டுடைந்து
மறுகித் தவித்து மாள்வர் சிலபேர்கள்
ஓடுவார் சிலபேர் ஒழிவார் சிலபேர்"
என தெளிவாக உரைக்கிறார்கள் ஐயா அவர்கள். புஷ்சும் பின் லேடனும் மதமாற்றுஇ
அன்றைக்கே அன்புக்கு கொடியாக பரம பவித்திர காவி கொடியினை எங்கள் கொடியாக ஆக்கினவர் ஐயா அவர்கள். அனைத்து சாதியினரும் வேத தருமம் பயின்று அர்ச்சகர் ஆவார்கள் என முன்னுறைத்தவர் எங்கள் ஐயா.
"சாதி சாதி தோறும் சக்கிலி புல்ச்சி வரை
ஆதிச்சாதி முதலாய் ஆராதனை காட்டுவிப்பேன்
காட்டுவிக்கும் சொரூபம் கண்டிரு என் மகனே" என்பது ஐயா வாக்கு,
மட்டுமல்ல ஒரே சாதியாக மக்கள் ஒருங்கிணைந்து இந்த நாட்டையே தரும முறைப்படி ஆள்வார்கள் அன்புக்கொடியான காவிக்கொடியின் கீழ் என்பது ஐயா எங்களுக்கு அளித்துள்ள வாக்குதத்தம் மட்டுமல்ல கட்டளையும் கூட:
"வாரி மூன்று கோதி வளைந்திருக்கும் ஓர் தீவை
சாதியொ஡ரு நிரப்பாய் ஆள்வாய் என்மகனே" என்கிறார் எங்கள் அவதார புருஷர் ஐயா வைகுண்டர்.
"எளியோரைக் கண்டு இரங்கியிரு
வலியோரைக் கண்டு மயங்காதே என் மகனே
தாழக்கிடப்பவரை தற்காப்பதே தருமம்"
என்கிறார் எங்கள் ஐயா. இதன்படி நடக்கிறவர்கள் யார்? அன்புக்கொடியான காவிக்கொடியின் மகிமையுடன் இத்தேசத்தில் அனைத்து சாதியினரும் வேதம் படிக்க சட்டம் கொண்டு வந்த ஜோஷி எந்த இயக்கத்தை சேர்ந்தவர்?
பசுவதை குறித்து பேசும் எங்கள் ஐயா சொல்கிறார்: 'பசுவை அடைத்து பட்டினிகள் போடாதே'
யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் பண்பாடு நம்முடையது. இதுவே வசுதைவக குடும்பகம் என பாரதமெங்கும் போற்றப்படுகிறது. 'அவர் இவர் என்னாது அனைவருக்கும் இட' சொன்னார் திருமூலர். எங்கள் ஐயாவும் இம்மரபினை மீண்டும் வலியுறுத்துகிறார்: 'அன்போர்க்கும் ஈந்திரு நீ ஆகாத பேருக்கும் ஈந்திரு நீ'
ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி என சொல்லும் வேதம். கிருஷ்ண பரமாத்மாவே கீதையில் 'யார் தன்னை எவ்விதமாக வணங்கினாலும் தன்னை அடையலாம்' என்று கூறியுள்ளார். கண்ணன் கீதையில் கூறியதை கண்ணனின் கலியுக அவதாரமாக பாரத நாட்டையே அன்புக்கொடியாம் காவிக்கொடி இயக்கம் மூலம் வாழ்விக்க வந்த ஐயா கூறுகிறார்: 'அவரவர் மனதில் ஆனபடி இருந்து எவரெவரையும் பார்த்திருப்பேன் நான் உன்னிடமே'.
உண்மையான பரந்த வேத தருமத்தினை மறந்து சாதீயத்தில் மூழ்கிக் கிடந்த சமுதாயம் அதனை சுரண்டி மதம்மாற்றிய மிசிநரிகள் இரண்டையும் எதிர்த்து உண்மை வேத நெறி நின்ற எங்கள் ஐயாவின் இயக்கம் இந்து தருமத்தின் இந்து சமுதாயத்தின் ஏன் இந்துஸ்தானத்தினுடையவே எதிர்காலம். அதில் எந்த மாற்றமும் இல்லை.

3:11 AM, January 18, 2007  
Blogger ரவி said...

உங்கள் பதிவு நல்ல விளக்கத்தை கொடுத்தது !!! நன்றி !!!

3:19 AM, January 18, 2007  
Blogger ரவி said...

திருவை பற்றி வந்துள்ள ஒரு தரமற்ற பின்னூட்டத்தை நீக்கிவிடலாமே நீலகண்டன்..

3:20 AM, January 18, 2007  
Anonymous Anonymous said...

நன்றாக கதை சொன்னீர்கள்...., நீங்கள் சொல்லும் முத்துக்குட்டி சாமியின் பாடல்களில் இந்து மதத்தை தூற்றும் பாடல்கள் உங்கள் கண்களுக்கு புலப்பட வில்லையா?
அல்லது பொதுவில் வைக்க தயக்கமா?

மேலும் அவரின் கொடி, வென்மை நிறத்திலானது என்பது தெரியாதா? வெங்கொடியை காவியாக்க முனைவது ஏன்?

முன் முடிவுகளுடன் இயங்குகிறீர்கள்.. வாழ்த்துக்கள்.

3:23 AM, January 18, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

திருவோடு ஏந்துபவர்கள் நம் மதிப்புக்கும் வணக்கத்துக்கும் உரியவர்கள். திரு திருவோடு இல்லாத வெறும் திரிக்கும் கதைகள் மட்டுமே கொண்டவர். கன்னியாகுமரி போற பாதையில் கொட்டாரம் (கொட்டாரம் அப்படீன்னாலும் அரண்மனைதான் இது வேறு கொட்டாரம்) பக்கம் இருக்கிற மருத்துவாழ்மலை பத்மனாபபுரம் பகுதியில இருக்குறதா சொன்னப்பவே அது தெரிஞ்சிருச்சு. தாலுகா கூட தப்பா வர்ற மாதிரியா அண்ணன் கதைவிடுவாறு. மேலும் மருத்துவாழ்மலை அனுமார் கொண்டுபோனப்ப விழுந்ததா கதை ஆர்.எஸ்.எஸ் எல்லாம் வர்றதுக்கு முன்னமே உண்டு. இந்த கதையை எனக்கு சொன்னவரு என்னோட சொந்தக்காரர். நான் ஆறுவயசா (1977-78ன்னு நினைக்கிறேன்) இருக்கும் போது தேரூர் பக்கம் எங்க கிராமத்துக்கு போயிருந்தப்ப சொன்னார். அந்த தாத்தாதான் எங்க ஊரு நாவிதரும் கூட.. ஈமச்சடங்கெல்லாம் அவருதான் எங்களுக்கு செய்வாரு. நாய்க்கு மந்திரம் போட்டு வாயைக்கட்ட அவருக்கிட்டதான் போவாங்க. 'அதெல்லாம் உனக்கு சொல்லித்தாரேண்டா' அப்படீன்னவரு போய் சேர்ந்துட்டாரு. இப்ப திரு அண்ணன் சொன்னபிறகுதானே புரியுது. அந்த தாத்தா ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன ஏஜெண்டுன்னு. ஆனா திரு ஏதோ மகாராசா அங்கே மருந்து பயிரிட்டாருன்னு கதை விடுறாரு பாருங்க. இது போக மருந்து கோட்டைன்னு ஒண்ணு இருக்கு, அது தக்கலை பக்கம் இருக்கு. இன்னளவும் அது வெடிமருந்து வச்சுருந்ததாலே அப்படீன்னுதான் சொல்றாங்க. வேறே கதை கிடையாது. அந்த மலைக்கும் மருத்துவாழ்மலைன்னு பேரு கிடையாது.

3:39 AM, January 18, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

தங்கள் திறந்தமனம் கொண்ட அணுகுமுறைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ரவி. அந்த பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன்.

3:41 AM, January 18, 2007  
Blogger லக்கிலுக் said...

//உங்கள் பதிவு நல்ல விளக்கத்தை கொடுத்தது !!! நன்றி !!!//

ரவி! முழுசா படிக்க முடிஞ்சுதா என்ன?

3:44 AM, January 18, 2007  
Anonymous Anonymous said...

http://en.wikipedia.org/wiki/Cave_painting - இந்த லிங்க் போய் பார்த்தேன். வேற மாதிரி இருக்கு :-(

3:50 AM, January 18, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//An alternative and more modern theory, based on studies of more modern hunter-gatherer societies, is that the paintings were made by Cro-Magnon shaman. The shaman would retreat into the darkness of the caves, enter into a trance state and then paint images of their visions, perhaps with some notion of drawing power out of the cave walls themselves. //
இந்த வரிகள் அதில்தான் இருக்கு அனானி. நல்லா பார்த்து படியுங்க. //ஆன்மிகாவேசக் கூத்தாடிகள் (shamans) மாற்று பிரக்ஞை தளங்களில் உலாவிக் கண்டுணரும் ஆன்மிகக்குறியீடுகள் குகை ஓவியங்களில் இடம்பெற்றுள்ளன//இன்று நாம் பயன்படுத்தும் ஆன்மிகக் குறியீடுகளின் வேர் தொல்பழங்கால/கற்காலத்திலிருந்து பெறப்படுகிறது. ஆன்மிக ஆவேசக்கூத்தாடிகள் (shaman) உருவாக்கும் குறியீடுகள் பௌதீகமான அச்ச உணர்வினால் மட்டுமே அல்லது அந்த அச்ச உணர்வே dominant உணர்ச்சியாக ஏற்படுவதல்ல மாறாக வேறு பிரக்ஞை தளங்களில் சஞ்சாரித்து அந்த அக-ஆவேச கூத்தாடிகளால் பெறப்படுபவை என்பது என்வாதம். அதற்கு சான்றாக வேண்டுமென்றால் ஹெண்டர்ஸனையோ கேம்பெல்லையோ அளிக்க முடியும். அல்லது உங்கை. அல்லது ஆன்மிக-ஆவேச கூத்தாடிகளின் அக-தரிசனங்களின் வெளிப்பாட்டிற்கும் இன்றைய நவீன உள-சிகிச்சை முறைக்கும் உள்ள இணைகளை காட்ட வரேலாவையோ கூட.

4:02 AM, January 18, 2007  
Anonymous Anonymous said...

Thought provoking post! Blinldy questioning everything is not the solution for 'pagutharivaatham'. (I) Always have the belief that practices in hinduism do have some meaning behind it.

4:43 AM, January 18, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நான்கு வேதத்தை தூற்றும் ஒரு வரியை காட்டமுடியுமா? கிருஷ்ணனை தூற்றும் ஒரு வரியை? திருமாலை தூற்றும் வரியை?
ஐயாவின் கொடியை பொறுத்தவரையில் அது வெள்ளை நிறம் என்பது கொடுமை. எப்படிங்க இப்படி நாகூசாம பொய் சொல்ல மனசு வருது. காவி தலைப்பாகை உடுத்தி காவி முண்டுடுத்தி காவி கொடியேந்தி வருவோங்கையா நாங்க. இதோ படத்த பாருங்க,
http://wikitravel.org/en/Image:Masi_Orvalam.jpg
இன்னும் புரியும்படி தெளிவா சொன்னா வைகாசி வெள்ளிக்கிழமை காலை சூரிய உதயத்துக்கு முன்னாடி கொடியேத்துவோம். அந்த கொடிக்கு பயன்படுத்துற கொடித்துணிக்கு பேரு கொடிப்பட்டம். ஏழு முழம் நீளம் மூன்று முழம் அகலம். கொடி நல்ல காவி நிறமா இருக்கும். கொடி மரம் அடியில் மாவிலை தர்ப்பை எல்லாம் கட்டியிருக்கும். ஐயாவை திருவிதாங்கூர் அரசனின் ஆட்கள் எத்தனையோ வதை செய்தனர். மூத்திரக்குழியில் தள்ளி அங்கே போட்டு அடித்து சித்திரவதை செய்தனர்.
'மோளுக்குழிக்குள் மொகுமொகனவே புழுக்கள்
தோளு வழி புழுக்கள் தூணி மிகச் சொரியும்
அட்டை மிதக்கும் அரிய தேள் மிதக்கும்
விட்ட நரகு மிகுவாய் புழு மிதக்கும்
நாற்ற துறைகள் நரகத் துறை போலே' இருந்த சிறையில் அன்புருவான ஐயாவை சித்திரவதை செய்தனர்.
'குண்டியிலே குத்தி குனியவிடுவானொருத்தன்
நொண்டியிவ னென்று அடித்தடித்து தானிழுப்பான்
சாணாருக்காக சமைந்தாயோ சுவாமியென்று
வாணாளை வைப்போமோ மண்டிப்பதனிக்காரா
பனையேறி சுபாவம் பட்டுதில்லையென்று சொல்லி' எல்லாம் ஐயாவை கொடுமை செய்தனர் சாதி வெறி பிடித்த மிருகங்கள்.

இந்த சித்திரவதைகளை அறிந்தால்தான் ஐயா வைகுண்டர் சொல்லுகிற அன்புரைகளின் ஆழம் நமக்கு புரியும்:
"பொறுமை பெரிது பெரியோனே என்மகனே
தருமம் பெரிது தாங்கியிரு என் மகனே
எல்லோருக்கும் விளம்பி இரு நீ என் மகனே
பொல்லாதாரோடும் பொறுமையுரை என் மகனே
...
சத்துருவோடும் சாந்தமுடனே இரு
புத்திரரோடும் பேசி இரு என் மகனே"

ஐயா வைகுண்டர் குறித்து முழு நீளக்கட்டுரையை அடுத்தவாரம் எழுதுகிறேன்.

4:50 AM, January 18, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நாம் அதை ஏற்றுக்கொள்கிறோம். மனு ஸ்மிருதி ஸ்மிருதிதான். சரியில்லை என்றால் குப்பையில்தான். வேதத்தின் சிருஷ்டி சூக்தத்தின் அழகே சிருஷ்டியின் மர்மத்தை open-ended கேள்வியாக வைத்திருப்பதுதான். இந்த வாழ்க்கை முறையை சாதீயத்தின் பெயரை சொல்லி ஒட்டுமொத்தமாக அழிக்க நினைக்கிறது ஒரு கும்பல். அதிலிருந்து மீள ஒரே வழி சாதியை முழுமையாக அழித்து இந்து தருமத்தை மீள்நிலை நாட்டுவதுதான். தேவை ஒரு காவிப்புரட்சி.

4:55 AM, January 18, 2007  
Anonymous Anonymous said...

//ரவி! முழுசா படிக்க முடிஞ்சுதா என்ன? //

ஆமாம், ரவி முழுதாக படித்து புரிந்து கொண்டது அவர் திறந்த மனதுடன் இருப்பதால்.....கழக கண்மணிக்குத்தான் மனமே கிடையாதே, அப்பறம் எப்படி படிக்கவும், விளங்கிக்கவும் முடியும்....இங்க கழக போர் வாட்கள் எதாவது பினாத்தி-சண்டை சச்சரவுகளை உருவாக்க மட்டுமே தெரிகிறது..என்ன செய்ய, கழக ஆட்சியில் இன்னும் கமிஷன் வேகம் கூடவில்லை போல.....அல்லது அது பூத் ஏஜெண்ட் வரையில் எட்டவில்லை...ஏதோ ஒருகாரணம்...

4:57 AM, January 18, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

லக்கிலுக் முதன்முறையா நம்ம பக்கம் வந்திருக்கீங்க. வாங்க வாங்க அடிக்கடி வாங்க உங்க கருத்துகளை விமர்சனங்களை காரமா இங்க சொல்லுங்க. திராவிட தமிழர்கள் பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்கள்.

5:12 AM, January 18, 2007  
Anonymous Anonymous said...

பல விடயங்களைத் தெரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது உங்கள் பதிவு.ரவியும் புரியக் கூடியவர்.இந்த ஆரோக்கியமான போக்கு விரும்பத்தக்கது.
யோகன் பாரிஸ்

5:38 AM, January 18, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி யோகன் உங்கள் வரவுக்கும் பதிவுக்கும். ஆமாம் ரவியுடன் ஏற்பட்ட தொடர்பு எனக்கு அவருக்குள் இருக்கும் ஒரு அருமையான நண்பரையும் அறிமுகப்படுத்தியது. இணைந்து வளருகிறோம் விரிகிறோம். சந்தோசமான விசயம்தான்.

5:43 AM, January 18, 2007  
Anonymous Anonymous said...

இஸ்ரேலியர்கள் (யூதர்கள்) இதே போல் திஷிரி என்ற மாதத்தில் harvest festival என்று கொண்டாடுவார்கள்.

அது அவர்கள் கடவுளுக்கு நன்றி சொல்லும் பண்டிகை, பெயர் சுக்கோத்

அது யூதப்பண்டிகை அல்ல என்று எவனாவது சொன்னால் செருப்படி கிடைக்கும்.!

இங்கே பொங்கல் இந்துப்பண்டிகை இல்லை என்றால் "செக்குலர்" பட்டம் கிடைக்கும்.!

8:27 AM, January 18, 2007  

Post a Comment

<< Home