Saturday, April 28, 2007

மா.சிவகுமாரின் அவதூறுகளுக்கு நன்றி

திரு.சிவகுமார் மண்டைக்காட்டு கலவரம் குறித்தும், ஆர்.எஸ்.எஸ் குறித்தும் பல பொய்களை எழுதி வந்தார். ஒவ்வொரு கட்டத்திலும் அவர் சொன்ன பொய்களை தோலுரித்து
காட்டிவந்தேன். இறுதியில் வழக்கம் போல ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்துத்துவம் என்பது பிறப்படிப்படையிலான வர்ண அமைப்புதான். தாழ்த்தப்பட்டவனை அடித்தளத்திலேயே
வைத்திருப்பதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கம் என்று பிரச்சார பொய் சேற்றினை எவ்வித ஆதாரமும் இல்லாமல் எறிந்து விட்டு போகிறார். இது குறித்து இறுதியில் சில
கேள்விகளையும் அன்னார் எழுப்பியுள்ளார். இந்த அபவாத+அறிவின்மை நிரம்பிய கேள்விகளும் கூட ஒருவிதத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் உண்மையான தன்மை குறித்து மக்கள் அறிந்திட ஒரு நல்ல வாய்ப்பினை தந்துள்ளது. அவ்விதத்தில் அவருக்கு நன்றிகளை கூறிக்கொண்டு அவரது கேள்விகளையும் அபவாதங்களையும் அவற்றின் பொருளின்மையையும் காணலாம்:

மா.சி கூறுகிறார்:
'சமஸ்கிருதம்தான் தேவ மொழி, எல்லா இந்துத்துவா வழி செல்பவர்களுக்கும் பொது மொழி' என்றால் அது நிச்சயமாக என் வழி இல்லை...வை அனைத்திலுமே வருணசிரம தர்மத்தை வளர்க்கும், ஒரே மொழியை நிலைநாட்டச் செய்யும், ரு சிறு ஆதிக்க குழுவினரை தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த வழி வகுக்கும் குறிக்கோளில்தான் இந்துத்துவா இயக்கங்கள்
செய்லபடுகின்றன என்பது என்னுடைய கருத்து"

எனது பதில்:
சமஸ்கிருதம் தேவமொழி என கூறவில்லை. இந்த தேசத்தின் மொழி எனக் கூறுகிறோம். அதுவும் ஏதோ இந்துத்துவ வாதிகள் மட்டும் சொல்லும் விசயம் கிடையாது. அனைத்து
தேசியவாதிகளும் கூறும் விசயம்தான். ஸ்ரீ நாராயணகுரு அய்யன் காளி போன்ற ஆன்மிக பெரியவர்கள் மற்றும் சமூக போராளிகள் அந்த மொழியினை படிப்பதன் அவசியத்தை
கூறியுள்ளனர். அண்ணல் அம்பேத்கரும் சுவாமி விவேகானந்தரும் கூறியுள்ளனர். சமஸ்கிருதம் இந்த தேசத்தில் அனைவரும் சொந்தம் கொண்டாட முடிந்த ஆனால் ஒருவரும் ஏகபோக உரிமை கொண்டாட முடியாத ஒரு மொழி என்ற முறையில் அதன் கலாச்சார ஒருமைப்பாட்டு முக்கியத்துவம் புலப்படும். அதன் ஆதிகவி வேடரான வால்மீகி முனிவர். அதன் ஆகச்சிறந்த மகாகவி சூத்திரனான காளிதாசன். மீனவப்பெண்ணின் மகனான வியாசபகவானே அம்மொழியில் மறைகளை தொகுத்தளித்தவர். மறைந்த குடியரசு தலைவர்
கே.ஆர்.நாராயணன் சமஸ்கிருதத்தை "பாரத தேசிய ஒருமைப்பாட்டிற்கு அடையாளமாகவும் அதனை போஷிப்பதாகவும் விளங்கும் மொழி" என சமஸ்கிருதத்தை கூறினார். 'தி சண்டே
ஹிந்துஸ்தான் டைம்ஸ்' பத்திரிகைக்கு 11-செப்டம்பர் 1949 அன்று கொடுத்த பேட்டியில் அண்ணல் அம்பேத்கர் பாரதத்தின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என
கூறியுள்ளார். இதே கருத்தை அவர் பாராளுமன்றத்திலும் 10-செப்டம்பர் 1949 அன்று நடந்த 'அகில இந்திய ஷெல்யூல்ட் வகுப்பு பெடரேஷனின்' எக்ஸிக்யூட்டிவ் கமிட்டியிலும்
தெரிவித்தார். எனவே ஏதோ சமஸ்கிருதம் ஒரு கூட்டத்திற்கு அல்லது ஒரு சாதிக்கு சொந்தமானது எனும் எண்ணம் தவறானது. சமுதாய ஏற்றம் பெறவும் நமது தருமத்தின் மறைகளை நலிவுற்ற மக்கள் படித்து அதில் சாதியம் இல்லை என்பதனை உணரவும் சமஸ்கிருத அறிவு அவர்களுக்கு தேவை. சாதியம் அழிய சமஸ்கிருதம் உதவும். இது ஸ்வாமி விவேகானந்தரின் கருத்தாகும். கூசாமல் பொய் அளந்த மா.சியின் கருத்தை விட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்த அண்ணல் அம்பேத்கர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் கருத்துக்கள் நிச்சயமாக பின்பற்ற தக்கதாகும்.

மா.சி கேட்கிறார்:
"தீண்டாமை ஒழிப்பின் போது இந்து மகாசபையின் நிலை என்ன? கோயில்களில் அனைத்து சாதியினரும் பூசாரி ஆகலாம் என்பது குறித்து இந்துத்துவா இயக்கங்களின் நிலைப்பாடு
என்ன?"
எனது பதில்:
இதைப்போல ஒரு கீழ்த்தரமான வெத்து rhetoric கேள்வியை நீங்கள் காண்பது கடினம். ஆனால் மா.சியின் குணத்துக்கு இது ஒன்றும் அயலான விசயம் கிடையாது. சரி வரலாற்றை பார்ப்போம்.


1: 1928 இல் ரத்னகிரியில் ரத்னகிரியை விட்டு வெளியே செல்லக்கூடாது மற்றும் அரசியலில் ஈடுபடக்கூடாது எனும் நிபந்தனைகளுடன் காவலில் வைக்கப்பட்ட வீர சாவர்க்கர்
மாவட்ட மாஜிஸ்டிரேட்டுக்கு மேல்சாதியினர் மகர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் அனுமதிக்காமல் இருப்பதை எதிர்த்து கடிதம் எழுதுகிறார்.
2: அண்ணல் அம்பேத்கரின் காலாராம் சத்தியாகிரகத்துக்கு ரத்னகிரிக்கு வெளியே செல்ல தடைசெய்யப்பட்ட இந்து மகாசபை தலைவர் வீர சாவர்க்கர் ஆதரவு தெரிவித்தார். தனக்கு
ரத்னகிரியை விட்டு வெளியே செல்ல தடை இல்லாத பட்சத்தில் தானே அம்பேத்கரின் இந்த சத்தியாகிரகத்தில் முதல் ஆளாக கைது ஆகியிருப்பேன் என அவர் எழுதிய கடிதமும்
கோவில் தலித்துகளுக்கு திறந்துவிடப்படவேண்டும் என அவர் எழுப்பிய கோரிக்கையும் அண்ணல் அம்பேத்கர் தன் 'ஜனதா' பத்திரிகையில் வெளியிண்ட்டார். (9 மார்ச் 1931).
3: அண்ணல் அம்பேத்கர் வீர சாவர்க்கருக்கு எழுதுகிற கடிதத்தில் பினவருமாறு குறிப்பிடுகிறார்: "இந்து சமுதாயத்தை சீர்ப்படுத்த தீண்டாமை அழிந்தால் மட்டும் போதாது இன்றைய சாதிமுறையே முழுமையாக அழிய வேண்டும். இதனை உணர்ந்த வெகு சிலருள் நீங்களும் ஒருவர் என்பதனை அறிய எனக்கு ஆனந்தமாக இருக்கிறது."
4: அண்ணல் அம்பேத்கரின் 'ஜனதா' சிறப்பு பதிப்பில் தலித்துகளுக்காக சாவர்க்கர் செய்யும் சேவைகளை குறிப்பிட்டு அவரை 'புத்தருக்கு ஒப்பான பெரியவர்' என கட்டுரை
வெளிவருகிறது (ஜனதா, ஏப்ரல் 1933 சிறப்பு பதிப்பு பக்.2)
5: கேரளத்தில் தலித்துகளின் மேம்பாட்டிற்காக ஆரிய சமாஜம், இந்து மகாசபை மற்றும் இந்து கேரளமிஷன் ஆகியவை ஆற்றும் பணிகளை கேட்டு மகிழ்ந்து பாராட்டுகிறார் ஒப்பற்ற
கேரள தலித் தலைவர் அய்யன் காளி.
6: 1933 இல் பம்பாய் மாநகர தேர்தலில் தனது வேட்பாளராக தலித்தை இந்துமகாசபா நிறுத்துகிறது. இவருக்கு எதிராக காங்கிரஸ் மேல்சாதி இந்துவை நிறுத்துகிறது.
7: 1969 இல் உடுப்பி விஸ்வஹிந்துபரிஷத் மாநாட்டில் முக்கிய இந்து சமய துறவிகள் : வேதாந்த-பௌத்த-ஜைன-சீக்கிய மரபினைச் சார்ந்த அனைவரும் - சமுதாய நடைமுறைகளில் சாதியத்தையும் தீண்டாமையையும் அறவே ஒழிக்க வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. கர்நாடகத்தில் ஒரு பேட்டியில் குருஜி கோல்வல்கர் கூறுகிறார்: "சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் சமமான உரிமைகள் அளிக்கப்பட வேண்டும். சமயச்சடங்குகள், கோவில் வழிபாடு, வேதக்கல்வி -சுருக்கமாக சொன்னால் அனைத்து சமுதாய சமய விஷயங்களிலும்- சமமான உரிமைகள் அளிக்கப்பட வேண்டும். இந்து சமுதாயத்தில் சாதியம் ஒழிய இதுவே ஒரே வழி."

8: பிராம்மணர்களுக்கு மட்டுமே உரிமையாக கருதப்பட்ட கர்மகாண்டங்களை இடஒதுக்கீட்டுடன் அனைத்து சாதியினரும் கற்க வழிவகுக்கிறார் முரளி மனோகர் ஜோஷி. இந்த பட்டம் பெற்ற எவரும் புரோகிதராகவும் அர்ச்சகராகவும் பணியாற்ற முடியும்.
9: 2005 மகரசங்கராந்தி பீகாரின் புகழ்பெற்ற பிகித சிவ ஆலயத்தில் தலித் அர்ச்சகராக நியமிக்கப்படுகிறார்,

10: தேசிய ஷெட்யூல்ட் வகுப்பினர் கமிசனின் சேர்மனாக சிறப்புற பணியாற்றிய தலித் தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்களாக இருந்தவர்கள். அகில உலக இந்து மாநாட்டில்
விசுவ இந்து பரிஷத்தின் சார்பாக உரையாற்றியவர் தலித் வேத அறிஞரான முனைவர். பிஜோய் சங்கர சாஸ்திரி ஆவார்.

11. புகழ்பெற்ற தலித் எழுத்தாளரும் தலித் தலைவருமான நாமதேவ தாஸல் ஆர்,எஸ்.எஸ் தலைவரை சந்தித்து சங்க நூலை வெளியிடுகிறார். சாதியத்தை அழிக்கவும் தேசிய சமரச
உணர்வினை மேம்படுத்தவும் தாம் ஆர்.எஸ்.எஸ் மேடைக்கு வந்திருப்பதாக அவர் கூறுகிறார். சங்க அமைப்பான சமரஸ்தா மஞ்ச்சின் செயல்பாடுகள் மேலும் பரவவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் புகழ்பெற்ற இந்து கோவில்களில் பாரதமெங்கும் தலித் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டுமென கூறியுள்ளார்.
12: ஆர்.எஸ்.எஸ்ஸின் கல்விசேவை நிறுவனமான வித்யாபாரதி 13500 கல்விநிறுவனங்களை நடத்துகிறது. இதில் 94 சதவிகிதம் தலித் பகுதிகளில் அமைந்துள்ளது. இங்கு பயிலும் மாணவர்கள் அன்றாடக்கூலி தொழிலாளர்கள் போன்றவர்களின் குழந்தைகள். அண்மையில் இந்த பள்ளிகள் மூலம் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்த பழைய மாணவர்களின் கூட்டம் பங்களூரில் நடந்தது. அதில் கூலித்தொழிலாளர்களின் மைந்தனாக வித்யா பாரதி முலம் இன்று மருத்துவராக உயர்ந்திருக்கும் டாக்டர். நரேந்திரன் அவரும் சேவா காரியங்களில் ஈடுபட்டு தலித் பகுதிகளில் சேவை செய்வதாக உளம் நெகிழ கூறினார். இதுபோல எத்தனை எத்தனையோ கூறலாம்.


ஆனால் என்ன நமது சிவகுமாருக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையா?என்றாலும் மா.சியின் போலித்தனத்தை பார்த்து வரும் எரிச்சலுக்கு மேலாக அவருக்கு நன்றி சொல்லவேண்டும்.
இல்லாவிட்டால் இதை எழுதியிருக்க மாட்டேன் அல்லவா. நன்றி மா.சி.

16 Comments:

Blogger அருணகிரி said...

அரவிந்தன்,

மிகவும் நேர்மையான, பொட்டில் அடித்தாற்போன்ற பதில். நியாய உணர்வு உள்ள எவரும் தனது கருத்தைக் கட்டாயம் மறு பரிசீலனை செய்வர்/ மாற்றிக்கொள்வர். வெற்று ஸ்டீரியோடைப் வாதங்களை சரக்கில்லாமல் மேடைப்பேச்சாக முழக்கமிடும் தன்மைதான் இதுவரை மா.சி எழுத்துகளில் தெரிகிறது. தரவுகளுடன் கூடிய உங்கள் மறுப்புகளுக்கு மா.சி. என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.

அருணகிரி.

7:52 AM, April 28, 2007  
Blogger மனிதன் said...

மா.சி-க்கு சரியான பதிலடி. ஆதாரங்களுடன் அற்புதமாக அமைந்திருந்தது தங்கள் பதிவு.

தங்கள் பொறுப்புக்கும், உழைப்புக்கும் நன்றி அரவிந்தன் நீலகண்டன்.

நிறைய கோழைகள், நடுநிலை என்ற பெயரில் வசதியாக, பிரச்சனைகளிலிருந்து
தப்பித்து ஒளிந்து தப்பித்துக் கொள்கிறார்கள்.அவர்களுக்கு இது போன்ற பதிலடி தேவைதான்.

தங்களுக்கு இறையருள் கூடட்டும்.
அன்புடன்,
ராமச் சந்திரன்.

8:33 AM, April 28, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி அருணகிரி. நன்றி ராமச்சந்திரன். எத்தனையோ ஸ்வயம் சேவகர்கள் சாதாரண இந்துக்கள் தங்கள் உயிரை பணயம் வைத்தும் மகத்தான தியாகங்கள் செய்தும் நிறைவேற்றும் சேவைகளுக்கு எதிரில் அதை இணையத்தில் தட்டச்சு செய்து ஏற்றும் சிறுபணியையாவது சேதுவின் அணில் போல் செய்திட முடிவதில் சந்தோஷம்தான்.

8:53 AM, April 28, 2007  
Anonymous Anonymous said...

Another best article with very good explanations and proof. Hope Mr. Maa. Si reads this.

Long Live Mr. Arvindan.

4:48 PM, April 28, 2007  
Blogger மா சிவகுமார் said...

அரவிந்தன்,

உங்கள் இடுகையைப் படித்தேன்.

சமஸ்கிருதம் குறித்து என்னுடைய கருத்தில் மாற்றம் எதுவும் இல்லை. தமிழ் மொழியின் மூலம் இறைவனை வழிபட்டு நற்கதி அடைவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றே நம்புகிறேன்.

பேச்சளவில் எவ்வளவு சொன்னாலும் சமஸ்கிருதம் என்பது ஒரு கூட்டத்தாருக்கு ஆதிக்கம் அளிக்கும் கருவியாகவே இருக்கிறது என்பது இன்றைய நடைமுறை உண்மை.

சாதி முறை குறித்து நீங்கள் சுட்டிக் காட்டிய விபரங்கள் நான் அறியாதவை. நன்றி.

இன்னும் தீவிரமாகச் செயல்பட்டு சாதி முறையை ஒழித்து விட்ட பிறகு சாதுக்களையும் சாமியார்களையும் அணிதிரட்டுவதில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும்.

அன்புடன்,

மா சிவகுமார்

4:02 AM, April 29, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//சமஸ்கிருதம் குறித்து என்னுடைய கருத்தில் மாற்றம் எதுவும் இல்லை. தமிழ் மொழியின் மூலம் இறைவனை வழிபட்டு நற்கதி அடைவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றே நம்புகிறேன்.//
சிவகுமார் இறைவனை அடைவதற்கு எந்த மொழியும் தனியுரிமை கோர முடியாது. இறைவனை அடைய சமஸ்கிருதம்தான் மொழி என நான் எங்கு சொன்னேன். பாரத தேசத்தின் கலாச்சார ஒருமைப்பாடு மற்றும் அனைவருக்கும் பொதுவான பாரம்பரிய செழுமை ஆகியவற்றின் அடையாளமாக சமஸ்கிருதம் விளங்குகிறது. எனவே ஒவ்வொரு மாணவனும் சமஸ்கிருதத்தினை அடிப்படை அளவிலாவது அறியும் வாய்ப்பிருப்பது அவசியம். இதனை அறிந்து ஏற்றுக்கொள்ள நீங்கள் காக்கி நிக்கர் போடவேண்டிய அவசியம் கூட இல்லை. மகாத்மா காந்தியின் எழுத்துக்களையோ நேருவின் எழுத்துக்களையோ படித்திருந்தால் போதும்.
//பேச்சளவில் எவ்வளவு சொன்னாலும் சமஸ்கிருதம் என்பது ஒரு கூட்டத்தாருக்கு ஆதிக்கம் அளிக்கும் கருவியாகவே இருக்கிறது என்பது இன்றைய நடைமுறை உண்மை. //
ஸ்ரீ நாராயணகுரு பேச்சளவில் சொன்னவர் அல்ல நடைமுறையில் செயல்படுத்தியவர். என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சமஸ்கிருதம் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் மொழியாக இருக்கிறதென்றால் அதற்கு காரணம் யார்? ஸ்ரீ நாராயணகுருவின் குடும்பத்தில் அவர் இரண்டாவது தலைமுறை சமஸ்கிருத அறிஞர். அவர் மாமனாரும் சமஸ்கிருத அறிஞர். அவரது மாமனார் சமஸ்கிருதம் பயின்றது ஒரு தமிழ் ஐயரிடம். என்றால் சம்ஸ்கிருதத்தை யாரும் படிக்க விடாமல் இல்லை. நாம் வெறுப்பியல் காரணமாக படிக்காமல் பூனை கண்ணை மூடிக்கொண்டதென்றால் இருண்டது உலகம் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். அண்டை மாநிலமான கேரளத்தில் அனைத்து சாதியினரும் சமஸ்கிருதம் படித்து பாரத தத்துவ மரபின் வித்தகர்களாகவும் முன்னெடுத்து செல்பவர்களாகவும் மாறி வருகின்றனர். இன்றைக்கும் குமரிமாவட்டத்தை சார்ந்த பூர்வாஸ்ரமத்தில் நாடார் சாதியைச் சார்ந்த சுவாமி ஆசுதோஷானந்தர் எனும் சமஸ்கிருத புலமை பெற்ற துறவிதான் அனைத்திந்திய விவேகானந்த கலாச்சார கல்விமையத்தின் தலைவராக இருக்கிறார். ச்மஸ்கிருதம் வேண்டாம் என ஒதுக்குவது பாரத பாரம்பரியத்தின் அனைத்து பாகங்களிலிருந்தும் பெற்றுள்ள மரபினை இழப்பதற்கு சமம். அந்த கீழ்த்தர தலைவிதி தமிழனுக்கு தேவையில்லை.

5:10 AM, April 29, 2007  
Anonymous Anonymous said...

மாசி ஐயா,

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளுங்கள். திறந்த மனதுடன் கருத்துக்களை அறிந்து விவாத களத்தில் இரங்குங்கள்.

எதிர் கருத்துக்களை முன்வைத்த போதும் என் கருத்துகளில் நான் மாறவில்லை என்று மொட்டையாக சொல்வதை பார்க்கும்போது தங்கள் முடிவு எந்த ஒரு அடிப்படையும் இல்லாதது என்பதே விளங்குகிறது.

ஒரு சிறந்த காந்தியவாதியாக நீங்கள் உங்களை உயர்த்தவிரும்பினால் முதலில் நீங்கள் நேர்மையையும், வாய்மையையும் மதித்து ஏற்க அறியுங்கள். பாபு காந்திஜி என்றுமே உண்மைக்காக தேடலில் வாழ்நாளை அர்ப்பணித்தார். தன் கருத்துக்களை திறந்த மனதுடன் நோக்கி அதில் புதிய உண்மையால் தெளிவான மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள என்றுமே அவர்கள் தயங்கினதில்லை; வெட்கப்பட்டதில்லை.

உங்களின் பதிவுகள் வெறும் அக்கப்போர் வாதங்களாகவே அறியப்படுகின்றன. இவ்வாதங்களின் எதிர் விளக்கங்கள் பல்லாயிரம் முறை முன்வைக்கப்பட்டதை நீங்கள் அறியவில்லையா இல்லை அதை ஏற்றுக்கொள்ள மனமில்லையா என்று புரியவில்லையா.

தங்களின் மூக்கு வெளித்துக்கொண்டிருக்கிறது.

9:35 AM, April 29, 2007  
Anonymous Anonymous said...

Dear Sri Aravindan,
Your contribution is that of a lion. Not of a squirrel. Every Tamiz knowing realised Hindu should be very proud of you. It is hightime you started writing in English also.

Affectionately,
Malarmannan

10:05 PM, April 29, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

மலர்மன்னன் ஐயா தங்களை போன்ற பெரியவர்களின் ஆசிதான் என்னைப்போன்றவர்களை இயங்க தூண்டுகிறது. வணக்கங்கள்.

12:39 AM, April 30, 2007  
Anonymous Anonymous said...

Aravindan,

Your information on efforts of dalit inclusion in swayam sevak is new. I consider eradication of castism / or stopping misuse of caste is primary for development.

When this becomes the top priority for swayam sevaks then it is constructive.

If rebuilding of temples over other religious structures (what ever the history / belief may be) is higher priority, then these efforts with dalits are just show pieces to convincingly argue Ma. Si kind of citizens.

What were swayam sewaks doing during Keelavenmani, Paramakudi and Srikakulam incidents?

In reality SS are unable to reach out to the grass root dalits or understand thier problem. i am not sure while primary education is a challenge to them, how would they learn sanskrit as a language for thier freedom.

When dalits are not allowed to walk along straight in the streets with caste hindus how do you expect them to get a chance to learn sanskrit even if Joshi provides reservation for it.

This is a tricky item. Joshi will provide reservation for learning sanskrit which every Bhramin knows but will not allow reservation in enginnering and medical colleges.

Aravindan, it is a different life out there. Dalits are not Hindus. They are categorised as Hindus because they are not Muslims, not Christians, not Buddists. Hindus and Dalits do not have common God.

Sorry for bringing in politics. An important point related to this. BJP has cleverly brought in KRN who is not a Dalit and APJK who is not a Muslim by thier lifestyles.

Beauty of Secularim is in accepting the completly diverse religions. Challenge is in sustaining the unity.

5:20 AM, April 30, 2007  
Anonymous Anonymous said...

அரவிந்தன்,

ஏகப்பட்ட செய்திகளை தெரிந்து கொள்ள முடிந்தது...பதிவிற்கு மிக்க நன்றி....

ஏதோ தனக்கு மட்டும் எல்லாம் தெரியும் என்றும், தான் மட்டும்தான் நேரில் பார்த்தது போலவும் எழுதும் திராவிடக்குஞ்சுகளை புரந்தள்ளுங்கள்.....

12:17 AM, May 02, 2007  
Anonymous Anonymous said...

//சமஸ்கிருதம் தேவமொழி என கூறவில்லை. இந்த தேசத்தின் மொழி எனக் கூறுகிறோம்.//

எப்படி வழக்கத்தில் இல்லாத செத்த மொழி ஒரு தேசத்தின் மொழியாகும்? இதில் தான் தங்கள் பார்ப்பனியம் வெளி வருகிறது.

7:54 AM, May 03, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அப்போது சமஸ்கிருதம் தேசியமொழியாக்கப்பட வேண்டும் என கூறிய அண்ணல் அம்பேத்கரும் பார்ப்பனியவாதியா? அல்லது ஸ்ரீ நாராயணகுரு?

8:00 AM, May 03, 2007  
Anonymous Anonymous said...

டாக்டர். அம்பேத்கர் அப்படி கூறியிருக்க மாட்டார்கள். இல்லாததை இருப்பது போல காட்டுவது பார்ப்புக்களுக்கு கை வந்த கலை.

உ.ம் ராமர் பாலத்தை எடுத்து கொள்ளுங்கள். ஏதோ நாசா ராமர் தான் பாலத்தை கட்டியதாக பிச்சாரம் செய்கிறார்கள். ஆனால் உண்மையில்
http://images.jsc.nasa.gov/luceneweb/caption_direct.jsp?photoId=STS056-78-083

என்னுடைய கட்டுரையை படிக்கவும்..

11:43 PM, May 03, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//டாக்டர். அம்பேத்கர் அப்படி கூறியிருக்க மாட்டார்கள். இல்லாததை இருப்பது போல காட்டுவது பார்ப்புக்களுக்கு கை வந்த கலை.//
அண்ணல் அம்பேத்கரின் சமஸ்கிருத ஆதரவு கருத்து அன்றைய தினமே அவரது பேட்டியாக வெளிவந்தது. மட்டுமல்ல அப்போது அதற்காக அம்பேத்கரை சில தலித் தலைவர்கள் எதிர்த்த போது தனது நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பதாக அம்பேத்கர தெரிவித்தார். இதனை அம்பேத்கரினை ச்மஸ்கிருதத்திற்காக எதிர்த்த ஒரு தலித் தலைவரே இதனை அரசுக்கு தெரிவித்தார். அது மட்டுமல்ல அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ள பல விசயங்கள் கண்மூடித்தனமான இந்துத்துவ எதிர்ப்பு கொண்டவர்களுக்கு பிரச்சனையை தோற்றுவிப்பது. உதாரணமாக காவிக்கொடியை தேசியக்கொடியாக்க வேண்டுமென கோரி மக்கள் இயக்கம் நடத்தப்படுவதற்கு தனது ஆதரவு உண்டு என கூறியவர் அம்பேத்கர் என்பது உங்களுக்கு நம்ப இயலாத விசயமாக இருக்கலாம். அல்லது இஸ்லாமுக்கு மாறக்கூடாது என அண்ணல் அம்பேத்கர் தலித் சமுதாயத்துக்கு எழுதிய கடிதம் அல்லது பாரத தேசியத்துக்கு இஸ்லாம் எதிர்மறையானது என கூறியது...
இராமர் பாலத்தை பொறுத்தவரையில் எனது கருத்துகளை நீங்கள் இந்த மாதிரி சாதி சாயம் பூசி ஆபாசமாக குதிப்பதற்கு சில ஆண்டுகள் முன்னரே (அக்டோ பர் 2002 இல்) எழுதியிருக்கிறேன்:
பார்க்கவும்:
இங்கே
இங்கே

7:31 AM, May 04, 2007  
Anonymous Anonymous said...

நன்றி அரவிந்தன். ஆனால் இன்று உங்கள் ஆர்.எஸ்.எஸ் அதன் வழித்தோன்றல்களும் இன்று மீண்டும் மதக்கலவரத்தை தூண்டுவதை வேடிக்கை பார்க்காமல் மீண்டும் தாங்கள் ஒரு பதிவு போடலாம். ஏன் இந்த அமைதி? அதே போல் அண்ணல் அம்பேத்கர் பற்றி நீங்கள் கூறும் செய்திக்கு ஆதாரம் உள்ளதா? மீண்டும் ஆர்.எஸ்.எஸ் வலையை சுட்டிக்காட்டாதீர். அண்ணல் அம்பேத்கர் பின் ஏன் புத்த மதத்தை ஏன்? தழுவினார்? மீண்டும் மீண்டும் ஆதாரம் இல்லாமல் ஒரு பொய்யை கூறினால் அது உண்மையாகாது.

டாக்டர். அம்பேத்கர் அப்படி கூறியிருக்க மாட்டார்கள். இல்லாததை இருப்பது போல காட்டுவது பார்ப்புக்களுக்கு கை வந்த கலை. இது மறுக்க முடியாத உண்மை.
http://www.mukto-mona.com/Articles/ram_puniyani/ambedkar_rss.htm

1:39 AM, May 05, 2007  

Post a Comment

<< Home