Friday, June 01, 2007

ஏசு - வரலாற்றடிப்படையும் அப்பாலும்: பரிசுத்த ஆவி

கிறிஸ்தவ கலையில் வெள்ளை புறாவின் வடிவில் பரிசுத்த ஆவி காட்டப்படுகிறது. ஏசு கதையில் அவரது பிறப்பில் பரிசுத்த ஆவி முக்கிய பங்கு வகிக்கிறது. லூக்காவில் பரிசுத்த ஆவி ஏசுவின் தாயான கன்னி மரியாள் மீது கவிந்து அவளைக் கர்ப்பமாக்குவது குறித்து தேவதூதன் கூறுகிறார்.
கத்தோலிக்க பொதுஜன கலையில் காப்ரியேல் மேரிக்கு அவர் தேவ அன்னை ஆகப்போவதை உரைக்கும் காட்சி: யாஹீவா தேவனின் வல்லமை பரிசுத்த ஆவியின் புறாவடிவாக
"பரிசுத்த ஆவி உன்மேல் வரும். உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்"(லூக்கா 1:35)
மத்தேயு எழுதியதாகக் கூறப்படும் ஏசு கதையில் கூறுகையில் ஏசு கிறிஸ்துவின் பிறப்பின் விவரமாக
"...மரியாள் யோசேப்பிற்கு நியமிக்கப்பட்டிருக்கையில் அவர்கள் கூடிவரும் முன்னே அவள் பரிசுத்த ஆவியினால் கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது."(மத்தேயு 1:18)
என்கிறார். கிறிஸ்தவ ஓவியங்களில் இந்த காட்சி காட்டப்படுகையில் பரிசுத்த ஆவி அல்லது பரிசுத்த ஆவியின் ஆற்றல் ('உன்னதமானவருடைய பலம்') ஒரு புறாவாக காட்டப்படுகிறது. இங்கு பரிசுத்த ஆவி ஆண்தன்மையுடன் இயங்குகிறது என்பது வெளிப்படை. அதே நேரத்தில் பரிசுத்த ஆவியின் புறாவடிவம் ஏசுகதையின் பிறிதொரு இடத்தில் காட்டப்படுகிறது.
15 ஆம் நூற்றாண்டு பெல்ஜிய கத்தோலிக்க ஓவியத்தில் அதே காட்சி: ஆண் தெய்வ வல்லமையாக பரிசுத்த ஆவி
"அவர் ஜலத்திலிருந்து கரையேறியதும் வானம் திறக்கப்பட்டதையும் ஆவியானவர் புறாவைப் போல தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்"
என நான்கு ஏசுகதைகளில் பழமையான மாற்கு தெரிவிக்கிறது (மாற்கு 1:10). சுவாரசியமான விசயமென்னவென்றால் இந்த ஏசுகதையில் 'கன்னி கருவுற்று ஏசுவைப் பெற்றது' குறித்து கூறப்படவில்லை.

ஆற்று நீரில் ஞானஸ்நானம் பெற்ற ஏசு மீது பரிசுத்த ஆவி புறாவடிவில் இறங்குவது குறித்து மாற்கு மட்டுமின்றி மத்தேயு, லூக்கா மற்றும் யோவான் ஆகியோர் எழுதியதாக கருதப்படும் ஏசு கதைகளும் கூட தெரிவிக்கின்றன.

"இயேசு ஞானஸ்நானம் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார்.அப்பொழுது, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. " (மத்தேயு 3:16-17)
அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார். அப்பொழுது,"என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. (மாற்கு 1:10-11)
"தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது 'தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர்' தூய ஆவி இறங்கி யார் மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் ஞானஸ்நானம் கொடுப்பவர்" என்று என்னிடம் சொல்லியிருந்தார். நானும் கண்டேன் இவரே இறைமகன் எனச் சான்றும் கூறி வருகிறேன்." (யோவான் 1:32-34)
புறாவடிவ பரிசுத்த ஆவி நீரிலிருந்து எழும் ஏசுவை தன் நேசத்துக்குரிய மகன் என அறிவிப்பதை நோக்குக. மேரி அல்லது மரியாள் என நாம் கூறும் பெயர் எபிரேய மொழியில் மிரியம் என்பதன் கிரேக்க இணையான மரியா என்பதாகும். இந்த எபிரேய பெயருக்கு பொருள் நீர் என்பதாகும். ஆக, நீரிலிருந்து எழும் ஏசுவினை பரிசுத்த ஆவி புறாவாக வந்து வெளிப்படையாக தன் பிரிய மகனாக அறிவிக்கிறது என்றால் நீர் பெயர் தாங்கிய நங்கையின் மீது கவிந்து அதே பரிசுத்த ஆவி ஏசுவின் பௌதீக உடலை இரகசியமாக உருவாக்குகிறது. இதில் பின்னது ஏசுகாதையில் காலத்தால் பின்னிணைக்கப்பட்டது என்பது தெளிவாகுவதுடன் மேரி என்கிற பாத்திரமே குறியீட்டுத்தன்மையுடன் உருவாக்கப்பட்டது என்பதையும் காட்டுகிறது.

தொடக்க ஏசுகாதையில் மேரியின் பாத்திரம் இல்லாத போது அல்லது இறையியல் முக்கியத்துவம் அடையாத போது பரிசுத்த ஆவியே ஒரு தாய் தெய்வத்தன்மையுடன்தான் ஏசு தொன்மத்தில் தன் பங்கினை அளித்திருக்க வேண்டும். ஏனெனில் பரிசுத்த ஆவியின் குறியீடாக புறா தேர்ந்தெடுக்கப்பட்டது கிறிஸ்தவ இறையின் தனித்தன்மை அல்ல மாறாக கற்காலம் தொடங்கி தொடர்ந்து நிலவி வந்தது மட்டுமன்றி தொடர்ந்து பரிணமித்து வந்ததோர் பெண் தெய்வ வழிபாட்டிலிருந்து கிறிஸ்தவ தொன்மம் பெற்றுக்கொண்டதாகும்.

கிமு 12000 காலகட்ட மந்திரகோல் ஓவியத்தில் புறா/பறவை தெய்வீக உரு
தெற்கு பிரான்ஸின் குகை ஓவியங்களில் (கிமு 18000-14000) பிரபஞ்ச முட்டையை தன்னுள் கொண்டுள்ள தாய் தெய்வம் சித்தரிக்கப்படுகிறாள்.பிரபஞ்சமளாவிய அன்னையை பறவையாக சித்தரிக்கும் சமயப்பண்பாடு புதியகற்கால வழிபாட்டு முறைகளில் காணப்படுகிறது.
கிமு 6000 -த்தைச் சார்ந்த பறவை தாய் தெய்வ வடிவம் கிரேக்கத்தின் செஸ்க்லோ
அவள் தன்னுள் பிரபஞ்ச முட்டையை கருவாக சுமப்பதாக ஐதீகம். வானின் நீருலகில் ஆட்சி புரிபவளாக, உயிரளிக்கும் நீரினை வழங்குபவளாக பறவை தாய் வழிபடப்படுகிறாள்.
கிரேட்டே தீவின் கிறிஸ்துவுக்கு முந்தைய மினோவன் பண்பாட்டு புறாத் தேவி தெய்வ வடிவங்கள்
கிமு 12000 காலகட்டத்தைச் சார்ந்த புகழ்பெற்ற லஸ்காவுஸ் பிரெஞ்சு குகை ஓவியங்களில் தெய்வாவேச கூத்தாடி (shaman) கைப்பிடிகளில் புறாவடிவம் காணப்படுகிறது. கிமு 6000 -த்தைச் சார்ந்த பறவை தாய் தெய்வ வடிவம் கிரேக்கத்தின் செஸ்க்லோ எனுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிமு ஐந்தாம் நூற்றாண்டின் கிரேக்க சிற்பங்களில் பெர்ஸெபோன் தேவி தன் சிம்மாசனத்தில் புறாவுடன் அமர்ந்திருக்கிறாள்.
கையில் புறாவுடன் பெர்ஸெபோன் தேவி சிம்மாசனத்தில்
கனானைட் மக்கள் சுமேரிய இனானா/இஷ்தார் தேவியை அஷ்தார்தா தேவி என வணங்கி வந்தனர். இவளது சின்னமாகவும் புறா விளங்கியது.
பண்டைய மத்தியகிழக்கின் ஆகச்சிறந்த தேவி வழிபாடாக இதுவே அமைந்திருந்தது. இவளது வழிபாடு யூதர்களிடையேயும் பிரபலமடைந்ததும் யஹீவாவின் வழிபாட்டுக்கு அது முரணாக அமைந்ததும் அதனால் யஹீவா மத ஆச்சாரியர்கள் ஆத்திரமடைந்ததும் யூதவிவிலியத்தில் கூறப்பட்டுள்ளது (உதாரணமாக: 1 ராஜாக்கள் 11:5) ஆனால் யூத மறைஞான மரபுகளில் ஷெஹினா, சோஃபியா ஆகிய அம்சங்களில் இவள் வழிபடப்பட்டாள்.
உச்சியில் காட்டப்படும் புறா கிறிஸ்தவ ஓவியத்தின் வேர்கள் சுமேரிய எகிப்திய சிற்ப-ஓவியங்களில் காணலாம்: 1. சுமேரிய தேவி கோவில் முகப்பு 2.நெபர்திடி எனும் எகிப்திய அரசியின் கல்லறைக்கு செல்லும் வாசல் முகப்பு ஓவியம்
இதுவே பின்னர் கத்தோலிக்க மதத்திலும் நீடித்தது.
பொது பிரக்ஞையில் மைக்கலேஞ்சலோவின் ஆதாமின் சிருஷ்டி குறித்த ஓவியம்
சிஸ்டைன் சேப்பலில் உள்ள மைக்கலேஞ்சலோவின் புகழ்பெற்ற ஓவியத்தில் யஹூவா தேவனின் ஒருவிரல் ஆதாமை தொட்டிருக்க மறு கை ஒரு விண்ணக பெண்ணை அணைத்திருக்கும். இன்னமும் படைக்கப்படாத ஏவாள் என்றும் இறைஞான தேவியான சோஃபியா எனவும் இது கலை விமர்சகர்களால் வியாக்கியானிக்கப்படுகிறது.
யஹீவாவின் இறைசக்தியாக மட்டுமன்றி சோஃபியா யஹீவாவின் தாயாகவும் ஞான கிறிஸ்தவ மரபில் (கத்தோலிக்க சபையால் அழிக்கப்பட்ட க்னாஸ்டிக் மரபில்)கருதப்படுகிறாள்
இது சோஃபியா எனில் கிறிஸ்தவத்தில் பழமையான தேவி வழிபாட்டுத் தாக்கமும் தொடர்ச்சியும் கத்தோலிக்க சபையினையும் மீறி இருந்ததையேக் காட்டுகிறது.

பரிசுத்த ஆவியின் கனிகளாக/பரிசுகளாக கருதப்படும் ஏழு குணங்களில் தலையானது ஞானமாகும் (ஸோஃபியா). பண்டைய கிறிஸ்தவ மரபில் இவை ஏழும் புறாக்களாகவே சித்தரிக்கப்படுவதைக் காணலாம். கத்தோலிக்க ஞானோபதேசத்தில் ஏழு புறாக்களின் இந்த சித்தரிப்பும் கூட கிரேக்க புராண வேர்கள் கொண்டதுதான். வேட்டைக்கார ஓரையன் ஏழு சகோதரிகளைக் கண்டு ஆசை கொண்டு அவர்களை ஏழு ஆண்டுகளாக பின் தொடர்ந்தான். ஸீயஸ் தெய்வம் அந்த ஏழு சகோதரிகளையும் ஏழு புறாக்களாக்கி விண்மீன்கள் நடுவே வைத்தார் என்றும் இவையே கார்த்திகை நட்சத்திர தொகுதி என்பது கிரேக்க புராணம். கார்த்திகை நட்சத்திர தொகுதி கிரேக்க மொழியில் Pleiades எனப்படும். இதன் பொருள் 'புறாக்கூட்டம்' (peleiades) என்பதாகும்.

மத்தியகால கிறிஸ்தவ ஓவியத்தில் பரிசுத்த ஆவியின் ஏழுபரிசுகள் ஏழு புறாக்களாக : இது கிரேக்க தொன்மத்திலிருந்து பெறப்பட்டது
ஆக, கிறிஸ்தவ கதையாடலில் ஆண் தன்மையுடன் மாற்றப்பட்ட பரிசுத்த ஆவி மற்றும் அதன் குறியீடான பறவை -குறிப்பாக புறா வடிவ- ஆகியவற்றின் வேர்கள் பண்டைய கிறிஸ்தவமல்லாத தொன்மங்களில் இருப்பதுடன் மேரி எனும் பெயரே தொன்மக் குறியீட்டுத் தன்மை கொண்டதோர் பாத்திரப் படைப்புக்கான ஆதாரமாக விளங்குகிறது. இனி ஏசு சைத்தானை எதிர்கொள்ளும் விஷயங்களையும் அதிகாரபூர்வ கிறிஸ்தவத்தின் ஏசு கதையாடலில் சைத்தான் எனும் பாத்திரம் பயன்படுத்தப்பட்டுள்ள விதத்தையும் காணலாம்.

Labels: , , , ,

4 Comments:

Anonymous Anonymous said...

புறாக்களில் அமைதிப்புறாவாக காட்டப்படுவது டோவ் என்றழைக்கப்படும் புறாவா, அல்லது பிஜியன் என்றழைக்கப்படும் புறாவா?

அல்லது ஏதோ ஒரு புறா என்ற வகையில் சமாதானப்புறா பயன்படுத்தப்படுகிறதா?

நேரு காலம் தொடங்கி விழாக்களில் பறக்கவிடப்படுபவை பிஜியன்வகை புறாக்களாகவே இருக்கின்றன.

இப்புறாக்களைப்போல வன்முறையான அதீத தொந்தரவு தருகின்ற பறவைகள் குறைவு. இப்புறாக்களுக்கு "பறக்கும் எலிகள்" என்று பெயர் வைக்கும் அளவு இவை அவப்பெயர் பெற்றவை.

2:15 AM, June 03, 2007  
Anonymous Anonymous said...

இயேசுவின் வாழ்க்கையில் 12வயது முதல் 24வயது வரை நடந்த சம்பவங்கள் பற்றிய தகவல்கள் பைபிளில் இல்லை என்று கூறப்படுகிறது. இக்காலகட்டத்தில் அவர் இந்தியா சென்று வேதங்களையும் ஆன்மீகத்தையும் கற்றதாக The Unknown Life of Jesus Christ மற்றும் The Aquarian Gospel of Jesus Christ ஆகிய புத்தகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வலைப்பக்கத்தையும் பார்க்கவும். இத்தகவல்கள் ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் சுவாமி அபேதானந்தர் மற்றும் சிலர் இயேசுவின் இந்திய வாசத்தை உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது எவ்வளவு தூரம் உண்மை? இவ்விஷயங்கள் பற்றி உங்கள் கருத்தென்ன?

3:24 AM, June 04, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அனானி, தாங்கள் அளித்த ச்ச்ட்டி ஒன்றில் ஈஸின்கள் குறித்து கண்டிருந்தது. ஈஸீன்கள் பலர் நினைப்பது போல மிஸ்டிக் செக்ட் கிடையாது. அது ஒரு தூய்மைவாத யூதமும் ironically ஸராதுஷ்டிர இருமைத்துவமும் இணைந்த ஒரு குழு. எனவே ஏசு ஈஸின் மெம்பர் அதனால் அவர் மறைஞானி என்பது ஜல்லி. ஏசுவின் இமாலய/இந்திய வருகையும் pious ஜல்லிகள்தான். வரலாற்றாதரங்கள் இல்லை.

8:14 AM, June 04, 2007  
Anonymous Anonymous said...

விவேகானந்தருடைய ஒரு கடல் பயணத்தின் போது, கப்பல் ஒரு தீவுக்கருகில் சென்றுகொண்டிருந்தது.

திடீரென்று அவருக்கு ஒரு ஆன்மீக அனுபவம் ஏற்பட்டது.

அதில் ஒரு குறிப்பிட்ட வகை பௌத்த பிரிவைச் சேர்ந்த துறவிகள் தோன்றினர்.

அவர்கள் அவரிடம், அவர்களுடைய கருத்துக்களை ஏசு என்கிற கற்பனைப்படைப்பின் கருத்துக்களாகத் திரித்துவிட்டதாகவும், அந்த தீவில்தான் இவர்கள் வாழ்ந்துவந்ததாகவும் கூறினர்.

இருப்பினும் ஏசு என்கிற ஏற்படுத்தப்பட்ட உருவத்திற்கு அளிக்கப்படுகிற நல்ல கருத்துக்கள் இவ்வுண்மை வெளிப்படுவதால் பாதிக்கப்படலாம் என்பதால், விவேகானந்தர் இதைப்பற்றி அதிகம் பேசவில்லை.

அபேதானந்தரின் அந்த கட்டுரையைப் படிப்பவர்களுக்கு ஏசு என்கிற ஒரு வரலாற்று மனிதர் இந்தியாவிற்கு வந்து ஆன்மீக நுணுக்கங்களைக் கற்றுத்தேர்ந்தார் என்பதைவிட, பல ஞானிகள் இந்தியாவிற்கு வந்து ஆன்மீக நுணுக்கங்களைக் கற்றுத்தேர்ந்தனர் என்கிற உணர்வே ஏற்படும்.

பனித்துளிக்கும் அங்கனமே ஏற்பட்டது.

7:49 AM, June 06, 2007  

Post a Comment

<< Home