ஏசு - வரலாற்றடிப்படையும் அப்பாலும்: பரிசுத்த ஆவி


"பரிசுத்த ஆவி உன்மேல் வரும். உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்"(லூக்கா 1:35)மத்தேயு எழுதியதாகக் கூறப்படும் ஏசு கதையில் கூறுகையில் ஏசு கிறிஸ்துவின் பிறப்பின் விவரமாக
"...மரியாள் யோசேப்பிற்கு நியமிக்கப்பட்டிருக்கையில் அவர்கள் கூடிவரும் முன்னே அவள் பரிசுத்த ஆவியினால் கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது."(மத்தேயு 1:18)என்கிறார். கிறிஸ்தவ ஓவியங்களில் இந்த காட்சி காட்டப்படுகையில் பரிசுத்த ஆவி அல்லது பரிசுத்த ஆவியின் ஆற்றல் ('உன்னதமானவருடைய பலம்') ஒரு புறாவாக காட்டப்படுகிறது. இங்கு பரிசுத்த ஆவி ஆண்தன்மையுடன் இயங்குகிறது என்பது வெளிப்படை. அதே நேரத்தில் பரிசுத்த ஆவியின் புறாவடிவம் ஏசுகதையின் பிறிதொரு இடத்தில் காட்டப்படுகிறது.

"அவர் ஜலத்திலிருந்து கரையேறியதும் வானம் திறக்கப்பட்டதையும் ஆவியானவர் புறாவைப் போல தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்"என நான்கு ஏசுகதைகளில் பழமையான மாற்கு தெரிவிக்கிறது (மாற்கு 1:10). சுவாரசியமான விசயமென்னவென்றால் இந்த ஏசுகதையில் 'கன்னி கருவுற்று ஏசுவைப் பெற்றது' குறித்து கூறப்படவில்லை.
ஆற்று நீரில் ஞானஸ்நானம் பெற்ற ஏசு மீது பரிசுத்த ஆவி புறாவடிவில் இறங்குவது குறித்து மாற்கு மட்டுமின்றி மத்தேயு, லூக்கா மற்றும் யோவான் ஆகியோர் எழுதியதாக கருதப்படும் ஏசு கதைகளும் கூட தெரிவிக்கின்றன.
"இயேசு ஞானஸ்நானம் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார்.அப்பொழுது, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. " (மத்தேயு 3:16-17)
அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார். அப்பொழுது,"என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. (மாற்கு 1:10-11)
"தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது 'தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர்' தூய ஆவி இறங்கி யார் மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் ஞானஸ்நானம் கொடுப்பவர்" என்று என்னிடம் சொல்லியிருந்தார். நானும் கண்டேன் இவரே இறைமகன் எனச் சான்றும் கூறி வருகிறேன்." (யோவான் 1:32-34)புறாவடிவ பரிசுத்த ஆவி நீரிலிருந்து எழும் ஏசுவை தன் நேசத்துக்குரிய மகன் என அறிவிப்பதை நோக்குக. மேரி அல்லது மரியாள் என நாம் கூறும் பெயர் எபிரேய மொழியில் மிரியம் என்பதன் கிரேக்க இணையான மரியா என்பதாகும். இந்த எபிரேய பெயருக்கு பொருள் நீர் என்பதாகும். ஆக, நீரிலிருந்து எழும் ஏசுவினை பரிசுத்த ஆவி புறாவாக வந்து வெளிப்படையாக தன் பிரிய மகனாக அறிவிக்கிறது என்றால் நீர் பெயர் தாங்கிய நங்கையின் மீது கவிந்து அதே பரிசுத்த ஆவி ஏசுவின் பௌதீக உடலை இரகசியமாக உருவாக்குகிறது. இதில் பின்னது ஏசுகாதையில் காலத்தால் பின்னிணைக்கப்பட்டது என்பது தெளிவாகுவதுடன் மேரி என்கிற பாத்திரமே குறியீட்டுத்தன்மையுடன் உருவாக்கப்பட்டது என்பதையும் காட்டுகிறது.
தொடக்க ஏசுகாதையில் மேரியின் பாத்திரம் இல்லாத போது அல்லது இறையியல் முக்கியத்துவம் அடையாத போது பரிசுத்த ஆவியே ஒரு தாய் தெய்வத்தன்மையுடன்தான் ஏசு தொன்மத்தில் தன் பங்கினை அளித்திருக்க வேண்டும். ஏனெனில் பரிசுத்த ஆவியின் குறியீடாக புறா தேர்ந்தெடுக்கப்பட்டது கிறிஸ்தவ இறையின் தனித்தன்மை அல்ல மாறாக கற்காலம் தொடங்கி தொடர்ந்து நிலவி வந்தது மட்டுமன்றி தொடர்ந்து பரிணமித்து வந்ததோர் பெண் தெய்வ வழிபாட்டிலிருந்து கிறிஸ்தவ தொன்மம் பெற்றுக்கொண்டதாகும்.







பரிசுத்த ஆவியின் கனிகளாக/பரிசுகளாக கருதப்படும் ஏழு குணங்களில் தலையானது ஞானமாகும் (ஸோஃபியா). பண்டைய கிறிஸ்தவ மரபில் இவை ஏழும் புறாக்களாகவே சித்தரிக்கப்படுவதைக் காணலாம். கத்தோலிக்க ஞானோபதேசத்தில் ஏழு புறாக்களின் இந்த சித்தரிப்பும் கூட கிரேக்க புராண வேர்கள் கொண்டதுதான். வேட்டைக்கார ஓரையன் ஏழு சகோதரிகளைக் கண்டு ஆசை கொண்டு அவர்களை ஏழு ஆண்டுகளாக பின் தொடர்ந்தான். ஸீயஸ் தெய்வம் அந்த ஏழு சகோதரிகளையும் ஏழு புறாக்களாக்கி விண்மீன்கள் நடுவே வைத்தார் என்றும் இவையே கார்த்திகை நட்சத்திர தொகுதி என்பது கிரேக்க புராணம். கார்த்திகை நட்சத்திர தொகுதி கிரேக்க மொழியில் Pleiades எனப்படும். இதன் பொருள் 'புறாக்கூட்டம்' (peleiades) என்பதாகும்.

Labels: Holy Ghost, Jesus, Mary, Mother Goddess roots, Mythology

