Thursday, May 13, 2010

நாகர்கோவில் புத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்-4

சிலப்பதிகாரத் தமிழகம்
ஆசிரியர்: சாமி. சிதம்பரனார்
முதல் பதிப்பு: 1958
அறிவுப்பதிப்பகம்: முதல் பதிப்பு 2008
பக்கங்கள்: 268



நூலிலிருந்து:
சிலப்பதிகாரத்தை வைத்துக் கொண்டு சிலர் வேற்றுமைப் பேச்சுப் பேசுகின்றனர். தமிழர் நாகரிகம் தனிப்பட்டது; தென்னாட்டு நாகரிகம் வேறு; ஆரியர் நாகரிகம் வேறு; வடநாட்டு நாகரிகம் வேறு என்றெல்லாம் பேசுகின்றனர். இவ்வாறு பேசி, அமைதியுள்ளம் படைத்த தமிழ் மக்கள் உள்ளத்திலே ஆத்திரத்தையும் வெறுப்பையும் திணிக்க முயல்கின்றனர். சிலப்பதிகாரத்தைப் படிப்போர் இத்தகையோரின் முயற்சிக்கு இரையாக மாட்டார்கள் என்பது உறுதி.

சிலப்பதிகாரத்தைப் பொறுத்தவரையிலும் பிரிவினைப் பேச்சுக்கு இடமேயில்லை. பாரத நாட்டு மக்கள் அனைவரும் ஒரே பண்பாடுள்ளவர்கள் என்பதற்குத்தான் சிலப்பதிகாரம் ஆதரவு அளிக்கின்றது. இந்த ஒற்றுமைப் பண்பாட்டைத்தான் சிலப்பதிகார ஆசிரியர் உரைக்கின்றார். இந்நூலின் மங்கல வாழ்த்து முதலில் திங்களையும், இரண்டாவது ஞாயிற்றையும், மூன்றாவது மழையையும் போற்றுகின்றது. சந்திரன், சூரியன், மழை இவைகளை இந்திய நாட்டு மக்கள் அனைவரும் வணங்கி வழிபட்டார்கள். வட நூல்களிலும் வேதங்களிலும் சந்திர, சூரிய, வருண வணக்கப்பாடல்களைக் காணலாம். வருணனை வணங்குவதும், மழையை வணங்குவதும் ஒன்றேதான்.

சிலப்பதிகார காலத்திலேயே இந்திர விழாவைப் பற்றிக் கூறப்படுகின்றது. தேவர்களுக்கு அரசனாகிய இந்திரனைப் பற்றி வடநூல்களும் வேதங்களும் கூறுகின்றன. இந்திரனைக் குறித்த விழாக்கள், வேள்விகள் வடநாட்டிலும் நடைபெற்றன; தென்னாட்டிலும் நடைபெற்றன. இந்திரனை மருத நிலத்து வழிபடு தெய்வமாகக் கொண்ட மக்கள் தங்களை இந்திரகுலத்தோர் என சொல்லிக்கொண்டன. இன்றும் தமிழகத்தில் இந்திர குலத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். இந்திரன் தமிழர்களாலும் வணங்கப்பட்ட தெய்வம்; வடவர்களாலும் வணங்கப்பட்ட தெய்வம்; பாரத நாட்டு பழந்தெய்வம்.

மற்றும் சிவபெருமான், திருமால், முருகன், பலதேவன், காளி, மன்மதன், இலக்குமி, நாமகள், பிரமன், இராமன், கிருஷ்ணன், வாமனன், திரிவிக்கிரமன் முதலிய தெய்வங்களைத் தமிழரும் வணங்கினர்; ஆரியர் என்று சொல்லப்படும் வடவரும் வணங்கினர்.

இராமாயணம், பாகவதம், பாரதம், கந்த புராணம் போன்ற கதைகளை வடவரும் போற்றிப் பாராட்டுகின்றனர். சிலப்பதிகாரத் தமிழர்களும் போற்றிப் பாராட்டுகின்றனர்....வடதிசையைத் தமிழர்கள் "புண்ணிய திசை"யென்று போற்றியிருக்கின்றனர்.புண்ணிய திசைமுகம் போகிய அந்நாள் (இந்திர விழவு.94) என்பதனால் இதைக் காணலாம்.

பொதியத்தையும் இமயத்தையும் தமிழர்கள் ஒன்றாகவே கருதினர். காவிரியாறும் கங்கை நதியும் ஒரே விதமான புனித நதிகள் என்றே போற்றினர்.

"அழியாத சிறப்புடைய பொதியமலையிலே கல் எடுத்தாலும் சரி, சேரர்களின் வில் முத்திரையைப் பெற்ற பெரிய இமயமலையிலே கல் எடுத்தாலும் சரி - அது கண்ணகியின் உருவம் அமைப்பதற்கு ஏற்றதாகும். கங்கையாகிய பெரிய ஆற்றிலே நீர்ப்படை செய்தாலும், காவிரி ஆற்றிலே நீர்ப்படை செய்தாலும் ஒரே சிறப்புடையதுதான்.

ஒல்கா மரபின் பொதியில் அன்றியும்
வில்தலைக் கொண்ட வியன்பேர் இமயத்துக்
கல்கால் கொள்ளினும் கடவுள் ஆகும்;
கங்கைப்பேர் யாற்றினும் காவிரிப் புனலினும்
தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்து
(காட்சி. 116-120)இவ்வடிகள் மேலே கூறிய உண்மையை விளக்கின.

தென்னாடுடைய சிவனே போற்றி என்று வணங்கப்பட்டாலும் அச்சிவபெருமான் இருக்கும் இடம் திருக்கைலாயம். அது வடநாட்டில் உள்ளது; இமயமலையின் மேல் இருப்பது என்ற நம்பிக்கை தமிழரிடமும் உண்டு; வடவரிடமும் உண்டு. மந்திரத்திலே தமிழருக்கும் நம்பிக்கை உண்டு; வடவருக்கும் நம்பிக்கை உண்டு.

நால்வகை வருணங்கள் வடநாட்டிலும் உண்டு; அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வகைப் பிரிவுகள் தமிழ்நாட்டிலும் உண்டு.

வடநாட்டில் வடமொழி வேதங்கள் தெய்வீகத்தன்மையுள்ளவைகளாக மதிக்கப்பட்டன. நான்முகனால் இயற்றப்பட்டனவாக எண்ணப்பட்டன. தென்னாட்டிலும் அவ்வாறே எண்ணப்பட்டன. வடநாட்டிலும் வேதங்கள் ஓதப்பட்டன. தென்னாட்டிலும் வேதங்கள் ஓதப்பட்டன.

வடநாட்டிலும் வேத வேள்விகள் நடைபெற்றன; தமிழகத்திலும் வேதவேள்விகள் நடைபெற்றன.

...பாரத நாட்டுப் பண்பாட்டை விளக்கும் நூல்தான் சிலப்பதிகாரம். சிலப்பதிகார காலத்திலே இது தமிழர் பண்பு இது ஆரியர் பண்பு என பிரிக்கமுடியாமல் இருவர் பண்பாடும் ஒரே பண்பாடாகத்தான் திகழ்ந்தது.

வடவரும் தென்னவரும் பழக்க வழக்கங்களிலே வேறுபட்டிருக்கலாம்; மொழியிலே வேறுபட்டிருக்கலாம்; நடைஉடைகளில் வேறுபட்டிருக்கலாம். ஆனால், உள்ளத்திலே - நம்பிக்கைகளிலே - அறநெறியிலே வேறுபட்டவர்கள் அல்லர். இவ்வுண்மையைச் சிலப்பதிகாரத்தைப் படிப்போர் தெளிவாகக் காணலாம்.

செப்பும் மொழி பதினெட்டு உடையாள் -எனின்
சிந்தனை ஒன்று உடையாள்

என்று பாரதியார் சொல்லியிருப்பது உண்மை. சிலப்பதிகாரத்தைப் பார்த்த பின் - படித்த பின்தான் இவ்வாறு பாடினாரோ என்று எண்ணுவதிலே தவறில்லை.

1 Comments:

Blogger snkm said...

அமைதி உள்ளம் படைத்த மக்களை அறிவிலிகளாக மாற்றி வைத்திருப்பதே உண்மையை தெரிந்து கொள்ளக் கூடாது என்று தானே! அனைவரும் உண்மை நிலையை உணர்ந்தால் நன்மை அடைவோம்!

6:01 AM, May 13, 2010  

Post a Comment

<< Home