சிலை வழிபாடு : தவறா? பாவமா? அல்லது அறிவியலா?-2
பாரதப் பண்பாட்டை போலவே பாரதத்தின் ஞான வெளிப்பாடான தெய்வத்திருவுருவச் சிலைகளும் மிகவும் தொன்மை வாய்ந்தவை.
5000 வருடங்களுக்கும் முற்பட்ட சிந்து சமவெளி நாகரிகம் எனப்படும் சிந்து-சரஸ்வதி நாகரிகத்தில் சிலை வழிபாடு மிக உயர்ந்த முறையில் சிறந்திருந்ததைக் காண முடிகிறது. அகழ்வாராய்ச்சியாளர் B.B.லால் இது குறித்து கூறுகையில் கண்ணுக்குத் தெரியாத ஜீவ நதியாக சரஸ்வதி ஓடிக் கொண்டிருப்பதைப் போல நம் ஒவ்வொரு பண்பாட்டு இயக்கத்திலும் சிந்து-சரஸ்வதி பண்பாட்டின் ஆன்மிக பாரம்பரியம் ஜீவநதியாக ஓடிக்கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.
இந்திய அகழ்வாராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் டாக்டர்.பிஷ்ட் ரிக்வேத பண்பாட்டின் நிதர்சன வடிவமாக virtual reality ஆக சிந்து சமவெளி நாகரிக அமைப்புகள் திகழ்வதாகக் குறிப்பிடுகிறார். சில மாற்றுமத சகோதரர்கள் வேதங்கள் சிலை வழிபாட்டினை மறுப்பதாக தவறாகக் கூறுகின்றனர். இது பிழையான வாதமாகும். வேதங்களை நவீன காலத்தில் ஆராய்ச்சி செய்த ஸ்ரீ அரவிந்தரும் சரி, பழமையான உரையாசிரியராகிய சாயனரும் சரி வேதங்கள் உருவ வழிபாட்டினை கண்டனம் செய்ததாகக் கூறவில்லை. மாறாக ஸ்ரீ அரவிந்தர் வேதம் ஆழ்ந்த ஆன்மிக-உளவியல் உண்மைகளை தேர்ந்தெடுக்கப்பட்ட உருவகங்கள் மூலம் வெளிப்படுத்துவதாகக் கூறியுள்ளார்.
வேத பண்பாட்டின் வெளிப்பாடாக அகழ்வாராய்ச்சியாளர்களால் இன்று அறியப்படும் சிந்து சமவெளி நாகரிகத்தினைச் சார்ந்த இந்த முத்திரையை பாருங்கள்.
கடலடியில் அகழ்வாராய்ச்சி நடத்தி மறைந்த இதிகாச நகரங்களான பூம்புகாரையும் துவாரகையையும் கண்டுபிடித்த ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியாளர் (marine archeologist) டாக்டர்.எஸ்.ஆர்.ராவ் இம்முத்திரையின் மேலே காணப்படும் காட்சி வேத கால அக்னி வழிபாட்டினை காட்டும் உருவ இலச்சினை என கூறுகிறார்.
இம்முத்திரையின் கீழே காணப்படும் ஏழு பெண்கள் வேதத்தில் கூறப்படும் ஏழு தெய்வீக சகோதரிகளாக நதிகளைக் கூறுவதினை நினைவுப்படுத்துகின்றனர். இன்றைக்கும் நீர்நிலைகளின் அருகில் சப்த மாதர் வழிபாடு உள்ளது.
தெய்வீக சக்தியின் வெளிப்பாடாக வேதம் இந்திரனைப் போற்றுகிறது. வேதத்தில் இந்திரன் காளையாக உருவகிக்கப்பட்டுள்ளார்.
புகழ்பெற்ற மொழியியலாளர் ஐராவதம் மகாதேவன் சிந்து சமவெளி நாகரிகத்தின் புகழ்பெற்ற ஒற்றைக் கொம்பு விலங்கு
இலச்சினைகளை வேதத்தின் சோமபானச் சடங்குகளின் குறியீடாகக் காண்கிறார்.
இவையெல்லாவற்றையும் இணைத்துப்பார்க்கையில் வேத காலத்தில் உருவ வழிபாடு கிடையாது எனக்கூறுவது சரியல்ல என்பது தெள்ளத்தெளிவாகிறது. வேதம் வழிபாட்டுமுறையில் எவ்வித தடையையும் ஏற்படுத்தவில்லை.
'சத்தியம் ஒன்றே அதனை ஞானிகள் பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர்'என ரிக்வேதம் கூறுகிறது. எனவே உருவ வழிபாடு வேத காலத்திலேயே நிலவியது மட்டுமன்றி, உயர்ந்த ஆன்மிக முறையாக ஏற்கப்பட்டும் விளங்கியது.
3 Comments:
நன்றி பாலா. தொடர்ந்து படித்து வருவதற்காகவும் உற்சாகப்படுத்தும் பின்னூட்டத்திற்காகவும்
இந்த பதிவில், சிந்துசமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்பதை சொல்ல முயன்றது மட்டும் தான் தெரிகிறது. அதற்கு பதிவின் தலைப்பு ஒரு ஒட்டுவேலை. ஏற்கனவே 'ஐயராவதம் மகாதேவன் ஐயரே' மறுத்த விசயத்தை, யார் நம்பவேண்டும் என்று திரும்ப திரும்ப எழுதுகிறீர்கள் ? தாசர்களை (சிந்துவெளி மக்களை) அழித்ததை இருக்கு வேதமும் வெள்ளிடை மலை ஆக்கியிருக்கிறதே.
ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்களையும் சாதீய அடையாளம் கொண்டு பார்க்கும் மனநிலையில் இருக்கும் உமக்கு இப்பதிவு 'ஆரிய' நாகரிகமாக சிந்து சமவெளி நாகரிகத்தை காண்பதாக மட்டுமே தெரிவதில் அதிசயமில்லை. ஆரிய -திராவிட பிரச்சனைக்கே இங்கு வரவில்லை. வேதங்களில் கூறப்பட்டுள்ள சோம பான சடங்கின் உருவக வெளிப்பாடாகவே ஐராவதம் மகாதேவன் ஒற்றைக்கொம்பு விலங்கினை காண்கிறார், அதன் பின்னர் சோமபான சடங்கே சிந்து சமவெளி மக்களிடமிருந்து பெற்றது என்கிறார். தாசர்களை 'ஆரிய' இனத்தவர் கொன்றதாக ரிக்வேத பாடல்களை காண்பது இன்னமும் காலனிய கட்டுக்கதைகளை நம்பும் மனநிலையிலிருந்தும் நீர் தெளிவுபெறவில்லை என்பதனை காட்டுகிறதே அன்றி வேறில்லை.
Post a Comment
<< Home