வலைகளில் சிக்கியவன்: நூல் விமர்சனம்: சில பகுதிகள்
"15-ஆம் நூற்றாண்டில் முகமதியரிடம் படுதோல்வியடைந்த பரவர்கள் தங்கள் உயிர்களை பாதுகாக்கும் நிலையில் இருந்த போது போர்த்துகீசிய தளபதி போரோவாஸ் டி அமலாஸ் என்பவர் பரவர்களை கிறிஸ்தவ மதம் சேரவேண்டுமென பேரம் பேசினார். அதன்படி 74 பரதவ பட்டங்கட்டிகள் 1533 ஆம் ஆண்டு கொச்சி நகர தேவ அன்னை ஆலயத்தில் திரு நீராட்டு பெற்று கிறிஸ்தவமதம் சேர வைத்த போதுதான் மதவலை நம்மீது முதன்முதலாக வீசப்பட்டது."என்கிறார் ஜஸ்டின் திவாகர்.
அவரது 'வலைகளில் சிக்கியவன்' எனும் நூல் பலவித சமுதாய தரவுகளையும் சமுதாய பதிவுகளையும் கொண்டு வெளிவந்துள்ளது. மறக்கடிக்கப்பட்ட தமது சமுதாய வேர்களை தேடும் முயற்சி இந்நூலின் 112 பக்கங்களில் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது. கிறிஸ்தவ தேவாலயங்களில் உள்ளூர் மூலிகை மெழுகுவர்த்திகளை பயன்படுத்த வேண்டும் (பக்.3)என்பதிலாகட்டும் உழைப்பாளர் தினமாக மே 1-ஐ கொண்டாடுவதை விடுத்து விஸ்வகர்மா தினத்தையும் ஆசிரியர் தினமாக மீனவ குலத்தில் பிறந்து வேதங்களை தொகுத்த வியாச பூர்ணிமாவையும் கொண்டாட வேண்டும் என எழும் குரலில் ஆகட்டும் (பக்-6-7) ஆசிரியரின் தீவிர பண்பாட்டு பற்று வெளிப்படுகிறது.
கடலோர மக்களின் குடிப்பழக்கத்தை ஒரு பொருளாதார சுரண்டலாக காணும் ஆசிரியர் கொத்த மல்லி மூலம் குடிப்பழக்கத்தை அழித்திட நாட்டு வைத்திய தீர்வினை அளிக்கிறார் (மில்லியை மறக்க செய்யும் மல்லி பக்.8-9)'என்ன என்ன வார்த்தைகள்' எனும் கட்டுரை பாரம்பரிய குழந்தை இலக்கியங்கள் பள்ளிகளில் கற்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை விளக்குகிறது. (பக் 12-13)ஆன்மிக தேஜஸ் எனும் கட்டுரையில் கிறிஸ்தவ குருமார்கள் உணவு பழக்கத்தில் சாத்வீக உணவு முறைக்கு மாறும் அவசியத்தை வலியுறுத்துகிறது.நமது நாட்டின் உண்மையான வடிவம் ஆன்மீகமே எனும் கட்டுரையில் நம் தேசத்தின் பாரம்பரிய ஆன்மிக மதிப்பீடுகள் எப்படி பல நன்மைகளை நம் சமுதாயத்துக்கு அளிக்கின்றன என்பதனை விளக்குகிறார்.
'மறை மாவட்டத்தின் சமுதாய முதலீடுகள்' எனும் கட்டுரை அருமையான ஆராய்ச்சிக்கட்டுரை. கத்தோலிக்க சர்ச்சின் முதலீடுகள் தனது வருமான தன்னிறைவுக்காக 12 வர்த்தக அமைப்புகளில் போடப்படுகிறது. 9 பத்திரிகை வெளியீடுகள் வருகின்றன. 15 மருத்துவ ஸ்தாபன முதலீடுகள்.90 தொழிலகங்கள், 93 மீனவர் சங்கங்கள், 58 விவசாய சங்கங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் கத்தோலிக்க சர்ச்சின் கட்டுப்பாட்டில் நேரடி முதலீட்டில் இயங்குகின்றன.இம்மாவட்ட 4,75,000 கத்தோலிக்கர்கள் 132 பங்கு சர்ச்சுகளளயும் சேர்த்து 338 ஆலயங்கள் கட்டியுள்ளார்கள். இனி ஜஸ்டின் திவாகர் கூறுகிறார்:
"இந்த யதார்த்தத்தை இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால் ஆலயம் கட்டவேண்டியவர்கள் சமூகக் கட்டமைப்புகளையும் பாமர கத்தோலிக்கர்கள் ஆலயங்களையும் கட்டியிருக்கிறார்கள். அதாவது ஆன்மிக பணியாளர்கள் சமூக முதலீட்டையும் சமூகங்கள் ஆன்மிக முதலீட்டையும் செய்திருக்கிறார்கள். ஆன்மிகப் பணியாளர்களிடம் சமுகக் கட்டமைப்பு இருக்கிறது. சமூகங்களிடம் கோவில்கள் இருக்கின்றன. இதைத்தான் கென்யா நாட்டு ஜனாதிபதி ஜோமோ கென்யாட்டா அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:'When the missionaries came to our land we had the land and they had the Bible. They gave us the Bible and told us to close our eyes and when we opened our eyes, we had the Bible and they had our land"
கழிமுகம் குறித்த அவரது கட்டுரை சூழலியல் ஆர்வலர்களுக்கு ஒரு முக்கியமான கட்டுரை ஆகும்.குமரிமாவட்ட குளங்களின் சூழலியல் முக்கியத்துவத்தையும் அவற்றின் இன்றைய நிலையையும் விவரிக்கிறார். 2200 பாரம்பரிய குளங்களில் சரியான பராமரிப்பு இல்லாமல் இன்று 1750 குளங்களே உள்ளன என்கிறார். பொதுப்பணித்துறையின் அலட்சியம் காரணமாக இக்குளங்கள் இன்று விவசாயிக்கும் மீனவருக்கும் அன்னியப்பட்டு பூ விற்கும் குத்தகைதாரருக்கு மட்டுமே சொந்தமாகிவிட்ட அவலநிலையை கடிகிறார். ஜஸ்டின் திவாகர் மட்டுமல்லாது தூத்துக்குடி டாக்டர்.ஆண்டோரூபன் அவர்களது கட்டுரையும் இக்கட்டுரை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. 1947 ஆம் ஆணடு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளிவந்த ஜெயசீலன் கர்வாலோ பி.ஏ அவர்களின் கட்டுரை இத்தொகுப்பில் மீள்-பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. முகமும் வேரும் தொலைத்த ஒரு சமுதாயத்தின் ஆதங்கங்களை அன்று முதல் இன்றுவரையாக ஆவணப்படுத்தியுள்ளது இக்கட்டுரை தொகுப்பு.
இதில் காணப்படும் ஒரு அண்மைக்கால பதிவு இந்த ஆதங்கங்கள் எத்தனை முக்கியமானவை என நம்மை உணர வைக்கின்றன. 1996 ஆம் ஆண்டு பெரியகாட்டு புனித அந்தோனியார் தேவாலயம் புதுப்பிக்கப்படுகிறது. 2000 ஆம் ஆண்டு அது புதுப்பிக்கப்படுகிறது. அவ்விழாவுக்கு சென்றிருந்த ஜஸ்டின் திவாகர் செய்யும் ஒரு உணர்ச்சி பூர்வ பதிவினை அவர் வார்த்தைகளிலேயே கேட்போம்:
"2000 ஆம் ஆண்டு அர்ச்சிப்பு விழாவிற்கு நானும் சென்றிருந்தேன். மிகவும் ஆடம்பரமாகவும் சிறப்பாகவும் முடிந்தது. கோவிலின் உள்வெளி தோற்றங்கள் மிகவும் வேறுபட்டதாகவும் அழகாகவும் இருந்தன.திருப்பலி முடிந்து வெளியே வந்து தெற்கு திசை நோக்கி நின்றேன்.கோயிலின் அதன் கிழக்கு ஓரத்தில் ஓலைவீடு பல ஆண்டுகளாக முன்போல இருந்ததைப் போலத்தான் இருந்து கொண்டிருந்தது.அந்த வீட்டின் எதிரில் புனித அந்தோணியார் நின்று கொண்டு அந்த வீட்டையே பார்த்துக்கொண்டிருப்பதாக எனக்கு பிரமை. எனது மனதில் ஒரு தாக்கம்....மனங்களில் இருக்கும் புனித அந்தோனியாரை மறந்துவிட்டு அவரை கோவிலுக்குள் தேடும் கோடிபக்தர்களை நான் திரும்ப பார்த்த போது கோவிலின் நுழைவு வாயிலின் அருகில் பதிக்கப்பட்டிருக்கும் அந்த கருப்பு பளிங்கின் சரித்திர கருப்படிப்பு என் கண்ணுக்கு தெரிந்தது. 140 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட இந்த அந்தோனியார் ஆலயம் 2000 ஆம் ஆண்டில் புதுப்பித்தபோது பதித்த கல்வெட்டில் பொறித்த எழுத்துக்களின் அடிப்படையில் பார்த்தால் ஏதோ பெரியகாட்டு அந்தோனியார் கோவில் மிசியோ என்ற ஜெர்மன் நபரின் நன்கொடையால் நடந்தது போல தெரிகிறது. இக்கல்வெட்டின் புகைப்படத்தை பார்க்கும் வெளியூர் பக்தர்களும் உள்ளூர் சந்ததிகளும் இவ்வரலாற்றை எப்படி பதிவு செய்வார்கள்? நமது காலச்சுவடுகள் நம் கண்முன் அழிவதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்" (பக்.107-109)இறுதியில் நம்பிக்கையுடன் முடிக்கிறார் ஜஸ்டின் திவாகர்: "என்னதான் வலைகளில் சிக்கியிருந்தாலும் அதை கிழித்தெறிந்து மீண்டு வருவதற்கு பரவனுக்கு தெரியும் பரவனால் முடியும்" (பக்.113)
நூலிலிருந்து சில பகுதிகள்:
நமது முன்னோர்கள் மன்வந்திரங்களின் கணக்கையும் மண்டல யுகங்களின் கணக்கையும் அறிந்தவர்கள். உதாரணமாக இது 7-ஆவது மன்வந்திரம், 85-ஆவது கலியுகம், 5106 ஆம் ஆண்டு. 4000 வருடங்களுக்கு முன்பு மொகஞ்சதாரோ ஹரப்பா கண்ட நமக்கு இந்த 2005 ஆம் ஆண்டு புத்தாண்டாக இருக்க முடியாது. நமது பாரம்பரியத்தின் படி கண்ணபரமாத்மாவின் சின்ன சின்ன பாதசுவடுகளை கோலமிட்டுக் கண்ணனை அழைக்கும் நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடினோம். நவம்பர் 14 ஆம் தேதியை அல்ல. ஒரு மீனவகுடும்பத்தில் பிறந்த வியாச முனிவர் வேதங்களை தொகுத்து அதை நான்காகப் பகுத்து அருளினார். அந்த உலகத்து ஆசிரியரை வணங்கி தொழுவதை ஆசிரியர் தினமாக வியாசர் பூர்ணிமா என நம் நாட்டில் கொண்டாடினோம். செப்டம்பர் 5-ஆம் தேதியை அல்ல. குடும்ப நலன் கருதி பெண்கள் விரதம் இருக்கும் நாளை பெண்கள் தினமாக நமது பாரதத்தில் கொண்டாடினோம். மார்ச் - 8 ஆம் தேதியை அல்ல. மே 1-ஆம் தேதியை நாம் கொண்டாடும் வெளிநாட்டு தொழிலாளர் தினமாக கொண்டாடும் முன்பு நாம் விஸ்வகர்மா தினத்தை கொண்டாடினோம்.விருத்திராசுரன் எனும் அரக்கன் மக்களுக்கு தீமைகள் பல செய்துவந்த போது அவனைக் கொல்ல ததீசி முனிவர் தமது முதுகெலும்பைக் கொடுத்தார். அதனை உலகின் முதல் தொழிலாளியான விஸ்வகர்மாவிடம் ஒப்படைத்தனர். அதர்மத்தை அழிக்கும் பொருட்டும் தர்மத்தை காக்கும் பொருட்டும் சொந்த மகன் எனப்பாராமல் தியாகம் செய்த அந்த தியாகத்தை போற்றும் விதமாக இந்த நாளை விஸ்வகர்மா தினமாக கொண்டாடுகிறோம். மே 1 ஆம் தேதியை அல்ல....மேற்சொன்ன கருத்துக்களிலிருந்து மேற்கத்திய பாணியை அதிகம் பின்பற்ற தொடங்கிய நாம் நமது பாரம்பரியத்தையும் ஆணிவேரையும் மறந்து கொண்டிருக்கிறோம். நாம் கத்தோலிக்க மதத்தை பின்பற்றினாலும் நமது பாரம்பரியத்தை உதாசினப்படுத்தக்கூடாது. தன்னைத் தானே நேசிக்காத நபர் எப்படி முன்னேற மாட்டாரோ அது போல தன்னை நேசிக்காத எந்த சமுதாயமும் முன்னேற முடியாது. பாரதி சொன்னது போல 'நாமதன் புதல்வர்' என பெருமை கொள்ள வேண்டும். அன்னியத்தின் திணிப்பை புறம் தள்ள வேண்டும். (பக்: 6-7)
பாரதத்தின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் நமது கலாச்சார அடிப்படையில் அமைந்த வாழ்க்கை முறைதான். அதனால்தான் நமது குணநலன்களையும் புத்தி கூர்மையையும் கண்டு மேலைநாடுகளில் வேலை செய்ய நமது நாட்டினர் அதிக அளவு வரவேற்கப்படுகின்றனர். இன்று நமது நாட்டினர் உலகிலேயே அதிக அன்னிய செலாவணியினை ஈட்டித்தருகின்றார்கள்.இது நமது நாட்டின் ஆன்மிக வடிவத்தின் பரிசு.(நமது நாட்டினர் 22.3 பில்லியன் டாலர்களை சம்பள சேமிப்பாக தாய்நாட்டுக்கு அனுப்புகிறார்கள். இது உலகத்தில் முதலிடம். அடுத்ததாக சீனர்கள் 19.8 பில்லியன் டாலர்களை தாய்நாட்டுக்கு அனுப்புகிறார்கள். ஆன்மிக நன்மையை அடிப்படையாகக் கொண்ட தர்மமே ஒரு தலைசிறந்த சமுதாயத்துக்கு அடிப்படையாக அமைய முடியும். எனவே நாம் நமது சமுதாயத்தை கட்டிக்காத்து அதன் பாரம்பரியங்களை பாதுகாத்தால் நாடும் நலம்பெறும் அதில் வாழும் நாமும் நலம் பெறுவோம்.(பக்.24)
நமது வாழ்வாதார செழுமைகளை குறிவைத்து அன்னிய ஆதிக்க சக்திகள் படையெடுத்த போது அதனை எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள தவறிய தலைமை காலம் கடந்த போதிலும் கண்டனத்துக்குரியது. போராட்டத்தை ஆயுதமாகக்கொண்டு வியூகத்தை வளர்த்துக்கொள்ளாமல் மற்றொரு ஆதிக்க சக்தியினரான போர்த்துகீசியரிடம் அடி பணிந்து சுயாதினத்தை அடகுவைத்து குறுக்கு வழி வெற்றியை ஒரு கோணத்தில் கோழைத்தனம் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும். ...தற்காலிக வசதிக்காக போராட்ட குணத்தை குழி தோண்டி புதைத்து விட்டு போதிக்க வந்த வெளிநாட்டினரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருக்கிறோம். மதமும் சமுதாயமும் ஒன்று என்று மடத்தனமாக ஐக்கியப்பட்டு அடையாளம் இழந்திருக்கிறோம்...இருநூறு ஆண்டுகளாய் எக்காரணத்தை கொண்டும் வணிகத்திற்கோ போதிக்கவோ ஜப்பான் அன்னியருக்கு தடை விதித்திருந்தது. அதையெல்லாம் மீறி ஜப்பானுக்குள் நுழைந்துவிட்ட இரு கிறிஸ்தவ பாதிரியார்களை அடையாளம் கண்டு அவர்களை நாகசாகியில் தூக்கிலிட்டதற்காகவே ஐரோப்பிய அதிகார மையம் நாகசாகி மீது அணுகுண்டு வீசியது. ஆனாலும் தொலைநோக்கு பார்வையாலும் திட்டமிடுதலாலும் கால மேலாண்மையாலும் அவ்வின மக்கள் சுயமாக இருந்ததால் அந்நாடு இன்று மீண்டும் முதலிடத்தை நோக்கி முன்னேறியுள்ளது. சுயத்தை இழந்தவன் சோம்பேறியாகிறான். சோம்பேறியானவன் கையேந்தியாகிறான்.இலவசமாக ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்டு பரதவ இனம் இன்று தனது சொத்துக்களையும் சுயங்களையும் தாரை வார்த்துள்ளது.
(டாக்டர் ஆண்டோ ரூபன் கட்டுரையிலிருந்து: பக்.86-87)
ஆசிரியர் குறித்து: ஜஸ்டின் திவாகர் பொழிக்கரை சார்ந்த அம்புரோஸ் மற்றும் கூஞ்ஞா முட்டத்தை சார்ந்த அற்புதம் ஆகியவர்களின் புதல்வன். கடல் அலைக்கு பத்தடியில் அமைந்த யேப்புமுட்டத்து வீட்டில் 1959 இல் பிறந்தவர். 15 ஆண்டுகள் கப்பல் ரேடியோ ரூம் பொறுப்பதிகாரியாக உலகம் முழுவதும் சுற்றி 2000 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்றவர்.
நூல் வெளியீடு: அலைகள் கேப் கல்வி நிறுவனம், 43/5 கேபி ரோடு கோட்டார், நாகர்கோவில்-629002
விலை: ரூ 50/-
Labels: Catholic Church, Exploitation, Fishermen, Hindu Nationalism, Indian culture
5 Comments:
இந்த நூலை கிறிஸ்தவ மக்கள் படிக்கிறார்களா?
"நம் ஆணிவேரை மாற்றமுடியாது" என்று வலம்புரி ஜான் ஒருமுறை கூறியதும், இந்தோனேஷிய பெரியவர் ஒருவர் "நாங்கள் எங்கள் மதத்தைத்தான் மாற்றிக் கொண்டோம். எங்கள் முன்னோர்களை அல்ல" என்று வெளிநாட்டவர் ஒருவரிடம் பெருமையாகக் கூறியதும் நினைவுக்கு வருகிறது.
அந்தப் புத்தகம் சென்னையில் கிடைக்குமா என்று பார்க்கவேண்டும்.
எஸ்.கே
//சுயத்தை இழந்தவன் சோம்பேறியாகிறான். சோம்பேறியானவன் கையேந்தியாகிறான்.இலவசமாக ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்டு பரதவ இனம் இன்று தனது சொத்துக்களையும் சுயங்களையும் தாரை வார்த்துள்ளது.
//
புல்லரிக்கவைத்து விட்டன இவ்வரிகள்.
பரவட்டும் பாரத பண்பாடு
Dear Sri Aravindan,
I am grateful to you for introducing this book. We need to encourage this author. I am planning to buy some copies and disribute to some people (Sri N Mahalingam for instance). I wish the author is invited to address some literary meetings in Chennai. Can you find his whereabouts?
Malarmannan
ஜஸ்டின் திவாகரின் தேசபக்தியும் பண்பாட்டு உணர்வும், தன்னம்பிக்கையும் போற்றுதலுக்குரியவை.
இந்த நூலை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி.
// இதைத்தான் கென்யா நாட்டு ஜனாதிபதி ஜோமோ கென்யாட்டா அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: 'When the missionaries came to our land we had the land and they had the Bible. They gave us the Bible and told us to close our eyes and when we opened our eyes, we had the Bible and they had our land" //
ஆழ்ந்த ஒப்பீடு. இந்த மேற்கோளை முன்பு நான் படித்த போது "நல்லவேளை இந்தியாவில் எங்கும் இப்படி நடக்கவில்லை" என்று எண்ணியிருந்தேன். கிறித்தவ,காலனிய கயமை அதன் சுயரூபத்தை குமரியிலும் காட்டியிருப்பதை இப்போது அறிகிறேன்.
Hari Om,இந்தோனேஷிய பெரியவர் ஒருவர் "நாங்கள் எங்கள் மதத்தைத்தான் மாற்றிக் கொண்டோம். எங்கள் முன்னோர்களை அல்ல" என்று வெளிநாட்டவர் ஒருவரிடம் பெருமையாகக் கூறியதும் நினைவுக்கு வருகிறது.
My dear friends,We should avoid this type of examples.Because it's indirectly encourage conversion.Our sentences should encourage conversion at any form.Its my suggestion Only.
Post a Comment
<< Home