Monday, May 21, 2007

எரகானும் மந்திரப்படையும்


மொழி பெயர்ப்பு நன்றாகவே இருக்கிறது. என்றாலும் பார்த்த தியேட்டர் பின்னி பெடலெடுத்துவிட்டது. நாகர்கோவிலில் பெரும்பாலும் தியேட்டர்கள் அப்படித்தான். 'எரகானும் மந்திரப்படையும்' அதீத கற்பனை கதை. டிராகன்கள் எப்போதுமே மேற்கத்திய தொன்ம கற்பனையில் தீயவை. அவற்றினை அழிக்கும் கிறிஸ்தவ வீரர்கள் புனிதர்கள். புனித மிக்கேல் இந்த வகையறாதான். 1996 இல் வெளியான டிராகன்ஹார்ட் (இயக்கம்:ராப் கோகென்) ஒரு சர்வாதிகாரிக்கு தனது இதயத்தை அளித்து பின் அவனை முறியடிக்க முயலும் டிராகன் குறித்த கதை. ஆனால் எரகான் இன்னமும் சுவாரசியமான கதை. இருளின் ஆட்சி பூமியில் படருவதற்கு முன்னர் டிராகன்களும் டிராகன்ரைடர்களும் (Dragon raiders) உலகினை காவல் புரிந்துவந்தனர். அருமையான சுதந்திரம் மிக்க காலம் அது. ஆனால் அதிகார பசியும் பழிவாங்கும் வெறியும் கொண்ட ஒருவன் - கல்பதோரிக்ஸ் பன்னிருவரை துணைகொண்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினான்.
டிராகன்களை அழித்தான். டிராகன் ரைடர்களை கொன்றான். மீதியிருந்தவர் வர்தன்கள் மலைகளிலும் குகைகளிலும் ஒளிந்திருக்கின்றனர். இதற்கிடையில் டிராகன் ரைடர்கள் பழங்கதையாகிவிட்ட தருணத்தில் கல்பதோரிக்ஸ் தனது கட்டுப்பாட்டையும் சர்வாதிகாரத்தையும் முழுமையாக்கிட டிராகன் குழு ஒன்றினை தனது அதிகாரத்துக்கு உட்பட்டு உருவாக்க நினைக்கிறான். அதற்கு தேவையான டிராகன் முட்டையை ஆர்யா எனும் இளம் வீராங்கனை எடுத்து சென்றுவிடுகிறாள்.
ஆர்யா
அவளை சிறை பிடிக்கிறான் கல்பதோரிக்ஸின் அத்யந்த சீடன் துர்ஸா. ஆனால் அவள் தன் உயிரை பணயம் வைத்து அதனை மாயாஜாலத்தின் மூலம் எரகான் எனும் கிராம வாலிப-சிறுவனுக்கு அனுப்பிவிடுகிறாள். டிராகன் முட்டை பொறிக்கிறது.
நீல நிற டிராகனை ஸப்பயரா என பெயரிடுகிறான் எரகான். அதற்கிடையில் ஆர்யா கடுமையான சித்திரவதைக்கு உள்ளாகிறாள். சர்வாதிகாரியின் அடியாள் ரசாக் எரகானின் மாமாவை கொல்கிறான். எரகானின் வாழ்க்கை மாறுகிறது. ஏஞ்செலா எனும் மூலிகை விற்கும் 'சூனியக்காரி' அவன் வருங்காலத்தை விவரிக்கிறாள்.அவன் டிராகன் ரைடர் ஆகிறான். அதற்கு கிராம கதைசொல்லியான ப்ரோம் உதவுகிறான். அவனும் முன்னாள் டிராகன் ரைடர். அவர்கள் ஆரியாவை மீட்டு குகைகளில் மறைந்து வாழும் வர்த்தன்களை சென்றடைகிறார்கள். ப்ரோம் வழியில் மரணமடைகிறான். மீண்டும் டிராகன்களின் டிராகன் ரைடர்களில் பொற்காலம் மலரும், சர்வாதிகார இருள் மறையும் என கூறுகிறான். முதல் போர் நடக்கிறது. வர்த்தன்கள் சர்வாதிகாரியின் படைகளை தோற்கடிக்கின்றனர். துர்ஸா கொல்லப்படுகிறான்.
ஆர்யா தன் நாட்டு மக்களிடம் திரும்புகிறாள். எரகான் ஸப்பயராவில் பறக்கிறான். சர்வாதிகாரி 'இது முடிவல்ல தொடக்கம்தான்' என்கிறான். அடுத்த தொடர்ச்சிக்கான முத்தாய்ப்புடன் படம் முடிவடைகிறது.

மேற்கத்திய தொன்மங்கள் மீள் எழ திரைப்படமும் நாவல் உலகமும் நல்ல களமாக அமைந்துள்ளன. இப்படத்தில் 'ஸ்டார்வார்ஸின்' கூறுகளை எளிதாக காணலாம். டிராகன் புவிசக்தியின் உருவகமாக கருதப்படுவதுண்டு. அது பெண் என்பது மிகவும் பழமையான தொன்ம வேர்களை உடையது. ஸப்பயரா என்பது கபாலா எனும் யூதமறைஞானத்தில் பலதளங்களில் இறைச்சக்தியின் வெளிப்பாடு ஆகும்.

பன்னிருவர் துணையுடன் சர்வாதிகார இருளை பரப்பிய சர்வாதிகாரி யார் என கூற வேண்டியதில்லை. ஆனால் அண்மையில் வெளியான அனைத்து வெற்றிகர மேற்கத்திய அதீத கற்பனை உருவாக்கங்களில் இந்த சாடல் வெளிப்படையாகவே இருக்கிறது. ஹாரிபார்ட்டரில் தன் பெயரை கூறிடுவதை விரும்பாத வால்டர்மார்ட், பன்னிருவர் துணையுடன் இருள் சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபிதம் செய்யும் சர்வாதிகாரி, ஜெடை கோவில்களை அழித்து குழந்தைகளை கொல்லும் இருட்கண தலைவன் என ஒருவித வேகத்துடன் அடுத்தடுத்து இருளின் இருதய ஸ்தானம் காட்டப்படுகிறது அதிசயமாகத்தான் இருக்கிறது. 'டிராகன் ரைடர்களை டிராகன் தேர்ந்தெடுப்பதாக' கூறுவது 'மந்திரக்கோலே மந்திரவாதியை தேர்ந்தெடுக்கிறது' எனும் ஹாரி பாட்டர் வசனத்தை நினைவூட்டுகிறது. அருமையான வரைகலை, அற்புதமான இடையூறற்ற இசை. மீண்டும் பார்க்கத்தூண்டும் திரைப்படம்.
"I have visions of lizards. Not just little rock lizards, or even something as big as an alligator-no, I see gigantic, majestic flying dragons. I have visions of them all the time, whether in the shower, sitting on the couch, or riding in the car. The problem with seeing dragons is that they tend to take over your mind. And once that happens, you can go a little crazy. Which is probably why I became a published author at eighteen."- கிறிஸ்டோ பர் பயோலினி (எரகானை உருவாக்கியவர்)

இயக்கம்: ஸ்டீபன் ஃபாங்க்மெயர்

Labels: , , ,

7 Comments:

Blogger லக்கிலுக் said...

உங்கள் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டியிருக்கிறது. பேண்டஸி கதைகளின் மீது எப்போதுமே எனக்கு காதல் உண்டு.

BTW, காமிக்ஸ் ரசிகர்கள் சிலர் சேர்ந்து ஏன் கூட்டு வலைப்பதிவு ஒன்று ஆரம்பிக்கக் கூடாது?

4:08 AM, May 23, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//BTW, காமிக்ஸ் ரசிகர்கள் சிலர் சேர்ந்து ஏன் கூட்டு வலைப்பதிவு ஒன்று ஆரம்பிக்கக் கூடாது?//
நல்ல ஐடியா லக்கிலுக். காமிக்ஸ்கள் வருவது குறித்தும், நம்மிடம் உள்ள காமிக்ஸ் பிரதிகள் குறித்தும் காமிக்ஸ்கள் கிடைக்கும் இடங்கள் குறித்தும் பேச ஒரு தளமாக அது இருக்கலாம். காமிக்ஸ் விமர்சனங்களுக்கு தனிப்பதிவர்களின் வலைப்பதிவுகளும் காமிக்ஸ் குறித்த தகவல்களுக்கு கூட்டு வலைப்பதிவுமாக செயல்படலாம். ஜூன் முதல்வாரத்திலிருந்து செயல்படலாமா?

7:25 AM, May 23, 2007  
Blogger சிறில் அலெக்ஸ் said...

//புனித மிக்கேல் இந்த வகையறாதான்.//
மிக்கேல் ஒரு சம்மனசு.. அவர் கிறீத்துவ 'வீரர் (as in human being) அல்ல.

அவர் ஈட்டியால் குத்துவதைப்போல இருக்கும் படங்கள் அவர் லூசிபருடான் (அ) பேயுடன் சண்டை செய்வதை குறிக்க.

புனித ஜார்ஜ் டிராகனோடு சண்டை போட்டதாக படங்கள் உண்டு. தமிழில் இவரை வற்கீஸ் என்கிறார்கள். கேரளாவில் எடத்துவாவில் புகழ்பற்ற ஆலயம் உண்டு.

1:14 PM, May 25, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

தெளிவுக்கு நன்றி சிறில் அலெக்ஸ். டிராகன்களை கொல்லும் வீரர்கள் என்பது மிகப்பழமையான தொன்மம். கிறிஸ்தவத்துக்கு முந்தைய தொன்மம். பின்னாளில் கிறிஸ்தவத்தில் இணைக்கப்பட்டது. ஐரோப்பிய பழைய பாடல்கள் முதல் ஹாரிபாட்டர் and the chamber of secret வரை நீளும் இத்தொன்ம recycling இல் ஒரு instanceதான் மிக்கேலும். லூஸிபரை பொறுத்தவரையில் அது ஒரு சுவாரசியமான கதை. லூஸிபர் என்றால் ஒளியை தாங்குபவன் என பொருள். விடிவெள்ளி லூஸிபராக கருதப்படுகிறது. லூஸிபர் தொடர்பான மற்றொரு பெயர் பாஸ்பரஸ். இதயத்தில் உதிக்கும் விடிவெள்ளியாக (2 பேதுரு 1:19)ஏசு குறிப்பிடப்படும் போது அவர் லூஸிபராகவே அமைகிறார் என்பது ஒரு முரண்நகை.

6:45 PM, May 25, 2007  
Anonymous Anonymous said...

அட, என்னைப்பற்றி இங்கே என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?

தைரியமிருந்தால் என்னுடைய இருப்பிடமான வத்திக்கானுக்கு வந்து பேசுங்கள்.

7:48 PM, May 25, 2007  
Anonymous Anonymous said...

@@@@பேண்டஸி கதைகளின் மீது எப்போதுமே எனக்கு காதல் உண்டு.@@@@

தெரிந்ததுதானே !

7:37 AM, May 26, 2007  
Anonymous Anonymous said...

ennoda comment innum varalaiye, yean sir?

John
Kanyakumari

6:08 AM, May 27, 2007  

Post a Comment

<< Home