ஜகத் கஸ்பாரின் ஜகத் ஜால கயமை?
வணக்கம்.
'கடவுளை அறிய முடியுமா?' எனும் தலைப்பில் திரு. ஜெகத் கஸ்பார் எனும் பாதிரியார் எழுதிய கட்டுரையை கண்டேன். அக்கட்டுரையில் கடவுளின் பெயரால் பேதங்கள் என்பது அருவருப்பான மூடமை எனக்கூறி அதற்கு உதாரணமாக அவர் குரு நானக் வாழ்க்கையில் நடந்ததாக ஒரு சம்பவத்தைக் கூறியுள்ளார்.
இதில் அவர் குருநானக் ஒருநாள் களைத்துப்போய் ஒரு கோவிலுக்குள் நுழைந்ததாகவும் அங்கே கர்ப்பக்கிரகத்தை நோக்கி அவர் காலை நீட்டி படுத்து உறங்கிவிட்டதாகவும், அவர் விழித்தெழுந்த போது "கம்பும் தடியும் கொண்டு கோபக்கனல் கண்களில் வீசப் பூசாரிகள் நிற்கிறார்கள்" என்றும் அவர்கள் குரு நானக்கை வசைகள் பாடியதாகவும் குறிப்பிடுகிறார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்த பூசாரிகளின் மனப்பான்மை 'கடவுளை எனக்குத் தெரியும்" என்பதாக உணர்த்தும் அக்கட்டுரை அதனை 'பெரும் மூடமை' எனவும் 'மிகப்பெரும் அராஜகம்' எனவும் 'உச்சக்கட்ட மோசடி' எனவும் குறிப்பிடுகிறார். கர்ப்பக்கிரகம், கோவில், பூசாரிகள், அதுவும் கையில் கம்பும் தடியுமாக நிற்கும் வன்முறையாளர்கள் என்றெல்லாம் ஒரு
சித்திரத்தை எழுப்புகிறார் ஜெகத் கஸ்பார். அதாவது மேம்போக்காக பார்க்க சமய சமரசம் பேசும் கட்டுரையில் எதிர்மறையான ஒரு சித்திரத்தை இந்து மதத்தினர் மீது எழுப்புகிறார் அவர். கஸ்பார் தரும் இந்த சித்திரம் சரியானதுதானா?
பாயி குர்தாஸால் எழுதப்பட்டதும் குரு அர்ஜுன் தேவ் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டதுமான 'பாயி குருதாஸ் வார்' குருநானக் மெக்கா சென்ற சம்பவத்தை தெள்ளத்தெளிவாக வர்ணிக்கிறது:
"நீலநிற ஆடை அணிந்து பாபா நானக் மெக்கா சென்றார்.
கையில் தடி ஊன்றி கையினில் நூலுடன் உலோக பாத்திரமும் படுக்கையும் ஏந்தி யாத்திரை மேற்கொண்டார்.
ஹாஜிகள் தங்கியிருந்ததோர் மசூதி ஒன்றில் அவர் சென்றடைந்தார்.
பாபா நானக் அன்று உறங்குகையில் அவர் கால்களை காபா இருந்த திசையை நோக்கி நீட்டி தூங்கினார்.
காஸி ருக்கான் உத்தீன் (ஜிவான்) அது கண்டு அவரை உதைத்தான்.
"இறை நிந்தனை செய்யும் இந்த காஃபிர் யார்" என வினவினான்.
"இறைவனின் இல்லம் உறையும் திசை நோக்கி கால் நீட்டியிருக்கும் இந்த பாவி யார்?" என கூவினான்.
அவரது கால்களை பற்றி அவரை தரதரவென இழுத்தான்.
ஆகா என்ன அதிசயம்! அவருடன் சேர்ந்து முழு மெக்காவும் சுழல தொடங்கியது.
அவர் ஒரு மகான் என உணர்ந்த அனைவரும் மனம் திரும்பி அவரை வணங்கினர்." (பவுரி 32)
குருநானக் "இறைவன் எங்கும் உறைகிறான்" என்பதை காஸிக்கு தெளிவாக்கினார் என்பது இதன் சாராம்சம். குரு நானக் புறச்சடங்குகளை அதன் உள்ளர்த்தம் புரியாமல் செய்யும் அந்தணர்களையும் கண்டித்திருக்கிறார் காசியில். ஆனால் தெள்ளத்தெளிவாக சீக்கிய குரு சரிதையில் மெக்காவில் நடந்ததாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு நிகழ்ச்சியை கிறிஸ்தவ பாதிரியாரான ஜகத் கஸ்பார் இந்து கோவிலின் மீது ஏற்றிச் சொல்ல வேண்டிய காரணம் என்ன? இத்தகைய அடிப்படை நேர்மையின்மை (அல்லது ஒரு வேளை அறிவின்மை: ஆனால் இறையியல் பயின்ற பிற மதங்களுடன் மிகவும் தொடர்பு கொண்ட, மின்னணு தொடர்பு சாதனங்களுடன் பரிச்சயம் கொண்ட ஒரு பாதிரியார் இந்த அளவு அடிப்படை தவறினை அறிவின்மையால் செய்வார் என்பது நம்பமுடியாத விஷயமாகத்தான் தோன்றுகிறது.) எவ்விதத்தில் மத ஒற்றுமைக்கு அல்லது நல்லிணக்கத்துக்கு துணை போகும்?
மேலும் ஜகத் கஸ்பார் தமது தனிப்பட்ட வாழ்க்கை தரவுகளை அளித்து அதன் மூலம் ஒருவித மத நல்லிணக்க மாயையை உருவாக்குகிறார். அவர் தந்தையின் பெயர் ஸ்ரீ பத்மநாபன் என்றும் அவர் தந்தை வழிக் குடும்பம் கெட்டியான இந்து வழி குடும்பம் என்றும் கூறுகிறார். இது அவரது
தனிப்பட்ட குடும்ப தரவாகும். என்றாலும் இது ஒரு பொதுப்புலத்தில் வைக்கப்படுவதால் இதில் இந்தக் கட்டுரையில் அவர் மறைத்துள்ள ஆனால் அதே நேரத்தில் மற்றொரு நிகழ்ச்சியில் பொதுப்புலத்தில் வெளியான இது குறித்த மற்றொரு தரவினை இங்கே ஓம் சக்தி வாசகர்கள் முன் வைக்கிறேன். மார்ச் 13 2005 இல் வெளியான 'தி ஹிண்டு' நாளேட்டில் கஸ்பார் குறித்து வெளிவந்த கட்டுரை கூறுகிறது, "கஸ்பாரின் தந்தை அவரது தாயை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக மதம் மாறினார்." (Fr. Raj's father converted to Christianity only to marry his mother.' - The Hindu Sunday, Mar 13, 2005 Chennai)
ஒரு திருமணத்துக்காக ஒருவர் மதம் மாறுவது என்பது அவர் பிறந்த மதத்தையும் அவர் மாறிய மதத்தையும் இழிவு செய்வதாகும். இந்த இடத்தில் ஓம் சக்தி வாசகர்கள் தலித்துகளுக்கு உரிமை கொடுக்க கூடாது என்கிற ஒரே காரணத்துக்காக இந்துக்களாக மதம் மாறுகிறோம் எனக் கூறும் வன்னிய கிறிஸ்தவர்களை அந்த காரணத்துக்காக இந்து மதத்துக்கு வர வேண்டாம் என கூறிய இந்து மக்கள் கட்சி தலைவர் திரு.அர்ஜுன் சம்பத்தையும், திருமணம் என்கிற ஒரே காரணத்துக்காக மதம் மாறிய கஸ்பாரின் தந்தையாரை மதமாற்றிய கத்தோலிக்க சபையையும் ஒப்பிடுமாறு வேண்டுகிறேன். இந்த மதமாற்ற மனப்பாங்கின் பின்னால் செயல்படும் இறையியல் என்ன?
அதனை தேட நாம் மிகவும் தேடவேண்டியதில்லை. கஸ்பார் இக்கட்டுரையெங்கும் பயன்படுத்துகிற பதங்களை பார்த்தாலே போதும். எடுத்துக்காட்டாக "குரு நானக் ஊர் ஊராகச் சென்று தன் இறைத்தேடலை மக்களுடன் பகிர்ந்து கொண்டார்" எனக் கூறுகிறார் கஸ்பார். சீக்கிய தருமத்தை குறித்து அடிப்படை அறிவு கொண்ட எவரும் குரு நானக்குக்கு இறை அனுபவம் ஏற்பட்டதையும் அந்த இறை அனுபவத்தையே அவர் மக்களுடன் பகிர்ந்து கொண்டார் என்பதனை அறிவார்கள். இதற்கு பின்னால் இருக்கும் கிறிஸ்தவ இறையியலை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அந்த கிறிஸ்தவ இறையியலின் படி பிற மதங்களில் இறைத் தேடல் மட்டுமே இருக்குமேயன்றி இறையனுபவம் இருக்காது. அது கிறிஸ்தவத்தில் மட்டுமே சாத்தியமாகும். இதை புரிய வேண்டுமானால், திரு. கஸ்பாரிடம் இப்படி கேட்டுப் பார்க்கலாம், "ஐயா அப்போது மோஸஸுக்கும், ஏசுவுக்கும், பவுலுக்கும் இருந்தது வெறும் இறைத்தேடலேயன்றி இறையனுபவம் இல்லையா?"
இந்துக்களின் 'இறைத்தேடலை' புகழும் ஒவ்வொரு கிறிஸ்தவ இறையியலாளரும் செய்யும் இந்த இறையியல் செப்படி வித்தை பொதுவாக இந்துக்களுக்கு புரிவதில்லை. அவர்களும் ஆகா இந்த கிறிஸ்தவருக்குத்தான் எத்தனை பரந்த மனது நம் திருவாசகத்தை பாராட்டுகிறாரே நம் ஆழ்வார் பாசுரங்களைப் பாடுகிறாரே என புளகாங்கிதமடைந்து விடுகிறார்கள். ஏன் ஜி.யு.போப்பையே எடுத்துக்கொள்வோம். திருவாசக மொழிபெயர்ப்பின் முன்னுரையில் அவர் தெள்ளத்தெளிவாக கூறுகிறார்,
"சில முக்கியமானதல்லாததல்லாத விதங்களில் (not unimportant respects) சைவம் கிறிஸ்தவத்திற்கு அருகில் வந்தாலும் கூட அதனால் இன்றியமையாததாகத் தோன்றும்படிக்கு ஏற்பட்டுள்ள தீங்குகள் எங்கும் இல்லாதபடிக்கான மிகவும் கண்டிக்கத்தக்க மூடநம்பிக்கைகள் ஆகும்." (Thiruvsagam, History of Manikkavacagar, G.U.Pope translation, Page xxxiii.)சைவத்தின் 'முக்கியமான பண்புகள்' என்று கூடச் சொல்லாமல் எந்த வித நேர்மறைச்சொற்களையும் சைவத்துடன் இணைக்காமல் தவிர்க்க இரட்டை எதிர்மறையை பயன்படுத்தும் போப்பின் மனநிலையை பாருங்கள். இதன் பின்னாலிருக்கும் மனநிலையை புரிந்து கொண்டால் ஏன் காஸ்பர் இத்தனை எதிர்மறைப் பதங்களை இந்து பூசாரிகள் மீது காட்டும்படியாக தன் கட்டுரையை அமைத்தார் என்பது விளங்கும்.
ஆக, இந்த மனநிலையே மத-மோதல்களுக்கு காரணம். எனவே கஸ்பார் போன்றவர்கள் பிற மதத்தவருக்கு போதிக்க வருவதற்கு முன்னால் வேண்டுமென்றே இட்டுக்கட்டி பிற மதத்தை எதிர்மறையாக சித்தரிப்பதை தவிர்த்துவிட்டு, இத்தகைய போக்குகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ள கிறிஸ்தவ இறையியலை மாற்றிவிட்டு பின்னர் பொதுத்தளங்களில் மதநல்லிணக்கம் குறித்து உபதேசிக்கலாம். ஏனெனில் அவர் சார்ந்துள்ள கத்தோலிக்க சபை இறைவனின் ஒரே குமாரன் என நம்பும் ஏசு "நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?" என வினவியதாகக் கூறப்பட்டுள்ளதல்லவா? (மத்தேயு 7:3)
(இத்துடன் குருநானக் மெக்காவில் காபாவை நோக்கி கால்நீட்டி படுத்திருப்பதைக் காட்டும் சீக்கிய மரபு சித்திரத்தையும் இணைத்துள்ளேன்.)
பணிவன்புடன்
எஸ்.அரவிந்தன் நீலகண்டன்
7 Comments:
அல்லேலூயா ஜகத் கஸ்பார் மத நல்லிணக்கம் என்ற போர்வையில் கஃப்ஆ வை கோயிலாக்கி, கர்ப்பக்ரகமாக்கி அங்கிருக்கும் முல்லாக்களை பூசாரிகளாக்குகிறார். இதை முஸ்லிம்களும், இந்துக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவர் இதை தெரியாமல் செய்திருக்க வாய்ப்பில்லை. அப்படி தெரியாமல் செய்திருந்தால், முதலில் மற்ற மத சான்றோர்களைப் பற்றி சரியாக அறிந்து வந்து எழுதுங்கள், பேசுங்கள் என்று விரட்டப்பட வேண்டும். இல்லை, தெரிந்தே செய்தார் என்றால் இது வடியெடுத்த கயமைத்தனம். சீக்கிய குருவின் மெக்கா நிகழ்ச்சியைக் கூட தெளிவாக குறிப்பிட முடியாத இவர் ஒரு டுபாக்கூர் என்பது தெளிவு.
நன்றி
ஜயராமன்
நன்றி ஜெயராமன்.
தல,
மத நல்லிணக்கத்துக்கு கட்டுரை எழுதினாலும் விளாசித் தள்ளுறீங்க. எம்பக் கஷ்டம்தான்.
உங்க மொழியிலேயே.. தேர்ந்தெடுக்கப்பட்ட அப்பழுக்கற்ற வார்த்தைகளையும் மேற்கோள்களையும் கொண்டு அப்படி ஒரு கட்டுரை எழுதி அந்தப் பத்திரிகைக்கு அனுப்புமாறு வேண்டிக்கொள்கிறேன்.
குருநானக்கின் இந்தக் கதையை நான் பல்வேறு வடிவங்களில், வேறு ஆன்மீகத் தலைவர்களை முன்வைத்தும் கேட்டிருக்கிறேன்.
இறைத்தேடல் எனும் வார்த்தையை முன்வைத்து வியாக்கியானம் செய்வதெல்லாம் கொஞ்சம் அதிகபட்சம். இதுபோன்ற முயற்சிகள் போலியாகத் தெரிந்தாலும் கொஞ்சமேனும் வரவேற்கப் பழகிக்கொள்ளுங்கள். எல்லோரும் அதிரடிப் புனிதர்களாகவும், சமுக சீர்திருத்தவாதிகளாகவும் (உங்களைப்போல)நொடிப்பொழுதில் மாறிவிட இயலாது.
இதுபோன்ற முயற்சிகளை உள்நோக்கங்கள் இருந்தாலும் அதைக் கடந்து வரவேற்பதுவே பொது நன்மைக்கு வழி வகுக்கும் என நினைக்கிறேன்.
ஒருவரின் பின்னணியைப் பார்த்துதான் அவரின் எண்ணங்களை மதிப்பிட இயலுமாயின் உங்களுக்கும் எனக்குமான நட்புக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்? என்னை உங்களுக்கோ உங்களை எனக்கோ முழுமையாகத் தெரியாதே?
இந்த ஜெகத் கஸ்பார் தானே கனிமொழியுடன் சேர்ந்து சங்கமம் நடத்தியது???
சிறில், திரு காஸ்பர் எழுதியுள்ளதில் எங்கே மதநல்லிணக்கம் உள்ளது. கோவிலில் பூசாரிகள் ஏதோ ரவுடிகள் போலல்லவா சித்தரிக்கிறார். இதைத்தானே அனைத்தரப்பினரும் (கிறித்தவர், திராவிடர், இஸ்லாமியர்) விடாமல் செய்துவருகின்றனர். எத்தனை எத்தனை கோவில்கள் அதில் எத்தனை பூசாரிகள். நான் இதுவரைக்கும் ஒரு ரவுடி பூசாரியை பார்த்ததே இல்லை. இந்த பொய்யைதானே அரவிந்தன் ஓயாமல் உடைக்கிறார்.
அன்புள்ள சிறில்,
வணக்கம். தங்கள் பதிலைக் கண்டேன்.வழக்கம் போலவே பொறுமையுடனும் நிதானத்துடனும் எழுதியுள்ளீர்கள். உங்களைப் போன்றவர்களுடன் உரையாடுவதே நம்பிக்கை தரும் விஷயமாகத்தான் இருக்கிறது.
ஒன்று: குருநானக் மெக்கா சென்றது வரலாற்று நிகழ்ச்சி. அங்கு காபாவை பார்த்து அவர் காலை நீட்டி இருந்தது. பின்னர் நடந்ததாகக்கூறப்படும் அதிசயம் அனைத்துமே சீக்கிய புனித சரித்திரத்தில் இடம் பெறுபவை. நீங்கள் கூறும் பிற ஆன்மிகத்தலைவர்கள் மீது ஏற்றிக்கூறப்படுவதாக சொல்வது அனைத்துமே அதற்கு பின்னர் உருவானதுதான். ஆனால் குரு நானக் குறித்து கூறப்படுவது அனைத்துமே காபாவை மையமாக வைத்துத்தான். மேலும் குரு நானக் நிகழ்ச்சி 1520களில் நடந்ததாகும். எனவேதான் கஸ்பார் செய்வது வேண்டுமென்றே திரித்துச் சொல்லும் நிகழ்ச்சியாக நான் கருதுகிறேன்.
இரண்டு: இறைத்தேடலுக்கும் இறை அனுபவத்துக்குமான வேறுபாடு குறித்து நிச்சயமாக உங்களுக்கே தெரிந்திருக்கும். இதன் பின்னணியில் உள்ள இறையியலும் தெரிந்திருக்கும். குறிப்பாக இன்றைக்கு கஸ்பார் சேர்ந்திருக்கும் கத்தோலிக்க சபையின் கடந்த போப்பும் இன்றைய போப் பெனிடிக்டும் கத்தோலிக்க சபைக்கு வெளியே இறையனுபவம்-மீட்சி சாத்தியமில்லை எனக் கூறியுள்ள நிலையில் அதற்கு ஒருங்கிசைவு தெரிவிக்கும் விதத்தில் மிக சாமர்த்தியமாக கட்டமைக்கப்பட்ட கட்டுரையே கஸ்பாருடையது. இக்கட்டுரை எனக்கு பெரும் ஏமாற்றமே அளிக்கிறது. ஏனென்றால் அதில் நேர்மையாக விஷயத்தை எதிர் கொள்ளும் பார்வையில்லை. இது ஒரு முதல் முயற்சியாக குறையுடையதாக இருப்பினும் நாம் அங்கீகரிக்க வேண்டும் என நீங்கள் சொல்வதிலும் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் இரண்டாம் வத்திகான் முதல் அண்டோனி டி மெல்லா வரையிலான ஒரு முன்னகர்வு பெனிடிக்டிலும் கஸ்பாரிலும் பின்னடைந்துள்ளது. இன்னும் சொன்னால் இதிலிருப்பது 180 டிகிரி திருப்பம். அது மௌனமாக அங்கீகரிக்கப்படுகிறது என்பதுதான் இங்கே பிரச்சனை. இவர் எதை கேள்விக்குள்ளாக்கியிருக்க வேண்டும்? போப் பெனிடிக்ட் கார்டினல் ராட்ஸிங்கராக வெளியிட்ட டொமினஸ் ஜீஸசை அல்லவா? கத்தோலிக்க சர்ச்சுக்கு வெளியே மீட்பு கிடையாது என்பதை அறிவித்த பாப்பறிக்கை அல்லவா அவரால் கேள்விக்குள்ளாக்கப் பட்டிருக்க வேண்டும்? ஆண்டனி டி மெல்லாவின் 'சாதனா' இன்றைய போப்பால் விலக்கப்பட்டுள்ளதற்கு எத்தகைய எதிர்ப்பு ஜகத் கஸ்பாரால் வந்துள்ளது? CBCI தெரிவித்துள்ளது?ஆர்.எஸ்.எஸ் தலைவர் தீண்டாமையை ஆதரித்து அறிக்கை விடுகிறார் என பேச்சுக்கு வைத்துக்கொள்வோம் (ஆர்.எஸ்.எஸ் சாதியத்தை தீவிரமாக எதிர்க்கிறது. இன்றைய தேதியில் சாதியத்தை எதிர்க்கும், இட ஒதுக்கீட்டை சலுகையாக அல்லாமல் உரிமையாக ஆதரிக்கும், இந்துக்களின் மிகப்பரவலான மக்கள் அமைப்பு ஆர்.எஸ்.எஸ் என்பது வேறு விஷயம்) அதனை கொஞ்சம் கூட எதிர்க்காமல் சாதி சமரசத்தை குறித்து நான் ஒரு கட்டுரை எழுதி அதில் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஐரோப்பிய சர்ச்சில் நிலவிய தீண்டாமை குறித்து லெக்சர் அடித்து சொக்கமேலா கதையை ஒரு சர்ச்சின் மீது ஏற்றிப் புனைந்தால் நீங்கள் என்னை இந்த கேள்வியை கேட்க மாட்டீர்களா சிறில்?
மூன்று: கஸ்பாரின் பின்னணி என்றால் எல்.டி.டி.ஈ க்கு பண உதவியில் நடு ஆளாக இருப்பதாக சொல்லப்படுவதிலிருந்து எங்கெல்லாமோ போகும். நான் அதையெல்லாம் தொடக்கூடவில்லை. நான் இங்கே எழுதியிருப்பதெல்லாம் அவர் அந்த கட்டுரைக்கு பயன்படுத்திய தரவுகளையும் அதற்கு தொடர்புடைய விஷயங்களையும்தான். எனவே பின்னணியைப் பார்த்து எடை போடுவது என்கிற கேள்வியே இல்லை. நட்பு என்பது வேறு ஒரு பொதுபுலத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுப்பது என்பது வேறு. ஒரு பொதுபுல நிலைப்பாட்டை எடுக்கும் போது அது நிச்சயமாக அதைக் கூறியவரின் கருத்தியல் பின்னணியில்தான் பார்க்க முடியும். ஆண்டனி டி மெல்லாவை ஏற்க முடிகிற, பிரான்ஸிஸ் ஆஃப் அஸிசியை ஏற்க முடிகிற , பெங்களூர் பெஞ்சமினை ஏற்கமுடிகிற அரவிந்தன் நீலகண்டனுக்கு ஜகத் கஸ்பார் ஒரு போலி நாடகதாரி, ஒரு விஷமக்காரர் எனும் எண்ணம் வருவதற்கும் அது வலுபெறுவதற்கும் இதுவே காரணமும் ஆதாரங்களாகவும் அமைகின்றன.
அன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்
எந்த ஜாதியில் சேர்த்தீர்கள்?
Post a Comment
<< Home