Monday, April 23, 2007

மார்க்சிய காரிருளில் ரஷியாவுக்கு ஒளி அளித்த இந்து தருமம்

ஒரு காலத்தில் எங்கள் பள்ளிக்கூடத்தில் நியூ செஞ்சரிகாரர்கள் புத்தக கண்காட்சி போடுவார்கள். மிகவும் மலிவாக பலதுறை அறிவியல் குறித்த புத்தகங்கள் கிடைக்கும். அவற்றில் நான் வாங்கிய நூல்கள் பெரும்பாலானவை மிர் பதிப்பகத்தார் புத்தகங்கள். அதிலெல்லாம் முன்னுரையில் எப்படி மார்க்சியம் அறிவியலாளர்களை வழி நடத்தி செல்கிறது என்பதைக் குறித்து போட்டிருக்கும். அது போலவே என் தந்தையாரின் சேகரிப்பில் இருந்த சோவியத் இலக்கிய நூல்களை வாசிக்க ஆரம்பித்த போது அதிலும் எப்படி மார்க்சியம் படைப்பாளிகளுக்கு ஊக்க ஒளி அளிக்கிறது என விவரிக்கப்பட்டிருந்தது. 1988களில் எங்கள் வீட்டுக்கு வரும் சோவியத் இதழ்களில் ஒரு மாற்றம் தெரிய ஆரம்பித்தது. மார்க்சியம் அல்லாத இன்ன பிற ஒளிகளும் ரஷிய கலைஞர்களையும் அறிவியலாளர்களையும் வழிநடத்தியிருக்கிறது என்கிற சமாச்சாரம் புலப்பட்டது அப்போதுதான். அத்துடன் கூட மார்க்சியம் ஒரு அழிவு சித்தாந்தமாக விளங்கியிருக்கக் கூடும் என்பதும் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வரலானது.


க்ளாஸ்னாஸ்ட்டும் பெரிஸ்தோரோக்காவும் சோவியத் மாயா பிம்பத்தை சிறிது சிறிதாக கிழிக்க ஆரம்பித்தன. அங்கு தெரிய ஆரம்பித்த நிஜங்கள் பிரச்சார பிம்பங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டன. சோவியத் யூனியனின் அரசு இயந்திரமும் அதன் வேர்கள் பதித்திருந்த சித்தாந்த படுகையும் மானுடத்தினை சிநேகிப்பவை அல்ல என்பது தெளிவாயிற்று. சித்தாந்த எதிர்ப்புடைய அறிவியலாளர்களும் இலக்கிய படைப்பாளிகளும் மிகக் கொடூரமாக களையெடுக்கப்பட்டிருப்பது ஆவண ஆதாரங்களுடன் வெளிப்பட ஆரம்பித்தது. குடும்பங்கள் கொலைச் செய்யப் பட்டிருப்பதுவும், நாசிகளுக்கு இணையான நாசி முகாம்களை விட அதிக எண்ணிக்கையும் திறமையும் வாய்ந்த சைபீரிய அடிமை முகாம்கள் நடத்தப்பட்டிருப்பதுவும், லட்சக் கணக்கான மக்களை துடைத்தெடுத்த பஞ்சங்கள் உருவாக்கப்பட்டிருப்பதுவும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மார்க்சிய காரிருளில் ரஷ்ய கலை மற்றும் அறிவியல் புலங்களைச் சார்ந்த சில மிகச் சிறந்த மிக உயர்ந்த படைப்பாளிகளுக்கு பாரதிய மரபின் தாக்கமும் வழிகாட்டுதலும் இருந்தது என்னும் அதிசயமான உண்மையும் வெளிப்பட்டது. எந்த மரபினை கார்ல் மார்க்ஸ் 'குரங்கையும் பசுவையும் வணங்கும் காட்டுமிராண்டி நிலைக்கு மனிதர்களை கீழே தள்ளிய பண்பாடு ' என குறிப்பிட்டாரோ அந்த மரபின் ஞான ஒளிக் கீற்றுகள் (மார்க்சியம் உருவாக்கிய உயிர் உறிஞ்சும் சோவியத் அரசின் காலத்தில்) ரஷிய அறிவியலாளர்களுள் மிகச்சிறந்தவர்களுக்கு சமய சஞ்சீவினி யாயிற்று.உதாரணமாக விளாதிமீர் ஐவனோவிச் வெர்னாட்ஸ்கி (1863-1945). பூமி ஓர் அதி-உயிர் செயலாக்கமாக விளங்குவதை முதன்முதலாக புவிவேதியியல் மூலம் அவதானித்தவர் இவரே. உயிர் கோளத்தின் புவியியல் தாக்கங்கள் அனைத்து வரையறை கோடுகளையும் தாண்டி இயைந்தியங்குவதை முதன்முதலாக ஆய்வுகள் மூலம் நிறுவியவரும் இவரே. தன் கால அறிவியலின் சாத்திய கூறுகளை மீறிய தொலை நோக்கு பார்வை அவருக்கு இருந்தது. தெயில் தி சார்டினின் 'நியூஸ்பியர் ' '(கூட்டு)மன கோளம் ' (noosphere) எனும் கருத்தாக்கத்தை அறிவியலாளரிடையே இவரே பிரபலப்படுத்தினார். இன்றைய உயிரியல் மற்றும் சுற்றுப்புற சூழலியலில் முக்கிய கருதுகோளாக அறியப்படும் 'கயா' (Gaia) கோட்பாட்டின் முன்னோடியாக விளங்கியவர் அவரே. அக்டோ பர் கலகத்துக்கு 3 வருடங்களுக்கு பின் 1920 இல் அவரது நாள் குறிப்பில் பின் வருமாறு எழுதினார்,
'வாஷ்ரோவின் படைப்பில் நான் தெளிவாக (கீவ்வின் ஜில்யாரோவ்ஸ்கியினை வாசிக்கும் போது உணர்வது போலவே) பாரதிய தத்துவ மரபு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என கருதுகிறேன். இறை மற்றும் ஆத்மா குறித்த வினாக்களை பொறுத்தவரையில் யூத கிறிஸ்தவ மரபுகளை ஒட்டிய நம் சிந்தனைகளைக் காட்டிலும் இந்துக்களின் தத்துவ சமய அறிவு நமக்கு அதிக தெளிவு தரும். '
மீண்டும் தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் மானுடத்திற்கு வேத உபநிஷதங்களின் முக்கியத்துவம் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டார்,
'இக்கடிதத்துடன் நான் வியக்கத்தக்க ரிக் வேத ஸ்லோகம் ஒன்றினை அனுப்புகிறேன். டெய்சனின் சந்தத்துடனான மொழிபெயர்ப்பு. மூலத்துடன் அம் மொழிபெயர்ப்பு ஒத்துள்ளதாகவே கருதுகிறேன்.இது ஏசுவுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன், புத்தர் சாக்ரட்டாஸ் மற்றும் அனைத்து கிரேக்க அறிவியல் தத்துவங்களும் தோன்றுவதற்கு வெகு பல காலமுன்னே வாழ்ந்த ஒரு கவியின் வார்த்தைகள். ஆனால் இன்றைக்கும் பொருந்தும் வண்ணம் அவை ஒலிப்பதை பாருங்கள். நித்தியத்துவத்துக்குள் எகிறிப் பாய்வதாகவே இந்த ஸ்லோகத்தை நான் உணர்கிறேன். ஏனெனில் (பிரபஞ்சத்தின்) சிருஷ்டி கர்த்தரின் இருப்பு அல்லது தேவை குறித்து கேள்வி எழுப்புவதை பாருங்கள். (அதே சமயம்) பிரபஞ்ச இருப்பின் வேர்கள் பிறப்பும் இறப்புமற்ற அறிந்து விளக்கவொண்ணாத தன்மையுடன் உணரப்படுகின்றன, இதயத்தின் தேடலில் அன்பின் உணர்வில். '
ரஷியவியலாளர் அலெக்சாண்டர் சென்கிவிச்சின் வார்த்தைகளில்: 'உலக மக்கள் தங்கள் தங்கள் கலாச்சாரங்களின் மனிதத்துவத்தை உயர்த்தும் மதிப்பீடுகளை காக்கும் ஆற்றலை பழம் பாரதிய ஞான மரபினை அறிதல் மூலம் பெற முடியும் என வெர்னாட்ஸ்கி குறிப்பிட்டார்.' தனது வாழ்க்கையின் அந்திமக்காலத்தில் வெர்னாட்ஸ்கி சுவாமி விவேகானந்தரின் நூல்களில் ஆழ்ந்துவிட்டார்.


நாஸிகளின் படைகள் சோவியத் யூனியனை தாக்கிய போது மார்க்சியம் படையெடுப்பாளனை எதிர்க்க ரஷியர்களுக்கு வலுவூட்டவில்லை. யதார்த்த நிலைகளை அறியாத ஸ்டாலின் செம்படையினை வேண்டிய அளவு நவீனப்படுத்தவில்லை. மேலும் நாஸிகள் மேற்கத்திய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தன் நண்பர்கள் என்றே ஸ்டாலின் நம்பினார். எனவே நாஸி படையெடுப்பின் போது ரஷ்யர்கள் மார்க்சியத்தின் மீது இகழ்ச்சியான வெறுப்படைந்ததில் வியப்பில்லை. அப்போது அவர்களுக்கு வீறு ஊட்டியது ரஷ்ய தேசியவாதம் தான்.


அதே சமயத்தில்தான் புகழ்பெற்ற ரஷ்ய இந்தியவியலாளரான அலெக்ஸி பாரான்னிக்கோவ், துளசி தாஸ் மகராஜின் புனித ராம சரித மானஸை ரஷிய மொழியில் மொழிபெயர்த்தார். ராம காதையின் ஞானமும் தன் மக்களின் அதர்மத்துக்கு எதிரான போராட்டமும் அவருக்கு எத்தகைய உத்வேகத்தை அளித்திருக்கும் என கூற வேண்டியதில்லை. பல ரஷிய கவிஞர்களும் கலைஞர்களும் பாரதிய ஞான மரபினை தம் போராட்டங்கள் நிறைந்த கடின வாழ்க்கையில் ஆறுதலும் உத்வேகமும் அளிக்கும் தாயாக பார்த்தனர். குறிப்பாக ஸ்டாலினின் களையெடுப்புக் காலத்தில் பாரதாம்பிகை வலியால் துடித்தேங்கும் ரஷியர்களுக்கு மன ஆறுதல் அளிக்கும் ஜகத்ஜனனியாகவே விளங்கினாள்.


நிகோலாய் குமிலோவ் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த ரஷிய கவிஞர்களில் ஒருவர். கைது செய்யப்பட்டு மார்க்சிய களையெடுப்பில் 1921 இல் கொல்லப்பட்டவர்.'பாரத பூமி எனும் புனித அற்புதம்
என் மனதெங்கும் ஞான வெள்ளத்தை நிரப்புகிறது '

என பாடினார் அவர். தன் 'தொல் நினைவு ' (Protomemory) எனும் பாடலில் அவர் தன்னை தன் முந்தைய பிறவியில் பாரத அன்னையின் புத்திரனாகவே கருதுகிறார்.அமரவெல்லா இயக்க ஓவியக் கலைஞர்கள்

ரஷிய ஓவிய இயக்கங்களில் 'அமரவெல்லா'(Amaravella) இயக்கம் முக்கியமானது. சோவியத்களால் மிகவும் முயன்றும் இவ்வியக்கத்தின் படைப்பாக்கத்தின் கழுத்தை நெறிக்க முடியவில்லை. அக்டோ பர் கலகத்துக்கு முன்பும் சரி பின்பும் சரி இவ்வியக்கம் மிகுந்த ஊக்கத்துடன் செயல்பட்டு வந்தது. எனினும் 1917க்கு பின் ஓவிய கண்காட்சிகள் முழுமையாக தடைப்படுத்தப்பட்டன. 'அனுமதிக்கப்பட்ட ' புலங்களிலேயே ஓவியங்கள் உருவாக்கப்படவேண்டும் என்பது தீட்டப்பட்ட ஓவியங்களும் ஓவியர்களும் சூரிய ஒளியையும் பொதுமக்கள் கண்களையும் சந்திக்க முன் நிபந்தனையாக இருந்தது. 1960களின் இறுதியில்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களில் சில கண்காட்சிகள் அனுமதிக்கப்பட்டன. 1980 களின் இறுதியில்தான் முழுமையான தடை நீக்கம் இவ்வோவியங்களுக்கு வழங்கப்பட்டது. அமரவெல்லா ஓவிய இயக்கத்தை உருவாக்கிய பத்தேயேவ் (1891-1971) பிரபஞ்ச வெளியால் மிகவும் கவரப்பட்டவர். பிரக்ஞையே அனைத்துமாகிறது என கருதிய இவர் ஓவியத்தை பரிபூரணத்துவம் நோக்கி ஓவியனை நகர்த்தும் ஆன்மீக சாதனையாகவே கருதினார். கியூபிஸத்தை மிகவும் வரவேற்றார் எனினும் தன் தனித்துவத்தை கைவிடவில்லை.

பத்தேயேவின் ஓவியம்: மற்றொரு கிரகத்தின் பிரகாசிக்கும் வான் மண்டலம்

1917 இல் அவர் பின்வருமாறு எழுதினார்: 'கியூபிஸம், உயர்த்துவம், பாரதிய யோகம், நவீன அறிவியல் தரும் பார்வை இவை அனைத்தும் நம்மை பிரபஞ்சம் தழுவிய ஆன்ம உணர்வு நோக்கி நகர்த்துகின்றன.' பத்தேயேவின் முக்கிய சீடர் தனது பதினேழாவது வயதில் அவருடன் இணைந்த சிம்ர்னோவ். பின்னர் 1920களில் ருனா எனும் புனைப்பெயர் உடைய ப்ஷிசெட்காயா எனும் பெண் ஓவியரும் இணைந்தார். பாரதிய ஞான மரபில் பெரும் ஆர்வம் கொண்டவர் இவர்.

இச்சிறிய வட்டத்துடன் தொடர்பு கொண்ட மற்றொரு ஓவியர் ரோயிரிச். 1926 இல் சிமர்னோவ் ரோயிரிச்சை சந்தித்தார். பாரதத்தின் ஆன்ம ஞான மரபுகளில் தாம் மிகவும் ஆர்வம் கொண்டிருப்பதை ரோயிரிச்சின் மனைவியான எலெனா ரோயிரிச்சிடம் சிமர்னோவ் தெரிவித்தார். இந்த சந்திப்பினை தொடர்ந்து 'அமரவெல்லா ' இயக்கத்தின் வழிகாட்டியாக 'ஜீவிக்கும் தர்மத்தின் போதனை' எனும் பிரம்ம ஞான நூல் பயன்பட்டது. ஓவியம் மூலம் 'பிரம்மத்தின் சுவாச லயமாக பிரபஞ்சத்தின் இருப்பை உணர்தல்' என்பதே இந்த இயக்கத்தின் அடிநாதமாயிற்று. இச்சிறு வட்டம் தம் ஓவிய நெருப்பினை காப்பாற்ற மிகவும் பாடுபட வேண்டியதாயிற்று. பாட்டாளி வர்க்க சுவர்க்க பூமியில் பத்தேயேவ் கொடுமையான வறுமை வாட்ட இறந்தார். இத்தனைக்கும் அமரவெல்லா ஓவியங்களுக்கு வெளிநாடுகளில் பெரும் மதிப்பு இருந்தது. 1919 இல் ரோயிரிச் 64 கவிதைகள் அடங்கிய தொகுப்பினை , மோர்யாவின் மலர்கள் எனும் தலைப்பில் வெளியிட்டார். ரோயிரிச்சின் ஆன்மிக உட்பயணத்தின் வெளிப்பாடுகளாக அவை அமைந்தன. இரினா கார்ட்டன் ரோயிரிச்சின் ஆன்மிக கருத்தியல் குறித்து பின்வருமாறு கூறுகிறார்,

'ஆதி அந்தமற்ற பிரபஞ்சமாக கணக்கற்ற சுழற்சிகளில் வெளிப்பட்டு அழியும், பருப்பொருட்களிலும் செயலாக்கங்களிலும் துடிக்கும் இறை சக்தி எனும் இந்து தத்துவமே அவரது ஆன்மீகத்தின் அடிப்படை'நிகோலஸ் ரோயிரிச்

ரோயிரிச் தன் கவிதை ஒன்றில் கூறுகிறார்,
'சகோதரா நிலையற்ற மாற்றங்களை
கைவிட்டு வா
நேரமிருக்காது பின் நமக்கு
நம் சிந்தனைகள் மாறா பெரும் பொருளை பற்றி நிற்க
நித்தியத்துவத்தை நோக்கி செல்ல'


விரைவில் ஸ்டாலினிய களையெடுப்பு தொடங்கியது. நித்தியத்துவத்தின் அமர தேசமாம் பாரதத்தை ரோயிரிச் கண்டடைந்தார். ரோயிரிச்சின் பெரும் சாதனையில் ஒன்று அமெரிக்காவில் அவரால் உருவாக்கப்பட்டு 1935 இல் அமெரிக்க சார்பு நாடுகளால் கையெழுத்திடப்பட்ட ரோயிரிச் ஒப்பந்தம். போர் காலங்களில் பகை நாடுகளின் அறிவாலயங்கள் மற்றும் கலாச்சாரச் சின்னங்களை தாக்குவதில்லை எனும் இந்த ஒப்பந்தம் இன்று உலக நாடுகள் அனைத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பாரதத்தினை தன் நிரந்தர தாயகமாக மாற்றிக் கொண்ட ரோயிரிச் தன்னால் உருவாக்கப்பட்ட யோக முறைக்கு அக்னி யோகம் என வேத தெய்வத்தின் பெயரினை அளித்தார். முக்கடலும் சூழ தாமரையின் இதழொப்பும் நிலப்பரப்பில் அமர்ந்து வானோர் தொழுதேத்தும் பெண் தெய்வத்தினை ஜகன்மாதாவாக கண்டார் ரோயிரிச். கீழே ரோயிரிச்சின் சில ஓவியங்கள்:


கிருஷ்ணர்


அர்ஜுனர்


இமாலயத்தின் மகா ஆன்மா


தாமரை


ஜகத்ஜனனி (Mother of the world)ரஷிய அறிவியல் புனைகதைகளின் பிதாமகரும் உலகப்புகழ் பெற்ற தொல்லுயிரியலாளருமான இவான் அந்தோனோவிச் யெஃபிரமோவ் (1907-1972) அதிகார வட்ட மார்க்சிய இலக்கிய விமர்சகர்களின் கண்டனதிற்கு ஆளானவர். அழகியலுக்கு உயிரியல் வேர்கள் இருக்கலாம் எனும் இவரது கருத்து சோவியத் மார்க்சிய இலக்கிய விமர்சகர்களால் 'வக்கிரம் கொண்டது' என கருதப்பட்டது. வேதகால பாரதமும் கிறித்தவம் வெல்லாத 'பாகன் ' (Pagan) ரஷியாவும் அவரது இரு பெரும் காதல்கள். உலகப்புகழ் பெற்ற ரஷிய அறிவியல் புனை நாவலான 'அண்ட்ரோமிடா காலக்ஸி 'யில் மனித குலம் முதன் முதலாக நட்சத்திர மண்டலங்களுக்கிடையேயான விண்கலனை அனுப்புகிறது. அக்கலத்தின் பெயர் 'தந்த்ரா '! அவர் பாரதத்திற்கு ஒருமுறை கூட வந்ததில்லை எனினும் அதன் ஆலயங்கள் குறித்து மிக தெளிவான அறிவுடன் இருந்தார். சமஸ்கிருத புலமையும் பெளத்தம் குறித்த தெளிவான அறிவும் அவர் கடின உழைப்பின் மூலம் சம்பாதித்தவை. மார்க்சிய, பின்நவீனத்துவ சித்தாந்தங்கள் போன்றவையோ ஓடும் நதியில் தோன்றி மறையும் காற்றுக்குமிழை ஒத்தவை. பாரதத்தின் வேதாந்த ஞான மரபோ வற்றாத ஜீவ நதியாக காலம் காலமாக வாழ்வளிக்கிறது கங்கையையும் வோல்காவையும் போல உலகனைத்துக்கும் ஒளியாக.


பயன்படுத்தப்பட்டவை:

1. Soviet Literature (No.8 (497),1989) 'A pilgrimage to the world of immortal images ', அலெக்சாண்டர் சென்கிவிச் மூல ரஷிய கட்டுரையின் ஆங்கில மொழி பெயர்ப்பு: அலெக்சாண்டர் மிக்கேய்வ்.
2. Science in the USSR, (No. 2 March-April,1990), 'The Amaravella Group ', பேரா.D.போஸ்பொலோவ்.
3. Science in the USSR, (No.4 July-August,1990), 'The Yeferemov Phenomenon ', ஐ.சோரிச்.
4. http://www.roerich.org

(இக்கட்டுரை சில ஆண்டுகளுக்கு முன்னர் திண்ணையில் வெளியானது. தற்போது சிறிது அதிக தகவல்களுடனும் ஓவியங்களுடனும் வெளியிடப்படுகிறது.)

5 Comments:

Anonymous Anonymous said...

மிக அருமையான கட்டுரை....பல செய்திகள் தெரிந்துகொள்ள ஏதுவாக இருந்தது. நன்றி அரவிந்தன்.

5:31 AM, April 24, 2007  
Anonymous Anonymous said...

Mr. Arvindan,

Yet another wonderful article. I always envy you for your broad knowledge in everything.

Vaazhga VaLamudan.

12:38 PM, April 24, 2007  
Blogger Hari said...

அரவிந்தன்,
உங்கள் கட்டுரைகளில், நீங்கள் உபயோகிக்கும் அறிவியல் சம்பந்தமான வார்த்தைகள் தமிழிலேயே உள்ளன. நன்று. ஆனால் அவற்றின் ஆங்கில வார்த்தைகளையும் வெளியிட்டால் கூகுளாண்டவரை 'வேண்டும்' போது வசதியாக இருக்கும்.

உதாரணமாக, "முரண்பாட்டு இயங்கியல்" என்று 'வேண்டினால்', பாவம் விழிக்கிறார்.

ஒரு index போல தொகுத்தால் கூட நல்லதே. சற்று சிரமம் தான், இருந்தாலும் உபயோகமாக இருக்குமே.

நன்றி

12:01 AM, April 25, 2007  
Blogger ஜடாயு said...

அருமையான கட்டுரை, அரவிந்தன். அழகு ஓவியங்களுடன் வெளியிட்டது இன்னும் சிறப்பு.

// எந்த மரபினை கார்ல் மார்க்ஸ் 'குரங்கையும் பசுவையும் வணங்கும் காட்டுமிராண்டி நிலைக்கு மனிதர்களை கீழே தள்ளிய பண்பாடு ' என குறிப்பிட்டாரோ //

கார்ல் மார்க்ஸ் தங்கள் பண்பாட்டைப் பற்றி என்ன சொன்னார் என்று ஒவ்வொரு பாரத குடிமகனும் அறியுமாறு இதை பெரிய எழித்தில் எல்லா கம்யூனிஸ்டு கட்சி அலுவலக வாசல்களிலும் எழுதி வைக்க வேண்டும்.

// அந்த மரபின் ஞான ஒளிக் கீற்றுகள் (மார்க்சியம் உருவாக்கிய உயிர் உறிஞ்சும் சோவியத் அரசின் காலத்தில்) ரஷிய அறிவியலாளர்களுள் மிகச்சிறந்தவர்களுக்கு சமய சஞ்சீவினி யாயிற்று. //

இதை இன்றைக்கு ரஷ்யாவில் கூட பலர் ஒப்புக்கொள்கிறார்கள், இல்லையா?

ரோய்ரிச் பெங்களூரில் தான் வாழ்ந்தார் என்று தெரியும். அவரது ஓவியங்கள் அடங்கிய காலரி மற்றும் "ரோய்ரிச் எஸ்டேட்" இங்கு உள்ளது. இதைப் படித்த பிறகு அங்கு சென்று காண வேண்டும் என்ற ஆவல் எழுகிறது.

அழகும், ஒளியும் பொங்கும் அந்த பாரதமாதா படம் அவனீந்திரநாதத் தாகூர் (ரவீந்திரரின் சகோதரர்) வரைந்தது தானே?

2:28 AM, April 26, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//ஒரு index போல தொகுத்தால் கூட நல்லதே. சற்று சிரமம் தான், இருந்தாலும் உபயோகமாக இருக்குமே.//
செய்கிறேன் ஹரி.
//இதை இன்றைக்கு ரஷ்யாவில் கூட பலர் ஒப்புக்கொள்கிறார்கள், இல்லையா? //
ஜடாயு. ஆம். வெர்னாட்ஸ்கியின் இந்து தரும தொடர்பு/ஈர்ப்பு முக்கியமானது. ஏனெனில் உயிரியலையும் நிலவியலையும் இணைத்து சிந்தித்த மாபெரும் மேதை அவர். கிழக்கத்தி ஆள் என்பதால் ஐரோப்பியர்களால் கவனிக்காமல் விடப்பட்டவர். 1970களுக்கு பிறகுதான் இவரது முக்கியத்துவத்தை சோவியத்துகளே வெளிப்படையாக பேச ஆரம்பித்தார்கள். 1990களுக்கு பின்னர் இவர் புகழ் வெளிநாடுகளுக்கும் செல்ல ஆரம்பித்தது.
லியோ டால்ஸ்டாயும் கூட ராமக்ருஷ்ண அமுதமொழிகளால் ஈர்க்கப்பட்டவர்தாம். Periodic table மெண்டலீப் ஒரு சமஸ்கிருத அறிஞர். அவரால் ஊகிக்கப்பட்ட சில தனிமங்களுக்கு சமஸ்கிருத எண்ணடுக்குகளையே அளித்திருந்தார் உதாரணமாக ஏகபோரான் (Eka Boron) என்பது போல.
//அழகும், ஒளியும் பொங்கும் அந்த பாரதமாதா படம் அவனீந்திரநாதத் தாகூர் (ரவீந்திரரின் சகோதரர்) வரைந்தது தானே? //
ஆம்.

2:44 AM, April 26, 2007  

Post a Comment

<< Home