Tuesday, April 03, 2007

ஆர்.எஸ்.எஸ்ஸும் இட ஒதுக்கீடும்


இட ஒதுக்கீட்டுப்பிரச்சனை உணர்வுபூர்வமான விஷயமாகிவிட்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. இட ஒதுக்கீட்டை எதிர்த்து 1988 இல் குஜராத்தில் ஒரு பிரம்மாண்ட இயக்கம் தோன்றியது. ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் சங்கத்தின் அகிலபாரத பிரதிநிதிகள் சபையின் கூட்டம் நடைபெறும், இந்த கூட்டத்தில் அந்த பிரச்சினை எழுந்தது. குஜராத் ஊழியர்கள் இடஒதுக்கீட்டுப் பிரச்சனையால் மிகவும் வேதனைப்பட்டார்கள். இட ஒதுக்கீட்டை ஆதரிப்பது என்கிற தீர்மான வாசகம் பிரதிநிதி சபையின் முன்னர் வைக்கப்பட்டது. அதன் ஒவ்வொரு சொல்லையும் எடுத்துக்கொண்டு விரிவாக விவாதம் நடந்தது. நன்கு அலசி ஆராயப்பட்டது. இவ்வாறு ஆதரிப்பது அவசரகோலம் என்பது பிரதிநிதிகள் பலரின் கருத்து. சமுதாயத்தின் ஒரு பெரும் பிரிவு இதனால் ஆத்திரப்படும். குஜராத் ஸ்வயம் சேவகர்களோ கோபமாகத்தான் இருந்தார்கள். நான் அப்போது இந்த சர்ச்சைகளைக் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். ஊழியர்களின் இத்தகைய எதிர்ப்பைக் கண்டு தீர்மானம் நிறைவேறாது எனத் தோன்றியது.


சங்கத்தின் மூன்றாவது தலைவர் பரம பூஜனீய ஸ்ரீ பாளாசாகேப் தேவரஸ் மிகவும் அமைதியாக விவாதம் முழுவதையும் கேட்டுக்கொண்டிருந்தார். விவாதம் முடிந்து தேனீர் இடைவேளை. பிறகு எல்லா பிரதிநிதிகளும் ஒன்று கூடினர். அப்போது தேவரஸ்ஜி கூறினார், "இட ஒதுக்கீடு தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதம் முழுவதையும் நான் கேட்டுக்கொண்டிருந்தேன். நம்மில் சிலர் இத்தீர்மானத்தை எதிர்க்கின்றனர். அதுவும் கவனத்துக்கு வந்தது. இட ஒதுக்கீடு பெறுபவர்களின் மனநிலையில் இருந்து இந்த விஷயத்தை ஆராயவேண்டும் என்பதுதான் நான் உங்கள் எல்லோரிடமும் வேண்டிக்கொள்வது. பலநூறு ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் ஒதுக்கிவைக்கப்பட்ட நமது சமுதாய சகோதரர்களின் இன்றைய நிலை என்ன என்பதனை எண்ணிப்பாருங்கள். அவர்களது உணர்வுகளை எண்ணிப்பாருங்கள். அதன் பிறகு இந்த விஷயத்தில் ஒரு முடிவுக்கு வாருங்கள்." - ஸ்ரீ தேவரஸ் இவ்வாறு சொன்னபிறகு தீர்மானத்தின் மீது குறிப்பிடத்தக்க அளவில் விவாதம் எதுவும் ஏற்படவில்லை. உடனே தீர்மானம் ஏற்கப்பட்டது. இவ்வாறு சங்கம் அதிகாரபூர்வமாக இடஒதுக்கீட்டை ஆதரித்தது.


...இட ஒதுக்கீடு குறித்து ஸ்ரீ சுகதேவ் நவ்லே சுவாரஸ்யமான ஒரு சுவாரஸ்யமான ஒரு உதாரணத்தை சொல்லுவார்: "கிராமத்தில் எனக்கு சிறிதளவு விளைநிலம் உள்ளது. நான் நேரில் போய் விவசாயம் செய்வதில்லை. என் அண்ணன் பார்த்துக்கொள்கிறார். ஆனால் வயல் என் பெயரில் இருக்கிறது. ஒரு முறை நிலவளவங்கி என் பெயருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது. என் நிலத்தை வைத்து வாங்கப்பட்ட கடனை அடைப்பது குறித்தது அந்த நோட்டீஸ். எனக்கு ஆச்சரியம். வயல் மீது நான் கடன் வாங்கவே இல்லை. வங்கியில் போய் விவரம் கேட்டேன். என் பெயரில் கடன் வாங்கியிருப்பது உண்மைதான் என்று தெரியவந்தது. என் பூமிப்பத்திரத்தின் 7 ஆம் பக்கத்தில் கடன் விவரம் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆக, நான் ஒரு போதும் வாங்காத கடனை நான் அடைக்க வேண்டியிருந்தது." வயல் மீது வாங்கிய கடனைப் பற்றிய 7 ஆம் பக்க கதையைக் கூறிவிட்டு ஸ்ரீ நவ்லே கூறுகிறார்: "நமது பாரத மாதாவின் பத்திரத்திலும் இது போல் 7 ஆம் பக்க விவரம் என்ன என்று பார்க்க வேண்டும். நமது முன்னோர்கள் நம் பெயரில் நிறைய கடன் வாங்கியிருப்பது தெரியவரும். அந்தக் கடனை நாம்தான் அடைக்க வேண்டும். 'நமது தலைமுறை தலித்துகளை கொடுமைப்படுத்தவில்லை' என்று சொல்லி தப்பி விடமுடியாது. காரணம், நம் முன்னோர்களின் கடன் நமது பூமி பத்திரத்தின் ஏழாம் பக்கத்தில் காட்டப்பட்டுள்ளது. அதை நாம் அடைத்துதான் தீர வேண்டும். இந்த நிலத்திலிருந்து கிடைக்கிற இலாபத்தை அனுபவிக்கிற நாம் இந்த நிலத்தின் மீதுள்ள கடனை எப்படி மறுக்கமுடியும்? நாம் நிலத்துக்கு சொந்தம் கொண்டாடுபவர்கள் என்பதால் அதன் மீதுள்ள கடனுக்கும் பொறுப்பு ஏற்கத்தான் வேண்டும்." நவ்லே கொடுத்த இந்த உதாரணம் மிகவும் பொருள் பொதிந்தது. இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் இது குறித்து தீவிரமாக சிந்திக்கவேண்டுமென்று இந்த உதாரணம் சுட்டிக்காட்டுகிறது.



  • 'ஆர்.எஸ்.எஸ்ஸும் மனுவாதமும்' நூலில் இருந்து (பக். 92-95)
  • ஆசிரியர்: மானனீய ஸ்ரீ ரமேஷ் பதங்கேஜி
  • ஜனவரி 1999
  • சக்தி புத்தக நிலையம் ரூ. 30

8 Comments:

Anonymous Anonymous said...

இடஒதுக்கீட்டை எதிர்க்க வேண்டியதில்லை , ஆனால் தலைமுறை தலைமுறையாக சிலரே அதை அனுபவிப்பதை நிச்சயம் எதிர்க்க வேண்டுமல்லவா ?

8:33 AM, April 03, 2007  
Blogger வஜ்ரா said...

இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் வெகுசிலராகத்தான் இருக்க முடியும்.

இந்த சில ஆண்டுகளில் என் தீவிர இடஒதுக்கீட்டு எதிர்ப்பு நிலையை நானும் மாற்றிக் கொண்டுள்ளேன்.

இட ஒதுக்கீடு என்பது வெறும் சாதி அடிப்படையில் இல்லாமல் மேலும் பல நடைமுறை நிலைகளையும் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படவேண்டும்.

வெறும் சாதி அடிப்படை இட ஒதுக்கீடு ஒரு ஆதிக்க சாதியை அகற்றி அந்த இடத்தில் இன்னொரு ஆதிக்க சாதியை வைக்கும் முயற்சியாகவே இப்பொது பார்க்கிறேன்.

9:35 AM, April 03, 2007  
Anonymous Anonymous said...

// நமது முன்னோர்கள் நம் பெயரில் நிறைய கடன் வாங்கியிருப்பது தெரியவரும். அந்தக் கடனை நாம்தான் அடைக்க வேண்டும். 'நமது தலைமுறை தலித்துகளை கொடுமைப்படுத்தவில்லை' என்று சொல்லி தப்பி விடமுடியாது.//

இந்த உருவகம் ஒரு வகையில் உச்சநீதி மன்றத்த் தீர்ப்புகளிலும் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது. சட்டத்தில் "அனைவருக்கும் சமமான அடிப்படை உரிமைகள், சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்று இருக்கிறது. ஆனாலும் இட ஒதுக்கீட்டால் சிலர் பாதிக்கப் படும் போது, பொது நலன் கருதி அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால் தற்போது நடைமுறையில் இது பொது நலன் பயப்பதாகவும் இல்லை.

இட ஒதுக்கீடு அளிக்கப் படும் போது, அது கீழ்க்கண்டவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பது நீதிமன்றக் கருத்து -

- இட ஒதுக்கீடு உச்ச வரம்பு - 50% - இடஒதுக்கீடு பெறாதவரின் இன்றைய தலைமுறையின் சமத்துவத்தை முழுவதும் மீறிவிடக்கூடாது / முடியாது.
- ஏற்கனவே முன்னேறியவர்களை (creamy layer) நீக்குதல்
- இட ஒதுக்கீடு பயன் பெறுபவர் பின் தங்கியவராக இருத்தல். (இல்லையென்றால் அதன் மூலம் வாய்ப்பை இழந்தவரின் சம உரிமை எந்தக் காரணமுமின்றி மீறப்பட்டதாக ஆகும் - Treating equals as unequals or unequals as equals)

சமூகத்தில் ஆளுமையில் இருந்தவர்கள், வணிகம் செய்தவர்கள் எல்லாரையும், "நீயும் நானும் பிற்படுத்திப் பிற்படுத்தி விளையாடுவோமா" என்று பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்து, அதை நியாயப்படுத்த சமூகத்து இன்னல்களுக்கு - நீங்கள் சொல்லியிருக்கும் கடன்களுக்கு - ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் பொறுப்பாளியாக்குவது சரியா? அது கடனை திருப்பிச் செலுத்துவதா, இல்லை கந்து வட்டி ராக்கெட் வட்டியா?

9:17 PM, April 03, 2007  
Blogger ஜடாயு said...

இட ஒதுக்கீடு பற்றிய சங்கத்தின் சிந்தனை, நிலைப்பாட்டை ஒரு சம்பவம் மூலம் தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். நல்ல பதிவு.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நூல் ரமேஷ் பதங்கே அவர்கள் மராட்டியில் எழுதியது - "சங்க, மனு ஆணி மீ" (சங்கமும், மனுவும், நானும்). சாதீயம் மற்றும் சாதி ஒழிப்பு பற்றி பேசும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. இதன் informal ஆங்கில மொழிபெயர்ப்பு இந்த இணைய தளத்தில் உள்ளது -

http://www.hvk.org/specialrepo/mms/

9:43 PM, April 03, 2007  
Blogger Hariharan # 03985177737685368452 said...

இட ஒதுக்கீடு மெய்யாக கீழ்நிலையில் இருப்போரை மேலேற்றி விட வேண்டும்.

ஆட்சி அதிகாரம் பெறும் பிழைப்புவாத அரசியல் ஆயுதமாக உருப்படவிடாத திட்டமாக இருக்கும் தற்போதைய அவலநிலை மாற்றப்படவேண்டும்.

முன்னேறிய நிலையில் இருப்பவர்கள், முன்னேறி வந்தவர்கள் தனிப்பட்ட உதவிகளாக தங்களுக்குக் கீழிருப்போரை மேலேற்றிவிட உதவிடும் மனோபாவத்தை அரசுகளில் அமைச்சர், அதிகாரிகள் என உயர் பதவிகளில் இருப்போர் முன்னுதாரணமாக இருந்து வழிகாட்ட வேண்டும்.

11:57 PM, April 03, 2007  
Anonymous Anonymous said...

அரவிந்தன்

ஏற்றுக் கொள்ள முடியாத கருத்து. தலித்துக்க்களை அடிமையாக நடத்திய ஜாதிகள் ஆயிரம் இருக்க அதில் ஒரு ஜாதியினர் மட்டுமே கடனை அடைக்க்க வேண்டும் என்று சொல்வதும் அதில் அதிக எண்ணிக்க்கையில் இரூக்கும் ஆதிக்க ஜாதிகளுக்கு சலுகைகள் தொடாவதும் எந்த விதமான கடன் அடைப்பு என்று விளக்க முடியுமா? அவர்கள் எல்லோரும் எப்பொழுது கடன் அடைக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளல்லாமா?

அன்புடன்
ச.திருமலை

12:20 AM, April 04, 2007  
Blogger Muse (# 01429798200730556938) said...

இட ஒதுக்கீடு பற்றிய அம்பேத்காரின் கருத்து என்ன?

இட ஒதுக்கீடு குறித்து அவர் செய்திருந்த வரையறைகள் என்ன?

2:07 AM, April 04, 2007  
Blogger Muse (# 01429798200730556938) said...

அரவிந்தன் அவர்களே, மன்னிக்கவும்.

அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசரத்தில் இரண்டு அருமையான பதிவுகளுக்கிடையிலான வித்யாஸத்தைக் காணத்தவறிவிட்டேன். தவறான கட்டுரையின்கீழ் பின்னூடமிட்டுவிட்டேன்.

இதை உடனடியாக இங்கே பதிந்து, உடனடியாக தவற்றை திருத்தி தவறை திருத்தத் தயாராக உள்ள ஹிந்துதான் நான் என்பதை எனக்கு நானே உறுதி செய்துகொள்ளுகிறேன்.

----------------------------------------

தங்கள் ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று பெரும்பாலான இயக்கங்கள், அரசியல் கட்சிகள் போராடும்போது, உண்மையிலேயே தாழ்த்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட, அடக்கப்பட்டவர்களான தலித்துகளுக்காக ஆர் எஸ் எஸ் தலைவர்கள் குரல் கொடுப்பது அவர்கள் மற்ற அரசியல் தலைவர்கள்போல சொந்த ஜாதி ஜனங்களுக்கோ, வாத்திகனுக்கோ, ஏதேனும் காலிஃபாவிற்கோ கட்டுப்பட்டவர்களாக இல்லாதவர்கள், தர்மத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதைத்தான் காட்டுகின்றது.

எனக்கு சில சந்தேகங்கள், அரவிந்தன் அவர்களே.

இருப்பதிலேயே அதிக அளவு எண்ணிக்கையில் இருப்பவர்கள் தலித்துக்கள்தானே. அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் மூலம் எத்தனை பெர்ஸன்டேஜ் கிடைக்கிறது? அது மற்ற ஒடுக்குகிற சாதியினருக்குக் கிடைத்துவரும் அளவோடு கம்பேர் செய்தால் அதிகமாகத்தான் இருக்கவேண்டும்.

1. அதிகமாய் இருக்கிறதா?

2. இல்லை என்றால், ஏன் இல்லை?

3. தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட அளவு, நிஜமாகவே அவர்களுக்குக் கிடைக்கிறதா?

4. கிட்டுகின்ற அளவை வைத்துக்கொண்டு அவர்களால் முன்னேற முடிகின்றதா? இல்லை என்றால்,

a. எவை அந்த முன்னேற்றத்தைத் தடுக்கின்றன?

b. இப்போது கிடைத்துவருகின்ற ஒதுக்கீட்டு விகிதம் அதிகரிக்கப்படவேண்டுமா?

c. இந்த இட ஒதுக்கீட்டினை மறு பரிசீலனை செய்து, தலித்துக்களுக்கு நிஜமாகவே பயன்படும் ஒரு முறை என்ன என்பதை கண்டறிய வேண்டுமா?

5. ஆர் எஸ் எஸ் போன்ற ஹிந்துத்துவ அமைப்புக்களில் இருக்கும் தலித் தலைவர்களின் சதவிகிதம், மற்ற இயக்கங்களில், கட்சிகளில் இருப்பதைவிட அதிகமாக இருப்பதற்குக் காரணங்கள் என்ன?

8:20 PM, April 05, 2007  

Post a Comment

<< Home