மேற்கு வங்காளத்தில் சிலநாட்கள்
அண்மையில் ஒரு வாரம் மேற்கு வங்காளத்தில் இருக்க முடிந்தது. கொல்கத்தாவில் ஓரிரு நாட்கள் தவிர மற்ற நாட்களெல்லாம் வங்கத்தின் மூலைகளில் இருக்கும் வனவாசி கிராமங்களில் கழிந்தன. மண் வீடுகள், அடிப்படை மின்சார வசதியோ அல்லது மருத்துவ வசதியோ அற்ற கிராமங்கள். (இவை கொல்கத்தாவிலிருந்து பத்து மணிநேர தொலைவில்தாம் உள்ளன.) சில தன்னார்வ அமைப்புகளின் உதவியால் குழந்தைகள் பள்ளி செல்கின்றன. வனவாசிகளுக்கு சில அமைப்புகளின் உதவியால் நிலங்கள் பட்டா போட்டு கிடைக்கின்றன. ஆனாலும் என்ன ...
வறண்ட கோடைக்காலங்களில் அவர்கள் நிலத்தை தரிசாக போட்டுவிட்டு நகரங்களுக்கு (குறிப்பாக கொல்கத்தா) செல்கின்றனர். கொல்கத்தாவின் தொழிலாளர் சந்தை ஏற்கனவே பீகாரிகளாலும், உத்தரபிரதேச காரர்களாலும் நிரம்பி வழிகிறது. வனவாசி இளைஞர்கள் அவர்களோடு போட்டியிட வேண்டும். நகரங்களில் இம்மக்கள் பொதுவாக எல்லாவித சுரண்டலுக்கும் ஆட்படுத்தப்படுகிறார்கள். வளங்குன்றா வேளாண் தொழில்நுட்பங்கள் மூலம் வறண்ட காலத்திலும் சாகுபடி செய்ய முடிந்தால் ஓரளவு இந்த கொடுமைகளை கட்டுப்படுத்த முடியும். ஆனால் இந்த முக்கு மூலைக் கிராமங்களுக்கு மின்சாரமே ஒழுங்காகக் கிடைக்கவில்லை ...ஏதாவது மருத்துவ சேவை தேவைப்பட்டால் குறைந்தது 20 கிமீ சென்றால்தான் கிடைக்க்கும். இந்நிலையில் தன்னார்வ அமைப்புகள்தாம் இம்மக்களுடன்
வாழ்ந்து இத்தகைய தொழில் நுட்பங்களை வளர்த்தெடுத்து வேரூன்ற செய்யவேண்டும். சமுதாய மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் முதல் வறட்சியை தாக்குப்பிடிக்கும் வட்டார பயிர்வகைகள் வரை என பல்வேறு உள்ளீடுகள் தேவைப்படும். அவற்றையெல்லாம் செய்ய இக்கிராமங்களிலேயே தங்கி அதனையே ஜீவசாதனையாக செய்ய கர்மயோகிகள் கட்டாயம் தேவை. யார் செய்வார்கள்?
சென்று பார்த்த மற்றோர் இடம் நிம்பித் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமம். முதலில் கூறிய வறண்ட சூழலுக்கு நேர் எதிர்.இங்கு மழை நீர் கட்டித்தங்குவது தான் பெரிய பிரச்சனை. சுந்தர்வன நிலப்பரப்பில் கிராமங்கள் என்பவை பொதுவாக தீவுகள்தாம். இங்கும் மக்கள் கடின ஜீவனம்தான் நடத்துகிறார்கள். இவர்களது நிலையை கண்டு தம் ஆன்மிக வாழ்வின் சாதனையையே இவர்களுக்காக சேவை செய்து வாழ்வதுதான் என அர்ப்பணித்தவர் ஸ்வாமி புத்தானந்த மகராஜ். அவரால் நிறுவப்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமம் நிம்பித் எனும் கிராமத்தில் உள்ளது. அவர்கள் அமைதியாக செய்யும் சேவைகளை -அவற்றின் அபரிமித விரிவை ...வெளிப்பகட்டற்ற விளம்பரமற்ற தன்மையை- காண்கையில் உண்மையிலேயே பெரும் மன எழுச்சி ஏற்படுகிறது. சுந்தர்வன மக்களுக்காக பலவித வளங்குன்றா
வேளாண் அமைவுகள் உருவாக்கப்பட்டு அவை களமிறக்கப்படுகின்றன. அடிப்படை திசு ஆராய்ச்சி முதல் மனிதக்கழிவு/சாண எரிவாயு கலன்கள், மீன் வளர்ப்பு இத்யாதிகள், உயிர் உர உற்பத்தி முதலியன என அனைத்து வித அனைத்து தள ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு அவற்றில் வெற்றிகளாக கண்டறியப்படுபவை களவிரிவாக்கம் மூலம் சுந்தரவன ஏழை விவசாயிகளை சென்றடைகின்றன. தலித்-வனவாசி குழந்தைகளுக்காக மட்டுமே ஒரு மிகச்சிறந்த கல்விக்கூடம் நடத்தப்படுகிறது. ஒரு வகுப்புக்கு 30 மாணவர்களே எடுத்துக்கொள்ளப்பட்டு
அவர்களுக்கு பிரத்யேக பயிற்சி வழங்கப்படுகிறது. மாநில அளவில் மாணவர்கள் எப்படியும் வருடத்துக்கு மூன்று நான்கு ரேங்கள் எடுத்துள்ளார்கள்.எப்போதுமே ஆசிரம வளாகத்தில் விவசாயிகளுக்கு (மகளிருக்கும் ஆடவருக்கும்)தொழில்நுட்ப விரிவாக்கப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. விவேகானந்த உயிரியல் தொழில்நுட்ப மையம் ஒரு தலைசிறந்த தொழில்நுட்ப மையமாக திகழ்கிறது. கொல்கத்தாவிலிருந்து நிம்பித் ஆசிரமம் 65-70 கிலோ மீட்டர்கள்தான் என்றாலும் தரமற்ற சாலைகளும் போக்குவரத்து நெரிசலுமாக மூன்றுமணி நேரம் ஆகிவிடும்.
கொல்கத்தா போகிறவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய வரிசையில் நிம்பித்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.
கொல்கத்தாவில் சுவாமி விவேகானந்தரின் இல்லம் பாழடைந்து கிடந்தது. இப்போது ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனால் புதுப்பொலிவுடன் திகழ்கிறது. பாரதக் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்கள் திறந்துவைத்திருக்கிறார். உள்ளே எழுச்சியூட்டுவதாக இருக்கிறது. இன்னமும் பல சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. கொல்கத்தா வரலாற்று சிறப்பு வாய்ந்த அழுக்கான நகரம். கங்கை நீர் நகராட்சி குழாய்களிலிருந்து பாய்ந்து தெருவோரங்களில் சாக்கடையாகி பாய்கிறது. டெங்கு ஜூரம் பெரிய காலனாகி வந்தவாறு உள்ளது. பொது மருத்துவமனைகளில்
கூட்டம். செப்.ஆறாம் தேதி டெலிகிராப் முதல் பக்கத்தில் மேற்கு வங்க சுகாதார அமைச்சர், கொல்கத்தா இந்நாள்/முன்னாள் மேயர்கள் படங்கள் 'rogue gallery' எனும் தலைப்பில் வெளிவந்திருந்தன. மார்க்சிய சொர்க்கத்தில் டெங்கு இருக்கக்கூடாது என்கிற முரண்பாட்டியங்கியல் விதிகள் கொசுக்களுக்கு தெரியாதிருப்பதற்கு புத்தாதேவ் பட்டாசாரியாரின் அமைச்சரவை பொறுப்பேற்க முடியாதுதான். இண்டர்நெட், ஈமெயில் எதன் பக்கமும் பத்துநாள் போகாமல் கழிந்தன. 'தொலைந்தது சனியன்' என்று எண்ணிக் களித்தவர்களுக்கு ஏமாற்றமளித்தமைக்கு வருத்தங்களுடன்...
1 Comments:
Hope you had a nice trip in Bengal.
Post a Comment
<< Home