சிலை வழிபாடு : தவறா? பாவமா? அல்லது அறிவியலா?-3
தெய்வ திரு உருவத்தின் ஆழ்ந்த குறியீட்டுத்தன்மை : விநாயக பெருமான் ஒரு எடுத்துக்காட்டு

இனி நமது பாரம்பரிய தெய்வத்த்திருவடிவங்கள் எத்தகைய ஆழமான ஆன்மிக தத்துவார்த்த சிறப்பும் செழுமையும் கொண்டவை என்பதனை ஒரு உதாரணத்தின் மூலம் காணலாம். ஆனை முகமும், தொந்தி வயிறும் கொண்ட பிள்ளையாரை எடுத்துக் கொள்வோம்.

பிள்ளையாரின் ஆனை முகம் பிரணவ வடிவமாக விளங்குகிறது. பிரணவம் எல்லையற்ற பரம்பொருளின் ஒலி வடிவம்.

பிள்ளையார் ஒரு கரத்தில் கோடாரி சார்ந்த அங்குசத்தை ஏந்தி இருக்கிறார். ஆனையை அடக்கும் அங்குசத்தினால் மதயானை போல் நம் உள்ளத்தில் எழும் தீய எண்ணங்களை அகற்றுகிறார். கோடாரியால் நம் அன்றாட வாழ்விலும் ஆன்மிக சாதனையிலும் முன்னேற்றத்திற்கு ஏற்படும் தளைகளைக் களைகிறார்.

மற்றொரு திருக்கரத்தில் விநாயகர் ஏந்தியிருக்கும் கயிறு பரம்பொருள் நம்மை நம் வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்த சத்தியத்தினை நோக்கி, (சில நேரங்களில் நாம் தயங்கி நிற்கும் போதும் கூட), அழைத்துச் செல்வதைக் காட்டுகிறது.

தொந்தி கணபதி என குழந்தைகள் அவரை அன்புடன் அழைக்கின்றனர்.

வேத முடிவில் நடம் நவிலும் விமலன்
அவரது தொந்தி அண்ட சராசரங்களும் பரம்பொருளுக்குள் அடக்கம் என்பதனைக் காட்டுகிறது. பரம்பொருளின் பிராண இயக்கத்தில் சுருங்கி விரியும் தொந்தி விரிவடைந்து சுருங்கி பின் மீண்டும் விரிவடைந்து பின் மீண்டும் சுருங்கும் பிரபஞ்ச இயக்கத்தினைக் காட்டுகிறது. ஜடப் பிரபஞ்சத்தின் அனைத்து பொருளும் இயக்கமும் இறை சக்தியின் ஒரு பகுதியே எனக்கூறும் பாரத மெய்ஞான தரிசனத்தை இது உணர்த்துகிறது.

ஆனை வடிவம் கொண்ட விநாயகரின் வாகனமாக இத்தனை சிறிய பெருச்சாளியா? அவ்வை பாட்டி எழுதிய விநாயகர் அகவலுக்கு உரை விளக்கம் எழுதிய அறிஞர் திரு.இரசபதி கூறுகிறார்:
"வழிபாட்டு வளர்ச்சிக்கு தக்க அளவாக,ஆன்ம இதயத்தில் அருள் விளக்கம் பிறக்கும். அந்நிலையை சத்தி நிபாதம் என்பர். சத்திநிபாதம் படரும் சமயம் சாதகருக்கு குண்டலினிக் கனல் குடுகுடு குறுகுறு என்று மேலேறிப் பாயும். பெருச்சாளி ஓட்டம் போல் அதிருகின்றது அவ்வொலி. மூலாதாரத்தில் ஓடிப்பாயும் குண்டலினிக் கனலேறி அமர்ந்துள்ளார் பிள்ளையார் என்பது பிண்ட நுட்பம்."

இவ்வாறு ஒவ்வொரு வடிவமைப்பும் ஆழமான நுட்பமான ஆன்மீக உண்மைகளினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ள இந்த விநாயகரின் உண்மைத்தன்மைதான் என்ன? ஜான்.ஏ.க்ரிமஸ் எனும் தத்துவவியலாளர் 'Ganapathi: Song of the self' என ஒரு நூலை எழுதியுள்ளார். அந்த நூலில் அவர் கூறுகிறார்,

"விக்னேஸ்வரராக விளங்கும் இந்த கணபதி எனும் கணேசர் யார்? ஒரே வார்த்தையில் சொல்வதானால் கணேசர் என்றால் மெய்யுணர்வு. மெய்யுணர்வு என்பது சாஸ்வதமான அழியாத உள்ளுறையும் சத்தியத்தை இங்கே இப்போது உணர்வதற்கு தடையாக விளங்கும் விக்னங்களை அகற்றுவது என்பதாகும்."

அனந்த குணப் பரப்பும் உதிக்கும் பந்தமறுக்கும் திருவதனன் விநாயகப்பெருமான். நம்முள் விளங்கும் அக ஒளி. அவருக்கு நாம் படைக்கும் மோதகம் நம் உள்ளிருக்கும் நம் சுயத்தின் இனிப்பு இயற்கையை விளக்கும். அப்பெருமானின் வடிவின் முன் உடைக்கும் தேங்காயில் அகங்கார ஓடுடைய வெளியாகும் அமுத நீர் நாம் அடைய வேண்டிய நிலையை நமக்குணர்த்தும். பாச அறிவும் பசு அறிவும் பற்றுதற்கு அரிய சுத்த சைதன்ய அறிவு வடிவானவன் விநாயகன். விநாயகத் திருவடிவத்தினைப் போலவே பாரதத்தின் எண்ணற்ற தெய்வத் திருவுருவச்சிலைகளும் ஆழ்ந்த உண்மைகளை வெளிப்படுத்தி நிற்கின்றன.
இத்தொடரின் அடுத்த பதிவில் மேலும் நம் பாரம்பரிய திருவடிவங்களின் ஆழ் பொருளை ஆழ்ந்து நோக்கலாம்.
3 Comments:
அன்பு நீலகண்டன்,
"அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்"
அண்ட விளக்கங்களை அறிய பிண்டத்தில் காணுதல் எளிது.
அண்டபிண்ட இரகசியங்களை விளக்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
எத்தனை மனம் உள்நோக்கித் திரும்புமோ?
எத்தனை பேர் மெய்கண்டாராவரோ?
நன்றி ஐயா தங்களை போன்றவர்களின் நல்லாசியே என்னைப் போன்றவர்களுக்கு ஊக்கமும் சக்தியும் அளிக்கிறது.
பணிவன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்
எல்லாம் பித்தலாட்டம்.
அனைத்து மதங்களுக்கும் ஒரு கடவுள் என்றால் இங்கு மட்டும் எண்ணிலடங்காமல் இருக்கிறது.
எங்கேனும் ஒரு கல் நின்றிருந்தால் அதுவும் ஒரு கடவுள் என்கின்றனர்.
Post a Comment
<< Home