Saturday, October 01, 2005

பரிணாம பார்வையில் குஷ்பு-சர்ச்சை குறித்து




திண்ணை இணைய இதழ் எழுத்தாளர் சின்னக்கருப்பன் அவர்கள் முன்வைத்துள்ள இக்கட்டுரை இப்பிரச்சனையை பரிணாமப்பார்வையில் ஆராய்கிறது. ஒரு சுவாரசியமான தற்செயல் நிகழ்ச்சியாக இக்கட்டுரையை நான் பார்ப்பதற்கு முன்னதாக அன்றைய நாள் காலையில் திருவனந்தபுரத்தில் சூசன் ப்ளாக்மோரின் 'மீம் மெஷின்' எனும் நூலை வாங்கி இருந்தேன். மீம்கள் எனும் சுய-பெருக்கிகளின் மூலம் (self replicators) நம் கலாச்சார/உளவியல் நிகழ்வுகளை பரிணாமப்பார்வையில் ஆராய்கிறது அந்நூல். அன்று மாலை திண்ணையில் சின்னக்கருப்பனின் கட்டுரை. நமது சூழலில் நடந்துள்ள குஷ்பு-சர்ச்சையை அதே பரிணாம சட்டகத்தில் ஆராய்ந்துள்ள அருமையான கட்டுரை.


கலாச்சார புரட்சியாளர்களும் கலாச்சார காவலர்களும்

சின்னக்கருப்பன்

உழைக்கும் நடிகைகள் கூலி கேட்டால், அவர்களை விபச்சாரிகள் என்று தங்கர் பச்சான் சொன்னார். பிறகு மன்னிப்பு கேட்கவைக்கப்பட்டார். மன்னிப்பு கோர வேண்டும் என்று குஷ்பு உட்பட்ட நடிகைகள் கேட்காமல் இருந்திருந்தால் அவர் மன்னிப்பு கேட்டிருந்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலுறவு கொள்கிறார்கள், அதில் தப்பில்லை. ஆனால், அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறியதற்காக குஷ்பு மன்னிப்பு கேட்டுள்ளார். இதிலும் அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பாட்டாளி மக்கள் கட்சியும் கோரியதாலேயே மன்னிப்பு கேட்டார்.

தங்கர் பச்சானுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் நின்றிருக்கின்றன என்பது தெளிவு. அதனாலேயே குஷ்பு சொன்னதை பிடித்துக்கொண்டு அவர்மீது பாய்ந்தன என்பதும் தௌதவு. சினிமா என்ற கலையே நம் அரசியலை நிர்ணயிக்கிறது என்று ஆதங்கமெல்லாம் இல்லை எனக்கு. ஒவ்வொரு சமூகத்திலும் ஒரு சில ஊடகங்கள் மூலம் அரசியலதிகாரம் கைப்பற்றப்படுகிறது. இது வன்முறையற்றதாக இருக்கிறது என்ற ஒரு காரணத்துக்காகவே இதனை ஆதரிக்கவும் நான் (தனிப்பட்ட முறையில்) செய்கிறேன்.

கலாச்சாரம் என்பது மாறிக்கொண்டே இருக்கிறது. சமூக நீதிகள் என்பவையும் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஒரு காலத்தின் சமூக நீதிகள் அடுத்த காலத்தின் சமூக நீதிகளாக இருக்காது. அதனை உணர்ந்து கொண்டிருப்பது இந்து சமூகம். பல தெய்வீக விக்கிரகங்களை சுற்றி ஒரு அரைவட்ட வேலைப்பாடு இருக்கும். அதனைப் பற்றி ஒரு சில்பி எனக்கு விளக்கினார். உருவமற்ற சிதிலமான நிலையிலிருந்து மெல்ல மெல்ல ஒழுங்கை நோக்கி உச்சத்தை நோக்கி செல்கிறது சமூகம், உயிர் ஆகியவை. அது பின்னர் மீண்டும் மெல்ல மெல்ல சிதிலமாகி ஒழுங்கற்ற உருவமடைந்து அழிந்து மறைகிறது என்று சொன்னார். இதன் பின்னால் இறைவனின் திருத்தாண்டவம் இருக்கிறது என்று சொன்னார். தொடர்ந்து மாறும் சமூக நீதிகளை சொல்லவந்த ஆச்சார்யன், ஒவ்வொரு யுகத்துக்கும் ஒவ்வொரு மனு என்று சொல்கிறான். மனுநீதியின் இறுதிப்பகுதியிலும், மனுநீதி விதிகளை சேர்க்கவோ, நீக்கவோ மாற்றவோ வழிமுறைகளை சொல்லும் இடத்தில், அறம் கற்றறிந்த நல்லோர் கூடி அதனைச் செய்ய கோருகிறது. அறம் எனும் தர்மம் எது என்பது திருக்குறளிலிருந்து பாரதம் என்று பல புத்தகங்களில் வலியுறுத்தப்படுவது, "மக்களின் செழுமையான நல்வாழ்வுக்கு எது வழியோ அது" என்று இயம்பப்படுகிறது.

ரிச்சர்ட் டாக்கின்ஸ் போன்ற பரிணாமவியலாளர்கள் பார்வையிலும் ஒரு சமூகத்தின் கலாச்சார பரிமாணங்களை பார்க்க முடியும். எந்த சமூக விதிகள் அந்த சமூகம் தொடர்ந்து நீடித்திருக்க உதவுகின்றனவோ அவை தங்கும். எந்த சமூக விதிகள், ஒழுங்குகள் அந்த சமூகத்தை அழிக்கின்றனவோ. அந்த சமூகத்தோடு அவையும் அழியும். இன்றைய சமூக விதிகள் பரிணாமத்தின்பால் நம்மிடம் வந்தவை. அவைகள் நம்மிடம் இருக்க சமூக ரீதியான, வரலாறு ரீதியான காரணங்கள் இருக்கின்றன. அவைகளை இன்றைய கலாச்சார புரட்சியாளர்களோ, அல்லது கலாச்சார காவலர்களோ முழுவதுமாக புரிந்து கொள்வதில்லை. வெற்று கோஷங்களாலும், பண்டைய வாழ்வின் மீதான பாசங்களாலும், தனிமனித ஆர்வங்களாலும் நிலைப்பாடு எடுக்கிறார்கள். இவ்வாறு இவர்கள் இன்று நிலைப்பாடுகள் எடுப்பதையும் பரிணாம இயங்கியலின் ஒரு அங்கமாகவே பார்க்கிறேன்.

உதாரணம் மூலம் விளக்க முயல்கிறேன்.

ஒருவன் "பரந்த மனதுடையவனாக" தன்னுடைய மனைவியை சுதந்திரமாக அனுப்பி யாரிடமிருந்து வேண்டுமானாலும் பிள்ளை பெற்றுக்கொள் என்று அனுப்புகிறான். மற்றவன், "குறுகிய மனதுடையவனாக" தன்னுடைய மனைவி தன்னிடமிருந்து மட்டுமே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறான். யாருடைய சந்ததி வாழும்? எவன் "குறுகிய மனதுடையவனாக" இருக்கிறானோ அவனது சந்ததிதான் வாழும். "பரந்த மனது" ஜீன் அவனோடு அழிந்துவிடும். அடுத்த தலைமுறையில் "குறுகிய மனதுடையவர்களின்" கூட்டமே அதிகரித்திருக்கும்.

மற்றொரு ஆண் புலியோடு செல்லும் ஒரு பெண்புலியை விரும்பும் மற்றொரு ஆண்புலி அந்த ஆண்புலியோடு மோதுகிறது. அந்த மோதலின் விளைவில் அந்த ஆண்புலி இறந்து விட்டால், அந்த பெண்புலியின் முந்தைய குட்டிகளை வெற்றி பெற்ற ஆண்புலி கொன்றுவிடுகிறது.

இது நம்மிடம் இன்னும் இல்லை? மாற்றாந்தாய்கள் ஏன் முந்தைய மனைவியரின் குழந்தைகளை கொடுமை செய்து விரட்டுகிறார்கள்? நம்மிடம் உள்ள ஜீன்கள் காலம் காலமாக இவ்வாறு தேர்வு செய்யப்பட்டு நம்மிடம் வந்திருக்கின்றன. ஆனால், இன்று சமூகம் அவ்வாறு மாற்றாந்தாய்கள் குழந்தைகளை கொடுமைப்படுத்துவதை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் ஜீன்கள் செய் என்று சொல்கின்றன. சமூகத்தின் விதிகளுக்கும் ஜீன்களின் கட்டளைகளுக்கும் நடுவே சிக்கி, ஒரு சிலர் சிறைவாசம் அனுபவிக்கிறார்கள். ஜீன் செய் என்று சொல்லும் விஷயங்களை ஏன் சமூகம் செய்யாதே என்று சொல்கிறது? ஜீன் நம்மிடம் வருவது விலங்குகள் காலத்திலிருந்து. ஆனால், மனிதர்கள் சமூகம் என்று இணையும்போது, அந்த சமூக விதிகள் நமக்கு மற்றொரு வகையில் உதவுகின்றன. உழைப்பு பங்கீடு, ஒன்றுபட்ட சமூகம் ஆகியவை நமக்கு நம் சந்ததிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகின்றன. ஆனால், இப்படிப்பட்ட உழைப்பு பங்கீடு, ஒன்று பட்ட சமூகம் ஆகிய கோரிக்கைகள் நம்மை ஒரு சில சமூக விதிகளை ஒப்புக்கொள்ள கோருகின்றன. தனியொரு மனிதனாக இருக்கும்போது உன் ஜீன் கோரிய படி நடந்தது போல இப்போது நடக்க முடியாது.

கட்டற்ற பாலுறவு வேட்கை, அடுத்தவனை கொலை செய்தாவது தன் வாழ்வுக்கு தேவையானவற்றை எடுத்துக்கொள்வது ஆகியவை விலங்காக இருக்கும்போது உயிர்கள் தங்கள் சந்ததியை அதிகரிக்க உதவியிருக்கும். ஆனால், அதே விதிகளை ஏற்றுக்கொள்வது சமூக விலங்காக ஆகும்போது அந்த சமூகத்தை குலைத்துவிடுகின்றன. ஆகவே புதிய சமூக விதிகள், கடமைகளையும் உரிமைகளையும் தனித்தனியே பங்கிடுகின்றன. எப்படிவேண்டுமானாலும் தனது ஜீன்-தொகுப்பை அடுத்த சந்ததிக்கு அனுப்பி வைக்கலாம் என்பது விலங்கின ஒழுங்கு.

அதன் பல்வேறு கூறுகள் நிச்சயம் மனிதர்களிடம் இருக்கின்றன. அவற்றை ஒதுக்கிவிடுவது நமக்கே நாம் எழுதும் மரண சாசனம். சமூக விலங்காக மனிதன் ஆகும்போது, மனிதனுக்கு தன் சந்ததியை பாதுகாப்பாக எதிர்காலத்துக்கு அனுப்பி வைக்க வாய்ப்பு இருக்கிறது. இதனாலேயே சமூகங்களின் தோற்ற காலத்தில் பல்வேறு முறைகள் இருந்திருக்கின்றன. சமூகத்தின் உற்பத்தி வழிமுறைகளும், உணவு கிடைக்கும் சூழலும் மாற மாற சமூக விதிமுறைகளும் மாறிக்கொண்டே போகின்றன. கால் பார்க்கக்கூடாது, தன்னுடைய உடலை தானே பார்க்ககூடாது என்ற அளவுக்கு கட்டுப்பெட்டித்தனமாகவும் சனாதனமாகவும் இருந்த ஐரோப்பா, உணவும் இருப்பிடமும், சமூக செல்வமும் அதிகரித்துவிட்டபின்னர் உடலுக்கு கொடுத்துவந்த புனித உணர்வையும், பாவ உணர்வையும் ஒரு சேர இழந்தது.


ஆண்களால் மட்டுமே முடிகின்ற உடலுழைப்பு தேவைப்படும்போது, ஆண் தனது உடலுழைப்புக்கு ஈடாக பெண்ணின் சந்ததி முழுவதும் தனதாக மட்டுமே இருக்க வேண்டுமென்று கேட்கிறான்."ஆணாதிக்கம்" என்று இன்று அழைக்கப்படும் பல்வேறு கலாச்சார கூறுகளுக்கு இது இட்டுச் சென்றிருக்கிறது. இதுவே பல கணவர் முறை மறைந்து பலதார முறை மத- சமூக ரீதியில் அங்கீகரிக்கப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம்.பெண்ணால் தனக்குத் தானே சம்பாதித்து உணவு சேர்த்துக்கொள்ள முடியும் என்ற நிலை வரும்போது, ஆணின் இருப்பு தேவையற்றதாக ஆகிறது. ன்முறையிலிருந்தோ, மற்ற ஆண்களின் பாலுறவு வேட்கையிலிருந்தோ ஒரு பெண் தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ளலாம், அல்லது சமூகம் காப்பாற்றுகிறது என்பதும், தனக்குத்தானே உணவு சேர்த்துக்கொள்ளலாம், தன் சந்ததிக்கும் உணவை சேர்த்துக்கொள்ளலாம் என்ற நிலை வரும்போது ஆணின் இருப்பை அநாவசியமானதாக ஆகிறது.


இங்கு ஆணாதிக்க கூறுகளின் வலு குறைய ஆரம்பிக்கிறது. சென்ற நூற்றாண்டில் பெண் வேலைக்குப் போகலாம், பெண்ணுக்கு ஓட்டு போன்றவைகளுக்கு எதிர்ப்பு வந்ததன் அடிப்படையாக பல மத-சமூக பிற்போக்காளர்கள் என்று சொல்லப்பட்டவர்களால் பெண்ணுக்கு ஆண் துணை தேவையிருக்காது என்பது பேசப்பட்டது என்பதையும் நாம் நினைவில் கொள்ளலாம்.அறிவியல் வெகு வேகமாக முன்னேறி வருகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆண் துணையில்லாமலேயே பெண் இன்னொரு பெண்ணின் மரபணு கூறுகளோடு தனது மரபணு கூறுகளை இணைத்து இன்னொரு பெண்ணை பிறக்க வைக்க முடியும் என்று வரப்போகிறது. அப்போது பரிமாணவியலின் பார்வையில் ஆணே தேவையற்றவன். Man will be extinct. (ஆனால், அந்த அறிவியல் கொடுத்த உபகரணங்களை மட்டுமே நம்பி ஆணை extinct பண்ணிய பின்னால், அந்த உபகரணங்களின் உற்பத்தி எந்த காரணத்தினாலோ தடைப்பட்டால், மனித இனமே காலி)

ஆனால், இன்று அந்த நிலை வந்துவிடவில்லை. இன்று பெரியாரின் பல்வேறு சமூக "புரட்சிகளில்" எந்த புரட்சியை மக்கள் எடுத்துக்கொண்டார்கள் என்று பார்த்தாலே நமக்கு பரிணாமம் எவ்வாறு வேலை செய்கிறது என்று தெரியும். பெண் ஏன் அடிமையானாள் என்ற கட்டுரையை படித்து எல்லோரும் தங்கள் பெண்களை கட்டற்ற வாழ்வு வாழ தூண்டவில்லை. திருமணம் செய்விக்காமல் இல்லை. ஆனால், தங்கள் வாழ்க்கை வசதியின் முன்னேற்றத்துக்கு பிராம்மண எதிர்ப்பு தேவை என்று ஒரு இனத்துவேஷத்தை எடுத்துக்கொண்டார்கள். பார்ப்பனிய விழுமியங்கள் என்று பெரியார் தூற்றிய அத்தனை சமூக விழுமியங்களையும் (இவை பார்ப்பனிய விழுமியங்கள் அல்ல) அரவணைத்துக்கொண்டு, பார்ப்பன ஜாதி வெறுப்பை மட்டுமே முன்னெடுத்து பெரியாரின் வாரிசுகளாக அறிவித்துக்கொண்டார்கள். கலாச்சார புரட்சியாளர்களும் கலாச்சார காவலர்களும் ஒரே ஆட்கள்தான். முன் பக்கம் ஒரு ஆள், பின்பக்கம் மற்றொரு ஆள். ஒரே நாணயத்தின் பிரிக்கமுடியாத இரு பக்கங்கள்.

நன்றி: திண்ணை.காம்

32 Comments:

Anonymous Anonymous said...

Good Article,

Thanks for posting...

-SIhzier

8:40 AM, October 01, 2005  
Blogger குழலி / Kuzhali said...

வன்முறை என்பது வெறும் இரத்தத்தின் தெறிப்பா?!

12:20 PM, October 01, 2005  
Blogger தாணு said...

பரிமாணவியலில் அலசினாலும், ஒரு கட்டத்தில் ஆண்களே தேவைப்படாமல் போகவேண்டியிருக்குமோ என்ற பயமும் வந்துவிட்டதுபோலிருக்கிறதே!

12:22 PM, October 01, 2005  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

சின்னக்கருப்பன் (இதுவும் ஒரு முகமூடிப் பெயர்தான். நிஜப்பெயர் அல்ல) சுவாரசியமான இந்து கலாச்சார சனாதானி. இந்துத்துவ கருத்தியலோடு ஜீன், பரிணாமவியல் போன்ற அறிவியல் வார்த்தைகளை கலந்து பிசைந்து உருட்டிய சாணி உருண்டைகளை திராவிட/விளிம்பு நிலை அரசியல் மீது எறிவதே இக்கட்டுரையின் நோக்கம். இந்த விவகாரத்தில் அடித்துக்கொண்ட இரு சாராரையும் ஒரே சாணியுருண்டையில் அடித்து வீழ்த்தும் சாகசமும் கவனிக்கத்தக்கது. இந்த அபூர்வமான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் அவசரத்தில் இதே விவகாரத்தில் முத்துக்களை உதிர்த்த பாஜகவினரை மறந்துவிட்டதும் தற்செயலானதல்ல.

சிகவின் மரபணுவியல், பரிணாமவியல் அறிவும், புரிதலும் ஆழமற்றது என்பது அறிவியல் பயிற்சியுடையவர்கள் ளிதில் புரிந்துகொள்ளக்கூடும். ஆனால் இதில் சராசரி வாசகன் மிரண்டுபோய் "இதுல ஏதோ விஷயம் இருக்கும்போல" என்று கைத்தட்டக்கூடும். இதுவும் தமிழ் அறிவுச் சூழலின் இன்னொரு அவலம்.

1:44 PM, October 01, 2005  
Anonymous Anonymous said...

The major reason why kushboo is being opposed is that she is a muslim who converted to a hindu.

1:52 PM, October 01, 2005  
Anonymous Anonymous said...

//சிகவின் மரபணுவியல், பரிணாமவியல் அறிவும், புரிதலும் ஆழமற்றது என்பது அறிவியல் பயிற்சியுடையவர்கள் ளிதில் புரிந்துகொள்ளக்கூடும். ஆனால் இதில் சராசரி வாசகன் மிரண்டுபோய் "இதுல ஏதோ விஷயம் இருக்கும்போல" என்று கைத்தட்டக்கூடும். இதுவும் தமிழ் அறிவுச் சூழலின் இன்னொரு அவலம்.//

ரொம்பச்சரியா சொன்னீங்க சுந்தரமூர்த்தி.

4:27 PM, October 01, 2005  
Blogger SnackDragon said...

/ நம்மிடம் உள்ள ஜீன்கள் காலம் காலமாக இவ்வாறு தேர்வு செய்யப்பட்டு நம்மிடம் வந்திருக்கின்றன. ஆனால், இன்று சமூகம் அவ்வாறு மாற்றாந்தாய்கள் குழந்தைகளை கொடுமைப்படுத்துவதை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் ஜீன்கள் செய் என்று சொல்கின்றன./
+
/
ஆனால், தங்கள் வாழ்க்கை வசதியின் முன்னேற்றத்துக்கு பிராம்மண எதிர்ப்பு தேவை என்று ஒரு இனத்துவேஷத்தை எடுத்துக்கொண்டார்கள். /

திருவாளார். நீலகண்டரும், ஸ்மால் கறுப்பரும் சேர்ந்தால் உலகத்தில் எந்த அநியாயத்தையும் நியாயப்படுத்திவிடுவார்கள் என்பதுதான் தெளிவாக தெரிகிறது. பரிணாமவியலிலும், மரபணு ஆராய்ச்சியிலும் புகுந்து புறப்படும் நீலகண்டர், இன்னும் "ஜீன்கள் பெரியாரை எதிர்" என்று சொலிகிறதாகச் சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இப்படி தன்ம்க்களை அடையாளம் காட்டிக்கொள்வதற்காக அவர்கள் இருவருக்கும் எனது நன்றி.


குறிப்பாக, / இன்று சமூகம் அவ்வாறு மாற்றாந்தாய்கள் குழந்தைகளை கொடுமைப்படுத்துவதை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் ஜீன்கள் செய் என்று சொல்கின்றன.//

இதை, வேறு யாரிடமும் எதிர்பார்க்க முடியாது.

6:38 PM, October 01, 2005  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

//..ஆண்புலி இறந்து விட்டால், அந்த பெண்புலியின் முந்தைய குட்டிகளை வெற்றி பெற்ற ஆண்புலி கொன்றுவிடுகிறது.//

//இது நம்மிடம் இன்னும் இல்லை? மாற்றாந்தாய்கள் ஏன் முந்தைய மனைவியரின் குழந்தைகளை கொடுமை செய்து விரட்டுகிறார்கள்?//

//ஜீன் நம்மிடம் வருவது விலங்குகள் காலத்திலிருந்து.//

எனக்கு சில சந்தேகங்கள்:
1. இந்த கொடுமைக்கார ஜீன் X-க்ரோமோசோமில் இருக்கிறதா, Y-க்ரோமோசோமில் இருக்கிறதா?

2. இந்துத்துவ பரிணாமவியலின்படி புலியிலிருந்து தான் மனிதன் பரிணமித்தானா?

8:03 PM, October 01, 2005  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

karthikramas said
குறிப்பாக, / இன்று சமூகம் அவ்வாறு மாற்றாந்தாய்கள் குழந்தைகளை கொடுமைப்படுத்துவதை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் ஜீன்கள் செய் என்று சொல்கின்றன.//
இதை, வேறு யாரிடமும் எதிர்பார்க்க முடியாது.


கார்த்திக்,
இதற்கே இப்படி அதிர்ச்சியடைந்தால் எப்படி. இப்போது தான் புலி ஆராய்ச்சி முடிந்திருக்கிறது. அடுத்து வரப்போவது நாய் ஆராய்ச்சி. சில நாய் இனங்களில் தாய் குட்டிகளை தின்றுவிடும். நாயிலிருந்து மனிதனுக்குப் போகும் பரிணாமப் பாதையில் இந்த ஜீன் எங்கோ தொலைந்துவிட்டிருக்கிறது. அதை சின்னக்கருப்பன் தேடிக்கொண்டிருக்கிறார். அது கண்டுபிடிக்கப்பட்டவுடன் அந்த ஆராய்ச்சிக் கட்டுரையும் 'திண்ணை'யில் வெளியிடப்படும் (சிக வேறெங்கும் எழுதுவதில்லை என்பதால்).

8:24 PM, October 01, 2005  
Anonymous Anonymous said...

//திருவாளார். நீலகண்டரும், ஸ்மால் கறுப்பரும் சேர்ந்தால் உலகத்தில் எந்த அநியாயத்தையும் நியாயப்படுத்திவிடுவார்கள் என்பதுதான் தெளிவாக தெரிகிறது//

:-)) ஸ்மால் கறுப்பர் = சின்னக் கருப்பன்?

நீலகண்டர் = ப்ளூ காண்டினண்ட் :-)))

பரிநாம அறிவியல் பற்றி பேசுவதாக இருந்தால் திருவாளர்.ப்ளூ காண்டினண்ட் இந்து புரான வேதங்களை முதலில் மூட்டை கட்டி வைக்க வேண்டும். ஆனால் அவருக்கு இப்போதைய தேவை எதையாவது சப்பைகட்டி சமாளிக்க வேண்டியது மட்டுமே.

8:35 PM, October 01, 2005  
Anonymous Anonymous said...

தனது மரபணுக்களை வெற்றிகரமாக அடுத்த தலைமுறைக்கு கடத்த உதவி செய்யும் உபகரணமாக திருமணத்தையும் குடும்ப அமைப்பையும் நோக்கினால் மாற்றாந்தாய்க்கு தமது கணவனின் முந்தைய மனைவியின் குழந்தைகளிடம் அன்பு காட்டுவது தேவையற்றதாகும். அன்பு பகிர்ந்தளிக்கப்படுகையில் தனது குழந்தைகளுக்கு மற்ற குடும்ப குழந்தைகளைக் காட்டிலும் அன்பு குறைவாக கிட்டுவதால் அவற்றின் வாழ்க்கை வெற்றி பாதிக்கப்படும் எனும் எண்ணம் மாற்றாந்தாய்களுக்கு தோன்றினால் அது முந்தைய மனைவியின் குழந்தைகளிடம் கொடுமையான நடவடிக்கைகளுக்கும் வழிகோலலாம். இதுவே மாற்றாந்தாய் கொடுமையின் பரிணாம காரணமாக இருக்கலாம். இதற்கு ஒரு குறிப்பிட்ட மரபணு காரணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மரபணுக்களின் கூட்டு செயல்பாடு, புறச்சூழல் தேர்வழுத்தங்கள் என பல இதனை உருவாக்கலாம். புலியிடமிருந்து இது பெறப்பட்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஒரே வித சூழலில் உயிரின நடவடிக்கைகள் ஒத்து-பரிணமிப்பது இளங்கலை விலங்கியல் மாணவர்களுக்கும் தெரிந்த விடயம்தான். இதில் மாற்றாந்தாய் கொடுமையை சி.க. நியாயப்படுத்தவில்லை. அதன் காரணத்தை ஊகிக்கிறார் அவ்வளவுதான்.

9:04 PM, October 01, 2005  
Blogger நியோ / neo said...

>> இந்த ஜீன் எங்கோ தொலைந்துவிட்டிருக்கிறது. அதை சின்னக்கருப்பன் தேடிக்கொண்டிருக்கிறார். அது கண்டுபிடிக்கப்பட்டவுடன் அந்த ஆராய்ச்சிக் கட்டுரையும் 'திண்ணை'யில் வெளியிடப்படும் >>

வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கிறதாக இருந்தாலும், இந்த வரி இந்துத்வவாதிகளின் 'உட்டாலக்கடி அறிவியல்' பார்வைகளை தோலுரிப்பதாக இருக்கிறது.

நன்றி சுந்தரமூர்த்தி அவர்களே :)

9:57 PM, October 01, 2005  
Blogger Thangamani said...

// பெண் ஏன் அடிமையானாள் என்ற கட்டுரையை படித்து எல்லோரும் தங்கள் பெண்களை கட்டற்ற வாழ்வு வாழ தூண்டவில்லை. திருமணம் செய்விக்காமல் இல்லை. ஆனால், தங்கள் வாழ்க்கை வசதியின் முன்னேற்றத்துக்கு பிராம்மண எதிர்ப்பு தேவை என்று ஒரு இனத்துவேஷத்தை எடுத்துக்கொண்டார்கள். பார்ப்பனிய விழுமியங்கள் என்று பெரியார் தூற்றிய அத்தனை சமூக விழுமியங்களையும் (இவை பார்ப்பனிய விழுமியங்கள் அல்ல) அரவணைத்துக்கொண்டு, பார்ப்பன ஜாதி வெறுப்பை மட்டுமே முன்னெடுத்து பெரியாரின் வாரிசுகளாக அறிவித்துக்கொண்டார்கள் //

இதைவிட பொருத்தமான உதாரணமாக சிலவற்றை கூறலாம்.

1. சமஸ்கிருதம் தேவ பாஷை என்றும், தமிழ் நீச பாஷை தெய்வத்தின் குரலிலெல்லாம் கத்திப்பார்த்தாலும் யாரும் சம்ஸ்கிருதம் படிக்காமல் இங்கிலீஸ் படிப்பதை..

2. பால்யவிவாகத்தை எப்படியாவது சமூகத்தில் மீண்டும் நிலைபெறச் செய்ய அறவழியில் போராட சங்கரர் அழைப்பு கொடுத்தாலும் மக்கள் வராமல் சாதி.கொமில் விளம்பரம் கொடுக்கப்போவது..

3. தலித்தாயிருந்தால் கோவிலுக்குள் வராதே, அரிஜனனாய் இருந்தால் வா என்று சங்கரர் சலுகை கொடுத்தாலும் வராமல் மற்ற மதத்துக்கு போவதால் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரவேண்டியிருப்பது..


//. கலாச்சார புரட்சியாளர்களும் கலாச்சார காவலர்களும் ஒரே ஆட்கள்தான்.//

ஆ...

இதைவிட பொருத்தமான உதாரணம் இருக்கிறதே..

எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்று சண்டாள உபதேசத்தை உபன்யாசத்தில் சொல்கிற ஞானியும், தலித்தை கோவிலுக்குள் வராதே என்கிற தொடாதே என்கிற சாமியும் ஒன்று..

பெண்கள் எல்லாம் சக்திமயம் என்கிறவரும், பெண்ணெனும் மாயப்பிசாசு என்பவரும் ஒன்று..

அடுத்த முறை இந்த உதாரணங்களையும் பயன்படுத்தலாம்.

3:09 AM, October 02, 2005  
Anonymous Anonymous said...

சமஸ்கிருதம் தேவ பாஷை என்றும், தமிழ் நீச பாஷை தெய்வத்தின் குரலிலெல்லாம் கத்திப்பார்த்தாலும் யாரும் சம்ஸ்கிருதம் படிக்காமல் இங்கிலீஸ் படிப்பதை../

English itself is an offshoot of sanskrit.

2. பால்யவிவாகத்தை எப்படியாவது சமூகத்தில் மீண்டும் நிலைபெறச் செய்ய அறவழியில் போராட சங்கரர் அழைப்பு கொடுத்தாலும் மக்கள் வராமல் சாதி.கொமில் விளம்பரம் கொடுக்கப்போவது../

People are justified in rejecting such call.

3. தலித்தாயிருந்தால் கோவிலுக்குள் வராதே, அரிஜனனாய் இருந்தால் வா என்று சங்கரர் சலுகை கொடுத்தாலும் வராமல் மற்ற மதத்துக்கு போவதால் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரவேண்டியிருப்பது..

After 1000 years of oppression, 82% of India still remains Hindu.Hindu religion is mount Everest.Ants cannot eat it away.

எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்று சண்டாள உபதேசத்தை உபன்யாசத்தில் சொல்கிற ஞானியும், தலித்தை கோவிலுக்குள் வராதே என்கிற தொடாதே என்கிற சாமியும் ஒன்று

On the contrary God made Bhramins carry Thirupanazvar in their shoulders into the temple.

பெண்கள் எல்லாம் சக்திமயம் என்கிறவரும், பெண்ணெனும் மாயப்பிசாசு என்பவரும் ஒன்று

Everyman who succeeds in love calls his lady love as angel.Everyman who fails in love calls the same woman as devil.Who is right here and who is wrong?

-vathalam

9:17 AM, October 02, 2005  
Anonymous Anonymous said...

1. எந்த தெய்வத்தின் குரல் பாகத்தில் தமிழ் நீசபாஷை என்று சொல்லியுள்ளது? ஆதாரத்துடன் கூறவும். பொய்களை மீண்டும் மீண்டும் கூறினால் உண்மையாகிவிடும் என்பது பகுத்தறிவற்ற ஈவெராவுக்கும் அவனது கிழட்டு சரக்கை பிடித்து ஊதிக் கொண்டு அலையும் உம்மை போன்றவன்களுக்கும் உண்மையாக இருக்கலாம்.
2. பால்ய விவாகத்தை சங்கராச்சாரியார் ஒன்றும் தடாலடியாக ஈவெராவின் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை உபன்னியாசம் போல செய்யவில்லையே. அது சரி நியூட் காம்ப்ல போஸ் கொடுத்தானே ஈவெரா அதே உரிமையை நாகம்மைக்கும் மனியம்மைக்கும் கொடுத்தானா? போட்டாவோட ஆதாரம் ஏதாவது இருக்குதா எப்படி? அட்லீஸ்ட் ஈவெரா சிஸ்யனான நீராவது அப்படி ஏதாவது எடுத்து காட்டுரீரா?
3. 'இப்படீன்னா வராதே அப்படீன்னா வா' என்று சொன்னதற்கெல்லாம் ஆதாரம் கிடையாது. சும்மா படம் காட்டாதேடா ஈவேராவோட கை(ல)பிடிப் பையா. தலித்த கொடும படுத்துறவன் பாப்பான் கிடையாதுடா திண்ணியத்துல தலித்த மலந்தின்ன வச்சவன் மஞ்சதுண்டுக்காரனுக்க மத்தவனுக. அந்த இரண்டுப்பொண்டாட்டி மஞ்சதுண்ட கேக்க வக்கிலாத பயலுவ மானங்கெட்ட கம்மனாட்டிங்க வந்துட்டான்க பேச...தூ.
தங்கமணி இனியாவது உன் மணிய பொத்தி வைக்க பளகுடா மவனே

9:18 AM, October 02, 2005  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அட பாவமே...எழுதியதை கூட ஒழுங்காக புரிய முடியாத அரைகுறை அறிவு ஜீவன்களா நீங்கள்! பேஷ் சுந்தரமூர்த்தி படு சபாஷ் karthikramas! "உதாரணமாக சிம்பன்ஸியும் அரவிந்தன் நீலகண்டனும் ஒரு பொது மூதாதையைக் கொண்டவர்கள் ஆனால் அரவிந்தன் நீலகண்டனுக்கும் பன்றிக்குமான பொது மூதாதை நிலவியல் காலவோட்டத்தில் மிகவும் பின்னால் பலகிளைகளுக்கு அப்பால் இருக்கவேண்டும். எனவே எனக்கும் சிம்பன்ஸிக்கும் இடையே அதிக அளவில் டிஎன்ஏ ஒற்றுமையும் எனக்கும் பன்றிக்கும் அதைவிட குறைந்த அளவில் டிஎன்ஏ ஒற்றுமையும் இருக்க வேண்டும். இது பொய் என நிரூபிக்கப்பட்டால் பரிணாமம் பொய்ப்பிக்கப்படும். இது ஆய்வக பரிசோதனை வாயிலாகவும் நிரூபிக்கப் பட்டுள்ளது." என எழுதியதை "மனிதன் பன்றியிலிருந்து வந்தவன்" என பொருள் கொள்ளுகிறவர்களின் ஆதரவாளர்களை கொண்ட உங்களை பொறுத்தவரையில் ஒரு பழைய பதிலையே சிறிது மாற்றிக் கூறலாம். உங்களைப்போன்ற திருகல் ஆசாமிகளை-அரைகுறையாக புரிந்து கொண்டு ஏதோ சமூக நீதிக்காக போராடுவது போல மாய்மாலம் காட்டுபவர்களை மூதாதையர்களாகக் கொள்வதைக்காட்டிலும் பன்றி என் பொது மூதாதை என்கிற பரிணாம உண்மையில் சிறிதும் அவமானம் இல்லை.

7:53 AM, October 03, 2005  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

முழுமுதற் அறிவுச்சுடரான நீலகண்டரே,

நீர் சரஸ்வதி கொடுத்த புத்தகக்கட்டோடு பிரம்மாவின் தலையிலிருந்தே நேரடியாக குதித்திருந்தாலும் எனக்குக் கவலையில்லை. நான் "ஏதோ சமூக நீதிக்காக போராடுவது போல மாய்மாலம் காட்டுபவர்களை மூதாதையர்களாகக்" கொண்டிருப்பதைப் பற்றி எனக்கும் வருத்தமும் இல்லை. நான் எழுதியதற்கு பதிலாக உருப்படியாக ஏதேனும் இருந்தால் எழுதுங்கள். சும்மா ருத்ர தாண்டவம் ஆடவேண்டாம். சம்பந்தமில்லாதவற்றுக்கெல்லாம் முடிச்சு போடும் உங்கள் திறமையை இன்னொரு முறை நிரூபித்ததற்கு ஒரு சபாஷ் (என்னுடைய பின்னூட்டங்கள் மற்றவர்களுக்கு அதை புரிய வைக்கும் முயற்சியே தவிர, உங்களிடமிருந்து சான்றிதழைப் பெறுவதற்கல்ல என்பதை அறியவும்).

8:45 AM, October 03, 2005  
Blogger SnackDragon said...

மனு நீதிக்கு சிட்டுக்குருவி லேக்கியம் கொடுத்து வீர்யத்தை அதிகரிப்பது.

9:15 AM, October 03, 2005  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

//I am no scientist.But I would say mind is controlled by external as well as internal forces.Gene and commands inside a gene would qualify as internal controlling variables which affect mind. //

Genes do not contain commands, they contain information. Period. Rather other factors control the transcription of genes. Some envrionmental factors (both internal and external) can even modify the genes locally (like smoking, sunlight etc.).

In the post-genomics era the "gene" has been demystified, which led to proteomics, glycomics, lipidomics and what not. Even at the genome level, genomes of rice and yeast are more complex than human genome. That doesn't mean they can do more complex things than man can.

9:45 AM, October 03, 2005  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//நான் எழுதியதற்கு பதிலாக உருப்படியாக ஏதேனும் இருந்தால் எழுதுங்கள்.//
நீர் எழுதியதில் எது உருப்படியாக இருக்கிறது நான் பதிலளிப்பதற்கு.
உதாரணமாக உளறுகிறீரே "எனக்கு சில சந்தேகங்கள்:
1. இந்த கொடுமைக்கார ஜீன் X-க்ரோமோசோமில் இருக்கிறதா, Y-க்ரோமோசோமில் இருக்கிறதா?
2. இந்துத்துவ பரிணாமவியலின்படி புலியிலிருந்து தான் மனிதன் பரிணமித்தானா?"
±ன்று... இதைப்போல மடத்தனமான கேள்வி இருக்க முடியாது. சிகவின் கட்டுரையை படிக்கும் எவருக்கும் தெரியும் அவர் கூறவருவது என்னவென்று. அவர் எந்த கொடுமையையும் நியாயப்படுத்தவில்லை. மாறாக ஜீன்களின் ஆதிக்கத்திலிருந்து வெளியே நம்மை கொணரும் கலாச்சார மீம்களுக்கும் ஜீன்களுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை அவர் காட்டுகிறார் அவ்வளவுதான். ஆனால் இதனை புரியும் அளவுக்கு உமக்கோ உம்முடன் சேர்ந்து மடத்தனமாக உளறும் மக்கட்பதடிகளுக்கோ அறிதல் இருக்குமா என்பது ஐயமே. நீர் என்னதான் 'படித்தவராக' இருந்தாலும் உமது அறிதல் பெருத்த வெற்றிடமாகவே உள்ளது. வெறுமனே முத்திரை குத்தி அறிவுஜீவி வேடம் போடுகிற உம்மை போன்ற ஆசாமியை (பொதுவாக இந்த மாதிரி ஆசாமிகள் சொந்த வாழ்க்கையை பார்த்தால் ஜாதியும் ஆச்சாரமும் பிறழாமல் இருப்பது வழக்கம். இவரை குறிப்பிட்டு சொல்லவில்லை.) பார்த்தால் பச்சாதாபம்தான் ஏற்படுகிறது.
//என்னுடைய பின்னூட்டங்கள் மற்றவர்களுக்கு அதை புரிய வைக்கும் முயற்சியே தவிர, உங்களிடமிருந்து சான்றிதழைப் பெறுவதற்கல்ல என்பதை அறியவும்//
நீர் புரிய வைத்ததெல்லாம் உமது புரிதலின்மையைதான்

1. நான் எவ்விடத்திலும் மனு நீதியை ஆதரிக்கவில்லை. அதனை இன்றைய காலத்திற்கு ஒவ்வாதது அதன் சாதிய பார்வை முழுக்க நிராகரிக்கப்படவேண்டியது என கருதுகிறேன். இதனை அரவிந்தன் நீலகண்டன் என்கிற தனிமனிதனாக மட்டுமல்லாமல் ஒரு ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகன் என்கிற முறையிலும் கூறுகிறேன். இது குறித்த ஒரு முழுக்கட்டுரை விரைவில் எனது வலைப்பதிவில் 'ஹிந்துத்வமும் முழுமையான சமுதாய நீதியும்' எனும் தலைப்பில் வெளியாகும்.
2.குஷ்புவின் கருத்து குறித்த எனது எண்ணம் ஏற்கனவே ஒரு வலைப்பதிவின் பின்னூட்டத்தில் வெளியாகியுள்ளது. I support her statement and think it should prompt us to enter into a honest debate over the issue and free the concept of Karpu from its physical dimensions and make it common to both genders.
3.//சின்னக்கருப்பனோ அல்லது நீல கண்டனோ ஜீனுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பை ரிச்சர்ட் டாக்கின்ஸின் கோட்பாட்டின் மூலமாகவோ, அல்லது சுயமாகவோ எவ்வாறு வகைப்படுத்திக்கொள்வது என்று சொல்லமுடியுமா?//
டாவ்கின்ஸின் மீம்கள் குறித்த ஊகங்களும் மனவியலாளர் சூசன் ப்ளாக்மோரின் அது குறித்த விரிவாக்கமும் இதனை நாம் விவாதிப்பதற்கு உகந்த சட்டகங்களாக தோன்றுகின்றன.

9:57 AM, October 03, 2005  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

மீன்டுமொரு ருத்ரதான்டவம் (உங்கள் கால்களை தொடர்ந்து நோகடிக்க விரும்பாததால் இதுவே கடைசி முறை).

வெற்றிடம் இல்லாமல் அறிவை நிரப்பியிருக்கும் சிக சொன்னது இது:
"மற்றொரு ஆண் புலியோடு செல்லும் ஒரு பெண்புலியை விரும்பும் மற்றொரு ஆண்புலி அந்த ஆண்புலியோடு மோதுகிறது. அந்த மோதலின் விளைவில் அந்த ஆண்புலி இறந்து விட்டால், அந்த பெண்புலியின் முந்தைய குட்டிகளை வெற்றி பெற்ற ஆண்புலி கொன்றுவிடுகிறது.

இது நம்மிடம் இன்னும் இல்லை? மாற்றாந்தாய்கள் ஏன் முந்தைய மனைவியரின் குழந்தைகளை கொடுமை செய்து விரட்டுகிறார்கள்? நம்மிடம் உள்ள ஜீன்கள் காலம் காலமாக இவ்வாறு தேர்வு செய்யப்பட்டு நம்மிடம் வந்திருக்கின்றன. ஆனால், இன்று சமூகம் அவ்வாறு மாற்றாந்தாய்கள் குழந்தைகளை கொடுமைப்படுத்துவதை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் ஜீன்கள் செய் என்று சொல்கின்றன".

அதாவது புலிகளில் இந்த ஜீன் ஆணிடம் உள்ளது, மனிதரில் பெண்ணிடம் உள்ளது என்கிறார். "ஜீன் நம்மிடம் வருவது விலங்குகள் காலத்திலிருந்து" என்று தொடர்ந்து அழுத்தம்திருத்தமாக சொல்கிறார். இவற்றை எல்லாம் மேற்கோள் காட்டியிருக்கிறேன், சிலவற்றை கொட்டை எழுத்துக்களோடு.

இதைப் படித்துவிட்டு கேட்ட என் நக்கலான கேல்விகளுக்காக ஏன் இப்படி குதிக்கிறீர்? சிகவின் வாதத்தில் உள்ள ஓட்டைகளை சுட்டிக்காட்டியதற்காக என்மீது எரிந்து விழுந்து என்ன பயன்?
இந்தக் கொடுமைகளை நியாயப்படுத்துகிறார் என்று எங்கு சொன்னேன்?

சின்னக்கருப்பரின், நீலகண்டரின் அறிவியல்-இந்துத்துவ முடிச்சுகளுக்கு ஆமாம் போட்டால் முழு அறிவுஜீவிகள் ஆகலாம். எதிர்த்து கேள்வி கேட்டால் நீங்கள் "அரைகுறை அறிவு ஜீவன்கள்", "திருகல் ஆசாமிகள்", "மடத்தனமாக உளறும் மக்கட்பதடிகள்", "அறிதல் பெருத்த வெற்றிடம்", "அறிவுஜீவி வேடம் போடுகிறவர்". வேறு ஏதாவது மிச்சமிருந்தால் அதையும் கொடுத்துவிட்டால் இன்னொருமுறை இந்த பக்கம் வந்து உங்களை தொந்தரவு செய்யமாட்டேன்.

இன்னொன்று. என்னுடைய ஜாதியையும், ஆச்சாரத்தையும் ஆராய்ச்சி செய்யும் ஆர்வமிருப்பதாகத் தெரிகிறது. என் வீட்டிற்கு வந்து சிறிது காலம் தங்கி ஆரய்ச்சி நடத்த அன்புடன் அழைக்கிறேன் (இந்து சமையல் முறைப்படி இறைச்சியோடு விருந்தோம்புகிறேன். வேண்டுமானால் முஸ்லிம்களுக்குப் பிடிக்காத பன்றி இறைச்சியையும் சேர்த்துக்கொள்வோம்).

11:34 AM, October 03, 2005  
Blogger SnackDragon said...

/ நான் எவ்விடத்திலும் மனு நீதியை ஆதரிக்கவில்லை./
குழப்பத்தை தவிர்க்க , நீலகண்டன் மனு நீதியை ஆதரிப்பதாக எழுதியுள்ளதாக நானும் சொல்லவில்லை, ஆனால் பரிணாமவியலின் படி சில சமூக விதிகள் தேவை என்று சொல்லி கடைசியிலே பெரியாரை பொறுமியபடி முடிப்பதாலே(சின்னக்கருப்பனின் கட்டுரை முடிப்பதாலும் அதை நீலகண்டனும் அருமையான கட்டுரை என்பதால்), என்னால் வேறெவ்வாறும் பார்க்க முடியாது. வெறெவ்வாறு பார்க்க வேண்டும் என்று அவர்தான் விளக்க வேண்டும்.

எந்தக் கோட்பாட்டையும் பற்றி விவாதிப்பதில் எனக்குப் பிரச்சினை இல்லை, ஆனால், கோட்பாட்டின் கூறுகளை எடுத்துக்கொண்டு , அது மேலை நாட்டிலே வரையப்பட்டதாக இருப்பினும்
அதை தம் சுயநலமான, பிற்போக்கான கருத்துகளுக்கு பயன் படுத்திக்கொள்வதாக, நம் நாட்டு சட்டகங்களுக்குட்படுத்திய தமது எல்லா உதாரணங்களையும் மட்டும்தான் குறித்து எழுத நினைத்தேன்.

உதாரணமாக , அமெரிக்காவிலே தத்து பிள்ளைகள் அதிகம், அவர்கள் பால் அன்பு செலுத்தி வளர்பவர்கள் ஏராளம். சி.க. எடுத்துக்கடும், மரபணு சுயநலப்படி யாரும் நடந்துகொள்வதில்லை. இது இங்கு கடலைபோன்ற மறுக்க முடியாத உண்மை. ஆனால் சி.க என்ன சொல்கிறார், சுநலம் மட்டுமே உருவான, அறிவில்லாத தாய்கள் சிலரை, ரிச்சர்ட் டாக்கின்ஸின் த்த்துவத்தின் உள்ளடக்கி, "சில விதிகள்" தேவை என்ற பெரும் உண்மையை கண்டுபிடித்து உரைப்பதால் எழுத வேண்டியுள்ளது.

மேலும் மேலும் சின்னக்கருப்பனிடம் இருந்து படைப்புகளையும் நீலகண்டனிடம் இருந்து சாட்சியங்களையும் எதிர்பார்க்கிறேன் நன்றி.

பி.கு: சுந்தரமூர்த்தியின் கேள்வி உளறலாக இருந்தால், ரி.டாக்கின்ஸ்-இன் தத்துவத்தின் படி மாற்றாந்தாயின் கொடுமைகளுக்கு உதாரணம் சொல்வதை எப்படி அழைப்பது? மடத்தனம் என்றா?

12:00 PM, October 03, 2005  
Blogger SnackDragon said...

நன்றி தங்கமணி,
நான் நீலகண்டனிடமிருந்து எந்த நேர்மையான பதிலையும் எதிர்ப்பார்க்கவில்லை. அவரது முகங்களை பிறருக்கு சொல்லத்தான் இந்தப் பதிவு தேவைப்படுகிறது. பாவம் ரிச்ச்ர்ட் டாக்கின்ஸ்! :-)

12:08 PM, October 03, 2005  
Blogger சன்னாசி said...

மீம்களைக் குறிப்பிடும் பிரதியெடுப்பு, மரபணுக்களின் பிரதியெடுப்பைப்போன்று உணரமுடிவது (tangible) அல்ல என்பது பொதுவில் தெரிந்த உண்மை - இதைப் படிக்கையில் குழப்படி செய்யமுயல்வது, இவை இரண்டையும் ஒரே தராசுத்தட்டில் வைப்பதாகத் தோன்றும்/புரிந்துகொள்ளும்/புரியவைக்கமுயலும் வாக்கியங்கள். சுந்தரமூர்த்தி சொன்னதுபோல, மரபணுக்களில் இப்போதுவரை புதைந்திருப்பது 'தகவல்கள்' மட்டுமே. Selfish gene என்ற ரிச்சர்டு டாக்கின்ஸின் பதத்தை மிகவும் பௌதீகமான ஒரு தளத்தில் வைத்துக்கொண்டு, ஜீன்கள் ஆணைபிறப்பிப்பது போன்ற ஒரு பிம்பத்தை எழுப்பாமலிருந்தாலே பாதிக் குழப்பங்கள் தீரும்.

//இன்றைய சமூக விதிகள் பரிணாமத்தின்பால் நம்மிடம் வந்தவை.//
இங்கே தொடங்கி
//தனியொரு மனிதனாக இருக்கும்போது உன் ஜீன் கோரிய படி நடந்தது போல இப்போது நடக்க முடியாது.//
இங்கே முடியும் பத்தி வரை இருக்கும் பத்தி வரையிலுள்ள வரிகள் சுவாரஸ்யமானவை. பரிணாமம் இதுவரை இப்படிச் சொல்லியிருக்கிறது, இனிமேல் ஏதும் நிகழ்ந்தால் ஏதோ அடியில் மிச்சம் மீதி இருக்கும் கசட்டு மரபணுக்களால் இருக்கலாம், அதை முடிந்தளவு கலாச்சார மீம்களால் எதிர்கொள்கிறோம் எனலாம். சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். நாங்கள் படித்த புத்தகங்களிலிருந்து தளும்பி வழியும் சிந்தனைகள், நாங்கள் பார்த்த திரைப்படங்களிலிருந்து உதிர்ந்த முத்துக்கள், நாங்கள் கேட்ட போதனைகளிலிருந்து சேகரித்த சொற்றொடர்கள், கல் தடுக்கிக் கீழே விழுந்து முகரையைப் பேர்த்துக்கொண்டபோது எழுந்த சுர்ரென்ற வியப்பா/அதிர்ச்சியா/ஆவேசமா/இயலாமையா/குழப்பமா/கொலைவெறியா என்று தெரியாத ஒரு உணர்ச்சி என - மீம்கள் என்று குறிக்கப்படும், ஓரளவு பொதுமைப்படுத்திச் சொன்னால் "பிரதியெடுத்துக்கொள்ளப்படக்கூடிய உணர்வு அளவைகள்" (replicable units) ளுடைய சௌகரியம் என்ன எனில், அவைகளை அறிவியல்பூர்வமாக (அதன் குறைபாடுகளுடனேயாவதுகூட) அளப்பது இயலாத காரியம், அதனால் மென்று துப்பப்படும் வாய்க்கேற்ப அர்த்தங்கற்பித்துக்கொள்ளலாம். இந்த 'கலாச்சார மீம்கள்' கட்டுக்கடங்காமல் போகும்போது, தேவைப்பட்டால் மரபணுக்களைத் துணைக்கழைத்துக்கொள்ளலாம் - இப்படி இப்படி விலங்குக் குணமும் எங்களிடம் இருக்கிறது என்ற ரீதியில். ரிச்சர்ட் டாக்கின்ஸ், டீன் ஹாமர், சாமுவேல் ஹண்டிங்டன் போன்றவர்கள் benchworkஐத் தாண்டி அறிவியலை வெகுஜனத் தளத்துக்கு எடுத்துச்செல்கையில் ஏற்படும் பொதுமைப்படுத்தலை அவர்கள் வேண்டுமென்றே செய்யாவிட்டால்கூட, தேவைக்கேற்றபடி உருட்டிப் பகடையாடுவது ஒன்றும் அவ்வளவு கஷ்டமான காரியமல்ல. உதாரணத்துக்கு, "எங்கள் கலாச்சார மீம்கள் தூய்மையானவை, ஆனால் இந்த கேடுகெட்ட பரிணாமவியல் வழி வந்த மரபணுக் கசடுகள் எங்கள் விலங்குக் குணத்தை இன்னும் தக்கவைத்திருக்கின்றன, இத்யாதி இத்யாதி, இந்தா பிடி வெட்டை" இந்தமாதிரி மொட்டை விளக்கங்கள் எவ்வளவு எரிச்சலூட்டும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.

//ஒருவன் "பரந்த மனதுடையவனாக" தன்னுடைய மனைவியை சுதந்திரமாக அனுப்பி யாரிடமிருந்து வேண்டுமானாலும் பிள்ளை பெற்றுக்கொள் என்று அனுப்புகிறான். மற்றவன், "குறுகிய மனதுடையவனாக" தன்னுடைய மனைவி தன்னிடமிருந்து மட்டுமே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறான். யாருடைய சந்ததி வாழும்? எவன் "குறுகிய மனதுடையவனாக" இருக்கிறானோ அவனது சந்ததிதான் வாழும். "பரந்த மனது" ஜீன் அவனோடு அழிந்துவிடும். அடுத்த தலைமுறையில் "குறுகிய மனதுடையவர்களின்" கூட்டமே அதிகரித்திருக்கும்.//
இதைப் படித்துவிட்டு தலையில் அடித்துக்கொள்வதா அல்லது சுவற்றில் முட்டிக்கொள்வதா என்று யோசித்து முடிக்குமுன்னரே இவ்வளவு பின்னூட்டங்கள், போதாக்குறைக்கு சுந்தரமூர்த்தி நக்கலுக்குக் கேட்ட Xல் இருக்கிறதா Yல் இருக்கிறதா என்ற கேள்விக்கு அவர் புரிதலை முன்வைத்து ஆவேசமாக விளக்கம் வேறு கொடுக்கிறீர்கள், அது கிண்டல் என்று கூட விளங்காமல். reeler, wobbler என்று சோதனை எலிகளின் phenotypeக்குப் பெயர்கொடுத்து ஆராய்ச்சிசெய்வது போல இந்த "பரந்த மனது ஜீனுக்கு" ஒரு measurable phenotype நிர்ணயம் செய்யவேண்டுமென்றால் எவ்வளவு சிக்கலாக இருக்குமென்று யோசிக்கிறேன். reeler, wobbler என்று இருக்கும்போது 'பரந்த மனது' phenotype இருக்கமுடியாதா என்று பதில் கேள்வி கேட்டு தர்மசங்கடப்படுத்த மாட்டீர்களென்றே நினைக்கிறேன் ;-). ஒருவகையில் பார்த்தால் மீம்கள், மரபணுவியல் என்ற template மீது கட்டமைக்கப்பட்டவையே; memetic drift போன்ற பதங்கள் எங்கிருந்து வந்தன என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. டார்வினினின் தத்துவமும், நம்மிடம் peripheral scientists வழியாக வந்து சேர்ந்திருக்கும் 'டார்வினின் தத்துவமும்' அச்சு அசலாக ஒன்றேயல்ல என்று டாக்கின்ஸ் சொல்லியிருப்பதைக் கவனிக்கத் தவறியிருக்கமாட்டீர்களென்று நினைக்கிறேன். இதே கண்ணோட்டத்தில் சின்னக்கருப்பன் சொன்ன //ஆனால், இன்று அந்த நிலை வந்துவிடவில்லை. இன்று பெரியாரின் பல்வேறு சமூக "புரட்சிகளில்" எந்த புரட்சியை மக்கள் எடுத்துக்கொண்டார்கள் என்று பார்த்தாலே நமக்கு பரிணாமம் எவ்வாறு வேலை செய்கிறது என்று தெரியும்.// ஐயும் வைத்துப் பார்க்க என்று சொன்னால் என்ன சொல்வீர்களென்று தெரியவில்லை ;-). RA Fisher சொன்ன 0.05 ஐ வைத்து எத்தனை அறிவியல் கோட்டைகள் நிறுவப்பட்டிருக்கின்றன என்பதையும் அறிந்திருப்பீர்கள், இந்தமாதிரி ஒரு imperfect modelஐ நிறுவும் அறிவியலை/பரிணாமவியலை "ஒப்புக்கொண்டு", மீம்களை "ஒப்புக்கொண்டு", அதேசமயத்தில் சந்தில் ஒரு சிந்தும் பாடுவதுபோலத் தோன்றியது எனக்கு மட்டுமல்ல என்பது பின்னூட்டங்களைப் பார்த்தால் விளங்குகிறது; அநாகரிகமான கேள்விகளுக்குப் பதிலளிப்பதைத் தவிருங்கள், அல்லது வசைபாடுங்கள்: terminally differentiated intelligence அனைவருக்கும் வாய்க்காத வரம் என்பதைத் திரும்பத்திரும்ப உணர்த்த முயலவேண்டாம்; தமாஷாக இருக்கிறது.

12:18 PM, October 03, 2005  
Blogger SnackDragon said...

எனக்கு பதிலளித்த (முயன்ற) இறைவனு(?)க்கும், பொழுதுக்கும் நன்றி.
மாண்ட்ரீஸர் , மிகச்சரியான் கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்த பிம்பம் சமைத்தலைத்தான் தோலுரித்துக் காட்டவேண்டியுள்ளது.

பின்னூட்டங்களைக் கொண்டு பார்த்தால், "பாம்பு" ஜீன் தான் சிறந்ததாக இருக்கும் போல்த் தெரிகிறது :-)

1:12 PM, October 03, 2005  
Blogger சன்னாசி said...

//Research design and analysis process has methods to remove the problems associated with P<0.05.That is not an imperfect model.In one sense we can say every model in the world is imperfect,but this is the best we have.It works.//
இதை அறிந்தே உள்ளேன்; சொல்லவந்த context வேறு. இருப்பினும், நன்றி.

2:22 PM, October 03, 2005  
Blogger SnackDragon said...

//Aiyaa,,,All over the world a child growing with step parents faces discrimination.I//
மறுக்கவில்லை, அதற்கு ஜீன் என்று காரணம் கற்பிப்பதைத் தான் எதிர்க்கிறேன். நன்றி.

3:00 PM, October 03, 2005  
Blogger SnackDragon said...

/அவ்வாறு செய்வதில்லை என்பதையும் karthikramas ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் /
/ சி.க. எடுத்துக்காட்டும், >>மரபணு சுயநலப்படி<< யாரும் நடந்துகொள்வதில்லை/
என்று சொன்னால் நான் அதைக் கொள்கிறேன் என்று ஆகாது. ஒத்துக்கொள்ளவும் இல்லை.

7:51 AM, October 04, 2005  
Blogger சன்னாசி said...

//Quality versus quantity.Raman's descendents will inherit entire wealth of their father plus will be raised in a more better way.Indran's descendents will survive in a poor way.In passage of time mortality among indran's descendents will be high.

Fittest animal survives.Thats the rule//

Iraivan: Here, fit = adapt. In a biological context, "fitness" is about fecundity, and the adaptive ability of a genotype to multiply itself and continue to survive under changing environmental conditions. Being born filthy rich doesn't matter in the genetic aftermath of cataclysms and population bottlenecks. It's true that the term "fitness" can be conveniently used in an analgesic connotation, and I hope that's not what you did here.

4:42 PM, October 04, 2005  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அன்புள்ள இறைவன், மாண்ட்ரேஸர்,
தங்கள் பின்னோட்டங்களுக்கு நன்றி. வள்ளலார் ஜெயந்தி வாழ்த்துக்கள்.
சிகவின் கட்டுரை எந்த சமுதாய அநீதியையும் ஆதரிக்கவில்லை. அத்தகைய நோக்கங்கள் இக்கட்டுரைக்கு கற்பிக்கப்பட்டது உள்நோக்கத்துடன் செய்யப்பட்டதே. இறைவன் தங்கள் கருத்துக்களுடன் நான் பெருமளவில் உடன்படுகிறேன். முந்தைய பின்னூட்டம் தவிர. Strength like beauty may be in the eyes of the beholder. Who is stronger? Gen. Dyer and Adolf Hitler or Gandhiji? At the biological world the measure of evolution is the allele. In the human world, it is not just allele but also meme. The fact that meme can be seen as an extended phenotype complicates the matter. Tonight i will finish this interesting book by Susan Blackmore -'Meme Machine'. ஒரு வேளை மீம்களின் பரவுவிதிகள் சமூகவியல், சமூக-உளவியல் போன்ற புலங்களிலிருந்து உருவாகலாம். 'ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்...' மீம் செயல்பட்டால் முரட்டுத்தனமான அடுத்தவள் மகனைப் பட்டினிப் போட்டு தன் பிள்ளையை வளர்க்கும் சர்வைவல் போக்கு மாறலாம். இத்தகைய மீம்கள் செழிக்கும் மனித சமுதாயம் மற்றைய சமுதாயத்தை விட தம் குழந்தைகளை ஆரோக்கியமான சூழலில் வளர்க்கும் என்பதால் அத்தகைய சமுதாயங்களுக்கு சர்வைவல் மதிப்பு அதிகமாகலாம். 'இயற்கையோடு இணைந்த வாழ்வு' என்கிற மீம் செயல்படுவதால் உருவாக்கப்படும் தொழில்நுட்பம் அதிக ஆற்றல் உள்ளீடு அற்றதாக பரவுதன்மை கொண்டதாக அமையலாம். அத்தகைய மீம்கள் பரவியுள்ள சமுதாயம் வளங்குன்றா வளமை காணலாம் அதன் விளைவாக வருங்காலத்தில் வெற்றிகரமாக சர்வைவ் செய்யலாம். 'எனக்குப் பின் பிரளயம் இன்றைக்கு காணும் காசுதான் முக்கியம்' என்கிற மீம்கள் செழிக்கும் சமுதாயம் சூழலியல் பிரச்சனைகள் தேர்வழுத்தமாகும் போது மறைந்து போகலாம் அல்லது இந்த மீம்கள் குறைந்து மாற்றுவகை மீம்கள் மேல் பரவலாம். மெமிட்டிக்ஸ் ஒரு நல்ல அறிதல் சட்டகத்தை சமூக-அறிவியல் துறைகளுக்கு வழங்கியுள்ளது.
அன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்

2:48 AM, October 05, 2005  
Blogger சன்னாசி said...

//Montresar,
Fitness means not only adaptation but also strength,intelligence everything.Mere numerical strength will actually weaken a race.For example china's population is 120 crores.Germany's population is 8 crores.Which country is fit?Historically Which race fit?//

This is guillotine surgery. What more can I say!!

6:00 AM, October 05, 2005  
Blogger Muse (# 01429798200730556938) said...

இதுவும் தமிழ் அறிவுச் சூழலின் இன்னொரு அவலம்.


முதல் அவலம் என்ன தெரியுமா?

எந்த விஷயத்தையும் ஆதாரபூர்வமாக ஆராயாமல், எழுதியதை விமர்சிப்பதை விட்டுவிட்டு, எழுதியவரை விமர்சிப்பது.

ஹிந்துத்துவவாதி என்ற முத்திரை குத்துவதும், அந்த விஷயத்தை விளக்கியவருக்கு அறிவில்லை என்பதுவுமே அறிவுஜீவித்தனமாகவும் இருக்கும் சூழல்தான் இருப்பதிலேயே கேவலமான முதல் அவலம்.

இத்தனைக்கும் சின்ன கருப்பன் மிகவும் டெக்னிக்கலாக குழப்பாமல் எளிமையாக விளக்கியிருக்கிறார். அவருடைய கருத்தில் மாறுபாடு கொள்பவர்கள் அவர் முன்வைக்கும் ஆதாரங்களின் பலவீனங்களை எடுத்துக்காட்டலாம். அது ஒரு நிஜமான அறிவுபூர்வமான தர்க்கமாக அமையும்.

ஆனால், அதற்கு பல விஷயங்களை படிக்க வேண்டி வரும். அந்த கடினமான பணியில் ஈடுபடுவதைவிட, நம்மிடமிருக்கும் நல்ல தமிழை நக்கலடிக்க பயன்படுத்துவது மிகவும் எளிது. "மெல்லத் தமிழினி சாகும்" என்றான் பாரதி. நல்ல அறிவியல் சார்ந்த உரையாடல்களை தமிழில் நடத்த விருப்பம் இல்லாத ஜாதி வெறி மனப்பன்மையை அன்றே அறிந்தான் போலும்.

இந்த மீம்கள் பிழைக்காதிருப்பது அறிவும் மனித வளமும் பிழைப்பதற்கு உதவும்.

6:08 AM, January 16, 2007  

Post a Comment

<< Home