Thursday, November 08, 2007

முத்து காமிக்ஸும் காம்ரேட் காரத்தும்

முத்து காமிக்ஸுக்கும் காம்ரேட் காரத்துக்கும் என்ன தொடர்பு? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் ஏன் முடிச்சு என்கிறீர்களா? ஹி ஹி...தோழர்..சகாவு...காம்ரேட் காரத் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறாரே 'லெனினை ஹிட்லருடன் தொடர்பு படுத்துபவன் மூட்டாள்' என்று...ஆனால் முத்து காமிக்ஸ் சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட தீபாவளி மலரில் தென்னமரிக்காவில் நடக்கும் புரட்சிகளின் உண்மை உள்குத்துக்களை காமிக்ஸாக வெளியிட்டது. சரி. காமிக்ஸ் என்றால் சின்னபசங்க சமாச்சாரம் எங்களை மாதிரி அறிவு ஜீவிங்க அதை படிக்கிறது எல்லாம் Below our dignity அப்படீன்னு நினைக்கிற ஆத்மாக்கள் எல்லாம் ஒரு தடவை ஜோரா கைதட்டிட்டு விலகி போயிடலாம். சரியா மத்தவங்க தொடர்ந்து படிக்கலாம். நம்ம முத்து காமிக்ஸ் ஆசிரியர் விஜயன் இருக்கிறாரே காமிக்ஸ் உலகத்துல புரட்சி செய்யணும்னு ரொம்ப ஆசை படுறவருங்க. அதனால அவர் பல ஆண்டுகளா XIII அப்படீங்கிற நினைவாற்றலை இழந்த ஒரு ரகசிய உளவாளி (அல்லது பலிகிடாவோட) சோக கதையை முத்துக்காமிக்ஸ்ல சீரியலைஸ் பண்ணிட்டு வாரார். பல அரசியல் உள்ளாட்டங்களை வெளிப்படுத்துகிற அந்த கதையை படிக்கிறதுனால அமெரிக்க அரசியலில் ஓடுகிற பல உள்ளோட்டமான விசயங்களை புரிஞ்சுகிட முடியும். உதாரணமா மக்கார்த்தே காலத்தில் நிலவிய கண்மூடித்தனமான கம்யூனிச எதிர்ப்பு அதன் பெயரால் சாதாரண இடதுசாரி சிந்தனையாளர்களைக் கூட தூக்கில் போட்ட விதம், கறுப்பின மக்களுக்கு எதிராக தீயாக எரிஞ்ச கு க்ளக்ஸ் க்ளான் வெறிக்கும்பலின் இயக்க வரலாறு, அதில் பெரிய அரசியல் வாதிகள் சம்பந்தப்பட்டிருந்தது (உங்களுக்கு தெரியுமா கொஞ்ச வருசங்களுக்கு முன்னாடி ரிப்பப்ளிக்கன் ஜனாதிபதி வேட்பாளரா தேர்ந்தெடுக்கப்படவிருந்த டேவிட் ட்யூக் அப்படீங்கிற ஆசாமி கு க்ளக் க்ளான் உறுப்பினர் என தெரிஞ்சதுனால ஜனாதிபதி ஆக முடியலை. ஆனா அந்த ஆள் இப்பவும் தீவிர யூத வெறுப்போட இயங்கிட்டுத்தான் இருக்கிறார். நம்மூர் அருந்ததி ராய் செப்டம்பர் 11 குறித்து எழுதின கட்டுரையும் இந்த ஆசாமி எழுதின கட்டுரையையும் பக்கத்துல பக்கத்துல வச்சா ஆறு வித்தியாசம்தான் பார்க்கணும்.) அப்புறம் ஜனாதிபதி கொலை முயற்சியில் அமெரிக்க உளவுத்துறை இராணுவம் மாதிரிப்பட்ட அமைப்புகளில் மேல் மட்ட ஆசாமிகளே இடம் பெற்றிருந்தது என பல விசயங்களை இந்த காமிக்ஸ் தொடர் வெளிப்படுத்தியது. நம்ப முடியாத ஆனால் நம்பாமலும் இருக்க முடியாத பல விசயங்கள் இந்த தொடரில் வெளிப்பட்டன. பல புனித பிம்பங்களை உடைக்கிற காமிக்ஸ் இது. அமெரிக்க ஜனாதிபதி இதில் ஒரு அல்டிமேட் வில்லன் என நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இது நிச்சயமாக வலதுசாரி 'தசை வலு கொண்ட வெள்ளைக்கார ஹீரோ' கதை அல்ல. இதை வாசித்தால் அரசியல் நிகழ்வுகளில் இருக்கக் கூடிய பல உள்குத்துக்கள் உங்களுக்கு புலனாகும். (இந்திய இறையாண்மைக்காக அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதாக சொல்லி இறுதியில் சீனாவுக்கு உதவி செய்யத்தான் எதிர்த்தோம் என காம்ரேட்டு காரத் சொன்னது போல). சரி இந்த குறிப்பிட்ட கதை தென்னமெரிக்க புரட்சிகளின் உள்ளே ஓடும் பல உள்ளோட்டங்களை வெளிப்படுத்துகிறது. இதில் க்யூபாவுக்கு போய் பயிற்சி பெற்று புரட்சிகளை நடத்தும் ஒரு ஆசாமி வருகிறான். இந்த சோசலிச 'புரட்சிக்கு' பொருள் உதவி கொடுப்பது யாரென நினைக்கிறீர்கள்? கீழே உள்ள பானல்களைப் பாருங்கள். குடும்ப பொலிட் பீரோ நடத்தும் காம்ரேட் காரத் அண்ணாத்தை முத்து காமிக்ஸை தடை செய்ய சொல்லமாட்டார் என்றும் குடும்ப அரசியல் நடத்தும் மஞ்சள் துண்டு மைனர் அதை சிரமேற்கொண்டு தடை செய்ய மாட்டார் என்றும் நம்புகிறேன்.
இனி காமிக்ஸிலிருந்து சில காட்சிகள்: [நன்றி : முத்து காமிக்ஸ்]
கீழே காணும் பேனல்களில் ஒரு அறிவுஜீவி இடது சாரி 'வரலாற்றாசிரியர்' உண்மையில் எப்படி அமெரிக்க பெரு முதலாளிகளின் கைக்கூலியாக இருக்கிறார் என்பது வெளியாவதைப் பாருங்கள்:

இது வரை காமிக்ஸ். இனி காம்ரேட்டு காரத்தின் அமெரிக்க எதிர்ப்பு பின்னணி என்ன? குடும்ப பாலிட் பீரோ உறுப்பினர் அண்ணாத்தை காரத்து ஒப்புக்கொண்ட படி எல்லாம் சீனா தனிமைப் பட்டுவிடக்கூடாதே என்றுதான் அணு ஒப்பந்தத்தை எதிர்த்தாராம். ஆனால் இங்கே பாருங்கள் சீனா அமெரிக்காவுடன் வர்த்த ரீதியாக கட்டித்தழுவுவதை. அதாவது அமெரிக்காவுடன் இலாபகரமான ஒப்பந்தங்கள் செய்வதில் சீனாவுக்கு போட்டியாக இந்தியா வந்துவிட கூடாது என்பதற்காக நடத்தப்படும் நாடகங்கள்தான் இந்தியாவில் அம்மா காரட்டும் அய்யா காரட்டும் போடுகிற அமெரிக்க எதிர்ப்பு கூத்தடிப்புக்கள். சில நேரங்களில் காம்ரேடுகள் காமிக்ஸ் த்ரில்லர்களையும் மிஞ்சி விடுகிறார்கள்.
உதாரணமாக சீன-அமெரிக்க நட்புறவு இணையதளத்தில் எப்படி சீனாவும் அமெரிக்காவும் ஆசியாவை பங்குபோட்டுக்கொள்ள -அதில் ஜப்பான் இந்தியா போன்ற நாடுகளை 'அவற்றுக்கு உரிய' இடத்தில் வைக்க- சீன-அமெரிக்க ணு ஆயுதக் கூட்டுறவு தேவை என்பது வலியுறுத்தப்படுகிறது. ஆக, அந்நிய சித்தாந்தங்கள் அந்நிய இறையியல் ஆகியவற்றால் ஏமாளி ஆகி நிற்கிறது அப்பாவி இந்தியா. லால் சலாம் அமெரிக்கா! லால் சலாம் சீனா!

[Disclaimer: இந்த வலைப்பதிவினுடைய அரசியல் சமுதாய பார்வையையோ அல்லது இந்தகுறிப்பிட்ட இடுகையின் அரசியல் சமூக பார்வையையோ முத்து காமிக்ஸோ அல்லது அதன் ஆசிரியர் விஜயனோ அல்லது XIII காமிக்ஸ் கதை ஆசிரியர்களோ ஏற்கிறார்கள் என்று இந்த வலைப்பதிவு கருதவில்லை.]

[பின்குறிப்பு: இரத்தப்படலம் எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த அருமையான பொலிட்டிக்கல் மற்றும் சாகச த்ரில்லர் முழுமையாக ரூ 200 விலையில் 800 பக்கங்களுடன் 2008 இல் முத்துகாமிக்ஸின் சகோதர காமிக்ஸான (இதுவும் விஜயனின் brain child தான்) லயன் காமிக்ஸால் வெளியிடப்படுகிறது. தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக திகழும் என்பதில் ஐயமில்லை. ஆசிரியர் விஜயனின் காலதாமதங்கள் புகழ்பெற்றவை என்றாலும் இந்த காமிக்ஸ் பொக்கிஷத்தை முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் கூரியர் சர்வீஸ் மூலம் பெற்றிட ரூ 225 பதிவுத்தபால் மூலம் பெற்றிடரூ 230. தரமான மொழி பெயர்ப்பு மற்றும் அழகிய ஓவியங்கள். ஆர்டர் அனுப்ப வேண்டிய முகவரி: பிரகாஷ் பப்ளிஷர்ஸ், 8/D-5 சேர்மன் பி.கே.எஸ்.ஏ.ஏ ரோடு, அம்மன் கோவில்பட்டி, சிவகாசி-626189 மின்னஞ்சல்: lion@vsnl.com. தாமதங்களுக்கு இவ்வலைப்பதிவு பொறுப்பல்ல. இவ்வலைப்பதிவு எவ்விதத்திலும் முத்து காமிக்ஸுடனோ லயன் காமிக்ஸுடனோ அதிகாரபூர்வ தொடர்புடையதில்லை.]

Labels: , , , , , , , ,

16 Comments:

Anonymous Anonymous said...

(இந்திய இறையாண்மைக்காக அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதாக சொல்லி இறுதியில் சீனாவுக்கு உதவி செய்யத்தான் எதிர்த்தோம் என காம்ரேட்டு காரத் சொன்னது போல).

குடும்ப பாலிட் பீரோ உறுப்பினர் அண்ணாத்தை காரத்து ஒப்புக்கொண்ட படி எல்லாம் சீனா தனிமைப் பட்டுவிடக்கூடாதே என்றுதான் அணு ஒப்பந்தத்தை எதிர்த்தாராம்.

இதற்கு ஆதாரம் இருக்கிறதா?

11:53 PM, November 08, 2007  
Anonymous Anonymous said...

சூப்பர். எப்படி சார் இப்படியெல்லாம் லிங்க் போடுகிறீர்கள்? இந்திய கம்னியுஸ்டுகள் தேசத் துரோகிகள். இந்தியாவில் இருந்து நசுக்கி ஒழிக்கப் பட வேண்டிய நச்சுக் கிருமிகள். கராத் முதல் நம்ம ஊர் நல்ல கண்ணுகள் வரை தேசத் துரோக அரசியல் நடத்தும் கைக்கூலிகளே. மலையாளியும் வங்காளியும் செய்யும் தப்புக்கு ஒட்டு மொத்த இந்தியாவும் பலியாகிக் கொண்டிருக்கிறது. மற்றுமொரு அருமையான கட்டுரை. முத்து காமிக்ஸில் பழைய 70 வருட மாயாவி. லாரன்ஸ் டேவிஸ் புத்தகங்க்கள் கிடைக்குமா?

அன்புடன்'
ச.திருமலை

11:58 PM, November 08, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

என்னிடம் பவுண்ட் வால்யூம்கள் இருக்கின்றன. குறிப்பாக இரும்புக்கை மாயாவி
பாம்புத்தீவில் மாயாவி
பாதாளநகரம்
மஞ்சள் பூ மர்மம்
கொள்ளைக்கார மாயாவி
கொள்ளைக்கார பிசாசு (மாயாவி)
நெப்போலியன் பொக்கிஷம்
இயந்திர தலை மனிதர்கள் (இரும்புக்கை மாயாவி)
மலைக்கோட்டை மர்மம் (ஜானி நீரோ)
ஆனால் சிவகாசிக்கு அண்மையில் சென்று முத்துகாமிக்ஸ் அலுவலகம் சென்ற நண்பர் பழைய காமிக்ஸ்கள் அங்கே இல்லை என்றார். ஆனால் முத்துகாமிக்ஸ் காமிக்ஸ் க்ளாஸீக்ஸ் என்று பழைய காமிக்ஸ்களை போடுகிறார்கள்.

12:46 AM, November 09, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

வாங்க வனஜ் அண்ணாச்சி.
நல்லா இருக்கீயளா?
இதோ பிடிஐ ரிப்போர்ட்டிலிருந்து காரத் உதிர்த்தவை:

The CPM vowed to oppose a strategic alliance between India and the United States saying such a move is aimed at countering China. He said the US was trying to make India its strategic ally in countering China, "the most powerful socialist country capable of challenging the might of the USA". ''We shall not rest in our fight till the strategic ties with the US is snapped out,'' Karat said speaking at a CPM-sponsored programme to celebrate October Revolution day in Kolkata.
"India is a prize for the US and not Pakistan because of its market. Developed India can be useful for counter-balancing China. This is a game the US is trying to play which has to be foiled''

உலகத்தின் மிக சக்திவாய்ந்த சோஷலிச
சீனாவும் ஏகாதிபத்திய அமெரிக்காவும் போட்டி இல்லாமல் எப்படி ஆசியாவை பங்கு போடலாம் அதில் இந்தியா ஜப்பான் மாதிரி நாடுகளுக்கு எந்த இடத்தை கொடுக்கலாம் என சீனா நடத்தும் அமெரிக்க நட்புறவு இணையதளத்தில் கட்டுரை வெளியிடுகிறார்கள். ஆக அமெரிக்க இந்திய ஸ்டாரடஜிக் உறவுகளை எதிர்ப்பார்களாம் (இப்போதைய முக்கிய ஸ்டாரடஜிக்கான உறவு அணுசக்தி ஒப்பந்தம் என்பதனை ஒத்துக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்)ஏனென்றால் சீனா தனிமைப்பட்டு போகுமாம். ஆனால் சீனா அமெரிக்காவுடன் கொஞ்சுவதை கண்டுகொள்ள மாட்டார்களாம்.

12:55 AM, November 09, 2007  
Blogger ஜயராமன் said...

அருமை.

இந்திய தேசதுரோக இடதுசாரி அரசியலில் சீன அல்லக்கைகளே கார்ட்டூன் பிம்பங்கள் ஆகி கேலிப்பட்டு போயிருக்கிறார்கள். இந்திய அரசியலில் உண்மைநிலை இன்று கார்ட்டூன்களில் புதைந்துவிட்டதோ! இடதுசாரிகளின் பரிதாப நிலை இன்று நந்திகிராமத்தில் நாறிவிட்டது. நீங்கள் அமெரிக்க அரசியலைக்குறித்த நிலையை கார்ட்டூனில் காட்டினாலும், இந்தியாவிலும் இவர்கள் இந்த இழிநிலைக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்பது நிச்சயம்.

நன்றி

2:06 AM, November 09, 2007  
Anonymous Anonymous said...

1. ஓட்டுக்கேட்கிற கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருப்பதில் பெரியவை CPI மற்றும் CPM மட்டும்தான்.

இவை இரண்டுமே சீனாவிற்கு அடிவருடுகின்றனவா?

2. சீனா தயாரித்த பொம்மைகளில் இருக்கும் நச்சுப்பொருட்களுக்காக உலகில் பெரும்பாலான நாடுகள் சீன பொம்மை விற்பனையைத் தடை செய்துள்ளன.

இந்தியா தடை செய்துள்ளதா?

3. சோனியா சீனா சென்று வந்திருக்கிறாள். இதற்கிடையில் தலாய்லாமாவிற்கு கிடைத்த விருதிற்காக மத்திய அரசாங்கத்தின் மனிதவளத்துறை நடத்திய விழாவில் அமைச்சர்கள் யாரும் கலந்துகொள்ளக்கூடாது என அதே அரசாங்கம் ஃபத்வா விதித்திருக்கிறது. விருந்திற்குக் கூப்பிட்டு செருப்பால் அடிப்பதுபோல. தலாய்லாமாவை ஏன் இங்கனம் கேவலப்படுத்துகிறார்கள்?

யாருக்காக இந்திய அரசாங்கம் அஞ்சுகிறது?

தலாய் லாமாவிற்கு இந்தியாவில் பாதுகாப்பு இருக்கிறதா?

4:12 AM, November 09, 2007  
Anonymous Anonymous said...

கருத்துக்களின் ஒற்றுமையை மட்டுமே கண்டுபிடிப்பீர்கள் என நினைத்தேன். படங்களிலும் ஒற்றுமையைக் கண்டு பிடித்துள்ளீர்கள்.

ஹிட்லர், மாவோ, லெனின் மூன்று பேரும் ஒரே மாதிரியாகவே சல்யூட் அடிக்கிறார்களே !

கலக்கலோ கலக்கல் !

9:41 AM, November 09, 2007  
Anonymous Anonymous said...

இந்திரஜால காமிக்ஸ் என்று ஒன்று வந்துகொண்டிருந்ததே அதைப் படித்திருக்கிறீர்களா?

அதில் ஒரு ஹீரோ முழுக்க முழுக்க இந்தியராகவே வருவார். கதைக்களமும் இந்தியாவே. துப்பறிவதோடு, சண்டையும் போடுவார்.

அவருடைய கதைகள் முழுக்க அவர் நேபாளர்கள் அணிவதைப் போன்ற ஒரு சட்டையையும், கச்சம் வைத்துக் கட்டிய வேட்டியையும் அணிந்திருப்பார்.

அவருடைய மனைவியும் அவரோடு சேர்ந்து துப்பறிவார்.

அவருடைய பெயர் எனக்கு மறந்துவிட்டது.

அது என்னவென்று சொல்லுங்களேன். ப்ளீஸ்.

8:32 AM, November 10, 2007  
Blogger எண்கோணம் [18222036756861491748] said...

பனித்துளி தேடுகிற காமிக் ஹீரோ "பகதூர்". சரிதானே?

பகதூர் ஆரம்ப காலங்களில் காவி நிறத்தில் சட்டை அணிந்திருப்பார். அதுவும் பனித்துளி சொன்னதுபோல இந்தியர்களுடைய சட்டை டிசைனில் இருக்கும். (நேபாளிகளும் இந்திய டிசைனில்தான் சட்டை அணிகிறார்கள். அவர்கள் இன்னமும் அதைப் பின்பற்றுகிறார்கள். ஆனால், இந்தியர்கள்தான் அங்கனம் அணிவதை விட்டுவிட்டோம்.)

ஆனால், காலம் மாற மாற பகதூரும் ஸெக்யூலரைஸ் செய்யப்பட்டார். காவி நிறச் சட்டையும், நீண்ட தலைமுடியும் காணாமல் போனது.

இந்தியத்தன்மை இல்லாத பகதூர் டிஷர்ட்டும் பேண்டும் அணிந்து தொடர்ந்து அதே வேலையைச் செய்ய ஆரம்பித்தார்.

விவரங்களுக்கு:

http://en.wikipedia.org/wiki/Bahadur_(Comic_character)

http://dara-indrajal.blogspot.com/2007/07/bahadur-brave.html

10:02 PM, November 10, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அட பகீரதா! ரொம்ப கரெக்ட். பகதூர் ஒரு இளைஞர் படையையும் உருவாக்கியிருப்பார். அதுவும் கூட ஆர்.எஸ்.எஸ்ஸை நினைவூட்டுவதாக இருக்கும்.

10:45 PM, November 10, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

வாங்க ஜெயராமன் சார். உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி.

10:46 PM, November 10, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

பெலாவுக்கும் பகதூருக்கும் கலியாணம் ஆகிவிட்டதா என்ன? மிஸ் செய்துவிட்டேனே!

10:47 PM, November 10, 2007  
Anonymous Anonymous said...

>> பெலாவுக்கும் பகதூருக்கும் கலியாணம் ஆகிவிட்டதா என்ன? மிஸ் செய்துவிட்டேனே! <<<<

ஆமாம். கடைசி காமிக்ஸில் பகதூர் திருமணம் செய்யும் ஆசையை தெரிவிக்க, பெலா வெட்கத்தோடு ஒத்துக்கொள்வார்.

அந்தத் திருமணத்திற்கு எனக்கு அழைப்பிதழ் வந்திருந்தது. சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு வந்தேன்.

இது நடந்து பதினேழு வருடங்கள் ஓடிவிட்டன. ஆனால், நேற்றுக்கூட தொலைபேசியில் என்னிடம் அந்தத் திருமணத்திற்கு அரவிந்தன் நீலகண்டன் வராதது குறித்து பகதூர் வருத்தம் தெரிவித்தார்.

உங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழை இடையில் இருந்த யாரோ சிலர் உங்களிடம் சேராவண்ணம் தடுத்திருக்கலாம்.

ஆபிரகாமிய சதியோ?

--- Abid Surti

2:39 AM, November 11, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//ஆபிரகாமிய சதியோ?

--- Abid Surti//

கலக்கல் அபித் சார்.
வருகைக்கு நன்றி.
வேதாள மாயாத்மா கல்யாண காமிக்ஸ் உங்களிடம் இருக்கிறதா? தமிழில் முத்து காமிக்ஸ் 'பூ விலங்கு' என்று வெளியிட்டதும் இந்திரஜால் ஆங்கிலத்தில் வெளியிட்டதும் இருந்தது. காணாமல் போய்விட்டது. அப்புறம் கேள்விபட்ட ஒரு சமாச்சாரம் என்னவென்றால் டார்ஸான்-ஜேன் திருமணம் சரியாக ஐரோப்பிய முறைப்படி நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படாததால் அந்த காமிக்ஸ்களை பழைய பிரிடோரியா (இனவாத தென்னாப்பிரிக்கா) மற்றும் இத்தாலியில் கொஞ்ச காலம் தடை செய்து வைத்திருந்தார்களாம். காதில் விழுந்த செய்தி எவ்வளவு உண்மை என்று தெரியாது.

4:16 AM, November 11, 2007  
Anonymous Anonymous said...

http://www.getreligion.org/?p=1679

3:23 PM, November 11, 2007  
Anonymous Anonymous said...

அரவிந்தன் ஐயா,

ஆங்கிலேயர்கள் அரசாண்டபோது, பாகன் கடவுள்களும் அவர்களது அடிமைகளே என நிறுவ பல செயல்களைச் செய்தார்கள்.

உதாரணமாய், ஒவ்வொரு வருடப் பிறப்பின்போதும் திருத்தணிகை முருகன் கோயில் அதிகாரிகள் பழங்கள் மற்றும் மாலை மரியாதைகளுடன் கிருத்துவ ஆங்கிலேய துரைமார்களை சந்திக்கவேண்டும் என்கிற மரபு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இந்த அடிமை மரபிலிருந்து விடுபட வள்ளிமலை சுவாமிகள் என்கிற துறவி 1917ம் ஆண்டு ஏற்படுத்தியதுதான் திருத்தணிப் படித் திருவிழா.

வருடம்தோறும் டிசம்பர் 31-ஆம் தேதி திருத்தணி ஆலயத்தில் தீபம் ஏற்றியதும், அடிவாரத்தின் முதல் படிக்கட்டில் ஆரம்பித்து ஒவ்வொரு படிக்க்கும் ஒவ்வொரு பாடல் வீதம் திருப்புகழ்பாடி நைவேத்தியம் செய்து தூபம் ஏற்றுவார்கள் பக்தர்கள். இவ்வாறு 365 படிக்கட்டுகளிலும் தீபம் ஏற்றப்படுகிறது.

ஆளுபவர்கள் ஆளப்படுபவர்கள் மனத்தில் அடிமை மனப்பான்மையை ஏற்படுத்த அடிமைகளின் ஆலயத்தில் தலையீடு செய்வதும், அதை இந்துக்கள் ஆன்மீக வழியில் எதிர்ப்பதற்கும் இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இதுகுறித்து தாங்கள் ஒரு கட்டுரை வடித்தால் உங்களது நீண்ட நாள் வாசகர்களும், திருத்தணிகை முருகனின் பக்தர்களுமான நாங்களும், எங்கள் குடும்பத்தாரும் மகிழ்வோம்.

7:28 PM, November 13, 2007  

Post a Comment

<< Home