எகிப்திய ஃபாரோவின் உடலும் இஸ்லாமிய பிரச்சாரமும்

"வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட நைல் ஆற்றங்கரையின் ஓரத்தில் லுக்ஸார் என்ற அழகிய சிற்றூர். இந்த லுக்ஸாரில் 'அரசர்களின் ஓடை' என்ற பெயரில் ஒரு பள்ளத் தாக்கு இருக்கிறது. அங்குள்ள தீபிஸ் என்ற பகுதியில் 1898 ஆம் ஆண்டு மம்மீஸ் (சடலங்கள்) பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த லோனேட் என்ற ஓர் அறிவியல் ஆய்வாளர் அங்கிருந்து ஒரு சடலத்தை கண்டெடுத்தார்.அது உடனடியாக கெய்ரோவிலுள்ள ராயல் மியூஸியத்திற்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப் பட்டது. அந்த சடலம் கண்டெடுக்கப் பட்ட ஆண்டிலிருந்து இன்று வரை ஒரு நூற்றாண்டு கடந்து விட்டது. இப்போது அந்த சடலம் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும் எகிப்திய அரசப் பரம்பரையில் வந்த யாரோ ஒரு பாரோ மன்னனின் சடலம்தான் அது எனவும் இன்றைய அராய்ச்சியாளர்கள் அனைவருமே பெரும்பாலும் ஒத்துக் கொண்டு விட்டனர். எகிப்தின் தலைநகர் கெய்ரோவிலுள்ள உலகப் புகழ் பெற்ற ராயல் மியூஸியத்தில் பார்வையாளர்களை எல்லாம் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கக் கூடிய அந்த பழம் பெரும் சடலம் குர்ஆன் கூறும் ஃபிர்அவுனின் உடலே! முகமது நபியின் காலத்திலேயே இந்த உடல் வெளிப் பட்டிருக்குமானால் யுக முடிவு நாள் வரை அந்த உடலை பாதுகாக்கும் வசதி அந்த மக்களிடத்தில் இல்லை, உடலும் அழுகிப் போய் விடும். எனவே தான் விஞ்ஞானம் வளர்ந்த இந்நாளில் இறைவன் அந்த உடலை வெளிப்படுத்துகிறான். எகிப்து சென்றவர்கள் அந்த உடலை நேரிலேயே பார்க்கலாம். 'குர்ஆன் கூறும் அத்தாட்சிகள்' என்ற சிடி யிலும் நாம் பார்த்திருக்கலாம். குர்ஆன் இறை வேதம்தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று!"இந்த
அருமையான கட்டுரைக்கு வந்த மறுமொழிகளில் ஒன்று கூறுகிறது:
"பிர் அவுன் எனப்படும் PAROH, பிரமிடுகளில் ஒன்றைக் கட்டியவன். இன்றளவும் உலகமே பிரமிடு எப்படித்தான் கட்டப்பட்டிருக்கும் என்று ஊகங்களை மட்டுமே வைத்துக் கொண்டிருக்கும் அளவுக்கு அக்காலத்தில் விஞ்ஞானத்தில் வளர அல்லாஹ் பிர்அவுனுக்கு அறிவை அளித்திருந்தான். இறுமாப்பெய்திய பிர்அவுன் தன்னை இறைவனாக வணங்கும்படி அனைவருக்கும் உத்தரவிட்டான். தான் இறந்த பிறகு தன் உடலைப் பாதுகாப்பதற்காக ஒரு பிரமிடை பிரமாண்டமாகக் கட்டிய அந்த பிர்அவுனுக்கு ஆண்டவன் அளித்த பரிசு என்ன தெரியுமா? அவன் உடல் அந்த பிரமிடுக்குள் இல்லாமல் போகச் செய்ததுதான். ஆராய்ச்சியாளர்கள் அவ்வளவு பெரிய பிரமிடுக்குள் மம்மி இல்லாது போன காரணம் கண்டு ஆச்சரியப்பட்டுப் போயினர், இஸ்லாமிய அறிஞர்கள் தான் அந்த விளக்கத்தை குர்ஆனின் மூலம் எடுத்துக் காட்டினர்."இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு விளக்கத்தை திருவாளர் சுவனப்பிரியன் கொடுக்கிறார்:
"இப்போது மியூஸியத்தில் பாதுகாக்கப் பட்டு வைக்கப்பட்டிருக்கும் மன்னனின் உடல் பாடம் செய்து வைக்கப் பட்ட உடல் அல்ல. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் பிரவுன் என்ற அரசன் இறைவனால் மூழ்கடிக்கப் படுகிறான். மூழ்கடிக்கப் பட்ட உடல் கரையோரம் ஒதுங்கி பனிப் பாறைகளுக்கு இடையில் சிக்கிக் கொள்கிறது. கடல் நீரினுள் உள்ள உப்பும், பனிக் கட்டிகளும் அந்த உடலை போன நூற்றாண்டு வரை கெடாமல் காத்து வந்தன. குளிர் சாதன வசதிகள் ஏற்பட்டு விட்ட இன்றைய காலத்தில் மக்களுக்கு விளக்குவதற்காக இறைவன் அந்த உடலை நாம் வாழும் காலத்தில் வெளியாக்குகிறான். இதைத்தான் நானும் விளக்கியிருக்கிறேன்."
மேலே கூறப்பட்டிருப்பவை உண்மையா?
முதலில் 'அரசர்களின் ஓடை'யில் நடந்த கண்டெடுப்புகளிலிருந்து ஆரம்பிக்கலாம்.
எகிப்தின் பழமையான அரச பரம்பரையினரின் (ஒன்றாம் பரம்பரையினர் முதல் எட்டாம் பரம்பரையினர் வரைக்குமான) கால கட்டம் என்பது கிமு 2950-2150 ஆகும். இக்கால கட்டமே பொதுவாக பிரமிடுகளுக்குள் அரச உடல்கள் பதப்படுத்தி வைக்கப்பட்ட காலகட்டம். இந்த காலகட்டத்திலிருந்து ஏறக்குறைய 50 பிரமிடுகள் காலத்தின் கொடுமைகளுக்கு தப்பித்து நிற்கின்றன என்ற போதிலும் புதையல் தேடுவோரினால் சீர்குலைக்கப்பட்டிருக்கின்றன. இதில் மிகப்பெரிய பிரமிடு குஃபு (Khufu அல்லது பொதுவாக சியோப்ஸ் என்றும் அறியப்படும்)எனும் பாரோவால் கிமு 2550 இல் கட்டப்பட்டதாகும். இவரது உடலைத்தான் காணவில்லை. இது அகழ்வாராய்ச்சியாளர்கள் வருவதற்கு முன்னால் அங்கு வந்த புதையல் திருடர்களால் அழிக்கப்பட்டிருக்க வேண்டும்.


எக்ஸோடஸ் எனப்படுவதே ஒரு தொன்மம். பல நாட்டார் வழக்குகள், முந்தைய தொன்மங்கள் ஆகியவற்றிலிருந்து காலப்போக்கில் உருவானதோர் கதையாடலே அது எனவே அதற்கான ஆதாரங்களை வரலாற்றிலும் அகழ்வாராய்ச்சியிலும் தேடிக்கண்டடைவது கடினம் என்றே வரலாற்றாசிரியர்களும் பெரும்பான்மையான எகிப்தியவியலாளர்களும் கருதுகின்றனர். என்ற போதிலும் வரலாற்றிலும் அகழ்வாராய்ச்சியிலும் தமது மத நம்பிக்கைகளுக்கு ஆதாரங்களைத் தேடுபவர்கள் தொடர்ந்து பல ஃபாரோக்களை விவிலியம் கூறும் யாத்திராகம வில்லனான ஃபாரோவாக அடையாளம் காண முயற்சித்தே வந்துள்ளனர். புராணங்கள் (ஐதீகங்கள், தொன்மங்கள், புராதன மதநம்பிக்கைகள்) வரலாற்றுக்கருவினைக் கொண்டிருக்கலாம். ஆனால் அவை காலங்கள்தோறும் தொன்ம விரிவாக்கம் அடைவன. எனவே வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை மத நூல்கள் விவரிப்பவை அகழ்வாராய்ச்சியால் உறுதிபடுமென நினைப்பவர்கள் மிகவும் மோசமான தவறினை செய்பவர்களாவர். எனினும் நம்பிக்கையாளர்களால் பைபிள் (பின்னர் குரான்) கூறிய ஃபாரோவாக அடையாளம் காணப்பட்ட ஃபாரோக்கள் பின்வருவோர் ஆவர்:
- அஹ்மோஸ்-1 ஆட்சிக்காலம் கிமு 1550-1525. இவரது உடல் மம்மியாக பதப்படுத்தப்பட்டுக் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது எகிப்திய லக்ஸார் மியூசியத்தில் உள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1881. இது அஹ்மோஸ்ஸின் மம்மிதானா என்கிற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

- தட்மோஸ்-3: ஆட்சிக்காலம் கிமு 1479-1425. இரண்டு ஆண்டுகள் மகனுடன் இணை ஆட்சி செய்துள்ளார். இவரது உடல் மம்மியாக பதப்படுத்தப்பட்டுக் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது கெய்ரோ மியூசியத்தில் உள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு கிபி 1881.

- அமென்கோதப்-2: ஆட்சிக்காலம் கிமு 1427-1400) இவரது உடல் மம்மியாக பதப்படுத்தப்பட்டுக் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது கெய்ரோ மியூசியத்தில் உள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு கிபி 1898

- சேத்தி-1: ஆட்சிக்காலம்: கிமு 1294-1279 அல்லது 1290-1279. இவரது உடல் மம்மியாக பதப்படுத்தப்பட்டுக் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது கெய்ரோ மியூசியத்தில் உள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு கிபி 1817

- ராமிஸேஸ்-2: ஆட்சிக்காலம்: கிமு 1279-1213. இவரது உடல் மம்மியாக பதப்படுத்தப்பட்டுக் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது கெய்ரோ மியூசியத்தில் உள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு கிபி 1881

இதில் காணப்படும் முகம் ராமிஸேஸின் மம்மியிலிருந்து அவரது முகம் எவ்வாறு இருக்கும் என மீளமைக்கப்பட்டதாகும். நன்றி: டிஸ்கவரி சானல் - மெர்னப்தா: ஆட்சிக்காலம்: கிமு 1213-1203 இவரது உடல் மம்மியாக பதப்படுத்தப்பட்டுக் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது கெய்ரோ மியூசியத்தில் உள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு கிபி 1898

பேரா. ப்ராங்காய்ஸ் டுனாண்ட் இருபதாண்டுகளுக்கு மேலாக எகிப்திலுள்ள கெய்ரோ-பிரெஞ்சு அகழ்வாராய்ச்சி மையத்தில் பணி ஆராய்ச்சி செய்தவர். அவரிடம் இது குறித்து கேட்டிருந்தேன். அவர் பதிலளித்தார்:
"உன்னுடைய ஐயங்களை நான் ஒத்துக்கொள்கிறேன். முதலாவதாக எகிப்தின் புதிய ராஜ்யத்தில் அனைத்து ஃபாரோக்களும் மம்மிகளாக்கப்பட்டனர் என்பதால் ராஜ மம்மி 'இயற்கையாக பாதுகாக்கப்பட்டது' என்று கூறப்படுவது குறித்து ஆச்சரியமடைகிறேன். இரண்டாவதாக நீ அறிந்திருப்பதைப் போல மோஸஸ் செங்கடலை கடந்தது என்பது பெரும்பாலும் ஐதீகக்கதைதான். மோஸஸையும் அவரைச்சார்ந்தவர்களையும் கடல் வழியாக துரத்திச் சென்ற ஒரு ஃபாரோவைக் குறித்து எவ்வித வரலாற்று வழக்கும் இல்லை.குரானின் இது குறித்த விவரணத்தை ஒரு மதச்சமாச்சாரம் என்கிற விதத்தில் நாம் புரிந்து கொள்ளலாமே ஒழிய வரலாற்று ரீதியாக அல்ல."(புதிய ராஜ்யம் அல்லது Newkingdom என்பது மேலே கூறிய எகிப்திய அரசர்களின் காலகட்டமாகும். ஏறக்குறைய கிமு 1500களின் தொடக்கத்திலிருந்து கிமு 1000 வரைக்குமான காலகட்டம் எனலாம்.)
மேலும் பிரபல எகிப்தியலாளர் மற்றும் உரையாளர், ஆசிரியர் டைலான் பிக்கர்ஸ்டாஃபே என்பவர் சுவனப்பிரியன் குறிப்பிடும் பகுதியைச் சார்ந்த மம்மிகளைக் குறித்தே ஒரு நூலினை எழுதியவர். எனவே அவரிடம் இதே ஐயங்களை எழுப்பினேன். அவர் பதிலளித்திருந்தார்:
"பலரும் எகிப்திலிருந்து மோஸஸ் மக்களை மீட்டதை வழக்குக் கதை (folktale) என்றே கருதுகின்றனர். அதனை நம்புகிறவர்களும் கூட (1898 இல் கண்டெடுக்கப்பட்ட மம்மியான) மெர்னெப்தா அந்த ஃபாரோவாக இருக்க முடியாதென்பதில் ஐயம் கொண்டவர்களாகவே உள்ளனர். மேலும் அந்த ஃபாரோவும் மூழ்கியதாக கதையும் கூறவில்லை. மெர்னெப்தா மம்மியில் பதப்படுத்தப்பட்ட அலங்காரப் பொருட்களின் விளைவாக இருந்த வெள்ளை தடங்களை ஒரு காலத்தில் சிலர் கடலில் மூழ்கியதால் ஏற்பட்ட உப்பரிப்பு என கூறிவந்தனர். அனைத்து மம்மிகளிலும் நேட்ரான் எனப்படும் பதப்படுத்தப்படும் பொருள் உபயோகிக்கப்படுவதால் உப்பு கட்டாயமாக இருக்கும். மெர்னெப்தா மம்மியும் அதற்கு விலக்கல்ல."மேலும் இஸ்லாமிய பிரச்சார தளத்தில் காட்டப்பட்ட ஃபாரோவின் உடலைக் குறித்து அவர் கூறினார்:
" இங்கு காட்டப்படும் மம்மி நிச்சயமாக ராமிஸேஸ்-2 தான். இப்புகைப்படம் கெய்ரோ மியூசியத்தில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அது நிச்சயமாக வழக்கமான முறையில் பதப்படுத்தப்பட்ட மம்மியேதான். மிகச்சிறந்த மம்மிக்கு உதாரணமாக இது திகழ்கிறது. ஏனெனில் அது புதையல் வேட்டைக்காரர்களால் அதிக சேதப்படுத்தப் படாதது."
இதில் இறுதியாக மற்றொரு கூத்தையும் குறிப்பிட்டே ஆகவேணும். டாக்டர். மவுரிஸ் பௌகாலே ஒரு பிரஞ்சு மருத்துவர். அன்வர் சதாத் மற்றும் சவுதி அரசகுடும்பத்துக்கு மருத்துவராக இருந்தவர். "குரானும் பைபிளும் : அறிவியலின் பார்வையில்" எனும் இஸ்லாமிய பிரச்சார நூலை எழுதியவர். இவர் மெர்னப்தாவின் மம்மியை 'தீவிரமாக' ஆராய்ச்சி செய்திட எகிப்திய அரசினால் அனுமதிக்கப்பட்டார். இந்த 'ஆராய்ச்சியின்' முடிவாக அவர் மெர்னப்தா குரான் சொல்வது போல வெள்ளப்பெருக்கில் அடிபட்டு இறந்ததற்கு அத்தாட்சி இருப்பதாக கூறுகிறார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் அறிவியல் எழுத்தாளர் இவரது நூலை விமர்சிக்கையில் கூறுகிறார்: "ஆனால் பிளந்து மூடிய நீர்திரை எப்படி தலைக்காயத்தை ஏற்படுத்தும் என்பதனை அவர் விளக்கவில்லை." உண்மையில் மெர்னப்தா ஏறத்தாழ தமது 60 ஆவது வயதில் அரியணை ஏறி பின்னர் பத்து வருடங்களுக்கு ஆண்டிருக்கிறார். தமது எழுபதாவது வயதில் காலமாகியிருக்கிறார். இவரைக்குறித்த முக்கியமான விஷயம் இவரது வெற்றி தூண்ணில் இவர் பொறித்துள்ள வாசகங்கள் ஆகும். கிமு 1207 ஆண்டு பொறிக்கப்பட்ட இவ்வாசகங்கள் கானான் பிரதேசத்தை இவர் படையெடுத்தது குறித்தும் இஸ்ரேலினை படையெடுத்து தோற்கடித்தது குறித்தும் பேசுகிறது. முதன்முதலாக இஸ்ரேல் தேசத்தைக் குறித்து யூத பைபிளுக்கு வெளியே பேசும் ஆவணம் என்ற முறையில் முக்கியத்துவம் பெறும் இது எக்ஸோடஸ் தொன்மத்துடன் இந்த ஃபாரோவை இணைப்பதையும் பொய்ப்பிக்கிறது. மோஸஸ் கடல் கடந்து சென்று ஸ்தாபிதம் செய்த ஒரு தேசத்தை எப்படி அவரைத் தொடர்ந்து கடலில் மூழ்கிய ஃபாரோ தனது வாழ்க்கை முடிவதற்கு நான்கு-ஐந்து வருடங்களுக்கு முன்னர் கல்வெட்டில் பொறிக்க முடியும்?

ஆக, மதப் பிரச்சாரகர்கள் இனியாவது தாங்கள் கூறும் அத்தாட்சிகளில் கவனமாக இருக்க வேண்டும்.தங்களது நேர்மைக்கேடான சிறுமதியால் புராணக்கதைகளுக்கு அறிவியல் சான்று காணும் முயற்சிகளை -நாஸா புகைப்படங்கள் முதல் எகிப்திய மம்மிகள் வரை- கைவிட்டு உண்மையான ஆழமான ஆன்மிக அக-வாழ்வுக்கான வழிகாட்டிகளாக தொன்மங்களை பயன்படுத்தினால் இவ்வுலகம் எத்தனையோ நன்றாக மாறும்.
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்.
ஸப்கோ சன்மதி தே பகவான்.
மேலதிக விவரங்களுக்கு:
- http://en.wikipedia.org/wiki/Ahmose_I
- http://en.wikipedia.org/wiki/Amenhotep_II
- http://en.wikipedia.org/wiki/Thutmose_III
- http://en.wikipedia.org/wiki/Merneptah_Stele
- http://en.wikipedia.org/wiki/Seti_I
- http://en.wikipedia.org/wiki/Ramesses_II
- http://en.wikipedia.org/wiki/Merneptah_I
- http://query.nytimes.com/gst/fullpage.html?res=9D0CE7DA173BF930A35751C0A967958260
- http://www.nationalgeographic.com/pyramids/timeline.html
- http://www.nationalgeographic.com/egyptjournal/valley.html
Labels: Egyptology, Hoax, Islamic propaganda, Wahabism

