அகப்பயணம்

Thursday, May 27, 2010

பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்கிறதா "மேதை"?

சில நாட்களாகவே எழுத வேண்டுமென்று நினைத்து நேரம் கிடைக்காமல் இப்போதுதான் எழுத முடிந்தது. கிழக்கு ஷோ ரூம் ஒன்றில் "மேதை" "Prodigy" என்கிற கிழக்கு நடத்துகிற இரண்டு குழந்தைகள் இதழ்களுக்கும் சந்தா சேர்ந்திருந்தேன். அங்கு வைத்து மேலோட்டமாக பார்த்த போது நன்றாகத்தான் இருந்தது. போன மாதம் (ஏப்ரல் 2010) அந்த இதழ் வந்த போது அதில் தமிழக வரலாறு குறித்த ஒரு தொடர் வருவதைக் கண்டேன்.


ச.ந.கண்ணன் என்கிறவர் எழுதுகிறார். அதில் பார்த்த சில முத்துக்கள்:


இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழகத்தில் ஆரியர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. தமிழ் மன்னர்கள் ஆரியக்குல நெறியில் ஆட்சி செய்து வந்தார்கள். இதனை எதிர்த்துத் தமிழ்ப் பண்பாட்டைப் பாதுக்காக்க வந்தவர்களாகக் களப்பிரர்கள் அறியப்படுகிறார்கள்...தமிழகத்துக்குள் நுழைந்த களப்பிரர்கள் ஆரியர்களின் செல்வாக்கைத் தகர்க்கும் விதத்தில் வேள்விக்குடியைக் கைப்பற்றி, தங்களுடைய ஆளுமையை இங்கு நிறுவ ஆரம்பித்தார்கள்.


அடக் கொடுமையே....

ஆரியர்கள் என்கிற காலனிய உருவாக்கமே அகழ்வாராய்ச்சி மூலமும் மானுடவியல் மூலமும் உடைந்து பட்டுவிட்டதே...தமிழகத்தின் ஆக பழமையான இலக்கியங்களிலேயே பாரதத்தின் பண்பாட்டொருமை தெளிவாகக் கூறப்பட்டுள்ளதே...சிலப்பதிகாரமும் கூட அத்தகைய சமுதாய சித்திரத்தை அல்லவா அளிக்கிறது. சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் நாட்டை புறநானூற்றுப் புலவர் இவ்விதமாக வர்ணிக்கிறார்:

அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த
தீயொடு விளங்கும் நாடன் (புறம்: 397:20-21)


புறநானூற்றை ஆரிய ஆதிக்கத்தை போற்றும் நூல் என தள்ளிவிடலாமா? அதிகமான் நெடுமானஞ்சி (புறம் 99:1, 350:1), பாரி வள்ளல் (புறம் 122), கரும்பனூர் கிழான் (புறம் 384) ஆகியோர் வேத வேள்விகள் செய்திருக்கிறார்கள். தென்னவன் மறவன் பண்ணி செய்த வேள்வியை அகநானூறு குறிக்கிறது (அகம் 13:11-12) அதிகமானையும் பாரியையும் ஆரிய சூழ்ச்சிக்கு அடிபணிந்த தமிழ் மன்னர் என சொல்லிவிடலாமா? அகநானூற்றையும் அவ்வாறே தள்ளிவிடலாமா? பார்ப்பனர்களைக் குறித்து சங்க இலக்கியம் விரிவானதொரு சித்திரத்தை அளிக்கிறது. எந்த இடத்திலும் தமிழின் இந்த தொன்மையான இலக்கிய நினைவானது அவர்களை அன்னியர்களாகவோ வந்தேறிகளாகவோ காட்டவில்லை. மாறாக தமிழகத்தின் பண்பாட்டுடனும் மக்கள் வாழ்க்கையுடனும் இயைந்தவர்களாகவே காட்டுகிறது.

சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொண்டால் தன் வெஞ்சினம் மிக்க சூளுரையிலும் கூட கண்ணகி

பார்ப்பார் அறவோர் பசு பத்தினிப் பெண்டிர்
மூத்தோர் குழவி எனும் இவரைக் கைவிட்டு
தீத்திறத்தார் பக்கமே சேர்க


என அக்கினி தேவனைப் பார்த்து சொல்கிறாள். கண்ணகியும் ஆரிய ஆதிக்கத்துக்கு உட்பட்டவள்தானா?

பிரச்சனை என்னவென்றால், காலனிய காலகட்டத்தில் இனவாத அடிப்படையில் எவ்வித பண்பாட்டு பார்வையும் இல்லாமல் ஒரு தமிழ் அடையாளம் உருவாக்கப்பட்டுள்ளது. சாதிகள் இல்லாத திராவிட பொற்காலமொன்று இருந்ததாகவும் அதனை ஆரிய பிராம்மணர் தந்திரமாக கெடுத்து சூழ்ச்சி செய்துவிட்டதாகவும் ஒரு வரலாற்று கட்டமைப்பு செய்யப்பட்டது. இந்த கட்டமைப்புக்கு காலனிய ஆட்சியினரின் ஆதரவும் அன்னிய மதமாற்றிகளின் ஆதரவும் இருந்தது. அன்று வேலைவாய்ப்பு இத்யாதிகளால் நகரிய அபிராம்மணர் மனதில் உருவாகியிருந்த/உருவாக்கப்பட்டிருந்த பிராம்மண வெறுப்பு இந்த பொய்யான வரலாற்றுக்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு ஒரு இனவாத வெறுப்பு அரசியல் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது. இந்த போலி வரலாற்று பொய்மையானது பகுத்தறிவு என்ற பெயரில் ஆபாச பிரச்சாரங்களுடன் பவனி வந்தது. ஆனால் தமிழ் இலக்கியத்தை படிக்கும் எந்த அறிஞருக்கும் உண்மையான வரலாறு இந்த போலி பம்மாத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாதது என எளிதில் தெரிய வரும். இந்த பிரச்சனையை எதிர்கொள்ள தமிழ் மன்னர்கள் ஆரிய ஆதிக்கத்துக்கு கட்டுப்பட்டு விட்டதாக பொய் பிரச்சாரம் ஒன்று கட்டவிழ்த்து விடப்பட்டது. வரலாற்று தெளிவுகள் அற்ற களப்பிரர் காலம் இவர்களுக்கு தோதாக வாய்த்தது. அக்கால கட்டத்தை எவ்விதமாகவும் கட்டமைத்து வித்தை காட்டமுடியும். எஎனவே இந்த காலகட்டம் தமிழர்களின் பொற்காலமாக இருந்ததாக அடுத்த பொய் பிரச்சாரம் பரப்பப்பட்டது. இதிலெல்லாம் பலியாவது உண்மையான தமிழக வரலாறுதான். காலனிய கருத்தாக்க சுமைகள் இல்லாமல் நம் பாரம்பரிய வரலாற்றை அணுகக் கூடிய திறனை நாம் இழந்துவிடுகிறோம். இதனால் நம்முடைய மரபு குறித்த ஒரு முழுமைப்பார்வை இல்லாமல் போகிறது. இன்றைக்கு ஆரிய திராவிட இனவாதமே பொய்த்துப் போயுள்ளது. இதற்கு நம்முடைய அகழ்வாராய்ச்சியாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.

இந்த ஆரியர்-ஆரியரல்லாதவர் என்கிற எளிய அரசியல் தன்மை கொண்ட இருமை-சட்டகம். இது பாமரத்தனமான வெறுப்பு அரசியல் நடத்தத்தான் உதவும். இந்த பார்வை சட்டகம் அகன்றால்தான் நம் வரலாறும் அதன் பண்பாட்டு இயக்கங்களும் பண்பாட்டு சமூக மாற்றங்களும் எத்தனை நுட்பமும் சிக்கலும் நிறைந்தவையாக இருக்கின்றன என்பதை நாம் உணரமுடியும். துரதிர்ஷ்டவசமாக வக்கிரமான அரசியல் காரணங்களுக்காக மட்டுமே இந்த ஆரிய இனவாதம் உயிருடன் வாழ வைக்கப்பட்டு வருகிறது. குறைந்த பட்சம் நம் குழந்தைகளாவது அவர்களது மனதில் இந்த இனவாதக் கோட்பாட்டின் இருள் விழாமல் வளர வேண்டும் என்று நினைத்தால் கிழக்கு போன்ற நிறுவனங்கள் கூட தங்கள் குழந்தைகள் இதழ்களில் இந்த வக்கிர வரலாற்றுப் பொய்யை விதைத்துக் கொண்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

படிக்க:
பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளை, சங்கத் தமிழரின் வழிபாடும் சடங்குகளும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

Thursday, May 13, 2010

துறவிகள்: ஊடக மாயையும் வரலாற்று உண்மைகளும்

நண்பர்களே வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் மேல் கண்ட தலைப்பில் உரையாற்றுகிறேன். அனைவரையும் அழைக்கிறேன். விவரங்களுக்கு கீழே இருக்கும் அழைப்பிதழ் நகலை அழுத்தவும். நன்றி

From அகப்பயணம்

நாகர்கோவில் புத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்-4

சிலப்பதிகாரத் தமிழகம்
ஆசிரியர்: சாமி. சிதம்பரனார்
முதல் பதிப்பு: 1958
அறிவுப்பதிப்பகம்: முதல் பதிப்பு 2008
பக்கங்கள்: 268நூலிலிருந்து:
சிலப்பதிகாரத்தை வைத்துக் கொண்டு சிலர் வேற்றுமைப் பேச்சுப் பேசுகின்றனர். தமிழர் நாகரிகம் தனிப்பட்டது; தென்னாட்டு நாகரிகம் வேறு; ஆரியர் நாகரிகம் வேறு; வடநாட்டு நாகரிகம் வேறு என்றெல்லாம் பேசுகின்றனர். இவ்வாறு பேசி, அமைதியுள்ளம் படைத்த தமிழ் மக்கள் உள்ளத்திலே ஆத்திரத்தையும் வெறுப்பையும் திணிக்க முயல்கின்றனர். சிலப்பதிகாரத்தைப் படிப்போர் இத்தகையோரின் முயற்சிக்கு இரையாக மாட்டார்கள் என்பது உறுதி.

சிலப்பதிகாரத்தைப் பொறுத்தவரையிலும் பிரிவினைப் பேச்சுக்கு இடமேயில்லை. பாரத நாட்டு மக்கள் அனைவரும் ஒரே பண்பாடுள்ளவர்கள் என்பதற்குத்தான் சிலப்பதிகாரம் ஆதரவு அளிக்கின்றது. இந்த ஒற்றுமைப் பண்பாட்டைத்தான் சிலப்பதிகார ஆசிரியர் உரைக்கின்றார். இந்நூலின் மங்கல வாழ்த்து முதலில் திங்களையும், இரண்டாவது ஞாயிற்றையும், மூன்றாவது மழையையும் போற்றுகின்றது. சந்திரன், சூரியன், மழை இவைகளை இந்திய நாட்டு மக்கள் அனைவரும் வணங்கி வழிபட்டார்கள். வட நூல்களிலும் வேதங்களிலும் சந்திர, சூரிய, வருண வணக்கப்பாடல்களைக் காணலாம். வருணனை வணங்குவதும், மழையை வணங்குவதும் ஒன்றேதான்.

சிலப்பதிகார காலத்திலேயே இந்திர விழாவைப் பற்றிக் கூறப்படுகின்றது. தேவர்களுக்கு அரசனாகிய இந்திரனைப் பற்றி வடநூல்களும் வேதங்களும் கூறுகின்றன. இந்திரனைக் குறித்த விழாக்கள், வேள்விகள் வடநாட்டிலும் நடைபெற்றன; தென்னாட்டிலும் நடைபெற்றன. இந்திரனை மருத நிலத்து வழிபடு தெய்வமாகக் கொண்ட மக்கள் தங்களை இந்திரகுலத்தோர் என சொல்லிக்கொண்டன. இன்றும் தமிழகத்தில் இந்திர குலத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். இந்திரன் தமிழர்களாலும் வணங்கப்பட்ட தெய்வம்; வடவர்களாலும் வணங்கப்பட்ட தெய்வம்; பாரத நாட்டு பழந்தெய்வம்.

மற்றும் சிவபெருமான், திருமால், முருகன், பலதேவன், காளி, மன்மதன், இலக்குமி, நாமகள், பிரமன், இராமன், கிருஷ்ணன், வாமனன், திரிவிக்கிரமன் முதலிய தெய்வங்களைத் தமிழரும் வணங்கினர்; ஆரியர் என்று சொல்லப்படும் வடவரும் வணங்கினர்.

இராமாயணம், பாகவதம், பாரதம், கந்த புராணம் போன்ற கதைகளை வடவரும் போற்றிப் பாராட்டுகின்றனர். சிலப்பதிகாரத் தமிழர்களும் போற்றிப் பாராட்டுகின்றனர்....வடதிசையைத் தமிழர்கள் "புண்ணிய திசை"யென்று போற்றியிருக்கின்றனர்.புண்ணிய திசைமுகம் போகிய அந்நாள் (இந்திர விழவு.94) என்பதனால் இதைக் காணலாம்.

பொதியத்தையும் இமயத்தையும் தமிழர்கள் ஒன்றாகவே கருதினர். காவிரியாறும் கங்கை நதியும் ஒரே விதமான புனித நதிகள் என்றே போற்றினர்.

"அழியாத சிறப்புடைய பொதியமலையிலே கல் எடுத்தாலும் சரி, சேரர்களின் வில் முத்திரையைப் பெற்ற பெரிய இமயமலையிலே கல் எடுத்தாலும் சரி - அது கண்ணகியின் உருவம் அமைப்பதற்கு ஏற்றதாகும். கங்கையாகிய பெரிய ஆற்றிலே நீர்ப்படை செய்தாலும், காவிரி ஆற்றிலே நீர்ப்படை செய்தாலும் ஒரே சிறப்புடையதுதான்.

ஒல்கா மரபின் பொதியில் அன்றியும்
வில்தலைக் கொண்ட வியன்பேர் இமயத்துக்
கல்கால் கொள்ளினும் கடவுள் ஆகும்;
கங்கைப்பேர் யாற்றினும் காவிரிப் புனலினும்
தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்து
(காட்சி. 116-120)இவ்வடிகள் மேலே கூறிய உண்மையை விளக்கின.

தென்னாடுடைய சிவனே போற்றி என்று வணங்கப்பட்டாலும் அச்சிவபெருமான் இருக்கும் இடம் திருக்கைலாயம். அது வடநாட்டில் உள்ளது; இமயமலையின் மேல் இருப்பது என்ற நம்பிக்கை தமிழரிடமும் உண்டு; வடவரிடமும் உண்டு. மந்திரத்திலே தமிழருக்கும் நம்பிக்கை உண்டு; வடவருக்கும் நம்பிக்கை உண்டு.

நால்வகை வருணங்கள் வடநாட்டிலும் உண்டு; அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வகைப் பிரிவுகள் தமிழ்நாட்டிலும் உண்டு.

வடநாட்டில் வடமொழி வேதங்கள் தெய்வீகத்தன்மையுள்ளவைகளாக மதிக்கப்பட்டன. நான்முகனால் இயற்றப்பட்டனவாக எண்ணப்பட்டன. தென்னாட்டிலும் அவ்வாறே எண்ணப்பட்டன. வடநாட்டிலும் வேதங்கள் ஓதப்பட்டன. தென்னாட்டிலும் வேதங்கள் ஓதப்பட்டன.

வடநாட்டிலும் வேத வேள்விகள் நடைபெற்றன; தமிழகத்திலும் வேதவேள்விகள் நடைபெற்றன.

...பாரத நாட்டுப் பண்பாட்டை விளக்கும் நூல்தான் சிலப்பதிகாரம். சிலப்பதிகார காலத்திலே இது தமிழர் பண்பு இது ஆரியர் பண்பு என பிரிக்கமுடியாமல் இருவர் பண்பாடும் ஒரே பண்பாடாகத்தான் திகழ்ந்தது.

வடவரும் தென்னவரும் பழக்க வழக்கங்களிலே வேறுபட்டிருக்கலாம்; மொழியிலே வேறுபட்டிருக்கலாம்; நடைஉடைகளில் வேறுபட்டிருக்கலாம். ஆனால், உள்ளத்திலே - நம்பிக்கைகளிலே - அறநெறியிலே வேறுபட்டவர்கள் அல்லர். இவ்வுண்மையைச் சிலப்பதிகாரத்தைப் படிப்போர் தெளிவாகக் காணலாம்.

செப்பும் மொழி பதினெட்டு உடையாள் -எனின்
சிந்தனை ஒன்று உடையாள்

என்று பாரதியார் சொல்லியிருப்பது உண்மை. சிலப்பதிகாரத்தைப் பார்த்த பின் - படித்த பின்தான் இவ்வாறு பாடினாரோ என்று எண்ணுவதிலே தவறில்லை.

Wednesday, May 12, 2010

நாகர்கோவில் புத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்-3

வாங்கிய நூல்கள்:

சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும் - ஓர் ஆய்வு
ஆசிரியர்: அ.சீனிவாசன்
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ், 2002
பக்கங்கள்: 283

திரு.அ.சீனிவாசன் விருதுநகர் மாவட்டத்திலும் சென்னை நகரத்திலும் மார்க்சிய தொழிற்சங்க இயக்கங்களில் தலைவராக திகழ்ந்தவர். ஜனசக்தி நாளிதழ் ஆசிரியராகவும், மார்க்சீய ஒளி ஆசிரியராகவும் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். தத்துவம் இலக்கியம் ஆகியவை குறித்து இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். சோவியத் நாடு நேருவிருது பெற்றவர். பழமையான தமிழ் இலக்கியங்களில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்.

நூலிலிருந்து:

திருமாலை பெரியவனை மாயவனை பேருலகம் எல்லாம் விரிகமல உந்தியிடை விண்ணவனை என்று இளங்கோவடிகள் குறிப்பிட்டிருப்பது ஆழ்வார்கள் திருமாலைப் பெருமையுடன் குறிப்பிடுவதற்கு ஒப்பாக விளங்குவதைக் காணலாம். திருமாலை இப்பேருலகின் வடிவமாகக் காணும் ஆழ்வார்களின் தத்துவநிலைக்கு ஒப்பாகவும் அடிகளாரின் காப்பிய அடிகள் அமைந்திருப்பதைக் காண்கிறோம்.
முற்ற உலகெலாம் நீயே யாகி
மூன்றெழுத் தாய முதல்வ னேயோ

என்றும்
உய்ய உலகு படைக்க வேண்டி
உந்தியில் தோற்றினாய் நான்முகனை

என்றும்
மண்ணொடு நீரும் எரியும் காலும்
மற்றும்ஆ காசமுமாகி நின்றாய்

என்றும் பெரியாழ்வார் பாடுகிறார்.
...
ஆயர் முதுமகளாகிய மாதரி கண்ணகி மீதும் கோவலன் மீதும் மிகுந்த அன்பு செலுத்தியதாலும் ஆய்ச்சியர் குரவை ஆடிய புண்ணியத்தாலும் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எழுப்பி விழாவெடுத்த போது அதைக் காணும் பாக்கியத்தைப் பெற மறுபிறவி எடுத்து அரவணையில் அறிதுயில் கொள்ளும் திருமாலுக்குத் தொண்டு செய்யும் சேடக்குடும்பியின் மகளாகத் திருவனந்தபுரத்தில் பிறந்தால் என்று சிலப்பதிகாரக்கதை குறிப்பிடுகின்றது.
ஆயர் முதுமகள் ஆயிழை தன்மேல்
போய பிறப்பில் பொருந்திய காதலின்
ஆடிய குரவையின் அரவணைக் கிடந்தோன்
சேடக் குடும்பியின் சிறுமக ளாயினள்.

ஏன்று காப்பிய அடிகள் குறிப்பிடுகின்றன.
சிலப்பதிகாரக் காப்பியத்தின் மூலம் திருமால் வழிபாடும் திருவிழாக்களும் அக்காலத் தமிழ் மக்களுடைய வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாக இருந்திருக்கிறது என்பதை அறிகிறோம். இன்னும் ஆழ்வார்கள் காலத்திற்கு முன்பே அதற்கு முன் வெகுகாலமாகவே தமிழ்நாட்டில் திருமால் வழிபாடுகளும் திருவிழாக்களும் திருமால் அவதாரச் சிறப்பு செய்திகளும் இராமயணம், மகாபாரதக் கதைகளும் பரவியிருந்தன.

(தொடரும்)

நாகர்கோவில் புத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்-2

வாங்கிய நூல்கள்:
"இஸ்லாமியப் பெண்ணியம்"
ஹெச்.ஜி.ரசூல்
பாரதி புத்தகாலயம்

நூலிலிருந்து:

இஸ்லாம் பலதார மணத்தை அங்கீகரிக்கிறது. ஆண் நினைத்த நேரத்தில் தலாக் சொல்லி பெண்ணை விவாகரத்து செய்துவிடலாம். தந்தியில், செல்போனில் கூட தலாக் சொல்லலாம். விவாகரத்து ஆன பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியதில்லை....குடும்ப அமைப்பின் பிணக்குகளை தீர்க்கும் விதத்தில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டுள்ள முரண்களைத் தீர்க்க தலாக்கின் முன்நிலை நடவடிக்கைகள் சில திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளன. அறிவுரை சொல்லுதல் இதன் தொடக்கமாகும். கணவனுக்கு மாறு செய்யும் மனைவி என கண்டறியப்பட்டால் கணவன் அறிவுரையின் மூலம் திருத்துவது முதல் கட்டமாகும். இரண்டாவது நிலை மனைவியை படுக்கையிலிருந்து தள்ளி வைத்தலாகும். மூன்றாவது மனைவியை அடித்து திருத்த முயலுவதாகும். ...இவைகள் அனைத்துமே கணவனுக்கு மாறு செய்யும் பெண்ணை தண்டிக்கவே கூறப்பட்டுள்ளன. ஆனால் மனைவிக்கு மாறு செய்யும் கணவனுக்கு எவ்விதமான தண்டனை என்பது குறித்து அதிக பட்சமும் மௌனமே பதிலாகக் கிடைக்கிறது. அரபு பழங்குடி சமூகத்தில் கணவனை ஒதுக்கி வைக்கும் உரிமை பெண்ணுக்கே இருந்திருக்கிறது. பெண் தனக்கான பாலியல் தேர்வை செய்து கொள்ளும் உரிமையும் இருந்திருக்கிறது....இது கிபி 570க்கு முன்னரே பெண் அனுபவித்திருந்த உரிமையாகும். இஸ்லாம் பெண்ணின் சார்பாக முன்வைப்பது குலாஅ - "விடுவித்துக் கொள்ளுதல்" என்னும் மணவிலக்கு முறையாகும். ...தலாக்கில் மனைவியின் விருப்பமின்றியே கணவன் அவளை மணவிலக்கு செய்யலாம்.குலாஅவில் கணவனின் ஒப்புதல் இல்லாமல் மனைவி அவனை விடுவிக்க முடியாது....புறத்தோற்றத்தில் வகாபியிசம் பெண்ணுரிமை சார்ந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது என்பது போன்றதொரு பாவனை காட்டப்படுகிறது. இது உண்மையற்ற தோற்றமாகும். தர்கா கலாச்சாரம் சார்ந்த பெண்கள் திரளின் சியாரத் வழிபாடுகளை கடுமையாக கண்டனம் செய்யும் வகாபிசம்...சூழல் சார்ந்த அர்த்தத்தை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு இஸ்லாமிய பெண்களின் சுதந்திர வெளியை திரும்பவும் தடை செய்கிறது.
Emphasis in the original.


பள்ளிவாசலில் பெண்கள்: பால்வேற்றுமை பற்றிய வரலாற்றுப் பார்வை
வெளியீடு மெல்லினம்: 2005
முஸ்லிம் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லலாமா என்பது குறித்த ஆராய்ச்சி. இதை செய்தவர் டொராண்டோ பல்கலைக்கழக மாணவி நெவின் ரேடா. தமிழில் புன்யாமீன்

ஜெரூஸலத்திலுள்ள அல்-அக்ஸா பள்ளிவாசலைப் பொறுத்தவரையில் அதை ஒரு ஸ்தூல-பதிவாக கருத முடியாது. ஏனெனில் அங்கு அற்புதத்தன்மையால் நபிகளார் கொண்டு செல்லபட்டதாக முஸ்லீம்கள் நம்புகின்ற போதிலும் அச்சமயத்தில் அது யதார்த்த பள்ளிவாசல் கட்டிடமாக இருக்கவில்லை. மேலும் அல்-அக்ஸாவிற்கு முந்தைய காலத்திலிருந்ததாக சிலர் நம்பும் தொன்மையான இஸ்ரவேல் ஆலயம் ஏற்கனவே சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே அழிந்துவிட்டிருந்தது. மேலும் நபிகளாரின் இரவுப்பயண (மிஃராஜ்) அனுபவம் ஒருவகை ஆன்மிகத்தன்மை வாய்ந்தது என்பதால் அதை ஸ்தூலச் சான்றாகக் கருதவியலாது. எனினும் அல்-அக்ஸா நூல் ஆவணத்தில் (குர்ஆன் 17:1) இடம் பெற்றுள்ளது....கீழ் வரும் அறிவிப்புகள் நம் தலைப்புக்குத் தொடர்பான சில ஹதீஸ்களாகும்:
இறைத்தூதர் கூறினார்: ஒரு நம்பிக்கையாளர் தொழும் போது அவரை கிப்லாவிலிருந்து மறைக்கும் விதமாக ஒரு நாயோ ஒரு கழுதையோ அல்லது ஒரு பெண்ணோ குறுக்கே செல்வது அது அவரது தொழுகையில் தடங்கலை உண்டாக்கும்
சில முக்கிய ஹதீஸ் தொகுப்புகளில் காணப்படும் இந்த ஹதீஸ் தொழுகையில் பெண்களை ஆண்களுக்கு பின்னால் நிறுத்தும் நோக்கமுடையதாக தெரிகிறது.எனினும் இதனுடன் முரண்படும் மற்ற ஹதீஸ்களும் உள்ளன....ஒரு பெண் -உம்மு ஹுமைத் - இறைத்தூதருடன் அவரது பள்ளியில் தொழ விரும்பியதாகவும், ஆனால் அதற்கு நபிகளார் கீழ்காணும் பதிலை அளித்ததாகவும் அறிவிக்கப்படுகிறது.
நீ என்னுடன் தொழ விரும்புகிறாய் என்பதை அறிவேன். எனினும் உமது அறையில் (பைத்கீ) தொழுவது உமது வீட்டில் (ஹுஜ்ரத்கீ) தொழுவதைக் காட்டிலும் சிறந்ததாகும். உமது வீட்டில் தொழுவது நீ வசிக்கும் பகுதியில் (தாரீகி) தொழுவதைக் காட்டிலும் நீ வசிக்கும் பகுதியில் தொழுவது உமது கோத்திரப் பள்ளியில் (மஸ்ஜித் கவ்மிகீ) தொழுவதைக் காட்டிலும் உமது கோத்திரப்பள்ளியில் தொழுவது (எனது) பள்ளிவாசலில் தொழுவதைக் காட்டிலும் சிறந்ததாகும்.
என்று கூறினார்கள் எனவே அவர் (உம்மு ஹுமைத்) தனக்கு உள்வீட்டில் மிக இருட்டிய மூலையில் ஒரு தொழுகையிடத்தைக் கட்டி அதிலேயே மரணிக்கும் வரை தொழுது வந்தார்.

[தொடரும்]

Tuesday, May 11, 2010

நாகர்கோவில் புத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்

கடந்த ஆறு நாட்களாக கேப் இன்ஸ்டிட்யூட் என்கிற பொறியியல் கல்லூரியும் மாவட்ட கல்வி அலுவலகமுமாக சேது லட்சுமிபாய் மேல்நிலைப்பள்ளியின் விரிந்த மைதானத்தில் புத்தக கண்காட்சியை நடத்தினார்கள். சென்றேன். சில புத்தகங்களை வாங்கினேன். பகிர்ந்து கொள்கிறேன். கண்ணில் பட்ட ஒரு ஸ்டாலில் கருத்தை கவரும் ஒரு பேனர் இருந்தது. இதோ:

யாரை ஒழிப்போம்னு சொல்றாங்கன்னு புரியுதா? கல்லையையும் மண்ணையும் நதியையும் மலையையும் மரத்தையும் புனிதமா வணங்குகிற ஷிர்க் வைக்கிற காஃபீருங்களோட பண்பாட்டைத்தான்...ஹி ஹி உங்களையும் என்னையும் தான் சக-தமிழரே புரிஞ்சுக்குங்க...

தெளிவா இருக்காய்ங்க...வழவழா குழகுழான்னு வசக்கின வெண்டைக்காய் தோசைக் கல்லுல நழுவுற மாதிரியெல்லாம் இல்லை வெட்டு ஒண்ணு துண்டு இரண்டுன்னு வெளிப்படையா இருக்காய்ங்க...ஈமான்காரங்க கிட்ட பிடிச்ச விசயமே அதுதான். அவிங்க கடைல சில அட்டகாசமான புத்தகங்கள பாத்தேன் வாங்கினேன்.

நூலிலிருந்து முத்துக்கள்:
இறைநம்பிக்கையாளர்களுக்கு யூதர்களும் இறை நிராகரிப்பாளர்களான முஷ்ரீக்கீன்களும் கடுமையான பகைவர்களாக திகழுவதைக் காண்பீர்கள்" என வான்மறை குர்ஆன் கூறிக்கொண்டுள்ளது. (காண்க 5/82) இறையில்லங்களான பள்ளிவாசல்களை இடிப்பதிலிருந்து முஸ்லிம் வசிப்பிடங்களில் காரணமேயில்லாமல் புகுந்து கொன்று குவிப்பது வரை இவ்விரு 'தாகூத்'களின் அக்கிரமங்கள் தொடர்கின்றன....முஸ்லீம்களுக்கெதிரான யூதர்களுடைய சதிகளும் சூழ்ச்சிகளும் சதி சூழ்ச்சி என்னும் சொற்களை அவற்றின் முழு அர்த்ததோடும்தான் பயன்படுத்துகிறோம்...இந்த உலக வாழ்க்கையைப் பொருத்தவரை வல்ல இறைவன் மக்களை சமூகங்களாகத்தான் பார்க்கிறான்...அவ்வகையில் இறைவனுடைய சாபத்தையும் இழிவையும் என்றென்றைக்கும் பெற்றுக் கொண்ட கேடு கெட்ட சமூகமாக யூதர்கள் உள்ளார்கள். அதற்கான காரணத்தையும் குர்ஆன் குறிப்பிடுகின்றது. இறைவனின் தூதர்களை யூதர்கள் அநியாயமாகக் கொலை செய்துள்ளார்கள். இறைவனின் சட்டங்களை துச்சமாக மதித்து தூக்கித் தூர எறிந்துள்ளார்கள். தம் மனம் போன போக்கில் இறைவசனங்களைத் திரித்து அர்த்தம் கற்பித்துள்ளார்கள். இறைவனின் மீது அபாண்டமாக இட்டுக் கட்டியுள்ளார்கள். இவ்வரிசையில் இன்னும் பல்வேறு குற்றங்களை குர்ஆன் அடுக்குகின்றது....நேரிய எளிய தெளிவான ஒரு தீர்வு மட்டுமே உள்ளது. என்னவெனில் ...1917 ஆம் ஆண்டுக்குப்பிறகு எத்தனை யூதர்கள் வெளிநாடுகளிலிருந்து அங்கு வந்து குடியமர்த்தப்பட்டார்களோ அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும்...முஸ்லீம் உலகத்தைப் பொருத்தவரை (இஸ்ரேல்) மற்ற யாவரைக் காட்டிலும் மிகப்பெரும் கெடுதியை விளைவிக்கக் கூடியதாகும். ஏனென்றால் அதனுடைய அநீதத்தின் எல்லைகள் முஸ்லிம்கள் புனித இடங்களையே சூழ்ந்து இருக்கின்றன. இந்த தேசம் இருப்பதை இனியும் நம்மால் சகித்துக் கொள்ள முடியாது. அதனை முடிவுக்கு கொண்டு வந்தே தீர வேண்டும். ...800 ஆண்டுகள் இந்தியாவை முஸ்லிம்கள் ஆட்சி செய்த போது இந்துக்களோடு எப்படி நடந்து கொண்டார்கள்? இன்று இந்துக்களிடம் ஆதிக்கம் இருக்கின்றபொழுந்து அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? ...நீண்ட நெடுங்காலம் உலகத்தில் இழிவையும் வேதனைகளையும் அனுபவித்த பின்னரும் இன்று யூதர்கள் மறுபடியும் தொடர்ந்து தங்களுடைய சூழ்ச்சிகளையும் இறை மார்க்கத்திற்கெதிரான சதிகளையும் நிறைவேற்றி வருகிறார்கள்...அநீதத்தை அகற்றி நீதியையும் அறத்தையும் நிலைநாட்டவேண்டிய முஸ்லிம் உம்மா நீண்ட உறக்கத்திலும் உலகமயக்கத்திலும் ஆழ்ந்து கிடக்கிறது. உறக்கம் கலைந்து எழுந்து பொறுப்பை நிறைவேற்றத் தொடங்கும் நாள் எந்நாளோ? ஒன்று மட்டும் நிச்சயம் அந்நாள் விரைவில் வந்து சேரும். மஸ்ஜிதுல் அக்ஸாவில் மட்டுமல்ல பாபரி மஸ்ஜிதிலும் முஸ்லிம்கள் அன்று நிம்மதியாக தொழுவார்கள்.

மற்றொரு அட்டகாசமான நூல்

நூலிலிருந்து முத்து:
கடவுள் இல்லை என்று கூறிக் கொண்டு ஒரு கூட்டம் கிளம்பியது. சார்லஸ் டார்வின் என்பவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார். அவர்கள் தியரி என்ன சொல்கிறது என்றால் உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களும் இறைவனால் படைக்கப்பட்டவை அல்லவாம். எல்லாம் தற்செயலாக தோன்றியவை. அதாவது குரங்கிலிருந்துதான் மனிதன் வந்தான் என்கிறது இந்த தியரி. கடவுள் நம்பிக்கை அற்ற இவர்களால் கூறப்படும் அந்த தியரி நாளுக்கு நாள் மரண அடி வாங்கிவருகிறது.அவர்களின் தியரிப்படி ஒன்றிலிருந்துதான் ஒன்று தோன்றியது என்றால் அதாவது நாயிலிருந்துதான் நரி தோன்றியது என்றால் பாதி நரியாகவும் பாதி நாயாகவும் உள்ள ஒரு மிருகம் இருக்க வேண்டும் அல்லது அப்படி ஒரு மிருகம் இருந்ததற்கான அடையாளமாக எலும்புக்கூடோ அல்லது படிவமோ கிடைக்கவேண்டும். குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்றால் பாதி குரங்கு பாதி மனிதன் கொண்ட ஏதாவது ஒன்று கிடைத்திருக்க வேண்டும். இப்படி இரண்டுக்கும் இடைப்பட்ட ஆதாரம் எந்த மிருகத்திற்கும் இது வரை கிடைக்கவில்லை. எனவே எதை எதையோ கூறிக் கொண்டு தத்தளிக்கும் அந்த தியரியை விட்டுவிட்டு குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். அதிலிருந்து இது தோன்றியது இதிலிருந்து அது தோன்றியது என்று மற்றமிருகங்களை பற்றியெல்லாம் ஏதாவது சிரிப்பை ஏற்படுத்தும் விளக்கமாவது கொடுக்கும் அந்த தியரி ஒட்டகம் எந்த மிருகத்திலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து தற்பொழுது உள்ள நிலையை அடைந்துள்ளது என்பதற்கான சரியான விளக்கத்தை இன்றுவரை கொடுக்க முடியாமல் தலையை பிய்த்துக் கொள்கிறது.


[தொடரும்]

Wednesday, May 05, 2010

திருட்டுப்பசங்களுக்காக செதுக்கிய விஷயம்

ஆரம்ப பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது எங்கள் பள்ளிக்கு மண்ணடிக்கவும் செங்கல் சுமந்து கொண்டும் மாட்டு வண்டி வரும். சாயுங்காலம் வீட்டுக்குப் போகும் போது மாட்டுவண்டியில் ஏறிப் போக ஆசையாக இருக்கும். ஏறினால் அதை வண்டிக்காரர் பள்ளியில் ஆசிரியர்களுக்கு தெரிந்தால் பிரம்படிதான். ஆனாலும் வீட்டுக்குப் போகும் போது கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மாட்டுவண்டியின் பின்னால் நீட்டிக்கொண்டிருக்கும் கம்புகளில் பையை சுழற்றிப் போட்டுவிட்டு பிறகு மாட்டுவண்டியின் கீழே இருக்கும் கனமான சட்டத்தை பிடித்து தொங்கிய படி வண்டிக்காரருக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக போவதை செய்யாத மாணவர்களே கிடையாது. இதை செய்யும் போது ஒரு விஷயம் தெரியும். மாட்டுவண்டியின் நடுவில் அச்சுகளுக்கு இணையாக இருக்கும் பெரிய கட்டையில் செதுக்கியிருக்கும் வடிவங்கள். வண்டியை சரித்து நிறுத்தியிருக்கும் போதும் சரி வண்டி போகும் போதும் சரி இவை அப்படி ஒன்றும் தெளிவாக பார்வைக்கு தெரியாது. உன்னிப்பாக யாராவது கவனித்தால்தான் தெரியும். நான் இதுவரை திருட்டுத்தனமாக 'தொங்கிய' வண்டிகளில் இரண்டு வண்டிகளில் ஒரே மாதிரியான டிசைனை பார்த்ததாக ஞாபகம் இல்லை. நேற்று கன்னியாகுமரி போய்விட்டு திரும்பும் போது இரண்டு மாட்டுவண்டிங்கள் நிற்பதைப் பார்த்தேன் பழைய நெனப்புடா பேராண்டின்னு கிட்ட போய் உத்துப் பார்த்தேன்.சின்னப்பசங்க திருட்டுத்தனமா மாட்டுவண்டிக்கு பின்னாடி தொங்கிகிட்டு போகும் போது ரசிக்கிறதுக்காகவே இப்படி அழகா மரவேலைப்பாடு செதுக்கி வைக்கிற மனசு இருக்கிற பண்பாடு எப்படிப்பட்டது....எதை இழந்துகிட்டு இருக்கோம் நாம?