மதிப்பிற்குரிய ஆனந்தவிகடன் அசிரியருக்கு,
அண்மையில் ஆனந்தவிகடனை படிக்க நேர்ந்தது. சரசுவதி என்கிற 'எழுத்தாளர்' எழுதுகிற
மல்லி என்கிற தொடர்கதை. நான் படிக்க நேர்ந்த அந்த தொடரில் துரைசாமி என்கிற கல்லூரி அட்டெண்டர் குடும்பத்துடன் கிறிஸ்தவராகிவிட்டார் என்பதுடன் ஆரம்பிக்கிறது. மதமாற்றத்தை எதிர்க்கும் கருணாகரன் என்பவனை மல்லி என்கிற பெண் (அவள்தான் கதாநாய்) சாடி கடுமையாக மதமாற்றத்தை ஆதரிக்கிறாள். கதையை இந்த இடத்திலிருந்து சிறிதே மாற்றி அமைத்துள்ளேன். தாங்கள் வெளியிட்டுள்ள தொடர்கதை வெறும் கதை என்ற நிலையைத் தாண்டி இரு மதங்களை ஒப்பிட்டு ஒன்றை சிறந்ததெனவும், இந்து மதம் நோய் பிடித்து இருப்பதாக காட்டுவதாலும், அதற்கு எதிர்வினையாக எழுதப்பட்ட இந்த மறு-வாசிப்பை பத்திரிகை சுதந்திரத்தை கருதி பிரசுரிப்பீர்களென நம்புகிறேன். (ஹி ஹி மூடநம்பிக்கை என்று எனக்கு தெரியும் என்றாலும்.)
"ரொம்ப சிலுப்பிக்காதீங்க கருணா! பணத்துக்காக மதம் மாறுறவங்கன்னு அங்கொருத்தர் இங்கொருத்தர் இருக்கலாம். நான் மறுக்கலை. தங்களுடைய சமூக அந்தஸ்து மாறணுங்கிறதுக்காக மதம் மாற விரும்புறவங்கதான் கருணா இங்கே அதிகம். காலங்காலமா ஒடுக்கப்பட்டு தீண்டத்தகாதவர்களா ஆக்கப்பட்டவங்க, மானுட சமத்துவம் மறுக்கப்பட்டவங்கன்னு இங்கே கோடிக்கணக்கான பேர் இருக்காங்க. அவங்களுடைய காயமும் வலியும் உன்களுக்கு புரியாது. யாரு அவங்களைச் சக மனுசனா மதிச்சு சமமா நடத்துறாங்களோ அவங்க பக்கம் போறதுல என்ன தப்பு? எல்லாரும் பெரியாரா இருக்க முடியுமா? 'நான் உள்ளே இருந்துகிட்டே சமத்துவத்துக்கான போராட்டத்தை நடத்துவேன்ற துணிச்சல் அவருக்கு இருந்தது. முதல்ல, நீங்க தயவு செய்து உளையல் பாடத்தையாவது கொஞ்சம் கவனிச்சுப் படியுங்க!" வேண்டுகோளோடு நிறுத்தினாள். "அப்ப இந்து மதத்தைவிட மத்த மதங்கள் உசத்திங்கிறியா?" வாயே திறக்காத லலிதா உதடுகள் துடிக்கக் கேள்வியை எழுப்பினாள். "லலிதா இந்து மதத்தைப் பிடிச்சிருக்கிற நோய் ரெண்டு. சாதியமும் தீண்டாமையும். சாதி ரீதியா மனுசங்களைப் பிரிச்சுச் கூறுபோட்டு உயர்வு தாழ்வு கற்பிக்கிறது கொடுமையிலும் கொடுமை. சக மனிதர்களைத் தீண்டத்தகாதவங்கன்னு சொல்லிப் பிரிச்சு வெச்சுக் கேவலப்படுத்துவது கொடூரம். மார்வினைக் கேளுங்க....அவங்க நாட்டுல 'சாதியும் தீண்டாமையும் இருக்கா?'ன்னு..." வெடித்துச் சீறினாள் மல்லி.
மேலே இருப்பது ஏப்ரல் 2 2008 ஆனந்தவிகடன் இதழில் வெளியான மல்லி தொடரில் வரும் வரிகள். கீழே இருப்பவை எனது 'மறுவாசிப்பு'(!) மார்வின் சிறிது தொண்டையை கனைத்துக் கொண்டான். சிறிது தயங்கித்தான் ஆரம்பித்தான்.
"எனக்கு தமிழ் புரிஞ்சாலும் சரளமா தமிழ்ல பேசமுடியாததால ஆங்கிலத்துல பேசுறதுக்கு மன்னிச்சிடுங்க. மல்லி நீங்க மேம்போக்கா உணர்ச்சி படுற அளவுக்கு உருப்படியா உலக சரித்திரத்தையோ அல்லது கிறிஸ்தவத்துடைய வரலாற்றையோ ஒழுங்கா படிச்சதில்லைன்னு நினைக்கிறேன். எங்க நாட்டுலயும் தீண்டாமை இருந்துச்சு. சாதி அமைப்பு கூட இங்க விட மோசமாவே இருந்துச்சுன்னு கூட சொல்லலாம். அதனை எந்த கிறிஸ்தவ சபையும் எதிர்க்கலை. இன்னும் சொன்னா இன்னைக்கு மிகப்பெரிய மனிசங்களா பேசப்படற கிறிஸ்தவ இறையியலாளர்களெல்லாம் அந்த சாதி முறையை ஆதரிச்சுருக்காங்க." மல்லியின் முகம் சிவந்தது. "சும்மா உன் இந்து நண்பர்கள் உன்னை பாராட்டணும் அப்படீங்கிறதுக்காக கதை விடாதே மார்வின். இன்னைக்கு அப்ப தீண்டாமை இல்லாத சாதி வேறுபாடு இல்லாத சமுதாயமா உங்க மேற்கத்திய நாடுகள் இருக்கே அதெல்லாம் நாங்க கண் கூடா பார்க்கிறோமே அதெல்லாம் இல்லைங்கிறியா?" மீண்டும் படபடத்தாள். மார்வின் அவளது ஆத்திரத்தை புன்னகையுடன் எதிர்கொண்டான், " மல்லி இன்னைக்கு நீங்க பார்க்கிற ஐரோப்பிய சமுதாய சமத்துவத்துக்கு நாங்க நன்றி சொல்ல வேண்டியது உங்க கிட்டதான்."
அங்கிருந்த அனைவருமே சிறிது அதிர்ந்து நிமிர்ந்தனர்.
மார்வின் தொடர்ந்தான், "உங்க கிட்டன்னா....ஐரோப்பா காலனைஸ் செய்த ஆசிய, ஆப்பிரிக்க கண்ட மக்கள். மேலும் நிலத்தை பிடுங்கி கொன்னு குவிச்ச அமெரிக்க ஆஸ்திரேலிய பூர்விக வாசிகள்."
"மார்வின் உன்கிட்டேருந்து ரொம்ப தெரிஞ்சுக்கணும்னு தோணுது. கொஞ்சம் விவரமா சொல்றியா" என்றாள் லலிதா.
மல்லியின் முகமோ சுருங்கி இருளடைந்திருந்தது. கையிலிருந்து பொம்மை பறிக்கப்பட்ட குழந்தை போல முகம் வாடியிருந்தது. மார்வினும் சேர்ந்து 'ஆமாஞ்சாமி' போட்டிருந்தால் அவள் நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பாள். ஆனால் இப்படி கதை போகும் என்று தெரிந்திருந்தால் மார்வினை இழுத்திருக்கவே மாட்டாள். சே.
மார்வின் நிதானத்துடன் தொடர்ந்தான். "செயிண்ட் அகஸ்டைனை குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். கிறிஸ்தவத்தின் முக்கியமான இறையியலாளர். அவர் பாணர்களுக்கு ஞான ஸ்நானமே கொடுக்க கூடாது என்று சொன்னார். அதே நேரத்தில் உங்கள் ஞான சம்பந்தர் திருநீலகண்ட யாழ்பாணரை வேள்வி சாலைக்குள்ளேயே மனைவியுடன் படுக்க வைத்தார் இல்லையா? உங்கள் வரலாறு முழுக்க சமுதாய கட்டுமானத்துக்கு எதிரான குரல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இத்தகைய குரல்கள் எங்கள் சமுதாய வரலாற்றில் சுவடில்லாமல் எரிக்கப்பட்டுவிட்டன. தலையாரிகள், தோல் வேலைகள் செய்பவர்கள், மாயனத்தில் குழி தோண்டுபவர்கள், நாவிதர்கள், சுகாதார தொழிலாளர்கள் இவர்களெல்லாம் தீண்டாமை கொடுமைக்கு ஐரோப்பாவில் ஆளாக்கப்பட்டதும் அதற்கு மத்தியகால கிறிஸ்தவ சட்டங்கள் துணை போனதும் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மார்ட்டின் லூதர் போன்றவர்கள் கூட இத்தகைய சட்டங்களை எதிர்க்கவில்லை. உங்களுக்காவது வர்ணாஸ்ரமத்துல நாலு பிரிவுன்னா எங்களுக்கு ஏழு அடுக்குகள் இருந்துச்சு. கிறிஸ்தவ மதகுருக்கள் இதனை வானத்துல ஏழடுக்கு சுவர்க்கம் இருப்பது போல பூமியிலும் மனுசங்க ஏழு அடுக்குகளா அமைக்கப்பட்டிருப்பதாக இந்த அமைப்பை நியாயப்படுத்தினர்."
மல்லி சிறிதும் தன் நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. "இவ்வளவு பேசுறியே மார்ட்டின் ...ஆனா இன்னைக்கு இந்த அமைப்போட சுவடு கூட காணுமே...அதெல்லாம் கிறிஸ்தவத்தால தானே." மார்வின் அவளது சினந்த முகத்தை பார்த்து அன்புடன் புன்னகைத்தான். "மல்லி யு ஹாவ் அ ஒன் டிராக் மைண்ட். ஒரு நல்ல சமுதாய சேவகராக நீங்க போக விரும்பினீங்கன்னா நீங்க இதை மாத்திக்கணும். குறைந்த பட்சம் மத்தவங்களுக்கும் சிந்திக்க தெரியும். அவுங்களும் சமுதாய பொறுப்பு உள்ளவங்கதான் அப்படீன்னு கருதவாவது கத்துக்கணும். இல்லாம போனா ...இப்படிப்பட்ட கண்மூடித்தனமான சித்தாந்தங்கள்தான் இரண்டால் உலகப்போரின் போது அப்படிப்பட்ட அழிவை எங்க சமுதாயத்தின் மீது திணிச்சது மல்லி. அதனால ஒரு அக்கறையிலே சொல்றேன்." மல்லி சீறினாள்: "உன் அறிவுரைக்கு ரொம்ப நன்றி மார்வின், ஆனா அது எனக்கு தேவையில்லை." வேகமாக அங்கிருந்து வெளியேறிய மல்லியுடன் அவள் ஒரு உண்மையான சமுதாய அக்கறை கொண்ட பகுத்தறிவுவாதி என்கிற அவளை குறித்த பிம்பமும் சேர்ந்து தங்கள் மனங்களிலிருந்து வெளியேறியதை அனைவருமே சோகமான கனத்துடன் உணர்ந்தனர்.
ஆனால் அவ சொன்னதுலயும் உண்மை இருக்கிறமாதிரி இல்லை? கால்டுவெல் இங்குள்ள தலித்துகளுக்காக ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார்னு
ஜெயமோகன் கூட சொல்லியிருக்கிறாரே என்றாள் லலிதா.
"ஜெயமோகனா யார் வரலாற்றாசிரியரா? "என்றான் மார்வின்.
கருணா கொஞ்சம் புன்னகைத்து "அவர் பெரிய போஸ்ட்மார்டன் எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர். அவர் மட்டும் இங்கிலீஷுல எழுதியிருந்தா நோபெல் பரிசு கிடைச்சுருக்கும்." என்றான். லலிதா "தொடங்கிட்டியா உன் ஜெமோ புராணத்தை' என்று இடித்தாள். மார்வின் பொத்தாம் பொதுவாக "ஆனா ஒன்ணு வளரும் நாடுகளின் மொழிகளில் எழுதும் எழுத்தாளர்களுக்கு மேற்கத்திய உலகம் தரவேண்டிய மரியாதையை தந்ததே இல்லை." என்றான். "நாங்க மட்டும்...." என்ற கருணா "ஆனா என்ன ஜெமோவுக்கு இதுவரை வசைதான் விழுந்திருக்கு யாரும் ஆட்டோ அனுப்புனதில்லை. அம்மட்டில் ஆள் அதிர்ஷ்ட சாலிதான்" என கூறி பெரிதாக சிரித்தான். லலிதா ரசிக்காமல் முகம் சுளிக்க மார்வின் புரியாமல் பேந்த பேந்த முழித்து "சரி அவரு கால்டுவெல் பத்தி என்ன சொல்லியிருக்காரு?" என்றான்.
"அவர்தான் தலித்துகளின் எழுச்சிக்காக முதன் முதலில் பாடுபட்டவர் என்று" எனக் கூறினாள் மல்லி.
மார்வின் சிந்தனையில் ஆழ்ந்தான்.
பிறகு லலிதாவிடம் 'கால்டுவெல் எந்த அமைப்பை சேர்ந்தவர் என்று உங்களுக்கு தெரியுமா?' என்றான்.
"தெரியுமே! அவர் புராட்டஸ்டெண்டு துறவி" என்றாள் லலிதா.
"துறவி இல்லை லலிதா மிஷினரி" என்றான் மார்வின்.
"இரண்டும் ஒன்றுதானே?" என்றான் கருணா.
இல்லை பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டு புரோட்டஸ்டண்டு இங்கிலாந்தில் மிஷினரிகள் என்பது ஒரு தொழில். இன்னும் சொன்னால் நீங்கள் சேருகிற அமைப்பைப் பொறுத்து ஆதாயமான தொழில்" என்றான் மார்வின்,
"கருணா அன்னைக்கு நாம் ஒரு கல்வெட்டு ஆராய்ச்சியாளரை பார்க்க போனோமே ஞாபகம் இருக்கா?"
"ஆமா கல்வெட்டு இராமச்சந்திரன்" என்றான் கருணா.
"ஆமா அவ்ருகிட்ட நான் பிறகு பலதடவை பேசியிருக்கேன். அவரு ஒரு விஷயத்தை கண்டுபிடிச்சு சொன்னாரு என்ன தெரியுமா?"
"என்ன?"
"கால்டுவெல் ரப்பர் எஸ்டேட்டெல்லாம் கூட கன்னியாகுமரி மாவட்டத்துல வாங்கியிருக்காராம்."
"அட அப்படியா?" என்றான் கருணா.
"ஆனா அதைவிட முக்கியம் அவரு எந்த அமைப்பை சேர்ந்திருந்தாரு அப்படீங்கிறதுதான்."
"எந்த அமைப்பு?" இது லலிதா.
"ஸொசைட்டி ஃபார் த பிராபகேஷன் ஆஃப் கோஸ்பல்-எஸ்பிஜி (Society for the Propagation of Gospel- SPG) இந்த அமைப்போட முக்கியத்துவம் என்ன தெரியுமா? இதுதான் பெரிய அளவில அடிமைகளை வைச்சிருந்த அமைப்பு. எஸ்பிஜி அமைப்போட தோட்டங்களில் வேலை செஞ்ச அடிமைகளோட நெஞ்சில் 'எஸ்' அப்படீங்கிற எழுத்தை சூடு வைக்கிறது வழக்கம். 1833 இல் பிரிட்டிஷ் அரசு அடிமை முறையை ஒழிச்சுது."
லலிதா மெதுவாக "மார்வின் இந்த அடிமை அமைப்பு ஒழிப்புல நிச்சயம் சர்ச்சும் ஒரு பங்கு வகிச்சுருக்கணும் இல்லையா?"என்றாள்.
மார்வின் கனமான குரலில் சொன்னான், "அப்படி இருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும் லலிதா. ஆனால் உண்மை என்னவென்றால் சர்ச் குறிப்பாக எஸ்பிஜி, அடிமை முறையை ஆதரித்தது. சர்ச் தான் வைத்திருக்கிற அடிமைகளுக்காக நஷ்ட ஈடு கேட்டது."
லலிதா பிரகாசமானாள். "மார்வின் தன்னிடம் அடிமைகளாக வேலை செஞ்சவங்களுக்கு நஷ்ட ஈடு வாங்கி கொடுக்கிற அளவுக்கு சர்ச்சுக்கு தார்மீக மனிதாபிமான எண்ணம் இருந்திருக்குல்ல அப்ப" என்றாள்.
மார்வின் திகைப்பான ஆச்சரியத்துடன், "நீ தப்பா புரிஞ்சிட்டே. சர்ச் தனக்கு அடிமைகளை விடுவிக்கிறதால ஏற்படுற நஷ்டத்துக்குதான் நஷ்ட ஈடு கேட்டுச்சே தவிர அடிமைகளுக்கு கொடுக்க அல்ல. ஒரு பிஷப்புக்கு மட்டும் அந்த காலத்துல 13000 பவுண்டுகள் கொடுத்தாங்கன்னா பார்த்துக்கயேன்." என்றான்.
அன்றைக்கு மதியம் விடுமுறை என்கிற செய்தியுடன் உள்ளே நுழைந்தாள் மல்லி. இப்போது பழைய சினம் எல்லாம் தீர்ந்து புன்சிரிப்புடன் உள்ளே நுழைந்தாள். "ஏன் மதியம் நாம சிதம்பரம் கோவிலுக்கு போக கூடாது?" என்றாள் மல்லி. எல்லோரும் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தனர்.
"அக்கா உங்களுக்குதான் சாமி நம்பிக்கையே கிடையாதே. 'சிதம்பரம் நடராஜன் ஆயிரம் வருசமா காலை தூக்கிக்கிட்டு நின்னாலும் கால் அவருக்கு வலிக்கலை. ஆனா மூணு நிமிசம் காலை அப்படி தூக்கிட்டு நின்னா உனக்கு வலிக்குது ஏன் தெரியுமா ஏன்னா நடராஜர் வெறும் கல்லு' அப்படீன்னு சொல்லுவ. உனக்கு ஏங்க்கா சிதம்பரம் போக ஆசை?. மாறிட்டியா நீ?" என்று பாதி ஆச்சரியம் பாதி சந்தோஷத்துடன் கேட்டாள் லலிதா.
மல்லியின் முகத்தில் ஒரு நானோ விநாடிக்கு ஒரு பழிவாங்கும் ஆத்திரம் தோன்றி அது மறைந்து ஒரு விஷமப் புன்னகை இழைந்தோடியது. "இல்லை நடராஜ தத்துவம் அணுவின் இயக்கம் முதல் பிரபஞ்ச இயக்கம் வரை காட்டுற அழகான ஆன்மிக வெளிப்பாடுன்னு மாஞ்சு மாஞ்சு இந்து வெறியையும் மூடநம்பிக்கையும் டிஃபெண்ட் செய்து பேசுற மார்வினுக்கு கோவிலை போய் பார்த்தா சந்தோஷமா இருக்குமேன்னுட்டுதான் இந்த ஐடியா போட்டேன்." என்றாள் மல்லி.
"எது எப்படியோ நல்ல ஐடியாக்கா!:" என மல்லியின் கழுத்தை கட்டி கிறீச்சிட்டாள் லலிதா.
"ஆமா நாம கிளம்பலாம். மார்வின் நீயும் புறப்படு" என்றான் கருணா. மார்வினின் நெற்றியில் ஒரு சுருக்கக் கோடு தோன்றி மறைந்தது. தன் கண்களை கூர்மையாக மல்லியின் கண்களில் நிலைக்க விட்டு "ஐ அண்டர்ஸ்டாண்ட் யுவர் கேம் ப்ளான்" என்றான் மார்வின்.
அந்த நால்வர் குழு கோவிலை அடைந்ததது. கோவில் வாசலிலிருந்த கடையில் அர்ச்சனை தட்டு வாங்கிய மார்வின் அதனை லலிதாவிடம் கொடுத்து நீங்க போய் அர்ச்சனை செஞ்சிட்டு வாங்க நான் இங்கேயே நின்று கொள்கிறேன் எனக்கு கோபுர தரிசனம் போதும். என்றான்.
"ஏன்?" என்றாள் லலிதா.
மல்லி "ஏன்னா இதுதான்" என லலிதாவின் கையை பிடித்து இழுத்து அவளைத் திருப்பி அங்கே தொங்கிக் கொண்டிருந்த போர்டின் முன் நிறுத்தினாள். "இந்துக்களை தவிர பிறருக்கு அனுமதி இல்லை:" என்றது அந்த சாயம் வெளிறிய போர்டு.
"இதைதான் நான் சொன்னேன் மார்வின்." என்றாள் வெற்றி புன்னகையுடன் மல்லி. ."எந்த சர்ச்லயாவது கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் நுழையக்கூடாதுன்னு சொல்றாங்களா? எந்த மசூதியிலாவது முஸ்லீம்கள் மட்டும்தான் நுழைய முடியும் என தடை இருக்குதா? இங்க மட்டும் ஏன் இப்படி மதத்தின் பெயரால் மனுஷங்களை அவமானப்படுத்துறாங்க?" வார்த்தைகளில் ஒரு நியாயப்போராளியின் சீற்றமும் கண்களில் ஒரு ஏளனத்தையும் காட்டிச் சீறினாள் மல்லி.
மார்வின் நிதானமாக "உங்க சித்தாந்தத்தை நிரூபிக்க ஒரு பிரச்சனையை உருவாக்க என்னை ஒரு பகடைக்காயாக பயன்படுத்துறீங்கன்னு தெரியும், மல்லி. ஆனா நீங்க சொல்றதுல தவறு இருக்கு." என்றான் "உதாரணமா எந்த மசூதியிலாவது அப்படீன்னு சொன்னீங்களே...மெக்காவுக்குள்ள மாற்று மதத்தவங்க போறதுக்கு அனுமதி இருக்கான்னு உங்களுக்கு தெரியுமா மல்லி? ஏன் இலண்டன்ல உள்ள செயிண்ட் பால் சர்ச்சில பிற மதத்தவர் போய் வேடிக்கை பார்க்கணும்னா அதற்கு பவுண்ட்ல டிக்கட் வாங்கிட்டுத்தான் போக முடியும் தெரியுமா? இந்தியாவில உள்ள மசூதி சர்ச்சுக்கு போக உங்களுக்கு தடை இல்லைனா அவை பாரம்பரிய வழிபாட்டு தலங்கள் அப்படீங்கிறதை விட மத பிரச்சார கேந்திரங்களாகவும் செயல்படுது. ஆனா அங்க கூட பிறமதத்தவர் அனுமதிக்கப்படாத கண்ணுக்கு தெரியாத கட்டுப்பாட்டு வேலிகள் உண்டு. உதாரணமா ரோமன் கத்தோலிக்க சர்ச்சுல ஏசுவோட உடம்பையும் இரத்ததையும் சடங்கு ரீதியா மக்களுக்கு சாப்பிட கொடுப்பாங்க. ஏசுதான் உலகத்துக்கே பொதுவானவராச்சே, எந்த கிறிஸ்தவனைக் காட்டிலும் ஏசுவை நான் நல்லா படிச்சு அவரை நேசிக்கிறேன் அப்படீன்னுட்டு நீங்க அதை முழங்கால்போட்டு கால்கடுக்க வரிசையில நின்னு வாங்கி புசிக்க முடியாது. அதுக்கு நீங்க ஞானஸ்நானம் வாங்கி அந்த சர்ச்சுல உறுப்பினராகணும். ஏன் புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவன் கூட ரோமன் கத்தோலிக்க சர்ச்சுல கொடுக்குற ஏசுவோட சதையையும் இரத்ததையும் வாங்கி சாப்பிட முடியாது. இதை இன்னைக்கு வரை மேற்கில யாரும் கேள்விக்குள்ளாக்குனதில்லை. ஏன்னா இதெல்லாம் பாரம்பரிய மரபு வேலிகள் அப்படீங்கிற புரிதல் மேற்கில் இருக்கு. ஆனா இங்கே உள்ள சர்ச்சையும் மசூதியையும் நீங்க ஒப்பிடணும்னா அவை உருவான காலத்தோட ஒட்டி இந்தியாவில் உருவான இராமகிருஷ்ண இயக்க ஆலயங்கள் முதல் இஸ்கான் ஆலயங்கள், அக்ஷர்தாம் ஆலயங்கள் வரை பலதை காணலாம். ஏன் பாரம்பரியமான உங்க திருப்பதி ஆலயத்தில் கூட அன்னிய மதத்தவங்களை அனுமதிக்கிறாங்க இல்லையா? குருவாயூரில் ஏசுதாஸை அனுமதிக்காதப்ப நீங்க இந்து வெறியர்கள் அப்படீன்னு சொல்ற அமைப்புகள் கூட அதை எதிர்த்தாங்க இல்லையா? சரி அண்மையில தீண்டாமை கொடுமையிலிருந்து மீள முடியாத கிறிஸ்தவர்கள் இந்துக்களாக முன்வந்தப்ப அந்த சடங்குகளை இந்து கோவிலில் வைத்து நடத்த பகுத்தறிவுவாதிகள் அப்படீன்னு தங்களை சொல்லிக்கொள்கிறவங்க கட்டுப்பாட்டில இருக்கிற அறநிலையத்துறையே அனுமதி மறுத்திருக்கு. ஆனா இவ்வளவு பேசுற உங்ககிட்ட இருந்து இன்னைக்கு வரை இதுக்கு ஒரு முனகல் கூட ஏற்பட்டதில்லை. இதில் இன்னொரு விஷயத்தையும் கணக்கில் எடுத்துக்கணும் இதோ இங்கே நிக்கிற இந்த ஆலயம் அன்னிய மத தாக்குதல்களுக்கு ஆளாயிருக்கு. கோவிலுக்குள்ள அதன் சிலைகளை காக்க சித்திரவதைகளையும் படுகொலைகளையும் அந்த தீட்சிதர்கள் தாங்கியிருக்காங்க. இன்னைக்கு தமிழருடைய ஒரு முக்கிய கலாச்சார ஆன்மிக அடையாளமா உலகமெங்கும் பேசப்படுற உலோக வார்ப்பு சோழகால நடராஜ சிலைகள் நமக்கு கிடைச்சுருக்குன்னா அதுக்கு பின்னாடி அவுங்க சிந்தின இரத்தமும் செய்த தியாகமும் இருக்கு, நான் ஒண்ணும் உங்க நாட்டு புரோகித அமைப்பு சுத்தமானது அப்படீன்னு சொல்லலை. அதுலயும் திருத்தப்பட வேண்டிய குறைகள் ரொம்ப இருக்கு. ஆனா அதை திருத்த முடியும். இப்படி தேவையில்லாத தாழ்வுமனப்பான்மை கொண்ட ஒப்பீடுகள், திட்டமிட்ட நாடகபாணி பிரச்சனைகள், ஒட்டுமொத்தமாக இவுங்களை வில்லனாக காட்டுற வெறுப்பியல் இனவாதக் கோட்பாடுகள் இதெல்லாம் இல்லாமலே அதனை செய்ய முடியும்."
"இவ்வளவு சொல்ற மார்வின் இப்ப உனக்கு நடராஜர் மேல நம்பிக்கை இருக்கா இல்லையா? இதோ நம்பிக்கை இல்லாத என்னால உள்ளே போகமுடியும் ஆனா நம்பிக்கை உள்ள உன்னால உள்ளே போக முடியாது. இதுக்கு என்ன சொல்ற நீ?"
"மல்லி. எனக்கு இந்து தருமம் எவ்வளவோ பிடிச்சுருக்கு. ஆனாலும் நான் இன்னும் கிறிஸ்தவன் தான். நான் இந்துவா மாறினா அந்த சான்றிதழைக் காட்டி நிச்சயமா கோவிலுக்குள்ளே போவேன். ஆனா வெள்ளைத் தோல் கொண்ட ஒருத்தன் இந்துவாக மாறினா நான் எங்க நாட்டில திரும்பி போகும் போது பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்."
கருணா அதிர்ந்து போய் கேட்டான், " என்ன சொல்ற மார்வின், மேற்கில் மத சுதந்திரம் ரொம்ப இருக்கே நீ போய் இப்படி சொல்றியே"
"கருணா நான் இந்துவாக மாறி இந்து பெயரோட அமெரிக்காவுக்கோ ஐரோப்பாவுக்கோ போன பொதுவாக என்னை எல்லோரும் தீண்டத்தகாதவன் போலத்தான் பார்ப்பாங்க. அதனை சமாளிக்கிற தைரியம் எனக்கு இருக்கான்னு தெரியல்லை. ஏன் இந்து சடங்குகளில் பங்கு பெற்றதுக்காக அரசாங்க வேலையை விட்டுக் கூட ஒரு வெள்ளைக்காரரை அரசாங்கம் நீக்கியிருக்கு தெரியுமா?"
"நிஜமாகவா?"
"ஆமா கார்ல் பெலே அப்படீங்கிற ஆஸ்திரேலிய வெளிநாட்டு இலாகா அதிகாரி தைப்பூசம் மாதிரி இந்து திருவிழாக்களில் பங்கு பெற்றதுக்காக அவரை வேலையை விட்டு நீக்கிட்டாங்க. இன்னைக்கு அவர் தன் பேரை வடிவேலான்னு மாத்திருக்காரு அவருட சுயசரிதை கூட வெளியாயிருக்கு. இது ஒரு சின்ன அதிர்வை கூட மேற்கத்திய ஊடகங்களில் ஏற்படுத்தலை. தனியாளா மதம் மாறுறது அதுவும் குறிப்பா இந்து தருமத்துக்கு மாறுறது மாறிட்டு மேற்கில ஜீவிக்கிறது ரொம்ப கஷ்டம். ஒண்ணு நான் ஏதாவது இஸ்கான் மாதிரி குழுவில் இணையணும். அதுலயும் கூட பிரச்சனை இருக்கு. மேற்கத்திய ஊடகங்களில் திரும்ப திரும்ப சின்ன குழந்தைங்களோட காமிக்ஸ் முதல் இப்படிப்பட்ட அமைப்புகளை வில்லத்தனமா சித்தரிக்குறாங்க. இல்லைனா ஸ்டாம்ப் கலெக்ஷன் மாதிரி இதை ஒரு ஹாபியா என்னைக்குன்னாலும் தூக்கி போடுற மாதிரி வைச்சுக்கணும். எனக்கு அதுக்கு மனசும் வரலை. மதம் மாறுற அளவு துணிவும் இல்லை. அப்படி துணிச்சலா நான் இந்து அப்படீன்னு என்னால சொல்ல முடியாத வரை எனக்கு இந்த கோவிலுக்குள்ள - அன்னிய மத படையெடுப்புகளிலிருந்து இவ்வளவு உயிர் தியாகம் செஞ்சு காப்பாத்துன கோவிலுக்குள்ள- ஒரு அன்னிய மதத்தினா நுழைய எனக்கு அருகதையோ உரிமையோ இல்லை அப்படீன்னுதான் நான் நினைக்கிறேன். அதுனால நீங்க உள்ளே போய் கும்பிட்டுட்டு வாங்க. நான் இங்க நின்னே அடுத்த முறையாவது தன்னுடைய எதிரிகளுக்காக கூட வாதாடுற இந்த பண்பாட்டுல ஒரு இந்துவா பிறக்க ஒரு வாய்ப்பை கொடூன்னு இங்க நின்னே கோபுரத்தை பார்த்து வேண்டிக்கிறேன். எனக்கு கோபுர தரிசனமே போதும்." என்றான் மார்வின்.
மார்வின் வெளியே கோவிலைப் பார்த்தபடி நிற்க மல்லியைத் தவிர மற்றவர்கள் கோவிலுக்குள் சென்றனர். மல்லி வெளியே நின்று கொண்டிருந்தாள். அவளின் இயக்க தோழர்கள் சிலர் அங்கே வந்து அவளோடு சேர்ந்து கொண்டனர். லேசாக மல்லியின் முகம் மார்வின் பக்கம் திரும்பியதையும் அதைத் தொடர்ந்து அவளோடு பேசிக்கொண்டிருந்தவர்கள் அடிக்கடி அவனை திரும்பி பார்ப்பதையும் மார்வின் கண்டான். அவர்களின் முகங்களில் ஒரு வித வெறுப்பு துல்லியமாகத் தெரிந்தது. சிறிது நேரத்தில் கோவிலுக்குள்ளிருந்து லலிதாவும் கருணாவும் வந்தார்கள்.
அவர்களிடமிருந்து பிரசாதத்தை பயபக்தியுடன் பெற்றுக்கொண்ட மார்வினிடம் கருணா மெதுவாக 'ஆமா காமிக்ஸ¤ல ஏதோ இந்து மதம் பத்தி மோசமாக போட்டிருக்குன்னு சொன்னியே அதென்ன?" என்றான்.
கருணா ஒரு காமிக்ஸ் பைத்தியம். பழைய இந்திரஜால் காமிக்ஸ்கள் முதல் இன்றைய முத்துகாமிக்ஸ், லயன் காமிக்ஸ் வரை வீட்டில் பெட்டி பெட்டியாக அடிக்கி வைத்திருக்கிறான். "உனக்கு தெரியாம இதெல்லாம் ஒருநாள் விலைக்கு போடத்தான் போறேன் என அவனுடைய அம்மா
கருவுவதும் "அப்படி நடந்தா நான் வீட்டைவிட்டே போயிடுவேன்" என அவன் உறுமுவதும் மாதாந்திர சடங்காக வீட்டில் மாறிவிட்டிருந்தது.
மார்வின் அவனிடம் "நீ ·பேண்டம் காமிக்ஸ் படிச்சிருக்கியா?" எனக் கேட்டான்.
"படிச்சென்ன கட்டுகட்டா அடுக்கியே வைச்சுருக்கேன்."
" அப்போ உனக்கு ·பேண்டமோட புகழ் விளிகளெல்லாம் தெரிஞ்சுருக்குமே" இது மார்வின்.
"ஆமா"
"சொல்லேன்"
"ம்ம்ம் மாயாத்மா, அப்புறம் ஆங்... கீழ்திசை இருளின் காவலன்...அப்புறம்" கருணா கொஞ்சம் யோசித்தான்.
"ரைட் அதுதான் கீழ்திசை இருள் அப்படீங்கிறது இந்து மதத்தைதான் குறிக்குது. மட்டுமல்ல இஸ்கானை வில்லனா சித்தரிச்சு கூட ·பேண்டம்
காமிக்ஸ் வந்திருக்கு. தெரியுமா?"
"அப்படியா?"
"ஆமா நாமம் போட்ட கழுகுகள் அப்படீன்னு ஒரு கூட்டம் கொள்ளையடிக்கும். அவுங்களை ·பேண்டம் வேட்டையாடுவான்.அவுங்க எல்லாமே மொட்டையடிச்சு நாமம் போட்டிருப்பாங்க. இஸ்கான் மாதிரியே."
அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே வந்த லலிதா அதிர்ந்து "அடக்கடவுளே இது இலக்கியத்திலும் படங்களிலும் யூதர்களை தொடர்ந்து வில்லன்களாக காட்டிட்டு வந்த மாதிரியில்ல இருக்கு" என்றாள்
"ரொம்ப சரியா சொன்னே லலிதா. இது எங்க மேற்கத்திய உலகின் மத நிறுவனங்களுக்கு கை வந்த கலை. ஒரு மக்கள் கூட்டத்தை முழுக்க வில்லன்களாக காட்டுறது. அன்னைக்கு யூதர்கள். இன்னைக்கு மேற்கத்திய சமுதாயத்தில் இந்துக்கள் மற்றும் இதர விக்கிரக ஆராதனையாளர்கள். இந்தியாவில் குறிப்பா தமிழ்நாட்டில் பிராம்மணர்கள். ஏன் இராமகிருஷ்ண மிஷன் பெண்குழந்தைகளை விபச்சாரத்துக்கு விற்பதா பட்டும் படாமலும் அவமதிப்பு கேஸ் போட முடியாத மாதிரி ஆனா யாரை சொல்றாங்க அப்படீன்னு தெரியுற மாதிரி எழுதியிருக்கிறாரு கத்தோலிக்க அடிப்படைவாதியான டாமினிக் லாப்·பயர். இப்படி ஒரு அமைப்பை பத்தி அபாண்டமா பழி சொல்றவங்களை அதுவும் அன்னியரா இருந்தா அழுகின தக்காளியால அடிப்பாங்க வெளிநாட்டில. ஆனா உங்க நாட்டில அந்த லா·ப்பயர் கிட்டத்தான் உங்க நாட்டை பத்தி கட்டுரை எழுதி வாங்கி பிரசுரிக்கிறாங்க உங்க முன்னணி ஆங்கில பத்திரிகைகள்."
"அதாவது நாசிகளின் யூத வெறுப்புக்கும் திராவிட இயக்கங்களின் பிராம்மண வெறுப்புக்கும் அடிப்படையில் ஒருவித இனவெறுப்பு பிரச்சாரம் இருப்பதாகவா சொல்ற மார்வின்" என்றான் கருணா.
அதற்கிடையில் அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்ட மல்லி "சமூக நீதிக்கான போராட்டத்தை இனவெறுப்பு அப்படீன்னு சொல்றவங்க அறியாமையால பேசுறாங்களா அல்லது இது திட்டமிட்ட மேல் சாதி நயவஞ்சகமா அப்படீங்கிறதுக்கு காலம் பதில் சொல்லும்" என்றாள்.
அவர்கள் வேறு சர்ச்சைக்கிடமில்லாத விஷயங்களைப் பேசியபடி விடுதியை அடைந்தனர். பிறகு சோம்பலான மதியம் முடிந்து மாலையில் காண்டீனில் மீண்டும் சேர்ந்தனர். அப்போதுதான் பரணி அங்கே நுழைந்து ஹாஸ்டல் டே கொண்டாட வேண்டியிருப்பதைச் சுட்டிக்காட்டினாள். பாட்டு நடனம் இத்யாதிக்கு பிறகு ஒரு நாடகத்தையும் அதில் போடலாம் என முடிவாயிற்று.
மல்லியின் முகம் பிரகாசமானது. கண்கள் குறுகுறுத்தன. அதைப் பார்த்த வசந்தி "மல்லி அக்கா உங்களுக்கு ஏதோ செம ஐடியா வந்திருச்சுன்னு தோணுது. சொல்லுங்கக்கா நாங்க டெவலப் செஞ்சு போடுறோம்." என்றாள். மார்வின் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான். மல்லி சொன்னாள். "சூப்பர்க்கா! பின்னிட்டீங்க" என்றாள். மார்வின் அமைதியாக "அபத்தமாக இருக்கு" என்றான். மல்லி பட்டென மார்வின் பக்கம் திரும்பினாள்.
"என்ன அபத்தத்தை கண்டிட்ட மார்வின்? சரிதான் நீ ஹிந்து வெறியங்களோட சேர்ந்து பழமைவாதியா மட்டும்தான் ஆயிட்டேன்னு நினைச்சேன் ஆனா ஆணாதிக்க வாதியாகவும் ஆயிட்ட போல."
மார்வின் புன்முறுவலுடன் வசந்தியைப் பார்த்து "வசந்தி ஒரு சின்ன சந்தேகம். மல்லியோட அந்த நாடக ஐடியாவில உங்களுக்கு என்னது அவ்வளவு சிறப்பா பட்டுது?" என்றான்.
"என்ன மார்வின் இப்படி கேட்டிட்ட....ராமனும் தானே சீதையை விட்டுட்டு தனியா அத்தனை வருஷம் இருந்தான். அப்ப அவனும்தானே தீக்குளிக்கணும். இதை சீதை வாயாலயே கேட்க வைக்கிறது ஒரு பெண்ணிய புரட்சி பார்வை இல்லையா?" என்றாள்.
"மறுவாசிப்பு - குறிப்பா இந்த நாட்டில ஆணாதிக்கத்தை ஏற்படுத்துற இராமாயணம் மாதிரி நூல்களை மறுவாசிப்புக்கு உட்படுத்தியேயாகணும். சீதை தீக்குளிச்சதாலதான் இன்னைக்கும் இந்த நாட்டில பெண்கள் தீக்குளிக்கவைக்கப்படுறாங்க." என்றாள் மல்லி.
மார்வின் மல்லியை முழுமையாக புறக்கணித்து வசந்தியைப் பார்த்து கேட்டான், "அப்படீன்னா சீதை ஒரு ஆணுக்கு அடங்கி நடக்கிற ஒரு பாத்திரமாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறாள் அப்படீங்கறீங்க இல்லையா?"
"அதிலென்ன சந்தேகம் மார்வின். நிச்சயம் அப்படித்தான்."
"ம்ம்ம்...நீங்க இராமாயணத்தை படிச்சிருக்கீங்களா வசந்தி?..."
"முழுசா படிச்சாத்தான் அது முன்வைக்கிற மாரலை குறிச்சு பேசணும்னு இல்லை வசந்தி" என்றாள் மல்லி.
மார்வின் மீண்டும் மல்லி பேசியது காதிலேயே விழாதமாதிரி தொடர்ந்தான், "தொடக்கத்திலிருந்தே சீதை தன் முடிவுகளின் படி சுதந்திரமா நடக்கிற பெண்ணாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறாள். முதலில் இராமன் வனவாசத்துக்கு தன்னை கூட்டிட்டு போக மாட்டேன் என்று சொன்னதும் ரொம்ப கடுமையாக இராமனைத் திட்டி தன்னை கூட அழைத்து போக செல்கிறாள். அப்புறம் மாயமானை தேடி இராமன் சென்ற பின்னர் தனக்கு காவலாக நின்ற இலட்சுமணனை மிக மோசமாக திட்டுகிறாள். இங்கேதான் முதன் முதலாக தான் தீக்குளித்துவிடுவதாக இலட்சுமணனை அவள் மிரட்டி இராமனை தேடி அனுப்பி வைக்கிறாள். இதிலெல்லாம் அவளுடைய சுய தீர்மானத்தின் உறுதியும் தன் காதல் கணவனான இராமன் மீது அவள் வைத்திருக்கும் முரட்டுத்தனமான அன்பும் வெளிப்படுகிறதேயல்லாமல் அவளுடைய அடங்கி போகிற தன்மை தெரியவில்லை. பிறகு இராமனின் கடுமையான சொற்களைக் கேட்டு அவள் தானாகவே இலட்சுமணனிடம் நெருப்பு மூட்ட சொல்கிறாள். எந்த இலட்சுமணனை தான் தீக்குளித்துவிடுவதாக சொல்லி வசை பாடினாளோ அதே இலட்சுமணனிடம் தனக்காக நெருப்பு மூட்ட சொல்கிறாள். இந்த தருணத்தில் இராமன் தீக்குளிக்க சொல்லவில்லை மாறாக அமைதியாக இருந்துவிடுகிறான். பின்னர் இராமன் சீதையிடம் நடந்து கொண்டதற்காக சீதையிடம் தசரதனே வந்து மன்னிப்பு கேட்பதாக இராமாயணம் சொல்கிறது. அதற்கு பிறகு இராமன் அயோத்தியில் தன் இரு குழந்தைகளுக்கும் தாயான சீதையிடம் தீ குளிக்க சொல்லும் பொழுது சீதை அந்த கோரிக்கையை மறுத்துவிடுவதுடன் இராமனை விட்டு முழுமையாக பிரிந்துவிடுகிறாள். ஆக, எந்த இடத்திலும் இராமாயணம் சீதையை அடங்கி நடப்பவளாக காட்டவில்லை என்பதுடன் பெண்ணிய நோக்கில் கூட மிக ஆதர்சமான ஒரு பெண்ணாகவே காட்டுகிறது. அத்துடன் தீக்குளிக்க சொல்லும் இராமன் வால்மீகி முதல் அனைவராலும் கண்டிக்கப்படுவதாகவே காட்டுகிறது. இறை அவதாரமான ஸ்ரீ இராமன் கூட இந்த மண்ணின் புதல்வியான சீதையை தன்னிச்சைப்படி நடத்திவிட முடியாது என்பதனை நீங்கள் மறுவாசிப்பெல்லாம் செய்யாமல் உள்ளதை உள்ளபடி வாசித்தே உள்வாங்கிக்கொள்ளலாம். அவ்வளவு ஏன் மல்லி சீதாயணம் அப்படீன்னு சொன்னதுக்கு அவ்வளவு பரவசம் அடைஞ்சீங்களே...வான்மீகி முனிவரே இராமயணத்தை என்னன்னு சொல்றாரு தெரியுமா?"
"என்ன சொல்றாரு?"
"காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்னம் ஸீதாயாஸ் சரிதம் மகத்' அப்படீன்னுதான் குறிப்பிடுறாரு."
"அப்படீன்னா?"
"அதாவது இராமயண காவியம் அப்படீங்கிறதே சீதையின் மகத்தான சரித்திரம்தான் என்பது வான்மீகியின் வாக்கு"
வசந்தி அசந்து போனாள், "மார்வின் நாங்க படிச்சு தெரிஞ்சிருக்க வேண்டியதை நீ சொல்லி தெரிஞ்சிக்க வேண்டியதா இருக்குது. ஏன்க்கா...மார்வின் சொன்ன மாதிரி இராமாயணத்தை அப்படியே போட்டிடலாமே அதிலேயே நாம சொல்ல நினைக்கிற விஷயங்களெல்லாம் நாம சொல்ல நினைச்ச விதத்தை விட ஆழமா அழுத்தமா அழகா இருக்கே...:" என்றவள் மல்லியின் சூடான பார்வையை தாங்க முடியாமல், "அது இல்லக்கா.. அதாவது அப்படியே செஞ்சா எதுவும் பிரச்சனை வராதில்லன்னு நினைச்சேன்..." என்று இழுத்தாள்.
மார்வின் சிரித்தபடியே, "சரி நீங்கதான் மதச்சார்பின்மைக்காக பேசுறவங்களாச்சே...ஏன் இராமயணத்தோட நிக்கணும்...கிறிஸ்தவ இலக்கியங்களை கூட மறுவாசிப்பு செய்யலாமே...கன்னி மேரி கூட சந்தனமேரி அப்படீன்னு உங்க பண்பாட்டில ஒன்றி ஒண்ணா சேர்ந்துக்க ஆசைப்படுற சூழ்நிலையில, ஏன் இப்படி ஒரு மறுவாசிப்பு செய்யக் கூடாது?" என்றான்.
வசந்தி "சொல்லுங்க மார்வின் முயற்சி பண்றோம்..." என்றாள்.
மார்வின் சொன்னான். "அட இது கூட நல்லாத்தானே இருக்கு" என்றாள் வசந்தி. மல்லி ஏதோ ஒப்புக்கு "ஆமா ஆமா" என்றாள். ஆனால் ஏனோ அவளுக்கு அது பிடிக்கவில்லை என்பதனை அவள் இருண்ட முகம் காட்டியது.
ஹாஸ்டல் டே.
"பேரிலக்கியங்களில் பெண்ணிய மறுவாசிப்புக்கள்" என தலைப்பிட்டு நடந்த அந்த நாடகத்தின் முதல் காட்சியில் சீதை இராமரை தீக்குளிக்க சொன்னாள். மாணவியர் கூட்டம் உற்சாகத்தில் கிறீச்சிட்டது. எங்கோ பின்னாலிருந்து ஒரு ஆட்சேபக்குரலும் ஒரே ஒரு துண்டு செங்கல்லும் வந்து விழுந்தது. "இந்திய அரசியல் நிர்ணய சட்டம் எங்களுக்கு தந்துள்ள சுதந்திரத்தை ஒரு துண்டு செங்கல்லால் ஒன்றும் செய்துவிட முடியாது" என வீர வசனம் பேசினாள் மல்லி.
அப்போது கூட்டத்திலிருந்து நழுவியவன் முன்பு மல்லியுடன் சிதம்பரம் கோவிலின் முன்னால் பேசிய அவளது தோழர்களில் ஒருவன் என்பதனை மார்வின் கவனித்தான்.
அதேநேரம் அந்த நாடகத்திலேயே அடுத்த காட்சி அரங்கேற திரை மூடி பின் விலகியது. அங்கே ஒரு இளம் பெண் மண்டியிட்டு ஜெபித்துக் கொண்டிருந்தாள்.
அவளின் சிவந்த முகத்தின் மீது ஒரு நிழல் படர்ந்தது.
அவள் நிமிர்ந்து நோக்கினாள்.
"இதோ உம் அடிமை உம் சித்தப்படியாகவே ஆகட்டும் என கூறுவேன் என்று எதிர்பார்க்கிறாயா கபிரியேல். போ. போய் உன் யஹீவா தேவனிடம் சொல்லு. என்னுள் ஒரு குமாரத்தியை அன்றி குமாரனை அளிக்க பரிசுத்த ஆவி என்மேல் படர வேண்டாம் என சொல்லு. ஏன் காபிரியேல் ஆதி தோட்டத்திலிருந்து மனிதனை வெளியேற்ற காரணமானாள் என்று சொல்லியல்லவா ஆதிப்பெண் முதல் இன்றுவரை பெண்களை அடிமையாக ஆக்கிவைத்திருக்கிறது யஹீவாவின் மதம். ஆனால் இன்றைக்கு உலகை ஆளுகிற வேட்கை கொண்ட ஒரு மதத்தை உருவாக்க ஒரு குமாரனை அனுப்ப மட்டும் யஹீவாவுக்கு ஒரு கன்னியின் கர்ப்பப்பை தேவை படுகிறதா காபிரியேல். ஒரு ஆண் கடவுள் அளிக்கப் போகிற ஆண் வாரிசினை கர்ப்பப்பைக்குள் ஏற்றெடுக்க ஒரு ஆண் தூதனிடம் மண்டியிட்டு 'ஆண்டவரே இதோ உம் அடிமை ' என கூறுகிறவளல்ல இந்த மரியாள் என்று சொல்லு போ' என்றாள் அந்தப் பெண்.
மாணவிகள் தாங்கமுடியாத உற்சாகத்துடன் கூச்சலிட்டனர். சில விசில் சத்தங்கள் கூட கேட்டன.
அதே நேரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக தடாலடியாக போலிஸ் உள்ளே நுழைந்தது.
ஏதோ பெரிய கலவரத்தை அடக்க வந்திருப்பது போல ஆயுதபாணிகளாக காவலர்கள் உள்ளே நுழைந்து சுற்றி வளைத்து நின்றனர்.
"மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் விதமாக இப்படி நாடகம் நடத்த அனுமதிக்க முடியாது" என மாணவிகளின் உற்சாக கூச்சலுக்கும் மேலாக போலிஸ் அதிகாரியின் அதிகார குரல் கேட்டது. "இந்த நாடக நடிகர்கள் மற்றும் இதனைப் போட்டவர்களை உடனே கைது செய்யணும் யார் அவுங்க?"
வசந்தி விரைத்துப் போய் நின்றாள். மரியாளுக்கும் காபிரியேலுக்கும் கால்கள் வெடுவெடு என நடுங்கின.
மார்வின் முன்னால் போய் அந்த காவல்துறை அதிகாரியிடம் "சார் நான் தான் போட்டேன். நான் தான் வசனம் எழுதினேன். முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அந்த மாணவ-மாணவிகளை ஒன்றும் செய்ய வேண்டாம். என்னை மட்டும் அரெஸ்ட் செய்யுங்கள்." என்றவன், :"அதற்கு முன்னதாக நான் மைக்கில் மாணவர்களை அமைதி காக்க சொல்லிவிட்டு வந்துவிடுகிறேனே." என்றான்.
சரி என தலையாட்டினார் அதிகாரி. மனதுக்குள் இந்த வெள்ளைக்காரனை அரெஸ்ட் செய்தால் நாளைக்கு ஏதாவது தூதரக பிரச்சனைகள் வந்துவிடக்கூடாதே என்கிற கவலை லேசாக தலை தூக்கியது.
மார்வின் மைக்கை பிடித்தான், "மாணவ மாணவிகளே இப்போது இங்கு நடந்த நாடகம் முழுக்க முழுக்க என்னுடைய விவிலிய மறுவாசிப்புத்தான் என்றாலும், மல்லி இங்கே தீக்கு இரையாகும் பெண்களுக்கு காரணம் சீதை தீக்குளித்தது தான் என்று சொன்ன மாதிரி நான் மேற்கத்திய உலகில் திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவுகளும் டீனேஜ் பெண்கள் கர்ப்பமாவது அதிகமாக இருப்பதற்கும் காரணம் கன்னி மேரி என்கிற கதாபாத்திரம் வழிபடப்படுவதுதான் என சொல்ல மாட்டேன். நன்றி" என்றான்.
கரகோஷம் அந்த அரங்கை பிளந்தது.
மார்வின் அமைதியாக காவல்துறை அதிகாரியுடன் சென்று ஜீப்பில் ஏறினான்.
-----------------------------------------------------------
படித்து முடித்த ஆசிரியர் அந்த தாள்களை பொறுமையாக ஒவ்வொன்றாகக் கிழித்து அருகிலிருந்த குப்பைத்தொட்டியில் போட்டார். எதிரில் நின்ற உதவி ஆசிரியர் பதறினார், "என்ன சார், ஏதோ லாங்குவேஜ் அப்படி ஓகோன்னு இல்லாட்டாலும் நம்ம மாகஸீன்ல வந்த அந்த தொடர்கதையை ஓரளவு சரியாகத்தானே கவுண்டர் பண்ணி எழுதியிருந்தான் சார், போடலாம்னு நினைச்சேனே."
உதவி ஆசிரியரை ஊடுருவிப் பார்த்தார் ஆசிரியர், "தேவையில்லாத வம்பு இது. இந்து மதத்தை பத்தி என்னா வேணும்னாலும் எழுதலாம். ஆனா வேற சில விஷயங்கள்ல தேவையில்லாம கை வைச்சோம்...பத்திரிகை ஆபிஸ் நொறுங்கிடும். சிஎம் முதல் பி.எம் பிரஸிடண்ட் வரை நாம் பதில் சொல்ல வேண்டி வரும். இந்த பத்திரிகையையே சீல் வச்சுருவாங்க. இதோ பாருங்க தம்பி இந்த நிறுவனத்துல நாம புதுசா தொடங்கப்போற அடுத்த பிராஜக்ட்டுக்கு உங்களை ஹெட்டா போடாலாம்னு இருக்கோம். போங்க போய் வேலையை பாருங்க. தேவையில்லாத பிரச்சனையை கொண்டு வராதீங்க. அடுத்த தடவை இப்படி படைப்புகள் வந்தா நீங்களே கிழிச்சு
குப்பைத்தொட்டில போட்டுருங்க. என்னோட டைம்ம வேஸ்ட் பண்ணாதீங்க. போங்க."
உதவி ஆசிரியர் அமைதியாக தலைகுனிந்து அந்த ஏஸி அறையிலிருந்து வெளியே சென்றார். சுவரில் மொட்டைத்தலையின் மேல் ஒற்றைக்கொம்பு மேலே எழ பத்திரிகையின் சின்னமாக விளங்கிய முகம் விகாரமாக இளித்தது. ஆசிரியர் தன் குஷன் சீட்டில் சிறிதே நெட்டு விட்டு நெளிந்தார்.
அவருக்கு முதுகில் ஏதோ உறுத்தியது. கையால் முதுகில் தடவ ஏதோ ஒன்றை அங்கே அசௌகரியமாக உணர்ந்தார்.
முள்ளாகக் குத்தி சுமையாக உறுத்தியது அவரின் முதுகெலும்பு!
பணிவன்புடன்
எஸ்.அரவிந்தன் நீலகண்டன்