அழு என் தேசமே!
ஏனெனில் அவர் ஒரு மகத்தான ஆதர்சம்.
அவரது இலட்சியம் தேசத்தின் முன்னேற்றம்.
கடைசி பாரத குடிமகனும்
அனைத்து வளமையுடன்
தன்னிறைவு பெற்று வாழும்
பாரதத்தினை
உருவாக்கிட முனைந்ததோர் சக்தி
அவருடையது.
எத்தனை எத்தனையோ இலட்சம் குழந்தைகளின்
உள்ளங்களில் அந்த இலட்சிய சக்தி
தீபமேற்றியுள்ளது.
இடைவிடாத பயணங்களில்
அவர் ஆற்றிய ஆயிரக்கணக்கான உரைகளில்
அவர் ஏற்றிய உத்வேகம்
நம்மில் என்றென்றும்.
அவர் விட்டுச்செல்லும்
பாரத குடியரசு தலைவர் பதவியில்
இனி அவரது உயரத்தில் எவர் வருவார்?
அரசியல் வாதிகளின் தந்திரபூமியில்
உண்மையின் உயர்வு அவரில் ஒளி வீசியது.
தெய்வ சிலையை மீட்டவருக்காக
ராமேஸ்வர மசூதியில் நடந்த சிறப்பு பிரார்த்தனை ஆகட்டும்,
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்காக
கேரள கிறிஸ்தவர்கள் அளித்த தேவாலயம் ஆகட்டும்
இராமேஸ்வரம் கோயில் பிரார்த்தனையும்
மசூதி தொழுகையும் சேருமிடம் ஒன்று எனும்
குரலில் வெளிப்படும் அழிவற்ற பாரத தர்மத்தின் குரலாகட்டும்
மதங்கள் கடந்த ஆன்மிகத்தின் மூலம்
தேச பக்தியையும் தேசத்தின் வளர்ச்சியையும்
எண்ணுவதன்றி வேறறியா மனம் கொண்ட மாமனிதர் அவர்.
2020 இலோ அதற்கு முன்னரேயோ
வளமையான பாரதம் என்பது கனவல்ல
அடைய முடிந்த குறிக்கோள்
என சிம்ம கர்ஜனை புரிந்தவர் அவர்.
அவர் அகமகிழ்ந்த தினம் எது தெரியுமா?
விண்செல்லும் கலனின் வெப்பமேற்கும் சேர்மத்தால்
போலியோ தாக்கிய குழந்தையின்
செயற்கை கால் வலிமை கூடி எடைச்சுமை குறைந்திட
அக்குழந்தை புன்னகைத்த தினம்.
நம் தேச மக்கள் தம் துயர நேரங்களில்
அன்னிய தொழில்நுட்பத்துக்கு ஏங்குவதா என
ஏங்கி உழைத்ததன் விளைவுதான்
கலாம்-ராஜு இருதய ஸ்டென்ட்.
விண்வெளி முதல் இந்திய இருதயம் வரை
அவரது தொழில்நுட்ப ஆளுமையால்
கண்ணீர் துடைத்த அம்மகாத்மா
வாழும் காலத்தில் வாழ்ந்திட கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
எத்தனை அழகிய நூல்கள்!
மதங்களின் குறுகிய சுவர்கள் தடுக்காமல் பிரவாகித்த
ஆன்மிக வெள்ளமாக.
திருவள்ளுவரும் பதஞ்சலி முனிவரும் அவரது மேற்கோள்களால்
பாரதத்தின் வளர்ச்சிக்கு ஆசி கூறினார்கள்.
உதயமாகிறது வலிமை படைத்த பாரதம்
என்பது அவர் நூல்
அதிலிருந்து:
ஐயாயிரம் வருட பாரம்பரியத்தில் செழித்து தழைத்தோங்கி வரும் நாகரிகம் என்ற பொக்கிஷத்தைப் போற்றிப் பாதுகாத்து வரும் இந்தியாவிடம் உள்ளதனித்தன்மையுடன் சுடர் ஒளி பரப்பும்அதன் அரிய வளம் தொன்மையான ஞானம்.இந்த விலைமதிக்க முடியாத சொத்தை தேசத்தின் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுமிக முக்கியம் . தேச நலனுக்கும் உலக அரங்கில் நம் தேசத்தின் தாக்கத்தை உணர வைப்பதற்கும் இது மிகவும் அவசியம்...ஒரு சிலர் உயர்ந்தவர்களாக இருப்பதால் மட்டுமே ஒரு தேசம் உயர்ந்த தேசமாகிவிடாது. தேசத்தின் மக்கள் அனைவரும் உயர்ந்தவர்களாக இருந்தால்தான் அந்த தேசம் உயர்ந்த தேசம். இளைய தலைமுறையினர் கல்வியில் சிகரத்தை எட்டி தார்மீக நெறிகளாலும் சமூக நலனிலும் அக்கறை கொண்ட அருமையான மனிதர்களாக பிரகாசிக்க வேண்டும்.
அவருக்கு ஏன் பதவி?
இதோ அவரது சுய சரிதையிலிருந்து தியானிக்க சில வரிகள்.
தியானிக்க மட்டுமல்ல ...நம் தேசம் இழந்த வாய்ப்பினை எண்ணி நாணவும் தான்.
"...இந்தக் கதை என்னோடு முடிந்துவிடும்.
உலக வழக்குப்படி எனக்கு எந்த பரம்பரைச் சொத்தும் இல்லை.
நான் எதையும் சம்பாதிக்கவில்லை.
எதையும் கட்டி வைக்கவில்லை.
என்னிடம் எதுவுமே கிடையாது.
குடும்பம் மகன்கள் மகள்கள் ..யாருமே கிடையாது.
இந்த மாபெரும் நாட்டில்
நான் நன்றாகவே இருக்கிறேன்
இதன் கோடிக்கணக்கான
சிறுவர் சிறுமிகளைப் பார்க்கிறேன்
எனக்குள்ளிருந்து அவர்கள்
வற்றாத புனிதத்தை முகந்து
இறைவனின் அருளை
எங்கும் பரப்ப வேண்டும்.
ஒரு கிணற்றிலிருந்து
நீர் இறைக்கிற மாதிரி." (அக்னி சிறகுகள் -பக். 370)
அழு என் தேசமே!
இம்மாமனிதரை நிராகரிக்க மனது வந்த அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்தாயே
அழு.
பரம்பரைக்காக பண்பினை தியாகம் செய்யும் பதர்களால் ஆளப்படுவதற்கு ஆளானாயே
அழு.
அண்டோ னியா மைனியாக்களும்
அழகிரிகளும் கனிமொழிகளும்
லல்லு பிரசாத் யாதவ்களும்
உருட்டுக்கட்டை ரவுடிகளும்
ரவுடிகளுக்காக வாய்கூசாது பொய் பேசும் மஞ்சள் துண்டு பகுத்தறிவுகளும்
வழி நடத்த
சர்க்கரை ஆலை கடனேய்ப்பு பேர்வழிகளும்
இதர பரம்பரைகளின் விசுவாசி வாலாட்டிகளும்
மீண்டும் ராஷ்டிரபதி பவனை ஆக்கிரமிக்க
அழு என் தேசமே!
Labels: Abdul Kalam, Indian development, Indian Nationalism