சிறை உடையில் அலி சகோதரர்கள்கோகட் கலவரம்:10 செப்டம்பர் 1924 இல் (இப்போது பாகிஸ்தானில் உள்ள) கோகட் எனும் இடத்தில் இந்து-முஸ்லீம் கலவரம் வெடித்தது. இங்கு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருந்தார்கள்.
இஸ்லாமிய வியாபாரிகளுக்கு இந்து சிறுபான்மையினர் போட்டியாகவும் இருந்து வந்தனர். இந்நிலையில் ஜீவன்தாஸ் என்பவர் நடத்தி வந்த ஒரு பத்திரிகையில் முஸ்லீம்கள் நபி என
நம்பும் முகமதுவை கேலி செய்யும் கவிதை வெளியானதாக முஸ்லீம்கள் கொதிப்படைந்தனர். தொடர்ந்து அதிகாரிகள் முன்னிலையில் இந்து தலைவர்கள் எழுத்து மூலம் மன்னிப்பு எழுதிக்கொடுத்ததுடன் அந்த இதழின் 900 பிரதிகளை தீயிட்டு கொழுத்தவும் ஒப்புக்கொண்டனர். அது பொது இடத்தில் எரிக்கப்பட வேண்டும் எனும் நிபந்தனையையும் ஏற்று அந்த இதழ்களை பொது இடத்தில் எரித்தனர். அந்த இதழ்களின் அட்டைப்படத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் படம் இருந்த போதிலும் அவை எரியூட்டப்பட்டன. அதன் பின்னர்
நிகழ்ந்தவைக் குறித்து மகாத்மா காந்தி எழுதினார்:
" அதற்கு பின்னரே மிக மோசமானவை நடைபெற்றன. ஒரு குருத்துவாரா உட்பட கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன. சிலைகள் அடித்தொழிக்கப்பட்டன. பல கட்டாய மதமாற்றங்கள் நடந்தன. இவற்றினை நான் மதமாற்றம் எனக் கூற மாட்டேன் ஏனெனில் அவை பாதுகாப்பிற்காக செய்யப்பட்ட நடிப்புதான். குறைந்த பட்சம் இரண்டு இந்துக்களாவது மதம் மாற மறுத்தமைக்காகக் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இந்துக்கள் தங்கள் சிகைகளையும் நூல்களையும் நீக்கி முஸ்லீம்கள் ஆனார்கள். அல்லது அவர்கள் பாதுகாப்பு தேடும் போது அவர்கள் அணுகிய முஸ்லீம்கள் இந்துக்கள் தங்களை முஸ்லீம்கள் என வெளிப்படையாகக் கூறி அறிக்கையிட்டு பின்னர் இந்து மத சின்னங்களை அவர்கள் நீக்கிவிட வேண்டுமெனக் கூறினார்கள்."1
கோகட் கலவரம் மிக முக்கியமான பிற்கால சம்பவங்களுக்கு முன்னோடியாக விளங்குவதை அறிந்த ஒரு தலைவரும் இருந்தார். அவர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள். இந்தக்
கொடூரமான கலவரத்தின் மூலம் கோகட் இந்துக்கள் அனைவருமே முழுமையாக துடைத்தொழிக்கப்பட்டு அகதிகளாக ராவல்பிண்டியில் வாழ்வதை ஒரு அறிக்கையாக அவர்
வெளியிட்டார். கோகட், அமேதி, சம்பல், குல்பர்கா ஆகிய இடங்களில் கலவரங்கள் நடந்தன. அதிர்ந்து போன மகாத்மா காந்தி முகமது அலியின் வீட்டிலேயே உண்ணாவிரதத்தை தொடங்கினார். 21 நாட்கள் முகமது அலியின் கூரையின் கீழ் நடந்த இந்த உண்ணாவிரதத்தை எவரும் முகமது அலிக்கு எதிரானது என நினைத்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் மகாத்மா.
முகமது அலி வீட்டில் மகாத்மா காந்தி 21 நாட்கள் உண்ணாநோன்பு மேற்கொண்டார்உண்ணாவிரதம் குறித்து 'யங் இந்தியா'வில் எழுதினார்:
"ஆனால் இஸ்லாமியர் ஒருவரின் வீட்டில் உண்ணாநோன்பு இருப்பது சரிதானா? ஆம் சரிதான். எந்த ஒரு ஆன்மாவுக்கும் எதிராக இந்த உண்ணாவிரதத்தை நான் கை கொள்ளவில்லை.ஒரு இஸ்லாமியர் வீட்டில் உண்ணாநோன்பு இருப்பது இத்தகைய விளக்கத்தை இல்லாமல் ஆக்குகிறது. இன்றைய சூழலில் என் உண்ணா நோன்பு ஒரு இஸ்லாமியரின் வீட்டிலேயே தொடங்கி அங்கேயே முடிக்கப்படுவதுதான் பொருத்தமாக இருக்கும். மேலும் முகமது அலி யார்? இரண்டு தினங்களுக்கு முன்னால்தான் முகமது அலியிடம் ஒரு தனிப்பட்ட விஷயத்தை குறித்து பேசிக்கொண்டிருக்கும் போது 'அலி சாகேப் என்னுடையதெல்லாம்
உங்களுடையது. உங்களுடையதெல்லாம் என்னுடையது' எனக் குறிப்பிட்டேன். பொதுமக்களுக்கு ஒரு விஷயத்தை நான் கூற விரும்புகிறேன், முகமது அலியின் இல்லத்தைக் காட்டிலும் வேறெங்கும் நான் அன்பும் அனுசரணையும் கொண்ட கவனிப்பையும் உபசரிப்பையும் பெற்றது கிடையாது. என்னுடைய ஒவ்வொரு தேவையும் பூர்த்தி செய்யப்படுகின்றன..."
என கூறினார் மகாத்மா காந்தி.
3 மகாத்மா காந்தியும் பிரச்சனையின் வேதனைகளை உணர்ந்திடாமல் இல்லை. இந்த உண்ணாவிரதத்தினை ஏற்றெடுக்க தீர்மானித்த
போது அவருடன் இருந்த மகாதேவ் தேசாய் மகாத்மா காந்தியிடம் அவர் எந்த தவறுக்கு பிராயசித்தமாக இந்த உண்ணாவிரத நோன்பினை மேற்கொள்கிறார் என கேட்டார். அதற்கு
மகாத்மா காந்தி அளித்த பதில் அவரது உள்ள வேதனையை வெளிக்காட்டுகிறது.
" எனது தவறு! எனது தவறா? ஏன் நான் இந்துக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டதாக கருதலாமே. நான் அவர்களிடம் முஸ்லீம்களுடன் அன்புடன் ஒற்றுமையாக நட்புறவு கொள்ளச் சொன்னேன். முஸ்லீம்களின் புனித தலங்களின் பாதுகாப்புக்காக அவர்களது வாழ்க்கைகளையும் சொத்துக்களையும் முஸ்லீம்களுக்காக விட்டுக்கொடுக்க சொன்னேன். இன்றைக்கும் நான் அவர்களிடம் அகிம்சையின் மூலமாக பிரச்சனைகளை தீர்த்திட கூறுகிறேன். உயிரை அளிப்பதன் மூலமாக பிரச்சனைகளை தீர்த்திட கூறுகிறேனே அன்றி கொலையின் மூலமாக அல்ல. ஆனால் இதில் கிடைத்த விளைவு என்ன? எத்தனை கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளன? எத்தனை சகோதரிகள் என்னிடம் துயரத்துடன் வருகின்றனர்? இந்து பெண்கள் முஸல்மான் குண்டர்களை எண்ணி மரண அச்சத்துடன் வாழ்வதைக் குறித்து ஹக்கிம்ஜியிடம் நான் நேற்று சொல்லிக்கொண்டிருந்தேன். பல இடங்களில் அவர்கள் தனியாக செல்லவே அச்சப்படுகின்றனர். எனக்கு திருவாளர்... அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அவருடைய சிறு குழந்தைகளை வன்-புணர்ச்சிக்கு ஆளாக்கியிருப்பதை எப்படி
என்னால் சகித்துக்கொள்ளமுடியும்? நான் இந்துக்களிடம் இப்போது எல்லாவற்றையும் சகித்துக் கொண்டிருங்கள் என எவ்வாறு கூற முடியும்? முஸ்லீம்களுடன் நட்பாக இருப்பதால் நன்மை விளையும் என நான் இந்துக்களிடம் வாக்குறுதி கொடுத்தேன். ஆனால் விளைவுகளைக் குறித்து எதிர்பார்க்காமல் நட்புறவு கொள்ள நான் அவர்களைக் கேட்டுக்கொண்டேன். அந்த வாக்குறுதியை உண்மையாக்கும் ஆற்றல் இன்று என்னிடம் இல்லை முகமது அலியிடமோ சௌகத் அலியிடமோ இல்லை. யார் இன்று நான் கூறுவதைக் கேட்கிறார்கள்? இருந்தாலும் நான் இந்துக்களை இன்றைக்கும் வேண்டியேயாக வேண்டும். கொல்லாதீர்கள் இறந்துபடுங்கள். இதற்கு உதாரணமாக என்னுடைய உயிரையே நான் கொடுக்க வேண்டும்."4
இதனைத் தொடர்ந்து காங்கிரஸில் இருந்த மௌலானா முகமது அலி டிசம்பர் 1924 பம்பாய் முஸ்லீம் லீக் மாநாட்டு மேடையில் மகாத்மா காந்தியுடன் பிரசன்னமானார். கோகட்
கலவரங்களைக் குறித்து ஒரு அறிக்கையையும் வெளியிட்டார்: "கோகட் இந்துக்களின் துன்பங்கள் ஒன்றும் தூண்டுதல் இல்லாமல் ஏற்பட்டுவிடவில்லை. மாறாக அவர்களே மிக
மோசமான முறையில் முஸ்லீம்களின் மத உணர்வுகளை தாக்கி கலவரத்தைத் தூண்டினார்கள் என்பதுடன் அவர்களே வன்முறையையும் தூண்டினார்கள்..."2 முஸ்லீம் லீக் மாநாட்டில் முஸ்லீம் லீக்காரர்களே கோகட் கலவரத்தை நியாயப்படுத்தாத அளவுக்கு நியாயப்படுத்திய இந்த அறிக்கை மகாத்மா காந்தியை அதிர்ந்திட வைத்தது. என்ற போதிலும் சந்தேகத்தின் பலனை மௌலானாவுக்கே அளித்திட மகாத்மா மீண்டும் முன்வந்தார். அதேசமயம் மௌலானாவின் இந்த செயலைக் குறித்து தமது உணர்வுகளையும் நயமாக அவருக்கு தெரிவித்திருந்தார். முகமது அலிக்கு எழுதிய கடிதத்தில் மகாத்மா பின்வருமாறு கூறினார்:
"எனது அன்புள்ள சிநேகிதர் மற்றும் நண்பருக்கு,
எதையும் அவசரப்பட்டு செய்ய வேண்டாம். ஸாஃபர் அலிகானின் (முஸ்லீம் லீக் தலைவர்) தீர்மானம் உங்களுடையதைக் காட்டிலும் நன்றாக உள்ளது. நீங்கள் நல்லதாகத்தான்
நினைத்திருப்பீர்கள் ஆனால் அது முடிந்திருக்கிற விதம் மோசமாக இருக்கிறது. உங்கள் தீர்மானம் ஏதோ இந்துக்களுக்கு நேர்ந்தது அவர்களுக்கு சரியாக கொடுக்கப்பட வேண்டிய
அடிதான் என்பது போலல்லவா இருக்கிறது.... ஓவ்வொரு முறை இந்த அறிக்கையை படிக்கும் போதும் அதன் மீது எனக்கு வெறுப்பு ஏற்படுகிறது. என்றாலும் இது சரியானது என
உங்களுக்கு தோன்றினால் நீங்கள் இந்த தீர்மான நிலைப்பாட்டிலேயே இருங்கள். நான் உங்கள் இதயத்தினை மாற்றி அதன் மூலம் உங்கள் சிந்தனையை மாற்றப் போகிறேன்.
உங்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளதென்பதால் நான் உங்களை கைவிடப் போவதில்லை. இந்த அறிக்கை உங்கள் மனம் செயல்படும் விதத்தைக் காட்டுகிறது. இந்த அறிக்கை
-அதன் வார்த்தைகள் எத்தனை மோசமானதென்றாலும்- உங்கள் நம்பிக்கையை காட்டுகிறது....இந்த விஷயங்களில் நீங்கள் இந்துக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்துக்கள் கலவரத்தை தூண்டவில்லை, முதல் வன்முறை அவர்கள் தரப்பிலிருந்து ஏற்படவில்லை என்பதையெல்லாம் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. அவர்கள் அவ்வாறு நம்புவது தவறாகக் கூட இருக்கட்டுமே, என்ற போதிலும் அவர்கள் அவ்வாறு நம்புவதால் நீங்கள் இந்த மாதிரி கூறியிருக்கக் கூடாது. "
5
கலவரம் குறித்த அறிக்கைகளை வெளியிடுவது குறித்து அடுத்த சர்ச்சை ஏற்பட்டது. முஸ்லீம் தலைவர்கள் (ஹக்கிம் அஜ்மல் கான், டாக்டர்.அன்சாரி) இந்த அறிக்கைகள்
வெளியிடப்படாமல் இருப்பதே நல்லது என வாதாடினார்கள். இதனை மோதிலால் நேரு கடுமையாக எதிர்த்தார். இதனையடுத்து மாற்றங்களுடன் அறிக்கைகள் வெளியிடப்படுவது
நல்லது எனக் கருதப்பட்டது. மகாத்மா முதலில் ஷௌகத் அலியின் அறிக்கையை படித்தார். அதிலுள்ள கருத்துக்களில் எவ்வித மாற்றமும் செய்யாததுடன் அதன் இறுதி பாரா
தெளிவற்று இருந்தமையால் அது தெளிவாக அமையும் வண்ணம் அதை திருத்தி எழுதினார். ஆனால் கலவரம் குறித்த மகாத்மா காந்தியின் அறிக்கையினை மிகத்தீவிரமாக ஷௌகத்
அலி எதிர்த்தார். ஜெனரல் டையரின் கொடூரத்துடன் அக்கலவரத்தை மகாத்மா ஒப்பிட்டிருந்ததையும் இந்துக்களே அக்கலவரத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்று கூறியிருந்ததையும் நீக்கிவிட அவர் கூறினார். காந்திஜியும் உடனிருந்த மற்ற காங்கிரஸ்காரர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் அவற்றை முழுமையாக
நீக்கிவிட்டார்.6
பின்னர் கோகத்திலிருந்து ராவல் பிண்டியில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருந்த இந்துக்களுக்கு மகாத்மா காந்தி பிப்ரவரி 10 1925 இல் ஒரு கட்டளையை அனுப்பினார்:
"பிரச்சனைகளுக்கு சுவராஜ்ஜியத்தின் பார்வையில்தான் நான் தீர்வு கூறமுடியும். தற்போதைய தனிப்பட்ட இலாபங்களை விட்டு விட்டு நாளைய தேச நலனின்
அடிப்படையில் தியாகங்களை செய்யத்தான் வேண்டும். முஸ்லீம்கள் இறங்கி வரவில்லை என்றாலும் கூட, இந்துக்கள் தங்கள் சொத்துக்களையும் வீடுவாசல்களையும் முழுவதுமாக
இழக்க வேண்டியிருந்தாலும் கூட, என்னைப் பொறுத்தவரையில், முஸ்லீம்களுடன் சமாதானம் ஏற்படுத்தாமல், அரசு பாதுகாப்பு இல்லாமல் முஸ்லீம்களின் நல்லிணக்கத்துடன்
பாதுகாப்பாக வாழலாம் என்கிற நிலை ஏற்படும் வரை இந்துக்கள் கோகட்டுக்கு திரும்ப நினைக்கவே கூடாது. இது மிகவும் ஆதர்சமான அறிவுரை என்பதும் இந்துக்களால்
ஏற்கப்படாது என்பதும் எனக்கு தெரியும் என்றாலும் இதுதான் என்னால் கொடுக்கமுடிந்த மிகச்சிறந்த அறிவுரையாகும்...."
லாலா லஜ்பத்ராய்இந்த கலவரங்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே 1919 இல் கிலாபத் இயக்கத்தினை ஆதரித்த முக்கியமான காங்கிரஸ் தலைவர்களுக்கு (லாலா லஜ்பத் ராய், ரவிந்திரநாத்
தாகூர் போன்றோர்) இஸ்லாம் குறித்து அறிவு ஏற்படலாயிற்று. 1921 இல் மாப்ளா படுகொலைகள் அரங்கேறின. 1922 இல் தேசபந்து சித்தரஞ்சன் தாஸுக்கு எழுதிய கடிதத்தில்
லாலா லஜ்பத்ராய் சில அடிப்படையான அச்சங்களைத் தெரிவித்தார். "நான் இந்துஸ்தானத்தில் உள்ள 7 கோடி இஸ்லாமியர்களைக் குறித்து அஞ்சவில்லை. ஆனால் இவர்களையும் ஆப்கானிஸ்தானிலும் அரேபியாவிலும் உள்ள ஆயுதமேந்திய இஸ்லாமியவாதிகளையும் குறித்து சிந்திக்கிறேன்.
நான் நிச்சயமாகவும் நாணயத்துடனும் இந்து-முஸ்லீம் ஒற்றுமையை ஆதரிக்கிறேன். இஸ்லாமிய தலைவர்களை முழுமையாக நம்ப தயாராக இருக்கிறேன். ஆனால் குரானையும் ஹதீஸையும் மீறி இவர்களால் செயல்பட முடியுமா?"
7
1924 இல் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் இரவீந்திர நாத் தாகூரும் ஒரு விசயத்தை சுட்டிக்காட்டினார். பல முஸ்லீம்களுடன் தாம் கேட்ட போதும் அவர்கள் ஒரு
இஸ்லாமிய நாடு பாரதத்தின் மீது படையெடுக்கும் பட்சத்தில் தாம் இஸ்லாமிய நாட்டுடன் இணைவதையே விரும்புவார்கள் என்று கூறியதையும் மௌலானா முகமது அலி உட்பட
இந்த விஷயத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு இஸ்லாமியன் மற்றொரு இஸ்லாமியனுடன் போரிடுவது மார்க்கத்தில் விலக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளதையும் கூறினார்.8
நேரு அறிக்கை
1928 இல் இந்திய தேசிய காங்கிரசினை விட்டு நேரு அறிக்கையை (சுயராஜ்ஜிய அரசியல் சாசனம்) எதிர்த்து முழுமையாக வெளியேறினார் மௌலானா முகமது அலி.
இத்தனைக்கும் மத்திய ஆட்சியில் கால் பங்கு முஸ்லீம்களுக்கு ஒதுக்கீடு செய்திருந்தது அந்த அறிக்கை. இதற்கு மாற்றாக முகமதலி ஜின்னாவின் 14 அம்ச கோரிக்கையை முகமது
அலி ஆதரித்தார். பின்னர் பிரிட்டிஷாரின் முக்கிய ஆதரவாளரான ஆகாகானுடனும் அப்போது முஸ்லீம்-லீக்கில் முக்கியமானவராக வளர்ந்து வந்த முகமதலி ஜின்னாவுடனும்
இணக்கமானார்.
மோதிலால் நேருவின் அறிக்கை இஸ்லாமியவாதிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை 1928 இல் ஆகாகான் தலைமையில் நடந்த அனைத்து கட்சி முஸ்லீம்கள் மாநாட்டில் முகமது அலி பங்கேற்றார்.
1930 இல் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை
இயக்கத்தினை அவர் முழுமையாக எதிர்த்ததுடன் முஸ்லீம்கள் ஒத்துழையாமை இயக்கத்தில் சேரக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார் ஏனெனில் மகாத்மா காந்தி முகமது அலிக்கு
திருவாளர்.காந்தியாக ஆனது மட்டுமன்றி இந்து ராஜ்ஜியத்திற்காக பாடுபடுகிறவராகவும் ஆகிவிட்டிருந்தார். பிரிட்டனுக்கு முகமது அலி வட்டமேசை மாநாட்டிற்காக சென்றார். ஒட்டு மொத்த இந்தியர்களுக்காக அல்ல மாறாக முஸ்லீம்களின் பிரதிநிதியாக சென்ற குழுவில் முஸ்லீம் லீக் சார்பில் அவர் சென்றிருந்தார்.
9முகமது அலி கலந்துகொண்ட வட்டமேசை மாநாடுஏன் எருசலேமில் புதைக்கப்பட்டார் முகமது அலி?பாபாசாகேப் அம்பேத்கர்திண்ணைக்காக ஹமீது ஜாஃபர் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்: "மௌலானாவின் அடக்கம் சம்பந்தமாக பிரச்சினை எழுந்தது. உடலை இந்தியாவுக்கு அனுப்பினால் பெரும் எழுச்சி ஏற்படும் என்ற பயந்த வெள்ளையர் அரசு, பாலஸ்தீனத்திலுள்ள மஸ்ஜிதே அக்ஸாவிற்கு (ஜெருஸலம்) அருகில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்தது."
10 என்ற போதிலும் மௌலானா முகமது அலியின் சொந்த விருப்பமே அவர் எருசலேமில் புதைக்கப்படவேண்டும் என்பதுதான். ஏன்? இந்து முஸ்லீம் ஒற்றுமையின் இயலாமையை வெளிக்காட்டும் விதமாக இது குறித்து கேலியாகக் குறிப்பிடுகிறார் பாபா சாகேப் அம்பேத்கர் :
"மற்ற வார்த்தைகளில் சொன்னால் ஒரு உண்மையான முஸ்லீம் என்றென்றும் பாரதத்தை தம் தாய் நாடாக ஏற்றுக்கொள்ளவோ இந்துக்களை தம் சகோதர குடிமக்களாக ஏற்றுக்கொள்ளவோ இஸ்லாம் என்றைக்கும் அனுமதிக்காது. மௌலானா முகமது அலி என்கிற பெரிய இந்தியர் மற்றும் உண்மையான முஸ்லீம் தாம் பாரதத்தில் அல்லாது எருசலேமில் புதைக்கப்பட விரும்பியது அதனால் தானோ என்னவோ!"11
இவ்வாறாக கிலாபத் இயக்க தலைவரில் ஒருவரான முகமது அலியின் வாழ்க்கை முடிந்தது. ஆனால் கிலாபத் இயக்கமே பாரத அரசியலில் ஒரு முக்கிய இயக்கமாக அமைந்தது.
பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம், பாகிஸ்தானின் வரலாறு குறித்த தனது இணைய தளப்பக்கத்தில் கிலாபத் இயக்கம் குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறது: "கிலாபத் இயக்கம்
தனது இலட்சியத்தை (துருக்கியில் இஸ்லாமிய கலீபாவின் ஆட்சி) அடையாவிட்டாலும் தெற்காசிய முஸ்லீம்களுக்கு மிகவும் முக்கிய நிகழ்வாக ஆயிற்று. பல காலத்துக்கு பிறகு
முழுக்க முழுக்க ஒரு தூய இஸ்லாமிய பிரச்சனையில் அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டார்கள். முஸ்லீம் பொதுமக்களை இணைத்து ஒருங்கிணைத்து வழிநடத்தும் அனுபவம் வாய்ந்த தலைவர்களின் தலைமுறை உருவானது. பாகிஸ்தான் இயக்கத்தின் போது இந்த அனுபவம் இஸ்லாமியர்களுக்கு மிகவும் பயன்பட்டது."
12 (இத்துடன் மௌலானா முகமது அலி குறித்த இத்தொடர் முற்றும். ஆனால் இந்த தொடருக்கு தொடர்புடையதான மற்றொரு தொடர்,:பாகிஸ்தானிய மற்றும் இஸ்லாமிய மேன்மைவாத இயக்கத்தின் மற்றொரு பரிமாணம் குறித்த புதிய தொடரினை ஆரம்பிக்க உள்ளேன்.)
- 1. மகாத்மா காந்தி, 'யங் இந்தியா' 25-9-1924
- 2. அதே ('யங் இந்தியா', 25-9-1924)
- 3.The Collected Works of Mahatma Gandhi, பாகம். XXV, பக். 174-76
- 4. சையது ஷரிஃபுதீன் ஃபிர்ஸாதாவால் தொகுக்கப்பட்ட 'அகில இந்திய முஸ்லீம் லீக் ஆவணத்தொகுப்பு: 1906-1947 ' பாகம்-1 பக்.28-29
- 5. மகாதேவ் தேசாய், Day-to-day with Gandhi பாகம்-5 பக்.111-112
- 6. மகாதேவ் தேசாய், பாகம்-6 பக்.49
- 7. டிசம்பர் 1922 இல் எழுதிய கடிதம் மேற்கோள் காட்டப்பட்ட நூல்: பாபா சாகேப் அம்பேத்கர், 'Thoughts on Pakistan' (அத்தியாயம் 12)
- 8. அதே நூல் அதே அத்தியாயம்.
- 9. பாகிஸ்தானிய இணைய தளம்: www.storyofpakistan.com/person.asp?perid=P038
- 10. இக்வான் அமீர் எழுதிய கட்டுரை: 'பகலில் வரலாற்றை உருவாக்குகிறேன்' திண்ணைக்காக ஹமீது ஜாகபர் (www.thinnai.com)
- 11. பாபா சாகேப் அம்பேத்கர், 'Thoughts on Pakistan' (அத்தியாயம் 12)
- 12.http://www.mofa.gov.pk/Pages/History.htm