நம்முடைய மூளையில் 300 பில்லியன் (300,000,000,000) நியூரான்கள் உள்ளதென்கிறார்கள் மூளை ஆராய்ச்சியாளர்கள். நமது பால்வெளி விண்மீன் மண்டலத்திலிருக்கும்
விண்மீன்களின் எண்ணிக்கையும் இதுதான் என்கிறார்கள் வான்வெளி ஆராய்ச்சியாளர்கள். இந்த தற்செயலான ஒற்றுமைக்கு அப்பால் நரம்புகளின் செயல்பாடுகளை ஆராயலாம்.
மூளையின் செயல்பாடுகளைக் குறித்த நமது பார்வை கடந்த சில பத்தாண்டுகளில் அபரிமிதமாக மாறி வந்துள்ளது. மூளையின் செயல்பாட்டினை கணினியின் செயல்பாட்டுடன் ஒப்பிட்டு பார்த்து ஆராயும் போக்கு 1940களிலிருந்து 1980கள் வரை நரம்பியல் மற்றும் மூளை ஆராய்ச்சியாளர்களிடம் கனமாக வளர்ந்திருந்தது. 1981 இல் ஒரு ஆராய்ச்சியாளர் இந்த பார்வை மாற்றத்தினைப் பிரகடனப்படுத்தினார். ஸ்காட் கெல்ஸோ மூளையின் இயக்கமும் மனதின் இயற்கையும் பரிணமிக்கும் நேர்கோட்டுத்தன்மையற்ற இயக்கவியல் (non-linear dynamics) மூலமாக முழுமையாக விளக்கப்படலாம் என்று கூறியது அப்போது மூளை ஆராய்ச்சியாளர்களிடையே அடிப்படை பார்வை மாற்றத்திற்கான ஆரம்ப அதிர்வினை
ஏற்படுத்தியது. ஏற்கனவே சிறு ஆராய்ச்சியாளர் குழுக்களில் மட்டுமாக பேசப்பட்டு வந்த மற்றொரு போக்கு மெதுவாக ஆனால் உறுதியாக 1990களில் மேலெழ ஆரம்பித்தது.
ஸ்காட் கெல்ஸோஅதாவது புலன்கள் மூலமாக பெறப்படும் உள்ளீடு நரம்புகள் மூலமாக கடத்தப்பட்டு தலைமை கேந்திரத்தில் பதியப்பட்டும் பதப்படுத்தப்பட்டும் (processed). பின்னர் செய்கை வெளியீடுகள்
மீண்டும் நரம்பு மண்டலம் மூலமாக தசைகளுக்கும் உடலின் அவயங்களுக்கும் வரும். இப்பார்வையில் இருக்கும் 'கணினி மாதிரித்தன்மை' மாற ஆரம்பித்தது. மாறாக உள்ளீடு பெறுதலும் சரி வெளிப்படும் செய்கைகளும் சரி, நரம்புகளுள் அலையாக பரவி பரிணமிக்கும் மற்றோர் பார்வை வளர ஆரம்பித்தது. இத்தகைய பார்வை மாற்றங்களும் மற்றும் அத்துடன் இணைந்த ஆராய்ச்சி பாதை மாற்றங்களும் உருவாவது என்பது எளிதான காரியமல்ல. அதுவும் மூளையின் 'கணினி மாதிரி' ஒரு வெற்றிகர அறிவியல் பார்வையாக அறியப்பட்டிருந்த நேரத்தில் முழுக்க முழுக்க மற்றொரு பார்வை மாற்றம் ஏற்படுவது என்பது எளிதானதல்ல. நரம்புகள் மூலமாக மின்-துடிப்புகளில் சமிக்ஞைகள் செல்வதென்னவோ உண்மைதான். ஆனால் அந்த 'சமிக்ஞைகள்' கடத்தப்படும் மின்-துடிப்பில் எங்கு அடங்கியுள்ளன?
மின்-துடிப்பின் ஆற்றலில்? மேலெழும் மின்-துடிப்பின் உயரத்தில்? நொடிக்கு எத்தனை மின்-துடிப்புகள் எழுகின்றன என்பதன் அடிப்படையில்? மூளைக்கு கொண்டு செல்லப்படும்
செய்தியும் அதிலிருந்து கிடைக்கும் பதில்களும் - ஒரு நியூரானின் மின்-துடிப்பு செயல்பாட்டில் எங்கு ஒளிந்திருக்கிறது? தெளிவான விடை. இன்னமும் கிடைத்திடாத கேள்வி இது.
ஒரு தெளிந்த நீர்நிலையை கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்நீர்நிலையின் பரப்பில் சிறு கல் ஒன்றை எறியுங்கள். வட்டக் கோலங்களாக அலைகள் பரவுகின்றன. பின் அவை
கரைகளை அடைந்து எதிராக பரவுகின்றன. இப்போது பல கல்கள் அந்த நீர்நிலையில் விழுகின்றன. இவை அனைத்தும் நீரலைகளில் சிக்கலான கோலங்களை உருவாக்குகின்றன.
இந்நீர்நிலையின் நீர் இந்தக்கோலங்களை நினைவில் கொள்ளும் தன்மை கொண்டதாகவும் இருக்கிறதென வைத்துக்கொள்ளுங்கள். இத்தகையதோர் இயக்க அமைப்பாகத்தான்
மூளையின் செயலாக்கத்தை அறிந்திட சில மூளை ஆராய்ச்சியாளர்கள் முயல்கின்றனர். இவர்கள் இயக்கவாதிகள் (dynamicists) என்றழைக்கப்படுகின்றனர். பொதுவாக
நரம்பியலாளர்களுக்கு இவர்களது கணிதம் சார்ந்த (குறிப்பாக chaos) அணுகுமுறை சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.
ஆனால் மூளையின் செயல்பாடு 'கீழேயிருந்து' உள்ளீடுகளை பெற்று 'மேலே' கொடுத்து, மூளையின் 'உயர் கேந்திரங்களில்' அவை பகுப்பாயப்பட்டு பின்னர் மீண்டும் அங்கிருந்து இயக்க
எதிர்வினைகளுக்கான உத்தரவுகளை 'கீழே' கொண்டு செல்லும் என்கிறபழைய மூளை செயல்பாட்டு பார்வை கடந்த பத்தாண்டுகளாக மாற ஆரம்பித்துள்ளது. பல தளங்களில்
பரிணமித்து பரவும் செயல்பாடாக மூளையின் இயக்கத்தினை காட்டும் ஆராய்ச்சி தாள்கள் வெளியாகியுள்ளன.
டேவிட் லியோபோல்ட்நிக்கோஸ் லோகோதெடிஸ்அத்தகைய ஆராய்ச்சிகளில் ஒன்று டேவிட் லியோபோல்ட் (Leopold) மற்றும் நிக்கோஸ் லோகோதெடிஸ் (Logothetis) ஆகியோரது. 1996 இன் நேச்சர் இதழில் அவர்களது
ஆய்வுகளின் முடிவொன்று வெளிவந்திருந்தது. ஸ்டீரியோஸ்கோப் மூலம் குரங்குகளுக்கு ஒவ்வொரு கண்ணுக்கும் வெவ்வேறு பிம்பங்கள் காட்டப்பட்டன. இத்தகைய முரண் சூழலில்
பார்வை ஒரு பிம்பத்தினை முழுமையாக தவிர்த்து மற்றதை மட்டும் முழுமையாக உள்வாங்கிக் கொள்ளும். ஆக, இச்சோதனைக்கு ஆளாக்கப்படும் குரங்கு ஒரு பிம்பத்தை மட்டுமே நனவுணர்வில் நன்கு உணரும். மூளை குறித்த பழைய பார்வையில் இந்த ஒரு பிம்ப தேர்வினை நடத்திடும் வேலையை நரம்புகள் அளிக்கும் புலன் உள்ளீட்டினை நேரடியாக பெறும் கார்ட்டெக்ஸ் பகுதியின் செல்கள் செய்வதில்லை. அவை எல்லாம் மூளையின் 'உயர்' பகுதிகளில் நடக்கிற விஷயமாகும். ஆனால் லியோபோல்ட் & லோகோதெடிஸ் அறிந்ததென்னவென்றால் கார்ட்டெக்ஸ் பகுதியிலேயே நரம்புகளின் மின்னோட்டப் பாய்ச்சலில் ஐந்தில் ஒரு பங்கு குரங்கு எந்த பிம்பத்தைத் தேர்ந்தெடுத்துள்ளதோ அதனைப் பொறுத்து அமைகிறது என்பதாகும். ஆதாவது 'கீழ்'நிலையிலேயே தேர்வு பரிணமிக்க ஆரம்பித்துவிட்டது.
இக்கண்டுபிடிப்புகள் பரிணமித்து முகிழ்த்தெழும் செயலிக்க அடிப்படையில் ஒரு உயிரின் அறிதலும் நடத்தையும் அமைவதையும் மூளையின் இயக்கம் கணித்தியங்குவதைக் காட்டிலும் முகிழ்ச்சியின் (emergence) அடிப்படையில் அமைவதையும் உறுதிப்படுத்துவதை உற்சாகத்துடன் சுட்டிக்காட்டுகிறார் கெல்ஸோ.
மிக மிக அடிப்படை பார்வையில் மூளையினை ஆராயும் அனைத்து கோட்பாடுகளையும் இருவகையாக பிரிக்க முடியும் என்கிறார் கெல்ஸோ. இப்பார்வையில் மூளை முழுவதும்
ஒருங்கிணைந்து ஒரு கருவியாக செயல்படுவதாகக் காணலாம் அல்லது மூளையின் ஒவ்வோர் பகுதியும் மிகுந்த தனித்தன்மையுடன் ஒவ்வொரு செயலுக்குமென பிரிக்கப்பட்டு
இயங்குவதாகவும் காணலாம். 'அதுவா இதுவா' எனில் இரண்டுமே உண்மை என நெய்ல்ஸ் போர் பிறிதொரு தருணத்தில் கூறியது போல கூறுவது எளிதுதான். ஆனால்
இக்கோணத்தில், மூளையின் இயக்கத்தை அறிய பயன்படுத்துகையில் புதிய பார்வை தேவைப்படுகிறது.
எந்த ஒரு குறிப்பிட்ட புலனுணர்வும் மூளையின் வெவ்வேறு இடங்களில் உள்ள பல தனித்தனி நியூரானிய பாதைகளின் ஒத்திசைவினை பொறுத்தே முழுமையான புலன்-உள்ளீடாகப் பெறப்படுகிறது. மூளையின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு அதிர்வெண்களில் ஏற்படும் அதிர்வியக்கங்களை (oscillations) ஒத்திசைவடையச் செய்வதில் நியூரானிய மின்னதிர்வுகளுக்கு பங்கிருக்கலாம். உதாரணமாக, ஒரே சாய்மானமுள்ள ஒளி பிம்பங்கள் ஒரே திசையில் நகர வைப்பதை காணும் பூனைகளின் மூளைகளில் வெவ்வேறு பகுதிகளில் - ஏன் இரண்டு மூளைக்கோளங்களில் உள்ள இருவேறு ஒற்றை நியூரான்களில் கூட- 40 ஹெர்ட்ஸ் எனப்படும் காமா அதிர்வுவரிசை (Gama frequency) அதிர்வுகள் கண்டறியப்பட்டுள்ளன. இம்மின்னதிர்வுகளின் பலமானது நியூரான்களிடையே உமிழப்படும் வேதிப்பொருட்களுடன் தொடர்புடையது. (இந்த நியூரான்களிடையே உமிழப்படும் வேதிப்பொருட்களில் ஒரே ஒரு
மூலக்கூறின் முக்கியத்துவத்தை மட்டும் ஒரு உதாரணமாக நாம் பின்னர் காண இருக்கிறோம்.) இவ்வேதிப்பொருட்களோ பல உயிர்வேதி-வலையமைப்புகளூடாக (Bio-chemical webs) உருவாக்கப்படுவன. இவையும் தன்னியக்கத்தால் கட்டுப்படும் feedback தன்மை கொண்டவை. ஆக ஒத்த இயக்கத்தன்மை கொண்ட பலதள செயல்பாடுகளும் மூளையில் இயங்குகின்றன.
கெல்ஸோ அடுத்ததாகச் சுட்டிக்காட்டும் மற்றோர் பார்வை கோணம் - அதி-ஸ்திரத்தன்மை (metastability). மூளையின் பகுதிகள் தனித்தியங்கும் சுதந்திரத்தன்மையையும் அதற்கு
நேர்மாறானதெனக் கருதத்தக்க ஒருங்கிணைந்தியங்கும் தன்மையையும் வெளிப்படுத்துவதை இவ்வாறு அவர் குறிப்பிடுகிறார். மூளையின் மூலமான அறிதல் எப்போது முகிழ்கிறதென்றால், இந்த ஸ்திரத்தன்மையும், நெகிழ்வுத்தன்மையும் இணைந்த அதி-ஸ்திரத்தன்மையில் உருவான அமைவாக(system) மூளை இயங்குவதால்தான் என்கிறார் கெல்ஸோ. இத்தகைய எதிர்-எதிர் தன்மைகளின் இயக்க ஒற்றுமையினை பிரபஞ்சத்தின் அடிப்படையாக காணும் தன்மை, பாரத மற்றும் சீன ஞான மரபுகளில் (உதாரணமாக யின்-யாங், சிவ-சக்தி) அடிப்படையான போக்காகும். ஒத்திசைவுக்கான சமன்பாடு மூன்று குணாம்சங்களைக் கொண்டதாகும்.
- அமைவில் ஒன்றோடொன்று உறவாடும் பாகங்களிடையேயான பன்மை நிலை (heterogeneity between the interacting components),
- பாகங்களிடையேயான இணைப்புத்தன்மையில் உள்-வெளி தாக்கங்களின் ஆற்றல் மற்றும்
- புல அதிர்வாடல்கள் (noise or fluctuations).
இது Haken-Kelso-Bunz (HKB) மாடல் மாதிரி என அழைக்கப்படுகிறது. இயற்பியலாளர் ஹெர்மன் கேகன் என்பவரால் 20 வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட முயற்சிகளின்
கனியே இது. முதன்முதலில் இயற்பியலின் அடிப்படையில், வெளிப்படையாக தோன்றும் வேறுபாடுகளின் அடிப்படை இசைவு குறித்து விளக்கிட தாவோவின் யின்-யாங்கினை
பயன்படுத்தியவர் நெயில்ஸ் போர். பரவலாக இதனை அறிவியல் உலகிலும் அறிவுலக பிரக்ஞையிலும் பிரபலப்படுத்தியவர் ப்ரிட்ஜாப் கேப்ரா. என்றாலும் மேற்கத்திய தத்துவமரபில்
அத்தனை (பிளேட்டோ அரிஸ்டாட்டில் அளவு) பேசப்படாத ஹிராக்கிளீட்டஸின் சிந்தனை வீச்சுகளில் இப்பார்வை இருக்கிறது என்பதனைச் சுட்டிக்காட்டுகிறார் கெல்ஸோ. இத்தகைய
கோணத்தில் அணுகப்படும் போது முன்னால் கவனிக்கத்தவறிய அல்லது புறக்கணிக்கப்பட்ட சில முடிச்சுகள் கட்டவிழ்வதை மூளை ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஹிராக்கிளீட்டஸ்
உதாரணமாக விரலை அசைப்பது போன்ற ஒரு செயலை செய்யும் போது மூளையின் இயக்கத்தை அறிந்திடும் ஸ்கேனர் ஆராய்ச்சிகளை எடுத்துக்கொள்ளலாம். இந்த ஸ்கேனர்கள்
முக்கியமாக மூளையில் அதிக இயக்கம் காணப்படும் அல்லது நியூரானிய இயக்கம் 'சூடு பிடிக்கும்', இரத்த ஓட்டம் அதிகரிக்கும் பகுதிகளை கண்டறியப்பயன்படும். பழைய 'கணினி
மாதிரி' பார்வையில், அத்தகைய பகுதிகளிலிருந்து அந்த உடல் செயலுக்கான 'கட்டளை' வருவதாக கொள்ளப்படும். ஆனால் முகிழ்த்து பரிணமிக்கும் செயலியக்கமாக மூளையின்
செயல்பாடு காணப்படும் போது வெறுமனே 'சூடு பிடிக்கும்' மூளைப்பகுதிகளைக் காட்டிலும் எத்தகைய இணை இயக்கங்கள் பரவலாக மூளையில் காணப்படுகின்றன என்பதனை
அறிவதில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபடுகின்றனர்.
பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவர் சிறு கை அசைவுகளைச் செய்யும் போது மூளையின் முன்பகுதியில் (prefrontal cortex) அதீத செயலியக்கம் காணப்படும் அதே நேரத்தில்
மூளையின் பின்பகுதியில் (parietal cortex) செயலியக்கம் குறைகிறது. இந்த இரு இயக்க மாறுதல்களும் எப்போதும் குறிப்பிட்ட உடலியக்கத்துடன் உடனியைந்து காணப்படுகின்றன.
பொதுவாக இத்தகைய பரிசோதனைகளில் இந்த இயக்க இசைவு கவனிக்கப்படாது போயிருக்கும் என்பதனை சுட்டிக்காட்டுகிறார் ஆராய்ச்சியாளர் கார்ல் ஃபெரிஸ்டன். மேலும் 1/20 நொடி நேரமெடுத்து இந்த இயக்க இசைவு ஏற்படுவது இந்த இயக்க இசைவு பரிணமிக்கும் ஒரு நிகழ்வு என்பதனை காட்டுவதாக கூறுகிறார் ஃபெரிஸ்டன். ஆக, செயலாக்கம் மட்டுமல்ல செயலின்மையும் இணைந்து பரிணமிப்பதாக மூளையின் இயக்கத்தினை காண்கிறோம் இப்போது.
பாகம்-2
டோ பமைன் (Dopamine)நார்எபிநெஃப்ரைன் (Norepinephrine) மற்றும் டோ பமைன் (Dopamine) ஆகியவை நியூரானிய அளவில் இயங்கும் போது அவை பொதுவான இயக்க அதிகரிப்புக்கான மூலக்கூறு
கடத்திகள். அதுபோலவே நியூரானிய அளவில் செயலின்மையின் மூலக்கூறு கடத்திகளில் ஒன்று Gamma aminobutyric acid என்கிற காபா (GABA).
Gamma aminobutyric acid என்கிற காபா (GABA)(வேற காபாவை நினைச்சுகிட்டு இவ்வளவு நேரம் படிச்சவங்க மன்னிச்சுக்குங்க) புலன்களின் உள்ளீடுகள் நம்மை தாக்குகையில் நியூரான்கள் தொடர்ச்சியாக மூலக்கூறுகளை உமிழ்ந்தபடி இருப்பவை. ஆனால் இந்த புலன்களின் தாக்கங்களை நம் நரம்புமண்டல செயலியக்கம் முழுமையாக அனுமதிப்பதில்லை. இல்லையெனில் நம் மூளை தொடர்ந்து அதீத இயக்க நிலையில் செயல்பட்டு நிலையழியும். அனைத்து புலன் உள்ளீடுகளுக்கும் ஒரே அளவில் செயல்படாமல் செயலியக்கத்தினைக் குறைப்பதில் காபாவின் பங்கு முக்கியமானது. இந்த காபா எனும் காமா அமினோ ப்யூட்ரிக் அமிலம், க்ளூடாமேட் (Glutamate) எனும் செயலியக்கத்தை அதிகரிக்கும் வேதிப்பொருளிலிருந்து உருவாக்கப்படுவது. இது பரிணாமத்தின் மற்றொரு அழகிய புன்னகையாகும். அல்லது மற்றொரு யின்-யாங்!
மூலக்கூறுகளை உமிழும் நியூரான் சந்திப்புக்கள்காபா மூலக்கூறுகளை உமிழும் நியூரான்கள் மொத்த நியூரான்களில் 40 விழுக்காடு என்கின்றனர் பல ஆராய்ச்சியாளர்கள். நியூரானிய சந்திப்புக்களில் (synapses) 1/3 சந்திப்புக்கள், காபா மூலக்கூறுகளை உமிழும் தன்மைத்தவை என சிலர் கணக்கிடுகின்றனர். பொதுவாக மனிதனுடனான மற்ற விலங்குகளிலும் வன்மைத்தன்மையான (aggressive) நடத்தையை கட்டுப்படுத்துதலில் காபா உமிழ் நியூரானிய சர்க்யூட்டுக்கள் முக்கிய இடத்தினைப் பெறுகின்றன. எலிகளில் நியூரானியக் குழுமங்களைக் கட்டுப்படுத்தும் நரம்பு மையங்களில் (nerve centers) டோ பாமைன் நேரடியாக ஊசியேற்றப்படுகையில் எலிகளில் அதீத சுறுசுறுப்பான இயக்கம் உருவாகும். அதுவே காபா கொடுக்கப்படுகையில் மட்டுப்படுகிறது. அதீத இயக்கத்தை மட்டுப்படுத்துவதில் மட்டுமின்றி அச்ச உணர்வினை நீக்குவதிலும் காபா பயன்படுகிறது. தாயற்ற குரங்குகளின் அடிப்படை அச்ச உணர்வுகளை நீக்குவதில் காபாவினைச் சுரக்க வைக்கும் வேதிமருந்துகள் பயன்படுகின்றன. குரங்கின உறுப்பினர்களாகிய மனித இனத்தின் நாகரிக அச்ச உணர்வுகளை தணிவிப்பதிலும் காபாவினைச் சுரக்க வைக்கும் வேதிப்பொருட்கள் பயன்படுகின்றன.
மூளையில் காபா-உயிர் வேதி வலைபேசல் காங்கிலியா (Basal Ganglia) எனப்படும் செல் தொகுதிகள் தலாமஸின் இருமருங்கும் உள்ளன. இந்த செல் தொகுதிகளின் வேதி-கட்டமைவு டோ பாமைன்-காபா
அமைவாகும். அவை காலம் குறித்த நமது உணர்தலில் பெரும் பங்கு வகிக்கின்றன. டோ பாமைன் குறைந்து காபா அதிகமாகிற போது காலம் குறித்த உணர்தல் உறைநிலை
அடைகிறது. இத்தனை மன இயக்கங்களிலும் முக்கிய மூலக்கூறாக செயலாற்றும் காபா, அகப்பயிற்சிகளின் போது முக்கிய பங்குவ கிக்கும் என்பது தெளிவு.
ஸென் பௌத்தத்தில் கென்ஷோ என்பதை சாசுவதமான இரண்டற்ற தன்மையின் கணநேர தரிசனவீச்சு எனலாம். இது விழிப்பு நிலையில் ஏற்படுவது. புற உலகுடன் ஏற்படும் ஒருமை
நிலை. நொடிகளுக்கு மட்டுமே நீடிப்பதும் நினைவுகளில் இனிமையாக உறைவதுமான அனுபவம். பிரக்ஞையின் சாத்தியக்கூறுகளில் மாறுபட்ட நிலையொன்றின் இருப்பினைக் காட்டி மறையும் அனுபவம் கென்ஷோ (Kensho). கென்ஷோவின் போது மூளையின் இயங்கு நிலையில் மூளையின் உள்ளுணர்வு நிலைகள் அதி உச்சத்தை தொடுகின்றன. அதே நேரத்தில் 'நான்-எனது' (I-Me-Mine என்பார்களே) எனும் அகங்கார மன அமைப்புத் திரை விலகுகிறது. தானற்ற இந்நிலை அச்சத்தினை இழக்கிறது. இந்நிலையில் புற உலகு தன்னில் நீங்காத ஒருமையின் நீட்சியாக உணரப்படுகிறது. இது எவ்வாறு நிகழ்கிறது?
மதுரை சொக்கப்ப நாயக்கன் தெரு 11-ம் எண் வீட்டில் 1896 ம் ஆண்டு வேங்கட ராமன் என்ற சிறுவன் இத்தகையதோர் 'மரண' நிலையை அனுபவித்ததும், பின்னர் தொடர்ந்து
அகப்பயிற்சிகள் மூலம் என்றென்றும் சாசுவதமான சுயானந்த நிலையில் நிலைத்து பகவான் ரமண மகரிஷியாக பரிணமித்ததும் நமக்கு நினைவிருக்கலாம். அகப்பயிற்சிகள் தொடர்ந்து
மேற்கொள்ளப்பட்டு வருகையில் காபாவினால் ஏற்படும் அதே அடங்குத்தன்மை கொண்ட மாற்றங்கள் ஏற்படுவது பல ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. அதீத
உட்கவனத்துடன் விளங்கும் அகப்பயிற்சிகளில் வேறு சில உள்ளீடுகளை காபா அடைத்துவிடுகிறது. உடலிலிருந்து கிடைக்கும் புலன் உள்ளீடுகள் நின்றுவிடுகின்றன. பரீட்டல் லோப் எனும் மூளையின் சிலபகுதிகளுக்கு புலனுணர்வுகள் செல்லுவதில்லை. 'நானாக' விளங்கிய புலனுணர்வு உள்ளீடுகள் அற்றுப்போகின்றன. இந்நிலையில் நனவுணர்வுடன் இருப்பவரின் நான் எவ்வாறு இருக்கும்?
முப்பரிமாண வெளியில் நானிருப்பு அற்றுப்போகும். அதே நேரத்தில் பொதுவான புலனுணர்வுகள் மற்றோர் ('கீழ்') தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும். ஆக, இந்த அனுபவ நிலையில் இருப்பவர், நம்மில் அசாதரணமான அகநிலையில் இருந்தாலும், சாதாரணமாக இயங்கிட முடியும். இந்நிலையின் கணத்துளியே கென்ஷோவிலும் செயல்படுகிறது எனலாம். தலாமஸ் எனும் பகுதி புறப்புல உணர்வுகளிலிருந்து சுயத்தினை - நம் நனவுலக இயங்குதலின் 'நான்'- உருவாக்குவதில் முக்கியபங்கு வகிக்கிறது. 1500 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் பரிணமித்த லிம்பிக் அமைவின் ஒரு பகுதியே தலாமஸ் ஆகும். லிம்பிக் அமைவின் பிற பகுதிகள், ஹைப்போ தலாமஸ், அமைக்தாலா, ப்ட்யூட்டரி சுரப்பி மற்றும் கைப்போகாம்பஸ் என்பவை ஆகும்.* ஆக தலாமஸின் உள்ளீடுகளினை காபா தடை செய்துவிடுகிறது. முப்பரிமாண வெளியில் இயங்கும் 'நான்' ஒருவிதத்தில் தற்காலிக மரணமடைகிறது என்று கூட கூறலாம். கூடவே 'இந்த நானு'டனான மன உருவாக்கங்கள் உதிர்கின்றன. விருப்பு வெறுப்புகள் அகல்கின்றன. இந்த நான் அற்ற நிலையில் புற உலகின் அனுபவம் இங்கு கிடைக்கிறது.** ஆனால் இவை சில நிமிடங்களே நிலைத்துள்ளன. ஸென் சாதகனைப் பொறுத்தவரையில் கென்ஷோ ஒரு வீச்சு. போலித்திரை அகன்று ஒளிவீசும் சுயத்தின் முகம் கண்ட பொன் தருணம். அதன் பின்னும் நீளும் அகப்பயிற்சிகள்.
கென்ஷோ - சதோரி, பகவான் ரமணரின் மரண அனுபவம், அவற்றின் நரம்பியக்க இணைகள் நாம் கண்டோ ம். எனில் ஆன்மிக அனுபவங்கள் என்பவை மூலக்கூறுகள் நடத்தும் நடனத்தின் விளைவுதானா? காரிய-காரணங்களின் நேர் கோட்டு அம்புகளுக்கு அப்பாலான இயக்கமே மூளையில் நடைபெறும் இயக்கங்கள். எவ்வாறு ஒரு குறிப்பிட்ட பிம்பத்தினை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு மூளையின் 'உயர்' பகுதிகளிலன்றி 'கீழ்' நிலை நியூரானிய இயக்கங்களிலேயே தொடங்குகிறது என்பதனை முன்பு கண்டோ ம். அகப்பயிற்சிகளிலும் இதே வித இயக்கச் செயல்பாடுகள் இருக்குமெனில் எங்கு தொடக்கம் எங்கு முடிவென கணித்திடலில் எவ்வித பொருள் இருக்கக்கூடும்? காபாவின் சுரப்பும், க்ளூடாமேட் உற்பத்தியும் தொடங்கிட அல்லது நின்றிட மூளையின் 'உயர் கேந்திரத்திலிருந்து' கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன என பழைய 'தலைமை செயலக' பார்வை கூறிடும். ஆனால், உடலெங்குமாக பரவிப் பரிணமித்து முகிழ்த்தெழுந்து முடிவில் ஆயிரமாயிரம் இதழ்கள் கொண்ட தாமரையாக மலர்ந்திடும் அனுபவத்தின் நரம்பியக்கம் இன்னமும் பல்லாயிரம் இயங்கியல் மர்மங்களை தம்முள் கொண்டுள்ளது.
இன்று ஆன்மிக அனுபவங்கள் அதற்கான தேடல்கள் அவற்றின் அக-புற உண்மைத்தன்மைகளை அறிதல் இத்தகைய அனுபவங்களின் நரம்பியல் மற்றும் பரிணாம காரணிகளை தேடுதல் ஆகியவை இணைந்து உருவாகியுள்ள புதிய புலம் Neurotheology-நியூரானிய இறையியல். தியான அனுபவங்களின் போது காபா உமிழும் நியூரானிய பகுதிகளின் ஒத்திசைவு இயக்கங்கள் (குறிப்பாக பேசல் காங்கிளியா) ஆராயப்படுவது, அக அனுபவங்களின் நியூரானிய-இணைகளை மேலும் அறிந்திட வழிவகுக்கும்.
குறிப்புகள்:
- * (தலாமஸில் காபாவின் இயக்கநிலை என்பதற்கு ஒரு பரிணாம பின்புலமும் உள்ளது. பொதுவாக பாலூட்டிகளில் காபா செயல்பாடு பாலூட்டிகளல்லாத விலங்குகளைக் காட்டிலும்
இருமடங்கு அதிகமாக உள்ளது.)
- **சுவாரசியமான விஷயமென்னவென்றால் இறைதூது அடிப்படையிலான அனுபவங்கள் - உதாரணமாக அச்சமூட்டும்படியாக கபிரியேல் போன்ற இறைதூதனின் இருப்பினை உணர்வது போன்றவை- பரிசோதனை சாலைகளில் மீள்-உருவாக்கப்பட்ட போது (உ-ம்: பெர்சிங்கர் பரிசோதனைகள்) இதே லிம்பிக் அமைவின் (Limbic system) ஒரு பகுதியான அமைக்தாலாவே இயக்க உச்சம் அடைந்ததென்பது கவனிக்கத்தக்கது. இந்திய-சீனவியலாளரும் அரசியல் விமர்சகருமான கொயன்ராட் எல்ஸ்ட்,இது குறித்து (வஹீ எனும் இறையாவேச நிலையின் நரம்பியல் காரணிகள் குறித்து) எழுதிய கட்டுரை நேசகுமாரால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
(பார்க்க: http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=nesakumar1&taid=1)
- இருவித சமய அனுபவங்களில் (தியான-யோக பயிற்சிகள் சார்ந்த அக-இறை அனுபவங்கள்: inner spiritual experiences , இறைதூது சமயங்களின் தீர்க்கதரிசிகளின் புற-இறை வெளிப்பாடுகள்:prophetic revelations) நேரெதிர் அமைவுகளின் முகிழ்வெழுச்சி மூலக்கூற்றளவிலான இயக்கங்களிலிருந்தே மேலெழும்புகின்றன. ஆழமான நரம்பியல் ஆராய்ச்சிகளின் மூலம் இறை அனுபவங்கள் பகுத்தாயப்படுவது விரிவான அளவில் வரும் நாள்களில் சாத்தியமாகலாம்.
- இன்று மிகவும் பரவலாக அறியப்படும் மன-இலகுவாக்கும் யோகா பயிற்சி முறைகளில் ஒன்று ஆழ்நிலை தியானம். இதனை பயில்பவர்களின் ப்ட்யூட்டரி ஹார்மோன் சுரப்பு மாற்றங்கள் காபாவினால் ஏற்படலாம் என்கிறது 2000 இல் வெளியான ஒரு ஆய்வுத்தாள்: (Elias AN, Guich S, Wilson AF., Ketosis with enhanced GABAergic tone promotes physiological changes in transcendental meditation. http://www.ncbi.nlm.nih.gov/entrez/query.fcgi?cmd=Retrieve&db=PubMed&list_uids=10859661&dopt=Abstract)
- தலாமஸில் காபாவின் செயல்பாட்டின் பரிணாமத்தன்மை குறித்த ஒரு ஆய்வுத்தாள்: http://www.cerebromente.org.br/n15/mente/evolution_intelligence.html
இக்கட்டுரை குறித்து: இக்கட்டுரை இரு வெவ்வேறு திசைகளில் உள்ள ஆராய்ச்சி பார்வைகளை உள்ளடக்கியது. ஒன்று நேர்கோட்டுத் தன்மையற்ற இயங்கியல் மூலம் மூளையின் இயக்கத்தினை ராய்வது.
மற்றொன்று உன்னத அனுபவங்களில் ஒரு சில நரம்புகளிடையே இயங்கும் மூலக்கூறுகளின் முக்கியத்துவத்தை காண்பது. முந்தையது பெரும்பாலும் ஸ்காட் கெல்ஸோவின்
ஆராய்ச்சியினை அடிப்படையாகக் கொண்டது. இக்கட்டுரையின் இப்பகுதியை எழுத தூண்டியது ஜான் மக்ரோனின் 'Wild minds' எனும் கட்டுரையாகும். 13-டிசம்பர் 1997 New
Scientistஒ இல் வெளியான இக்கட்டுரையின் அடிப்படையிலேயே 'காபா:...' கட்டுரையின் முற்பகுதி பெருமளவு அமைக்கப்பட்டுள்ளது.
பிற்பகுதி கொலராடோ பல்கலைக்கழகத்தின் நியூராலஜி பேராசிரியர் ஜேம்ஸ் ஆஸ்டின் எனும் ஸென் சாதகரின் ஆராய்ச்சியினை அடிப்படையாகக் கொண்டது. இந்த இரண்டிலும்
பொது அம்சம் எதுவெனில், இயக்கவியல் தொடர்புகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கும். இத்தகையதோர் முன்னேற்றத்தினை கிரிகாரி பேட்ஸன் முன்னறிவித்திருந்தார் என்றே
தோன்றுகிறது. குறிப்பாக கேப்ராவுடனான அவரது உரையாடல்களில். ('Uncommon Wisdom' (ப்ளமிங்கோ,1988) பக்.86-87.) கேப்ரா பின்னாட்களில் எழுதிய 'Web of life' இல்
கெல்ஸோவின் பார்வையுடன் பெருமளவு இணக்கமுடைய வரேலா மற்றும் மத்துரானாவின் பிரக்ஞை குறித்த பார்வைகளை விளக்குகிறார். ப்ரிகோகைனின் சுயமுகிழ்த்தெழும் தன்மை
கொண்ட அமைவுகள் என்பதும் இத்துடன் தொடர்புடையதே ஆகும். ஜேம்ஸ் ஆஸ்டினின் 'Zen and Brain' MITயால் வெளியிடப்பட்டதாகும் (1998). காபா மற்றும் கென்ஷோ குறித்து பக்.208-210 மற்றும் பக்.610 இல் காணவும். (தன்னுணர்வு/ப்ரக்ஞை) நிலைகள் மொட்டவிழும் இயல்பு கொண்டவையாகவும் மன-உடலியக்கவியல்கள் பரிணாமமடைவதாகவும் கூறுகிறார் ஆஸ்டின்.(பக்.450) இக்கட்டுரையில் காபா குறித்து கூறப்பட்டுள்ளவை அனைத்தும் இந்நூலின் அடிப்படையில் அமைந்தவையே ஆகும்.
- ஸ்காட் கெல்ஸோ, The Complementary Nature of Coordination Dynamics: Self-organization and Agency, Nonlinear Phenomena in Complex Systems (2002).
- ஸ்காட் கெல்ஸோ, "The Complementary Nature of Coordination Dynamics: Toward a Science of the In-Between", (In R.R. McDaniel & D.J. Driebe (Eds.) Uncertainty
and Surprise in Complex Systems. Berlin, Heidelberg. Springer (2005))
- நேரெதிர் கூறுகளின் ஒருங்கிணைந்த தன்மை குறித்த கெல்ஸோவின் இணையதளம்: www.thecomplementarynature.com.