அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
சிவசிவா குருவுக்கும் குரு பண்டாரத்திற்கும்
முறையோம் முறையோம் முறையோம் முறையோம்
சிவசிவா ஆண்டிக்கும் ஆண்டிச்சிக்கும்
முறையோம் முறையோம் முறையோம் முறையோம்
ஐயா வைகுண்டர் இயக்கம் குறித்து வழக்கம் போல திரு என்கிற ஆசாமி பொய்களையும் அரைகுறை தகவல்களைக் கொண்டு ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். எனவே உண்மைகளை விளக்க எனது பல முந்தைய கட்டுரைகளைத் தொகுத்து இங்கே அளித்துள்ளேன். அவசரமாக வெளியூர் போக வேண்டியிருப்பதால் ஒரு முழுக்கட்டுரையாக எழுத முடியவில்லை. இவை பல்வேறு சமயங்களில் கற்பக விநாயகத்தின் பொய்களை வெளிப்படுத்த எழுதப்பட்டவை திண்ணையில். முடிந்தவரை கோர்வையாக்கி உள்ளேன். எதுவானாலும் ஊருக்கு போய்விட்டு வந்து முழுமையாக -2000க்கு பின்னர் ஐயாவின் பதிகள் கிறிஸ்தவ வெறியரால் தாக்கப்பட்டது வரை- ஒரு பதிவினை போடுகிறேன்.
ஐயா வைகுண்டர் முத்துக்குட்டி சுவாமியின் சூடப்பட்ட பெயர் முடிசூடும் பெருமாள். அரசதன்மை கொண்ட பெயர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் வைக்ககூடாதென எதிர்ப்பு எழுந்தது. அந்நேரத்தில் வேற்று சாதியில் பிறந்தும், அரசனுக்கு அணுக்கராக இருந்தும், தமதுயிரையும் பொருட்படுத்தாமல் ஐயா வைகுண்டர் பக்கம் நின்று தோள் கொடுத்த பூவண்டரின் கருத்தியல் எதன் அடிப்படையில் எழுந்தது ? பாகவத கிருஷ்ணனின் ஒளி பாய்ந்த கருத்தியல் அல்லவா அது ? ஐயா வைகுண்டர் அரசனையும் மேல்சாதிக் கொடுமையாளரையும் குறிப்பிட பயன்படுத்தும் வார்த்தை கலிநீசன் என்பது மிசிநரிகளை வெண்நீசன் என்கிறார். மட்டுமல்ல வெளிப்படையாகவே 'ஒரு வேதம் தொப்பி உலகமெல்லாம் போடு என்பான் ' 'மற்றொரு வேதம் சிலுவை வையமெல்லாம் போடு என்பான் ' எனக்கூறி அவர்கள் வீண்வேதம் என்கிறார். அவரது கருத்துகளில் அத்வைத ஒளியும் சமுதாயப்புரட்சி கனலும் உள்ளது. ஐயா வைகுண்டர் காணிக்கை வேண்டாம் என்று சொன்னாராம் அதனால் அவர் இந்து மதத்தவர் அல்லவாம். ஆனால் இதே திரு இன்னொரு இடத்தில் கூறுகிறார் மாடனுக்கு கோழி பலியிடுவதை நீக்கி இந்துத்வ படுத்துகிறார்களாம். என்றால் ஐயா வைகுண்டர் கூறுகிறாரே:
'ஆடுகிடாய் கோழிபன்றி ஆயனுக்கு வேண்டாம்
கொட்டு மேளம் குரவைத்தொனி ஈசனுக்கு வேண்டாம்
அன்பு மனமுடன் அனுதினமும் பூசை செய் '
என்று
உளத்தூய்மையுடன் ஒரு பூவோ இலையோ எனக்கு சமர்ப்பித்தால் போதும் எனக் கூறிய குருசேத்திர ஆயனின் குரல் அல்லவா இது. இதனை படிப்பவர்கள் சிந்திக்க வேண்டும். ஐயா வைகுண்டர் தென்னகத்தில் ஒரு மூலையில் ஒடுக்கப்பட்ட சாதியில் தோன்றினார். ஆனால் அவரது திருவாயிலிருந்து வெளியான ஒவ்வோர் திருவாக்கும் வேதமும் வேதத்தின் அந்தமும் பகவத் கீதையும் திருமந்திரமும் கூறியவற்றின் சாரத்தை எளிய மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தது. இது எவ்வாறு ?என்பது குறித்து இன்றும் எனக்கு வியப்புதான். இது குறித்து ஒரு நீண்ட கட்டுரை எழுத வேணும். நேரம் வாய்க்கும் போது பார்க்கலாம். ஒரு சின்ன எடுத்துக்காட்டு மட்டும் இப்போது.
உதாரணமாக கீழ்காணும் வேத வாக்கியம் நம் அனைவருக்கும் தெரிந்ததுதான்:'சத்தியம் ஒன்றே அதனை ஞானிகள் பலவாறு அழைக்கின்றனர் ' அவ்வாறே பகவத் கீதையில் 'யார் யார் என்னை எவ்விதம் தியானிக்கிறார்களோ அவர் அவர்களுக்கு அவ்வாறே காட்சியளிப்பேன்,' என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியுள்ளார்.
'எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை
அவ்வாறு அருள் செய்வான் ஆதிபரன் '
என்பது திருமூலர்.
ஐயா வைகுண்டரும் அதிசயிக்கதக்க விதத்தில் கூறுவதை கேளுங்கள்:
'அவரவர் மனதில் ஆனபடி இருந்து
எவரெவரையும் பார்த்திருப்பேன் நான் '
தன் மதத்தை சாராதவர்களை சைத்தான் எனவும் காஃபிர் எனவும் வையும் மிலேச்சத்தனம் ஐயா வைகுண்டரிடம் இல்லை. அவரிடம் இருந்தது இம்மண்ணின் மரபிற்கே உரிய பிரபஞ்ச ஏற்புத்தன்மை (Universal Acceptance). அதுதான் ஐயா இந்துத்வமும்.
தாழ்த்தப்பட்டவர்கள் என குறிப்பிடப்படும் நாடார் சமுதாயத்தவர்கள் ஷத்திரிய வம்சத்தினைச் சார்ந்தவர்கள் தாம். தென்னாடு என்றில்லை பாரதம் முழுவதுமே வர்ண அமைப்பு ஒரு மிக நெகிழ்வான சாதிக்குடிகள் அங்குமிங்கும் செல்லும் தன்மைத்ததாகவே இருந்திருக்கிறது. அது இறுக்கமுடையதானதற்கு வெளிநாட்டு படையெடுப்புகளும், மூலதன வெளியேற்றமுமே முக்கிய காரணங்களாகும். குயவனான சாதவாகனன் ஷத்திரியன் தாம். நாயர்கள் சூத்திரராக இருந்து ஷத்திரியர்கள் ஆனவர்கள்தாம் (அவர்கள் கிறிஸ்தவ மிஷிநரிகளின் இலக்கியங்களில் நாயர்கள் சூத்திரர் என்றே குறிப்பிடப்படுவதைக் காணலாம்.) தோள்சீலை போராட்டத்திலும் பங்கெடுத்தவர்கள் மதம் மாறாத நாடார்கள்தாம். பின்னர் அவர்கள் குறிவைத்து மதம் மாற்றப்பட்டனர். எனினும் மதமாற்றி மிசிநரிகள் உண்மையில் பாரத சமுதாய சமத்துவ எழுச்சிகளில் உண்மையில் எத்தகைய பங்காற்றினர் என்பதனை ஒரு உதாரணம் மூலம் காணலாம்.
ஐயா வைகுண்டர் சாதீயக் கொடுமைச்சூறாவளியின் நடுநாயகக் கண்ணில் நின்று தர்மத்திற்காகப் போராடினார். ஏசி அறைகளில் இருந்தபடி சமுதாயம் குறித்து சித்தாந்த கோட்பாடுகளை முன்வைக்கும் சித்தாந்தி அல்ல அவர். அல்லது எடைக்குஎடை பொருட்கள் வாங்கி சொத்து சேர்த்து, வெள்ளைக்காரன் தூக்கிப்போட்ட அறிவியல் அடிப்படையற்ற இனவெறிக்கோட்பாடுகளால் சுகம் கண்டு, மடையர்களே எனக்கு சீடர்களாக இருக்கவேண்டும் என வேண்டிய போலி-பகுத்தறிவின் தந்தையான சிறியார் ஈவெரா அல்ல அவர். இத்தகைய போலிகளால் ஐயா அவரது காலடி மண்ணையும் தொட இயலாது. உயர்ந்த உத்தம அவதார புருஷர் என இன்றும் வணங்கப்படும் ஐயா வைகுண்டர் இயக்கம் சாதீய கொடுமைகளுக்கு எதிராக காவிக் கொடியினை அன்புக்கொடியாக ஏந்திப்பிடித்து போராடிய வரலாறு இந்துத்வ வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியது.
இன்றைக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மதமாற்றிகளுக்கும், சாதீய வாக்குவங்கி நடத்தி தர்மத்தின் மக்களை பிரிக்கத்தூண்டும் போலி மதச்சார்பற்ற அரசியல்வியாதிகளுக்கும் எதிராக போராடும் சமுதாய இயக்கங்களின் சமத்துவ போராட்டத்தின் அடிநாதமாக விளங்குவது. இந்த மகத்தான இயக்கத்துடன் கிறிஸ்தவ மிசிநரிகள் என்னவித உறவினைக் கொண்டிருந்தார்கள் என்பதை பார்க்க, கிறிஸ்தவ மதமாற்றத்தின் உண்மை தன்மைகள் விளங்கும்.
ஐயா வைகுண்டரை பொதுவாக ஒரு சாதிக்கு உரியவர் என சிலர் நினைத்தாலும், அவர் முழுமையான இந்து சமுதாயத்தினை ஒருங்கிணைக்கும் பார்வையினைக் கொண்டிருந்தார் என்பதே உண்மை.
'சாணா ரிடையர் சாதி வணிகருடன்
நாணாத காவேரி நல்ல துலுப்பட்டர் முதல்
சூத்திரர் பிரமர் தொல் வாணியர் பறையர்
உத்திர நீசர் உழவருடன் குறவர்
கம்மாளரீழர் கருமறவர் பரவர்
வெம்மா நசுறாணி வேகவண்ட ரிடலையர்
சக்கிலியரோடு சாதி பதினெட்டுகளும் ' (அகிலத்திரட்டு)
ஐயா வைகுண்டரின் தர்ம பார்வையில் ஒன்றாகவே இருந்தன.
அவர்களை ஒரே இடத்தில் நீர் அருந்தச் செய்தார் ஐயா வைகுண்டர். அவர்களை ஒரு தாய் மக்களாக உறவாட வைத்தார்.
'சாதி பதினெண்ணும் தலமொன்றிலே குவிந்து
கோரிக் குடிக்கும் ஒரு கிணற்றில் ' (329)
சாதீய வெறி, மிஷிநரி ஆதரவு ஆகியவை மேலோங்கிய திருவாதாங்கூர் மேல்வர்க்கத்தினர் கடும் சித்திரவதைகளை ஐயா வைகுண்டர் மீது சுமத்தியதை அமைதியாக தாங்கிக்கொண்டார் அம்மகான்:
'குண்டியிலே குத்தி குனியவிடு வானொருத்தன்
நொண்டியிவ னென்று அடித்தடித்து தானிழுப்பான்
சாணாருக்காக சமைந்தாயோ சுவாமியென்று
வாணாளை வைப்போமோ மண்டிப்பதனிக்காரா
பனையேறி சுபாவம் பட்டுதில்லையென்று சொல்லி
அனைபேரையும் வருத்தி ஆபரணந் தேடவென்றோ
சமைந்தாயோ சாமியென்று சாணாப்பனையேறி
உனைச் சாமியென்று உன் தேகத்தைப் பார்த்தால்
பனைச் சிரங்கின்னம் பற்றித் தெளியலையே
உனைச் சாமியென்றால் ஒருவருக்கு மேராதே
ஆளான ஆளோ நீ ஆளில் சிறியவனாய்த்
தாழக்கிடந்து சாமியென்று வந்தாயோ ' (அகிலத்திரட்டு)
என்றெல்லாம் அவரை சித்திரவதை செய்தனர்.
ஐயாவை திருவிதாங்கூர் அரசனின் ஆட்கள் எத்தனையோ வதை செய்தனர். மூத்திரக்குழியில் தள்ளி அங்கே போட்டு அடித்து சித்திரவதை செய்தனர்.
'மோளுக்குழிக்குள் மொகுமொகனவே புழுக்கள்
தோளு வழி புழுக்கள் தூணி மிகச் சொரியும்
அட்டை மிதக்கும் அரிய தேள் மிதக்கும்
விட்ட நரகு மிகுவாய் புழு மிதக்கும்
நாற்ற துறைகள் நரகத் துறை போலே' இருந்த சிறையில் அன்புருவான ஐயாவை சித்திரவதை செய்தனர்.
'குண்டியிலே குத்தி குனியவிடுவானொருத்தன்
நொண்டியிவ னென்று அடித்தடித்து தானிழுப்பான்
சாணாருக்காக சமைந்தாயோ சுவாமியென்று
வாணாளை வைப்போமோ மண்டிப்பதனிக்காரா
பனையேறி சுபாவம் பட்டுதில்லையென்று சொல்லி'
எல்லாம் ஐயாவை கொடுமை செய்தனர் சாதி வெறி பிடித்த மிருகங்கள்.
இந்த சித்திரவதைகளை அறிந்தால்தான் ஐயா வைகுண்டர் சொல்லுகிற அன்புரைகளின் ஆழம் நமக்கு புரியும்:
"பொறுமை பெரிது பெரியோனே என்மகனே
தருமம் பெரிது தாங்கியிரு என் மகனே
எல்லோருக்கும் விளம்பி இரு நீ என் மகனே
பொல்லாதாரோடும் பொறுமையுரை என் மகனே
...
சத்துருவோடும் சாந்தமுடனே இரு
புத்திரரோடும் பேசி இரு என் மகனே"
சரி. மிசிநரிகள் இந்த சமுதாய போராட்டத்தில் எந்த இடத்தில் இருந்தனர் ? ஆகா, இதோ சமுதாய தலைமையை ஏற்று சமத்துவம் ஏற்படுத்த நல்ல கருத்துக்களுடன் ஒருவர் தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்தே எழுந்துவிட்டார் எனவே அவரை ஆதரிப்போம் என ஐயா வைகுண்டருக்கு தோள் கொடுத்தார்களா மிசிநரிகள் ? கிறிஸ்தவம் சமுதாய சமத்துவத்தை ஆதரித்ததெனில், தாழ்த்தப்பட்ட நாடார்களின் மிகச்சிறந்த எழுச்சியாக்கமான ஐயா வைகுண்டருக்கு எதிராக கட்டுக்கதைகளையும், அவதூறுகளையும் பரப்பியதுமில்லாமல், அவரை 'எதிரி ' 'சாத்தான் ' என்றெல்லாம் தமது மேலதிகாரிகளுக்கு எழுதியது ஏன் ? அரசனை இம்மகானை விடுவிக்கவும் தார்மீக சமுதாய புரட்சியினை ஏற்கவும் வகை செய்தது யார் ? மிசிநரிகளா இல்லையே. மாறாக, மண்டைக்காடு கலவரத்தின் போது மிசிநரிகள் தம் முதல் எதிரியாக கண்ட கிருஷ்ணவகை (இடையர்) குடியினைச் சார்ந்த பூவண்டர் என்பவரே ஆவார். மிசிநரிகளோ ஐயா வைகுண்டரை 'ஏமாற்றுக்காரன் ' 'சாத்தான் ' 'வஞ்சகன் ' என்றெல்லாம் தூற்றினரே தவிர அவருடன் கைகொடுத்து சமுதாய ஏற்றம் செய்ய முன்வரவில்லை. மாறாக பூவண்டன் இந்து சமய அடிப்படையிலேயே சமத்துவ பார்வையினைப் பெற்று மன்னருக்கு அறிவுரை பகர்ந்தார்.
'போற்றி நம்பூரி பிராமண சூத்திரர் குலத்தில்
ஏற்றிப் பிறக்க இயல்பில்லாமல் இந்த
பிறர் தீண்டாச் சாணார் குலத்தில் அவதரித்து
பிறக்க வருவாரோ பெரிய நாராயணரும் '
எனும் அரசன் கேள்விக்கு பூவண்டர் பகர்ந்த விடை சாதீய இருளும், மதமாற்ற நோயும் சூழ்ந்திருந்த அன்றைய காலகட்டத்திலும் இந்து தர்மத்தின் சமுதாய சமத்துவ ஒளி அணையாது வீசியதனைக் காட்டுகிறது. பூவண்டர் பகிர்ந்தார்:
'சாணெனக் குலத்தில் மாயன் சார்வரோ வென்றெண்ண வேண்டாம்
பாணெனத் தோன்றி நிற்பார் பறையனாய்த் தோன்றி நிற்பார்
தூணெனத் தோன்றி நிற்பார் தோலனாய்த் தோன்றி நிற்பார்
ஆணெனத் தோன்றி நிற்பார் அவருரு கேட்டிலீரோ
குசவெனக் குலத்தில் வந்தார் குறவெனக் குலத்தில் வந்தார்
மசவெனக் குலத்தில் வந்தார் மாடெனக் குலத்தில் வந்தார்
விசுவெனக் குலத்தில் வந்தார் வேடெனக் குலத்தில் வந்தார்
அசுவெனக் குலத்தில் வந்தார் அவருருக் கேட்டிலீரோ ' (அகிலத்திரட்டு)
ஆனால் இத்தகைய சமுதாய சமத்துவ கருத்தாக்கம் கிறிஸ்தவ இறையியலில் எழ சாத்தியமே இல்லை என்பதனை நாம் நினைவுகொள்ளவேண்டும். ஏனெனில் ஏசு குறித்த இறை-முன்னறிவிப்பே அவர் தாவீது அரசரின் வம்சத்தவர் என்பதுதான். அந்த வம்சாவளியில் ஏசுவை நுழைத்திட பொய்யான இரு வேறு வம்சாவளி வரலாற்றினை மத்தேயு ஒன்றாம் அதிகாரத்திலும் லூக்கா மூன்றாம் அதிகாரத்திலும் காண இயலும். அது போலவே ஒரு குறிப்பிட்ட மக்கள் வாழும் பகுதி நுழையத்தக்கதல்ல எனும் கருத்தாக்கம் ஸ்மிருதிகளில் காணப்பட்டாலும் கூட, அதனை ஸ்மிருதிதான் என தூக்கி எறிந்து விடும் சுதந்திரம் இந்துவுக்கு உண்டு. ஆனால் கிறிஸ்தவ விவிலியத்தில் அவ்வாறல்ல. மேலும் அவ்வாறு கூறியது பரமபிதாவின் ஒரே மகனும் கூட. சரி, மிசிநரிகள் ஐயா வைகுண்டருக்கு ஆற்றிய எதிர்வினை என்ன ?
'எளியாரைக் கண்டு இரங்கியிரு என்மகனே
வலியாரைக் கண்டு மகிழாதே என்மகனே
தாழக்கிடப்பவரை தற்காப்பதே தர்மம் '
என்று எடுத்துரைத்த எம்பிரானை 'மக்களை வஞ்சிப்பவன் ' எனக் கூசாமல் ஏசினான் சாமுவேல் சகரியா எனும் கிறிஸ்தவ வெறிபிடித்த வெள்ளைத்தோல் பிரச்சாரகன் (1843). (இன்றைக்கும், நலிந்த சமுதாய முன்னேற்றத்துக்கு பாடுபடும் ஆன்மிக அருளாளர்களை வைவதை முற்போக்காக காட்டும் சகரியாக்களுக்கு பஞ்சமில்லைதான்.) 'காணிக்கை வேண்டாதுங்கோ கைக்கூலி கேளாதுங்கோ ' என்று கூறிய மகான் மிசிநரி பார்வையில் 'எதிரி 'யானார் (1869-ஜேம்ஸ் டவுண் மிசிநரிஅறிக்கை) 'ஞாயமுறை தப்பி நன்றி மறவாதுங்கோ ' என்று எடுத்துரைத்த மகான் மிசிநரி பார்வையில் 'சாத்தான் '(1875 நாகர்கோவில் மிசிநரி அறிக்கை) ஆனார். மேலும் ஐயா வைகுண்டர் உண்மையில் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் கடைநிலை ஊழியம் செய்தவர் என்பது போன்ற பச்சைப்பொய்களையும் பரப்பினர். இந்த அவதூறு பிரச்சாரம் கிறிஸ்தவ சபைகளால் 1980கள் வரைக்கும் கூட வெளிப்படையாக நடந்தன. கிறிஸ்தவ மிசிநரி அறிக்கைகள் பறந்தன. கிறிஸ்தவ மிசிநரி அறிக்கை புலம்புகிறது: 'தாமரைக்குளம் பகுதியின் அனைத்து கிராமங்களும் கிறிஸ்தவ ஆதிக்கத்துக்கு கீழ் வரும் நிலையில் இருந்தன. ஆனால் முத்துக்குட்டி வழியினரின் எழுச்சியால் நம்பணிகளில் வலுவான தடை ஏற்பட்டுள்ளது. நமது பகைவனின் செயல்கள் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்று எடுத்துச்சொன்னாலும் எவரும் ஏற்றுக்கொள்வதாக இல்லை. இந்த இயக்கம் கிறிஸ்தவத்தை விட வேகமாக செயல்படுவதுடன் கிறிஸ்தவம் பரவவும் தடையாக இருக்கிறது." (நாகர்கோவில் டயசீஸ் ஆண்டறிக்கை- இது ஐயா சமாதியடைந்த 20 வருடத்துக்கு பிறகு.) ஐயாவை கைது செய்த போது திருவிதாங்கூரின் நாகர்கோவில் கன்னியாகுமரி பகுதிக்கு நீதிபதியாக மீட் என்கிற மிசிநரி நியமிக்கப்பட்டான். இது கிழக்கிந்திய கம்பெனியின் வலியுறுத்தலால் கர்னல் முன்ரோ என்பவனது சூழ்ச்சியின் விளைவாகும். இந்த மிசிநரி நீதிபதியின் செயல்பாடு 'highly favourable to the external sources of the missionary cause' என சாமுவேல் மட்டீர் என்கிற மிசிநரி குறிப்பிடுகிறான் ('The Land of Charity', Early history of the London Mission in Travancore, பக்.267, 1870 இலண்டன், 1991 டெல்லி.) இவனது காலகட்டத்தில்தான் ஐயா கைது செய்யப்பட்டதும் அடிக்கப்பட்டதும். மேலும் ஐயாவை அடித்தவர்களில் கிறிஸ்தவ கும்பெனிக்காரர்களும் இருந்தார்கள். அவரை துப்பாக்கி பின்பகுதியால் அடித்தார்கள். கும்பெனி வீரர்கள் (ஆங்கிலேய , இந்தோ-ஆங்கிலேய கிறிஸ்தவர்கள்) மட்டுமே துப்பாக்கி வைத்திருந்தனர். ஆக, எப்படி இந்துக்களின் சாதீயத்தை பயன்படுத்தி தந்திரமாக தமது மதமாற்ற இழிவேலைக்கு தடையாக இந்து சமுதாயத்தை கடைத்தேற்ற வந்த ஐயா வைகுண்டரை அழித்திட திட்டமிட்டிருக்கிறார்கள் பாருங்கள். ஆனால் அரசனது அவையிலிருந்த படியே இந்து புராண மரபின் அடிப்படையில் ஐயாவுக்காக குரல் எழுப்பிய பூவண்டரின் மகத்துவத்தையும் சிந்தியுங்கள்.இதே நூலில் மட்டீர் மிசிநரி நமது ஐயா வைகுண்டரின் வழிபாட்டை பேய் வழிபாடு என எழுதுகிறான். இத்தகைய பிரச்சாரங்களை இன்றும் குமரிமாவட்டத்தில் கிறிஸ்தவ மிசிநரிகள் செய்கின்றனர். எனவேதான் நாங்கள் பதிலடி கொடுத்தோம் : 'பேயை வணங்குபவன் கிறிஸ்தவனே என்று. அதற்கு பிறகு இது கொஞ்சம் ஓய்ந்தது. அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்) அவன் சொல்கிறான்: ஐயா வைகுண்டரின் வழிபாடு அரக்கத்தனமும் இந்துமதமும் இணைந்த முட்டாள்தனமான வழிபாடாம் ('absurd medley of Hinduism an Demonolatory') (('The Land of Charity',, 'Devil-Worship' பக்.222-223)
ஐயா வைகுண்டரே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிசிநரிகளின் நோக்கம் சமுதாய விடுதலையன்று, மாறாக சமுதாய தீமைகளை பயன்படுத்தி நடத்தும் மதமாற்றமே எனும் உண்மையை நமக்கு உணர்த்துகிறார். மிசிநரிகளின் போலி புனுகல்களை பார்த்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்களை தெளிவாக 'மாநீசர்கள் ' என அடையாளம் காட்டினார். தருமத்திற்கும் தம்மக்களுக்கும் எதிராக இந்த மாநீச மிசிநரிகள் நடத்தும் அநியாயங்களையும் தம் மக்களுக்காக பாடுபடும் தம்மை 'ஏமாற்று வேலைக்காரன் ' என்று அழைத்த மிசிநரி பிரச்சாரங்களையும் ஐயா வைகுண்டர் எதிர்த்தார். இந்த பரவுத்தன்மை கொண்ட அந்நிய மதக்கண்டனத்தினை, சாதீய வெறியர்களுக்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்களுடனேயே அதே உக்கிரத்துடன், சிம்மகர்ஜனையாக வெளியிட்டார்:
'நான் பெரிது நீ பெரிது நிச்சயங்கள் பார்ப்போ மென்று
வான் பெரிதென்றறியாமல் மாள்வார் வீண் வேதமுள்ளோர்
ஒரு வேதந் தொப்பி உலகமெல்லாம் போடுவென்பான்
மறுத்தொரு வேதஞ் சிலுவை வையமெல்லாம் போடுவென்பான்
அத்தறுதி வேதமொன்று அவன் சவுக்கம் போடுவென்பான்
குற்றமுரைப்பான் கொடுவேதக் காரனவன்
ஒருத்தருக்கொருத்தர் உனக்கெனக் கென்றேதான்
உறுதியழிந்து ஒன்றிலுங் கை காணாமல்
குறுகி வழிமுட்டி குறை நோவு கொண்டுடைந்து
மறுகித்தவித்து மடிவார் வீண்வேதமுள்ளோர் ' (அகிலத்திரட்டு)
கிறிஸ்தவ சமயத்தினால் சமுதாய மேன்மையா ஏற்பட்டது ? தாழ்த்தப்பட்ட மக்களிடையே பகைமை ஏற்பட்டது. ஐயா வைகுண்டரின் அருள்வாக்கு உண்மை வரலாற்றினை விளக்குகிறது:
'விருச்சமுள்ள நீசன் வேசை நசுறாணியவன்
வையகங்களெல்லாம் வரம்பளித்த மாநீசன்
நெய்யதியச் சான்றோரின் நெறியெல்லாந் தான் குலைத்துப்
பேரழித்துத் தானம் பூப்பியமுந் தானழித்து
மார்வரையைக் கூடும் மைப்புரசு சஞ்சுவம் போல்
தானமழித்து சான்றோரின் கட்டழித்தான். '
(வையகங்களெல்லாம் வரம்பளித்த மாநீசன் என்பதில் அனைத்துக்கண்டங்களிலும் மிசிநரிகள் நடத்திய நச்சுவேலைகளையும் இனக்கருவறுப்புகளையும் வெளிப்படுத்துகிறார் ஐயா வைகுண்டர்.)
ஐயா முத்துக்குட்டி வைகுண்டசுவாமிகளின் சமுதாய சமரசப் புரட்சி காட்டும் உண்மை என்னவென்றால், சமுதாய ஏற்றம் பெற ஒரே நேரத்தில் சாதீய ஏற்றத்தாழ்வுகளையும், ஆன்ம அறுவடை செய்யும் அன்னிய விரிவாதிக்க சித்தாந்தங்களையும் எதிர்க்க வேண்டும். அதனையே ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கமும் அதன் குடும்ப அமைப்புகளும் செய்கின்றன. ஆக, ஆரியசமாஜமாகட்டும், சுவாமி விவேகானந்தராகட்டும், அய்யன் காளியாகட்டும், ஸ்ரீ நாராயணகுருவாகட்டும், ஏன் மகாத்மா காந்தியேயாகட்டும், மிசிநரிகள் பாரத தர்ம நெறி நின்று சமுதாய புரட்சி கண்ட செம்மல்களையும் இயக்கங்களையும் எதிர்த்துள்ளனர், நசுக்கி அழிக்க முயற்சித்துள்ளனர். உதாரணமாக சர்.ஹெர்கோர்ட் பட்லர் அவுத் மற்றும் வடமேற்கு மாகாணங்களின் லெப்டினண்ட் கவர்னர் 1-12-1907 தேதியிட்ட அறிக்கையில் கூறுகிறார்: 'அரசாங்கம் தலையிடவில்லை என்றால் ஆரியசமாஜத்தினால் பெண்களுக்கு கல்வி அளிக்கப்பட்டுவிடும். நமது பெண்கள் இங்கிலாந்திலிருந்து பெருமளவுக்கு வரவழைக்கப்பட்டு அவர்களே பெண்கல்வி அளிக்கும் படிக்கு பார்த்துக்கொள்ள வேண்டும்..ஆரிய சமாஜம் மிகவும் ஆபத்தான இயக்கம். அது தேசிய சிந்தனையையும் கீழ்ஜாதி மக்களை மேம்படுத்துவதையும் ஒருங்கிணைக்கிறது. '( 'Servant of India ' by Martin Gilbert). சுவாமி விவேகானந்தர் அனைத்து மக்களுமான சமஸ்கிருத கல்விசாலையை நிறுவ எடுத்துக்கொண்ட முயற்சிகள் மிசிநரி தூண்டுதலால் அரசாங்கத்தால் தடைபடுத்தப்பட்டன. இவ்வாறு முன்னூறு ஆண்டுகள் தேசியவாத சமுதாய சீர்திருத்தவாதிகளை முட்டுக்கட்டை போட்ட காலனிய அரசாங்கம், மறுபக்கம் தமது மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள தயங்காத சில சிறியோரை பெரியாராக சமுதாய சீர்திருத்தவாதிகளாக உலாவர செய்தது. ஏன்..இன்றைக்கும் காலனிய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட சிந்தனையான மார்க்சியத்தின் அடிப்படையில் சிந்திக்கும் இடதுசாரிகள், இந்து தேசியவாதிகளின் நலிவுற்ற சமுதாய மேம்பாட்டு முயற்சிகளுக்கு இதர கிறிஸ்தவ இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் இணைந்து முட்டுக்கட்டைகள் போடுவதைக் காணலாம்.
உண்மைகள் இவ்வாறிருக்க பூசி முழுகும் பிரச்சார புனுகு வேலைகள் சில அறிவுஜீவிகள் என தம்மை காட்ட விரும்புவோருக்கு தேவைப்படுவதில் ஆச்சரியமென்ன ? ஆம். அவர்கள் தங்கள் கண் உத்திரத்தை அறியாதவர்கள்.
சிவசிவா அய்யா நாராயணருக்கும்
நாட்டுக்குப் பெரிய வைகுண்டருக்கும்
சிவசிவா கட்டியம் கட்டியம் கட்டியம்
சிவசிவா அரகரா ஜெயம் ஜெயம் ஜெயம்
தேசம் மயம் ஏகம் திட்டித்த மகாபர
இந்திர நாராயண அய்யா நிச்சயித்தபடி
யல்லாது மனுஷன் நிச்சயித்தபடியல்ல அய்யாவே
[ஐயா வைகுண்டர் சாமி தோப்பு தலைமை துவாரகபதி திருக்கோவிலிலே வழிபாட்டு மண்டப வாயிலின் வலப்பக்க சுவரில் பொறித்த உகப்படிப்பு]