ஏசு கைகளையும் கால்களையும் விரித்தபடி சிலுவையில். சிலுவையிலிருந்து அவரது ஆண்குறி பெரிதாக தெரிய அதிலிருந்து ஏதோ கீழே கொட்டுகிறது. பொதுவாக கிறிஸ்தவ சடங்குக்கோப்பை இருக்கவேண்டிய இடத்தில் ஒரு சிறுநீர் கழிப்பிடம் இருக்கிறது. ஒரு ஆடையற்ற பெண்ணின் பிறப்புறுப்பிலிருந்து ஒரு குழந்தை வெளிவருகிறது அதனை அந்த பெண் திரிசூலத்தால் கொல்ல முயல்கிறாள்.கீழே துர்கா மாதா என எழுதப்பட்டுள்ளது. அடுத்ததாக ஆண்குறிகள் சூழ விஷ்ணு நிற்கிறார் தனது கைகளால் தனது ஆண்குறியை சுமந்தபடியே. மீண்டும் வரை சீலை முழுக்க ஆண்குறிகள். கீழே சிவலிங்கம். அதில் ஆண்குறிகளை உடைத்தபடி ஒரு உருவம் எழுகிறது. அது ஒரு இளைஞன். அவன்தான் சந்திரமோகன். மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு நுண்கலை மாணவன். இந்த மூன்று ஓவியங்களும்தான் பிரச்சனையை உருவாக்கின. இந்த ஓவியங்களுக்கான எதிர்ப்பினை முதலில் தொடங்கி வைத்தவர் கிறிஸ்தவ பாதிரியாரான ரெவரண்ட் இம்மானுவேல் காண்ட். பின்னர் அவருடன் நீரஜ் ஜெயின் எனும் பாஜக தலைவர் கலந்து கொண்டார். மே -9 ஆம் தேதி ஊர்வலம் நடந்தது. ஜெயின் சென்று அங்கிருந்த ஆசிரியரும் டீனுமான விஷ்ணு பணிக்கரிடம் இந்த ஓவியங்களை எடுத்துவிடுமாறு கேட்டுக்கொண்டார். பணிக்கர் மறுத்தார். நுண்-கலை ஓவியத்துறை 'தனது தனிப்படுக்கை அறை போன்றது' என்று கூறினார். விவாதம் வலுத்தது. சந்திரமோகன் மீது ஒருவர் கையும் படவில்லை அல்லது அவருடைய மூன்று சர்ச்சைக்குள்ளான ஓவியங்களும் எவ்விதத்திலும் சிறிய அளவு கூட சேதப்படுத்தப்படவில்லை. டீன் மறுத்துவிட்ட இந்நிலையில் ஜெயின் காவல்துறையை அணுகினார்.எஃப்.ஐ.ஆர் போடப்பட்டு சந்திரமோகன் கைது செய்யப்பட்டார். ஒரு வாரம் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சிவாஜி பணிக்கர் மத்தியகால இந்தியாவினைச் சார்ந்த ஆடையற்ற ஓவியங்கள், தாந்திரீக மரபு சார்ந்த ஓவியங்கள் ஆகியவற்றைக் கொண்டு ஒரு ஓவியக் கண்காட்சியை நடத்தினார். இதனை நிறுத்தும்படி துணை வேந்தர் கேட்டுக்கொண்டதை அவர் புறக்கணித்தார். இதை தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 'கலைகள் மீதான பாசிச தாக்குதலாக' இது ஊடகங்களில் உரு பெற்றது. நிற்க...இந்து மரபில் கலைசுதந்திரம் என்பது நிச்சயமாக முக்கிய இடத்தை வகிக்கிறது. கடவுளரை கேலி செய்வதில் ஆரம்பித்து அவர்களை எவ்விதத்திலும் சித்தரிக்கலாம் என்பது பெரும் சுதந்திரமாக இந்து மரபில் இடம் பெறுகிறது. 'செந்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைக்கும்' கடவுளர் இந்து மரபின் பெரும் சிறப்பு. இம்மரபு சுதந்திர பெருவெளியின் எல்லைகள் வதோதராவில் சோதிக்கப்பட்டுள்ளன. இந்த சோதனையில் இந்து சமுதாயம் எவ்வளவு தேறியுள்ளது என்பதனை காண சிறிதே பின்னோக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மத்திய அரசு பெல்லோஷிப்புக்காக குமரிமாவட்ட கோவில்களின் தூண் சிற்பங்களை ஆவணப்படுத்திக் கொண்டிருந்தேன். திருவிதாங்கோடு விளக்கு பாவையர் எனும் தூண் சிற்பங்கள் இதில் பிரசித்தி பெற்றவை. (உள்ளூர் அளவில்தான் ஆனால் அவை பெற வேண்டிய முக்கியத்துவம் பெறவில்லை.)
விளக்கு பாவை சிற்பங்களில் ஒன்று : திருவிதாங்கோடு சிவன் கோவில் அதில் சில சிற்பங்களில் ஒரு சன்னியாசி அல்லது மிகவும் பக்திமானாக காட்டப்படக்கூடிய ஒருவர் ஒரு பெண்ணின் அழகில் மயங்கி ஆடை அவிழ ஆண்குறி விரைப்பேற அப்பெண்ணின் முன் மானம் மரியாதை அனைத்தும் இழந்த நிலையில் நிற்பதையும் ஆனால் அந்த பெண் அவரை அசட்டை செய்த படி விளக்கினை ஏந்தியபடி நிற்பதையும் காணலாம். அந்த ஒரு சிற்பத்தை மட்டும் பார்த்தால் அல்லது காட்டியிருந்தால் தோன்றும் உணர்ச்சி அந்த பிரகாரத்தில் உள்ள அனைத்து விளக்கு பாவைகளையும் ஒரு சேர காணும் போது மாறுவதை உணரலாம்.
முழுமைப் பார்வையில் விளக்குப் பாவைகள் : அனைவரும் காட்டப்படவில்லை.பெண்மையின் அனைத்து நிலைகளிலும் கன்னியும் கர்ப்பிணியும் குழந்தைக்கு பாலூட்டுபவளும் முலை தளர்ந்த நிலை பெண்ணும் என பெண்மையின் அனைத்து தன்மையையும் அவை வெளிப்படுத்துவதை உணரும் போது இந்த சிலைகள் செதுக்கப்பட்டதன் நோக்கத்தை, அந்த சிற்பியின் சஹிருதயனாக உணரலாம். திருவட்டாரில் வெளிப்பிரகார தூண்களில் தன் குறியை தன் வாயில் வைத்திருக்கும் ஒரு பேதையன் சிற்பத்தை காணலாம்.
இவை தனியாக இருந்தால் நம் ஒழுக்க உணர்ச்சிகளுக்கு கூட அருவெறுப்பாக இருக்கக் கூடும். நிச்சயமாக இந்த சிற்பங்கள் உருவான காலகட்டத்திலிருந்து இன்று வரை ஒழுக்கவிதிகள் மாறியுள்ளன. ஆனாலும் கூட கோவில் சிற்பங்களின் முழுமையான ஒட்டுமொத்த உருவாக்கத்தில் இந்த சிற்பங்கள் ஒருவித வழுவமைதி பெற்று அமைகின்றன. காமம், ஏன் பிறழ்நிலை காமமாக நாம் இன்றைய ஒழுக்க விதிகளால் கருதும் காமமும் கூட சிற்பங்களில் தங்கு தடையின்றி காட்டப்படுகின்றன.
அத்துடன் யோகியரும், உழவர்களும், குறவர்களும் அவதாரங்களும், கர்ப்பிணி பெண்டிரும், நாக தேவதைகளும், யட்சணிகளும், காந்தர்வர்களும், அரசரும், வீரகாதைகளும் என.
ஒரு கலங்கிய மனதிலிருந்து எழும் விகாரமாக தூண் சிற்பங்களில் காணப்படும் காமத்தைக் காட்டும் சிலைகள் அமைந்திடவில்லை. மாறாக காமத்தை முழுதாக அறிந்து அதனை அச்சமின்றி வாழ்வின் ஒரு பாகமாக எதிர்நோக்கும் வாழ்வியல் பார்வை அங்கு தெரிகிறது. தந்திராவும் தன் ஒவ்வொரு குறியீட்டையும் தன் ஒவ்வொரு தேவ தேவதை வடிவத்தையும் பல கடுமையான வடித்தெடுத்தல்களுக்கு அப்புறமே தேர்ந்தெடுக்கப்பட்ட சாதகர்களின் பொது அரங்கில் வைத்தது. இத்தகைய குறியீட்டு வடிவங்களுடன் சந்திரமோகனின் படைப்புகளை ஒப்பிடுவது, கால்குலஸ் சமன்பாடுகளும் பொது கழிப்பறை கிறுக்கல்களும் ஒன்று என்பது போன்ற அபத்தம்தான்.
காங்க்ரா மரபு ஓவியத்தில் காளிகா மகாதேவி: 18 ஆம் நூற்றாண்டுஅவள் நீல நிறம் பிரபஞ்சமளாவிய முடிவிலித்தன்மையையும் அவள் ஆடையற்ற நிலை சிருஷ்டிநிலையையும் காட்டுகிறது-ஓஷோ அறிவுசீவிகள் சந்திரமோகனை ஆதரிக்க வைக்கும் வாதங்களான தந்திர மார்க்க தேவியர் பிரதிமைகளில் சின்னமஸ்த காளி உட்பட பாலியல் வக்கிரமோ அல்லது obsessionஓ இல்லை என்பதும் அங்கு பாலியல் ஒரு உந்து பலகை என்பதாக ஒரு அடிப்படை ஆதாரம் என்பதாக அன்றி அதில் சிக்கித்தவிக்கும் பரிதாபமோ இல்லை. அதற்கு நேர் மாறானதாக அமைவது சந்திரமோகனின் ஓவியங்கள்.
இந்து கோவில்களின் இந்த தன்மையை காஜுரேகாவை முன்வைத்து ஓஷோ கூறுகிறார்:
"இக்கோவிலை உருவாக்கியவர்கள் மிகவும் நுண்ணுணர்வு கொண்ட மக்களாவர். அதன் பிரகாரத்தினை சுற்றி பாலியல் இருக்கிறது. அதன் மையத்திலோ அமைதி இருக்கிறது. சாதகர்கள் பாலியல் உணர்வுகளின் மீது, வெளிப்பிரகாரத்தில் காட்டப்பட்ட புணர்ச்சி நிலைகளை தியானிக்க வைக்கப்பட்டனர். ஒருவர் அதனை முழுமையாக அறிந்து கொண்ட பின்னர் மனம் பாலியலில் (மூழ்கி எழுந்து) வெளிவந்த பின்னர் அவர்கள் கோவிலுக்குள் நுழைந்தனர்."
அறவாழி அந்தணன் தாள் சேர்ந்து பிற ஆழி நீந்தும் யோகி: திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் கோவில் தூண் சிற்பம்அடுத்ததாக இச்சிலைகளில் நான் கண்டது ஒருவித தன்னம்பிக்கை. தன் பாரம்பரிய விழுமியங்களையே எவ்வித கூச்சமும் தயக்கமும் இன்றி கேள்விக்குள்ளாக்கும் கேலிக்குள்ளாக்கும் தன்னம்பிக்கை. ஒவ்வொரு கோவில் தூண் சிற்பங்களிலும் வணக்கத்துக்குரிய துறவிகளை காட்டியிருக்கும் அதே நேரத்தில் பெண்கள் முன் மண்டியிடும் துறவிகளையும் காட்டியுள்ளார்கள். எத்தகைய கலாச்சாரம் தன் வணக்கத்துக்குரிய ஒருவரது பலவீனங்களையும் தான் வணங்கும் கோவில் சிற்பங்கலிலேயே வடித்திருக்கும்?
பெண்ணின் முன் மண்டியிடும் துறவிஅதே கோவில் தூண் சிற்பங்களில் துறவி/சாதகர்/யோகியின் பல நிலைகளும் காட்டப்படுகின்றன. அத்தகைய கலாச்சாரத்தின் உள்ளார்ந்த தன்னம்பிக்கை எத்தகையதாக இருந்திருக்கும்?
பெண்ணின் முன் மண்டியிடும் துறவியை கோவில் சுவர்களில் கன்னியாகுமரி மாவட்ட சிற்பி வடித்த ஏறத்தாழ இதே காலகட்டத்தில்தான் வத்திகானில் போப் பயஸ் IX தனது உத்தரவின் அடிப்படையில் மைக்கலேஞ்சலோ வடிவமைத்த ஆண் சிலைகள் ஒவ்வொன்றிலும் குறிகளை உடைத்து அங்கு ப்ளாஸ்டர் இலைகளால் மறைத்திட - வத்திகானின் ஒழுக்கத்தை காப்பாற்றவும் தகாத பாலியல் விழைவுகளை தடுத்திடவும்- உத்தரவிட்டார் என்பதனை நினைவில் கொள்ளுங்கள். கன்னியாகுமரி மாவட்ட சிற்பிகளின், அந்த ஆக்கங்களை தம் கோவில்களில் ஏற்ற மக்களின் தன்னம்பிக்கையும் புரியும். ஆனால் இந்த தன்னம்பிக்கையின், வாழ்வியல் புரிதலின், வெளிப்பாடுகளே இக்கலாச்சாரத்தை தாக்கும் ஆயுதங்களாயின என்பதிலிருந்து ஆரம்பிக்கிறது வதோதராவில் நடந்த சகிப்புத்தன்மை சோதனையில் இந்து சமுதாயம் தேர்ச்சி பெற்றதா என்பதற்கான பதில்.
கோவில் சிலைகளை கொச்சைப்படுத்தும் திராவிடர் கழக பிரச்சாரம்திராவிடர் கழக ஊர்வலங்களில் 'கோவில் ஆபாசசிலைகள் இருக்கலாம் ஆபாச பட போஸ்டர்களுக்கு தடையா' எனும் கோஷம் எழுப்பப்பட்டது நினைவிருக்கலாம். பெரியார் திராவிட கழக குண்டர்களால் திகம்பர ஜைன துறவிகள் தாக்கப்பட துணிந்த போது அவர்களது நிர்வாணம் ஒரு வக்கிரம் என ஊடகங்களில் பெரியார் திராவிட கழக ஆதரவு அறிவுசீவிகள் பேசியதும் எழுதியதும் நினைவுக்கு வரலாம்.
இவ்வித தாக்குதல்கள் ஒரு புறமிருக்க மறுபுறம் தடைகள் ஒரு அதிகார பலத்தின் வெளிப்பாடாக அமைந்ததையும் இங்கு பார்க்க வேண்டும். 2001 இல் அலெக்சாண்டர் சுகொரோவின் 'தாரஸ்' (Taurus) எனும் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்படவிருந்த போது அந்த திரைப்படத்துக்கு எதிராக இடதுசாரி கலாச்சார அமைப்புகள் கொடிபிடித்தன. காரணம் - அரசியல் சந்தையில் கம்யூனிஸ்ட் கட்சிகளால் விற்கப்படும் லெனினின் பிம்பத்தினை உடைப்பதாக அந்த படம் அமைந்ததுதான் (பிபிஸி. 16-நவம்பர் 2001). மேற்குவங்காள மக்கள் (சர்வதேச படங்களை காண்பது எல்லாதரப்பு பொதுமக்களும் அல்ல என்பதும் பெரும்பாலும் ஆட்டுத்தாடியும் ஜோல்னாபையும் தொங்க ஸ்காட்ச் அருந்தும் பாட்டாளி வர்க்கத்தினை நடாத்தி செல்லும் அறிவுசீவி கும்பல் என்பதையும் நினைவில் கொள்க. இந்த மேல் மட்ட கும்பல் காண வேண்டியதையே பீமான்போஸும் ஜோதிபாஸுவும் கம்யூனிஸ்ட் கட்சியின் 'இளைஞர்'படையும் தீர்மானிப்பார்கள் என்பதையும் அதனை அடிபணிந்து நம் அறிவுசீவிக்கும்பலும் ஊடகங்களும் ஏற்பதையும் காண்க. இங்கு வெளிப்படுவது 'என் பலம் நீ காண்பதை தீர்மானிக்கும்' எனும் அதிகார வெளிப்பாடு. டாவின்ஸி கோட் திரைப்படம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தடைசெய்யப்பட்டது மட்டுமல்ல அந்த நாவலும் தடைசெய்யப்பட்டது.
இத்தனைக்கும் அந்த நாவலில் ஏசுவினையும் மகதலேனையும் இணைத்து 'explicit' ஆகவோ அல்லது 'கிளுகிளுப்பாகவோ' எவ்வித சித்தரிப்பும் கிடையாது என்பதுடன் ஏசுவினை வெகுவாக புகழும் வாசகங்களும் அதில் இருந்தன.ஆனாலும் இத்திரைப்படம் மாநிலம் மாநிலமாக அரசுகளால் தடை செய்யப்பட்டது. அப்படி தடை செய்வதில் அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு செயல்பட்டன. மீண்டும் பலத்தின் வெளிப்பாடு. ஏசுவின் புதையறை கண்டுபிடிக்கப்பட்டதாக டிஸ்கவரி சானல் ஆவணப்படம் இந்தியாவில் மட்டும் காட்டுவதை கத்தோலிக்க சபை தடுத்து நிறுத்திக்காட்டியது-சுண்டு விரலை அசைக்காமல். டிஸ்கவரி சானல் கத்தோலிக்க சபைக்கு அடிபணிந்தது. முகமது நபி கேலி சித்திர விசயத்தில் நமது இடதுசாரிகள் எத்தகைய நிலைபாடு மேற்கொண்டார்கள் என்பதும் அரசாங்கம் டானிஷ் பிரதமரின் வருகையையே ரத்து செய்தது என்பதையும், உத்திரபிரதேச அரசின் அமைச்சர் டேனிஷ் ஓவியரின் தலைக்கு பல இலட்சம் ரூபாய்களை வெளிப்படையாக அறிவித்ததும் அதற்கு இடதுசாரிகளும் மௌனம் சாதித்ததையும் நாடு பார்த்தது. தேசிய நாளேடு எனும் தகுதியிலிருந்து என்.ராமின் குடும்ப பத்திரிகை எனும் தரத்திற்கு உயர்ந்திருக்கும் 'தி ஹிண்டு' ஏப்ரல் 9 2006 அன்று சிபிஐ(எம்) பத்திரிகையான "People's Democracy" வெளியிட்ட கட்டுரையை மீள்-பிரசுரம் செய்தது: "ஈரான் விவகாரத்துக்கு பின்னர் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பெரும் எதிர்ப்பாக"வும் "நியாயமான ஆத்திரத்தின் வெளிப்பாடாகவும்" (genuine anger) டானிஷ் கேலிசித்திர வெளியீட்டை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) கூறியதை 'தி ஹிண்டு' செய்தியாக மீள் பிரசுரம் செய்தது. சரி சர்வதேச அளவில் சகிப்புத்தன்மையின் எல்லைக்கோடுகள் 'பண்பாடு நிறைந்த' மேற்குலகில் எவ்வாறு உள்ளது என்பதனை காணலாம்: போப் ஜான்பால்-II சிலுவையில் ஏசு அறையப்பட்ட உருவத்தை பிடித்தபடி சரிந்து கிடக்கிறார். அவர் மீது ஒரு விண்கல் அழுத்தியபடி உள்ளது.
அவர் முகத்தில் ஒரு வேதனையும் கம்பீரமும் கலந்த ஜெபம் செய்யும் உணர்ச்சி. இந்த சிலையினை போப்பின் 'விண்ணக சுமை' எனும் தலைப்பில் ஒரு கண்காட்சியில் வைக்கப்பட்டது. போப் தாங்கும் சுமைகளை -அந்த சுமையினை தனிமையில் சகிக்கும் வேதனையை கடமையை காட்டுவதாக அமைக்கப்பட்ட இந்த சிலைக்கு போலந்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. வார்ஸாவின் பாராளுமன்ற உறுப்பினர் இருவர் உள்ளே நுழைந்தனர். கண்ணாடி தடுப்புகளை அடித்து நொறுக்கினர். சிலை மீது இருந்த விண்கல்லை மாற்றினர். சிலையினை நிமிர்ந்து நிறுத்த முற்பட்டனர். இறுதியாக இந்த கண்காட்சி மூடப்பட்டது. இந்த பாராளுமன்ற உறுப்பினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. ('In the name of Father', The Week 7-1-2001) இத்தகைய எதிர்வினைகளுடனும் இந்த எதிர்வினைகளுக்கு காரணமான தூண்டுதல்களின் தரத்துடனும் ஒப்பிடும் போது இந்துக்கள் எதிர்நோக்கும் தூண்டுதல்கள் அதீதமானவை என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்துக்களின் பாதுகாப்பு உணர்ச்சி உரம் பெறவும் எவ்வித காரணமும் இல்லை. மாறாக இந்து சமுதாயம் கடந்த ஆண்டுகளில் மேலும் மேலும் அனைத்துவிதமான தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப்பட்ட சமுதாயமாகவே இருந்து வந்துள்ளது. விரோதிகளால் பீடிக்கப்பட்ட இத்தகைய சமுதாயங்கள் பொதுவாக (இந்து சமுதாயத்தின் மீது வைக்கப்படும் எதிர்மறை தூண்டுதல்களுடன் ஒப்பிடுகையில் படு சாதாரணமான) தமக்கு எதிரானதாக கருதப்படும் தூண்டுதல்களை எதிர்கொள்ளும் வன்முறை விதத்தினை ஒப்புநோக்கினால், வதோதரா இந்துக்கள் அளவுகடந்த பொறுமையுடன் செயல்பட்டுள்ளனர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
[கோவில் தூண் சிற்ப புகைப்படங்கள்: அரவிந்தன் நீலகண்டன்]
Labels: artistic freedom, Gujarat, Hindu society, Hinduism, Hinduthva